Thursday, July 16, 2020

முரசும் சொல்லும் - இ) மரணமில்லாதவனின் மழு



இலக்கியத்தின் முக்கிய பயன் என்பது அதன் வாயிலாக ஒத்த கருத்து உடைய  ஒரு நண்பர் குழுவைப் பெறுதலும் அங்கு நடக்கும் விவாதங்களும்தான். இலக்கியம் என்கிற மட்டில் ஒத்த கருத்து என்றாலும் அதற்குள்ளும் சிந்தனையளவில் பெரும் வேறுபாடுகள் இருக்கும். ஒரே கருத்துக்குள் இருந்தாலும் அதில் ருவாகும் நுண்ணிய சிந்தனை வேறுபாடுகளே பெரும் பூசலில் சென்று முடியும்.  வைணவர்கள் ஒரே கடவுள் வழிபாட்டுக் கொள்கை கொண்டிருந்தாலும் கடவுள் நம்மைக் நினைத்துக் கொண்டிருப்பாரா கடவுளை நாம் நினைத்துக்கொண்டிருக்க வேண்டுமா என்ற கேள்வியாலேயே பெரும் பிரிவாகிப் போன வடகலை தென்கலை பேதத்தை சொல்லலாம். உலக அளவில் புராட்டஸ்டண்ட் கத்தோலிக்கத்தை சொல்லலாம். இலக்கியத்திலும் கூட இவ்வாறு நிகழும். விவாதங்களில் அவை பூசலைக் கொண்டு வந்து ஒரு கட்டத்தில் நட்பைப் பேண வேண்டி விவாதமே செய்யாமல் இருக்கலாம் என்று தோன்றிவிடும். அதுபோன்ற தருணங்களைக் கடக்க நண்பர்குழுவினைத் தாண்டி, எந்தளவு முரண்பட்டாலும் புண்பட்டாலும் மீண்டும் பேசலாம் என்கிற அளவில் நெருங்கிய தோழமைகள் ஒன்றிரண்டு அவசியம்.  நாமே காயப்பட்டுக்கொண்டு நாமே பெட்டாடைனும்  தடவிக்கொள்ளலாம். சிலநேரங்களில் நாம் முன்பு கூறியது நிரூபணமாகலாம் அல்லது நம் கணிப்பு தவறாகப் போகலாம்.  அனைத்து தயக்கங்களைத் தாண்டி அதை விவாதிக்க இத்தகைய நெருங்கிய தோழமைகள் அவசியம். வெண்முரசு வாயிலாக இத்தகைய வாசிப்புக் குழுவின் நட்பு கிடைத்தது போல, மேற்கண்ட நெருங்கிய தோழமைகளும் எனக்குக் கிடைத்தன. அபுனைவு சார்ந்து என் கருத்துக்களில் பெரும் பாதிப்பு செலுத்தியவன் சுரேஷ்பாபு. அதுபோல என்  வெண்முரசு வாசிப்பில் அருணாசலத்தின் பங்கு மிக முக்கியமானது. வெண்முரசு குறித்து உரையாடாமல் எங்களுக்கு ஒருநாள்கூட கழிந்ததில்லை. இது ஒரு மிகை கூற்றும் அல்ல. 

என்னுடைய வெண்முரசு சார்ந்த பதிவுகளில் வெண்முரசு வாசிப்பு மற்றும் கலந்துரையாடல்களுக்கு இணையான  பங்கு எங்களுக்குள்ளான தனிப்பட்ட உரையாடலுக்கும் உண்டு. ஆகவே நண்பர்களே!  நான் இங்கு சொல்ல வருவது,  என் பதிவில் எழுத்துப் பிழை தவிர வேறு பிழை கண்டால் அதில் அவனுக்கும் மறைமுகப் பங்கு உண்டு என்பதே.

