முந்தையது:- முரசும் சொல்லும் - ஐ ) வரலாற்றுடன் உரையாடுதல்
ஒருவன் இலக்கிய வாசகனானாலும் தத்துவ நூலை அணுகுவது எளிதல்ல. ஆகவே அதை கதையாக விளங்கிக் கொள்ளவே இதில் நாடகீய போர்த்தருணம்
சொல்லப்பட்டது. இருப்பினும் அதை நேரடியாக வாசித்து அறிவதும் கடினமே. அதுவே, இமைக்கணம் வழியாக கீதையை அணுகுவது ஒப்புநோக்க எளிதானது. ஆனால் இமைக்கணத்தை விளங்கிக் கொள்ளவும், வெண்முரசினை அது
சொல்லவரும் வரலாறு/ அரசியல்/ மரபு / தரிசனங்கள் சார்ந்த பின்புலத்துடன் அறிய வேண்டியதும் அவசியம்.
இமைக்கணத்தின் படிநிலைகள் என்று சொல்வதால்,
அவை ஒன்றுடன் ஒன்று மேம்பட்டது என்று ஆகிவிடாது. உதாரணமாக
மாத சம்பளம் வாங்கும் ஒரு பணியாளர், தனது
வரையறுக்கப்பட்ட வாழ்க்கை எல்லைக்குள் வாழ்பவர். அவரால் எளிதாக மூன்றாம்
அத்தியாயமான கர்ம சந்நியாச யோகத்துக்குள் வந்துவிட முடியும். விடுபட்ட நிலையில் பெரும் விழைவு இன்றி தன்
கடமையை ஆற்ற முடியும். ஆனால் அவருக்கு மாத
ஊதியம் வழங்கும் அந்த நிறுவன தலைவரால் அவ்வாறு இருக்க வியலாது. அவர் சாங்கிய யோகப்படி உலகியலில் உழன்று
செயலாற்றி நின்று செயல் புரிதல் வேண்டும். எனவே இந்த அறிதல்கள்
என்பது ஒன்றுடன் ஒன்று உயர்ந்தது தாழ்ந்தது என்று இல்லை.
எந்த ஒரு வழியில் சென்றாலும் அது இறுதியாக ஞானத்திற்கே இட்டுச் செல்லும்
தனக்கு உலகியலோ போரின் முடிவோ ஒரு பொருட்டு இல்லை என்று சொல்லும் பீஷ்மருக்கு செயல் / கர்ம யோகம் உரைக்கப்படுகிறது. தன் இளவயது சபதம் முதிய வயதில் அபத்தமாக தோன்றுவதம் குழப்பம் அறிவின் சொற்கள் மூலம் சிகண்டிக்கு அகற்றப்படுகிறது. இவ்வாறு வெவ்வேறு குணங்களும் ஒன்றுடன் ஒன்று மோதிக் கலந்து உருவானதே வெண்முரசு என்னும் பெருங்கதையாடல். இன்று போரும் அதற்குப் பின்னான அரசியல் மொழி மற்றும் சித்தாந்த மாற்றங்களையும் கண்டபிறகு, இமைக்கணத்தின் மறு வாசிப்பில் அந்தப் பெருஞ்சித்திரத்தை உணர முடிந்தது. இமைக்கணத்தினை அணுகுவது என்பது அவரவர் புரிதலுக்கு உட்பட்டது. அவரவர் வாழ்க்கை அனுபவத்துடன் தொடர்புடையது. அவ்வகையில் இமைக்கணத்தை அவரவர் வாசித்து அறிவதே சிறந்தது.
வெண்முரசு வாசிப்பின் வழியே நான் அடைந்தவற்றின்
தொகுப்புத்தான் இந்தக் கட்டுரைகள். சென்னை வெண்முரசு கலந்துரையாடல்கள் எனது
வாசிப்பிற்கு மிகவும் உறுதுணையாக இருந்தன. கலந்துரையாடல் என்பது அளிக்கும் பலன்
ஒவ்வொருவருக்கும் மிகவும் அந்தரங்கமானது.
எனக்கு அதில் வரும் உவமைகள் சொற்கள் சிறு கிளைக்கதைகள் என பல
குறிப்பிடத்தக்க இடங்கள் உள்ளன. அவ்வாறாகவே, ஒவ்வொருவரும் அதில் ஒவ்வொன்றை பற்றிக் கொள்ளக் கூடும். ஆகவே
இந்தக் கட்டுரைகளுக்குள் அவற்றைக் குறிப்பிடவில்லை. வேறு சந்தர்பங்களில்
அவற்றையும் நான் எழுதக் கூடும். இந்தக் கட்டுரைகளைப் பொறுத்தவரையில்,
புதிதாக வெண்முரசு வாசிக்கத் துவங்கும் ஒருவருக்கு அந்த
படைப்பு குறித்த ஒரு குறைந்தபட்ச புரிதலை அளிக்க வேண்டும் என்பது மட்டுமே எனது நோக்கமாக இருந்தது.
