J60 - சியாமந்தகம் தளத்தில் வெளியான கட்டுரை
விவாதங்களும் துருவப்படுதலும் காவிய வாசிப்பும்
2014-ம் ஆண்டில் இரு சம்பவங்கள் நிகழ்ந்தன. பல சம்பவங்கள் நிகழ்ந்தன என்றாலும் இங்கு குறிப்பட விழையும் இரு சம்பவங்கள் அந்த ஆண்டில் நிகழ்ந்தன. ஒன்று, 2014 ஜனவரி ஒன்றாம் தேதி எழுத்தாளர் ஜெயமோகன் ‘வெண்முரசு’ நாவல் எழுதத் துவங்கினார். அதுவரை மகாபாரதம் குறித்து சிறுகதைகள், நாடகங்கள் எழுதியிருந்தவர் பெருநாவலாக அதை எழுதத் துவங்கியிருந்தார். இரண்டாவது சம்பவம், அதே ஆண்டு மே மாதம் பாரதீய ஜனதா கட்சி பாராளுமன்றத் தேர்தலில் வென்று ஆட்சி அமைத்தது. அதன் பின்னர் விகடன் (தடம்) பேட்டி ஒன்றில் ஜெ.விடம், பி.ஜெ.பி. ஆட்சிக்கு வந்ததன் பிறகு மகாபாரதம் சார்ந்த சீரியல்கள், திரைப்படங்கள் என அந்தக் கதை பரவலாக்கம் செய்யப்படுகிறது. ‘வெண்முரசு’ அதோடு எவ்வகையி்ல் வேறுபட்டது என்கிற கேள்வி எழுப்பப்பட்டது. பா.ஜ.க. ஆட்சி அமைக்காதிருந்தபோதும் ‘வெண்முரசு’ அறிவிப்பு வந்த நாளில் எழுந்த விமர்சனங்களின் தொகுப்பாகக்கூட அந்தக் கேள்வியைப் புரிந்துகொள்ளலாம். அந்தளவிற்கு இலக்கிய உலகில் அரசியல் சார்ந்து எதிர்மறையாக மட்டுமே அணுகப்பட்டது அந்த முயற்சி. தமிழ் இலக்கிய சூழலில் எந்த ஒரு முயற்சியும் அரசியலாகவே புரிந்துகொள்ளப்படும் என உணர வைத்த தருணங்கள் அவை.
சமீபத்தில் நிகழ்ந்த சமூக வலைதள உரையாடலின் விவாதம் ஒன்று எனக்கு நண்பர்கள் குழுவில் திரைச்சொட்டாக வந்துசேர்ந்தது. மிக சுவாரசியமானது. அதில், இரு கட்சித் தலைவர்களின் ஆதரவாளர்களுக்கான உரையாடலில் ஒருவருக்கு மற்றவரை மடையர் என நிரூபிக்கவேண்டிய கட்டாயம் இருந்ததை அந்த விவாதங்கள் வழி உள்வாங்க முடிந்தது. அதனால் அதில் ஒருவர் மற்றவரை தாயைப் புணர்பவனே என்றும் அதற்கு மற்றவர் இவரை சகோதரியின் உறுப்பான வடிகட்டிய முட்டாளே என்றும் (இந்தியில் இலக்கணப் பிழையோடு) விளிக்கத் துவங்கியிருந்தனர். இதில் சவால் என்பது ஓரிடத்தில் முந்தையவர் இந்திய மரபை முழுதும் வாசித்திருக்கிறேன், வாசிக்காமல் பேசாதே என்று சொல்வதும், மற்றவர் அப்படியென்றால் தசரதனின் அறுபதினாயிரம் மனைவிகளில் இருபத்திநாலாயிரத்து ஐநூற்று முப்பத்தி எட்டாவது மனைவியின் பெயர் என்ன சொல் என்று கேட்டதும் ஆகும். அந்தக் கடைசி கேள்வியோடு அந்த விவாதம் முடிவுற்றது. ஒருவேளை அவர் அதற்கான பதிலை தேடிக் கொண்டுவந்து விவாதத்தைத் தொடர்ந்திருக்கலாம். தெரியவில்லை. ஆனால் இங்கே கவனிக்கத்தக்கது தற்காலத்தில் ஓர் அரசியல் விவாதம் எவ்வாறு தனிப்பட்ட தாக்குதலாகி, பின் அந்த நிலத்தின் தொன்மம், அதன் முன்னோர்கள், அதனுடைய இலக்கியம் மற்றும் காவிய மரபு வரை ஆதிக்கம் செலுத்தி, அதன் சார்பாக வளைக்கப் பார்க்கிறது என்பதைத்தான்.
