Friday, January 31, 2020

நீரின்றி அமையாது

      2018 ராயப்பேட்டை புத்தக கண்காட்சியில் வாங்கிய மனைமாட்சி நாவலை  ஒரு ரயில் பயணத்தில் தான்  படித்து முடித்தேன். செம்பருத்தி மெர்க்குரிப்பூக்கள் வரிசையில் வைக்கவேண்டிய படைப்பு. திஜா பாலகுமாரன் வரிசையில் இந்த தலைமுறைக்கு இது எனத் தோன்றியது..

          மொத்தம் மூன்று வகைகள்.  ஒவ்வொன்றிலும் இழையாக ஓடும்  இரு கதைகள் என ஆறு கதைகள். அனைத்துமே கணவன் மனைவி என்ற ஒன்றில் பிண்ணப்பட்டிருக்கின்றன. ஆண்பெண் உறவுச் சிக்கல் என பொதுமைப்படுத்தலாகாது. கணவன் மனைவி என்கிற குறிப்பிட்ட  உறவினிடையே அலைபாயும் கதைகள்

      இவ்வுறவு என்பது ஏற்கனவே திரைப்படங்களில் இருவர் உள்ளம் முதல் ஓகே கண்மனி வரை பலகோணங்களில் அலசப்பட்ட கதைக்களம். வாசகனுக்கு அறிமுகமாகி பின் சலித்தும் போன ஒன்று.  ஆகவே, இந்நாவல்  தனக்குத் தெரிந்த ஒன்று என்று நம்பி உள்ளே செல்லும் வாசகனை ஏமாற்றி விளையாடுகிறது. இது சராசரி வாசகனை மனதில் வைத்து  அவருக்கு ஒரு திருப்தியையோ ஆசுவாசத்தையோ அளிக்கக்கூடிய ஒரு திருப்புமுனைத் தருணமோ ஒரு உச்சகட்ட காட்சியோ  வைத்து எழுதப்படவில்லை என்பதை நாவல் படித்து முடித்தவுடன்தான் உணரமுடிகிறது. அதில் ஆசிரியரின் பங்கும் உண்டு. நாவலின் வேகமான நடை முக்கியகாரணம் அது எதையும் யோசிக்கவிடுவதில்லை.

நீரின்றி அமையாது உலகு

சாந்தி — தேங்கி நிற்கும் ஆழமான மேட்டூர் அணை.  உடைப்பெடுத்தால்  யார் என்னவென பார்க்காமல்  எக்கணமும் சீறிப்பாய்ந்துவிடும் ஆங்காரம்…

ராஜம் –> சாந்தமான மகாமக புண்ணிய தீர்த்தம்..

மதுமதி –> அலைபாய்ந்து சீறிப்பிரிந்து  இறுதியில்  கடல் சேரும் பூம்புகார் காவிரியின் சீற்றம்

மங்கை– ஆர்ப்பரிக்காத தாமிரவருணி.அரவணைத்துக்கொள்ளும் பாபநாசம்..உலகை உணர்ந்தறிந்த ஞானம்

விநோதினி:- தட்டுத்தடுமாறும் அமராவதியின் சஞ்சலம்

கலைவாணி :-  ஊர் மக்கள் மீதான கருணையால் தானழுக்காகி  கலங்கிநிற்கும் பவானி.

இவர்களனைவருக்கும் பொருந்திவரும் விஷயம் ஒன்றுதான். அனைவருமே பாசங்கு அற்றவர்கள். தன்னளவில் நேர்மையானவர்கள். ஒளிவுமறைவு அற்றவர்கள்.




சராசரியான பல பெண்கள் நாவலில் வருகிறார்கள். அவர்களுடன் ஒப்பிட்டே இவர்களை அறியமுடியும்.  காயத்ரி ரம்யா ஆகியோர்களைவிட சாந்தி எவ்வகையில் மேன்மையானவள்? மங்களா அங்கையற்கண்ணியைவிட ராஜம் எங்கு முக்கியபாத்திரமாகிறாள் என்பதை எண்ணிப்பார்த்தால் எளிதில் விளங்கும் ஒன்று இது..

இணையான நிகழ்வுகள் இருந்தாலும்  ஜோதி மற்றும்  லதாவை விட வாணி கதையே சொல்லவேண்டிய ஒன்று என ஆசிரியர் முடிவெடுப்பது ஏன் என்பதில் இருக்கிறது இது. அதுபோலத்தான் விநோதினி கதையும்.. இந்த ஆறுகதைகளில் எளிய ஒன்றாகவும் எளிதில் ஊகிக்கக்கூடிய ஒன்றாகவும் இருப்பது இதுதான்..காரணம் அந்தளவிற்கு பெரும்பான்மையான நலவிரும்பிகளால் சூழப்பட்ட அவளது உலகம்..

இரண்டாம் கதையில் வரும் மதுமதியின் அம்மாவின் வாழ்க்கை நாவலுக்கான இன்னும் சிறப்பான தருணங்களைக் கொண்டில்லாமல் இல்லை.    இதனோடு இழைந்துவரும் மங்கையின் வாழ்வில் ஒருநாள் சந்திக்கும் அந்த விலைமாதுவும் அவள் மகளும் ( விலைச்சிறுமி?) கூட.. அதுதான் மங்கை ஞானமடையும் தருணமாக வருகிறது.. அனைவருக்கும் கேலிப்பொருளான மகாதேவனோடு அனுசரித்து அவளிருப்பது ஏன் என்பதற்கான விடை.


ஆண் பாத்திரங்களைப் பற்றியும் குறிப்பிடலாம்.. நாவலில் குரூரமோ கோபமோ கொண்ட ஆண்களே இல்லை. பெண்களை தங்களின் உடல் வலிமையால் எதிர்கொள்ளும் ஆண் என யாரும் இல்லை. மங்கையை கடத்திச்செல்லும் கடன்காரர்கள் உட்பட. நாவலில் முன்கோபி என பயங்காட்டப்படும் ரங்கநாதனுமே மங்கையின் தோளில் சாய்ந்து அழுகிறான்..இல்லறத்தில் கணவன் மனைவி மீது செலுத்தும் வன்முறை அல்லது புறக்கணிப்பு பற்றிய சித்தரிப்புகளும் இல்லை. சொல்லப்போனால் பாவம் ஆம்பளப்பையன இப்படி அடிக்கிறாளே..ஆணைக்கண்டால் பேயும் இரங்காதா..அப்பாவி மனுசன்.. எனும் அளவில் ஆகிவிடுகிறது நிலமை.   விஜயசாந்தி படங்களில் வரும் நாயகர்கள்போல பாவப்பட்ட ஜீவன்களாக வந்து போகின்றனர்.
முழுக்க முழுக்க பெண்களே ஆடும் விளையாட்டாகத்தான் இது இருக்கிறது

கதை மாந்தர்கள் அனைவரும் ஒருவித நடுத்தர வர்கத்தினர் அல்லது மேல் நடுத்தரவர்கத்தினர். எது நடந்தாலும் பரவாயில்லை என்று நேரடி உணர்ச்சியை வெளிப்படுத்துபவர்களோ அல்லது அனைத்தையும் சமாளிக்கலாம் எனும் தைரியமோ  அற்ற ஒரு நடுத்தரவர்க்க  குழப்பவாதிகள். அதுவுமே அவர்களின் தயக்கமாக இருக்கலாம்.

ஆனால் அந்த ஆண்கள் யாரும் பெண்களளவிற்கு உண்மையானவர்களாகவும்  இல்லை..அடிவாங்கும் தியாகுவின் மனதில் ரம்யா பற்றிய எண்ணம் உண்டா இல்லையா.. மகாதேவன் சாஸ்திரிகளிடம் இறுதியாக கேட்பது… கண்ணன் தனது லீலைகளை வாணியிடம் சொல்லாமல் மறைப்பது என. ஏன் அந்த சாஸ்திரியோ வியாசரோ என யாரையுமே சொல்லமுடியவில்லை. நாவல் முடிந்ததும் தன்னியல்புடன்  வெளிப்படும் மகாதேவன் மட்டுமே ஆண்களில் நினைவில் நிற்கிறான்.

நாவலின் வர்ணனைகளையும் நடையையும் தனியாக குறிப்பிடவேண்டும். தியாகுவும் மகாதேவனும் ஆனந்தகுமாரும் அறிமுகமாகும் தருணங்களை குறிப்பிட்டுச் சொல்லலாம்.



ஒரு வாசகனாக, நான் உணர்ந்த ஒரு மனத்தடை என்னவெனில்,
ஏற்கனவே சொன்னது போல,  பலவகையில்  நமக்கு அறிமுகமான தளம் என்பதால்,  மாலைமதி நாவல்களோ,  விசுவோ  கேபாலசந்தரோ அந்த 7 நாட்களோ  அல்லது மெளனராகமோ இடைவந்து குழப்பக்கூடும்..அல்லது இப்படி நிகழக்கூடும் எனும் ஊகிப்பை அளிக்கக்கூடும்..அதைத்தாண்டித்தான் இதை அணுகவேண்டியிருக்கிறது.  இப்பொழுதும் அது போன்ற ஒன்றை  மீண்டும் படிக்கவியலாது. ஆனால் மனைமாட்சியை ஒரே மூச்சில் வாசிக்க முடிகிறதன் காரணமும் அதுதான்.

அறுநூறு பக்க நாவலை ஒருநாளில் வாசிக்க வைக்கும் நடையும்,  கதாபாத்திரங்களுக்கான இயல்புகளுமே,  முக்கிய பாத்திரங்கள் -உப பாத்திரங்கள், நிலம் மற்றும் சூழல் பற்றிய வர்ணனைகளும் குறிப்புகளுமே  இந்நாவலை  அவற்றிலிருந்து உயர்த்துகின்றன. வேறுபடுத்துகின்றன.

பேசாப்பொருளை பேசத்துணிவது ஒரு தைரியமான முயற்சி. ஆனால் அதற்கும் மேல் தைரியம் மிக்க ஒன்று ஏற்கனவே பலர் பேசிய ஒன்றிலிருக்கும் விடுபட்ட ஒன்றை  பேசுவது. இன்னும் நுணுக்கமாக ஆராய்வது. அந்தவகையில் மனைமாட்சி ஒரு முக்கியமான நாவலாக எழுந்து நிற்கிறது

ஜெ. தளத்தில் வெளியான இணைப்பு:- https://www.jeyamohan.in/119854


Wednesday, January 29, 2020

சிலுவைப்பாடு

சிலுவைராஜ் சரித்திரம் - ராஜ் கெளதமன்

        சிலுவையும் மற்ற குழந்தைகளைப்போல பிறந்தவுடன் குவா குவா என்றுதான் அழுதான் என்ற அறிமுகத்துடன் நாவல் துவங்குகிறது. இது ஆரம்பத்தில் சிரிப்பை வரவழைத்தாலும்  நாவலை முடித்தவுடன் மீண்டும் இந்த வரியைப் படிக்கவேண்டும். அது அளிக்கும் உணர்வுகளே வேறு. ஆர்சி கிறிஸ்துவனாக பறையர் குலத்தில் பிறந்தவனின் சரித்திரம் பற்றிய நாவல்,   அவனும் எல்லோரையும் போலத்தான் பிறந்தான்  எனத்துவங்குவதில் உள்ள கசப்பு நகைச்சுவை போல நாவல் முழுவதுமே நிறைய உண்டு. இந்த சரித்திரங்கள் முறையே, அவனது தொடக்கப்பள்ளி சரித்திரம், மேல்நிலைப்பள்ளி சரித்திரம், கல்லூரி சரித்திரம் பின் வேலை தேடும் சரித்திரம் நான்கு பாகங்களாக உள்ளன.  கிட்டத்தட்ட அனைவருக்குமே இந்த காலகட்டத்தில் தன் வாழ்வில் நடந்ததாக சொல்லத்தக்க தருணங்கள் இப்படி அறுநூறு பக்கங்களுக்கு இருக்க வாய்ப்பு உண்டுதான். ஆனால் சிலுவைராஜின் சரித்திரம் நாவலில் ராஜ்கெளதமனின் புனைவுக்கலை அடைந்த பெரிய வெற்றி என்பது, சிலுவை வளர வளர கொஞ்சம் கொஞ்சமாக இந்த சமூகத்தை அவன் அறிவதைப் போல,  வாசகனும் அந்த கணத்தில்தான் புதிதாக ஒன்றை அறியும் வண்ணம் சொல்லிச்  செல்லும் அவரது நடைதான். தன் மீதான புறக்கணிப்பை நுட்பமாகவும், நேரடியாகவும் உணர்ந்துகொண்டேயிருக்கிறான் சிலுவை. அவற்றில் பல, பொது வாசகர்கள் உள்ளே சென்று அறியாத ஒன்று.  ஆனால் சிலுவையின் விளையாட்டுத்தனமும் அவன் கூடவே இருக்கிறது. அது அவனை ஐந்நூத்தித் தொண்ணூறு பக்கங்கள் வரை உயிப்புடன் வைத்திருக்கிறது. கடைசி பக்கங்களில் அதையும் காலி செய்துவிடுகிறது. பிறகுதான் எழுத்தாளர் இந்நாவலை எழுதியிருக்கிறார் என்பதாலும் முன்பே ஒரு வரியில் ”பிற்காலத்தில் காலேஜ் வேல கிடைச்சப்புறம்” என சொல்லியிருப்பதாலும் விரைவில் விளையாட்டுத்தனத்திற்கு  சிலுவை மீண்டுவிட்டான் என எண்ணி நம்பிக்கை கொள்கிறேன்.