இ) மரணமில்லாதவனின் மழு

வெண்முரசில் இளையயாதவனுக்கு முன் பரசுராமர் இப்படி சத்ரிய அந்தஸ்து கொடுப்பதை நெறியாகக் கொண்டிருந்தார் என்றும் அவர் குறித்து அடுத்த பதிவு எழுதலாம் என்றும் சென்ற பதிவு எழுதுகையில் தோன்றியது. பரசுராமர் பெயர் எனக்கு சொல் பழகும் முன்பே என் மனதில் குடியேறிய ஒன்று. எங்கள் வீட்டில் வழக்கமாக, குழந்தைகளுக்கு வாராவாராம் எண்ணைய் தேய்த்து குளிப்பாட்டுகையில் தலையில் முதல்கை எண்ணெய் வைப்பத்ற்கு முன், அந்த எண்ணையை சுட்டு விரலால் தொட்டு இடது தொடையில் ஏழு புள்ளிகளாக வைப்பார்கள். ஒவ்வொரு புள்ளி வைக்கும்போதும் ஒவ்வொரு பெயர் சொல்லப்படும். அஸ்வத்தாம ஆஞ்சநேய மகாபலி விபீஷண பரசுராம வியாச கிருபர் என்று ஏழு பெயர்கள். ஆகவே இது அம்மா இங்கே வா வா போல நாவில் சொல்லெழும் முன்பே மனதில் பதிந்த வரிதான். இதில் கிருபருக்கு பதிலாக மார்க்கண்டேயன், துருவன் என்று ஆளாளுக்கு மாறிச் சொல்வதுண்டு. என் மகன் மகாபலிக்குப் பதிலாக பாகுபலியை சொல்வதுண்டு. பெண் குழந்தைகளுக்கு தாரை மண்டோதரி உள்ளிட்ட வரிசை சொல்லப்படும். இதில் வரும் ஆண்கள் புராணத்தில் வரும்  சிரஞ்சீவிகள் வரிசை, பெண்கள் புராணத்தால் போற்றப்படும் பத்தினிகள் வரிசை.



வெண்முசு இந்த ஏழு சிரஞ்சீவிகளுக்கும் எழு குணங்களை துவக்கத்திலேயே சொல்கிறது. முறையே பாவம், பக்தி, கொடை, நம்பிக்கை, வீரம், கற்பனை, குரோதம் ஆகிய ஏழு குணங்கள். முதல் அத்தியாயத்திலேயே வீரத்துக்காக பரசுராமர் சிரஞ்சீவியாக இருக்கிறார் என்கிற தகவல் வந்துவிடுகிறது. கடவுளின் அவதாரங்களில் சிரஞ்சீவியாக இருப்பவர் அவர்தான். பரசுராமரின் வீரம் நாம் அறியாததல்ல. கோடரியால் அத்தனை சத்ரியர்களையும் கொன்றொழித்தவர். இருபத்தியோரு முறை சுற்றிவந்து ஆயிரக் கணக்கில் இருந்த சத்ரியர்களை தேடித்தேடி அழித்தவர். அவர் அழித்தவர்களில் எஞ்சிய ஒரு துளி மீண்டும் திரண்டு உருவானதுதான் மஹாபாரத கால ஐம்பத்தியாறு சத்ரிய குடிகள். சத்ரியர்களை கொன்று அழிக்க வேண்டிய நோக்கம் என்ன என்பது முக்கிய கேள்வி. ஆயிரக்கணக்கில் இருக்கும் குழுவினர் ஒருவரோடு ஒருவர் மோதிக்கொள்வது என்பது நிரந்தர அமைதியின்மையை உருவாக்கும். அந்த குறுங்குழுக்கள் அழிந்தால், அவர்கள் மீண்டும் தோன்றும் போது ஒன்றிணைந்து பெருங்குழுவாக உருவாகும். பின் அவை பேரரசாக ஆகும். அதன் பின் போர்கள் இராது. அமைதி நிலவும் என்பது இதன் பொருள். ஒரு உரையில் ஜெ கூறிய உதாரணத்தை உங்கு குறிப்பிடலாம். திருச்சியும் முசிறியும் தனித்தனி அரசுகளாக இருந்து போர் செய்த காலத்தை விட பிற்காலத்தில் அவை இணைந்து உருவான சோழராஜ்ஜியத்தில் நிலவிய அமைதி என்பது பெரியது. பேரரசுகள் சேர சோழ பாண்டியர்களாக மோதிக் கொண்ட காலத்தை விட இன்றைய ஒன்றிணைந்த தமிழ்நாடு அமைதியானதுதான்.


