Saturday, June 6, 2020

எழுத்தாளர் ஜெயமோகன் -தனிமையின் புனைவுக் களியாட்டு- 1) குருவி


பீடிகை

ஒரு எழுத்தாளரின் சிறுகதை  தொகுப்புக்கு சாகித்ய அகாடமி விருது தர வேண்டுமென்றால் அந்த தொகுப்பில் உள்ள கதைகளில் மூன்றில் இருபங்கு கதைகள் தொகுப்பு வெளியாவதற்கு மூன்று ஆண்டுகளுக்குள் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்பது ஒரு விதி. எழுத்தாளர் ஆ.மாதவன் அவர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட நூறு கதைகள் அடங்கிய மொத்த தொகுப்பிற்கு அந்த காரணம் காட்டியே அவருக்கு விருது மறுக்கப்படுகிறது. அதன்பின் அந்த விருது திரைத்துறை பிரபலத்துக்கு செல்கிறது என்பது நல்லதொரு இலக்கிய வம்பு. அது அல்ல இங்கு சொல்ல வருவது. ஆ.மாதவன் சிறுகதை தொகுப்பின் முன்னுரையில் எழுத்தாளர் நாஞ்சில்நாடன் இவ்வாறு குறிப்பிடுகிறார். ”விரல் நீட்டினால் சூரியனே நின்று போகும் என்றும், கை காட்டினால் கடல் பிளந்து நடந்து போக வழிவிடும் என்றும் புராணங்கள் உண்டு. அதையொத்த ஆற்றல் உடையவருக்கே மூன்று ஆண்டுகளில் 66 கதைகள் சாத்தியம்.  அவர் அவ்வாறு எழுதி நான்காண்டுகள் கூட ஆகவில்லை. அந்த ஆற்றல் உடையவர் தன்னை வெளிக்காட்டிக் கொண்டார். அதற்கு சூரியன் நிற்பது கடல் பிளப்பது என்று பெரிதாக எதுவும் தேவைப்படவில்லை. ஆங்காங்கு காவலர்கள் நின்று கொண்டு வாக்கிங் போகிறவரை திருப்பி  அனுப்ப வேண்டியிருந்தது. விமானம் கார் ரயில் பயணங்களை மத்திய மாநில அரசுகள் நிறுத்தி வைக்க வேண்டியிருந்தது. ஒரு நுண்ணுயிரி உருவாகி வர வேண்டியிருந்தது. உலகத் தலைவர்கள் அடித்துக் கொள்ள வேண்டியிருந்தது. மக்கள் திகைத்து நிற்க வேண்டியிருந்தது.



இலக்கிய வம்புகள்தான் வேண்டாமே ஒழிய பெருமிதங்கள் அல்ல. எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்கள் பெருமிதம் கொள்ளும் விஷயங்களில் ஒன்று அவர் தன் இளவலாக நினைக்கும் எழுத்தாளர் ஜெயமோகனின் எழுத்தாளுமை. அது அவரது பேச்சில் கேணி கூட்டத்திலும் ஊட்டி காவியமுகாம்களிலும்  வெளிப்பட்டன. அவருடனான நேர்ப்பேச்சிலும் நன்றாக வெளிப்படும்.   தன் சொல் பலித்தது அவருக்கும் மகிழ்ச்சி அளித்திருக்கும்.

மறுபுறம் பன்னிரெண்டு மணி வரை விழித்திருந்து வெண்முரசு படித்துவிட்டு உறங்கப் போகும் வாசகர்கள் இன்னும் ஒரு மணிநேரம் கூடுதலாய் விழித்திருக்க வேண்டியிருந்தது. அவர்களுக்கு கைக்கெட்டும் தூரத்திலேயே அலுவலகம், இல்லம், அரசு,  சமூகவலைதளம், கழிவிரக்கம், உற்சாகம், மலர்ச்சி, வேதனை, தெய்வம், பேய், வைரஸ் எல்லாம் இருந்தன. கூடவே இலக்கியமும் இருந்தது. ஒருபுறம் துவாரகைக்கும் மறுபுறம் வேலுப்பிள்ளைக்கும் தனித்தனியாக கலங்குவதா அல்லது சேர்த்தே கலங்கலாமா என்று குழப்பமும் இருந்தது. தொலைபேசிக் கம்பியின் மெல்லிய அதிர்வில் மசாஜ் எடுக்கும் மலைப்பாம்பையும் பெரும் மடாலயம் கட்டி அதைன் சிறு துவாரத்துள் சுருக்கிக் கொள்ளும் பிட்சுவையும் ஒரு சேர உணர முடிந்தது

