Friday, May 25, 2018

தமிழ்ச் சிறுகதையின் பெருவெளி

சமீபத்தில் வெளியான சு.வேணுகோபாலின் தமிழ்ச் சிறுகதையின் பெருவெளி புத்தகத்தைப் பற்றி எழுத்தாளர் கெ.என்.செந்திலின் உரையைக் கேட்டேன். யப்பாடி! எனத்தோன்றியது. அந்த புத்தகத்தை நானும் படித்திருந்தேன்.  சு.வேணுகோபாலின் படைப்புகளையும் இந்த புத்தகத்தையும் மேலும் சில விமர்சன புத்தகங்களையும் படித்திருந்த ஒருவர் கிட்டினால் இது பற்றி விவாதிக்க ஏதுவாக இருக்குமே என நினைத்திருந்தேன். தட்,  ”தமிழார்வமும் இருக்கனும் அதேநேரத்துல அறிவியலும் தெரிஞ்சிருக்கனும்” ரேஞ்சில். ஆனால், மாணவர்களுக்கு மே மாதம் பள்ளியில் விடுமுறை விடுவது போல ஜெயமோகனும் இமைக்கணத்தை முடித்து ஒரு விடுமுறை விட்டிருந்ததால்,  மாணவர்களும் குடும்பத்தினரை பரிவுடன் தாய் வீட்டிற்கு அனுப்பிவிட்டு தன்னை அனுதினமும் சோதித்த இரு விஷயங்களிலிருந்து விலகி  மிகத்தீவிரமாக அலுவலக வேலையை எப்போதும் இந்த அப்ரைசல் நேரத்தில்  செய்வது போல கண்ணும் கருத்துமாக  பார்த்து வந்தனர்.  இரு வெண்முரசு நாவல்களுக்கிடையே யாரோ ஒருவரை ஒரண்டையிழுக்கும் வேலையும் இல்லாததால் சுரேஷ் கூட சேப்பியன் படிக்காமல் டி20 பார்த்தான்.  நிர்மலாதேவியையே மறந்திருந்தனர் மக்கள்.  அந்த விதத்தில் மீண்டும் இலக்கியம் பற்றிப்பேச இந்த உரை நல்ல துவக்கமாக இருந்தது.   நான்கு நாட்களுக்கு வாட்சப் குழுமங்களில் இது பற்றிய ஒரு த்சோ.. த்சோ இருந்துகொண்டிருந்தது. தமிழர்களின் சமகால பிரச்சனைகளிலிருந்து இலக்கியம் பக்கம் திசை திருப்ப ஒரு இலுமினாட்டி கார்பொரேட் செய்யும்   சதி என பாரிசாலனின் பேட்டி வருமென நினைக்குமளவிற்கு போய்விட்டது.  அதற்குப் பிறகு தூத்துக்குடி பிரச்சனை வந்து திண்றடித்துவிட்டது.  இப்போது இது பற்றி எழுதலாம் என நினைக்கும்போது கூட ஸ்டெர்லைட் பிரச்சனை இருக்கறப்போ பிடில் வாசிக்கிறியா என ஷிமோகா ரவி அண்ணன் கண்ணாடியில் மங்கலான பிம்பமாக வந்து கேட்கிறார். ஆனால், சம்பந்தப்பட்டவர்களே பிடில் வாசிக்கும் போது அப்பாவி பொதுஜனமாகிய நான் சம்பந்தமில்லாமல்  கொஞ்சம் எழுதி வைக்கலாம் ! என்ன தவறு எனத் தோன்றுகிறது



சு.வேணுகோபால் கே.என். செந்தில் இருவரையும் ஆண்டிற்கொருமுறை விஷ்ணுபுரம் விருதுவிழாவில் சந்திக்கிறேன். இவர்களில் சு.வே யின் படைப்புகள் கிட்டத்தட்ட  அனைத்தையும் வாசித்திருக்கிறேன். கே.என். செந்திலின் மாறாட்டம் சிறுகதை மட்டும் வாசித்திருக்கிறேன். அரூபநெருப்பு தொகுதியைப்பற்றி எழுத்தாளர். சுரெஷ் ப்ரதீப் கூறியிருக்கிறார். விரைவில் படித்துவிடுவேன். விழாவில் பார்த்த வகையில் மிகத்தீவிரமாக , கறாராக இலக்கியத்தை அணுகுபவர்  என்று சொல்லுவேன். அமிதாப் பச்சன் போல ஒரு கோபக்கார இளைஞன் என்று தோன்றுமளவிற்கு இருப்பார். 

இனி புத்தகத்தைப்பற்றிப் பார்க்கலாம்.  ஒரு நாவலையோ கவிதை தொகுப்பையோ படித்துவிட்டு எழுதுவது போல ஒரு திறனாய்வு நூலைப்பற்றி எழுதிவிடமுடியாது. மனம் போன போக்கில் எல்லாவற்றையும்  எழுத  வேண்டியிருக்கும். ஒவ்வொரு எழுத்தாளர் குறித்தும் தன் மனதிற்குள் தான் கொண்டுள்ள பிம்பத்தை சார்ந்தோ மறுத்தோ எப்படி எழுதப்பட்டிருக்கும்... தனக்குப்பிடித்த கதை இவருக்கும் பிடித்திருக்கிறதா என்ற அளவில் சரி பார்த்துக்கொள்ளலாம். மூத்த எழுத்தாளர்கள் பற்றிய திறனாய்வு தொகுப்புகளில் இதுவரை வந்தவைகளிலிருந்து மாறுபட்டு  முற்றிலும் ஒரு புதிய அனுபவத்தை தரவல்லதாக இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறைவே. சாரு எழுதியிருக்கும் பழுப்புநிற பக்கங்கள் எஸ்ரா எழுதியிருக்கும் கதாவிலாசம் போன்றவை பெருமளவில் வாசகனுக்கு முக்கிய எழுத்தாளர்களை அறிமுகம் செய்கின்றன.  அவைகளை திறனாய்வு என சொல்ல இயலாது. அதிலும் தமிழ்ச் சிறுகதைகள் பற்றிய கதாவிலாசம் தொடர் ஒரு விகடன் வாசகரை  உள்ளிழுக்கும் என்றால், சு.வே. யின் இந்த புத்தகம் வாசகருக்கு விமர்சன ரீதியில் அடுத்த நிலைக்கு தன் வாசிப்பை தொகுத்துக்கொள்ள சரிபார்த்துக்கொள்ள உதவியாக இருக்கும் என்று சொல்லலாம். ஒரு விமர்சன நூல் பற்றி எழுத வேண்டுமெனில் முதலில் அதை எப்படி அணுகுகிறோம் என்பது அவசியமாகிறது. அதற்கு தன்னைக் கொஞ்சம் தொகுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. பற்றிக்கொள்ள ஒரு கொழுகொம்பு தேவைப்படுகிறது. கே.என். செந்திலின் உரையை நான் அப்படித்தான் எடுத்துக்கொண்டு அது சார்ந்த என் புரிதல்களை எழுதலாம் என நினைக்கிறேன்