காட்டில் தீ பிடித்து பெரும் மரங்கள் அழிகையில் அதன் அடியில் இருந்த தளிர்கள் பெருமரமாக வளர்கின்றன. சத்ரியர்களைக் கொன்றொழித்த பரசுராமரின் வீரம் ஏற்படுத்திய விளைவு என்பது இருவகையிலானது. ஒன்று, நூற்றூக்கணக்கான சத்ரிய குடிகள் திரண்டு ஒரே குடையின் கீழ் இணைந்தது. மற்றொன்று, சத்ரிய அந்தஸ்து இல்லாத நிஷாத, வேடவ குடியினர் சத்ரிய அந்தஸ்து பெற்றது. ஆளும் திறன் பெற்றது. பரசுராமர் மக்களுக்கு சதிரிய, பிராமண அந்தஸ்தை அளிக்கிறவராக வருகிறார். துரோணர் தன்னை பிராமணராக அறிவிக்கக் கோரி வருவது, மகாகீசகனுக்கு சத்ரிய அந்தஸ்து வருவது ஆகியவை வெண்முரசில் வரும் உதாரண சம்பவங்கள். இளைய யாதவனுக்கு ஒரு முன் தொடர்ச்சியாக பரசுராமன் விளங்குகிறார். ஆனால் இங்கு மற்றோருவனைப் பற்றிக் குறிப்பிட வேண்டும். அவன் இவர்கள் இருவருக்கும் இடையில் அவதரித்தவன். அவன் ரகுகுல கோதண்ட ராமன்.



சிவதனுசு மற்றும் விஷ்ணு தனுசு இரண்டுக்கும் இளையயாதவனின், பரசுராமனின் ஆதித் தொடர்பு உண்டு. இருவரின் துவக்கமாக ஹேகேய ( யாதவ)  குலமும் பார்க்கவ குலமும் ஒன்றிணைந்து செயல்பட்டு பின் பரம வைரிகளாகி சிவதனுசு மற்றூம் விஷ்ணுதனுசு கொண்டு ஒருவரை ஒருவர் மாறி மாறி அழித்து கொள்ளும் வரலாறு வண்ணக்கடலில் வருகிறது. அது இறுதியில் கார்த்தவீரியனை பரசுராமன் கோடாரி ( மழு) கொண்டு அழிப்பதில் நிறைவுறுகிறது. அதோடு யாதவ பேரரசு அழிகிறது. ஆனால், அங்கிருந்து துவங்கும் பரசுராமரின் வீரம் என்பது தொடர்ந்து சத்ரியர்களை அழித்தும் புதிய சத்ரியர்களை உருவாக்கியும் செல்கிறது. அது முடிவுக்கு வருவது மீண்டும் சத்ரிய நெறிகள் எழுந்து வரும்போது. அதை ஆற்றுபவன் சத்ரிய குலதிலகன் என்று வர்ணிக்கப்படும் ராகவ ராமன். அவன் சீதையை மணம்முடிக்கையில் சிவதனுசையும் அயோத்திக்கு திரும்பும் வழியில் பரசுராமரை எதிர் கொண்டு விஷ்ணு தனுசையும் முறிக்கிறான். பிறகு அவன் சத்ரிய அறத்தையும் போதிக்கிறான். ஒருவனுக்கு ஒருத்தி என வாழ்ந்து தனிமனித அறத்தையும் போதிக்கிறான். ( ஒருத்திக்கு ஒருவன் என்பதை இவர்கள் இருவரிடமும் நாம் காணலாம். ஒரு கந்தர்வனை பார்த்து அவன் அழகில் ஒரு கணம் தடுமாறியதால் தன் தாயின் தலையை வெட்டவும் தயங்காத பரசுராமன். ராவணனால் சிறை வைக்கப் பட்டதால் மனைவியை அனலில் புகுந்து மீண்டு நிரூபிக்கச் செய்த ராகவ ராமன்.)

