Tuesday, July 14, 2020

முரசும் சொல்லும் - அ) கதையோட்டமும் கதாபாத்திரங்களும்



ஆம்.  வெண்முரசு நிறைவடைந்து விட்டது!


அதன் முதல் அத்தியாயம் படித்தது, பின் விட்டு விட்டு அதைப் பின் தொடர்ந்தது, ஒரு கட்டத்தில் அது உள்ளே இழுத்துக் கொண்டே சென்றது என ஒவ்வொன்றாக நினைவில் வருகிறது. அவ்வப்போது வாசிக்கும் தளமாக இருந்தாலும் 2010 முதல் தினம் பார்க்கும் தளமாக ஜெ தளம் மாறியிருந்தது.  வெண்முரசுக்கு முன்னதாகவே உலோகம் இரவு அனல்காற்று ஈராறு கால் கொண்டெழும்புரவி ஆகிய நாவல்கள் இப்படி தினத்தொடராக வெளிவந்தன.  அறம் சிறுகதைகளும் அப்படி வந்தன. அவற்றை சேர்த்து வைத்து படித்ததே என் வழக்கமாக இருந்தது. அவ்வாறு வெண்முரசையும் நான் தீவிரமாக வாசிக்க ஆரம்பித்த போது அவர் மழைப்பாடல் வந்திருந்தார். நான் அந்நேரம் சென்னையில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் கனடா நாட்டு நேரப்படி வேலை செய்து கொண்டிருந்தேன். அந்த நள்ளிரவு பன்னிரெண்டு மணி என்பது மாலை டீ பிரேக் நேரம். அப்படிப் படிப்பதுதான் என் வழக்கம்.  அலுவலகத்தில் கணினி பாதுகாப்பு விதிமுறைகள்படி வலைதளங்கள் சில அத்தியாவசிய தளங்கள் தவிர மற்றவை  தடை செய்யப்பட்டன.  ஜெ . தளம் அவ்வாறு தடை செய்யப் பட்டது. 2014 ல் இந்தளவு ஸ்மார்ட் போனும் வந்துவிடவில்லை. டேட்டாவும் இவ்வளவு சல்லிசாக கிடைப்பதில்லை. ஆண்டிராய்டு என்ற வார்த்தை பரவலாகிக்கொண்டிருந்த நேரம். இதற்காகஐந்து அங்குல மோட்டோ 5  வாங்கியதும் முதன்முதலில் ஜெயமோகன் டாட் இன் திறக்கிறதா என்று பார்த்து சிரித்துக் கொண்டது ஒரு நகைச்சுவை தருணம்.


வண்ணக்கடல் வந்தபோது அதன் முதல் அத்தியாயம் படித்து வயிறு நோக சிரித்தேன்இளநாகன் கவிதை என்னை விலாநோகச் செய்தது என்றெல்லாம் கடிதங்கள் வரத்துவங்கியிருந்தன. நானும் படித்து பார்த்து இதுல சிரிக்க என்ன இருக்கு என்று யோசித்திருந்தேன். அதன்பின் நீலம் வந்தது. அதற்கு வந்த கடிதங்கள் அதன் தத்துவார்த்த விளக்கங்கள் என்று அமளி துமளி நடந்தாலும் நான் யார் வம்புக்கும் போகாமல் நீலம் அத்தியாயங்களில் சண்முகவேல் ஓவியத்தை ரசித்து விட்டு மூடி வைத்து விடுவதும் வழக்கமாக இருந்தது. அவ்வருட இறுதியில் சென்னையில் வெண்முரசு விழா நடந்தது. அதில் சென்று ஜெ வை நேரில்  பார்த்து நீலம் அருமை சார்.. அதுலயும் அந்த புல்லாங்குழல் அத்தியாயம் இருக்கே.. அதான் சார் அதுல க்ளாஸ் என்று சொல்லி விட்டு போட்டொ எடுத்துக் கொண்டும் வந்து விட்டேன். இவ்வாறாக சென்றிருந்த போது 2015 ஊட்டி கூட்டம் அறிவிப்பு வந்தது. அந்தப் பயணத்தில் சந்தித்த ரகுசெளந்தர்ஸ்ரீனிவாசன்சுதாரவிகுமார் ஆகியோர் பேசி சென்னையில் ஒரு கலந்துரையாடலை நடத்த முடிவு செய்தோம். செளந்தர் அவரது யோகா மையத்தில் அதற்கான நேரம் ஒதுக்கித் தருவதாக சொன்னார். ஊட்டிக்கு வராத ராஜகோபாலனுடன் பேசி செந்தில் இந்த ஏற்பாட்டினை ஒருக்கினார். அவ்வாறாக மேமாதம் 2015 ல் அதன் முதல் கலந்துரையாடல் நிகழ்ந்தது மாதாந்திர கலந்துரையாடலாக ஐந்து வருடங்கள் தொடர்ந்து நிகழ்கிறது