மேற்சொன்ன பத்தியில் கவனிக்கத்தக்க உப தலைப்பாக இன்னொன்று இருக்கிறது. அது, இன்றுவரையிலும் ஏன் எதிர் ஆள் மீதான ஒரு வசைச்சொல் அவர் வீட்டுப் பெண்கள்மீது பாய்கிறது என்பது. எதிர் தரப்பினை அவமதிக்க அன்றும் இன்றும் துகிலுரியப்படுபவர்கள் பெண்கள்தான் அல்லவா.
அரசியலைத் தவிர்த்துப் பார்த்தால் அடுத்த இடத்தில் வருவது திரைப்படங்கள். இன்று ஒரு திரைப்படத்தின் கதாநாயகனின் அறிமுகப் பாடலை ஒருவர் கேட்பாரானால், அவர் பெரிய ஆச்சரியத்தை அடையக்கூடும். அதன் வர்ணனைப்படி அந்த நாயகன் மலையைத் தூக்கிச் சென்று உடைத்துப் பொடியாக்கி வீசுபவர். பிறகு அதைக் கடலுக்குள் வீசிவிடுபவர். ஏன் அவ்வாறு செய்ய வேண்டும் என்று தெரியவில்லை. அவர்கள் புராணங்களில் அனுமானும் இரண்யாட்சகனும் தனித்தனியாக செய்தவற்றை ஒற்றை ஆளாகச் செய்துகொண்டிருக்கிறார்கள். இதனோடு கூட அவர்களது பிற கல்யாண குணங்களும் விதந்தோதபடுகின்றன. பிற பெண்ணைக் கண்ணெடுத்தும் காணாதவர் என்பது ஒரு மதீப்பீடு என்றால் அனைத்துப் பெண்களையும் வலையில் விழவைத்தவர் என்பதும் ஒரு மதிப்பீடு. ஒருவர் இராமனுக்குப் பிரதியாகிறார்; மற்றவர் கண்ணனுக்கு.
இன்று பொதுவெளியில் விவாதிக்கத் துவங்கும் யாருமே தன் விவாதத்தில் தான் அறிந்தோ அறியாமலோ நமது காவியங்கள் மீதான ஒற்றை மதிப்பிட்டிற்கு வந்துவிடுகிறார்கள். அந்த ஒற்றை மதிப்பீடு என்பது பெரும்பாலும் இரு காரணங்களால் நிகழ்கிறது. 1) முழுதாக அதை வாசிக்காமல் அதன் மிகைப்பகுதிகளை மட்டும் கதைகளாகக் கேட்டல்; 2) அதன் திரண்ட கருத்து இதுதான் என்னும் முன்அவதானிப்போடு அணுகுவது. ஒருபுறம், அதன்மீது தான் அறிந்தவற்றை ஏற்றுவது என்பதை மறுப்பாளர்கள் செய்கிறார்கள் என்றால் அதன்மீது அறியாதவற்றை ஏற்றுவது என்கிற பிழையை நம்பிக்கையாளர்கள் செய்துவிடுகிறார்கள்.