முதலில் இந்த உரை  சு.வேணூகோபால் முன்பே நிகழ்ந்திருக்கிறது. ஒரு கட்டுரையாக வந்திருந்தால் மறுப்பு தெரிவித்திருக்கலாம்.  விவாதிக்கலாம். ஆனால் நேருக்கு நேராக குறைகளாக அடுக்கும்போது, நாம் செய்த தொண்ணூற்று எட்டு நல்ல விஷயங்கள் ஞாபகமே வராது.. இந்த ரெண்டு குறைகள் மட்டுமே அனைவருக்குமே பெரிதாக நிற்கும் என்பதை ஆண்டிற்கொருமுறை பர்ஃபார்மன்ஸ் ரிவ்யூ மீட்டிங்கில் இதையே  சந்திக்கிறவன் என்கிற வகையில் அடித்து சொல்லமுடியும். அந்த வகையில் சு.வேணுகோபாலின் உடனடி எதிர்வினை வந்திருக்கிறதா எனத் தெரியவில்லை.

கேஎன் செந்தில் இரு குற்றச்சாட்டுக்களை வைக்கிறார்.  அதில் முதலாவது, சுவேணுகோபால் தன் தகுதிக்கு மீறி நிலை நிறுத்தப்படுகிறார் என்பது. இரண்டாவது இந்த புத்தகம் குறித்து,

முதலாவது சற்று அதீதமாகப்போய்விட்டதோ எனத் தோன்றுகிறது. அவர் மகத்தான படைப்பாளி என்று தூக்கிநிறுத்தப்படுவதாக சொல்வது சற்று மிகையாகவே இருக்கிறது. தமிழகத்தில், ஒரு டபரா செட்டுக்குள் நடக்கும் பிரச்சனைதான் இலக்கியவாதிகளின் சச்சரவுகள் என ஆதிகாலந்தொட்டே ஒரு கருத்து நிலவுகிறது . சமீபத்தில், பாலகுமாரன் மறைந்த போது அங்கு டிவி சேனல் ஆட்கள் வந்திருந்தார்கள்.  இறந்த செய்தி வந்து ஒரு மணி நேரம் தாண்டியிருந்தது.  இப்ப வீட்டு ஆளுங்கதான் இருக்காங்க வெளி ஆளுங்க வரல..இனிமதான் சேதி தெரிஞ்சு விஐபிக்கள் வருவார்கள் பேட்டி எடுக்கலாம் வீட்டு ஆளுங்களை வேண்டாம் என்று நிருபர்கள்  சொல்லிக்கொண்டிருந்தனர்.  அங்கு அவர்கள் வீட்டு ஆளாக எண்ணிக்கொண்டிருந்தது அங்கு கூடமாட நின்று கொண்டிருந்த  ஜெயமோகனை. இந்த அளவில்தான் பெரும்பான்மை சமூகம் இருக்கிறது. இந்த நிலையில் இதுவரை சு. வேணுகோபால்,  தான் எழுதியிருக்கும் அளவு கவனிக்கப்படவில்லை என்றுதான் நான் நினைக்கிறேன். இதில் தகுதிக்கு மீறி அவர் கவனிக்கப்படுவதாக சொல்வதை மறு பரிசீலனை செய்யலாம். கே.என். செந்தில் தானும் அனைத்தையும் படித்திருப்பதாக சொல்லித்தான் கூந்தப்பனையை நிராகரிக்கிறார். ஆனால், இப்படி தடாலடி கருத்துக்களால் சில அறிமுக வாசகர்கள் அவரை வாசிக்காமல் போகலாம். ஆனால், ஒரு எழுத்து தனக்கான வாசகனை கண்டடைந்தே தீரும் என்று ஒரு தியரியும் இருப்பதால் அவர் புத்தகங்கள் இன்னும் வாசிக்கப்படக்கூடும் என்றே நம்புகிறேன்.

  அவர் படைப்புகளை வாசித்த வகையில்   சமூகம் வாழ்க்கை மற்றும் குடும்பம் சார்ந்த அலைக்கழிப்பு அவர்  படைப்புகளில் என்னை நெருக்கமாக உள்ளிழுக்கிறது. தொடர்ச்சியான தலைமுறையிலிருந்து மாறி  ஒரு நாட்டிலேயே இடம்மாறி அந்நியமாக வாழும் ஆணின் தடுமாற்றமும் தவளை வாழ்க்கையும்  அதிகம் மெனக்கடாமல் அதன் இயல்பிலேயே இடம்பெறுவதாக அவரின் படைப்புகள் உள்ளன. இதில் இயல்பாகவே  பிறந்தவீடு புகுந்தவீடு என மரபணுக்களில் பழகிவிட்டதால் பெண்களால்  விரைவில் விட்டு விலக முடிகிறது. தீர்க்கமாக முடிவெடுக்கவும் முயல்கிறார்கள். ஆனால் இப்போது இரு தலைமுறைகளாகவே பெரும்பான்மை ஆண்கள் அதற்கு பழகுகிறார்கள். அதனால் அவர்கள் கிருஷ்ணன் போன்ற நபும்சகனாகவோ, பழனி போல குழம்பியவனாகவோ,  இளமையில் தொலைத்ததை 36 வயதில் தேடுபவனாகவோ இருப்பது ஒட்டுமொத்த தற்கால ஆண்களின் குறியீடாகக்கூட புரிந்துகொள்ள முடிகிறது. அது உணரும்போது எனக்கு   பெரும் சோர்வைக்கூட அளித்திருக்கிறது. Ignorance is bliss என்று சொன்னவனை  நானும் அடிக்கடி நினைத்துக்கொள்கிறேன்.  உணர்ச்சிகரமாக இல்லாமல்  யதார்த்தமும் பரிவும் நம்பிக்கையுமாக அவரின் பெரும்பான்மை நாவல்கள் முடிவது  எனக்கும் ஆறுதலாக இருந்த்து. ஆனால், அவர் காமத்தை நன்றாக கையாள்கிறார் என்றும்  விவசாயத்தை எழுதும் எழுத்தாளர் என்றும் முதன்மையாக அடையாளப்படுத்துகிறார்கள். அதை மறுக்கவியலாது என்றபோதும் அவரை வாசிக்கையில் நான் உணர்ந்தது இது.  நானே அவரிடம் என் கருத்தை சொன்னபோது, அவர் பதறி அப்படியெல்லம் இல்லீங்க நான் பெண்களை எழுதிய அளவு ஆண்களை எழுதியதில்லை. வேணும்னா வெளியில விசாரிச்சு பாத்துகங்க என்று சொல்லிவிட்டார்.