துவக்கத்தில் வெண்முரசுக்கு, பொதுவெளி வழியாக எழுந்த மனத்தடைகளை எண்ணிப் பார்க்கிறேன். இதற்கு பதிலாக வெள்ளை யானை போன்று நாவல் எழுதலாம் என்று ஞாநி கூறினார். அப்பொழுது நான் மாதாமாதம் கேணி கூட்டத்தில் கலந்து கொள்வதுண்டு. என்னுள் அவர் கருத்துக்கு பெரும் முக்கியத்துவம் இருந்தது.  இதற்கு அடுத்து சித்தி சீரியலை எழுதுவாரா என்று எழுத்தாளர் ரவிகுமார் கேள்வியெழுப்பி கரகோஷங்களைப் பெற்றிருந்தார். ஏற்கனவே பாரதத்தை டிவி சீரியல்கள் மற்றும் உபன்யாசங்கள் வழியாக நன்கு கற்றிருந்த அறிஞர்கள் இதில் வரும் மாறுதல்களைச் சுட்டினர். முற்போக்காளர்கள் இது இலக்கியத்தில் பக்தியை நுழைக்கும் பார்ப்பன சிந்தனை என்றனர். அகண்ட பாரத சிந்தனையாளர்கள் இது கடவுளை சாதாரண மனிதன் என்று சொல்லி இழிவு படுத்தி இந்துக்களை பிரிக்கும் முயற்சி என்றார்கள். அவர்கள் தவிர இதன் ஆதரவாளர்கள் எதிர்ப்பாளர்கள் என்று பல கருத்துக்கள் வெளிவந்து கொண்டிருந்தன. சரி.. நீங்க ஓரமா போய் பேசுங்க என்றூ சொல்லியபடி வெண்முரசு அதன் வாசகர்களோடு முன்னோக்கிச் சென்றூ கொண்டிருந்தது.  இதோ இன்று இது முடிந்த தருணத்தில் அவ்வாறு குறை சொன்னவர்கள் அனைவரையும் அறைகூவல் விட்டபடி ஒலித்துக் கொண்டிருக்கிறது. அதில் யாரேனும் இன்று அதற்காக வருந்துவார்கள் என்று எதிர் பார்ப்பது தமிழிலக்கிய உலக அறமன்று.



