Friday, May 7, 2021

இடைவெளிகளை நிரப்பும் எழுத்து

எழுத்தாளர் வாசு முருகவேல் அவர்களின் நாவல்கள் குறித்து எழுதிய கட்டுரை, அகழ் இணைய இதழில் வெளியானது 

 



வாசு முருகவேலின் நான்கு புத்தகங்கள் வெளியாகியுள்ளன. அதில் ஒன்று அவர் ‘ஈழத்தமிழில்’ எழுதிய ‘ஜெப்னா பேக்கரி’ நாவலின்  ‘தமிழகத் தமிழ்’ பதிப்பு. இரண்டாம் பதிப்பு இவ்வாறு திருத்தி வெளியிடப்பட்டிருக்கிறது. அதை மொழிபெயர்ப்பு என்று சொல்ல முடியாது. அந்த அளவு நமது மொழிப்புலமையின் நிலைமை இன்னும் மோசமாகிவிடவில்லை. அவ்விரண்டினையும் ஒரே நாவல் என்று கொண்டால் மொத்தம் மூன்று நாவல்கள் வெளியாகியுள்ளன.


 ஜெப்னா பேக்கரி 


நம் தலைமுறையில்  நேராகக் கண்ட, அதில் தனக்கான சார்பு நிலை கொண்ட போரில் ஒன்று தமிழீழ விடுதலைப்போர். இதில் விடுதலைப் புலிகள்ஆதரவு / எதிர்ப்பு என இரு மனநிலைகள் இங்கு உருவாயின. அவற்றில் புலிகளுக்கு ஆதரவான மனநிலையில் இருப்பவரிடம் எதிர்த்தரப்பினரால்  இரு கேள்விகள் தவறாது கேட்கப்படும். அதில் ஒன்று முன்னாள் இந்தியப் பிரதமர் படுகொலை செய்யப்பட நிகழ்வு. அதைச் சற்றே பெருமிதத்துடன் எதிர் கொள்பவர்கள்கூட அடுத்த கேள்வியான ‘யாழ் வெளியேற்றம்’ பற்றி கேள்வி வந்தால் சற்றுப் பெருமிதம் குலைந்துதான் போவார்கள். அந்த அளவிற்கு ஒரு கரும்புள்ளி அந்த நிகழ்வு.


கடற்கரை ஓரமாக வேறு வேலையாக நடந்துபோகிறவர்கள் சற்று நின்று, கடலில் கால் நனைத்துப் போகலாம் என்று அலையில் ஆடிச் செல்வதுண்டு. அதுபோல யுத்தத்தில் யாரும் தலையைக் கொடுத்துவிட்டு வருவோம் என்று தானாகப் போய் கொடுக்கப் போவதில்லை. அது இதிகாச யுத்தமானாலும் நிகழ்கால யுத்தமானாலும் அதில் ஈடுபட ஒரு  ‘மறுகேள்வி கேட்காத” அர்ப்பணிப்புத் தேவையாகிறது. முழு அர்ப்பணிப்பு இல்லாமல் வெறுமனே சென்று மடிய யாரும் விரும்புவதில்லை.


இந்த விஸ்வாசம் அனைத்துத் தரப்பிற்கும்தான் இருக்கிறது. சொல்லப்போனால் போர் அதனால்தான் எழுகிறது.  ஆனால்  முழுமுதற் விஸ்வாசம் என்பது மூர்க்கமான ஒன்று. அது எதிர்த் தரப்பின் நியாயங்களைக் கருத்தில் கொள்வதில்லை.   ‘ஸ்ரீலங்கா இஸ்லாமியர்கள் காங்கிரஸ்’ உருவானதும், அதைத் தொடர்ந்து ஒருவேளை தமிழீழ தனி அரசு அமைத்தால் அதில் இஸ்லாமியர்கள் சிறுபான்மையாக ஆவார்கள் என்று கருத்து உருவானதும், ஆகவே இருதரப்பிலும் பதற்றம் உண்டானதும், அதில் சிங்கள அரசு குளிர் காய்ந்ததும், இறுதியாக ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான இஸ்லாமிய மக்கள் சொந்த நாட்டிலேயே வீடு, நிலம், பொருள் ஆகியவற்றை இழந்து அகதியாக இடம் மாறியதும், இன்றுவரை அவர்களில் பெரும்பாலானோர் தங்கள் சொந்தமண்ணை மிதிக்காமல் உள்நாட்டிலேயே வேறு வேறு இடங்களில் வாழ்கிறார்கள் என்பதும்,  அவர்களில் 90% பேர் இன்னும் தன் ஊருக்கு வராமலே வெளியேதான் வாழ்க்கையை அமைத்துக்கொண்டிருக்கின்றனர் என்பதும் இந்த யாழ்  வெளியேற்றத்தின் விளைவு. இது குறித்த தகவல்கள் விக்கிபீடியா உள்ளிட்ட தளங்களில் கிடைக்கின்றன.  சிங்கள திரைப்பட இயக்குநர் பிரசன்ன விதானகேயின் ’august sun’ படம் இஸ்லாமிய வெளியேற்றம் குறித்துப் பதிவு செய்த முக்கியமான படைப்பு. மௌலானா முஹாஜித் எழுதிய ‘முஸ்லிம்கள் படுகொலை’ புத்தகமும் அச்சம்பவத்தின் ஒட்டுமொத்த அரசியல் பின்னணியைக் கூறுகிறது. இவை இரண்டிலும் யாழ் வெளியேற்றம் மையம் அல்ல. ஆனால் அன்றைய சூழ்நிலையை அறிய உதவக்கூடும்.


