Friday, March 20, 2020

இந்தநாள் இப்படிப்போச்சு!!!

பழ.அதியமான் அவர்கள் எழுதிய வைக்கம் போராட்டம் என்கிற புத்தகத்தின் நூல் வெளியீட்டுவிழா உரைகளைக் கேட்க நேர்ந்தது இன்றைய அயற்சிகளில் ஒன்று. இதில் ஆ.இரா.வெங்கடாஜலபதியின் உரையைத்தான் முதலில் கேட்டேன். அன்றைய மொத்த உரைகளில் சிறந்த உரை என்று இதைக் கூறலாம். அதனாலேயே இந்த புத்தகம் இருபது ஆண்டுகால முயற்சி என்று அவர் சொல்லுவதை நம்புகிறேன். 

இருப்பினும் ஜனவரி 2010ல் ஜெ. தளத்தில் வெளிவந்த கட்டுரைதான் இதன் திருப்புமுனை  என்று சொல்லவேண்டும். வைக்கம் போராட்டம் பற்றிய கேள்விக்கு பதில் அறிக்கையில் பெரியாரின் பங்களிப்பை தமிழக பெரியாரிஸ்டுகளும்  திராவிட ஆட்சியாளர்களும் மிகைப்படுத்திவிட்டனர் என்றே புரிதல் தரும் கட்டுரை அது. அதில் 

//அதே சமயம் ஒரு முழுமறுப்பாளர் என்ற வகையில் ஈ.வே.ரா அவர்களின் ஆளுமையின் தீவிரத்தை நான் மதிக்கிறேன். அவரது ஆளுமையின் வீரியத்தால் அவர் ஒரு வரலாற்று சக்தியாக, கருத்தியல் தரப்பாக இருந்தார். அவரது பங்களிப்பை கறாராக மதிப்பிட்டுக் கொண்டே கூட நாம் தமிழக வரலாற்றை புரிந்துகொள்ள முடியும். வைக்கம் போராட்டத்தையும்.//

என்று பெரியார் குறித்த தன் அவதானிப்பை வைத்துவிட்டு முன் செல்லும் கட்டுரையில் காந்தி, நாராயணகுரு ஆலோசனையில் கேரளாவின் டி.கே.மாதவன் முன்னின்று எடுத்த போராட்டத்தை பெரியார் துவக்கவில்லை  நடத்தவில்லை முடிக்கவில்லை என்று வாதிடுகிறார். அதனாலேயே பெரியார் அதைத் துவக்கினார் ( launched ) என்று பாடபுத்தகங்களில் இருப்பது தவறு என்கிறார். அதன்பின் பத்து வருடங்கள் கழித்து வந்திருக்கும் இந்த புத்தகம் அதற்கான தரவுகளைக் கொண்டிருக்கின்றன என்று பேட்டியில் படித்திருந்தேன். நான் இப்போது அதை வாங்க எண்ணியிருந்ததால் அந்த ஆர்வத்தினூடே அதன் வெளியீட்டு விழா உரைகளைக் கேட்க நேர்ந்தது. அதில் பேசிய ஆ.இரா. வெங்கடாசலபதிக்கு அடுத்தபடியான சிறப்பான உரை என்பது கெளதமி அவர்களின் உரை. மெல்லிய சமகால அரசியல் நக்கலோடும் புத்தகத்தில் இருந்து படித்தவற்றையும் பற்றிக் கூறினார்.