வெண்முரசுக்குள் நுழைவதற்கு முன்னால்இது ஏன் எனக்கு மிக முக்கியமானது என்பதை நான் கூற வேண்டும். இது எனக்கு அளித்தது என்னஇதன் வாயிலாக நான் பெற்றது என்ன?  என்பதைக் கூற வேண்டும்.  பக்தியும் பகுத்தறிவும் நேருக்கு நேராக நின்று மோதும் தமிழக சூழலில் பழக்க வழக்கமும் - அறிவும் எதிர் எதிர் திசையில் சென்று பெரும் இடைவெளி விழுந்திருந்தது. இதில் இந்த இரு பக்கமுமே கடவுள்நம் தத்துவங்கள்நம் மரபு நம் வரலாறு குறித்து ஒருவனின் நியாயமான கேள்விக்கு விடையளிப்பதில்லை. ஒன்றை சரி என்று உள்ளம் நம்புவதும் அதை தர்க்க பூர்வமாக விளக்கமுடியாமல் இருப்பதும் ஒருவித குழப்பத்தில் மட்டுமே ஆழ்த்தும். இதிலிருந்து தப்பிக்க ஒருவன் இதைல் ஏதோ ஒன்றை கண்மூடித்தனமாக ஏற்றுக் கொள்ள வேண்டும். மறுதரப்பை முற்றிலும் நிராகரிக்க வேண்டும். இதில் இருபுறமும் அதீதமாக மாற்றுத் தரப்பை தாக்கும் என்பதை தவிர வேறு பலன் ஏதும் இல்லை. ஆனால் அதைக் களைய ஒரே வழி அதை முழுதும் அறிவதுதான். உண்மையில் அதற்கு வரலாறு புராணம் மரபு தத்துவம் அனைத்திலும் பெரும் பயிற்சி வேண்டும். குறைந்த பட்சம் அதை பயில வேண்டும். அதற்கான அறிஞர்களுடன் உரையாட வேண்டும். அவர்கள் மறு தரப்பு நியாயங்களையும்  பேச வேண்டும்.  துர்திஷ்டவசமாக அந்த உரையாடல் இங்கு நிகழவே இல்லை.  அந்த இடத்தை வெண்முரசுதான் எடுத்துக் கொண்டது. எனக்கு கருத்தியல் ரீதியாக இது ஒரு தெளிவை அளித்தது. ஒவ்வொரு விஷயத்தையும் எப்படி அணுகவேண்டும். எப்படி கற்க வேண்டும் என்ற புரிதலை அளித்தது. இப்பொழுது,  கையிலிருந்து சேலை வந்ததா.. ஒருத்தி நூறூ முட்டைகளிலிருந்து கெளரவர்களை பெற்றெடுத்தாளாஎன்ற கேள்விகளை எதிர்கொள்ளவும்ஆயிரம் கை கொண்டவன்.. சூரியனுக்கு பிறந்தவன் என்ற கருத்துகளை விளங்கிக் கொள்ளவும் அவையனைத்தயும் விட ஒரு இலக்கியப் பிரதியை எப்படி அணுகவேண்டும் என்பதும்  அதுவே காலத்தால் முற்பட்டது எனில் அதை எப்படி விளங்கிக் கொள்ளுதல் வேண்டும் என்கிற புரிதலையும் அது அளித்தது. இந்தக் கேள்விகளுக்கு அதுவரை ஆன்மீகவாதிகளிடமும் நாத்திகர்களிடமும் அல்லது பட்டிமன்ற பேச்சாளர்களிடமோ விளக்கம் கிடைக்கவில்லை. அவர்களில் ஒருவர் கூற்றூப்படி நம் முன்னோர்கள் பிறப்புமுதல் குருசேத்திரம் வரை முந்நூறு ஆண்டுகாலம் வாழ்ந்தவர்கள் அல்லது மற்றவர் சொல்படி அனைத்துமே கட்டுக்கதை இரண்டில் ஒன்றுதான் நம்ப முடியும். சமீபத்தில் ஒரு உரையில், எட்டாவது குழந்தைதான் உயிரை பறிக்கும்னா தேவகியையும் வசுதேவரையும் ஏன் ஒரே சிறையில் வைக்கனும் தனித்தனியாக வைத்திருக்கலாமே என்கிற கேள்வியை என்னால் சிரிப்புடன் கடக்க முடிந்தது. இதுவே என் வகையில்  வெண்முரசின் முதல் பயன் மதிப்பு. இதிலிருந்து எனது வெண்முரசின் வாசிப்பு இடத்திற்கு வருகிறேன்