பொதுவில் காவிய வாசிப்பு என்பது குழப்பத்தைத் தருவது கிடையாது. ஆனந்தம் தருவது. அது அடிப்படையில் ஒரு கதை சொல்கிறது. அதன் மேல் உணர்வு, தர்க்கம், விழுமியம், தரிசனம் எல்லாம் நிலைகொள்கின்றன. அவை அனைத்திற்கும் அடித்தளமான ஒன்று, அது ஒரு கதைக்களம் என்பது மட்டுமே. அது கேட்பவரை வசீகரிக்கச் செய்யும் கதைசொல்லலாக இருக்கிறது. அந்த வசீகரம் என்பது அதில் மிகையாக வெளிப்படுகிறது. அது கல்லளவு மிகை அல்ல. மலையளவு மிகை. பீமனின் பலத்திற்கு உதாரணம் சொல்ல யானைகள் தேவையாகின்றன. பரசுராமனின் வருகை என்பது ஒரு நிலநடுக்கத்தின் அறிகுறிகளாகத்தான் இருக்கின்றன.
ஒரு அறிவிப்பு என்று பார்த்தால்கூட இன்றைய திருமணங்களிலும் தாய்மாமன் அளிக்கும் சீதனம் என்பது லட்சம் கட்டி வராகன் என்று சொல்லியே ஏற்கப்படுகிறது. இதுவே அப்படி இருக்கையில் புனைவுலகம் எப்படி இருக்கும்? அங்கு யதார்த்தத்திற்கும் யதார்த்தக் கதைகளுக்குமே பாரதூர இடைவெளி இருக்கிறது. யதார்த்தக் கதைகளில்கூட, ஒருவர் சொன்னதை மற்றவர் புரிந்துகொண்டார் என்பதைச் சொல்லும்போதும், ‘அவன் தலையைக் கவிழ்ந்தபடியே பேச்சற்று சிலையாக நின்றான்’, ‘பேசிச் சென்ற திசையையே கண்ணில் நீர் வழிய பார்த்தபடியே சிலை போல நின்றிருந்தான்’ போன்ற சொல்லாடல்கள் வந்துவிடுகின்றன. யதார்த்தத்தில் அப்படி யாராவது நிற்கிறார்களா என்ன? யதார்த்தக் கதைகளே அவ்வாறு இருக்கையில் காவிய வர்ணனை இன்னும் உச்சத்தில் நிற்கிறது. கம்பராமாயணத்தில் நகரப்படலத்தில் அயோத்தி நகரின் உயர்ந்த மதில்களைக் குறித்த வர்ணனை வருகிறது. அதன் உயரம் என்பது இந்திரலோகத்தைத் தொடுவது. எனவே அந்த மதிலில் வாழும் புறா தன் இணையோடு ஊடல் கொண்டு செல்கையில் அருகில் இருக்கும் இந்திரலோகத்தின் கற்பக விருட்சத்தின் கிளைகளில் சென்று பதுங்கிவிடுகிறது.
இந்தக் காவிய மிகை வர்ணனை என்பதில் சமகால அரசியல் கலக்கும்போது அதன் வரிகள் தன் தேவைக்கேற்ப புரிந்துகொள்ளப்படுகிறது. தன்னுடைய அரசியல் சரிநிலை வசதிக்கேற்ப மட்டுமே புராணங்களைப் புரிந்துகொள்வேன் என்கிற பிடிவாதம் பெருகியதும் ஒரு காரணம். தசரதனுக்கு ஆயுட்காலம் இத்தனை ஆயிரம் ஆண்டுகள் மற்றும் அறுபதினாயிரம் மனைவியர் என்பதை ஒரு தரவாக எடுத்துக்கொள்பவர் கழுவேற்றப்பட்ட சமணர்கள் எண்ணாயிரம் அல்ல என வாதிடுவார். அதேபோலத்தான் மாற்றுத் தரப்பும், எண்ணாயிரம் சமணர்கள் கொல்லப்பட்டனர் என ஏற்றுக்கொள்பவர் ஆயுட்காலத்தையும் அறுபதினாயிரம் மனைவியரையும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். ராமன் பெரிய அறத்தான் என்று புராணம் சொல்வதை ஏற்பதில்லை. ஆனால் புராணம் வழியாக மணிமேகலை கையில் அட்சய பாத்திரம்தான் கிடைத்தது என்று நம்புபவர். ஒரு வாசகர் இயல்பாக ஏற்படக்கூடிய இந்த வகை புறச்சிக்கல்களைக் கடந்தே காவிய வாசிப்பிற்குள் வரவேண்டும். கடப்பது என்றால் நடுஇரவில் சுடுகாட்டைக் கடப்பவர் போல தனக்குள் வீரமாகப் பாடிக்கொண்டோ அல்லது கண்களை இறுக்க மூடிக்கொண்டோ அதைக் கடந்துவிட இயலுமா? பெரும்பாலும் சமூக வலைதள விவாதங்களைக் காண்கையில் அவ்வாறு நிகழ்ந்திருக்கவே வாய்ப்பு அதிகம் எனத் தோன்றாமல் இல்லை. ஆனால் அதைவிட எளிதானது முழுமையான காவிய வாசிப்பு என்கிற ஒரு நேரடி அணுகுமுறை.
