அடிக்கடி திரையரங்கு சென்று திரைப்படங்கள் பார்க்க இயலுவதில்லை, காரணம் என் அலுவலக பணி நேரம் முடியவும் அரங்குகளில் ரெண்டாங்கட்ட ஆட்டத்திற்கு இடைவேளை விடுவதும் ஏறத்தாழ ஒரே நேரத்தில்தான். ஆனால் அறம் படத்தைப் பார்த்தே தீரவேண்டிய கட்டாயத்தில் இருந்தேன். மூன்று காரணங்களால் நெரிக்கப்பட்டிருந்தேன். முதல்காரணம் அய்யன் வள்ளுவனுக்கும் ஆய்ச்சி ஒளவையாருக்கும் அடுத்து அறம் என்ற வார்த்தையை மீட்டெடுத்த எனது ஆசிரியர் ஜெயமோகன் அவர்களின் வி.கு. வாக இது என் தலையாய கடைமையாகிறது. இரண்டு, இந்த கதை நிகழும் இரண்டு நிலப்பகுதிகளும் என்னுடன் மொட்டத்தல மொழங்கால் அளவில் சம்பந்தப்பட்டவை. திருவள்ளூர் ஜில்லாதான் இப்போது எனது ஊர் இன்னொரு ஊரான ஸ்ரீஹரிகோட்டாவில் ஐந்துவருடங்கள் ஒப்பந்த ரீதியில் பொட்டி தட்டிருக்கிறேன் (அல்லது பொட்டி தொடச்சிருக்கேன்). மூன்றாவது காரணம் இறுதியில் சொல்கிறேன்
படத்தின் முதல் பாதியில் தன் கண்ணழகாலும் குரலழகாலும் பலதிரைப்படங்களில் பலரை கட்டிப்போட்டிருக்கும் ராமசந்திரனின் குடும்பமும் ஊரும் எப்படிப்பட்டவை என கண்முன் நிறுத்திவிடுகின்றனர். குழந்தை ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்து அவளைக் காப்பாற்ற போராடும் அனைவருடனும் பார்வையாளர்களையும் இழுத்துவிடுகின்றனர். நான் என்ன அவன மூழ்க விட்டு பாத்துட்டிருந்தேனா.. முன்னூறு வரை எண்ணிகிட்டிருந்தேன் என்று ராம்ஸ் சொல்லும்போது ஆரம்பிக்கும் கண்ணீர் இடைவேளைவரை தொடர்கிறது. இடையிடையே டம் டம் என ஜிப்ரான் ட்ரம்ஸை அதிர விட்டு என்சிசியை ஞாபகப்படுத்தாமலிருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்தருக்கும். குழந்தைகள் தூங்க, கிடைக்கிற கேப்பில் கணவனும் மனைவியும் கொஞ்சி கொள்ளும் இதேபோன்ற ஒரு பாபநாசகாட்சிக்கு "வாவா என் கோட்டிக்காரா..." என அழகாக இசையமைத்தவர், இதில் அதேபோன்ற ஒரு காட்சிக்கு 'ஜெயபேரிகை கொட்டடா கொட்டடா... 'என்பதுபோன்ற இசையை தெளித்துவிடுகிறார்.
படம் சொல்லவரும் கருத்துக்கள் என்ன என்பதை நயன்தாரா கிட்டியிடம் சொல்லிவிடுகிறார். மேலும் படத்தின் சில கதாபாத்திரங்களும. சொல்லிவிடுகின்றனர். அதன்பின்னும் படத்தின் திரண்ட கருத்தை யோக விழிகொண்டு, அ.முத்துகிருஷ்ணன், இளங்கோ கல்லாணை போன்றவர்கள் அவ்வப்போது வந்து விளக்குகிறாரகள். இது தேவையா என யோசிக்க வைத்தாலும், படத்துல அத்தினி அரசாங்க ஆளும் இருக்கும் போது அரசாங்கம் ஒண்ணும் பண்ணலன்னு சொல்றாங்க எனக்கூறிய ப்ளூவேல் அண்ணாச்சியின் விமர்சனத்தை பார்க்கும் போது இது தேவைதான் எனத்தோன்றுகிறது. இன்னும் ஒரு படி மேலே போய் நாங்க என்ன சொல்ல வறோம்னா, என இயக்குநர் விளக்கியிருந்தாலும் பிழையன்று
இடைவேளை வரை கண்ணீரை வரவழைத்து, இடைவேளை விட்டதும் கண்ணீரை துடைக்கவே நேரம் சரியாகப் போய்விடுகிறது. அப்பா ஏம்மா அழறா என குழந்தைகளும் மானத்தை வாங்கிவிடுகின்றன. அந்த சங்கடத்தை மறைக்க அப்போது அம்பத்தூர் ராக்கி தியேட்டர் ஆபரேட்டர் டெங்கு கொசு ஒழிப்பு பற்றிய தமிழக அரசின் சாதனைகளை நடிகர் விவேக் செல்முருகன் ஆகியோர் நகைச்சுவையாக விளக்கும் ஒரு விளம்பரத்தை ஓட்டுகிறார். அவருக்கு என் நன்றி. அதில் விவேக் முருகனைவிட அமைச்சர் மற்றும் முதல்வரின் பர்பாமென்ஸ்க்கு நல்ல சிரிப்பொலி எழுந்த்து. விவேக் தனது லார்டு லபக்குதாஸ் ஸ்கிரிபட்டுக்குப்பிறகு தியேட்டரே விழுந்து விழுந்து சிரிக்கும் நகைச்சுவையே அம்பத்தூரில் காணலாம்.