  சிலுவையின்  தொடக்கப்பள்ளிக்கூட  சரித்திரகால விளையாட்டுத்தனத்தில் இந்த சாதீய தாழ்வு அவனுக்குப்புரியவில்லை. கட்டை வாத்தியார் தன் உறவினரானாலும் சிலுவை அவர்களின் உட்பிரிவுப்படி அவரைவிட தாழ்ந்தவன். ஆனால் அவனது சூட்டிகையும் படிப்பும் அவருக்கு ஒருவித காழ்ப்பை ஏற்படுத்துகிறது. அவரது பிள்ளைகளும் அங்கு படித்தார்கள் என்பதும் ஒரு காரணமாக நாவலாசிரியரால் சொல்லப்படுகிறது. ஆனால் சிலுவைக்கு இதெல்லாம் விளங்கவில்லை. யாராவது பாடச்சொன்னால் தொண்டை நரம்பு புடைக்க பாடும் அந்த சிறுவன், டிசிப்ளீன் என்றால் தோல் உறிவது என்பதை விரைவில் உணர்ந்துகொள்கிறான். இருபத்தொன்றுக்குமேல் போனால் விரல்கள் கணக்குபோட  பத்தலையே என்ற கவலையும் உண்டு. இங்கு அவனுக்கு அனைத்தும் விளையாட்டுக்கள் மட்டுமே. ஊமைநாயக்கரிடம் நாங்க சாம்பாக்கமாரு என ஜாலியாக கோரஸ் பாடும் அளவிற்கே ஓரளவு புரிகிறது அவன் ஜாதி பற்றி. அதைத்தவிர, அவன் விளையாடும் விளையாட்டுக்கள் அவன் கேட்கும் பேய் கதைகள் எல்லாமே தமிழகத்தின் அனைத்து சிறுவர்களுக்கும் பொதுவானதுதான். சிலுவையே மேல்நிலை பள்ளிக்குச் சென்றதும் அனைத்து ஊர்களிலும் இந்த பேய் கதை சொல்லப்படுவதை எண்ணி வெறுத்துப்போகிறான். அனால் பழம்திருடும் நண்பன் ஜான் மற்றும் நாடோடி. மொந்தன் மாமா போன்ற வளர்ந்த திருடர்களின் சாகசங்கள்  வாழ்க்கையை சுவாரசியமாக்குகின்றன.  சர்ச் சங்கீதம், நண்பர்கள், நாய்கள், உடும்பு வேட்டை, விளையாட்டு வகைகள் என வகைவகையாக தொடர்ச்சியாக எழுதப்பட்டிருக்கின்றன. அனைத்து பாகங்களிலும் தொடரும் விஷயங்கள் என்றால் அவை அவனது அப்பாவின் சித்திரமும், நடப்பு சினிமா மற்றும் அரசியல் சார்புகளும் கூடவே அவன் சாதீய ஏற்றத்தாழ்வுகளும் மட்டுமே.


   நடுநடுவே சில அங்கதமான வரிகள் நகைக்க வைக்கின்றன. ராணுவத்திலிருந்து இருமாத ஓய்வில் வரும் அப்பா அவனை தினம் அடித்து முடித்து ஊருக்கு கிளம்புகையில் அறிவுரை சொல்கிறார்.  அடிச்சாலும் வாங்கிடலாம் என்ன இருந்தாலும் மறுநாள் போயிடுவாரு என ஆறுதலாக இருக்கிறான் சிலுவை. இன்னொரு இடம், ”நாடோடியை கண்டிக்க திருச்சியில் இருக்கும் அவன் பெரியப்பாவால் மட்டுமே முடியும். ஆனால், பஸ் பிடித்து வந்து  நாடோடியைக் கண்டிப்பதைவிட ஆயிரஞ்சோலிகள் அவருக்கிருந்தன” என்றவரி. இதுபோன்ற விவரணைகள் சிலுவை தெருவை சார்ந்த மக்களின்  வாழ்க்கையை புன்னகையோடே படிக்க வைக்கின்றன



ஆனால் சிலுவையின் இந்த பால சரித்திரத்தில் அவன் உள்ளிருக்கும் ஒரு வஞ்சம் அல்லது ஒருவித குரூரம் பற்றி அவன் அம்மா அவனிடம் சொல்கிறார். எலி அணில் கட்டெறும்பு போன்றவற்றை குத்திக்கொல்லும் குரூரம் அனைத்து குழந்தைகளிடமும் உண்டுதான் என்றாலும், இதில்  இந்த பகுதிகள் மிக முக்கியமானவைகளாக இருக்கின்றன. அது சிலுவையின் உட்கரந்த குணமாக இருப்பதுபோல நுட்பமாக சித்தரிக்கப்படுகிறது. அந்த வஞ்சம் அவன் அப்பாவிடம் அவனுக்கு உண்டு. ( அது சிறு வயது சிலுவைக்கு ஏற்பட்ட ஒரு ஈடிபஸ் காம்ப்ளேக்ஸ் போன்றது என்கிறமாதிரியான குறு விவரம் நாவலில் இருக்கிறது.)  அதை நிரூபிப்பது போலவே எல்லா கதாபாத்திரங்களின் பெயர்களும் வரும் இந்த நாவலில் ஒரு இடத்திலும் சிலுவையின் தந்தை பெயர் இல்லை. கல்லூரியில் எஸ்.சிலுவைராஜ் டி.சிலுவைராஜ் குழப்பத்தில் முதல் எழுத்துமட்டும் வருகிறது.  சிலுவையின் மூத்த சகோதரியின் பெயர் மேரி என்பது அவன் அம்மாவுக்காக , தகப்பனுக்கு எழுதும் ஒரு கடிதத்தின்  மூலம்தான் வாசகன் அறிகிறான். நாவல்முழுவதும் அவர்கள் வெறுமனே சிலுவையின் தகப்பனாராகவும், பெரிய தங்கச்சியாகவும் தான் வருகிறார்கள். அதேநேரம் சினுமை ஜெசிந்தா என அம்மா மற்றும் சிறிய தங்கையின் பெயர்கள் சரளமாக வருகின்றன. அது முழு கவனத்துடன் செய்யப்பட்டதாக இருக்கலாம் அல்லது இந்த கடிதம் எழுதும் வாசகன் அதிகம் படித்த துப்பறியும் நாவல்களின் பாதிப்பாகவும் இருக்கலாம்.

       இந்தப்பகுதியிலிருந்து அவன் உயர்நிலைப்பள்ளிக்கு செல்கையில் ( பியூஸி) வருவது அடுத்த சரித்திரம். அவனுக்கு சமூகத்தில் தன் இடம் என்ன என்பது மெல்ல மெல்ல புரியும் இடம். தன்னுடல் சார்ந்த புரிதல்கள், ஹிந்தி எதிர்ப்பு,  திமுக மீதான நம்பிக்கை என இந்தப்பகுதி விரிவடைகிறது. இந்தப்பகுதிகள்தான் பைபிள் மற்றும் கிறிஸ்துவத்தின் சில அடிப்படைகள் பற்றி பேசும் இடம். அவைகள் பற்றி அதிகம் அறியாத  வாசகருக்கு ஒரு துவக்கத்தை இந்தப்பகுதி அளிக்கலாம். அதில் அவன் எடுக்கும் சார்புநிலைக்கான காரணம் ( சிலுவைக்கு பிதாவாகிய சர்வேஸ்வரனைப் பிடிக்காது. அவரின் கோபம் தண்டனை எல்லாம் தன் அப்பாவையே ஞாபகப்படுத்தியது ), பருவ ஈர்ப்புகள் என செல்லும் பகுதியில்தான் ஜாதி கிறிஸ்தவருக்கும் மற்ற கிறிஸ்துவருக்கும் இருக்கும் அரசியல்கள், குருமார்களின்  வேட்கைகள்  பற்றிய விவரணைகள் வருகின்றன. அவன் ஊரில் நடக்கும் கலவரமும் அதற்கு காரணமான ஜாதிக்காழ்ப்பும் அதற்கு துணைபோன திமுக ஆட்சியும் அவனை சோர்ந்துபோகவைக்கின்றன. தன் மாமா உறவுமுறை கொண்ட பிரதர் ஒருவர் திறமையிருந்தும் ஜாதியின் காரணமாக, சர்ச் மூலம் பிரான்ஸ் அனுப்பப்படாதது அவனை முற்றிலும் நாத்திகனாக ஆக்க முதலடியை எடுத்து வைக்கிறது. இவையனைத்திற்குமிடையே  பொன்னியின் செல்வன்  படிக்கிறான். நந்தினியின் சபதம் என்ற நாடகத்தையும் அரங்கேறுகிறான்.

       மூன்றாவதான கல்லூரி சரித்திரம் சிலுவை நவீன இலக்கியத்திற்குள் அறிமுகமாகும் இடம். ஷேக்ஸ்பியர் தஸ்தயேவ்ஸ்கி ஆகியோரையும் படிக்கிறான். கல்லூரியில் சேர்வதற்கு முன்பான கதையில் அவன் தமிழில் ஃபஸ்ட் க்ளாஸ் என நினைத்த ராஜாமணி ஃபாதர் அவனை தமிழ் ட்யூட்டராக சேர்த்துவிடுகிறார்.  ஆனால் அவன் விலங்கியலில்தான் ஃபஸ்ட், தமிழில் இரண்டாவதுதான் என அறிந்ததும் தான் ஒரு ஹரிஜனுக்கு வாய்ப்பு அளித்ததாக அனைவர் முன்பும் சொல்வது அவனை நுட்பமாக அவமதிக்கிறது. அந்த ஃபாதருக்கு எதிரான மற்றொரு ஃபாதர்  (பிரின்ஸிபால்) சிலுவையின்  ஒப்பந்தகாலம் முடிந்தும் அவனை நீக்கிவிடுவார் எனக்கருதுகையில் அவனை அவன் படித்த விலங்கியல் பிரிவிலேயே சேர்க்கிறார். அப்போது மகிழும் சிலுவைக்கு அது நாடார் மற்றும் பிள்ளைமார்களின் மோதலை தவிர்க்க செய்யப்பட்ட உத்தி என தெரியவருகையில் மீண்டும் கூசுகிறான். தன் மதிப்பெண்கள் எங்குமே மதிக்கப்படவில்லை என்பது அவனுக்கு அவமரியாதையாகவே இருக்கிறது. அதன் பின் எம் ஏ சேர்வது, எதிர்வீட்டு மாமி மேல் ஈர்ப்பு, சக மாணவியிடம் சொல்லமுடியாத காதல் என  தொடர்கிறது.