) வெண்முரசின் கதையோட்டமும் கதாபாத்திரங்களும்


வெறும் மகாபாரத பாத்திரங்கள் மட்டும் தெரிந்துகொண்ட ஒருவர் வெண்முரசுக்குள் வரும்போது அவருக்கு ஏற்படும் குழப்பங்கள்தான் முதலில் முக்கியமானவை. உதாரணமாக இதுநாள்வரை  கருப்பு வெள்ளையாக அணுகப்பட்ட கெளரவர்கள் பாண்டவர்கள் மற்றும் அவர்களின் பெற்றொர்கள் என அனைவர் பற்றியும் இருக்கும் அபிப்ராயங்கள் மாறுகின்றன. அவர்கள் தவிர பெரியோரான துரோணர், துருபதர், அஸ்வதாமன் கம்சன் போன்றவர்களின் மனமாற்றங்கள் எழுந்து வருகின்றன. இவையெல்லாம் எந்தளவு பிண்ணிப் பிணைந்த ஒன்று என்ற பிரமிப்பும் உண்டாகிறது. இதை அப்படியே இங்கு கடத்துவது என்பது எளிதல்ல. சில சம்பவங்களைப் பார்க்கலாம்.  உதாரணமாக பாண்டு அரியணை ஏறும் அத்தியாயம். அதில் துவங்கி அவன் காடேகி அங்கு மடியும் வரை அவன் மீது வாசகருக்கு அணுக்கமும் அதன்பின் குந்தி ஆடும் அரசியலில் அவள் மீது விலக்கமும் உண்டாகும். ஆனால் இறுதியில் எழுதழல் நாவலில் குந்தி தன் தரப்பை விளக்கும் இடத்தில் அவள் ஒட்டு மொத்த சித்திரமும் மாறுவதைக் காணலாம்.  துரியோதனணா யுதிஷ்டிரனா யார் இளவரசராவது என்ற கேள்வியில் குந்தி தரப்பு வாதங்கள் எப்படி வெற்றியடைகின்றன என்பது இங்கு கவனிக்கத் தக்கது. இது பீஷ்மரின்  பெருந்தன்மையாலோ தருமன் முந்தி பிறந்தவன் என்பதாலோ அல்ல.. அவளது வாதத்தால் மட்டுமே ஏற்கப் படுகிறது. இன்னும் ஒரு குறிப்பிடத்தக்க இடம், பாஞ்சாலி ஐவரை மணம் செய்வது. நாம் அறிந்த கதையில் பாண்டவர்கள், தன் தாயாரிடம் சென்று அன்னையே ஒரு கனி கொண்டு வந்திருக்கிறேன் என்கிறார்கள். அதை ஐவரும் பகிர்ந்து கொள்ளுங்கள் என்கிறாள் குந்தி. தாய் சொல்லுக்கு மறு பேச்சு பேசாத பிள்ளைகள் அந்த அவளை மணக்கிறார்கள். இதை முதன் முதலாக சிறுவயதில் கேட்டபோது சிரித்திருக்கிறேன். ஆனால் பிரயாகையில் இது நிகழும் தருணம் என்பது, பாஞ்சால தேசத்தின் வரலாற்றையும் திரெளபதி என்கிற அரசியின் நிமிர்வையும் எடுத்துக் காட்டும் தருணமாக அமைந்தது. கர்ணனிடம் குந்தி வரம் கேட்கும் இடமும் அத்தகையதே. இதுவரை பாரத கதைகளில் நாடகங்களில் நாம் கண்ட அந்த சஸ்பென்ஸ் உடையும் தருணம் என்பது எங்கும் இல்லை.




ஏகலைவன் இன்று வரை போராளிகளின் குறியீடான ஒருவன். வேடன் ஒருவன் அர்ஜுனுக்கு இணையான  வீரனாக அவன் வந்துவிடுவானே என்று அஞ்சி பிராமண குருவால் கட்டை விரல் பறிக்கப் பட்டவன் என்ற கதையே பரப்பப் படுகிறது. இது முதலில் துரோணர் என்கிற ஒரு ஆசிரியரை அவமானப் படுத்துவது. துரோணர் அஸ்தினாபுரிக்கு கட்டுப் பட்டவர். அதனால் அதன் எதிரியான மகதத்தை சேர்ந்த ஏகலைவனின் கட்டை விரலைக் கேட்கிறார். சொல்லப்போனால் ஏகலைவன் வேடர் இளவரசன். கர்ணன் குதிரை சூதனின் மைந்தன். ஆனால் அதே துரோணர்தான் கர்ணனுக்கு அவன் சூதன் என்று அறிந்தும் கற்பிக்கிறார் இன்னும் சொன்னால் தன்னைக் கொல்லப் பிறந்த திருஷ்ட்யத்யும்மனுக்கும் கற்பிக்கிறார்.  காலப்போக்கில் மாமனிதர்களை எப்படி இளக்கரமாக தன்னையொத்து மக்கள் பார்க்கத் துவங்குகிறார்கள் என்பதற்கு இந்த துரோணர் இப்பொழுது பொதுவெளியில் அறியப்படும் விதம் ஒரு உதாரணம்.


