Wednesday, February 8, 2017

தாண்டவராயன் கதை - வாசிப்பனுபவம்

நான் இப்போது யாருடைய கனவில் இதை எழுதிக்கொண்டிருக்கிறேன் அல்லது நீங்கள் யாருடைய கனவில் இதை படித்துக்கொண்டிருக்கிறீர்கள் என இன்ஸெப்ஷன் தனமாக யோசித்திருக்கிறீர்களா? அல்லது மோகன்லால், சுரேஷ்கோபி நடித்த குரு த்தனமாக நமதுநோய்க்கு மருந்து நமக்குள்தான் இருக்கிறது என்றாவது? தமிழில் இதுபோன்ற முயற்சிகள் இல்லையென்பதால் நான் தமிழ் படங்களை குறிப்பிடவில்லை. முதல்தேதி என்றொரு திரைப்படம் சிவாஜி நடித்தது.. “ சம்பள தேதி ஒண்ணிலிருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம்” என்கிற என்.எஸ்.கே பாடல் இடம்பெற்ற படம். இறுதியில் மொத்த கதையும் சிவாஜியின் கனவு என சொல்லி முடித்திருப்பார்கள், இந்த கூற்றை நம்பி தமிழில் அப்பவே இதெல்லாம் என நினைத்து படத்தை பார்த்து பின் என்னை திட்டக்கூடாது. எனக்கு இந்த படம் ஞாபகம் வருகிறது அவ்வளவுதான். பா.வெங்கடேசனின் தாண்டவராயன் கதை நாவலை படிக்கும்போது எனக்கு இயல்பாக மேற்கண்ட ஆங்கில மலையாள படங்கள் நினைவிற்கு வந்தன. நடிகர் திலகம் படம் இதை எழுதும் போது தான் ஞாபகம் வந்தது

சாபக்காட்டில் பார்வை இழந்த தன் மனைவி எலினாரை அவள் தாய்வீட்டில் விட்டுவிட்டு இந்தியா பயணமாகும் டிரஸ்ட்ராம் என்கிற பிரிட்டீஷ் குடிமகன்,  அப்போது காலனியாதிக்கத்தில் இருந்த இந்தியாவில் கதைகளின் வழியே தன் மனைவியின் கண்பார்வைக்கான மருந்தை கண்டுபிடிப்பதுதான் தாண்டவராயன் கதை.  950 பக்கங்கள் கொண்ட இந்த நாவல் எண்ணூறு பக்கங்கள் வரை கதாநாயகனின் பயணங்கள், பிரெஞ்சு புரட்சி, இந்தியாவில் சுல்தானிய ஆட்சி முடிவு என பல வரலாற்று சம்பவங்களீனூடே பயணித்து கடைசி நூற்றியைம்பது பக்கங்களில் மொத்த கதைக்கான முடிச்சை ஒவ்வொன்றாக அவிழ்க்கிறது. கிராபத் என்கிற கதாபாத்திரத்தை நன்கு கவனித்திருந்தால் முன்பே ஊகித்தும்விடலாம். 

நாவலில் முதலில் குறிப்பிட்டு சொல்ல வேண்டியது அதன் மொழிநடையைத்தான். கொழுகொழுகன்றே கன்றிந்தாயே தாய் மேய்க்கும் இடையா என்ற பாடல் பா.வெங்கடேசனுக்கும் மிகவும் பிடித்த ஒன்றாக இருந்திருக்கும் என அடித்து சொல்ல முடியும். வாக்கியங்கள் நிற்காமல் ஓடுகின்றன. ”950 பக்கங்கள் படிக்கல.. 950 வரிகள் படிக்கிறேன்” என  நண்பர்களிடம் நான் சொல்வதுண்டு. அது மிகைதான். உண்மையில் அதற்கும் குறைவான வாக்கியங்களே இருக்க வாய்ப்பு அதிகம். இவ்விதமான எழுத்து நடை முதலில் ஒரு வாசகனுக்கு ஒரு பந்தயத்தை முன் வைக்கிறது. நான் இதை படித்தேன் என்று சொல்வது என்னால் இப்படி கடினமான நாவலையும் படிக்கமுடியும் என்ற சுயதம்பட்டமாகவும் இருக்கலாம். 