      எம்.ஏ முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றும் வேலை கிடைக்காத சிலுவை இறுதியில் எஸ்.ஸி சான்றிதழுக்காக இந்துவாக மாறும் வரையிலானது நான்காவது சரித்திரம். இதில்தான்  அவன் அதிகம் எதிர்கொள்ளும் வியாக்கியானங்களும்  சங்கடங்களும் விவரிக்கப்படுகின்றன. அனைத்து அவமானங்களையும் சந்திக்கும் அவன் இடியிலோ தற்கொலையிலோ இறப்பான் என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் இருக்கிறது. சிலுவைக்கும் கூடத்தான். இடதுசாரிகள் நக்சல்கள் காவல்விசாரணை என கிளைக்கதைகளும்  இந்தப் பகுதியில் இருக்கின்றன. காரைக்கால் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் “பறையன் “ என கத்தி சொல்லுமிடத்தில் வெளியேரும் ஒன்று,  அவனுக்குள் அதுவரையில் இருந்த அந்த குறும்புக்காரப்பையன் என்கிற பாவனை. அது சிலுவை தன்னிலையறிந்து தனிமையில்  நிற்கும் கனம். அதுவரை சிலுவை தான் அவமதிக்கப் படுவோம் என உணர்ந்தே அந்த விளையாட்டுத்தனத்தை  கைகொண்டிருந்திருக்க வேண்டும். அதுதான் சிலுவை பள்ளிக்காலத்திலிருந்தே தவிர்த்துவந்த இடமோ.


         காரைக்கால் சம்பவத்திற்குப் பின்  ஊரில், சும்மா வழித்துணைக்கு பேச்சு கொடுக்கும் நாயுடுவிடமே அதைத்தான் சொல்கிறான். ஒருவன்  தான் யாரென உணர்ந்து அடுத்து என்ன செய்வது என்றும் தெரியாமல் பித்து போல நிற்கும் இந்த பக்கங்கள்  அசலான சிலுவையின் மனப்பாங்காக வெளிப்பட்டுள்ளன. சிலுவை சக்கிலியர் வீட்டில் சாப்பிட மறுப்பது, இடதுசாரிகளின் பாவனைகள் என அனைத்திலும் உள்ள நேர்மை இதை எங்கும் புருவம் உயர்த்தாமல் வாசிக்க வைக்கிறது. இதெல்லாம் நடக்கவில்லையெனில் சிலுவை மற்றொரு தமிழ் வாத்தியாராக பட்டிமன்ற பேச்சாளராக கழகத்தின் பிரசார பீரங்கியாக ஆகியிருக்கவும் கூடும் எனவும் தோன்றாமலில்லை. திமுக மீதான ஈர்ப்பு மேடைப்பேச்சு பின் அவர்கள் மீதான அவநம்பிக்கை. எம்ஜிஆர் மீதான ஆர்வம்  என நாவல் நகரும் இடமெல்லாம் அன்றைய சமூகம் மற்றும் அரசியல் குறித்த சித்திரங்களும் தொடர்ந்தே வருகின்றன.

     தன்வரலாற்றுப்புனைவு வகை நாவல்களில் முதலில் வெளிப்படுவது ஆசிரியரின் தனித்துவம்தான், ரத்த உறவு, கன்னி நாவல்களில் ஒரு கவிஞர் நாவல் எழுதுகிறார் என்பது படிக்கையிலேயே வாசகனுக்குத் தெரிவது போல இது.  ராஜ்கெளதமனின் தனித்துவம் அவர்  சிலுவைக்கு அவனுக்கேத்தெரியாமல் தன் அப்பாவிடமிருந்த வந்த ஒவியக்கலை போல இருக்கிறது. இந்நாவலில் பல இடங்களில் வெளிப்படும் அந்த கச்சிதம் ஒரு ராணுவ ஒழுங்கையே கொண்டிருக்கிறது. உதாரணமாக நாய்கள் பற்றிய பத்து பக்க குறிப்புகளில் வேறு ஏதும் இடையூறு செய்வதில்லை. விளையாட்டுகள் பற்றிய குறிப்புகள் வரும் இடங்களில் வேறு தகவல்கள் வருவதில்லை. இந்த வடிவ ஒழுங்கை சிலுவையிடமிருந்து எம்.ஏ தேர்வின் சமயத்தில் நாவலாசிரியர் கண்டுபிடித்திருக்க கூடியதற்கான சாத்தியம் இருக்கிறது.  சிலுவையே தனக்கு கவிதைல்லாம் வராது தன்னால் இலக்கியத்தை வகைப்படுத்தமுடியும் என உணர்கிற இடமும் இதில் முக்கியமானது.  புனைவு என்றாலும் வருட மாத குறிப்புகளை கவனத்துடனே அளித்துள்ளார்.  இந்திய சுத்ந்திரத்திற்குப் பிறகு 1950 ல் பிறக்கும் சிலுவையின் இந்த சரித்திரம் அடுத்த 25 வருடத்திற்கான தமிழக நிலையை துல்லியமாக அறியவும் உதவுகிறது. ஆனால் அன்றைய நிலையை வைத்துப்பார்க்கும் போது பரவலாக அறியும் ஒன்று, அத்தனை நாயகர்களும் வறுமையின் நிறம் சிவப்பு என பாலைவன சோலைகளாக திரிந்த காலம். அத்தனை ஜாதி எழுத்தாளர்களும்தான் வேலையில்லாமல் கஷ்டப்பட்டிருக்கிறார்கள்.. யார்க்காகவோ காண்டம் வாங்கி வீணடித்திருக்கிறார்கள். அப்பாவின் சட்டையைப்பிடித்திருக்கிறார்கள். குடித்து புலம்பியிருக்கிறார்கள். உதாரணமாக நாஞ்சில்நாடனின் மிதவை.

           சிலுவையின்  நெருக்கடி சண்முகத்துக்கும் உண்டு. அதிலும் பெண்கள் மூலம் அடையும் கிளர்ச்சியும் பின் தன்னிலை அறிந்து அடையும் விரக்தியும் இருவருக்கும் பொதுவானதாகவே வருகிறது.  அவமானப்படுத்தப்படுவதும் ஏளனம் செய்யப்படுவதும் என வரலாறு இருவருக்கும் சமமாக இருக்கிறது. அந்த அவமானத்திற்கு காரணமாக தோன்றுவது அவர்களின் கல்வி. வெளியில்தான் ஜாதியும் பொருளாதார நிலையும். ஆனால் உறவுக்குள்,  தன் வீட்டாரைவிட அதிக மதிப்பெண் எடுத்த கோபத்தால் விலக்கி வைத்தல், கைதூக்கிவிடாமல் போகுதல் என சிக்கல்கள் இருக்கின்றன. அதேநேரத்தில் அவர்கள் இருவரும் தான் படித்தவன் என்கிற நுண்ணகங்கரத்தாலேயே மற்றவர்களின் நடத்தையால் தூண்டப்படுகிறார்கள். மற்றவர்க்கு அது பொருட்படுவதில்லை. தன் உறவினராக இருந்தாலும் உட்பிரிவில் உயர்ந்தவரான கட்டைவாத்தியார்  ஆறாம் வகுப்பில் தன்னை அந்த உட்பிரிவின் பெயர் சொல்லி திட்டுவதை அடிப்பதை ராக்கம்மா பாட்டியிடம் புலம்புகிறான் சிலுவை. அதற்கு அவள் நாம அதானய்யா என்று எளிதாக கடக்கிறாள். ஆனால் அப்போதே சிலுவையால்  முடியவில்லை. அது அந்த கல்வி அளித்த கோபம். அந்தக் கல்வியே பிற்காலத்தில் தன்னை தனிமைப்படுத்தவும் பிறருடன் ஒன்றவிடாமலும் அடிக்கும் தருணங்களை இருவருமே கடக்கிறார்கள். அந்த கல்வியாலேயே அவர்கள் மீண்டு வருகிறார்கள். நக்சல் தோழர்கள் போல வீரமரணம் அடையாமல் இருக்கவும் அவர்களை அனைத்திலிருந்தும் விலக்கியும் வைப்பதும் அவர்கள் அடைந்த இலக்கியம்தான். உலகியலும் தன்னறமும் கலக்கும் இடம் அது. அந்த இடத்தில் சண்முகத்திற்கு கம்பன் கிடைக்கிறான் சிலுவைக்கு கைலாசபதி கிடைக்கிறார். இலக்கியத்தின் பயன் மதிப்பு  என  இவற்றைச் சொல்லிக்கொள்ளலாம்

குறிப்பு:-

வெளிச்சமும் வெயிலும் - சிவா கிருஷ்ணமூர்த்தி

நண்பர் சிவா கிருஷ்ணமூர்த்தி அவர்களின் முதல்சிறுகதை தொகுப்பான 'வெளிச்சமும் வெயிலும்' குறித்த கட்டுரை.

வெளிச்சமும் வெயிலும்

அனைத்துப் படைப்புகளுக்கும்  பாணி என்று ஒன்று உண்டு. அவ்வழியாக படைப்புகளை அறியும்போது அவற்றை இன்னும் நெருக்கமாக அறியமுடிகிறது. இப்பொழுது தொடர்ச்சியாக சில திரைப்படங்களைக் கண்டு, எங்க வீட்டுப் பிள்ளை பாணி மற்றும் ஆங்ரி யங்மேன் பாணி என்று கூறுவதைப் போல ஒரு சிறுகதைத் தொகுப்பை அணுகுவது சரியான ஒன்றா என்றால் அது கொஞ்சம் வசதியாகத்தான் இருக்கிறது என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. சிவாகிருஷ்ணமூர்த்தியின் வெளிச்சமும் வெயிலும் சிறுகதைத் தொகுப்பை சரியான முறையில் உள்வாங்க அதன் முதல்கதையாக இருக்கும் ’யாகவாராயினும் நாகாக்க’ என்னும் கதையின் நாயகனான சம்பத்தையே ஆதர்சமாகக் கொண்டு அந்த பாணிக்கு சம்பத் பாணி என்று பெயரிட்டுக்கொண்டது வசதியாக இருந்தது. அடிப்படையில் சம்பத் என்பவர் யார்? ஒருவகையில், அவர் அனைத்தையும் சோதனைக்கு உள்ளாக்குபவர். அதன் மூலம் மற்ற தரப்பை உணர்பவர். எப்பொழுதும் ஐயத்துடன் விளங்கும் ஒரு தாமஸ். மற்றொருவகையில் சம்பத் ஒரு முந்திரிக் கொட்டை.  அவ்வகையில் மொத்தத் தொகுப்பினையும் மூன்றாக வகுக்கலாம். முதல்வகையை  ’சம்பத் கதைகள்’ என்று பிரித்துவைக்கலாம்.  
இரண்டாவது ’சுஜாதா-வண்ணதாசன் ( பாதிப்பின்) கதைகள்’, மூன்றாவது ’சிவாகிருஷ்ணமூர்த்தி’ கதைகள். அனைத்து கதைகளுமே இந்த மூவியல்புகளும் கலந்துதான் இருக்கின்றன. அதில் தூக்கலாக தெரிவதை வைத்தே இவ்வாறு பகுத்திருக்கிறேன்.



சம்பத் கதைகளாக, தொகுப்பின் முதல்கதையான யாகவாராயினும் நாகாக்க துவங்கி யாவரும் கேளீர், வெளிச்சமும் வெயிலும், what a wonderful world ஆகியவற்றை வைக்கலாம்.
பொதுவாகவே மனிதர்களுக்கு, தாம்  இந்த உலகத்திற்கு எவ்வாறு பொருள் படுகிறோம் என்னும் அச்சம் இருப்பதுண்டுதான்.  அது தமிழர்களான நமக்குச் சற்று தூக்கலாக இருக்கிறதோ என்ற ஐயம் உண்டு. சில நேரங்களில் பொதுச் சமூகத்தை ஊடகங்கள் வாயிலாகவோ சமூக வலைதளங்கள் வாயிலாகவோ அணுகுகையில் தன்னை எவ்வாறூ காண்பித்துக்கொள்ளவேண்டும் என்பதில் மேலும் முனைப்பு கொண்டவர்களாகவே இருக்கிறோம். அதன்காரணமாக பொதுவெளியில் தனக்கான ஒரு பிம்பத்தை காத்துக்கொள்வதில் ஒரு தனிக் கவனம் கொண்டிருக்கவேண்டியிருக்கிறது. இவர்களில் சிலர் நாளாக நாளாக தன் இயல்பிறகு முற்றிலும் எதிர்நிலையை எடுத்து அதைக் காத்துவரவும் தயங்குவதில்லை. அதுவே, பிறகு ஒரு சமயத்தில் ஒரு போலி மனிதாபிமானத்தை, போலி தன்னிரக்கத்தை, போலி சமதர்மத்தை சுமக்க வைக்கிறது. சம்பத் பெரும்பாலும் அவர்களுடனே உரசித் தன்னை சரிபார்த்துக் கொள்கிறார். ஒருவித பகடியாக அக்கதைகள் நிலைகொள்கின்றன. 


