Thursday, July 18, 2019

அத்திகிரி அருளாளர்க்கு அடைக்கலம் நான் புகுந்தேனே

"நீலக்கடலின் ஓரத்தில் நீங்கா இன்பக் காவியமாம்"
என்ற அன்னை வேளாங்கண்ணி படப்பாடலுக்கு எங்கள் ஊரின் பள்ளி மாணவர்கள் ஒருமுறையாவது நடனம் ஆடியிருப்பார்கள். அல்லது ஒருமுறையாவது அதை பாடியிருப்பார்கள். எங்கள் பள்ளியிலும் அதே பாடல். எட்டாம் வகுப்பு படிக்கையில் பள்ளி விழா. அந்தப்பாடலுக்கு ஆடிய நண்பன் தன் தந்தையுடன் மகாமகம் திருவிழாற்குச் சென்றிருந்தான்.  அங்கு ஏற்பட்ட திடீர் நெரிசலில் அவன் அப்பா கை நழுவி அவன் தடுமாற அவனை பிடிக்க அவர் குனிய அவர்களைத் தள்ளி அவர்கள் மீது நடந்தபடி இருவரையும் மிதித்தே கொன்றது அந்தக்கூட்டம்..

அத்திவரதனை தரிசிக்க நாங்கள் குடும்பத்துடன் சென்றபோது என் தோளில் அஸ்வத் அமர்ந்திருந்தான். கருட வாகனமா என்றார் எங்களைப் பார்த்த பக்தர் ஒருவர். அனுமந்த வாகனம் என்றும் அம்மாவோ மனைவியோ நினைத்திருக்க  வாய்ப்பில்லாமல் இல்லை. அத்விகா அம்மா கையை பிடித்திருக்க, என் அம்மாவும் அப்பாவும் முன்னே சென்றுகொண்டிருந்தனர்.   கிரகணம் முடிந்து கடந்த இருநாட்களாக  கூட்டம் இல்லை என்பதால் வியாழக்கிழமையான  இன்று விடுமுறை போட்டு அதிகாலையில் கிளம்பி தரிசிக்க வந்திருந்தோம்.


அந்த வரிசை வளைந்து நெளிந்து சென்றது. அதில் அந்தப்பக்கமாக வருபவர்கள் இடையில்  திடீரென இப்புறமாக  உள்ளே தாவிக்குதிக்க,கடல் அலைபோல கூட்டம் அப்படியே ஆடி அசைந்தது. அப்பொழுது என் தோளில் அமர்ந்திருந்தவனை இடுப்பில் அமர்த்திக்கொண்டு சமாளித்துநிற்க பக்க வரிசையில் வந்தவர்கள் கீழே விழுப்போய் சமாளித்தனர். மகள் ஒருபுறம் அலற அவளைப்பிடித்தபடி சமளித்து மனைவி நின்றாள். அனைவருமே சாய்ந்து நின்றிருந்தோம். அந்தப்பக்கம் ஒரு பள்ளம் இருக்கிறது. கூட்டம் நிரம்பி  அதுவரை சென்றிருக்கிறது.  அந்தச் சமயத்தில்தான் எனக்கு முன்புசொன்ன மகாமகம் நண்பன் முகம் ப்ளாஷ் அடித்தது. நாங்கள் அப்பொழுது ஆஞ்சநேயர் சந்நதி அருகில் வந்து விட்டிருந்தோம். அதுவரை திரும்பிப் போகலாம் என்றும் கிட்டத்தட்ட வந்துட்டோம் பாத்துட்டு போலாம் என்றும் இரு எண்ணங்கள் இருந்தன.