இந்தக் கதைகளைப் பற்றிய என் கருத்துகளை இங்கு எழுத உத்தேசித்தேன்.  எதையும் செய்து முடிக்க அடிப்படைத் தேவை என்பது அதைத் துவங்குவதுதான் என்கிற ஞானம் தாமதமாகவே எட்டியதால் இன்றுமுதல் துவங்குகிறேன். வரிசைக் கிரமமாக இல்லாமல் மனதில் தோன்றும் சிறுகதைகளைப் பற்றி எழுதிவைக்க எண்ணம். இந்தக் கதைகளில் இத்தனையையும் படித்தபின் குருவி கதைதான் இப்பொழுது  மனதில் முதலில் எழுந்து வருகிறது. 


நாராயண பிள்ளை, மாதவன் பிள்ளை உள்ளிட்ட சராசரி ஆண்பிள்ளைகள், பெண்பிள்ளைகள் அனைவரும் வேலை பார்க்கும் அரசு அலுவகங்களில் ஒருவன் மட்டும் வேறொருவனாக இருக்கிறான். அவன்தான் மாடன் பிள்ளை. 



அவன் ஒரு ஆர்ட்டிஸ்ட்.  சராசரிக்கள் மத்தியில் இருக்கும் அர்ட்டிஸ்ட்.  ஆனால் அவனது கலையானது  உடனிருப்பவர்கள் புரிந்து கொள்ளக் கூடிய நடனம், வாய்ப்பாட்டு போன்ற கலைகள் அல்ல. டெலிஃபோன் கேபிள்களை ஒழுங்காக பொருத்தும் கலை. அதன் அழகியலும் நேர்த்தியும் அதன் மூலம் அவன் அடையும் ஒன்றும் அவனுக்கு மட்டுமே தெரியும்.  வேறு யாருக்கும் தெரியாது. ஆகவே அவனையும் சராசரி மனிதனாக இரு என்று சுற்றியுள்ள உலகம் தலையில் குட்டி சொல்லியபடியே இருக்கிறது. அனால் அவன் தான் ஒரு பிரம்மன் என்று உணர்கிறான். அதை சொல்லவும் செய்கிறான். யாரிடம்? அவன் அம்மாவிடம், அப்பாவிடம்  டி.ஈ யிடம், என அனைவரிடமும். பதிலுக்கு அவர்கள் அவனிடம் ஒன்றே ஒன்று சொல்கிறார்கள். ”மனுசனாட்டு வாளு!’

அவனது தேவை அலுவலகத்துக்கு ஏற்படும் தருணம் ஒன்று வருகிறது. அன்று அவனை அழைத்து வரவேண்டி கிளம்பிச் செல்லும் கதைசொல்லியின் பார்வையில் விரிகிறது கதை. அந்த வேலை நடக்கனும்னா டிஈ தன்னிடம் அனைவர் முன்னும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவன் சலம்ப, அதற்கு ஒரு சாமர்த்தியமான வழியை ஏற்பாடு செய்கிறார் கதைசொல்லி. அந்த நேரத்தில் யாரும் எதிர்பார்க்காமல் யதார்த்தமாக அவன் கையில் ஒரு தூக்கணாங்குருவி கூடு கிடைக்கிறது. அவன் முன்பு வெட்டிப்போட்ட வேண்டாம் என்று கழித்துக் கட்டிய ஒயர்களை ஒன்றாக்கி அந்தச் சிறிய குருவி கட்டிய கூடு. 