யாவரும் கேளீர் கதை நாயகர், தான் ஐரோப்பா வந்த சமயத்தில் ஒரு இந்தியன் என்பதால் எப்படியெல்லாம் வெள்ளையர்கள் தன்னை நிறவெறி கொண்டு விலகியிருந்தனர் என்று ஆற்றாமையுடன் உரைத்து வருவார். இறுதியில் தன் மகனின் காதல்கதை தெரிய வரும்போது அவர் என்ன முடிவெடுக்கிறார் என்பது அதன் முடிச்சு. தமிழர்களைப் பொறுத்த மட்டில் இலங்கைத் தமிழர்கள் மீது இருப்பது ஒரு கரிசனம் அல்லது பரிதாபம்.  ஆகவே அவரிடம்  அரசியல் சார்ந்து மட்டுமே பேசவ்ண்டும். ஆனால், what a wonderful world சிறுகதையில் வரும் நபரின் பிரச்சனை வேறு. அவர் தன் அபிமான நாயகரின் படம் அடுத்து ஓடுமா என்ற கவலையில் இருக்கிறார். அந்தக் கதையில் இறுதியிலும் வெளிப்படுவது சம்பத்தின் பகடிதான்.
ஒருமுறை எழுத்தாளர் ஜெயமோகனிடம்,  ஆஸ்திரேலியாவில் இந்தியர்களை அடிக்கிறார்களே என்று  ஒருவர் கேட்டபோது தான் அங்கே இருந்திருந்தால் தானுமே அவர்களை அடித்திருப்பேன் என்று அவர் பதிலளித்திருந்தார். ஒருவகையில் பார்த்தால் சிவாகிருஷ்ணமூர்த்தியுமே தன் சம்பத் கதைகளில் வாயிலாக அதையேதான் செய்து கொண்டிருக்கிறார். வைத்தி என்று சொல்லும்போதே தில்லானா மோகனாம்பாள் நினைவிற்கு வருவது போல, முல்லைக்கல் மாதவன் நாயர் என்றாலே ஒரு உருவம் நிலைபெற்றூவிட்டதைப் போல சம்பத்தையும் ஒரு குறியீடாக்க சிவாகிருஷ்ணமூர்த்தி துணிந்து களமிறங்கவேண்டும்.


இரண்டாவது வகையான ’சுஜாதா-வண்ணதாசன் கதைகள்’ வரிசையில், மணியம் செல்வன், நீர் வழிப்படுஉம் புணை மற்றும் குணமும் குடிமையும் குற்றமும் கதைகளை வைக்கலாம். மணியம் செல்வனில் சுஜாதாவும் நீர் வழிப்படுஉம் புணையில் வண்ணதாசனும் முந்தியிருக்கிறார்கள். நம் எழுத்தாளர்களில், சுஜாதாவின் சாயல் இல்லாதவர்கள் குறைவுதான் என்றாலும், சுஜாதா உருவாக்கிய சொற்றொடர்களை அவ்வண்ணமே உபயோகிக்கும் கட்டுரைகளும் கதைகளும் சலிப்பைத் தருகின்றன. ஆனால், சுஜாதாவின் பாணியை மட்டும் கைகொண்டு,  அவரைப் போலவே சுருங்கக் கூறி ஒரு புன்னகையையோ, பெரு நகைப்பையோ வரவழைக்கும் பல வரிகள் இந்தத் தொகுப்பில் உள்ளன. முதன் முறையாக விமானத்தில் மேகங்களுக்கிடையே செல்கையில் எங்காவது நாரதர் தென்படுகிறாரா என்று கதாபாத்திரம் தேடுவது ஒரு உதாரணம். ( மணியம் செல்வன்). வண்னதாசன் போல மனவோட்டம் மனஉளைச்சல் போன்றவற்றை துரிதமாக நமக்குக் கடத்தும் உத்தியும் அவ்வண்ணமே கைவருகிறது. ஐரோப்பிய அலுவலகத்தின் பூங்காவும் அதன் இளவெயிலுடன் கூடிய அந்த  இடம் சார்ந்த வர்ணனையைத் தொடர்ந்து  உடனே அங்கிருந்து தந்தையிடம் தொலைபேசியில் பேசுகிறார். அப்பொழுது அவர் கீழப்பாவூர் பசங்களோட பேசாதே என்று சொல்லும் போது உணரும் ஒரு விலக்கம் பொருந்தி வருகிறது. ( வெளிச்சமும் வெயிலும் )  அதன்பின்,  அதைத் தொடர்ந்து அதையே தன் மேலதிகாரியிடம் காணும் போது அவருக்கு வெயில் உரைப்பதை உணர்ச்சிவசப்படாமல் சீராக சொல்லி வாசகனுக்குத் தான் சொல்ல விழைவதைக் கடத்துவதில் உள்ள நேர்த்தியையும் குறிப்பிடவேண்டும். இன்னுமே பொதுவெளியில், எழுதப்படும் கதைகளில் சுஜாதா வண்ணதாசன் தாக்கம் அதிகம் இருந்தாலும் அவை வாசிக்கையில் ஒருவித அயற்சியை அளிக்கின்றன. இங்கு நான் அவ்வகையாக வகுத்திருக்கும் கதைகள் வாசிப்பில் எவ்வித தடையும் ஏற்படுத்தவில்லை என்பதே அவற்றின் பலம். ஆனால், அக்கதைகள் அந்த எழுத்தாளர்களை ஞாபகப்படுத்துகின்றன என்பதே அவற்றின் பலவீனம் எனக் கருதுகிறேன்.



   மூன்றாவதான,  ’சிவாகிருஷ்ணமூர்த்தி கதைகள்’ வரிசையில் வெகுளாமை, விக்டோரியன் மறவோம் ஆகிய கதைகளைக் குறிப்பிடலாம். நம் சிறுகதைகளில் மற்ற தொழில்களில் உள்ளவர்களின் சிக்கல்கள் எழுதப்பட்ட அளவிற்கு கணினித்துறை எழுதப்பட்டதில்லை.  அது அதிகம் அதன் வெளியில் இருப்பவர்களால் ஒருவித ஒவ்வாமையுடன் அல்லது ஆர்வத்துடன் அணுகப்படுகிறது. அவை பெரும்பாலும் கோபமாகவே வெளிப்படுகின்றன. நாப்பதாயிரத்துக்கு பேர மாத்தின.. நாலு லட்சம் கொடுத்தா அம்மாவை மாத்துவியா என்ற திரைப்படக் கேள்வியின் வெவ்வேறு வடிவங்கள். அப்படியிருகையில் கணினித் தொழில்நுட்பத்துறையில் உள்ள சில நாடகத் தருணங்களை எழுதியதில் இரா.முருகன் கதைகள் (சிலிக்கான் வாசல் ) வரிசையில் வைக்கத்தக்க ஒரு கதை வெகுளாமை. ஒரு திட்ட மேலாளர் தன் வாடிக்கையாளருக்கு, மென்பொருளின் மாதிரியை சோதனைக்குத் தரும் ஒரு நாளின் அவஸ்தையை மிக லாவகவ்மாக வெளிப்படுத்தியிருக்கிறது. அடுத்து இந்தத் தொகுப்பின் நட்சத்திரக் கதையான மறவோம் சிறுகதை. உலகயுத்தங்கள் நிகழ்கையில் போர்க்களத்தில் நிகழ்ந்த கவிதைகளை சொல்லும் கதையாக தோன்றி, பின் அதில் இளமைந்தர்கள் பலியானதும், அதில் உள்ள இயலாமைகளும் கவிதையினூடாகவே விரிந்து மறவோம் என்று கவித்துவமாகவே முடிகின்ற ஒரு சிறுகதை. போர் என்பது எவ்வண்ணம் மகத்தான ஒன்றாக மக்கள் முன் நம்பவைக்கப்படுகிறது மற்றும் அதை நினைவுச்சின்னங்கள் மூலம் மக்கள் இன்னும் மகத்தானதாக எப்படியெல்லாம் மாற்றுகிறார்கள்  என்றும் அது உரைக்கிறது. அனைத்திற்கும் மேலாக போரின் அபத்தத்தையும் சுட்டுகிறது.


சிவா கிருஷ்ணமூர்த்தியின் கதைகள் அனைத்தையும்  நான் அவை வெளிவந்த காலங்களில் படித்திருக்கிறேன். இப்பொழுது ஒரு தொகுப்பாக வந்திருக்கும்போது அவற்றில் காலவரிசைகள் மாறி வந்து அது அவர் கதைகளில் கூடிவந்திருக்கும் ஒரு ஒழுங்கைக் குலைக்கின்றன என்று தோன்றுகிறது. அவரது கதைகளை ஸ்குரில் துவங்கி யாவரும் கேளீர் வழியாக, வெளிச்சமும் வெயிலும், what a wonderful world மறவோம் என்று முடிக்கையில் அவரது அகப்பயணம் அதில் துலங்கி வருகிறது. அதில் ஒரு மாற்றம் கண்முன் உள்ளது. உதாரணமாக யாவரும் கேளீரில் அவர் இந்தியர்களின் உள்ளத்த்தில் உள்ள சாதீய பாவத்தை கடக்கையில், வெளிச்சமும் வெயிலும் கதையில் வெள்ளையர்களுக்குள்ளான ஒரு நுட்பமான இதே சாதியத்திற்கிணையான மனநிலையக் காண்கிறார். what a wonderful world கதையை ஒரு ’சம்பத்’ கதையாக வைத்தாலும் அது புலம் பெயர்ந்த மக்களுக்கும் அங்கே பிறந்து வளர்ந்த சிறார்களுக்குமான மனநிலையையும் காட்டுகிறது. அவ்வகையில் அதை மறவோம் க்கு இணையாகவே வைக்கலாம். ஆனால் தொகுப்பில் மாறி மாறி வரும் இந்தக் கதைகளினால் நூலாக படிக்கும் வாசகர் இந்தத் தொடர்ச்சியைத் தவறவிட்டுவிடக்கூடும்.



சிவா கிருஷ்ணமூர்த்தியின் கதைகளின் தொகுப்பு என்று அறிந்த போது நான் வாசித்த கதைகளை நினைவூட்டிப் பார்த்தேன். ‘சம்பத்’ படிமம்(!) நினைவில் இருந்தது. வெகுளாமை, யாவரும் கேளீர்,  what a wonderful world மறவோம் ஆகிய கதைகள் நினைவிலிருந்தன. மற்ற கதைகளை மீண்டும் படித்து நினைவூட்டிக்கொண்டேன். தொகுப்பை ஒட்டுமொத்தமாக படித்தபின், அயல் நாட்டிலிருந்து எழுதுபவர்கள் வரிசையில் ஒருவகை நாஸ்டால்ஜியாவுடனோ அல்லது அறிவுரையுடனோ தன் படைப்புகளை எழுதுவதைத் தவிர்த்த ஒருவராக இவர் இருக்கிறார் என்று தோன்றியது. தான் புழங்கும் சூழலையும் தன் வாழும்  மண்ணின் இயல்புகளையும், தனக்குப்பழக்கமான இந்தியச் சிந்தனைகளுடன் ஒப்பிட்டுக் பார்த்துப் புரிந்துகொள்ள அவர் செய்த முயற்சிகள்தான் இந்தத் தொகுப்பு  என்றும் சொல்லிவிடலாம். அதை அப்படியே வாசகனுக்குக் கடத்தியதில் ஒரு சிறுகதை எழுத்தாளராக அவர் வெற்றி பெற்றிருக்கிறார்.







