புக்பிரம்மா நிகழ்விற்கு சென்று வந்தேன். நல்ல அனுபவமாக இருந்தது. போக்குவரத்து மற்றும் தங்குமிடம் உணவு ஆகிய ஏற்பாடுகள் மெச்சத்தக்கதாகவே இருந்தன. சென்னையில் தி ஹிண்டு இலக்கிய விழா நிகழும் போது பார்வையாளராக செல்வதுண்டு. அது பல இந்திய எழுத்தாளர்களை சந்திக்க நல்ல வாய்ப்பாக இருக்கும். அங்கு அமர்வுகள் இரண்டு அரங்குகளில் நிகழும். அதோடு ஒப்பிட்டால் இந்த வளாகத்தின் பரப்பளவு, அரங்க கொள்ளளவு, அரங்கங்களின் எண்ணிக்கை எல்லாம் அதிகம்.
நான் ரயில் நிலையத்திலிருந்து அரங்கம் சென்ற காரில் என்னுடன் கார்த்திக் பாலசுப்ரமணியன், அந்திமழை அசோகன், மற்றும் தெலுங்கானா பகுதி எழுத்தாளரான கீதா ராமசாமி ஆகியோர் வந்தனர். கீதா ராமசாமி அவர்களை அங்கு சந்தித்தது ஆச்சரியமாக இருந்தது. அவர் எழுதியிருந்த Land Guns Caste Woman புத்தகம் தமிழில் 'நிலம் துப்பாக்கி சாதி் பெண்' என விநோத்குமார் மொழிபெயர்ப்பில் இவ்வருடம் காலச்சுவடு வெளியீடாக வந்துள்ளது. மிகவும் முக்கியமான புத்தகம். எனக்கு அவரைச் சந்திக்க ஆவல் இருந்தது. ஆனால் புக்பிரம்மா விருந்தினர் பட்டியலில் அவர் பெயரைக் கண்ட நினைவு இல்லை. எதிர்பாராத சந்திப்பாக அது அமைந்தது அந்தக் காலையை அழகாக்கி விட்டிருந்தது. அவர் பெயர் இல்லாததைக் கேட்ட போது தான் பதிப்பாளராக மட்டுமே வந்திருப்பதாக கூறினார்.
St. John கல்லூரி வளாகம் மிகப் பெரியது. நான்கு அரங்குகள். மண்டபா என பெரிய அரங்கு. மதனா ( தமிழ் எழுத்தாளர்கள பெரும்பாலும் மந்தனா என்றே உச்சரித்தனர். அரே ராஷ்மிகா!!!) , அங்களா, அக்ஷரா ஆகிய சிறிய அரங்குகள். புஸ்தகா என்கிற ஒரு அரங்கு புத்தக கண்காட்சி் கூடத்தில். கூடவே அதற்கு வெளியே ஒரு திறந்தவெளி அரங்கு சின்னார லோகா என்று. அதில் பெரும்பாலும் குழந்தைகளுக்கு கதை சொல்லும் நிகழ்வு நடந்தது.
தங்குவற்கான அறைகள் அந்த வளாகத்திலேயே ஒதுக்கப்பட்டிருந்தன. கல்லூரி விடுதி அறைகள் என நினைக்கிறேன். வரிசையான அறைகள். மிகவும் சுத்தமான பராமரிப்பில் இருந்தன. என்னுடன் பதிப்பாளர் ஜீவகரிகாலன் அறைத்தோழராக இருந்தார். பக்கத்து அறையில் கவிஞர்கள் சாம்ராஜ் மற்றும் இசை இருந்தனர்.