இரண்டாவதாக சொல்லிருப்பது இந்த புத்தகம் குறித்து. கேஎன் செந்தில் எழுதியிருக்கும் கட்டுரைகள் மற்றும் உரைகளை கேட்கையில் அவர் கோட்பாடு ரீதியாக நிறைய அறிந்திருக்கிறார் என்பதும் தெளிவாகிறது. நவீனத்துவம் பற்றி இந்த புத்தகத்தில் அவர் குறிப்பிட்டிருப்பதை முதலில் மறுதலிக்கிறார். அந்த சுழலுக்குள் சிக்கி  நவீனத்துவம் என்றால் என்ன என்று ஒரு விளக்கத்தை கூறுவது என்பது மீண்டும் ஒரு கட்டுரையளவு படிக்க வேண்டியிருக்கும். நவீனத்துவத்திலிருந்து நவீனத்துவத்தை எடுத்துவிட்டால் நவீனத்துவமே மிஞ்சும் என்ற உபநிஷத் வரிகளுக்கேற்ப நான் இந்த விஷயத்தை சாய்சில் விடுகிறேன். அதன்பின், அவர் குறிப்பிடும் சில விஷயங்களில் முதன்மையானவை, கூறியது கூறல் கட்டற்ற மொழி நடை இல்லாதவர்களை நிராகரித்தல் மற்றும் தவறான கருத்துக்களைக் கூறல் போன்றவை.  புதுமைப்பித்த்னைப்பற்றி இதுவரை தமிழ் இலக்கியத்தில் கூறப்பட்டவைகளையே இதுவும் கூறுகிறது என்பது உண்மைதான் என நினைக்கிறேன்.  செல்லம்மாள் கதை பற்றி வேதசகாயகுமாரின் விமர்சனம் புதிய வாசிப்புக்கோணத்தை அளித்தது. அதுபோல இதில் ஒரு புதிய அனுபவம் இல்லை. திஜா கட்டுரை பற்றியும் அங்ங்னமே எண்ணத் தோன்றுகிறது. திஜா நாவலில் சாதிக்கவில்லை சிறுகதையில் சாதித்தார் என்பது போல இதிலும் வருகிறது.  கட்டற்ற மொழிநடை இல்லாததால் சுவே அதிகம் விமர்சிப்பது சுந்தரராமசாமி படைப்புக்களைத்தான். கேஎன் செந்திலின் சுந்தரராமசாமி சிறுகதைகள் பற்றிய உரை ஒன்று கேட்டேன். அதைவைத்து பார்க்கையில் இது அவரவர் சுதந்திரம் என்கிற அளவில் விட்டுவிடத்தோன்றுகிறது. சுந்தர ராமசாமியை விமர்சிக்க இருக்கும் நியாயங்கள் போல சுவேயை நிராகரிக்க இவருக்கான காரணங்களும் இருக்கின்றன. அது அவரவர் வழியைப்பொறுத்தது என்றுதான் சொல்லமுடியும். 

சுவேயின் புத்தகத்தில் உள்ள கட்டுரைகள் 2001லிருந்து 2018 வரை எழுதியதன் தொகுப்புகள். இதனால் சில குழப்பங்கள் உள்ளன. உதாரணமாக, அசோகமித்ரனின் சதாபிஷேகத்தை இலக்கிய உலகம் சரியாக கொண்டாடவில்லை என்கிற இடம். இந்த தகவல் பிழையானது என்று சில உதாரணங்களை செந்தில் சொல்கிறார். ஆனால், அந்த கட்டுரை அந்த நிகழ்வுகள் நடப்பதற்கு முன்பு எழுதப்பட்டவை. இப்போது வெளியாகிருக்கின்றன. அசோகமித்திரன் உத்திகளைக் கையாளவில்லை நுட்பங்களைக்கையாளுகிறார் என்று சொல்வதும் அத்தகைய குழப்பத்தை ஏற்படுத்தக்கூடிய வரிகளே. அவர் சொல்லியிருப்பது சிறுகதைகளின் வெவ்வேறு வடிவங்களை என்று நான் புரிந்துகொண்டேன். பிராமண எழுத்தாளர்கள் விலங்குகளைக் குறித்து எழுதுவது பற்றி இவர் சொல்லியிருப்பது 2016ல் ந.பிச்சமூர்த்தி கட்டுரையில்.. ஆனால் அதற்கு முன்னே சி.சு.செல்லப்பா கட்டுரையில் சிலாகித்து எழுதியது 2010ல். இவற்றையெல்லாம் ஆங்காங்கே tag செய்திருக்கலாம். அல்லது பக்கத்தின் கீழே * போட்டு குறிப்பிடலாம். அடுத்த பதிப்பில் திருத்திக்கொள்வார்கள் என நினைகிறேன்.   சுந்தரராமசாமிக்கு நிலத்தை சொல்லத் தெரியவில்லை என்று பொதுவாக சொல்லவில்லை. “மரியா தாமுக்கு எழுதிய கடிதம்” என்கிற கதையை பற்றிய வரி அது. அதற்கு மாற்றாக புளியமரத்தின் கதை நாவலை சொல்வது ஏற்புடையதாக இல்லை. ஜெயகாந்தன் ஒரு சுயம்பு என்று சொல்வது ஒரு flow வில் வந்துவிட்டதைப்போலத்தான் எனக்கும் தோன்றுகிறது. அவரே அந்த கட்டுரையில்  பல இடங்களில், பாரதி சித்த்ர் பாடல்கள் ரஷ்ய இலக்கியங்கள் ஆகியவற்றின் மீதான் ஜெயகாந்தனின் ஈடுபாட்டைச் சொல்லியிருக்கிறார். 

 இந்த இடங்களில்தான் இலக்கியமுன்னோடிகள் புத்தகத்தை ஒப்பிடுவதை தவிர்க்கமுடியவில்லை. இலக்கிய முன்னோடிகள் புத்த்கம் 2003ல் வெளியான தொகுப்பு. குறிப்பாக குபரா பற்றிய பிரம்ம சமாஜத்தின் ஈடுபாடு அதை அப்படிய தமிழுக்கு பொருந்தாமல் காப்பியடித்தது.. திஜா காமத்தை எழுதிய மற்றவர்கள் தொடாத இடங்களை ( காமத்தை எழுதுகிறேன் என்று கிளம்பிய சாருநிவேதிதாவும் நழுவிய இடம் என்று ) எவ்வளவு நேர்மையாக கையாண்டார் என்பதும் புதிய திறப்புக்களாக அமைந்தன. குறிப்பாக சொல்லவேண்டுமெனில், அசோகமித்திரனின் புலிக்கலைஞன் கதை. அதை அசோகமித்திரன் பாராட்டு விழாவில் ஒரு திரைக்கலைஞனனின் பரிதாப வாழ்க்கை என்கிறார் சுரா. அதற்கு பத்தாண்டுகள் கழித்து வந்த கதாவிலாசத்திலும் அதையே சொல்கிறார். ஆனால் அதில் அந்த காதர் ஒரு கணத்தில் புலியாக மாறுவதும் அவன் சொல்லும் தற்குறிப்பிலிருந்து அவன் யாரென அடையாளம் காட்டுவதும் ஒரு புதிய நோக்குதான். அதன்பின் அசோகமித்திரனின் பல கதைகளை வாசிக்க இன்னொரு கோணம் கிடைத்தது. அதுபோல புதிதாக ஒன்றை காண இதில் இடம் இல்லை. மேலும் இது சிறுகதைகளுக்குள் மட்டும் தன்னைக் குறுக்கிக்கொண்டதும் ஒரு காரணமாகலாம்.