Saturday, January 25, 2020

பேய்ச்சி - ம.நவீன்

தமிழகத்திலிருந்துக் கிளம்பி மலேயா சென்ற புலம் பெயர் மக்களின் வாழ்க்கையை தலைமுறை வாரியாக  வருடக்கணக்குளோடு அளித்த நாவல்கள் ஏற்கனவே மலேயா வில் எழுதப்பட்டிருக்கின்றன. அதை எழுதியவர்களில் சீ.முத்துச்சாமி முக்கியமானவர். கிளம்பிச் சென்று அங்கே இறங்கிக் காட்டை முழுதாகப் பார்த்து பிரமித்த கணம் முதல், அங்கிருந்த துரைமார்கள், கங்காணி, உலகப்போரில் பங்கு பெறுவது, மலேய சுதந்திரப்போர் அத்ற்குப்பிறகான தமிழ்த் திரைப்படங்களின் தாக்கங்கள், திராவிட அரசியல், கம்யூனிசம், மண்ணின் மந்தர் போராட்டம் என அனைத்துடனும் பின்னித் தொடரும் தோட்ட வாழ்க்கையை அவர் இரு நாவல்களில் விவரித்து விட்டார். அவர் அளித்த அடித்தளத்திலிருந்து எழும்பி அடுத்த கட்டத்திற்குப் பாய்ந்திருக்கிறது நவீனின் பேய்ச்சி நாவல். மிதமான வேகத்தில் செல்லும் வண்டியை அடுத்த கியருக்கு மாற்றி வேகமெடுப்பதைப் போல தன் நடையிலும், கதை சொல்லும் விதத்திலும் அடுத்த வேகமெடுத்து முன்சென்றிருக்கிறார். முதல் அத்தியாயத்தில் திருநெல்வேலியில் கொப்பேரன் காத்தாயியிடமிருந்து துவங்குவதில் இருக்கும் கண்ணி இறுதி அத்தியாத்தில் குமரன் மாலதியோடு முடியும் வரைத் தொடர்கிறது. ஆனால் முதலிலும் கடைசியிலும் வரும் அவர்கள் அல்ல அதன் பாத்திரங்கள். கொப்பேரனுக்கு  அடுத்த தலைமுறையில் வரும் ராமசாமி, மணியம், சின்னி,  ஓலம்மா,  ஆகியோரின் கதையாக சென்று முடி நாவலின் பேய்ச்சி யார் என்பது வெளிப்படும் உச்சகட்டத் தருணத்துடன் நிறைவடைகிறது.



பேய்ச்சி தவிர, கையுடைந்த முனி, பூனியான் இறுதியில் ஜின் என மந்திரீகத் தளத்தில் செல்வது போலச் சென்றாலும், அனைத்து இலக்கிய கர்த்தாக்களைப் போலவே நவீனும் இந்த நாவலில் சொல்ல வருவது அந்த கால கட்டத்தையும் அன்றைய மக்களின் வாழ்க்கையையும் தான் என்று சொல்லலாம். ஆனால் வாசகனின் கவனத்தைப் பேய்ச்சியை நோக்கி திருப்பியதன் மூலம் அதை இன்னும் சுவாரசியமாக்கியிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். அத்தியாயங்களின் அருகில் இருக்கும் வருடக் கணக்கு போல அது மிக நேர்த்தியாகக் கையாளப் பட்டிருக்கிறது

ஓலம்மாவின் பண்ணை துவங்கி வளர்வது,  ராமசாமியின் தோட்டத்தில் இருக்கும் மரவகைகள், அவர் மருந்து அரைக்கும் விதம் போன்றவை முழுக்கவே தகவல்களாக ஆகிவிடும் ஆபாயம் உண்டு ஆனால் அவற்றை சம்பவங்களின் வழியாக சொல்லும் விதம் மூலமே அந்த அபாயம் நேராமல் பார்த்துக் கொள்கிறார். மேலும்  கிடைத்த இடைவெளிகளிலெல்லாம் சுவாரசியங்களும் அதிர்ச்சிகளையும் அளித்து வாசகனை நகரவிடாமல் செய்கிறார். கொப்பேரன் மீண்டும் மருத்துவத்தைத் துவக்கும் தருணத்தைச் சொல்லலாம்.  அதேபோல, அப்போய் ராமசாமிக்காக காத்திருக்கையில் உள்ளே மற்றொருவர் அவருடன் பேசிகொண்டிருக்கிறார். அந்த இடத்தில் அப்போய்க்குப் புரிய வாய்ப்பிலாத ஒரு உரையாடல் அங்கே நிகழ்கிறது. நாவலில், அந்த ஒரு உரையாடலுக்கு ஆசிரியர் அளித்திருக்கும் முக்கியத்துவத்தையும் குறிப்பிட்டுச் சொல்லலாம்

இதுபோன்ற நாவல்களில் பெரும் சவால் உண்டு என்று தோன்றுகிறது. தோட்ட வாழ்வும் இலக்கியமும் தமிழகத்திற்கு அந்நியம் என்றாலும் பல நாவல்கள் மூலம் தோட்ட வாழ்வு தமிழக வாசகர்களுக்கு அறிமுகமாகிவிட்டது. தமிழகம் அறியாத இன்னும் சில மலேய எழுத்தாளர்களால் இன்னும் பலமுறைகூட, மலேய இலக்கியத்தில் தோட்ட வாழ்வும் அவலங்களும் குடியும் பெண்பித்தும் சொல்லப்பட்டிருக்கும் என்றும் நம்பலாம். அத்தகைய தருணத்தில் மீண்டும் நுட்பமாக அதைச் சொல்வதில் வெற்றி பெறுவதிலேயே ஒரு புதிய நாவலாசிரியனின் திறன் வெளிப்படுகிறது.  அதை மிக இயல்பாகக் கடக்கிறார் நவீன்.  அதிர்ச்சியையோ அல்லது ஒரு தீர்க்கமான உரையாடலையோ எதிர்பார்க்கும் இடத்தில் நெகிழ்ச்சியும், ஆனால், வாசகன் எதிர்பார்க்காமல் ஒரு இடத்தில் திடீரென வரும் அதிர்ச்சியும் என மாறி மாறி வருவதன் மூலம் அதைச் சாதித்திருக்கிறார். மணியம் மற்றும் ஆசிரியரின் மரணம் ஒன்றுக்கு உதாரணம் என்றால் மற்றொன்றிற்கு ஆங்சாக்களின் முடிவைச் சொல்லலாம். அவையிரண்டுமே ஒவ்வொரு வகையில் திகைப்பில் ஆழ்த்திவிடுகின்றன. பல இடங்களில்  நவீனின்  சின்னஞ்சிறு வர்ணனைகளும் சுருங்கக் கூறுதலுமே கூட அதற்கு பலம் சேர்த்து விடுகின்றன. ஓலம்மா தன் மகனை மணமாகவும் ஒலியாகவும் மட்டுமே நினைவு கூர்ந்தாள் என்பதும் மற்றொரு இடத்தில் எதுவானாலும் ஓலம்மா அதைச் சுயமாக தயாரிக்கவே கற்றுத் தந்தாள் என்பதும் சொல்ல வருவதை வெகு சுருக்கமாக வாசகனுக்குள் கடத்தி விடுகின்றன.  இந்த நாவல் ஆங்காங்கு இருந்த தோட்டங்கள் அழிந்து செம்பனை உருவாகும் காலத்தையும் சொல்கிறது. அதுவரை தோட்டத்தில் இருந்த தமிழர்கள் நகரங்களுக்கு குடிபெயர்கிறார்கள். அதற்கேற்றார்போல ஒருபுறம் மெல்ல மெல்ல கையுடைந்து ஒட்டுப்போட்ட முனியாகவே அவர் நிற்பதும்  பேச்சிக்கு கவனிப்பாரற்று போவதும் மறுபுறம்  முருகன் உயர்ந்து எழுவதையும் நாவலிலேயே காணமுடிகிறது.



அதிக அளவில் வட தமிழக மக்களும் காரைக்குடி மற்றும் தஞ்சை பகுதி மக்களும் மலேசியாவிற்கு நாகை மற்றும் சென்னை வழியாக சென்றார்கள் என்றுதான் அறியமுடிகிறது. அந்தப் பகுதிகளில் பேச்சியோ காத்தாயியோ பேயாக கருதப்படுவதில்லை. அங்கு பேச்சி, பேச்சுக்கு அதிபதியான சரஸ்வதியின் வடிவமாக கருதப்படுகிறாள். அதேபோல காத்தாயியும் காக்கின்ற அம்மனாகவே கருதப்படுவாள். சில இடங்களில் வேத அறிஞர் கார்த்தாயாயினி என்றும். இன்றுமே கூட கோயில்களில், காத்தாயி குழந்தையம்மனாக தன் கரங்களில் ஒரு குழந்தையை ஏந்தி நிற்பதும் உடல்நலம் சரியில்லாத குழந்தைகளுக்கு அவளிடம் மந்திரித்த வேப்பிலைகளை வாங்கி செல்வதும் சென்னையில் கூட காணக்கிடைக்கிறது. ஆனால், இந்நாவல் துவக்கத்திலிருந்தே அவர்களை குழந்தை பலி கேட்பவர்களாகச் சொல்கிறது. நாவலில் காத்தாயி என்பது வெறும் பெயராக மட்டுமே இருக்கிறது என்பதும் அவள் பேச்சிதான் என்றும் முதல் அத்தியாத்திலேயே வந்தும் விடுகிறது. மேலும் பலிகேட்கும் அந்த பேய்ச்சிகள் நெல்லை சுற்றுவட்டார மாவட்டங்களில் நிறைந்திருக்கிறாள் என்பதை திருச்சி தண்டாத நான் ஜெயமோகன் எழுத்து வழியாக  அறிந்திருக்கிறேன். ஆசிரியர் இந்த நாவலில்   அதை ஒரு நேர்த்தியாக இழுத்துக் கொண்டு வந்து கட்டிவிட்டார். கொப்பேரன் நெல்லையில் பிறந்து காரைக்குடி வந்து அங்கிருந்து மலேயா வந்தவராகி இருக்கிறார் என்பதால் அந்தப் பேய்ச்சிக்கு பொருந்தி வருகிறது. ஆனால் இறுதியில், பேய்ச்சி உருவத்தில் இருப்பது யாரென்று தெரிய வரும்போது, அவர்  இந்நாவலில் உருவகப்படுத்தியிருக்கும் பேய்ச்சி வேறொருத்தியாக எழும்பி நிற்கிறாள். அத்தனை மனிதர்களைப் பலிவாங்கிய அந்தப் பேய் என்னவென்று அறிகையில் ஒரு சிலிர்ப்பு எழுகிறது. அது, இந்த நாவலையும் நாவலாசிரியரையும் இன்னொரு உயரத்திற்குக் உயர்த்திச் சென்று நிறுத்திவிடுகிறது

Sunday, January 12, 2020

தம்மம் தந்தவன் குறித்து கடலூர் சீனு உரை


நல்ல பல  புனைவுகளை,மிக நேர்த்தியான வடிவமைப்பில்,சர்வதேச தரத்தில் வெளியிட்டுக் கொண்டிருக்கும் நற்றினை பதிப்பகம், மராத்தி மற்றும் ஆங்கிலத்தில் எழுதக்கூடிய நாவலாசிரியரான விலாஸ் சாரங் எழுதிய தி மான் ஆப் தம்மா எனும் நாவலை தமிழ் மொழிபெயர்ப்பில் கொண்டுவந்திருக்கிறார்கள். இதை தமிழில் மொழிபெயர்த்தவர் விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட நண்பரும், வாசகரும்,மொழிபெயர்ப்பாளரும்,எழுத்தாளருமான காளிபிரசாத் அவர்கள்.