அப்போதே facebook ல் கடலூர் சீனு அமர்வுகளில் பங்கேற்பது குறித்து கண்டனங்கள் கேலி குத்தல் பதிவுகள் வரத்துவங்கியிருந்தன. இந்த விழாவிற்கு அழைக்கப்பட்டவர்களில் மூத்த படைப்பாளிகள் இளம் படைப்பாளிகள் மொழிபெயர்ப்பாளர்கள் வாசகர்கள் இலக்கிய செயல்பாட்டாளர்கள் என கலந்தே இருந்தனர். இவர்களில் கடலூர் சீனு கடந்த 15 வருடங்களாகவே தீவிர இலக்கியத்தில் கட்டுரைகள் வாயிலாகவும் அவர் கடலூரில் முன்னெடுத்த நற்றிணை கூட்டங்கள் வாயிலாகவும் பங்காற்றி வருபவர். இனியஜெயம் எனத் துவங்கும் அவரது கடிதங்கள் மீது ஒரு நகைப்பு பொதுவாக உண்டுதான். அவரைக் கண்டாலும் நண்பர்கள் கிண்டலடிப்பது உண்டு. ஆனால் அவரது தொடர் பங்களிப்பை மறுக்க முடியாது. நிகழ்வு ஒருங்கிணைப்பாளரான எழுத்தாளர் பாவண்ணனும் இவரும் புதுவையை ஒட்டிய இலக்கியச் செயற்பாட்டில் தொடர்ந்து ஈடுபட்டு வருபவர்கள். ஆனால் அவருக்கு எதிராக எழுந்த கன்டணங்கள் மனதை மிகவும் வருந்தச் செய்தன.
ஜெ. அங்கு முதல்நாளே வந்து தங்கியிருந்தார். ஆகவே காலையில் அவர் அறைக்குச் சென்றேன். அப்போதுதான் கவிஞர் இசை ஊரிலிருந்து வந்தார். அவரை அறைக்கு அழைத்துச் செல்ல வந்திருந்த கவிஞர் சாம்ராஜ் ம் கூடவே இருந்தார்.. நான் அங்கு நிற்பதைப் பார்த்து அவர்களும் வர கதவைத் திறந்த ஜெ. அப்போதுதான் தூங்கி எழுந்திருந்தார். (நல்ல தூக்கத்தில் இருந்திருக்கக் கூடும். அவருடைய பதிவில் சாம்ராஜும் எம. கோபாலகிருஷ்ணனும் வந்த்தாக குறிப்பிட்டிருந்தார். ) பின்னர் எங்களுடன் தேநீர் அருந்த கேண்டீனுக்கு வந்தார். அங்கு ஏற்கனவே பிற கவிஞர்களும் எழுத்தாளர்களும் வந்திருந்ததால் அப்போதே உரையாடல் துவங்கிவிட்டது.
புக் பிரம்மா முதல்நாள் வாழ்த்துரையை தென்னிந்திய மூத்த எழுத்தாளர்கள் வழங்க விழா துவங்கியது. தமிழ் இலக்கியம் சார்பாக ஜெ. துவக்க உரையாற்றினார். அது குறித்த பதிவு அவரது தளத்தில் உள்ளது.
பிறகு காலை அரங்குகள் துவங்கின. எனக்கு தெலுங்கு அமர்வுகள் மீது பெரிய எதிர்பார்ப்புகள் இல்லாமல் இருந்த்து. நண்பர் பாஸ்கர் அவிநேநி் பங்கேற்றதால் தெலுங்கு மொழபெயர்ப்பாளர்களின் அரங்கிற்குச் சென்றேன். அது மிகவும் சகஜமாகவும் யதார்த்தமாகவும் இருந்த்து. அதன்பின்னர் இரு வேறு தெலுங்கு அமர்வுகளில் ஆர்வத்துடன் கலந்து கொண்டேன். நான் நெல்லூர் மாவட்டத்தில் ஆறு