கு அழகிரிசாமி மற்றும் கிரா ஆகியேரை இவர் தூக்கிப்பிடிப்பது சாதிப்பற்றால் என்று சொல்லி பின் அங்ஙனம் இல்லை என அறிந்து கேஎன் செந்தில் வருந்தியதாக முகநூலில் நண்பர் எழுதியிருந்தார். ஆனால், ஆதவனை அழகிரிசாமியை அசோகமித்திரனை ஜெயகாந்தனை சுவே ஒரு விமர்சகனாக அணுகவில்லை எனத்தோன்றியது. ஒரு வாசகனாகத்தான் அணுகியிருக்கிறார். அதிலும், கிரா பற்றிய பதிவு,முழுக்க முழுக்க அவரின் அன்பே வெளிப்படுகிறது. அவரின் கோமதிதானே இவரின் பால்கனிகள் கிருஷ்ணனாக வேறு பரிணாமத்தில் வருகிறான்.., அவரின் ”சாவு” கதையில் இறந்தவனின் மனைவி கர்ப்பமாக இருப்பதை வெண்கலதாம்பாளத்தை மூன்று முறை தட்டி அறிவிப்பதைத் தானே ”நிலம் என்னும் நல்லாளில்” குமரனின் மனைவிக்கும் நடக்கிறது என்று நினைத்துக்கொண்டேன்.

இறுதியாக ( அப்பாடா !! ) , இதில்சொல்லியிருக்கும்  சி சு செல்லப்பா, மெளனி ந.பிச்சமூர்த்தி குபரா போன்ற எழுத்தாளர்களை நான் இன்னும் முழுமையாக படிக்கவில்லை. இங்கோ இலக்கிய முன்னோடிகளிலோ உயர்த்தி சொன்னதாலோ தாழ்த்திச் சொன்னதாலோ ஒருவரை நிராகரிக்க முடியாது. முதன்மை எழுத்தாளர்கள் என்பதாலேயே அவர்கள் இந்த புத்தகங்களில் இடம் பெற்றிருக்கிறார்கள்  அவர்களின் பங்களிப்பு ஒருவகையில் மிகவும் முக்கியமானது என்பதை உணர்ந்து தான் ஒருவர் இந்த புத்தகத்தை வாசிக்கத் துவங்குகிறார். அல்லது விமர்சனங்கள் இல்லாவிடில் அவர்களை விட்டுவிடவும் போவதில்லை. திறனாய்வு புத்தகங்கள் தத்தமது வாசிப்பின் எல்லையை சரிபார்க்க ஒரு வாசகருக்கு உதவுகின்றன. ஒட்டு மொத்த பார்வை என்று அனைத்து படைப்புக்களையும் உள்ளடக்கியதாக  ஒரு மேல்நிலை மதிப்பீடாக ( high level ) இல்லாமல் சிறுகதை என்கிற அள்வில் வைத்து ஒவ்வொரு எழுத்தாளரின்  இருபது சிறுகதைகளையாவது குறைந்த பட்சம் பட்டியலிட்டு ஒரு உள்நோக்கிய பார்வையில் மதிப்பிட்டிருகிறார். அந்த வகையில் இது மிக முக்கியமானது எனக் கருதுகிறேன்.  இந்த புத்தகத்தை வெளியிட்டிருக்கும் எழுத்தாளருக்கும் தியாகு நூலகத்தும் நன்றிகள். கேட்டுக்கொண்டதற்கு இணங்க ஊட்டி கூட்ட்த்தின் போது புத்தகத்தை கொண்டுவந்து அளித்த க்விஸ் செந்தில் க்கு ஸ்பெஷல் நன்றிகள்




















x

Monday, May 21, 2018

காவியமுகாம் (அல்லது) ஊரான் பிள்ளைய ஊட்டியில் வளர்த்தல் - 3

தொடர்ச்சி..

ஊட்டி காவிய முகாம் எப்பொழுதும் கம்பராமாயண அரங்கோடு துவங்கும். நாஞ்சில் நாடன் துவக்கிவைப்பார். நான் சென்ற முதல் வருடம் நாஞ்சில் நாடன் வாசிக்க அதை ஜடாயு பாட திருமூலநாதன் ஓத என ரகளையாக இருந்தது. அங்கு சென்றபோதுதான் பெங்களூருவில் ஜடாயு பல வாரங்களாக நடத்திக்கொண்டு வருகிறார் என்பதும் அறிந்தேன். அந்த பாடல்களை கண்ணதாசன் எங்ஙனம் திரைப்பாடல்களாக வைத்தார் என சுரேஷ் வெங்கடாத்ரி பாடுவார். ( அரங்கில் பாடமுடியாது. இரவு தூங்கும் முன் திரையிசைக்கச்சேரி நடக்கும். இறுதியாக ரகு மற்றும் யோகேஸ்வரன் என்னும் ஜெய விஜயர்களால் அது ஒரு முடிவுக்கு வந்தது)

நிற்க! சொல்ல வந்தது அதுவல்ல..


ராமனும் லெட்சுமணனும் கிட்கிந்தையை அடைகிறார்கள், சீதையைக்காணவில்லை, அவளை ராவணன் தூக்கிச்சென்றான் என்று ஜடாயு வழியாக அறிந்திருக்கிறார்கள். ராமன் மிகவும் மனம் பேதலித்து இருக்கும் தருணம். அங்கே லெட்சுமணன் அந்த வனத்தின் அழகு பற்றிக்கூறுகிறான். அந்த வர்ணனை மிக அழகாக முடிந்து அதையெல்லாம் காணுங்கள் என்கிறான். அதற்கு ராமனின் மறுமொழி

யாழிசை மொழியோடன்றி யான் உறும் இன்பம் என்னோ!!”

எனத் துவங்குகிறது! யாழின் இசையத்தவிர நான் அடையும் இன்பம் வேறு உண்டோ என்கிறான் ராமன்.