இரண்டாவது ஆசிரியர் கையாண்டிருக்கும் புனைவுலகம். சாபக்காடு, பிரெஞ்சு மக்கள், நாயக்க மன்னர்களிடம் பணியாளாக சேரும் துயிலார்கள், லவணர்கள் என சமூகத்தால் சற்று தள்ளிவைக்கப்பட்டுள்ள மக்களை ஒரு மாலையாக தொகுத்துவிட்டிருக்கிறார். அதில் சரடாக தாண்டவராயன் கதை வருகிறது. தாண்டவராயனும் அவன் மகன் கோணய்யனும் செய்கின்ற சாகசங்கள் மற்றும் காற்றுப்புலி அத்தியாயங்கள் போன்றவை அவரது கற்பனையின் உச்சத்தை காட்டுகின்றன. டிரஸ்ட்ராம் தவிர இந்த கதையில் இன்னொரு நாயகனாக வரும் சொக்ககெளட பிரான்சில் மருத்துவரிடம் கதைகளைக்கொண்டே வியாதிகளை குணமாக்க முடியும் என சிறப்பாக வாதிக்கும் இடம் இந்த நாவல் செல்லும் திசையை அறிவிக்கும் மிகச்சிறந்த துவக்கம். அதற்கு முன் சொல்லியிருக்கும் சம்பவங்களை அதன் பின் சேர்க்கும் லாவகமும் அயற்சியடையாமல் படிக்க உதவுகின்றன. முதல்பாதியில் எலினாரும் இரண்டாம் பாதியில் கெங்கம்மாவும் நாயகிகள். ஓரளவு எழுதப்படித்த கெங்கம்மா மற்றும் தமிழ் படிக்க கற்றுக்கொண்ட டிரஸ்ட்ராம் ஆகியோரும் நீலவேணியின் பாதை என்கிற அந்த காவியத்தின் இடைசெருகலை படித்து புரிந்து கொள்வது போன்றவை ஆசிரியர் நமக்கு அளிக்கும் குறிப்புகள். நீலகண்டருக்கு தாண்டவராயன் கதை எழுத அவர் ராபர்ட் நோபிளி என்கிற பாதிரியாரால் ஈர்க்கப்பட்டார் என்று சொல்வது இன்னும் ஆச்சரியமானது. இத்தாலியிலிருந்து வந்த நோபிளி அவர்கள், இல்லாத ஒன்றை  இருப்பதாக பொய்யுரைகளை எழுதி அதற்கான ஓலைச்சுவடிகளை அவரே உருவாக்கி பின் அது ஒரு மோசடி என நூறு ஆண்டுகள் கழித்து இன்னொருவரால் நிரூபிக்கப்பட்டது. அதற்குள் அது வரலாறாக இங்கு பரப்பப்பட்டு இன்றளவும் சிலரால் நம்பப்படுகிறது. அதை மாதிரியாகக் கொண்டு எழுதப்பட்டது தாண்டவராயன்கதை என்று இந்த நாவலில் வரும் தாண்டவராயன் கதையாசிரியர் சொல்கிறார்.

எழுதுவது அபினி இழுப்பதுபோல. அந்த சுவாரசியத்தாலேயே எழுத்து எழுதிச்சென்றபடியே இருக்கிறது. இந்த நாவல் துப்பறியும் நாவல்களின் வகையைச்  சேர்ந்தது. ஆனால் இதை  பொன்னியின் செல்வன் வரிசையில் வைத்து அதுபோன்ற சுவாரசியமான வணிக எழுத்தாகவும் சொல்ல முடியாது. இது கையாளும் விவாதங்கள் அதன் குழப்பங்கள் மற்றும் மாயஎதார்த்தநடை போன்றவற்றைக்கொண்டு பின் தொடரும் நிழலின் குரல் வரிசையிலும் வைக்க முடியாது. தாண்டவராயன் கதை இரண்டும் கலந்து இவற்றிற்கிடையே ஒரு இடத்தில் இருக்கிறது. ஒரு உதாரணத்திற்கு, இந்த நாவலை கடைசி நூறு பக்கங்களை முதலில் படித்துவிட்டால் பின் முதலிலிருந்து படிக்க சுவாரசியம் போய்விடும். அப்படியிருக்கையில் அந்த பக்கங்கள் பின்னால் அவிழ்பதற்கான முடிச்சுகளை மட்டுமே போட்டுவருகிறதா என்கிற கேள்வி வருகிறது. வந்தியதேவன் என்னை கத்தியால் குத்திவிட்டான் என கந்தமாறன் பொன்னியின் செல்வனில் பல இடங்களில் மொத்தத்தையும்  விவரிப்பது போல இதிலும் இரண்டு பக்கங்கள் நீட்டித்து சம்பவங்களை விவரித்தபின் நாலு வரியில் என்ன நடந்துச்சின்னா என மீண்டும் அது சுருக்கமாக சொல்லப்படுகிறது. சொல்லின் அழகைத்தவிர அங்கே இருப்பது என்ன என்ற குழப்பம் வந்துவிடுகிறது. என் நண்பர் சிவகுமார் இது பற்றி பேசியபோது ஈர்க்கப்பட்டு இதை வாங்க அலைந்தேன். ஆனால் இது அச்சில் இல்லை. மூர்மார்க்கெட்டில் கிடைக்கும் என்றார்கள். மூர்மார்க்கெட்டில் இது இல்லை. காளியப்பா மருத்துவமனை பின்னால் இருகும் பழைய புத்தககடையில் கிடைக்கும் என்றார்கள். அங்கு போவதற்குள் சிவகுமாரே, தன் புத்தகத்தை இரவல் அளித்தார். அப்படித்தான் இதை வாசிக்க நேர்ந்தது. இதை விரைவில் அச்சில் கொண்டுவரவேண்டும் என்பதே பதிப்பாளர்க்ளுக்கு என் வேண்டுகோள். 
No comments: