Thursday, January 9, 2020

பேட்டி

விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் தொடங்கி பத்தாண்டுகள் ஆகின்றன. இப்பத்தாண்டுகளில் இதில் வாசகர்களாகப் பங்கெடுத்தவர்கள் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களாக எழுந்திருக்கின்றனர். பலர் தாங்களே இலக்கிய அமைப்புக்களை நிறுவி தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்கள்.
இப்பத்தாண்டு நிறைவை ஒட்டி விஷ்ணுபுர இலக்கிய வட்ட நண்பர்கள் எழுதிய பத்து நூல்களின் வெளியீட்டுவிழா ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இதில் இந்த ஆண்டு தங்கள் முதல்நூலை வெளியிடும் நண்பர்கள் பத்துபேரின் நூல்களை அறிமுகம் செய்வது  நோக்கம். முதல் சிறுகதைத் தொகுதிகள், மொழியாக்க நூல்கள் இதில் உள்ளன.அதில் தம்மம் தந்தவன் நாவலும் ஒன்று. 

அதற்கான ஒரு  கேள்வி பதில் பதிவு. இது ஜெ. தளத்தில் வெளியானது




உங்களைப்பற்றி..(கல்விபணிகுடும்பம்)
எங்கள் சொந்த ஊர் வேளுக்குடி. நான் வளர்ந்தது / ஆரம்ப கல்வி  எல்லாம் மன்னார்குடியில்தான்.  பின் நாகப்பட்டினத்தில் மின்னியல் மற்றும் மின்னணுவியலில் டிப்ளமோ முடித்து சென்னைக்கு வேலைக்கு வந்தேன். முதலில் மின்னியல் வல்லுநராக சிறிது காலம் இருந்து  பின் கணிணித் துறைக்கு மாறி கணிணி தொழில்நுட்பத்துறையில் மேலாளராக இருக்கிறேன். 2009ல் திருமணமானது.  அப்பா, திரு.ரெங்கமணி அரசு ஊழியராக பணியாற்றினார். அவரும் அந்த வருடம் ஓய்வு பெற்றார். அம்மா, திருமதி.புஷ்பவல்லி,  வீட்டு நிர்வாகி. 2009ல் அவர்களும் மன்னையிலிருந்து சென்னைக்கு வந்தார்கள். மனைவி ஆர்த்தி. மகள் அத்விகா சாதனா, மகன் அஸ்வத் நாராயணன். இப்பொழுது சென்னை திருமுல்லைவாயிலில் வசிக்கிறோம்
இலக்கிய பரிச்சயம் எப்படி நிகழ்ந்ததுஆதர்சங்கள் யார்?
வீட்டில் அனைத்து வார இதழ் தொடர்களும் புத்தகமாக இருந்தன. அனைத்து வார இதழ்களும், பாக்கெட் நாவலும், காமிக்ஸ்களும் வாசிப்புச் சந்தா வழியாக வீட்டிற்கு வந்து விடும். படிப்படியாக கற்றதும் பெற்றதும் கதாவிலாசம் தொடர்கள் வழியாக இலக்கிய அறிமுகம் ஏற்பட்டது.  கேணி கூட்டங்கள் வாயிலாக ஆளுமைகளை இன்னும் அருகில் அறியும் வாய்ப்பும் கிடைத்தது.  ஆறாம் வகுப்பு விடுமுறையில் அர்த்தம் புரியாமலேயே தில்லானா மோகனாம்பாளை படித்து, அதைப் புரிந்து கொண்டதுபோல நண்பர்களுக்கு கதை சொல்லியிருக்கிறேன். பிற்காலத்தில் விஷ்ணுபுரம் படிக்கும் வரை அந்தப் பழக்கம் தொடர்ந்தது.
ஆதர்சங்கள் என்று கேட்டால் பலர் நினைவுக்கு வருகிறார்கள். சுவாரசியமான ஜனரஞ்சக நடைக்கு சுபா, சுஜாதா ஆகியோரும், அதே போன்று எழுத்து நடையிலும் தன் இமேஜ் பற்றி கவலை கொள்ளாது மிகவும் வெளிப்படையாக இருப்பதிலும் சாரு நிவேதிதா அவர்களும், கறாரான பார்வைக்கு ஞாநியும்,  நுட்பமான வர்ணனைக்காக அசோக மித்திரனும், பலமொழி மனிதர்களின் மேன்மையை / உன்னதங்களை அறிமுகப் படுத்தியதில் அ.முத்துலிங்கமும் நாஞ்சில்நாடனும் ஆதர்சங்களாக இருக்கின்றனர். ஆனால் எழுத்தோடு மட்டுமில்லாமல் மேடைப்பேச்சு / நேர்ப்பேச்சு அனைத்தின் வழியாகவும் ஜெயமோகன் அவர்களே இன்று என்னை வழிநடத்திக்கொண்டிருக்கிறார்.
தம்மம் தந்தவன்– மொழியாக்க அனுபவம் மற்றும் சவால்கள் என்ன?
எழுத்தாளர் விலாஸ் சாரங், அடிப்படையில் கவிஞர் மற்றும் சிறுகதையாசிரியர். ஆகவே அந்தக் கச்சிதம் அவரது நாவலிலும் வெளிப்படுகிறது. அவரது  நடையில் மேலும் என்னை ஆச்சரியப்படுத்தியது அவரது கதை சொல்லும் முறை. அது ஆசிரியர் குரலாக துவங்கும். திடீரென ஒரு பணியாள் வழியாக பயணிக்கும். சில நேரங்களில் சித்தார்த்தன் குரலாகவும் வெளிப்படும். மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் எழுதியிருந்த கெளதம புத்தர் வாழ்க்கை வரலாறு புத்தகம் ஏற்கனவே படித்திருந்ததால்  புத்தரின் வாழ்க்கை ஒரு கதையாக மனதில் பதிந்திருந்தது.
வேத கால நெறிகள்,உபநிடத காலம் அதைத்தொடர்ந்து பெளத்தத்தின் எழுச்சி என அனைத்தும் இறுதியில் நம்மால் விளக்கக்கூடிய அளவில் நாவலுக்கிடையே புகுத்துவது என்பதே விலாஸ் சாரங்கின் வெற்றி.  அதிர்ஷ்டவசமாக வெண்முரசு வாயிலாக இதுவும் எனக்கு அறிமுகமாகிவிட்டிருந்தது.  இதில் வரும் சிருஷ்டி கானம் உபநிடத வரிகள் போன்றவற்றை ஏற்கனவே ஜெயமோகன் அவர்களின் வலைதளத்தில் படித்தும் இருக்கிறேன். குறிப்பாக  சொல்வளர்காடு நாவலைக் குறிப்பிடவேண்டும்.
தம்மம் தந்தவன் நாவல்,  மேற்சொன்ன புத்தகங்களில் இருந்து மாறுபட்டு முற்றிலும் வேறு கோணத்தில் நகர்ந்தாலும் பெளத்தம் நிகழ்ந்த காலம் குறித்த அடிப்படைப் புரிதல்கள் இந்த இரு நாவல்களின் வழியாகவே ஏற்பட்டது
பெரிய சவால்களாக இருந்தது மொழிபெயர்ப்பிற்கான நேரம்தான். அதை எளிதான ஒன்றாக கணக்கிட்டு கைகளால் அதை ஒரு டைரியில் எழுதியதும் பின் தட்டச்சு செய்ததும் நேரம் எடுத்துக் கொண்டன. நேரடியாக தட்டச்சிட்டிருந்தால் நேரம் மிச்சமாகியிருக்கும்
விலாஸ் சாரங்கையும் இந்த நாவலையும் தேர்ந்தெடுத்தது எப்படி?
இந்த நாவலைத் தேர்ந்தெடுத்து அளித்தவர் நற்றிணை யுகன் அவர்கள் தான். அவர் அளித்த உற்சாகமும் இந்தப் பணியில் ஈடுபட முக்கியக் காரணமாக அமைந்தது
இந்த நூலுக்கான கவனம் எப்படியுள்ளது?
நண்பர்கள் செளந்தர் மற்றும் சிவகுமார் ஆகியோர் இந்த நாவல் குறித்து விமர்சனங்கள் எழுதினர். ஜெயமோகன் தளத்தில் நாவல் குறித்த அறிமுகமும் இந்த விமர்சனங்ளும் வெளிவந்தன. புதுவை வாசிப்பு மாரத்தனில் இந்த நாவலை வாசித்த பலர் இது குறித்த கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.
நற்றிணை பதிப்பகத்தாரின் முயற்சியால், நாளிதழ்கள் தொலைக்காட்சிகள் வாயிலாக நாவல் குறித்து நல்ல கவனம் கிட்டியது. தினமணி நாளிதழின் நூல் அரங்கம் பத்தியில் இந்த நாவல் குறித்த அறிமுகம் வந்தது.  கலைஞர் தொலைக்காட்சியின் புத்தகன் நிகழ்ச்சியிலும் இதை அறிமுகப்படுத்தி உரையாற்றினர். தமிழ் இந்து நாளிதழில் கவிஞர். ஷங்கர்ராமசுப்ரமணியன் அவர்கள் எழுதிய மதிப்புரையும் பரவலான கவனத்தைப் பெற்றுத் தந்தது.