ஆனால் மகாமகம் நினைவு வந்தக்கணம் முதல் முகம் வியர்த்து வடியத்துவங்கியது.  என் நிலை கண்டு அம்மாவும் மனைவியும் பதற, நான் அவர்களிடம் திரும்ப போகலாமா என்று கூறினேன்.. அதற்குள்கூட்டம் மெல்ல நகர திரும்பிப் போவது இயலும் ஒன்று அல்ல. பின்னாலும் பெருங் கூட்டம் இருக்கறது. ஒருவாராக ஓர வரிசையில் வந்து அங்கு பக்கவாட்டில் இருந்த வேதாந்தா தெருவில் நுழைந்தோம். அங்கு துவக்கத்தில் இருந்த ஒரு வீட்டில் டீ கொடுத்துக்கொண்டிருந்தார்கள். ஆர்த்தி டீ வாங்கி வந்து அளித்தாள். அதைத்தாண்டி வரிசையில் செல்பவர்கள் யாரும் வரவில்லை. நாங்கள் தெருவின் உள்ளே செல்ல, ஐந்தாறு வீடுகள் தாண்டி பூட்டியிருந்த இருந்த ஒரு பழங்கால திண்ணை அமைப்பு வீடு ஒரு ராமானுஜர் பெயர் தாங்கிய ஒரு பெயர்ப்பலகையுடன் இருந்தது. காலியான  திண்ணையைக் கண்டு ஆசுவாசமடைந்த நான் அதில் சற்று சாய்ந்து படுக்க குழந்தைகள் திண்ணையில் ஏறி அமர்ந்தனர். அம்மா எதிரில் இருந்த ஒரு ஜவுளிக்கடையின் வாசலில் நின்றிருந்த ஒரு மடிசார் பெண்மணியிடம் பாத்ரூம் உபயோகிக்கலாம என்று கேட்டாள். வீட்டு கொல்லைக்கு போகணும் ஆனால் தண்ணியும் இல்லை என்றார். சரியென திரும்ப வந்து அமர கையில் கொண்டு வந்திருந்த இட்லியை அப்பாவிற்கு அளித்து அவரை சாப்பிடச் சொல்ல நாங்கள் அனைவரும் ஓய்வாக திண்ணையில் அமர்ந்தோம். வியர்த்து வடிந்த அஸ்வத்தின்  சட்டையைக் கழட்டிப் பிழிந்தால் ஒரு டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றியது. நானும் சட்டை பித்தான்களைக் கழட்டி அங்கு கீழே கிடந்த ஒரு ப்ளாஸ்டிக்  விசிறியை எடுத்து விசிறிக்கொண்டேன். அப்பொழுது எங்களை கவனித்துக்கொண்டிருந்த எதிர் வீட்டு மனிதர் அருகில் வந்து "இங்கேயே திண்ணைல  சாப்ட்டு அப்படியே போயிடாதீங்கோ. அலம்பி வுட்ரூங்கோ. ததியாராதணை நடக்கிற மண்டபம் இது என்றார். " சரிங்க என்று சொல்லி அவரை அனுப்பிவைத்தோம். வரிசையில் நிற்கத் துவங்கிய அந்த நாலரை மணி நேரத்தில் நான் குபீரென சிரித்தது அப்போதுதான்.

அருகில் இருந்த கட்டியெழுப்பப்பட்டுக் கொண்டிருந்த மற்றொரு வீட்டில் இருந்தவர்களிடம் கேட்டு பாத்ரூம் போய் வந்தனர். ஒன்றரை மணி நேர ஓய்விற்குப் பிறகு மீண்டும் கிளம்பினோம். அப்பொழுது வரிசையின் நிலைமை இன்னும் மோசமாகியிருந்தது. ஓய்வெடுக்காதவர்கள் ஆங்காங்கே ஓரமாக மயங்கி விழுந்திருந்தனர். பெரும்பாலும் வயோதிகர்கள். குழந்தையை மடியில் இட்ட பெண்மனிகள். இருநூறு அடி நகர்வதற்குள் கூட்டத்தை பிளந்தபடி ஒரு வரிசை பக்கவாட்டில் சென்றது. அவர்கள் அனைவரும் வெளியே செல்ல காத்திருந்தவர்கள் போலும். ஒருவாறு ஒருவரோடு ஒருவர் இணைந்து வெளியேறினர். அதனால் நானும் குழந்தையும் தனியாகவும் மற்றவர்கள் பின்னாலும் என பிரிந்து விட்டோம். நான் அஸ்வத்தை தோளில் ஏற்றிக் கொண்டு அருகில் இருந்த குடிநீர்வாரிய நீர்த்தேக்க அலுவலகத்தின்  மதிலை ஏறிக்குதித்து உள்ளே சென்று அவனை ஒரு மணற்திட்டில் அமரவைத்து வரிசையை நோக்க வந்தேன். அதற்குள் அப்பாவும் பின்னே வர அவரும் ஏறி உள்ளே வந்தார். அத்விகா அந்த நெரிசலில் மாட்டிக்கொண்டதாகவும் மூச்சுவிட முடியாமல் அழுததால் அம்மாவும் மனைவியும் ஓரத்தில் கூட்டத்தோடு நிற்பதாகவும் சொன்னார்.