வெண்முரசில் சீதா ராமனுக்கும் இளைய யாதவனுக்கும் நேரடி தொடர்பு இல்லை. ஜாம்பவான் மகளை மணம் செய்வது மட்டுமே சொல்லமுடியும். ஆனால் பரசுராமனை தோற்கடித்த தசரத ராமன் வில்லை பரசுராமரிடம் திருப்பிக்கொடுத்து பிராமண ராமனே, உங்கள் பிறவிநோக்கம் முடிந்தது, தென்னிலத்தில் மகேந்திரமலைக்குச் சென்று தவம்செய்து விண்ணுக்குச்செல்லும் வழிதேருங்கள் என்கிறான்

பரசுராமர் கோசல ராமனிடம் ஷத்ரியராமனே, இவ்வில்லை இத்தனை பெரிதாக என் கையில் வைத்திருந்தது என் ஆணவமே. என் ஆணவத்தை அழித்தாய். நீ விஷ்ணுஅம்சம் என இன்றறிந்தேன். என் யுகம் முடிந்து உன் யுகம் பிறந்துவிட்டிருக்கிறது. அது வளர்க! என்கிறார்.

பின் அந்த வில்லை அவர் திரும்பி வாங்கியபோது அது சிறிய பாம்புக்குஞ்சாக ஆகியது. அதை தன் கையில் பவித்ரமாக கட்டிக்கொண்டு அவர் திரும்பி நடக்கிறார். பின்னர் வெண்முரசில் அவர் வருவது கர்ணனின் ஆசிரியனாகவே. கர்ணனால் அந்த வில்லை எடுக்க முடியாமல் நிற்பதும் அவன் தொடையில் வண்டு துளைத்து அவனுக்கு அவர் சாபம் கொடுப்பதும் நாம் சிவாஜி என்.டி.ராமாராவ் வழியே அறிந்திருக்கும் ஒன்றுதான் என்பதால் நான் அதற்குள் செல்லவில்லை.

சத்ரிய அழிப்பு என்பது ஒரு கொடுஞ்செயலாக ஆற்றப் படவில்லை. அதை ஒரு கொலைக்களமாக பார்த்தலும் ஆகாது. அது இயல்பான ஒன்று. அடுத்து எழுதும் பதிவில் குலங்களின் முரணியக்கம் பற்றியே எழுதவேண்டும் என்று நினைக்கிறேன். நாட்டைப் பாதுகாப்பதுடன் நெறி, வணிகம், உணவு என்ற பிற தர்மங்களை காத்து வருவது சத்ரிய தர்மம்தான். ஆனால் அதுவே அகந்தையாகவும் ஆணவமாகவும் மாறி எல்லை மீறுகையில் பிற தர்மங்கள் எழுந்து வந்து அதை அடக்கி ஆண்டு புதியதொரு சத்ரிய தர்மத்தை நிலை நிறுத்துகின்றன. கம்சனால் துரியோதணனால் மீறப்படும் செயல்களுக்கு அன்றைய அறமே காத்து நிற்பதை கண்டே புதிய சத்ரியர்களை நெறிகளை உருவாக்க இளைய யாதவன் வீறு கொண்டெழுகிறான். அதுபோல தன் ஆணவத்தால் தன் குலதெய்வம் ததாத்ரேயர், குலகுரு, தன் தந்தை ஆகியோரின் நெறிகளைக் கடந்து ஜமதக்னியைக் கொன்ற கார்த்தவீரியனின் அழிப்பிலிருந்து பரசுராமனின் வேதம் துவங்குகிறது. சத்ரியகுலத்தின்மேல் பெருஞ்சினம் கொண்டெழுந்த பரசுராமர் இருபத்தொருமுறை பாரதவர்ஷத்தை சுற்றிவந்து அரசகுலங்களை அழிகிறார். நகரங்களை சுட்டெரிக்கிறார். கருவில் வாழ்ந்த குழந்தைகளையும் சிதைக்கிறார். அவரது ஆன்மாவில் நிறைந்த அவர்களின் குருதி  ஐந்து பெருங்குளங்களாக குருஷேத்ரத்தில் உருவாகின்றன. அவற்றை தன் கண்ணீரால் நிரப்பி அவர் மீண்டும் பிராமணராகி ஆசிரியராகிறார்.  சிரஞ்சீவியாக விளங்குகிறார்