சுட்டிகள்

தம்மமும் தமிழும்

சித்தார்த்தனும் தம்மமும்-சிவக்குமார் ஹரி

தம்மம் தந்தவன் 

முடியாத புத்தர் 

இந்த நூல் வழி நீங்கள் பெற்றதென்னஇந்த நூலின் சமகால முக்கியத்துவம் என்ன?
புத்தர் உபதேசித்தவை ஜென் கதைகளாகவும் புத்தரின் சொல் என்ற வகையில் ஓரிரு வரிகளாக தொகுக்கப்பட்டும் இன்றும் நாம் காணும் அலுவலக பதாகைகளிலோ நம் கைபேசியில் வரும் குறுஞ்செய்திகள் வடிவிலோ நம்மை வந்தடைந்துகொண்டுதான் இருக்கின்றன. இவ்வாறு எக்காலத்திற்கும் பொருத்தமான உபதேசங்களை அவர் அளித்துவிட்டுச் சென்றிருக்கிறார். உதாரணமாக, இதில் புத்தர் தான் உணவு உண்ட திருவோட்டைக் கழுவும் இடம் ஒன்று வருகிறது. திருவோடும் கழுவப் படுகிறது. நீரும் எஞ்சுவதில்லை.  வற்றா நதிகள் ஓடும் காலத்திலும் அவர் கையாண்ட தண்ணீர் சிக்கனம் அது. இன்றைக்கு அரசு மக்களிடம் அதைச் சொல்லிக் கொண்டிருக்கிறது.
சாப்பிடும்போது சாப்பிடு, வேலை செய்யும் போது வேலை செய் என்று தியானத்தை மிக எளிமையாக, அறிவுறுத்தும் புத்தர், மறுபுறம் தம்மத்தையே உனது ஒளிவிளக்காகக் கொள்! உனக்குள்ளே அடைக்கலமாகியிரு! தம்மத்தை உன் கரங்களினால் ஒரு ஒளிவிளக்காக இறுகப் பற்றிக்கொள். தம்மத்திற்குள் ஒரு அகதிபோல அடைக்கலம் புகுந்துவிடு. உன்னைத்தவிர வேறு யாரிடமும் அடைக்கலம் பெறாதிருப்பாயாக! என்று அதே எளிமையுடன் பெரும் சொற்களையும் உரைக்கிறார். இந்த நூல் புத்தரின் வாழ்க்கையின் அத்துணை அம்சங்களையும் மொத்தமாக உரைக்கிறது. இதிலிருந்து தியானமோ, தத்துவமோ தான் விரும்பும் திசை நோக்கி ஒருவர் செல்ல முடியும். நான் இதையடுத்து  அம்பேத்கர் எழுதிய புத்தரும் அவரது தம்மமும் வாசித்துக் கொண்டிருக்கிறேன்.
இந்த நூல் மனதளவில் எனக்கும் புத்தரின் பிடிவாத்தையும் நிதானத்தையும் கடத்தியது என்று நான் நம்பினேன். என் நண்பர்கள் அருணாசலத்திடமும் ராஜகோபாலிடமும் வேறு தருணங்களில் வேறு மாதிரியாக இதைச் சொன்னபோது அது ஒரு கற்பனைதான் என்றும் வாழ்வில் நெருக்கடியை சந்திக்காமல் இதைச் சொல்வது தவறு என்று சொல்லிவைத்தாற்போல் ஒரே போலச் சொன்னார்கள். நானும் இதைச் சோதித்துப் பார்க்குமளவு நெருக்கடி எதுவும் எனக்கு வந்துவிட வேண்டாம் என்றே வேண்டிக் கொள்கிறேன். இந்த நூலில் வழியாக நான் பெற்றது என்னவென்று கேட்டால், இந்த மொழிபெயர்ப்பு வாயிலாக இலக்கிய உலகில் ஒரு அடையாளம் பெற்றேன் என்பது தவிர வேறு எதையும் இந்தக் குறுகிய காலத்திற்குள் என்னால் சொல்ல முடியவில்லை. அப்படி எதையாவது சொன்னால் அதை புத்தருமே ஏற்றுக் கொள்ள மாட்டார்  :-)
அடுத்து என்ன?
சில சிறுகதைகள் எழுதியிருக்கிறேன். இன்னும் கொஞ்சம் எழுதி ஒரு தொகுப்பாக கொண்டுவரும் எண்ணம் இருக்கிறது. நாவல் ஒன்று எழுதத் துவங்கி நான்கு அத்தியாயங்களோடு நிற்கிறது. அதை மீண்டும் முதலிலிருந்து எழுத வேண்டும். இரண்டில் ஏதேனும் ஒன்று இந்த வருடத்தில்  நடக்கும் என்று நினைக்கிறேன்.

No comments:

Post a Comment