அந்த இடைப்பட்ட நேரத்தில் அங்கிருந்த ஒரு நபர் உதவிசெய்ய அவர்கள் வரிசையை விட்டு வெளியேறி எதிரில் இருந்த ஒரு மருந்துவமனையின்  வாசற்படியில் அமர்ந்திருந்தனர். இப்பொழுது நினைத்தாலும் அது ஒரு தெய்வச் செயல்தான். உதவிய அந்த நபர் பெயர் நரசிம்மனாக இருந்திருக்கலாம். சொந்த ஊர் சோளிங்கராகவும்...

போனில் அழைத்து பேசியபின் அனைவரும் ஆங்காங்கு  செட்டில் ஆகிவிட்டோம்  என்று அறிந்து கொண்டோம். கால்மணி நேர ஓய்வு..  அத்விகா அங்கிருக்கும் ஒரு வாட்டர் டாங்க் மேலை ஏறி அமர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள்.  இங்கே அஸ்வத் கீழே கிடந்த கற்களைப் பொறுக்கி வீடு கட்டியிருந்தான். அங்கிருந்து கிளப்பும் போது 'அப்பா இன்னும் வாசலே கட்டலப்பா'ன்னு முறையீடு வேறு. இவர்களுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்று தோன்றியது. முத்தமிழ் மன்றத்தில் ஜெ. பேசிய கட்டண உரையில் ஒரு குழந்தை உங்கள் கைக்கு வருகிறது. அதன் எதிர்காலத்தை நீங்கள் தீர்மானிக்கப் போகிறீர்கள் என்று பேசியது நினைவிற்கு வந்தது. ஆம்.. அதுதான் எவ்வளவு பெரிய பொறுப்பு என இப்போது உரைக்கிறது.




மீண்டும் நாங்கள் கிளம்பி அவர்களை அழைத்துக்கொண்டு அஸ்திகிரிசாலை வழியாக வெளியேறினோம். அங்கு மக்கள், தங்கள் வீட்டு வாசலில்  தண்ணீர் கேன் குடங்கள் வைத்திருந்தனர். பெரும்பாலான மடங்கள் திறந்திருந்து பக்தர்களுக்கு உதவியபடி இருந்தன.

உள்ளே நுழைகையில்  ஆனைக்கட்டி சாலையில் சாலையில் செருப்புகளை விட்டுவிட ஏற்பாடு செய்திருந்தனர். வெளியேறும் அஸ்திகிரி உள்ளிட்ட சாலைகள் விஐபிக்கள் வகன நிறுத்தமாகவும் இருப்பதால் புதிதாக தார் போட்டிருக்கின்றனர். அதில் செருப்பில்லாமல் மக்கள் நடந்து வந்து தங்கள் செருப்புக்களை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது ஏற்பாடு போலும். தார் ஒழுகி ஒட்டியும் கொண்டது.  ஆடிமாதம் பிறந்து விட்டது. தீமிதியும் நல்லது தானே...