மே-2015 முதல் ஐந்து வருடங்களைக் கடந்து நிகழ்ந்து வரும் சென்னை வெண்முரசு மாதாந்திர கூடுகையின் முதலாம் ஆண்டின் நிறைவில் எழுத்தாளர் ஜெயமோகன் லலந்து கொண்டபோது |
வெண்முரசின் ஓவியங்கள் பல தருணங்களை எளிதாகப் புரிய வைத்திருக்கின்றன. தனது முதல் இலக்கிய வாசிப்பு என்பது வெண்முரசு வழியாகவே நிகழ்ந்தது என்று ஓவியர் ஷண்முகவேல் அவர்கள் கூறினார். ஆனால் முதல் அத்தியாயத்தில் மானசா தேவி ஆஸ்திகனுக்குக் கதை சொல்வதில் துவங்கி ஒவ்வொரு இடத்திலும் கதாபாத்திரத்தின் வீச்சை ஓவியங்கள் மூலம் அவர் வாசகரிடத்தில் கொண்டு சேர்த்தார். அவருடனான ஒரு சென்னை கலந்துரையாடலின் போது அவரது உரையில் கூறிய ஒன்று அவர் எந்தளவு கவனமாக இருந்திருக்கிறார் என்று உணர்த்தியது. ஜெ. வெண்முரசை தொடராக எழுதும் போது எதிர்காலத்தில் ஏதோ ஒரு வர்ணனையில் முகத்தில் உடலில் ஒரு மச்சம் வடு போன்ற ஒரு அடையாளத்தை எழுதிவிட்டால் என்ன செய்வது என்று கருதியே எந்த ஒரு கதாபாத்திரத்தின் முகத்தையும் தான் வரையவில்லை என்றும் முகத்தைக் காட்டாமலேயே அந்த சூழலைச் சித்தரித்தது பெரும் சவாலாக இருந்தது என்றும் குறிப்பிட்டார். இன்று இந்த கட்டுரைகளுக்காக ஓவியங்களை மீண்டும் தேடிப் பார்த்து அவற்றில் எதை ஒதுக்குவது என்பதில் பெரும் குழப்பம் உண்டாயிற்று.
ஓவியர் ஷண்முகவேல் வெண்முரசு விழாவில் கெளரவிக்கப் பட்டபோது |
எனது வீட்டில் வெண்முரசு புத்தகமாக அனைவராலும் வாசிக்கப் படுவது. அதன் வழியாக கொற்றவை நாஞ்சில்நாடன் அ.முத்துலிங்கம் என பலரை வீட்டில் உள்ளவர்கள் வாசிக்கத் துவங்கினர். நவீன இலக்கியத்தில் இவ்வாறு வீட்டில் அனைவரும் தொடர்ச்சியாக வாசிப்பது என்பது பல ஆண்டுகளுக்குப் பிறகு வெண்முரசின் வழியாகவே மீண்டும் நிகழத் துவங்கியுள்ளது. அதை முன்பே கணித்து நேர்த்தியாக வடிவமைத்த நற்றிணை மற்றும் கிழக்கு பதிப்பகத்தாருக்கும் வாழ்த்துக்களை தெரிவிக்க வேண்டும்.
அம்மா வெண்முரசு ( செந்நாவேங்கை ) வாசிக்கும் சிக்குபலகை மேடை😀 |
வெண்முரசு வாசகர்களை திரட்டி “venmurasu reader” குழு மூலம் வெண்முரசு நாவல்கள் மற்றும் அதன் பலதரப்பட்ட சிறப்புகள் குறித்த கட்டுரைகள் வெண்முரசு வாசகர்கள் மூலம் தொகுக்கப் படுகின்றன. அவற்றின் மூலம் வெண்முரசின் இன்னும் பல வாசிப்புக் கட்டுரைகளும் / உரைகளும் எழுந்து வரும். ஆனால் எவ்வளவு தொகுத்தாலும் வெண்முரசின் இறுதியில் வரும் கிளி போல நமது உள்ளமும் “இல்லை! இல்லை!” என்றுதான் கூவிக்கொண்டிருக்கும் என்பதில் ஐயமில்லை
No comments:
Post a Comment