முன்பு பேசிய ஒற்றை மதிப்பீடுகளுக்கான இரு காரணங்களில் முதன்மையானது மிகைப்படுத்தல்கள். ஒரு காவியம் நவீன நாவலுக்குள் வரும்போது எதிர்கொள்ளும் சவாலில் இந்த மிகையலங்கார சொற்கள் முக்கியமான ஒன்று. கர்ணன் கொடையாளி என்று சொல்வதால் மற்றவர்கள் கருமி என்றோ தானம், தருமம் செய்யாதவர்களோ அல்ல. அர்ஜூனனும் திருதனும்கூட ஓர் உயிரைக்காக்க தன்னுயிரை துச்சமெனக் கருதி முன்னிற்பவர்கள்தான். ஆனாலும் அவர்களில் கர்ணன் உச்சமானவன். கொடையளிப்பவனும் கொடையேயானவனும் வேறு வேறு. நீதி நூல்கள் வழியாகக் கொடையளிப்பது தன்னுடைய அறம் எனக் கருதி தன் முன் நிற்பவர்க்குக்கு என்ன வேண்டும் எனக் கேட்டு அளிப்பவன் கொடையளிப்பவன். தன் முன் நிற்பவருக்குள் ஊடுருவி அவர் வேண்டுவது யாது என உய்த்துணர்ந்து, கேட்பதற்கு முன்பே அதை அளிப்பவன் கொடையேயானவன். இவர்களில் கர்ணன் கொடையேயானவன். அவனது கொடை உள்ளம் அவன் பயின்று வந்தது அல்ல. அவன் கருவிலேயே இருந்தது. இருட்கனி நாவலில் சூதர் பாடலாக வரும் கர்ணனின் கதையில், குந்தி தன் குழந்தையை ஆற்றில் விடலாமா வேண்டாமா எனத் தத்தளிப்பதையும், கைவிட்டு கர்ணனின் ஓடம் விலகிச் செல்கையில் உருவான அவள் மனநிலையையும் விளக்குகிறார். அதை மனதில் ஓட்டி மீண்டும் காண்கையில் ஒரே நேரத்தில் தன் தாயின் கலக்கத்தையும் இன்னொரு தாயின் ஏக்கத்தையும் தீர்க்க தானே அதை உதைத்து நதியோட்டத்தில் நழுவுகிறான் என்பதை அறிகிறாள். தனக்கு ஒரு வாய் முலைப்பால்கூட புகட்டாத அன்னைக்கு அவன் அளித்த கொடை அது என உணர்கிறாள். இவ்வாறு சூதர் கதைகள் வழியாக கர்ணனது புகழ் மேலெழுகிறது
ஒருவரது குணத்தைக் காட்ட எதற்காக மிகையை நாடுகிறோம். ஏன் யதார்த்தத்திலிருந்து மேலெழுகிறோம் என்று கவனிக்கலாம். சமதளத்திலிருந்து மலைமீது ஏறுபவர் அங்கிருந்து வானத்தையா நெருக்கமாகப் பார்க்கிறார்? அங்கிருந்து அவர் தான் வாழும் நிலத்தையே மீண்டும் பார்க்கிறார். அந்நிலத்தின் உச்சமானது எதுவோ, பரந்தது எதுவோ, அது காணக்கிடைக்கிறது. அந்தக் கோணம் ஒரு விஸ்தாரமான பார்வையை அளிக்கிறது. காவியம் அத்தகைய மேலெழுதலை அளிக்கிறது.
