Thursday, December 10, 2020

கணப்பித்தம் கணச்சித்தம்




 (1)

நாம் அறிந்த உலகம் உண்டு. அறியாத ஒன்றும் உண்டு. அறியாதவை பல இருக்கின்றன என்கிற ஒரு புரிதல் அனைவருக்குமே இருக்லாம். நாம் அறிந்த ஒன்றில் கிடைக்கும் நெம்புகோலை வைத்துதான் அறியாத ஒன்றைத் துழாவ வேண்டியிருக்கிறது. தோ ஒரு தேசத்தில் நடக்கும் தீவிரவாத தாக்குதலைப் பற்றிக் கேள்விப்படுகையில் ஒருவருக்கு அந்நாட்டைச் சேர்ந்த நண்பர்களின் உறவினர்களின் நினைவுகள் வரும். அவர்கள் பிழைத்திருக்க என்ணியா தாக்குதலில் உள்ளாகியிருக்க எண்ணியா என்பது அவரவர் வழி.  ஆனால் அதன் மற்றொரு புறத்தை அறிய நமக்கு இருக்கும் தகவல்களையே மனம் துழாவுகிறது.  

அந்தக் கணம் மனம் கொள்ளும் பாவனைகள் வியப்பானவை. ஒன்றை தேடி அடையும் பொழுதில் அந்த இரு தரப்பிலும் பெரும் எதிர்பார்ப்பு என்பது இராது. மலை உச்சியில் கல்லாய் சமைந்திருக்கும் ஒன்றை காண்பவனும்,  அந்த மலை உச்சியில் தானிருக்கும் இடத்திலிருந்து தன்னைக் காணவரும் அனைவரையும் காணும் அந்த சிற்பமும் மேலதிக வியப்பு ஏதும் கொள்வதில்லை. ஆனால் ஒரு மேஜையில் சுற்றிக் கொண்டிருக்கும் உலக உருண்டையின் மேல் விழுந்து விட்ட எறும்புக்கூட்டம் சிதறி ஓடுகையில் அது தன்னுடைய எந்த கூட்டாளியை எந்த தேசத்தில் எந்நிலையில் காணுமோ என்று ஆராய்வதில் ஒரு சுவாரசியம் உண்டு. அந்த ஒரு ஆர்வத்தை சுரேஷ்குமார இந்திரஜித்தின் கதைகள் உண்டாக்கிய வண்ணமே இருக்கின்றன.