ஆனால்  பரசுராமன் ஆற்ற நினைத்த சத்ரிய அழிப்பும் நிஷாதர்களுக்கு சத்ரிய அந்தஸ்து அளிப்பதும் பிறகாலத்தில் இளையயாதவனால் நிறைவேற்றப் படுகிறது.  அவர்களிடையே  உள்ள தொடர்பு இரண்டாம் நாவலான மழைப்பாடல் முதல் ஆங்காங்கு வருகிறது. ஆனால் அவர்கள் இருவரும் நேருக்கு நேர் சந்திக்கும் இடம் வெண்முரசின் இருபத்து மூன்றாம் நாவலான நீர்ச்சுடர் நாவலில் வருகிறது. முன்பே சொன்னது போல எங்கும் புரண்டு விடாத நீண்ட சரடாக அது தொடர்ந்து வருகிறது.  இருபத்தைந்தாயிரம் பக்கங்கள் எழுதப்பட்ட வெண்முரசு, ஜெயமோகன் மனதுக்குள எத்தனை முறை எழுதப் பட்டிருந்தால் இந்தக் கச்சிதம் சாத்தியம் என்று யோசித்து வியந்து போகிறேன். நிறைவாக, இரு அதி மானுடர்களும் நேருக்கு நேர் சந்திக்கின்றனர். பரசுராமரிடம் அவருடைய சீடர் அர்ஜுனனையும், யுயுத்ஸுவையும் இளையயாதவரையும் முறைப்படி அறிமுகம் செய்யும் இடம் அது.  அர்ஜுனனும் யுயுத்ஸுவும் தலைவணங்கி அவரிடம் நிற்கின்றனர். பரசுராமர் அவர்களது வணக்கங்களை  ஏற்றுக் கொண்டு இளைய யாதவரை நோக்குகிறார். இளைய யாதவர் தலைவணங்கவில்லை. அவர்களின் நோக்குகள் தொட்டுக்கொள்கின்றன. மிக மெல்லிய ஒரு தலையசைப்பு பரசுராமரில் நிகழ்கிறது. அல்ல, அவ்வாறு தோன்றும் ஓர் அசைவு விழிகளில் எழுகிறது. அதுவும்  அல்ல, அவ்வாறு தோன்றும் முகநிகழ்வு மட்டுமே அது. அதுகூட அல்ல, அங்கு ஏதும் நிகழவே இல்லை. அது காண்பவரின் உள்ளம் கொண்ட பதிவு. பிறிதொன்று நிகழ்கிறது அவர்களுக்குள். இளைய யாதவரின் முகத்தை பார்த்தால்,  அங்கேயும் எவ்வுணர்ச்சியும் இல்லை. மாறாப் புன்னகையுடன் என்றுமெனச் சமைந்திருக்கிறது. வெண்முரசின் வரியிலேயே மீண்டும் சொன்னால், பரசுராமன் அனல் கொண்டு ஆற்றியதை தன் சொல்கொண்டு ஆற்றினான் இளையயாதவன்

தொடர்ச்சி:- முரசும் சொல்லும் -  ஈ) குலங்களும் கலப்பரசியலும்

No comments:

Post a Comment