காவியத்தின் மீதான ஒற்றை மதிப்பீடுகளுக்கான இன்னொரு காரணம் அதன் திரண்ட கருத்து இதுதான் என்னும் முன் அவதானிப்போடு அணுகுவது. இங்கு மகாபாரதம் மீதான அரசியல் சார்ந்த முன் அவதானிப்பு என்ன என்று பார்த்தால், அது கிருஷ்ணன் உரைத்த கீதை மீதான அரசியல் சார்ந்த தன் மனப்பதிவு. முழுமையான வாசிப்பிற்கு அப்பாற்பட்டதும் ஆதரவு x எதிர்ப்பு என்ற இருநிலைக்குள் பொருத்திக்கொள்வதாகவும் உள்ளது. அதனால் அது கிருஷ்ணன் மீதான மனப்பதிவாகவும் ஆகிறது. கிருஷ்ணன் மகாபாரதத்தில் வருவதால் மகாபாரதத்தின் மீதான ஈர்ப்புக்கும் விலக்கத்துமே காரணமாக ஆகிவிடுகிறது. ஒருசாரார் கிருஷ்ணனைப் பார்த்து குளத்தில் நீராடும் பெண்களின் ஆடைகளை ஒளித்து வைக்கும் காமன் என்றும் மற்றவர் ஒற்றை விரலால் மலையைத் தூக்கிப்பிடித்து மழையிலிருந்து ஊரைக் காப்பாற்றிய சிறுவன் என்றும் மனப்பதிவு கொள்கின்றனர். கிருஷ்ணன் பல கோணங்களில் வெளிப்பட்டு இறுதியாக ஒரு தத்துவ ஞானியாக மட்டுமே எஞ்சும் ஒருவனாக ‘வெண்முர’சில் வருகிறான். (நான் இந்த முந்தைய வரியைச் சொல்வதற்கு முன் ‘வெண்முர’சின் அத்தனைப் புத்தகங்களையும் ஒருமுறை வாசித்துவிட்டோம் என்கிற நம்பிக்கையை அடிப்படையாகக் கொள்ளவேண்டியிருக்கிறது.)
கிருஷ்னன் யார் என்பதைத் தொகுப்பது என்பது சுலபமானது அல்ல. அவனது நெறி என்பது ராமனது சத்ரிய நெறி அல்ல. கிருஷ்ணனுடையது அரசியல் மறுக்கப்பட்டவருக்கான அறம். ராமராஜ்ய அரசியல் பேசுபவர்கள்கூட எதிர்கொள்ளத் தயங்கும் ஒன்று கிருஷ்ண ராஜ்யம்.