வருடங்கள் பணி புரிந்தேன். ஆகவே எனக்கு தெலுஙகில் சகஜமாக உரையாட இயலும். (எழுதப் படிக்கத் தெரியாது.) ஆகவே அமர்வுகளில் இயல்பாக ஒன்ற முடிந்தது. குமார் கனபராஜு எழுதி கெப்பல ஸ்ரீநிவாஸ் மொழிபெயர்த்த 'முக்குளிப்பான்' தொகுப்பும் , அஜய் பிரசாத் எழுதி மாரியப்பன் மொழிபெயர்த்துள்ள 'அத்தங்கி மலை' என்கிற சிறுகதை தொகுப்பும் இந்த விழாவில் பெற்றவை. மலையாள எழுத்தாளர்களை சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் தெலுங்கு அமர்வுகள் சுவாரஸ்யமாக இருந்தன. சக்காரியா, சின்ன வீரபத்ருடு, பெருமாள் முருகன் , நாகபூஷணஸ்வாமி, பிரதீபா நந்தகுமார் ஆகியோர் பங்கெடுத்த அமர்வு (The Role of Media in Keeping Alive the Literature & the Culture of the Land) தீவிரமானது ஆனால் மூத்த எழுத்தாளர்கள் மிகவும் கலகலப்பாக கொண்டு சென்றனர். கன்னடம் முற்றிலும் புரியாது என்பதால் கன்னட அமர்வுகளில் கலந்துகொள்ளவில்லை. ஆனால் விவேக் ஷேன்பேக், விக்ரம் ஹத்வார் ஆகியோருடன் உரையாடினேன். விக்ரம் ஹத்வார் எழுதி பாவண்ணன் மொழிபெயர்த்த 'காரணம்' கதை முன்பு நம்நற்றிணை இதழில் வந்த்து. அதைப்பற்றி ஊட்ட காவியமுகாமில் நான் பேசியிருந்தேன்.
எங்கள் அமர்வு ( சுரேஷ் பிரதீப், ரம்யா மற்றும் கயல் ) மொழிபெயர்ப்பு புதிய உலகம் புதிய சிந்தனை என்பது குறித்து. நான் மட்டுறுத்தாளராக இருந்தேன். சுரேஷ் மற்றும் ரம்யா அவை அளித்த முன்னகர்வுகள் பற்றிப் பேச மொழிபெயர்ப்பாளரான கயல் அவை தறபோது என்னென்ன காரணிகளை என்னென்ன சவால்களை எதிர்கொள்கிறது எனப் பேசினார். அதன் இணைப்பினை முதல் comment ல் இட்டுள்ளேன். நண்பர்கள் அதைப் பார்த்து கருத்துக்களை சொல்லவேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். ( வீடியோவில் 03:58:00 ல் எங்கள் அமர்வு துவங்குகிறது)
நடிகர் பி்ரகாஷ்ராஜ், தமிழ் மலையாளம் தெலுங்கு கன்னட கவிதைகளை வைத்து ஒரு மேடை நிகழ்வினை ஆற்றினார். பிற அமர்வுகளில் பார்வையாளராக அமர்ந்திருந்தார். நடிகர் கிஷோரும் அவ்வாறு பார்வையாளராக வந்து அமர்ந்திருந்தார். கலை நிகழ்ச்சிகளும் நன்றாக இருந்தன. அதில் வெங்கடேஷ் குமாரின் ஹிந்துஸ்தானிய இசையும், மாலை யக்ஷகானா வில் நிகழ்த்தப்பட்ட பஞ்சவடி பற்றிய நிகழ்த்துக் கலையும் அருமையாக இருந்தன. இரு வேறு கலை நிகழ்வுகளைத் தவற விட்டேன்.