படத்தில் குறிப்பிட்டு சொல்லவேண்டிய இன்னொரு நபர் வேலராம்மூர்த்தி அவர்கள். ரஜினி முருகன் சேதுபதி ஆகிய படங்களில் அவரை பார்த்திருக்கிறேன். சிவாஜிக்கிணையான நடிகர் என தோன்றுவது ஏனென யோசித்தபோது இவரது நடை கந்தன்கருணை படத்தில் சிவாஜியின் நடைக்கு சற்றும் குறைந்த்தல்ல என்பதை
சித்தம் அறிந்தது.
மதிவதனி ,முத்துகுமார் , இலங்கை ரேடியோ என அங்கங்கு இயக்குநரின் அன்பு வெளிப்படுகிறது. குறிப்பாக ஒடுக்கப்படவர்களின் அரசியிலுக்கான படத்தில் துப்பாக்கி ஏந்திய வீராங்கனையாம் தன்ஷிகா பெயரை குழந்தைக்கு வைத்தது உச்சத்திலும் உச்சம். :-)
இந்தப்படத்தின் இயக்குநர் பற்றி அவ்வப்போது முகநூலில் படிப்பதுண்டு. இரு பெரும் படங்கிளின் பங்களிப்பு மறக்கடிக்கப்பட்டும் மீண்டு வந்திருப்பது அவர் போராட்ட குணத்தின் மற்றும் திரைப்படத்துறையின் மீதான அவரது திறமையின் வெளிப்பாடு. அவள் இன்னும் ஆழத்தில் விழுந்துட்டாள் என்றதும் நாமும் பதை பதைக்கிறோம். மீட்கப்படும்போது கைதட்டுகிறோம். அது அவரது வெற்றி!
படத்திற்கு வந்த்தன் மூன்றாவது காரணம் என்மகள்தான். இரண்டாவது படிக்கிறாள். அவள் என் மனைவி முற்றதிகாரம் கொண்டவள் என நம்பினாள். அவள் விளையாட்டில் எப்போதும் அம்மா ரோல்தான். இதக் கொண்டு போய் அங்க வைங்க என அதிகாரம் தூள் பறக்கும். பள்ளிக்குச் சென்றபின் அந்த ரோலை எனக்குத் தந்துவிட்டாள். அத்விகாம்மா நல்லா ஹோம ஒர்க் சொல்லிக்கொடுங்க என சொல்கையில் நான் சரி மிஸ் என பவ்யமாக சொல்லுவேன். பிறகுதான் ஸகூல் பிரின்சிபாலுக்கு மிஸ்ஸைவிட அதிகாரம் அதிகம் என உணர்ந்தாள். போனவாரம் வரை பெய்த மழை அவளுக்கு ஒரு தெளிவை அளித்தது. அதாகப்பட்டது, கலெக்டர் சொன்னாத்தான் பிரின்சிபாலே கேட்கிறாங்க என்பதும் கலெக்டர் நினைத்தால் ஸ்கூலுக்கு லீவு விட முடியும் என்பதையும் உணர்ந்த தருணம் அது. தினமும் ஸ்கூல் உண்டா என புதியதலைமுறை தொலைக்காட்சியை அவளை வைத்துக்கொண்டு பார்த்தத்தின் தவறு. ஆகவே கலெக்டராதல் என்ற லட்சியத்தில் இருப்பவளுக்கு இந்த கலெக்டர் படம் தூண்டுகோலாக இருக்கலாம் என நினைத்து சென்றேன். கலெக்டரைவிட சியெம் அதிகாரம் பெரிதென்று நயன்தாராவே சொல்லிவிட்டதால் அதற்கு இப்போதே இவள் கல்வித்தகுதி over qualified என்ற வகையில் வருவதால் என்குச் சற்று குழப்பமாக இருக்கிறது.