Sunday, March 6, 2022

மிளகு

மிளகு நாவல் வழி துவங்கியது  இவ்வருடத்தின் புத்தக கண்காட்சிப் புதுவரவுகளுக்கான வாசிப்பு. இரா. முருகன் அவர்களின்  சிறுகதைகளில்  அவர் காட்டும் கணிப்பொறி உலகம் மற்றும் பழைய காலக்  கதைகளில் தொடர்ந்து  வரும் ஐயனை என்கிற கதாபாத்திரம் பற்றிய சித்தரிப்புகள் நினைவில் நிற்பவை. ஆனால் அவரை தீவிரமாக வாசிக்க ஆரம்பித்தது அரசூர் வம்சம் நாவல் வழியாகத்தான்.  'அரசூர் வம்சம்' முதல் 'வாழ்ந்து போதீரே'  வரை தொடர்ச்சியான வாசிப்பு. இதில் துவக்கமான  அரசூர் வம்சம் நாவல் ரகளையானது. அதன் ஒவ்வொரு வரிகளையும் சொல்லிச் சொல்லிச் சிரித்தபடி நாங்கள் ஒரு முறை காரில் பயணித்துக் கொண்டிருந்தோம் ( ஷிமோகா ரவி அண்ணன், சுந்தரவடிவேலன், சுநில் கிருஷ்ணன் மற்றும் நான் ). விமான நிலையத்தில் ஒற்றுமையாக வந்த யாரோ  இருவரை பார்த்து பனியன் சகோதரர்கள் எனக் குறிப்பிட்டு சிரித்ததும் நினைவில் இருக்கிறது. இதனுடைய இரண்டாவது நாவலான விஸ்வரூபம் காமத்திலும், அச்சுதன் கேசவம் அலைச்சலிலும் வாழ்ந்து  போதீரே உணர்ச்சியிலும்  நிறைவும் கொண்ட நாவலாக எனது மனப்பதிவு. அவை ஒவ்வொன்றைப் பற்றியும் தனித்தனியாக எழுதவேண்டும். மிளகு நாவல் ஒரே சமயதத்தில் தனித்த நாவலாகவும்    அரசூர் வம்ச நாவல்களின் வரிசையின்  இறுதிநாவலாகவும்   திகழ்கிறது. ராணி சென்னபைரா தேவியின் கதையாகவும் அதன் தற்கால புரிதலாகவும் இரு விதங்களில் இது நிகழ்கிறது. 



ஐம்பது வருடங்களுக்கு மேலாக ஆட்சியில் இருக்கும் மிளகுராணியின் அரசாங்கம் வீழ்த்தப்படும் கதை. இது ஒரு சரித்திர புத்தகத்தின் ஒரு பத்தியில் சொல்லப்பட்டாலும் கூட என்ன நடந்திருக்கும் என்பது எளிதில் புரிந்து விடும். அந்த அளவிற்கு நாம் அறிந்த போர், தியாகம் மற்றும் துரோகம் கலந்த அரசக்கதைத்தான். ஆனால் 1200 பக்கங்களில் அதை வாசிக்கும்போது எங்கும் சுவாரசியம் குறைவதில்லை என்பதைக் குறிப்பிட்டே ஆக வேண்டும்.  அதற்கு நவீன இலக்கியத்தின் அத்தனை கூறுமுறைகளையும் தேவைக்கேற்ப  கையாண்டிருக்கிறார். குறியீடு், உருவகம் மாய எதார்த்தம் என அனைத்தும் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளாமல் தானாகவே வந்துபோகும் என்பதே அவருடைய நாவல்களின் தனித்துவம். அது இங்கும் உண்டு.  இதில் ஒரு  ரசிக்கத்தக்க உதாரணத்தை இங்கு தருகிறேன்.. மிளகுராணி-நேமிநாதன் பிரச்சனையில் ஆதரவாக வரும் தாமஸ் அகஸ்டின்ஹோவை உறங்க விடாமல் துன்புறுத்தும் பெருச்சாளி சமகாலத்தில் அங்கு  சுரண்டி உண்டு கொழுக்கும் அந்நிய வியாபார அரசியலுக்கான   குறியீடாக தோன்றினாலும்  இறுதியில் அவர் அலறி எழ  அனைவரும் பற்றி என்ன என வினவ,  ஒரு பணியாள்  'எலி அம்மணமா ஓடுதாம்' என்று அதை விளக்கும் ஒரு வரியில்  பிற்காலத்தில் இருந்து  அதைக் கண்டு நகைக்கும் பகடியாக ஆகிவிடுகிறது. இது தவிர பாரதியாரின் கும்மிப்பாட்டு, காந்தியின் உப்பு சத்தியாகிரகம் எல்லாம் பதினாறாம் நூற்றாண்டில் வருகிறது.  இந்த விளையாட்டின்  உச்சகட்டமாக மிளகு ராணியைப் பார்த்து 'அம்மா.. நீங்கள்தான் மக்களின் முதல்வர்' என்கிறது ஒரு கதாபாத்திரம். 