“ சீதையின் குரலை சொல்றான் ராமன்” என்றார் நாஞ்சில். என காவிய வாசிப்பின் அடுத்த நிலை இந்த வரியோடுதான் துவங்கியது. அந்த படலம் முழுவதுமே அப்படி ராமனின் பித்துநிலையைத்தான் படிக்க முடியும். சதா அவள் நினைவாகவே இருக்கும் ராமனிடம் சீதையைத்தேடிச்செல்லும் அனுமன் அவளின் அங்க அடையாளங்களைக் கேட்கிறான்.

அதற்கு பித்து பிடித்தார்ப்போல் இருக்கும் ராமனின் பதில்களில் ஒன்று..

வார் ஆழிக் கலசக் கொங்கை வஞ்சிபோல் மருங்குலாள்தன்
தார் ஆழிக் கலை சார் அல்குல் தடங் கடற்கு உவமை-தக்கோய்!-
பார் ஆழி பிடரில் தாங்கும் பாந்தளும், பனி வென்று ஓங்கும்
ஓர் ஆழித் தேரும் ஒவ்வார், உனக்கு நான் உரைப்பது என்னோ?

மேற்கண்ட பாடல் ஆபாசம் என்று சொல்லப்பட்டு கம்பரசம் வந்து கம்பராமாயணத்தை எரிப்பதுவரை போய் நிற்கிறது. ஆனாலும் ஒருத்தன் இதை மீண்டும் பரப்ப வந்தானே என்றார் ஜெயமோகன் இடைவேளையின் போது. அன்றும் அதன் பின்னும் உரையாடியும் கேட்டும் படித்தும் புரிந்துகொண்டதன் சுருக்கம் இது,

பக்தியை எதிர்க்கவும் பகுத்தறிவு வளர்க்கவும் தனக்கு சாதி ரீதியாக  பிரச்சனை பெரிதாக வாராமல் இருக்கவும் ஒரு ஆரிய திராவிட கதைக்கு ஏதுவாக இருப்பதாலும்  ஒரு கல்லில் நாலஞ்சு மாங்காய்கள் அடிக்க கம்பராமாயண எதிர்ப்பை கையிலெடுக்கின்றனர் திராவிட ( முன்னேற்ற ? ) இயக்கத்தினர். மற்ற அனைத்தையும் விட அரசியல் ரீதியாக வேறு எதிலும் கை வைக்கவும் முடியாமல் போக இளைத்தவனாக சிக்கியது கம்பராமாயணம் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. அதில் ஒரு மேடையில் ஆற்றிய உரையில்தான் மேற்கண்ட பாடல் கிண்டலாக சொல்லப்படுகிறது. ( அந்த பேச்சின் பாவனைகளை உங்களிமே விட்டுவிடுகிறேன்..நான் மிமிக்ரி செய்ய விரும்பவில்லை :-) )

அதைக்கேட்டு அதிர்ந்து கம்பனை இழிந்து பேசுவதைக் கேட்கவா நான் இன்னுமுயிரோடு இருக்கிறேன் என தற்கொலை செய்ய முடிவு செய்து பின் அதிலிருந்து மீண்டு காரைக்குடி கம்பன் கழகத்தை அமைத்தவர் சாமிநாத கனேசன் அவர்கள்.  தன்னை கம்பனுக்கு அடியவன் என அறிவித்துக்கொண்டு தொண்டனுக்கு சட்டை இல்லை என சட்டை அணியாமல் இருந்தவர்.    கம்பனடிப்பொடி சா.கணேசன் என்று அழைக்கப்பட்ட கணேசன் அவர்களின் வாழ்க்கை வரலாறும் அதன் பின்னரே கேட்டும் வாசித்தும் அறிந்தேன். வலியது வாழும் என்கிற இயற்கையின் நெறி ஞாபகம் வந்தது.



இந்தளவு மற்ற காவியங்களோ காப்பியங்களோ நம்மை வந்தடையவில்லை என்பதும் உண்மை. சமீபத்தில் அளவை நெறியினர் என்று மீமாம்சகர்களை குறிப்பிடுவது மணிமேகலையிலிருந்து உள்ள பழக்கம் என்பதை வெண்முரசு உரையாடல்கள்களில் படித்தபோது ஆச்சரியமாக இருந்தது. இன்னும் அறியவேண்டிய தமிழ் காவியங்களே இன்னும் எவ்வளவு இருக்கின்றன!!

ஒருமுறை ஜெயமோகன் கூறினார்.. இன்று நாம் பேசும் இந்த தருணத்திலும் உலகில் எங்கோ ஒரிடத்தில் கம்பன் வாசிக்கப்பட்டுக்கொண்டிருப்பான் என்று. நானும் யோசித்துப்பார்க்கிறேன்.. ஊட்டி கம்பராமாயண அரங்கில்தான் அந்த புத்தகத்தை முதலில் கையில் தொட்டுப்பார்க்கிறேன்..எனக்கு இது பள்ளியில் மனப்பாடப்பகுதியாகவும் இருந்ததில்லை. ஆனால் அதற்கு முன்பாகவே  எனக்கு

“தோள் கண்டார் தோளே கண்டார் “

“ அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்”

“ ஆழிசூழ் உலகெலாம் பரதனே ஆள “

” குகனொடு ஐவரானோம்”

”கண்டேன் சீதையை”

“இன்று போய் நாளை வா”

” கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்”

என பாடல்கள் தெரியும். எங்கோ எப்படியோ இவை என் காதில் விழுந்து வைத்திருக்கின்றன.



ஈரோடு புத்தக கண்காட்சியில் நெல்லை கண்ணன், தனக்கு திருமணமான புதிதில் கம்பன் உரையாற்றியே அந்த காலத்திலேயே அஞ்சாயிரம் சம்பாதிப்பேன் என்று கூறினார். ஒரு பக்கம் அதன் நாடகீய தருணங்கள் சொல்லப்பட வாலியை கொன்றது தவறா, அக்கினிப்பிரவேசம் தவறா என விவாதங்கள் எழ பட்டிமன்றங்கள் என பேச  ஒரு வாசகனின் ஆரம்பம் அங்கே நிகழ்கிறது.

ஆனால் அதோடு நிற்கிறது.

இன்றும் யூட்யூபில் கம்பன் பற்றிய உரைகள் கிடைக்கின்றன. அதில், இலங்கை ஜெயராஜ், D.A ஜோசஃப், நெல்லை கண்ணன், அப்துல் ரகுமான், கவிஞர் வாலி , சாலமன் பாப்பையா உள்ளிட்ட பல நட்சத்திரப்பேச்சாளர்களின் உரைகள் கிடைக்கின்றன. ஆனால் அதிலிருந்து அடுத்த கட்டம் நகர நமக்கு நெருங்கி உரையாட அருகில் அமர்த்தி சொல்ல ஆசிரியர்களை தேடிச் செல்லவேண்டும். நண்பர்களாக இணைந்து அதை கொண்டு செல்ல வேண்டும். அதற்கு இன்னும் பெரிய அறிமுகம் மற்றும் கம்பன் பற்றிய  விளக்கம் தேவைப்படுகிறது. அதை நவீன வாசகர்களிடம் கொண்டு சொல்வதை நாஞ்சில் நாடன் அளவிற்கு வேறு ஒருவர் இன்னும் செய்யவில்லை என்று நினைக்கிறேன். ஒவ்வொரு மேடையிலும் கம்பன் புகழ் பாடுகிறார். பிரளயமே வந்து மொத்தம் அழிந்தாலும் தமிழின் மொத்த சொற்களையும் கம்பராமாயணத்தை வைத்து மீட்டுவிடலாம் என்றார் ஒருமுறை.