ஞாயிறு அன்று மாலை வாழ்நாள் சாதனையாளர் விருது ஜெ. க்கு அளிக்கப் பட்டது. விருதினைப் பெற்றுக் கொண்ட பின்னர் சுசித்ராவுடனான ஒரு உரையாடல். இரண்டும் நன்றாக இருந்தன. மிகவும் மகிழ்ச்சியளிக்கக் கூடியதாகவும் இருந்தன.. இந்த விருது அறிவிப்பை மிகவும் ரகசியமாக வைத்திருந்தனர். அது ஆஸ்கார் விருது அறிவிப்பது போன்று அந்த சமயத்தில்தான் இந்த விருதைப் பெறுபவர் என்று சொல்லி வழங்கினர். முன்பே சொல்லியருந்தால் இன்னும் பலர் வீட்டற்குச் செல்லாமல் காத்திருந்திருப்பார்கள். அந்த உரையாடலை நேரில் கேட்டிருந்திருக்கலாம். அமைப்பு, இந்த அறிவிப்பு முறையை மறுபரிசீலனை செய்யலாம் என்று தோன்றுகிறது. மற்றொன்று புத்தக கண்காட்சி அரங்கம். ஊரே இதமான குளிரோடு இருக்கையில் பளீர் விளக்குகளும் மூடிய அரங்கும் வியர்வை வழிய வைத்தன. இஸ்லாம் இன்டர்நேஷனல் லிமிடெட் அமைப்பின் தன்னரா்வலர்கள் ஆங்காங்கு நின்று உரையாடினர். உலக நெருக்கடியும் அமைதிக்கான வழிமுறையும் என்கிற புத்தகம், உலகளாவிய அஹ்மதிய்யா முஸ்லீம் ஜமாஅத்தின் ஐந்தாவது கலீஃபாவான ஹஸ்ரத் மிர்ஸா மஸ்ரூர் அஜ்மது அவர்களின் சொற்பொழிவுகள் கடிதங்கள் ஆகியவற்றின் தொகுப்பு. அவர்களின் உரையாடலால் உந்தப்பட்டு அதைப் பெற்றுக் கொண்டேன். பின் அரங்கிற்கு சென்று அதன் தமிழ் வடிவத்தையும் பெற்றுக் கொண்டேன். விலையில்லாப் பிரதியாக அளித்தார்கள்.
புக்பிரம்மா இந்த நிகழ்வை நேர்த்தியாக ஒருங்கணைத்தது. குறிப்பாக பல கல்லூரிகளின் மாணவ மாணவிகள் தன்னார்வலராக வந்திருந்தனர். அவர்கள் வெவ்வேறு துறையில் படிக்கிறார்கள். இலக்கிய ஆர்வத்தில் வந்திருக்கிறார்கள். கன்னடத்தை தாய்மொழியாக கொண்ட அவர்கள் பிற மொழி அமர்வுகளின் விவரத்தை கன்னட லிபியில் எழுதி அந்தந்த மொழியில் வாசித்தனர். சுக்குமி ளகுதி ப்பலி என கேட்க ஜாலியாக இருந்தது. பிறகு பார்வையாளர்கள் சிரித்தவுடன் வெட்கப்பட்டு சுதாரித்து சரியாக சொன்னார்கள். Enjoyed thoroughly!!!
பிற மாநில விழாக்களுக்குச் சென்றிருந்த எழுத்தாளர்கள் இந்த அமைப்பில் இருக்கும் ஜனநாயகத் தன்மையை வெகுவாகப் பாராட்டினர். எனக்கும் இதுதான் தோன்றியது. அவர்களுக்கு அந்நிய மொழி எழுத்தாளரான, பாவண்ணன் அவர்களுக்கு , புக்பிரம்மா அளித்த சுதந்திரமும் மற்றும் முதல் விருதை தன் மொழி எழுத்தாளருக்கு அளிக்காமல் தமிழ் எழுத்தாளருக்கு அளித்ததும் குறிப்பிடத்தக்கவையாகத் தோன்றின. அழைக்கப்பட்ட விருந்தினருக்கு சன்மானம் உண்டா என்று நண்பர் கேட்டார். அப்படி ஏதும் இல்லை. ஆனால் அங்கு நிகழ்ந்த சந்திப்புகளும், கலை நிகழ்ச்சிகளும், நிகழ்த்துக் கலைகளும் ஈடு இணைற்றவை.
முதல் விழாவை சிறப்பாக நடத்தி முடித்திருக்கும் புக்பிரம்மா அமைப்பிற்கும் எழுத்தாளர் பாவண்ணன் அவர்களுக்கும் பாராட்டுக்கள். அடுத்தடுத்த விழாக்களில் பார்வையாளராக கலந்துகொள்ளும் எண்ணம் உள்ளது.