இதில் மிளகுராணியாக வரும் ராணி சென்னபைரா தேவியின் ஆளுமையை வடிவமைத்த விதம் அவளை முதன்மைப் பாத்திரமாக நிறுத்துகிறது. பிற்பகுதியில் சொற்பமே விளக்கப்படும் அவளது பால்யமும், ஆசிரியர் மீதான அவளது ஈர்ப்பும் சேர்ந்தே அந்த பாத்திரத்தை முழுமையாக்குகின்றன. அவளுக்கு அப்படியே எதிர் பாத்தி்மாக வரும் ரோஹிணியின் பாத்தி்ரமும் அத்தகைய ஆளுமை கொண்டது ஆனால் எதிர்மறையான குணங்கள் கொண்டது. இறுதியில் பிஷராடி சொல்வது போல இவை எல்லாம் ஒருவர் மற்றவரை பிரதி்செய்வதுதான் இது. யார் யாராகவும் எத்தருணத்திலும் மாறியும் விடலாம் ஆச்சரியப்பட ஏதும் இல்லை என ஒரு மெய்யியலாக கருதவும் வைக்கிறது.


நாட்டில் குழப்பத்தை உண்டாக்க பிரிவினைவாதிகளால்  வழிபாட்டுத்தலங்களில் சேதம் உண்டாக்கப் படுகிறது. இரு பெரும் மதங்களான சமணமும் சைவமும் மோதுகின்றன. இடையே குளத்திலிருந்து பிரத்யட்சமாகும் விநாயகர்  திடீர் பிரபலமாகிறார். இவற்றை எல்லாம் வாசிக்கும் போது,  சமயங்களில் எப்பொழுதும் வரலாறு ஒரே போலத்தான் இருக்கிறதோ!! நாம்தான் அது புரியாமல் ஏதோ ஒரு தரப்புக்காக தீவிர நம்பிக்கையுடன் வாதாடிக்கொண்டு இருக்கிறோமோ என்று கூட தோன்றிவிடுகிறது.



 இதுவரையிலான அரசூர் தொடர் நாவல்களில் அதிகம் கவனிக்கப்படாமல் போன பரமன்  ( அச்சுதம் கேசவம் நாவலின் பாதியில் விமான பயணத்தில்  காணாமல் போகிறவர் ) இங்கு அவ்வாறு கால சுழற்சியில் முன்னும் பின்னும் செல்கிறார்.மிளகு ராணியின் கதையும், பெரிய சங்கரன் - பகவதிக்குட்டி   குடும்பத்தின் ஐந்தாம் தலைமுறைக் கதையும் இவரால் ஒரு கோட்டில்  இணைகிறது. அந்தக் காலத்திற்கும் இந்தக் காலத்திற்கும் பொதுவான அம்சங்களோடு இவை இணைகின்றன. இரு காலத்திலும் ஒருவர் மற்றவரை பிரதி செய்கிறார்கள். சிலர் அதே குணத்துடன் அவ்வாறே; சிலர்  குணம் மாறுபட்டு;