அவர் தன்னை ஒரு மாணவனாகவே கருதி அங்கே நிற்பது இன்னும் அழகாக இருக்கும். சில இடங்களில் ஜடாயுவிடம் சரியா எனக் கேட்பார். சில இடங்களில் ஜெயமோகன் அதை வேறொரு தளத்தில் வைத்து விளக்குவார். உதாரணமாக,
“எந்தை நீ  யாயும் நீ எம்முன் நீ  தவவந்தனைத் தெய்வம் நீ” என்று விபீஷணன் ராவணனிடம் சொல்லும் பாடல்,  அதை என் தந்தை தாய் முன்னவன் ( அண்ணன்) தெய்வம் நீ,  என உரையில் இருப்பதை நாஞ்சில் சொல்ல, ஜெ.  குறுக்கிட்டு “ முன்” ந்க்கிறது முன்னோரா இருக்க வாய்ப்பு இருக்கு.. என கூறினார். அதை ஒருமுறை படித்துப்பார்த்தவர் தலையாட்டியபடி, சுழித்து குறித்து வைத்துக்கொண்டார்


அங்கே ஒருவன் கற்க இன்னும் நிறையவே உள்ளன

தொடரும்..







Saturday, May 12, 2018

காவியமுகாம் (அல்லது) ஊரான் பிள்ளைய ஊட்டியில் வளர்த்தல் - 2

முந்தையதின் தொடர்ச்சியாகக்கூட வாசிக்கலாம்

கவிதைகள் பிடிபடாதவையாகவே இருக்கும் எப்பொழுதும். அதனால் கவிஞர்களுடன் நான் உரையாடுவதில்லை. ஆனால் யாராவது உரையாடினால் அருகில் நின்று கேட்டுக்கொண்டிருப்பது வழக்கம். அவ்வப்போது ஆமாம் என்று கூட சொல்லி தலையாட்டுவேன்.  நான் ஸ்வாஹா சொல்ல மட்டும்  வந்தவன் என்பது தெரியாமல் நண்பர்கள் கவிதை பற்றி என்னிடம் கருத்தும் கேட்டிருக்கிறார்கள். 


என் நண்பன் நன்றாக கவிதை எழுதுவான். கல்லூரி ( பாலிடெக்னிக்னாலும்)  நாட்களில்  ஆட்டோகிராபில் அனைவருக்கும் கவிதை எழுதித் தருவான். எனக்கு சிறந்த கவிதை எழுதித்தந்தான்..

"வாழ்க்கை ஒரு ஐஸ்கிரீம்..
உருகுவதற்குள் நக்கிவிடு

வாழ்க்கை ஒரு தேநீர்..
ஆறுவதற்குள் உறிந்து விடு..."

ஒவ்வொரு பதார்த்தமாக நான்லீனியராக  தொடர்ந்து அப்பளத்தில்  முடியும் அந்தக் கவிதை

அவன் இப்போது தன் மகளுக்கு பாரதி என்று பெயர்வைத்திருக்கிறான்..

கவிதை என்று நினைப்பவர்கள் மனதில் இப்படி ஒரு தாக்கத்தை முதலில் ஏற்படுத்தியவர் பாரதிதான். படித்தால்,  பெண்சுதந்திரமா, நாட்டுப்பற்றா கண்ணன் பாடல்களா என புரியுமளவு  எளிதான கவிதைகளாக எழுதியிருக்கிறார்.. அதை நம்பி நவீன கவிதைகளை படிக்கத்துவங்கும்போதுதான் உருவகம் குறியீடு படிமம் போன்ற சிக்கல்களில் மாட்டிக்கொள்கிறேன்

கவிஞர் தேவதேவன் அவர்களின் விஷ்ணுபுர விருது ஏற்புரை மிகப்பெரியது. அதைவைத்தே அவரும் ஜெயமோகன் போன்றதொரு உரையாடல்காரர் என எண்ணியிருந்தேன். ஆனால் அவர் மிக அமைதியானவர். அவரை 2015 ஊட்டி கூட்டத்தில் முதலில் சந்தித்தபோது, நண்பர்கள் மூலம் கேள்விப்பட்டிருந்த தம்பான் சுவாமிகள் இவர்தான் என நினைத்து வணங்கி சென்றுவிட்டேன். ஒரு மலரை செடியிலிருந்து பியக்காமல் அப்படியே உள்ளங்கையில் பிடித்து பார்த்துக்கொண்டிருந்தார். அவருடன் நடைபயணத்தில் உரையாடும்போது ( அரங்கில் அவர் உரையாடி பார்த்ததில்லை) கவிதை,கவிஞன் போன்ற நுண்ணுயிர்கள் பற்றி  சற்று உணரமுடியும்.



அவருக்கு ஒரு கவிதை அரங்கு இருக்கும். அவர் பொறுமையாக  இந்த குறியீட கவிதைல திடீர்னு மாத்த  முடியாதுங்கிறத நாம கவனத்தில் வைக்கனும் என்பார். ஜெ. உடனே, அவர் சொல்றது புரியுதா.. கவிதைல சில முக்கியமான விஷயங்களை புரிஞ்சிகனும், குறியீடு உருவகம் படிமம் னனு விஷயங்கள் இருக்கு. படிமம்ங்கிறது அதன் இமேஜ். அது அந்தந்த கவிதைக்குபொதுவானது. ஆனால் குறியீடுங்கிறது வேற. உதாரணமா பாம்புங்கிறது இப்பவரை விழைவைக்குறிக்குது.. அல்லது சாத்தான். அதைதிடீர்னு இந்த கவிதைல பாம்பு தென்னைமரத்துக்கான குறியீடு ன்னு சொல்லக்கூடாது. ஏன்னா அது இவ்வளவு நாள்  நிலைபெற்றுவிட்ட ஒன்று.. இப்படியாக அரைமணி நேரம் போனதும் அரங்கு முடிந்துவிடும். என்னை எங்க பேசவிடறாங்க என தேவதேவன் விரக்தியடைந்த நிலையில் ஒரு இளம் வாசகர் உங்க அரங்கு அருமைசார் என்று சொல்லிவிட்டுப் போவார்.