 ஞானிகள் முயன்று அலைந்து திரிந்து அடைந்த ஒன்று அவனுக்கு அவன் பணியிடத்தை தேடி வந்து தன்னைக் காட்டிச் செல்கிறது. ”செத்து சாமிகிட்டப் போயி நீயும் நானும் ஒண்ணு இல்ல. நீ மொத்த வானத்தையும் வச்சிக்கிட்டு இதைப் படைக்கிற. நான் ஒத்தக்குச்சிய ( சால்டிரிங் ராட்) கையில் வச்சு இதை படைச்சவன். நான் உன்னை விட மேல்டா.. நீ என் செண்டைக்கால் மயிருக்கு சமம்டா என்று சொல்லுவேன்”  என அத்தனை நேரம் கொக்கெரித்தவன், அந்த சிறிய குருவி முன்பு மண்டியிடுகிறான். 


இந்த சிறுகதை நான் யார் என்று இரு கட்டங்களாக விரிகிறது. நான் யாரு தெரியுமா என்று எழும் அகங்காரம் முதற்கட்டம்.  செய்யும் வேலையில் ஒருமை கூடி வருவது தனக்கு அபூர்வமாக வாய்த்த ஒன்று என்று அவனுக்குத் தெரியும். வேலை நேரத்தில் கண்ணும் கையும் மனமும் மூளையும் கொள்ளும் ஒருமை. அவனும் வேலையும் ஒன்றாய் நிற்கும் தருணம். அவன் ஆற்றியது என்ன என்பது அவன்  வேலையை முடித்தபின்தான் அவனுக்கே தெரியவரும் . அந்த முதற்கட்ட அகங்காரம் அதனால் விளைவது.   நான் யாரு என்று தெரிந்தபின் எழும் ஞானமும் பணிவும் கண்ணீரும் இரண்டாம் கட்டம். 


ஏற்கனவே சராசரி மனிதர்களிடையே கலைஞனாய் இருந்தவனுக்குத் தன் உயரம் தெரியும். அதனால்  டி.ஈ தன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கர்வம் மேலிட சொல்கிறான். அதன்பின் இன்று அவன் அடைந்த ஒன்று அடுத்த கட்ட தரிசனம். அதில் அவன் இன்னும் மேலே உயர்கிறான். இனி அவனுக்கு டி.ஈ யின் மன்னிப்புமே ஒரு பொருட்டு இல்லை. அவன் அடைந்த உயரம் அந்த கதை சொல்லிக்கு புரிந்ததா இல்லையா என்று தெரியவில்லை. ஆனால் தன் வேலை முடிந்த  ஆசுவாசமடைந்தவனாய் அவன் சொல்கிறான்.. ‘ விடுல.. நீயும் குருவிதான்..”

அதைக் கேட்டு அந்த மாடன்பிள்ளை புன்னகைக்கிறான்

9 comments:

  1. ஜெ தனிமையின் புனைவுக் களியாட்டாக எழுதிய கதைகள் ஒவ்வொன்றைப் பற்றியும் மிக விரிவாக பேசலாம். வாசகர்கள் ஒவ்வொருவருக்கும் மிகப் பெரிய விருந்தாக அமைந்தன இவை. அதிலும் குறிப்பாக இந்த கொரானா கால ஊரடங்கில், வீடு, அலுவலகம், தனக்கான நேரம் என அனைத்தின் கோடுகளும் கலைந்து எப்போது வேண்டுமானாலும் எதையும் செய்து கொண்டிருந்த இக்காலாத்தில், வெறும் வேலைகளின் குவியலாக மட்டும் இருந்து கொண்டிருந்த சலிப்பூட்டும் வாழ்வில் மிகப் பெரிய ஆசுவாசமாக வந்தன இக்கதைகள்.