பாமரன் அவர்கள் சிறந்த பேச்சாளர் இல்லை என்று முன்பே தெரியும். அவர் சிறந்த களச்செயல்பாட்டாளர். ஜாலியான நபர். எங்கள் ஆர்க்குட் குழுவில் பெண்பெயரில் நுழைந்து  எங்கள் குழுவின் மேன்மையை சான்றளித்தவர் :-) . நேரில் பேசும் நக்கல் நையாண்டி தொனியிலேயே மேடையிலும் பேசுவார். அவர் எப்படி பேசுவார் என்று எனக்குத் தெரியும் எனபதால் பெரிய எதிர்பார்ப்பு இல்லை. ஆனால் அதிர்ச்சி இருந்தது. தமிழக எழுத்தாளர்கள் ஒரு மாநில கட்சியின் உறுப்பினராக இருக்கும் மளிகை கடைகாரர்களைவிட பலசாலிகள் என்று அவர் இன்னும் நினைக்கிறார். அப்பாவி பொதுஜனத்தைப் போயி என்று அவர் பேசும்போது சிரிப்பு வந்துவிட்டது. திராவிட இயக்க  மேடைப்பேச்சுகளில் சத்யராஜ்  உருவாக்கும் ஒருவித சலிப்பை இவரும் உருவாக்குகிறார். ஆனாலும்  பத்தாண்டுகளாக ஒருவர் அப்படியே இருப்பதுதான் எவ்வளவு பெரிய வரம்..




டாக்டர். ஷாலினி இந்தப் புத்தகத்தை படித்திருக்கிறாரா என்றே தெரியவில்லை. அது குறித்த பேட்டிகளைப் படித்து அதையே பேசியிருக்கிறார் எனத் தெரிகிறது. அவர் பேசும் போது அம்பேத்கர் அவர்கள் இந்து என்ற சொல்லை உச்சரித்து பெரும் தவறு செய்துவிட்டார் என்றார். என்ன சார் எனக்கு தெரிஞ்சது உங்களுக்குத் தெரியலையே சார் . மேலும் ஒரு சம்பவம் பற்றிக் கூறுகிறார். அவரிடம் ஒரு பெண்மனி வந்து தன் மகன் சந்தியாவந்தனம் செய்ய மாட்டேங்கிறான். அது ஏன் பண்ணனும்னு கேட்கிறான் என்று புகார் சொன்ன கதையைச் சொன்னார். ஏன் பண்ணனும்னு சொல்லுங்க என்று இவர் அந்த பெண்ணைக் கேட்டிருக்கிறார். பின் உங்களுக்கேத் தெரியலைன்னா எனக்கு எப்படித் தெரியும் என்று ஒரு கவுன்ட்டரும் கொடுத்தருக்கிறார். உண்மையில் ஆச்சரியமாக இருக்கிறது.. ஆணுக்கும் ஆணுக்கும் பிறந்த ஐயப்பன் ஒரு கடவுளா என்று அறியாத வயதில் பாமரன் கேட்பது போல் மனோத்த்துவம் படித்த டாக்டரும் கேட்கிறார். அப்புறம் அந்தக் கல்வியால் என்ன பயன். சாதாரண கவுண்ட்டர் தருவதற்கு எஸ்வி சேகரே போதுமே.. இவர் எதற்கு? நம் மரபில் பெரியாருக்கு முன்தொடர்ச்சியாக எவ்வளவு பேர் இருக்கிறார்கள். பக்தர்களின் குருட்டு நம்பிக்கையாவது புரிகிறது. ஆனால் பகுத்தறிவாளர்களின் நம்பிக்கையே ஆச்சரியப்படுத்துகிறது. மேலும் வைக்கம் ல் இருந்த்து சிவன் கோயில் என்றும் அனந்தபத்மநாபசுவாமி கோயில் இல்லை என்றும் அவருக்கு புரிந்திருந்ததா என்ற ஐயமும் உண்டாயிற்று. ராமராஜ்யம் கொரானா பற்றியெல்லாம் பேசிவிட்டு அமர்ந்தார்.

அதன்பின் திரு.நாகநாதன் அவர்கள் பற்றி தன் பேச்ணில் பாமரன் சொன்னதையே மீண்டும்  தன்னைப்பற்றி அவர் பேச்சில் அவரே சொல்லிக்கொண்டார். பெரியாரை சிறுவயதில்  பார்த்த அனுபவம் எல்லாம் சிறப்பாக இருந்தது.  திரு. செந்தமிழ்செல்வன் அவர்களும் சுருக்கமாகப் பேசினார். இவற்றில் எல்லாம் பெரியார் பற்றி ஏற்கனவே அறிந்த திருநீறு சம்பவம் உள்ளிட்டவைகளே நிரம்பியிருந்தன.