நாஞ்சிலுக்கு நேரெதிர் என்று இவரைக்குறிப்பிட்டது காரணமாகத்தான்..இங்கே பாரதியின் பேர் அடிபட்டதும் அப்படித்தான்..

இது விஷ்ணுபுரம்விழா சம்பவம், நாஞ்சில் பேசுகிறார்..

சொற்களை அருமையாக கையாளத்தெரிந்தவன்தான் கவிஞன். சொல் இல்லையென்றால் கவிதை இல்லை. பாரதி,

சூதர் மனைகளிலே -- அண்ணே!
தொண்டு மகளிருண்டு.
சூதிற் பணய மென்றே -- அங்கோர்
தொண்டச்சி போவதில்லை

என்கிறான். இதை நாஞ்சில்நாடன்  உணர்ச்சியோடு  உரைக்கக் கேட்க வேண்டும். நல்ல புல்லரிப்பு எழக்கூடும். இதில் எப்படி மலர்களைத்தொடுப்பது போல சொற்களை அமைக்கிறான் பாருங்க.  அவனுக்குப்பின் கவிஞன் யாரும் இல்லை என்று சொன்னபோது கிளர்ந்தெழுந்தார் தேவதேவன். சரி சாதாரணமாக எழுந்தார்.

கவிதை என்பது கவிஞன் உணரும்  தரிசனத்தை அடுத்தவருக்கு கடத்த செய்யும் முயற்சி. அதை அவன் தனக்குள் வைத்துக்கொள்கிறான். பிறகு அடுத்தவருக்கு உரைக்கும்போது அவன் அடைந்ததை முழுமையாக சொல்ல முடியாது. அந்தளவு சொற்கள் எந்த மொழியிலும் இல்லை. அதை அவன் குறிப்பிட்டு சொல்ல முயல்கையில் அந்த கவிஞன் மற்றும் அவன் சொல்லும் இடம் தருணம் போன்ற இடம் பொருள் ஏவல்களையும் கொண்டு அந்த கவிதையை வாசித்து அந்த கவிஞன் அடைந்த தரிசனத்தை வாசகனும் அடைய வேண்டும். ஆகவே அங்கு அதிகம் உழைப்பு தேவைப்படுகிறது.  சொற்களை கட்டும் கவிஞன் மகாகவிஞன் அல்ல. கவிதை என்பது நிகழ வேண்டும். சொல்லப்படக்கூடாது. அங்கே சொற்களைத்தாண்டி ஒன்று வேண்டும். ஆகவே கவிதை என்பது சொல்லில் அல்ல. சொல்லின்மையில் உள்ளது என்றார்.

ஆகவே கவிஞன் மெளனத்தில் சொல்லி அதைவாசகன் மெளனத்தில் உணர்ந்து ஒரு மெளனகுருவாக வாழலாம் நன்றி. என முடித்துக்கொண்டார் நாஞ்சில்.

விசு பட ரேஞ்சில் ஒரு விவாதம் நிகழுமென எதிர்பார்த்து ஏமாந்ததுதான் மிச்சம்

ஆனால் அந்த உரையாடலுக்குப் பின்,  ஒவ்வொரு கவிதை அரங்கிலும்  அந்தகரணவிருத்தி ததாகரணவிருத்தி சப்தகரணவிருத்தி என  வார்த்தைகளைக் கூறிவிட்டு, மாயக்கலை நிபுணர் போல கையை மட்டும் அசைத்துவிட்டு, வேணுவெட்றாயன்  உரை அல்லது  மோனோ ஆக்டிங்  நிகழ்த்திப்போகும் போது ஏவி மணிகண்டன் மட்டுமல்லாது இன்னும் சிலரும் கை   தட்டுகின்றனர்




Thursday, May 10, 2018

காவியமுகாம் (அல்லது) ஊரான் பிள்ளைய ஊட்டியில் வளர்த்தல்

ஊட்டிக்கு மலைகளின் அரசி என்று பெயர் அல்லது இளவரசி...! ஏதோ ஒன்றாக இருக்கட்டும். குருடன் தூங்கினால் என்ன முழித்திருந்தால் என்ன என்பது போலத்தான் நானும்  போகிறேன் வருகிறேன்.

'டால்பின் நோஸ் பாத்தியா?'

' இல்லீங்க நிறைய நோஸ்கட் தான் பார்த்தேன்..'

'சூசைட் பாயண்ட்? '

அது ஒவ்வொரு அமர்வுலயும் உண்டுங்க.. பின்னாலேந்து தள்ளிக்கூட வுடுவாங்க..

எனக்குப்பொதுவாக இருக்கும் பிரச்சனை ஒன்று உண்டு. ஒரு விஷயத்தை சொல்லிக்கொண்டிருக்கும்போதே அதில் உள்ள தவறு தெரிந்துவிடும். உடனே, அது அப்படி இல்ல.. ஆனான்னு சுத்தி நட்ட நடுவில் நிறுத்திவிடுவேன். பேசுவதற்கு முன்னால் அதை தனக்குள் ஒருமுறை பேசிப்பர்க்கவேண்டும் என்று நினைத்து  யோசித்து இருக்கும் அந்த கேப்பில் அதற்கான பதிலை சொல்லியிருப்பார். அது தெரியாமல் நாம் அதையே கேட்க.. வேறென்ன..? சூசைட் பாயிணட் தான். 

திருப்பதி போல ஊட்டிக்கு போக ஒரு வழி வர ஒரு வழி என இல்லை.   அதில் சமதளத்தில் ஓட்டிப்பழகிய இருவரில் ஒருவர் கீழிருந்து மேலாகவும் ஒருவர் மேலிருந்து கீழாகவும் வரும் சமயம் இருவரும் நேராக பார்த்து இது என்ன என அதிர்ச்சியாகி ஸ்தம்பிக்கும்  ஓர் இமைக்கணத்தில் இருவருக்கு பின்னாலும் அனுமார் வாலாக அனைவரும் நின்று ஓய்வடுப்பது ட்ராபிக் ஜாம் என அழைக்கப்படுகிறது. அத்தகைய ஒன்றில் நாஞ்சில் நாடன் மாட்டிக்கொண்டதால் இந்தவருடம் எனது சிறுகதை கலந்துரையாடலுடன் துவங்கியது. செல்வேந்திரன் ஸ்டைலில் சொன்னால் 'நாராயண பலி"

அதன்பின் யுத்தகாண்டம் துவங்கிற்று.
நாஞ்சில் நாடன் அவர்களுக்கு ஒரு குழப்பம் இருக்கிறது. கிராமவாரியாக சுற்றியாயிற்று. மிதவையாய் ஒரு நகரை அடைந்து இன்று பல நாடுகள் சென்று வந்துவிட்டார். பின் கம்பராமாயணம். ஒரு இல் ஒரு வில் ஒரு சொல் என பழகிவிட்டார் போலும்.. பிரச்சனை என்னவெனில் ஒரு சொல்,  அதனால் இவரது will ரொம்ப ill ஆகிவிட்டது. அது ஒரு 'பிள்ளை'த்தமிழ் என சிலேடையாக சொல்லலாம். கடந்த மூன்று வருடங்களாக ஒரே புலம்பல். கடமை முடிந்தது. கிளம்பிவிடுகிறேன் என. போட்டோ எடுக்கையில்,  இப்பவே எடுத்துகங்க..அஞ்சலி எழுத யூஸ் ஆவும்ல என்றார். எனக்கு ஒரே சிரிப்பு. இப்படித்தான் வேலையை விடுவதைப் பற்றி முப்பது வயதுமுதல் அறுபது வயதுவரை பேசிக்கொண்டு இருந்ததாக  ஜெ. தளத்தில் எழுதியிருக்கிறார். 