    வெண்முரசு வந்து கொண்டிருக்கிறதே, அது இந்த சலிப்பை நீக்கவில்லையா என கேட்பதும் தெரிகிறது. அது வேறு. வெண்முரசு அதன் இறுதியை நெருங்கிக் கொண்டிருக்கிறது. மேலும் அது தனது வாசிப்பு அனுபவத்தை முறைப்படுத்தி விட்டிருக்கிறது. இமைக்கணம் வரையிலான அதன் போக்கு விண்விட்டிறங்கிய ஆகாயகங்கையின் பெருக்கு... வாசகனை மூவிழி அண்ணலாக மாற்றிய ஆக்கங்கள் அவை... அதன் பிறகு அவள் சமவெளியில் விரிந்தாள். இன்று வரும் வெண்முரசு அழிமுகம் நோக்கிய அவள் பரவல்.... வாசகனும் சாவகாசமாக ஆழியுறைவோனாக அக்கடா என சாய்ந்து ஓய்ந்து அனுபவித்துக் கொள்கிறான்.

    கிட்டத்தட்ட ஏழு வருடங்கள்... வாழ்வின் ஒவ்வொரு நாளையும் புதிதாக்கின அதன் அத்தியாயங்கள். வெண்முரசில் வாசிப்பைத் துவக்கிய என்னைப் போன்ற வாசகர்களுக்கும் சரி, அதை இத்தனை வருடங்கள் தொடர்ச்சியாக, அயறாமல் எழுதிக் கொண்டிருக்கும் ஜெ க்கும் சரி, முன்னே இருந்த சவால் ஒன்று தான்... அது சாதாரணமானதல்ல...

    வெளியேறும் வழி... சுவாமி விவேகானந்தரின் ஒரு கூற்று உண்டு, ‘எத்தனை இனிதான தடையாக இருந்தாலும், உடைத்து வெளியேறுங்கள்.’ எப்படி வெளிவருவது என ஒரு பக்கம் மனம் கேட்கத் துவங்கியது. ஒரே வழி தான்... வெண்முரசில் எங்களை உள்ளே இழுத்தது அறிதலின் இன்பம்... தேடலின் கிளர்ச்சி. அதை மேலும் வளர்க்கும் அடுத்த ஒன்றினுள் நுழைவதே இதில் இருந்து வெளிவரும் வழி. அப்படி இருக்கையில் தான் இயற்கையே கொண்டு வந்து சேர்த்தது போன்றிருந்தது இக்கதைகள்.

    பலவகைக் கதைகள் இருப்பதாகத் தெரியும். ஜெ அவ்வளவாகத் தொட்டுப் பார்க்காத வளரிளம்பருவ காதல், களவு (பொருள், இதயம், காமம் என அனைத்தும் இணைந்த பாக்கேஜ்), இதுவரையும் எழுதாத அவரது பணியிடத்து நிகழ்வுகள், நாஞ்சில் நாடு, வேணாடு துவங்கி கொல்லம் வரை விரிந்திருந்த திருவிதாங்கூரின் வரலாறு, அவரது இளைமை, முக்கியமாக அவரது தந்தை, அவரது குரு, குருகுலம், அவருக்குப் பிடித்த காடு, யானை என மிக விரிவான, பல தளங்களில் சென்றன இக்கதைகள்.

    ஆனால் ஜெ என்னும் எழுத்தாளரைத் தொடர்ந்து வாசிக்கும் ஒவ்வொரு வாசகருக்கும், அவருடனான ஒரு அந்தரங்க உரையாடலில் இருக்கும் ஒவ்வொரு வாசகருக்கும் இக்கதைகளின் தேடல் மையம் இயல்பாகவே எழுந்து வந்திருக்கும். அனைத்தும் சென்று சேர்வது ஒன்றில் தான்... மெய்யறிதல் எனச் சொல்லலாம்... பெரிதினும் பெரிதான ஒன்றில் தன்னைக் கரைத்துக் கொள்வது எனவும் சொல்லலாம். ஒன்றைச் சென்று சேரும் பல பாதைகளையும் கண்டடைந்து சென்று பார்த்தல் என்றும் சொல்லலாம்.