அங்கும் ஒரு வீட்டு திண்ணையில் அமர்ந்து கொண்டோம்.  அந்த வீட்டுக்கார் வெளியே செல்லும்போது அவருடன்  பைக்கில் சென்று மற்றவர்களின் செருப்புக்களை எடுத்து வந்து அளித்தேன். அனைவரும் எழுந்து நடக்கத் துவங்கினோம். வந்திருந்த பக்தர்களில் சிலர் குழந்தைகளை தூக்கிக் கொண்டும்.. சிலர் தாவிக் குதித்தும் சிலர்  ஆளுக்கு ஒரு கால் செருப்பை அணிந்து நொண்டியபடியும் கடந்து வந்துகொண்டிருந்தனர்.

திரும்பி வரலாம் என்றால் கார்களும் பேருந்துகளும் நிரம்பியருக்கின்றன என்றார் ஒருவர். பிறகு அருகிலிருந்த ஸ்ரீமத் ஆண்டவன்  ஆசிரமத்தை அடைந்து அங்கிருந்து,சங்கரமடத்தைச் சேர்ந்த  நண்பர் சிவாவை அழைத்தேன். அவர் உதவியில் ஒரு கார் ஏற்பாடு செய்து வந்து சேர்ந்தோம்.
அதற்குள் கூட்ட நெரிசலில் நான்குபேர் இறந்ததாக செய்தி வந்திருந்தது...

பத்தி முதலாமவற்றுள் பதி எனக்கு கூடாமல்
எத்திசையும் உழன்று ஓடி இளைத்து விழும் காகம் போல் 
முத்தி தரும் நகரெழில் முக்கியமாம் கச்சி தன்னில் 
அத்திகிரி அருளாளர்க்கு அடைக்கலம் நான் புகுந்தேனே...!


என அவனுக்குள் அடைக்கலமான அந்த நால்வரும் வைகுண்ட பதவியடைந்து பிறவிப்பிணி தீர்ந்து நிறைவுறுவார்களாக!!!

இத்தருணத்தில் கோயில் நிர்வாகத்திடம் வைக்கும் வேண்டுகோள்கள் இவைதான்..

1) நாற்பது வருடத்திற்கு ஒருமுறை வெளியே வரும் அத்திவரதர்,நான்கு வருடங்களுக்கு ஒரு முறையோ அல்லது  மகாமகம் போல பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒருமுறையோ வர விரும்புவாரா என்று கேட்டுச் சொல்லலாம். நாற்பது வருடங்களில் ஒருமுறை என்பது வாழ்வில் ஒருமுறைதான். இதைத் தவறவிடவும் பக்தர்கள் விரும்புவதில்லை என்று எடுத்துச் சொல்லவும்

2) அப்படியே வந்தாலும் கோயிலுக்குள் வசந்த மண்டபத்தில்தான் சயனிக்க நிற்க வேண்டுமா என்றும் கேட்டுச் சொல்லவும். ஒரு மைதானமோ அல்லது திருக்குளத்தின் மத்தியிலோ இருந்து தரிசனம் அளிக்கும் பட்சத்தில் அதுவும் வசதியாக இருக்கும்.

மாவட்ட நிர்வாகத்திடமும், ஆங்காங்கே கும்பலாக நின்று, மைக் கூட இல்லாமல் கத்தியபடி, தடியை வைத்து தடுப்பு அரண்கள் மீது படீரென அடித்து வரிசையை கலவரப்படுத்தி ஒருவர் மீது ஒருவர் பற்றி நெருக்கச் செய்தும்  ’கும்பலா ஏன் வந்து படுத்துறீங்க.. உங்களை யார் குழந்தைகளை கூட்டிட்டு வரச்சொன்னா? ’ என்றும் பேசி அன்பு காட்டிய  காவல்துறையிடமும்  சொல்லிக்கொள்ள இருப்பது ஒன்றே ஒன்றுதான்

"அப்பரசண்டிகளா!!! பேஷ் பேஷ்!! ஜமாய்ச்சுட்டேள் போங்கோ!!!!"

No comments:

Post a Comment