கதாபாத்திரங்கள் என்று பார்க்கும் போது இதன் நாயகன் யார் என்று கேள்வி எழுகிறது. இதன் காவிய நாயனாக வருபவன் கர்ணனா அர்ஜுனனா என்கிற குழப்பமும் எழுந்து வரும். இருவருக்கும் தலா இருநாவல்கள் உள்ளன. காவிய சோகம் என்பது கர்ணன் ஒருவனுக்குதான் நிகழ்கிறது ஆனால் வீர காவியம் அர்ஜுணனுக்கு பாடப்படுகிறது. இது தவிர நாவல் முழுதும் கீழ்மை அண்டாத நாயகனாக துரியோதணன், இறுதிவரை அலைபாயும் தருமன் என ஒவ்வொரு குணத்துக்கான உச்ச பாத்திரமும் அவற்றின் உப பாத்திரங்களும் திரண்டு எழுகின்றன. காதல் நாயகன் பூரிசிரவஸ், இளமை துடுக்கும் வேகமும் கொண்ட அபுமன்யூ முற்றிலும் சரணாகதி அடைந்த சாத்யகி என அனைத்தும் முழுமையாக வாசிக்கும் போதும் துவக்கத்திலிருந்து ஒரே சரளமாக எந்தவித நெருடல் இல்லாமல் வருவதுதான் பிரமிப்பூட்டும் விஷயம். முன்பு சொன்ன பாண்டு குந்தி நிகழ்வில் இரண்டாம் நாவலான மழைப்பாடலின் தொடர்ச்சி என்பது பதினைந்தாம் நாவலில் தொடர்கிறது என்பதை வைத்துப் பார்க்கையில் இந்த சவால் புரியும்.  


இதுபோல வெண்முரசை வெறும் கதையாக படித்து அதில் வாசிப்பின் நுட்பங்களை அறியத்தக்க  பல உதாரணங்களை அளிக்கலாம். மேலும் இதன் அடுத்தடுத்த கட்டத்திற்கான வாசிப்பும் உள்ளன. அதை அதன் அரசியல் நோக்கு தத்துவ நோக்கு என பலதளங்களில் வைத்தும் வாசிக்கலாம்.  இதை தவிர முக்கியமான மற்றொன்றும் உண்டு.  அவை போர் குறித்த கேள்விகள்.. ஐயங்கள். பங்காளி சண்டையாக மட்டுமே அறியப்படும் பாரதப் போரில் ஏன் தென்னகப் பாண்டியன் கலந்து கொண்டான். பகைநாடான மகதம் ஏன் அஸ்தினாபுரிக்கு துணை நின்றது. துவாரகை ஏன் தன் தலைவனையும் எதிர்த்துக் கொண்டு அஸ்தினாபுரிக்கு துணை நின்றது? இந்தக் காவியத்தில் அனைவருக்கும் அணுக்கமானவனாகவும், இறை வடிவமாகவும் வந்து பெரும் தத்துவ ஞானியாக மட்டும் எஞ்சி நிற்கும் ஒருவனின் பெயரைக் கூட சொல்லாமல் இந்த கட்டுரையை முடிப்பதுதான் சரியா






இந்த வெண்முரசு தொடர் நாவல்களின் மையமான நாவலாக பன்னிரு படைக்களத்தினை சொல்லலாம். அதன் இறுதியில் திரெளபதி துகிலுரிக்கப் படும்போது எழுப்பும் கூக்குரல் ஆழிவண்ணாஆயர்குலவேந்தேஉன் அறம் எழுக! ஆம்எழுக! ஒவ்வொருவருக்குமான உனது அறம் என்பது.



ஒவ்வொருவருக்கும் உரியது அவனது அறம் என்றால் அதுவரை இருந்த  அறம் யாருக்கானதாக இருந்தது? அவன் இயற்றியது என்னஎன்கிற கேள்வியுடன் எழுந்த அடுத்தடுத்த நாவலகளின் வழியேதான் எனது வாசிப்பின் அடுத்த நிலை துவங்கியது. உத்தாலகர் ஸ்வேதகேதுவிடமிருந்து துவங்கிய சொல், பற்பல குருநிலைகளின் வழியே பரவி போதித்த ஞானத்தின் படிநிலைகள் என்ன என்பதும் பாரதப் போரின் காரணம் என்ன என்பதும் அதன் உச்சமாக இமைக்கணக் காட்டில் அவன் அமர்ந்து உரைத்த அந்த  சொல்குறித்தும் என வாசிப்பினை இனி வரும் பதிவுகளில் எழுதுகிறேன்.

தொடர்ச்சி:-  ஆ) முரசும் சொல்லும் - இளைய யாதவனின் சொல்



No comments:

Post a Comment