    குருவி – ஒரு வகையில் அசோகமித்ரனின் ‘புலிக்கலைஞனை’ ஒத்த படைப்பு. புலிக்கலைஞன், போடும் வேசம் புலியாகவே இருந்தாலும், உள்ளுக்குள் யதார்த்தவாதியான அசோகமித்ரன் தான். ‘நம்முளது வேறங்க... நிஜப் புலிங்க’, என்பதைக் கூட தீனமாகத் தான் சொல்ல முடிகிறது அவனால். மாடன்பிள்ளை தன் கலையை அறிந்தவன். எனவே டிஈயையே மன்னிப்புக் கோரச் சொல்கிறவன். ஆனால் குருவி புலியை முந்தும் இடம் ஒன்று... அது தன்னை வானின் ஒரு அங்கமாக உணரும் இடம். அந்தப் பெருவிரிவின் முன் தன் இடம் உணர்ந்து, தன் கலை மட்டுமே இங்கு நிரந்தரம் என அறிந்து அமையும் இடம். அதைத் தொட்டுவிடுவதால் தான் இக்கதை மிக முக்கியமான ஒன்றாக மாறுகிறது. இதன் தொடர்ச்சியாக அக்கூட்டை எடுத்துக் கொண்டு ஊட்டிக்குச் செல்லும் ஒரு ஆய்வாளனின் கதையும் முக்கியமானது. இரண்டையும் இணைத்து வாசிக்கும் போதே இக்கதையின் ஆழமும் விரிவும் துலங்கும்.

    ReplyDelete
  2. அருமை அருணாசலம். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    //ஜெ தனிமையின் புனைவுக் களியாட்டாக எழுதிய கதைகள் ஒவ்வொன்றைப் பற்றியும் மிக விரிவாக பேசலாம்.//

    அனைத்தையும் எடுத்து எழுத வேண்டும் என்பதே ஆவல். நடக்கவேண்டும் _/\_

    ReplyDelete
  3. திரு காளி பிரசாத் எனக்கும் அந்தக் கதைகளிலே மிகவும் பிடித்தது குருவிதான். நானும் அதை புலிக்கலைஞனுக்கு அடுத்த பரிமாணமாக கருதுகிறேன். அன்புடன் ராமகிருஷ்ணன் www.agnikuyil.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்..

      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete
  4. பரம்பொருளே கலை மூலம் கலைஞன் மூலம் தன்னைத்தான் மீண்டும் மீண்டும் சிருக்ஷ்டித்துக்கொள்ளுகிறது !

    ReplyDelete
  5. அருமையான முத்தாய்ப்பு. ஜெயமோகனின் புனைவுக் களியாட்டக் கதைகளில், இதுதான் எனக்குப் பிடித்தது. என்று ஒவ்வொரு நாளும் ஒன்று சொல்லுவேன். குருவி-யை அதிகமாக சொல்லும் வாய்ப்பு உண்டு. மற்ற கதைகளின் பால் உங்களின் புரிதலையும், அறிதலையும் அறிய மிகவும் ஆவலாக உள்ளேன்.
    வாழ்த்துக்கள் !

    ஆஸ்டின் சௌந்தர்

    ReplyDelete
    Replies
    1. அடுத்த பதிவு இறைவன் கதை குறித்து சார்...

      http://kaliprasadh.blogspot.com/2020/06/2.html?m=1

      Delete
  6. இந்த கதை வரிசையில் குருவி முக்கியமான கதை என்று பலர் கருதுகின்றனர், இதை ஒத்த கதை இறைவன் மாணிக்க ஆசாரியும் இதில் சேர்ந்து கொள்ளலாம், குருவி லௌகீதத்தை தன் ஆனவத்தால் உரசி காட்டுகிறது பலர் மனதில் இருக்கும் கேள்விகளை கேட்டு பதில் அளிக்கிறது, இறைவன் கொஞ்சம் மென்மையான கலைஞனை கட்டுகிறது

    ReplyDelete
    Replies
    1. ஆமாம். என் அடுத்த பதிவும் அதைக்குறித்தே அமைந்துள்ளது

      http://kaliprasadh.blogspot.com/2020/06/2.html?m=1

      Delete