 

நேமிநாதனுக்கும் ரோஹிணிக்கும் பிறந்த மஞ்சுவிற்கு பராமன்தான் தந்தையாக இருக்கிறான்.  சின்ன சங்கரனுக்கு கொச்சு தெரசாவுக்கும் பிறந்த மருதுவிற்கு முசாஃபர்த்தான் தந்தையாக இருக்கிறான். அங்கும் இங்கும் மஞ்சுநாத்தும்  மருதுவும் தன் ரத்தஉறவான தந்தையைவிட இந்தப் 'பெயரளவு' தந்தையுடன்தான் பெரிதும் பாசமாக இருக்கிறார்கள். முந்தைய நாவல்களில் வரும் 'நீலகண்டன்' என்கிற காமத்தால் அழிந்த ஒரு பாத்திரம் ஆவியாக  மகனே! மகனே! என அலைவது போல இங்கு சிறுவன் மஞ்சு அப்பா! அப்பா! என்று அலைகிறான். ஏதும்  பற்று இல்லாதவனாக வரும் பரமன்  16ம் நூற்றாண்டுக்குள் சென்றுவிட்டு அங்கிருந்து தப்பி  மீண்டும் 20ம் நூற்றாண்டுக்குள் வர ஏங்கியபடி இருப்பவன். ஆனால்  அங்கிருந்த   தனது மைந்தன் மீதான அன்பில் அந்த காலச்சுழற்சிக்குள் தானாக விரும்பிச் சென்று சிக்கிக் கொள்கிறான். 


கிட்டத்தட்ட அனைவருக்கும் இருக்கக் கூடிய ஒரு fantacy  கற்பனை என்பது தற்போதைய அறிவுடனும் புரிதலுடனும் நாம் அப்படியே பால்யத்திற்கோ அல்லது இளமைக்கோ திரும்பி வாழ்க்கையை மாற்றி அமைத்துவிட முடியுமா  என்பது. புளியமரத்தின் கதை நாவலில் பார்க்கில்  அமர்ந்து இருக்கும் வயதானவர்கள் இவ்வாறு யோசித்துக் கொண்டிருப்பதாக எழுதியிருப்பார். இந்த தளத்தில் திரைப்படங்களும் வந்துள்ளன.  பற்றற்ற தன்மை என்பது மதங்களின் கோட்பாடுகளில் ஒன்று.  ஆனால் வயது  முதிர்ச்சி ஆக ஆக பற்று கூடுகிறதா அல்லது குறைகிறதா என்பது சுயபரிசோதனைக்குரிய ஒன்று.  பால்யம் என்றில்லை, வேறு நூற்றாண்டிற்குள் போனால் கூட பற்றில்தான் சிக்குவோம் என்று பரமன் காட்டிவிடுகிறார். அதை ஒரு வேடிக்கை கதையாக இரா.முருகன் சொல்லிச் செல்கிறார்.



இத்தனை தளங்களில் வைத்து யோசிக்க வேண்டாம் என்றாலும் மிக நேரடியாக மிளகு வர்த்தகம் எவ்வாறு எழுந்து வந்து வர்த்தகர்களின் கையில் சிக்கியது என்கிற ஒரு நேரடி கதையாகவும் இதை வாசித்து விடலாம்தான். இதற்குள் வரும்  நாயக்கர் அரசாங்கம், அண்டை சமஸ்தானங்கள் அரசியல் முதல் பிற்காலத்தில்  பிரிட்டிஷ் கைக்கு போனது வரையிலான சித்திரத்தை பெற்று விடலாம். இன்று உணவக மேசைகளில் எளிதில் கிடைக்கும் சால்ட் அண்ட் பெப்பரில் சாலட்டின் கதை இங்கு பரவலாக அறியப்பட்டு விட்டது.  அடுத்ததாக பெப்பரின் கதையை சுவாரசியமாக சொல்ல வந்துவிட்டது  மிளகு நாவல். 

No comments:

Post a Comment