அவரது கதை ஒன்றில் வாத்தியார் வாலியை அம்போடு விட்டுவிட்டு வகுப்பில் "பலே சில்மிஷம்" செய்த ஒருவனை தலைமை ஆசிரியரிடம் அழைத்துச்சென்றுவிடுவார். வாலி அம்போடு அடுத்த நாள் வகுப்புவரை கிடப்பான். அதுபோல இங்கு இப்போதுதான் விபீஷசனோடு எழுவராகியிருக்காங்க. இன்னும் இன்று போய் நாளைவா.. அக்கினிபரிட்சைல்லாம் இருக்கு. இன்னுமார்  நூறாண்டு கூட  இருக்கவும் சார். 

நாஞ்சில் நாடனின் மோகித்தே பற்றி எப்பவும் மோகித்தே இருந்திருக்கிறேன்.மிதவையில், சதுரங்க குதிரையில் கூட , கூட இருப்பவர்களுடன் அவருக்கு  சில குறைகள் இருந்தன. ஆனால்,  மோகித்தே ஒரு தரிசனம். ஏற்கனவே நாஞ்சில் நாடன் பற்றி நாலு வருசம் முன்னாடி எழுதிய கடிதம் ஜெ. தளத்தில் உள்ளது. அதைப்படித்துவிட்டு வரவங்க வரலாம். பஸ் பத்துநிமிசம் நிக்கும்.

அவரது சில ஆப்த வாக்கியங்களை நான் எப்பவும் நினைப்பதுண்டு. அதில் ஒன்று  "கல்விக்கு மாற்று இல்லை"  என்று விகடன்மேடையில் எழுதிய வரி.  நாஞ்சில் சார் நல்ல உரையாடல்காரர். விஜயா பதிப்பகத்தில் ஷிமோகா ரவிஅண்ணனோடு நானும் உடனிருக்க  நின்றபடியே ஒரு மணி நேரம் அரசு அலுவலகங்கள்   சார்ந்த அனுபவங்கள் பற்றிபேசினார்.  அதன்பிறகு அவரைக்கண்ட  வேலாயுதம் அவர்கள் அவர் அறைக்கு அழைத்துச்சென்று எங்களை அமரவைத்தார். அவர் பணி வாழ்க்கை சுந்தர்ராமசாமி என  நீண்ட உரையாடல்.  நாம் கேட்டால் மட்டும் போதும். நமக்கும் சேர்த்து அவரே பேசிவிடுவார். மீன் வகைகளைப்பற்றி பேசினால், நான் மீன் சாப்படறதில்லீங்க  எனக்கு வகைல்லாம் தேவையில்லைன்னு சொல்லக்கூடாது.  வேங்கை,புலி,சிறுத்தை ன்னு நமக்கும் பல பேரு தெரியும். ஆனா நாம அதெல்லாம் சாப்பிடறதில்லை என்று நீட்டி சொல்லிவிட்டு அடுத்தவரிக்கு போவார். 


அன்றும் இன்றும் பேனாவில்  எழுதும் ஒரு எழுத்தாளர். அவர் நினைவாற்றலுக்கு நிகராக உடலும் ஒத்துழைத்தாலொழிய இது சாத்தியம் இல்லை. தமிழுக்கு புதிய வார்த்தைகளை அருளியுள்ளார். கள்ளமெளனம் என்று இன்று படாதபாடு படும் வார்த்தை அவர் முதலில் உபயோகப்படுத்தியது.  அதுபோல தமிழத்தில் உள்ள அனைத்து சாதியினருக்கும் ஒரு வார்த்தையை அவர் உண்டாக்கி சொல்லிவைக்கலாம். கடமை இருக்கு ஐயா..


இன்றிருக்கும் அரசியல்வாதிகளை எஃப் எம் ரேடியோவில் கூட ஓட்டுகிறார்கள். அதுவல்ல விசயம். முன்னர் ஐயாவும் அம்மாவும் மாறி மாறி ஆண்ட காலத்தில் கூட அதை இலக்கியத்தில் பதிவுசெய்த
 எழுத்தாளர் இவர்தான். சமகாலத்தை எழுதுவது எழுத்தாளர்களுக்கு தேவையில்லை. அது பத்திரிக்கைக்காரன் வேலை என கும்பமுனியால் போகமுடியாது. அவர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள்  என ஒரு அறம் பாடிவிட்டுத்தான் போவார். அது அகஸ்மார்த்தாக அந்த தொடரின் கடைசி கட்டுரையாகிவிட்டதா என்ற கேள்விக்கு இன்றுவரை கள்ளமெளனம்தான் பதில். (ஆனால், ஏவலோடு ஒப்பிட்டால் இதெல்லாம் சீவல்தான்)




ஒரு மொழி எப்படி துலங்கி வருகிறது என்பது பற்றி விளக்குவார். கம்பராமாயணத்தில் யானையை எத்தனை வகையா சொல்றான்.. அம்புக்கு எத்தனை வகை சொல்றான். தென்னை மரத்துக்கு என்ன பேரு என்று சொல்லும்போதே பீகாருக்கு போய்விடுவார். பீகார்ல தென்னை மரம் இல்லை அதனால் அங்க பன்னாடைன்னு திட்டறதும் இல்லை என்று ஒரு பொதுஅறிவு விடை சொல்லிவிட்டு கம்பனுக்கு மீள்வார்.
குறுந்தொகையில், சீவகனில், கம்பனில் உள்ள சொற்களில் அமிழ்ந்தவர். அனைத்தும் சொற்களில் அடக்கம் என்பது அவர் எண்ணம் என நினைக்கிறேன். சொற்களால் ஆனது உலகம் என நம்புபவர். அதானாலேயே சொல் பொறுக்காதவர்..

இவருக்கு நேரெதிராக ஒருவர் வருவார்.  சொல் ஏதும் தேவையில்லை. ஒரு மரத்தடி நிழல் போதும் அவருக்கு..