குருக்ஷேத்திர யுத்தத்தில் ஆதரவு நாடுகள் தங்கள் பங்கு வீரர்களை அளிக்கின்றன. அந்த உரையாடலின்போது போரில் முதல் வரிசையில் நிற்பவர்கள் சாதாரண குடிமக்களே அன்றி வீரர்கள் அல்ல என்பதை யுதிஷ்டிரன் அறிகிறார். படைக்கலம் ஏந்தத் தெரியாத எளிய மனிதர்களை குருக்ஷேத்திரத்தில் போர்முகத்தில் நிறுத்துவதா என யுதிஷ்டிரன் குழம்பும் அந்தத் தருணம் ‘வெண்முரசு’ வரிசை நாவல்களில் ஒன்றான இமைக்கணத்தில் வருகிறது. நெறி நூல்களைப் பின்பற்றியே செல்லும் யுதிஷ்டிரன், அது பிழைத்தால், தானும் நெறிகளுக்கு அப்பாற்பட்டவனாக ஆகிறேன் என்று கருதி, அந்தத் தவறை நான் செய்யமாட்டேன் என்று அதற்கு மறுக்கிறான். இறுதியில் அவர்களைப் போருக்கு ஏற்க பராசர நீதியை ஆதாரமாக ஏற்கிறான். அதன் பொருட்டு நிகழும் சகாதேவனுடனான விவாதத்தில் மனஉளைச்சலும் அடைகிறான். அதன் பின்னர் அலைவுறும் அவன் மெய்த்தேடலுக்காக இளைய யாதவனான கிருஷ்ணனுடன் உரையாடுகிறான். கிருஷ்ணனுடனான உரையாடலுக்குப் பின்னர் அவன் கனவில் ஒரு காட்சியைக் காண்கிறான். அதில் பெருந்திரளான பசுக்களின் நடுவே ஒரு சிறு பாறைமேல் ஏறி நின்று குழலிசைக்கும் கரிய ஆயர் சிறுவனைக் காண்கிறான். அழகிய கருநிறம். மஞ்சள்நிற ஆடை. தலையில் விழிகொண்ட பீலி. அவ்விசை கேட்டு பசுக்கள் வந்துசேர்ந்துகொண்டிருந்தன. பசுக்களின் குரலோடு அப்பால் ஓநாய்களின் உறுமலைக் கேட்கிறான். ஆனால் ஆயர் சிறுவன் வேறேதோ காலவெளியில் இருந்தபடி குழல் வாசித்துக்கொண்டிருக்கிறான். “அனைத்துப் பசுக்களும் வந்துவிட்டனவா?” என்று அவனிடம் கேட்கிறான். ஒளி கொண்ட முகத்துடன் அந்தச் சிறுவன் திரும்பி, நீலமணி என மின்னிய விழிகளுடன், “இணைந்த நலனை நான் பேணுகிறேன்” என்கிறான். கனவில் கண்ட இளைய யாதவனின் இந்த பதில் மூலம் தனக்கான தெளிவை யுதிஷ்டிரன் அடைகிறான். அவனுடைய கேள்வி எளிய உயிர்களின் காரணமில்லா மரணம் என்றால், இளைய யாதவனின் பதில் அனைத்து உயிர்களுக்கான அறம் குறித்துச் செலுத்தும் ஒன்று. ஓநாய்களுக்காக ஒரு பசுவை அவன் விட்டுவிட்டானா அல்லது தன்னை நம்பிய உயிரினங்களுக்காக அவன் ஓநாய்களைப் பசியில் விட்டானா? அனைத்து உயிர்களுக்குமான வாழும் உரிமை என்கிற கருதுகோளுக்கு நாம் இன்று வந்துசேர்ந்திருக்கிறோம். சென்ற தலைமுறை வரை மிருகங்களை வேட்டையாடி, காடுகளை அழித்து, பாதைகளை உருவாக்கியதை வீரம் எனப் பாடிய நாம் நமது செளகரியங்களுக்காக காடுகளையும் பிற உயிர்களையும் அழிக்கலாகாது என்ற புரிதலை அடைந்துள்ளோம். ஆனால் இதைக் குறித்து ஒருவன் குருக்ஷேத்திர யுத்தம் நிகழ்ந்த காலத்தில் உரைத்திருக்கிறான் என்பது கவனிக்கத்தக்கது.