ஒட்டுமொத்தமாக இந்தப் புத்தகத்தை வாங்கும் எண்ணத்தை வெங்கடாசலபதியும் கெளதமியும் உருவாக்கினர். அவர்கள் பேச்சை முதலில் கேட்டது நல்லதாய்ப் போனது. பாமரனோ ஷாலினியோ பேசியதைக் கேட்டிருந்தால் முறையே   எஸ்விசேகர் எச்.ராஜா பேச்சைக் கேட்டால் அதன்பின் எப்படி ராமகிருஷ்ணரின் அமுதமொழிகளையே கூட வாசிக்கத் தோன்றாதோ அப்படி ஆகியிருக்கும். இவர்களை எல்லாம்  ஒரு தராசில் வைத்தால் எந்தப் பக்கமும் ஏறாது இறங்காது. புத்தகத்துக்கான அறிமுகம் என்பது அதை வாசிக்க ஊக்குவிக்க வேண்டும். அதில் உள்ளதை அப்படியே சொல்லிவிடுவதோ அதில் இல்லாத ஒன்றைப் பேசி வைப்பதோ அந்த எழுத்தாளருக்கும் அதன் கட்டமைப்புக்கும் எந்தவித நியாயமும் செய்துவிடாது

பெரியாரைப் பற்றிய புத்தக வெளியீடுகளில் வரும் இத்தகைய பேச்சாளர்கள் அந்தப் புத்தகத்தைப் படிக்க இந்தப்  உதவுகிறார்களா என்ன? நான் இதைப் படிக்கல இனிமதான் படிக்கபோறேன்னா இப்ப என்ன கெட்டுப்  போனது? அதற்குமாறாக பெரியார் பற்றி இவர்கள கண்டது கேட்டது அத்தனையையும் எடுத்துக் குழப்பி எதை எதையோ பேசி பெரியார் என்பவர் இப்படி வெறும் கிண்டலும் காழ்ப்புமே என்று சொல்ல வைத்துவிடுவார்கள். ஒவ்வொரு சித்தாந்த்த்திலும்  இப்படி ஒரு நாலைந்து பேர் சுற்றிக்கொண்டுதான் இருக்கிறார்கள். நாட்டுவைத்தியம் யோகாவிலும் கூட.. என்றாலும் நான் அதிகம் பார்ப்பதாலோ என்னவோ, யூட்யூப் இந்த உரைகளையே எனக்கும் சிபாரிசு செய்து தொலைக்கும். இத்தகையோர்  தான் போற்றும் தலைவரை ஆதரித்தால் போதும் வாசிக்க வேண்டாம் என்று நினைககிறார்கள் போலிருக்கிறது. அவ்வாறு எண்ணவைக்கும் அளவிற்கே பேசிவைப்பார்கள். ஒருவேளை அதுதான் நோக்கமாகவும் இருக்கலாம்.


  ஒரு புதிய தீவிர தேடல் கொண்ட வாசகன் இந்த வீடியோவைக் காண நேர்ந்தால் இவர்கள்  ஏன் புளிச்சமாவு என்று அடிக்கடி சொல்றாங்க என்ன அது என்று கேட்டு அவன் வந்து நிற்கும் இடம் ஜெ.தளமாகத்தான் இருக்கும்.  அதன்பின் அவருக்கு கடிதம் எழுதிக் கொண்டும் இப்படி பன்னிரெண்டு மணிவரை விழித்துக்கொண்டு அன்றைய போஸ்ட்டுக்காக காத்துக்கொண்டும் இருப்பான். அந்தந்த ஆண்டுகளில் அந்தந்த  சர்ச்சைக்கான கன்டெண்ட் மாறுமே தவிர காட்சி அமைப்பு மாறியதில்லை. :-) அதுவே இலக்கியத்தின் வெற்றி