தமிழின் மொழிபெயர்ப்பு சூழலில் இருந்து பேசத் துவங்குவது சரியாக இருக்கும் என நினைக்கிறேன். தமிழில் ஒரு நல்ல புனைவு,நல்ல மொழிபெயர்ப்பில் வாசகனுக்கு கிடைப்பதற்கு,அந்த வாசகன் மொழிபெயர்ப்பின் மூன்று இடர்களை கடக்க வேண்டியது உள்ளது. முதல் இடர். பிரதிக்கு, பிரதியின் வாக்கியங்களுக்கு வார்த்தைகளுக்கு, நேர்மையாக செய்யப்படும் மொழிபெயர்ப்பு. நேர்மை  எனில் நீங்கள் நினைப்பதை விடவும் மேலான நேர்மை. வடிவேலு ரேஞ்சுக்கான ‘அநியாய’நேர்மை. அந்த தமிழ் மொழியாக்கத்தை கூகுளுக்கு கொடுத்தால்,மொழிபெயர்க்கப்பட்ட அந்த மூலப் பிரதி புல்ஸ்டாப் கமா கூட மாறாமல் அப்படியே கிடைத்து விடும்.

இரண்டாவது இடர்,இதே ‘அநியாய’நேர்மையை எழுத்தாளருக்கு அளிப்பது. மூல ஆசிரியரின் ‘த்வனி’யை தமிழுக்கு கொண்டு வரும் முயற்சி போன்றவற்றை அதன் உதாரணமாக சொல்லல்லாம். இரண்டாலும் நிகழ்ந்தது என்ன? எது நிகழ வேண்டுமோ,அந்த வாசகனுக்கும் அந்த எழுத்தாளருக்கும் இடையே நிகழவேன்டிய அந்தரங்க உரையாடல் நிகழாமலே போனது.மூன்றாவது இடர் மிக நல்ல மொழிபெயர்ப்பு,அதற்க்கான உத்வேகம்கொண்ட உழைப்பு அத்தனையும் கொண்டு,தமிழுக்கோ இந்தியாவுக்கோ சம்பந்தமே  இல்லாத சாரம்சத்தைக் கொண்ட புனைவுகளை மொழியாக்கம் செய்வது. இந்த மூன்று இடர்களைக் கடந்தே,ஒரு நல்ல புனைவு,நல்ல மொழிபெயர்ப்பில் தமிழ் வாசகனை வந்து அடைகிறது. அப்படிப்பட்ட மூன்று தடைகளையும் கடந்து வந்திருக்கும் நல்ல மொழிபெயர்ப்பிலான நல்ல நாவல் இந்த தம்மம் தந்தவன் நாவல்.
நல்ல மொழியாக்கம் என்றதுமே வாசகர் மனதில் நல்ல மொழியாக்கங்களைத் தந்தோரின் ஒரு வரிசை, யுவன் சந்திர சேகர்,சுகுமாரன்,யூமா வாசுகி  என சட்டென எழும். அவர்களின் மொழியாக்கங்களின் சரளத்துக்கும் சீர்மைக்கும் அழகுக்கும் அவர்கள் கவிஞர்கள், எழுத்தாளர்கள் என மொழியில் படைப்பாற்றலின் தளத்தில் இயங்கிக் கொண்டிருப்பவர்கள். அவர்கள் இந்த நாவலின் மொழியாக்கத்தைப் படித்தாலும் புறக்கணிக்க இயலாத இடத்தைக் கோரும் மொழியாக்கத்தை காளிப்பிரசாத் செய்திருக்கிறார். இதற்க்கு காளிப்பிரசாத் அவர்களுக்கு உறுதுணையாக நின்றிருப்பது,வெண்முரசு. இன்றைய சூழலில் மொழியின் உச்சபட்ச சாத்தியம் எதுவோ அவை வெளிப்படும் படைப்பு அது. கடந்த ஐந்து வருடங்களாக அந்த மொழியுள் திளைத்துக் கிடக்கும் வாசகர்களில் ஒருவர் காளிபிரசாத்.

இந்த நாவலின் ஒரு கால் இந்த இரண்டாயிரத்திலும்,மற்றொரு கால் இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முந்தியும் அமைந்து நின்றிருக்கிறது. இந்த இரண்டு காலங்களுக்கும் இடையே நிகழும் பார்வைக் கோணத்தின் ஊஞ்சல் அசைவுக்கு , இந்த மொழியாக்கத்தில் பயின்று வரும் மொழி அதன் வார்த்தைகள் குறிப்பாக உளச்சான்று, புரவி போன்ற சொற்றேர்வுகள்  இசைவைக் கூட்டுகிறது. கவிஞர் ஷங்கர்ராமசுப்ரமன்யன் தம்மம் தந்தவன் குறித்த தனது அறிமுகக் கட்டுரையில், இந்த மொழியாக்கத்தில் இடரும் ஜெயமோகன் மொழியின் தாக்கம் குறித்து எழுதி இருந்தார். குதிரை என்றால்தான்  எனக்கு ஓடுகிறது.புரவி எனும் வார்த்தை எதையும் தூண்டவில்லை என குறிப்பிட்டிருந்தார். அவரது வாழ்க்கைப் பார்வை சார்ந்து,இலக்கிய விமர்சனக் கோணம் சார்ந்து அது சரியான விமர்சனம்.முக்கியமான விமர்சனம். ஆனால் அந்தப் பார்வையும் விமர்சனமும் இரண்டாயிரங்களை சேர்ந்தது. ஒரு குதிரையை காண டாகுமெண்டரி போதும் இல்லையேல்  சாலைக்கு சென்றால் போதும், கொஞ்சம் முயன்றால் குத்ரையேயேற்றம் கூட பயின்று விடலாம். அந்தக் குதிரையை காண இலக்கியம் தேவையில்லை. ஒரு இலக்கியவாசகன் மொழியில் திகழும் குதிரையை காண வந்தவன். அவனுக்கு குதிரை போதாமல்தான் புரவி ஏறுகிறான். பின்னர் அவனுக்கு புரவியும் போதாமலாகி ஈராருகால்கொண்டெழும் புரவியை தேடுகிறான். அந்த வகையில் இந்த மொழியாக்கத்தின் உட்கூறுகள் சிறப்பு வாய்ந்தன.

பொதுவாக புதியவர்களின்  ஒரு புதிய மொழியாக்கத்தில் ஒன்றைக் காண முடியும், மொழியாக்கத்தின் ஆரம்பத்தில் ஒரு உத்வேகம்,இடையே ஒரு சோர்வு,முடிவில் ஒரு அவசர அடி என அந்த மொழியாக்கப்பணி தொழிற்படும். இந்த மொழியாக்கம் அதிலிருந்து வெளியேறி, வயல்காட்டின் மீது தாழப் பறந்து செல்லும் கொக்கு போல முதல் துவங்கி இறுதிவரை சீராக பயணிக்கிறது. இந்த மொழியாக்கம் இந்த நாவலின் வருகை குறித்து கவிஞர் ஷங்கரராமசுப்ரமணியன் எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் போன்ற முன்னோடிகள் தங்களது பாராட்டுகளை தெரிவித்திருக்கிறார்கள்.

இந்த நாவலின் முக்கியத்துவம் என்ன என்றொரு கேள்வியை எழுப்பிக்கொண்டால், இந்த நாவல் தமிழில் வந்திருப்பதே அதன் முதன்மையான முக்கியத்துவம் என்பதை அறியலாம். தமிழ் நிலத்தில் சங்ககாலத்தில் துவங்கிய பண்பாட்டு வளர்ச்சியின் வேர் சங்கம் மருவிய காலத்தில் ஆழம் கொள்கிறது. தமிழ்நிலத்தின் பண்பாட்டின் வேர் என்றே பெளத்தத்தை சொல்லலாம். வடபாரததில் துவங்கி,தென்பாரதத்தில் பரவி, அங்கிருந்து பாதி புவிப் பரப்பை போர்த்திச் செழித்த பௌத்தத்திற்கு, இந்திய அளவில் ஒரே ஒரு காப்பியம்தான் இருக்கிறது,அது தமிழில் இருக்கிறது.மணிமேகலை என்று ஜெயமோகன் குறிப்பிடுவார். மணிமேகலை துவங்கி,பௌத்த மறுமலர்ச்சிக்கு சிந்தித்த அயோத்திதாசர் தொடர்ந்து, பௌத்தம் குறித்து இன்று பேசிக்  கொண்டிருக்கும் ஸ்டாலின் ராஜாங்கம் வரை தொடரும் இந்த உரையாடலில், சுதந்திரத்துக்குப் பிறகு இன்று வரையிலான தீவிர இலக்கிய ஓட்டத்தில், நவீன இலக்கியம்  புத்தர் குறித்தோ,பௌத்தம் குறித்தோ,தமிழ் நிலத்தில் அது ஆக்கப்பூர்வமாகவோ எதிர் முறையிலோ உருவாக்கிய பண்பாட்டுத் தாக்கம் குறித்தோ, என்னவிதமான பார்வையை அக்கறையைக் கொண்டிருக்கிறது என்று கவனித்தால்,[ விஷ்ணுபுரம் நீங்கலாக] வெறுமையே மிஞ்சும். அவ்வப்போது ஹெர்மன் ஹெசி இன் சித்தார்த்தா போல ஏதேனும் மொழியாக்க முயற்சி கண்ணில் படும். இந்த பின்புலத்தில் நின்றே இந்த நாவலின் தமிழ் வரவு முக்கியத்துவம் கொண்டதாகிறது.

இந்த நாவலின் தனித்தன்மை, விலாஸ் சாரங் கைக்கொள்ளும் நவீனத்துவப் பார்வையின் விளைவாக உருவானது. தனிமனித அலகு,விமர்சனப் போக்கு,அறிவியல் பார்வை என நவீனதத்துவப் பார்வையின் அளவீடுகளை நாமறிவோம். அந்தப் பார்வையில் புத்தரின் பிறப்பு முதல் பரிநிர்வாணம் வரையிலான அவரது வாழ்வை அணுகிப் பார்க்கும் நாவல் இது. புத்தர் தந்தைக்கு,மகனுக்கு,மனைவிக்கு, என்னவாக இருதிருக்கிறார் அவர்களிடம அவரது நடத்தை என்னவாக இருந்திருக்கிறது ஒரு சங்கத் தலைவராக அவர் என்னவாக இருந்திருக்கிறார், குறிப்பாக அவரது தவ வாழ்வு இவற்றின் மீது, இந்த நவீனத்துவப்  பார்வைக்கே உரிய கூர்மை கொண்ட தளங்கள் இந்த நாவலில் பல உண்டு. உதாரணமாக நாவலுக்குள் பிம்பிசாரன் சிறைபட்டு பட்டினி போடப் படுகிறான்.தாள இயலாத பசி.தனது மலத்தை தானே உண்ணுகிறான்.அங்கே குறுக்கு வெட்டாக புத்தரின் தவ வாழ்வு அவனால் நினைக்கப் படுகிறது.

நாவலின் மையமான புத்தரின் வாழ்வுக்கு இணைகோடாக செல்லும் பிற விஷயங்கள் வாசகனின் கவனத்தைக் கொருவன. குறிப்பாக இந்த நவீனத்துவப் பார்வை தொட்டெடுக்கக்கூடிய அபத்தச் சூழல்கள். பசேனதி புத்தரை காண்பதற்கு முன் அரசன். பார்த்து விட்டு அந்த அறையை விட்டு வெளியே வந்த பிறகே அவன் அறிகிறான்,இனியும் அவன் அரசன் அல்ல என்பதை. விதூதபனுக்கு அரசு பட்டம் கைக்கு வரும் சூழல் அடுத்த அபத்தம். அவன் அதற்காக எதுவுமே செய்யவில்லை. சும்மா பசேனதியின் ராணுவ தளபதி அவனை தேடிவந்து முடியை அளித்து, அவனுக்கு ராணுவ தளபதியாக மாறிக் கொள்கிறான். இதில் மற்றொரு அபத்தம் இந்த காரயான் எனும் படைத் தளபதியின் குணம். அவன் நினைத்தால் பசேனதி வசமிருந்து பறித்த செங்கோல் கொண்டு அவனே கோசலத்தின் அரசன் என அமர முடியும், அவன் ஏன் அதை விதூதபனுக்கு அளித்தான். இப்படி அபத்த சூழலில் மன்னனான விதூதபன் தனது அரசின் ஸ்தரத்தமையின் பொருட்டு எத்தனை குல குடிகளை அழித்தான் என்பதை இந்த நாவலுக்கு வெளியே சென்று வரலாற்றை வாசித்தால்,இந்த நாவல் பேசும் சூழலின் அபத்தம் புரியும்.