இன்று நம் காலத்தில் அனைத்து யுத்தங்களும் நேரடிப் போராக நிகழ்வது அல்ல. ஆனால் இன்றும் அதன் முதல் வரிசையில் நிற்கும் அப்பாவிகள் சாமானிய மக்களே. அவர்களும் தான் முதல் வரிசையில் நிற்பது அறியாமல் சமூக ஊடகங்களில் தன் நண்பர்களை, உறவினர்களை எதிர்த்து நிற்கின்றனர். குருக்ஷேத்திரத்தில் நின்று வாள் சுழற்றியவர்களுக்குதான் இங்கு ஏன் நிற்கிறோம் என்கிற புரிதல் இருந்திருக்கும். ஆனால் இன்றைக்கு சமூக ஊடகங்களில் களமாடுபவர்கள் தனக்கு அந்த புரிதல் இருக்கிறதா என சுயபரிசோதனை செய்துகொள்ளத்தான் வேண்டும்.
கேள்விகள் பெருகிய இன்றைய காலகட்டத்தில் அனைத்திற்குமான வாசல்களும் திறந்தபடியே இருக்கின்றன. அவை மாய அரங்கத்தின் கதவுகள் என்பதால் முட்டுச்சந்துக்குள் இட்டுச்செல்லும் வாசல்கள் அதிகம். துவங்கிய இடத்திற்கே மீண்டும் கொண்டுவந்து நிறுத்துபவையும் அதிகம். அதைக் கண்டறிவது கடினமானது. அதில் நம்பி நுழையத்தக்கவை காவிய வாசல்கள் மட்டுமே. தனது கேள்விக்கான பதிலை யுதிஷ்டிரன் பெற்றிருக்கலாம். இமைக்கணம் என்பது திரண்டு அனைவருக்கும் பொதுவான ஒன்றைச் சொல்வது அல்ல. அந்தந்த குழப்பத்தில் உள்ளவருக்கான நூல். அதில் இளைய யாதவனுடன் உரையாட வருபவரில் ஒருவராக யுதிஷ்டிரரும் வருகிறார். அவருக்கு உள்ளது தன் மீதான ஐயம். பின் தெளம்யர் வருகிறார். அவருக்கு உள்ளது ஒரு மரபின் மீதான ஐயம். இறுதியில் தர்மராஜாவான யமன் வருகிறான். அவனுடையது ஒட்டுமொத்த உலக இயங்கியலுக்கான ஐயம். கிருஷ்ணனின் அறம் என்கிற தராசு தட்டின் ஒரு முனையில் தன்னை நிறுத்தினால் அது தன்னறத்தைக் காட்டும். குலத்தை நிறுத்தினால் குலதர்மத்தைக் காட்டும். உலகத்தை நிறுத்தினால் உலகதர்மத்தைக் காட்டும்.
இன்றைய தலைமுறைக்கான உட்சபட்ச காவியப் படைப்பாக ‘வெண்முரசு’ வரிசை நூல்கள் உள்ளன. ‘வெண்முர’சை அணுகும்போது அதனூடாக நம்மையும் அறியாமல் வரலாற்று அறிவு, சமூகக் கட்டமைப்பு, அனைத்து தத்துவத் தளங்களின் அறிமுகம், அதுவரையிலான நீதி நூல்களின் தொகுப்பு என அனைத்தையும் அறிகிறோம். இலக்கியத்தில் அன்றைக்கான உட்சபட்ச நூலை வாசிப்பவர்கள் அதுவரையிலான அனைத்து சிந்தனை முறைகளையும் அதன்வழி தொகுத்துக்கொள்கிறார்கள். ஒரு முழுப்பார்வை கிடைக்கப்பெறாமல் தனக்கான தேடலை முன்னெடுத்துச் செல்வது கடினம். ‘வெண்முரசு’ எழுதப்பட்ட காலத்தில் அதன் உடனே பயணித்த அனுபவம் அளித்த உரையாடல்களும் தோழமைகளும் எனக்கு வாழ்நாள் பெறுமதியுடவை. அறிதலின் உவகை என்பது அளப்பரியது. அத்தகைய பேருவகைக்குள் இட்டுச்செல்லும் நாவல் ‘வெண்முரசு’. இன்று, மணிவிழா காணும் அந்நாவலின் ஆசிரியரைப் பணிந்து வணங்குவணங்குகிறேன்.