முடிவாக, இந்த உரைகளைக் கேட்டதும் பெரும் சோர்வே எஞ்சியது. வரும் வழியில் வண்டியைத் திருப்பி திருநீர்மலை வந்து கோயிலில் நின்றிருந்தேன். தாயார் சந்நிதியில் எப்பொழுதும் சொல்லும் யாதேவி சர்வ பூதேஷு சொல்லும்போது ஜெ. சிறுகதை  ஞாபகம் வந்தது. அப்போது நீண்டகால நண்பரான அண்ணன்  கை.அறிவழகன் அவர்கள் செய்தி அனுப்பியிருந்தார். தினம் தினம் வாடசப்பில் செய்திகள் உரைகள் என அளித்தபடியும் அகதிகள் முகாம் முற்போக்கு கூட்டங்கள் இலக்கியம் என இயங்கிக் கொண்டிருப்பவர். பெங்களூருவில் இருக்கும் ஒரு அனாதை குழந்தைகள் ஆசிரமத்திற்கு இந்த கொரானா அச்சுறுத்தலால் பெரும் இக்கட்டு நேர்ந்திருக்கிறது. அவர்களிடம் பதினைந்து நாட்களுக்கான உணவுப் பொருட்கள் சேமிப்பு இல்லை. இவர் அதற்கான சேகரிப்பில் இருக்கிறார். நானும் சண்முகம் அண்ணனும் சிறிது பங்களிப்பை அனுப்பினோம். நன்றி தம்பி என்று பதில் வந்தது. 

இவ்வாறு தம்பி என்று அழைத்து உரையாடும் போது ஒரு நெகிழ்ச்சியும் நெருக்கமும்  உண்டாகிவிடுகிறது. சற்றே பின் சென்று பார்த்தால் அது அறிஞர்.அண்ணாவின் மொழி. அறிவு அண்ணனும் திராவிட சித்தாந்தங்களால் ஈர்க்கப் பட்டவர். அவர் வாட்சப்பில் அனுப்பும் உரைகளிலும் அந்த சாயல் இருக்கும். சாதாரண மக்களிடம் சென்றடைந்த திராவிட இயக்கத்தின் வெற்றி இந்த மொழியில் வந்தவை. அவர் குரலைக் கேட்கும் போது மன்னார்குடியிலும் திருவாரூரிலும் கல்லூரி காலம் வரை பழகியிருந்த திராவிட இயக்க நண்பர்களும் அந்த சித்தாந்தம் கொண்ட பள்ளி ஆசிரியர்களும் ஞாபகம் வந்து விடுவார்கள்.  இது அவர் வருவித்துக்கொண்ட மொழிநடை அல்ல. அவரைச் செதுக்கிய அந்த சித்தாந்தம் ஊடுருவிய மொழி.  இவரைப் போன்ற உண்மையான திராவிட இயக்கத் தொண்டர்களிடம் இந்த மொழி அப்படியே தங்கியிருக்கிறது. பொதுவாகவே மக்களுக்குத் தன்னம்பிக்கையை அளித்த மொழிநடை இந்த திராவிட மேடை பேச்சுகள்.   யோசிக்கையில் இங்கு வரும்போது எனக்கு இருந்த   குழப்பத்திற்கு கிடைத்த தெளிவுபோல இது இருந்தது. 

அவர் அனுப்பிய மெசேஜுக்கு ஒரு நெகிழ்ச்சி எமோடிகான் போட்டு நிமர்ந்து பார்த்தபோது சந்நியிலிருந்த தாயார் என்னைப் பார்த்து சிரிப்பது போல் தோன்றியது என்று சொல்லி இந்த பதிவை முடிக்கலாம்தான். ஆனால் அப்படியேதும் நடக்கவில்லை. ஆனால் மனம் தெளிவாக இருந்தது மட்டும் உண்மை

No comments:

Post a Comment