ஒரு வாசகர் இந்த நாவலைக் கொண்டு, நம்மிடம் இருக்கும் சித்தார்த்தா நாவலுடன் உரையாடிப் பார்க்கலாம். சித்தார்த்தா நாவலின் பார்வை என்ன என்பதை அறிவோம்,இரு உலகப்போர்களால் சிதைந்த நம்பிக்கைகள் அனைத்தும் கடந்து,இயற்கையுடன் இணைந்த வாழ்வே இனி ஒரு ஒரு தனி மனிதனுக்கும் மீட்சி என்று உருவான பார்வைக்குள் சித்தார்த்தனை  அணுகிப் பார்த்த நாவல். தம்மம் தந்தவனில் வரும் புத்தர் ஞான குரு அல்ல. தரைத் தளத்தில் நிற்கும் புத்தர் அவர். இந்த இரு புத்தர்களுக்கும்,இரு பார்வைகளுக்கும் இடையே ஒரு உரையாடலை வாசகன் நிகழ்த்திப் பார்க்கலாம். ஒரு மதிப்பீட்டு விமர்சகர் நம்மிடம் உள்ள புதுமைப்பித்தன்  முதலான சுரா அமி ஆ மாதவன் வரிசையில்,  வந்து சேரும் இந்த நவீனத்துவர் விலாஸ் சாரங் எந்த இடத்தில் பொருந்துகிறார், அந்த இடத்தின் படி அவரது பலம் பலவீனம் என்ன என்று ஒரு விமர்சகர் அணுகலாம். இப்படி வாசக கவனத்துக்கும், விமர்சன உரையாடலுக்குமான பாதைகள் பலவற்றைக் கொண்டது இந்த தம்மம் தந்தவன் நாவல்.

ஒரு வாசகனாக இந்த நாவல் எனக்களிக்கும் உண்மையின் ஆழம் சார்ந்து ஒரு விஷயத்தை சொல்லி இந்த சிற்றுரையை நிறைவு செய்வது சரியாக இருக்கும் என நினைக்கிறேன். நாவல் என்பது மேலான உண்மையை சொல்லவந்த கலை என்ற வகையில், இந்த நாவலில் நவீனத்துவப் பார்வை வழியே திரண்டெழும் உண்மை அதன் பலம். முக்கியமானதும் கூட.ஆனால் அந்த உண்மை ஏன் துணுக்குறச் செய்யும் உண்மையாக இருக்கிறது? உண்மைக்கு அப்படி ஒரு குணநலன் உண்டா என்ன? உதாரணமாக இந்த நாவல் வழியே அரசைத் துறந்த புத்தர் சாகும் வரையில் தனது சங்கத்தைத் துறக்கவில்லை எனும் துணுக்குறச் செய்யும் உண்மையை வாசகன் வந்தடையும் இடத்தை சொல்லலாம். இந்த உண்மை ஏன் இவ்வாறு ‘தோற்றம்’அளிக்கிறது  என்றால், எந்த உண்மையும் நிற்கும் அதன் சாரமான பகைப்புல உண்மை ஒன்றுண்டு. அந்த பகைப்புல உண்மையை இந்த நாவல் கணக்கில் கொள்ள வில்லை. நவீனத்துவப் பார்வையின் எல்லை எதுவோ அதுவே இந்த நாவல் வாசகனுக்கு அளிக்கும் உண்மையின் எல்லையும் கூட .




Thursday, January 9, 2020

பேட்டி

விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் தொடங்கி பத்தாண்டுகள் ஆகின்றன. இப்பத்தாண்டுகளில் இதில் வாசகர்களாகப் பங்கெடுத்தவர்கள் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களாக எழுந்திருக்கின்றனர். பலர் தாங்களே இலக்கிய அமைப்புக்களை நிறுவி தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்கள்.
இப்பத்தாண்டு நிறைவை ஒட்டி விஷ்ணுபுர இலக்கிய வட்ட நண்பர்கள் எழுதிய பத்து நூல்களின் வெளியீட்டுவிழா ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இதில் இந்த ஆண்டு தங்கள் முதல்நூலை வெளியிடும் நண்பர்கள் பத்துபேரின் நூல்களை அறிமுகம் செய்வது  நோக்கம். முதல் சிறுகதைத் தொகுதிகள், மொழியாக்க நூல்கள் இதில் உள்ளன.அதில் தம்மம் தந்தவன் நாவலும் ஒன்று. 

அதற்கான ஒரு  கேள்வி பதில் பதிவு. இது ஜெ. தளத்தில் வெளியானது




உங்களைப்பற்றி..(கல்விபணிகுடும்பம்)
எங்கள் சொந்த ஊர் வேளுக்குடி. நான் வளர்ந்தது / ஆரம்ப கல்வி  எல்லாம் மன்னார்குடியில்தான்.  பின் நாகப்பட்டினத்தில் மின்னியல் மற்றும் மின்னணுவியலில் டிப்ளமோ முடித்து சென்னைக்கு வேலைக்கு வந்தேன். முதலில் மின்னியல் வல்லுநராக சிறிது காலம் இருந்து  பின் கணிணித் துறைக்கு மாறி கணிணி தொழில்நுட்பத்துறையில் மேலாளராக இருக்கிறேன். 2009ல் திருமணமானது.  அப்பா, திரு.ரெங்கமணி அரசு ஊழியராக பணியாற்றினார். அவரும் அந்த வருடம் ஓய்வு பெற்றார். அம்மா, திருமதி.புஷ்பவல்லி,  வீட்டு நிர்வாகி. 2009ல் அவர்களும் மன்னையிலிருந்து சென்னைக்கு வந்தார்கள். மனைவி ஆர்த்தி. மகள் அத்விகா சாதனா, மகன் அஸ்வத் நாராயணன். இப்பொழுது சென்னை திருமுல்லைவாயிலில் வசிக்கிறோம்
இலக்கிய பரிச்சயம் எப்படி நிகழ்ந்ததுஆதர்சங்கள் யார்?
வீட்டில் அனைத்து வார இதழ் தொடர்களும் புத்தகமாக இருந்தன. அனைத்து வார இதழ்களும், பாக்கெட் நாவலும், காமிக்ஸ்களும் வாசிப்புச் சந்தா வழியாக வீட்டிற்கு வந்து விடும். படிப்படியாக கற்றதும் பெற்றதும் கதாவிலாசம் தொடர்கள் வழியாக இலக்கிய அறிமுகம் ஏற்பட்டது.  கேணி கூட்டங்கள் வாயிலாக ஆளுமைகளை இன்னும் அருகில் அறியும் வாய்ப்பும் கிடைத்தது.  ஆறாம் வகுப்பு விடுமுறையில் அர்த்தம் புரியாமலேயே தில்லானா மோகனாம்பாளை படித்து, அதைப் புரிந்து கொண்டதுபோல நண்பர்களுக்கு கதை சொல்லியிருக்கிறேன். பிற்காலத்தில் விஷ்ணுபுரம் படிக்கும் வரை அந்தப் பழக்கம் தொடர்ந்தது.
ஆதர்சங்கள் என்று கேட்டால் பலர் நினைவுக்கு வருகிறார்கள். சுவாரசியமான ஜனரஞ்சக நடைக்கு சுபா, சுஜாதா ஆகியோரும், அதே போன்று எழுத்து நடையிலும் தன் இமேஜ் பற்றி கவலை கொள்ளாது மிகவும் வெளிப்படையாக இருப்பதிலும் சாரு நிவேதிதா அவர்களும், கறாரான பார்வைக்கு ஞாநியும்,  நுட்பமான வர்ணனைக்காக அசோக மித்திரனும், பலமொழி மனிதர்களின் மேன்மையை / உன்னதங்களை அறிமுகப் படுத்தியதில் அ.முத்துலிங்கமும் நாஞ்சில்நாடனும் ஆதர்சங்களாக இருக்கின்றனர். ஆனால் எழுத்தோடு மட்டுமில்லாமல் மேடைப்பேச்சு / நேர்ப்பேச்சு அனைத்தின் வழியாகவும் ஜெயமோகன் அவர்களே இன்று என்னை வழிநடத்திக்கொண்டிருக்கிறார்.
தம்மம் தந்தவன்– மொழியாக்க அனுபவம் மற்றும் சவால்கள் என்ன?
எழுத்தாளர் விலாஸ் சாரங், அடிப்படையில் கவிஞர் மற்றும் சிறுகதையாசிரியர். ஆகவே அந்தக் கச்சிதம் அவரது நாவலிலும் வெளிப்படுகிறது. அவரது  நடையில் மேலும் என்னை ஆச்சரியப்படுத்தியது அவரது கதை சொல்லும் முறை. அது ஆசிரியர் குரலாக துவங்கும். திடீரென ஒரு பணியாள் வழியாக பயணிக்கும். சில நேரங்களில் சித்தார்த்தன் குரலாகவும் வெளிப்படும். மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் எழுதியிருந்த கெளதம புத்தர் வாழ்க்கை வரலாறு புத்தகம் ஏற்கனவே படித்திருந்ததால்  புத்தரின் வாழ்க்கை ஒரு கதையாக மனதில் பதிந்திருந்தது.
வேத கால நெறிகள்,உபநிடத காலம் அதைத்தொடர்ந்து பெளத்தத்தின் எழுச்சி என அனைத்தும் இறுதியில் நம்மால் விளக்கக்கூடிய அளவில் நாவலுக்கிடையே புகுத்துவது என்பதே விலாஸ் சாரங்கின் வெற்றி.  அதிர்ஷ்டவசமாக வெண்முரசு வாயிலாக இதுவும் எனக்கு அறிமுகமாகிவிட்டிருந்தது.  இதில் வரும் சிருஷ்டி கானம் உபநிடத வரிகள் போன்றவற்றை ஏற்கனவே ஜெயமோகன் அவர்களின் வலைதளத்தில் படித்தும் இருக்கிறேன். குறிப்பாக  சொல்வளர்காடு நாவலைக் குறிப்பிடவேண்டும்.
தம்மம் தந்தவன் நாவல்,  மேற்சொன்ன புத்தகங்களில் இருந்து மாறுபட்டு முற்றிலும் வேறு கோணத்தில் நகர்ந்தாலும் பெளத்தம் நிகழ்ந்த காலம் குறித்த அடிப்படைப் புரிதல்கள் இந்த இரு நாவல்களின் வழியாகவே ஏற்பட்டது
பெரிய சவால்களாக இருந்தது மொழிபெயர்ப்பிற்கான நேரம்தான். அதை எளிதான ஒன்றாக கணக்கிட்டு கைகளால் அதை ஒரு டைரியில் எழுதியதும் பின் தட்டச்சு செய்ததும் நேரம் எடுத்துக் கொண்டன. நேரடியாக தட்டச்சிட்டிருந்தால் நேரம் மிச்சமாகியிருக்கும்
விலாஸ் சாரங்கையும் இந்த நாவலையும் தேர்ந்தெடுத்தது எப்படி?
இந்த நாவலைத் தேர்ந்தெடுத்து அளித்தவர் நற்றிணை யுகன் அவர்கள் தான். அவர் அளித்த உற்சாகமும் இந்தப் பணியில் ஈடுபட முக்கியக் காரணமாக அமைந்தது
இந்த நூலுக்கான கவனம் எப்படியுள்ளது?
நண்பர்கள் செளந்தர் மற்றும் சிவகுமார் ஆகியோர் இந்த நாவல் குறித்து விமர்சனங்கள் எழுதினர். ஜெயமோகன் தளத்தில் நாவல் குறித்த அறிமுகமும் இந்த விமர்சனங்ளும் வெளிவந்தன. புதுவை வாசிப்பு மாரத்தனில் இந்த நாவலை வாசித்த பலர் இது குறித்த கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.
நற்றிணை பதிப்பகத்தாரின் முயற்சியால், நாளிதழ்கள் தொலைக்காட்சிகள் வாயிலாக நாவல் குறித்து நல்ல கவனம் கிட்டியது. தினமணி நாளிதழின் நூல் அரங்கம் பத்தியில் இந்த நாவல் குறித்த அறிமுகம் வந்தது.  கலைஞர் தொலைக்காட்சியின் புத்தகன் நிகழ்ச்சியிலும் இதை அறிமுகப்படுத்தி உரையாற்றினர். தமிழ் இந்து நாளிதழில் கவிஞர். ஷங்கர்ராமசுப்ரமணியன் அவர்கள் எழுதிய மதிப்புரையும் பரவலான கவனத்தைப் பெற்றுத் தந்தது.

சுட்டிகள்

தம்மமும் தமிழும்

சித்தார்த்தனும் தம்மமும்-சிவக்குமார் ஹரி

தம்மம் தந்தவன் 

முடியாத புத்தர் 

இந்த நூல் வழி நீங்கள் பெற்றதென்னஇந்த நூலின் சமகால முக்கியத்துவம் என்ன?
புத்தர் உபதேசித்தவை ஜென் கதைகளாகவும் புத்தரின் சொல் என்ற வகையில் ஓரிரு வரிகளாக தொகுக்கப்பட்டும் இன்றும் நாம் காணும் அலுவலக பதாகைகளிலோ நம் கைபேசியில் வரும் குறுஞ்செய்திகள் வடிவிலோ நம்மை வந்தடைந்துகொண்டுதான் இருக்கின்றன. இவ்வாறு எக்காலத்திற்கும் பொருத்தமான உபதேசங்களை அவர் அளித்துவிட்டுச் சென்றிருக்கிறார். உதாரணமாக, இதில் புத்தர் தான் உணவு உண்ட திருவோட்டைக் கழுவும் இடம் ஒன்று வருகிறது. திருவோடும் கழுவப் படுகிறது. நீரும் எஞ்சுவதில்லை.  வற்றா நதிகள் ஓடும் காலத்திலும் அவர் கையாண்ட தண்ணீர் சிக்கனம் அது. இன்றைக்கு அரசு மக்களிடம் அதைச் சொல்லிக் கொண்டிருக்கிறது.
சாப்பிடும்போது சாப்பிடு, வேலை செய்யும் போது வேலை செய் என்று தியானத்தை மிக எளிமையாக, அறிவுறுத்தும் புத்தர், மறுபுறம் தம்மத்தையே உனது ஒளிவிளக்காகக் கொள்! உனக்குள்ளே அடைக்கலமாகியிரு! தம்மத்தை உன் கரங்களினால் ஒரு ஒளிவிளக்காக இறுகப் பற்றிக்கொள். தம்மத்திற்குள் ஒரு அகதிபோல அடைக்கலம் புகுந்துவிடு. உன்னைத்தவிர வேறு யாரிடமும் அடைக்கலம் பெறாதிருப்பாயாக! என்று அதே எளிமையுடன் பெரும் சொற்களையும் உரைக்கிறார். இந்த நூல் புத்தரின் வாழ்க்கையின் அத்துணை அம்சங்களையும் மொத்தமாக உரைக்கிறது. இதிலிருந்து தியானமோ, தத்துவமோ தான் விரும்பும் திசை நோக்கி ஒருவர் செல்ல முடியும். நான் இதையடுத்து  அம்பேத்கர் எழுதிய புத்தரும் அவரது தம்மமும் வாசித்துக் கொண்டிருக்கிறேன்.
இந்த நூல் மனதளவில் எனக்கும் புத்தரின் பிடிவாத்தையும் நிதானத்தையும் கடத்தியது என்று நான் நம்பினேன். என் நண்பர்கள் அருணாசலத்திடமும் ராஜகோபாலிடமும் வேறு தருணங்களில் வேறு மாதிரியாக இதைச் சொன்னபோது அது ஒரு கற்பனைதான் என்றும் வாழ்வில் நெருக்கடியை சந்திக்காமல் இதைச் சொல்வது தவறு என்று சொல்லிவைத்தாற்போல் ஒரே போலச் சொன்னார்கள். நானும் இதைச் சோதித்துப் பார்க்குமளவு நெருக்கடி எதுவும் எனக்கு வந்துவிட வேண்டாம் என்றே வேண்டிக் கொள்கிறேன். இந்த நூலில் வழியாக நான் பெற்றது என்னவென்று கேட்டால், இந்த மொழிபெயர்ப்பு வாயிலாக இலக்கிய உலகில் ஒரு அடையாளம் பெற்றேன் என்பது தவிர வேறு எதையும் இந்தக் குறுகிய காலத்திற்குள் என்னால் சொல்ல முடியவில்லை. அப்படி எதையாவது சொன்னால் அதை புத்தருமே ஏற்றுக் கொள்ள மாட்டார்  :-)
அடுத்து என்ன?
சில சிறுகதைகள் எழுதியிருக்கிறேன். இன்னும் கொஞ்சம் எழுதி ஒரு தொகுப்பாக கொண்டுவரும் எண்ணம் இருக்கிறது. நாவல் ஒன்று எழுதத் துவங்கி நான்கு அத்தியாயங்களோடு நிற்கிறது. அதை மீண்டும் முதலிலிருந்து எழுத வேண்டும். இரண்டில் ஏதேனும் ஒன்று இந்த வருடத்தில்  நடக்கும் என்று நினைக்கிறேன்.

தம்மம் தந்தவன் - மகிழ்ச்சியும் நன்றியும்



மதிப்பிற்குரிய எழுத்தாளருக்கு வணக்கம்,


தங்கள் வலைதளத்தில் வெளிவந்திருக்கும் 2019ம் ஆண்டின் சிறந்த புத்தகங்கள் வரிசையில் "தம்மம் தந்தவன்" மொழிபெயர்ப்பு நாவலையும் கண்டபோது எல்லையில்லா மகிழ்ச்சி ஏற்பட்டது. ( http://www.sramakrishnan.com/?p=9656  )   நாவல் சென்றடைந்ததற்கு புத்தரும் விலாஸ் சாரங்கும் அதைச் சரியான நேரத்தில் வெளியிட்ட பதிப்பகமும் முக்கிய காரணங்கள்.  முந்நூறு பக்கங்களுக்குள் புத்தரின் வாழ்க்கை, தத்துவம் இரண்டையும் சொல்ல ஒரு கவிஞனால் முடிந்துவிடுகிறது. வாசகன் நிரப்பிக் கொள்ள வேண்டிய இடங்களையும் அவனுக்கு விட்டு வைத்தபடி, விலாஸ் சாரங் அதை நன்றாக கையாண்டிருந்தார். மொழிபெயர்ப்பாளனாக அதை சரியாக உள்வாங்கி சரியாக வெளிப்படுத்தியிருக்கிறேன் என்கிற நம்பிக்கையை உங்கள் பதிவு மூலம் அடைந்தேன். அது அளித்த உற்சாகம் இன்னும் நீங்கியபாடில்லை.



இந்தப் பதிவில் நீங்கள் குறிப்பிட்டிருந்த விலாஸ் சாரங் அவர்களின் சிறுகதைத் தொகுப்பான ”The Women in Cages” பற்றி  முன்பும் எழுதியிருக்கிறீர்கள். ( http://www.sramakrishnan.com/?p=4071 ). அந்தத் தொகுப்பும் ”கூண்டுக்குள் பெண்கள்” என்ற பெயரில் தமிழில் நற்றிணை பதிப்பகத்தாரால் வெளிவந்திருக்கிறது. நண்பர் ஸ்ரீநிவாசன் அவர்கள் அதை மொழிபெயர்த்திருக்கிறார்.



2007 ம் ஆண்டில், ஆர்க்குட் வழியாக மட்டுமே  அறிமுகமாகியிருந்த  நண்பர்கள் முதன் முதலில் நேரில் சந்தித்த ஒரு கூட்டத்திற்கு எங்கள் அழைப்பிற்கிணங்க வந்து சிறப்பித்தீர்கள். விஜிபி தங்க கடற்கரையில் நடந்த அந்த கூட்டமும் அதில் நீங்கள் ஆறறிய உரையும் நன்கு நினைவிருக்கிறது. கூட்டமாக பறவைகளையோ, விலங்குகளையோ பார்க்கும் பொழுது உவகை கொள்ளும் மனிதர்கள், திநகரிலோ, பஸ் ஸ்டாண்டிலோ ஏன் கூட்டமாக மனிதர்களைக் காண்கையில் மட்டும்  மன அழுத்தம் கொள்கிறார்கள் என்று ஆரம்பித்து உரையாற்றினீர்கள். அந்த நேரத்தில் உங்கள் வலைதளம் உருவாகிக் கொண்டிருந்தது. அது குறித்த கருத்துக்களைக் கூறினீர்கள்.



நீங்கள் தவிர அன்று வந்திருந்த விருந்தினர்கள் பாமரன், சுபவீ, அறிவுமதி போலவே அங்கிருந்த நண்பர்களிலும் சமூக செயல்பாடுகள், அரசியல், மொழியாளுமை என பல விதப்பட்டவர்கள் உண்டு. இன்று பலரும் பல தளங்களில் செயல்பட்டு வருகிறார்கள்.  நான் இலக்கியத்திற்குள் வந்துவிட்டேன். என் முதல் மொழிபெயர்ப்பு நாவல் உங்களின் வாழ்த்துக்களைப் பெற்றதில் மிகுந்த மனநிறைவு கொள்கிறேன்



நன்றி



அன்புடன்,
R.காளிப்ரஸாத்,




அன்பு காளிபிரசாத்

உங்களின் தொடர் இலக்கிய செயல்பாடுகளை நான் அறிவேன்.  சிறந்த மொழியாக்கம் செய்திருக்கிறீர்கள். 

மனம் நிரம்பிய வாழ்த்துகள்

மிக்க அன்புடன்
எஸ். ராமகிருஷ்ணன்

Sunday, January 5, 2020

தம்மம் தந்தவன் மொழிபெயர்ப்பு நாவலுக்கு எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் வாழ்த்து

2019ன் சிறந்த புத்தகங்கள் – 7



விலாஸ் சாரங் எனக்குப் பிடித்த மராத்தி எழுத்தாளர். ஆங்கிலம் மற்றும் மராத்தி மொழிகளில் எழுதியவர். மும்பையில் ஆங்கிலப் பேராசிரியராக வேலை செய்தவர்.

இவரது சிறுகதைகள் The Women in Cages: Collected Stories  என்ற தொகுப்பாக வந்துள்ளது. அது குறித்து பத்து ஆண்டுகளுக்கு முன்பே கட்டுரை எழுதியிருக்கிறேன்.

விலாஸ் சாரங் எழுதிய The Dhamma Man என்ற நூலை தம்மம் தந்தவன் என்ற பெயரில் காளிப்ரஸாத் மொழியாக்கம் செய்திருக்கிறார்

நற்றிணை பதிப்பகம் வெளியிட்டுள்ளது

புத்தரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் இந்நூல்  ஒரு மகனாக, கணவனாக, தந்தையாகப் புத்தர் ஏற்படுத்திய விளைவுகளை முதன்மைப்படுத்துகிறது. புத்தர் எவ்வாறு. தம்ம நாயகனாக உருமாறுகிறார் என்பதை விவரிக்கிறது.

புத்தன் ஒரு அவதார புருஷர்  என்பதற்கு மாற்றாக, சுகதுக்கங்களை அறிந்த ஒரு மனிதன் எவ்வாறு ஞானியாகிறான் என்ற கோணத்தில் சாரங் விவரிப்பதே இதன் தனித்துவம்.

புத்தரின் வாழ்வை கவித்துவமான மொழியில்  சாரங் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

சிறந்த மொழியாக்கம் நூலினை தமிழ்ப் படைப்பு போல வாசிக்கச் செய்கிறது.

காளி ப்ரஸாத்திற்கு மனம் நிரம்பிய பாராட்டுகள்.