இந்தப் பின்னணியின் சூழலில்தான் வாசு முருகவேல் தனது  முதல் நாவலான ஜாப்னா பேக்கரியை  எழுதுகிறார். இதில்   அரசியல் ரீதியாக ஆளும் சிங்கள அரசு தவிர்த்து இரு தரப்புகள் உள்ளன. ஒன்று, ஈழத்தில் சிறுபான்மையினராகக் கருத்தப்பட்டு உரிமை மறுக்கப்பட்டுப் போராடும் தமிழர்கள். இரண்டாவது தமிழர்களில் தாம் சிறுபான்மையாகக் ஆகிவிடுவோமோ என அச்சத்தில் வாழும் சில இஸ்லாமியர்கள். இவர்களுக்கிடையே எந்த முடிவும் எடுக்கவியலாமல் கால ஓட்டத்தின்படி வாழும் இருதரப்பு அப்பாவியான மக்கள்.  இவர்கள்தான் பெரும்பான்மையினர்.


வாசுமுருகவேல் நடை இயல்பாகவே சுருங்கக் கூறும் வகையினைச் சார்ந்தது.  றஜீவன், அரைமண்டை போன்ற மனிதர்களை அறிமுகப்படுத்தவோ அவர்களின் சிந்தனைப் போக்கை உணர்த்தவோ பெரும்  வர்ணனைகளை எடுத்துக்கொள்வதில்லை. அஜ்மல் தனது தந்தைமீது வெறுப்புடன் வளர்ந்தவன்.  அன்று  தன் தந்தையின் மரணித்த உடல் கிடத்தப்பட்டிருப்பதைப் பார்க்கிறான். எப்பொழுதும் அதிரடியாகச் செயல்படும் நபர்  அடக்கமாக இருப்பதைப் பார்த்து “எப்பேர்ப்பட்ட ஒரு அனுபவத்தை இழக்கப் பார்த்திருக்கிறோம்’ என்று கருதி நிற்பதாகக் குறிப்பிடுகிறார். அந்த இடத்தை மெல்ல வர்ணிக்கத் துவங்குகிறார். மரண வீட்டில் சோகத்தை உண்டாக்குவதற்கே ஆட்கள் தேவைப்பட்டனர். அதுவே பெரிய சோகம் என்று சொல்லியபடி செல்கிறது நாவல். இந்தக் கச்சித  வர்ணனை சில சொற்களிலேயே அந்த இல்லத்தின் நிலை, அவர்களுக்குள் இருந்த உறவுச் சிக்கல் என எல்லாவற்றையும் காட்டிவிடுகிறது


ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன் நிகழ்ந்த இராமாயண மஹாபாரதப்  போர்களை உருவாக்கிய நிர்பந்தமும் அதில் பல உட்குழுவிற்கு இருந்த அறமின்மையும் தற்காலத்தில் உரைக்கப்பட்டால்கூட அது சார்ந்து சர்ச்சைகள் உருவாக்கி வருகின்றன. அந்தக் காலத்தில் நாம் வெற்றியாக / தோல்வியாக  கண்ட ஒன்றினை  விமர்சித்து தற்காலத்தில் எழுதினால் கூட சித்தாந்த ரீதியில் பல இடர்களைக் களைய வேண்டியிருக்கிறது. அடையாளங்களைச் சுமக்க வேண்டியிருக்கிறது. அப்படியிருக்கையில் நிகழ்கால யுத்தத்தின் கூறுகளை எழுதும் ஒருவர் இன்னும் கவனமாக இருக்க வேண்டியுள்ளது. கதையோட்டத்தில் புலிகளின் தரப்பா இஸ்லாமியர்களின் தரப்பா எது சரியானது என்கிற கேள்விக்கோ தீர்ப்பிற்கோ கதாசிரியர் சொல்லவில்லை. ஆனால் சின்னஞ்சிறுவர் முதல் அனைவருக்கும் அந்த பேக்கரிமீது ஒரு ஒவ்வாமை உருவானது, கசப்பாக மாறியது ஆகியவற்றை அரவிந்தன் என்ற சிறுவனின் உடல்மொழி வாயிலாகப் புரிந்துகொள்ள முடிகிறது.  அதேபோல நசீர் தன்னுடைய ரேடியோ உடைபடும் தருணத்தில் அழுகையை நிறுத்தி வெறித்துப் பார்ப்பது மற்றோர் உதாரணம். அதை நேர்த்தியாக் கையாண்டிருக்கிறார். எப்படியானாலும் நாம் யார் தரப்பில் நிற்கிறோம் என்பது கூர்ந்து கவனிக்கப்படும்.  நம் சாய்வு யார் தரப்பில் இருக்கிறது என்பது நாவலில் வெளிப்பட வேண்டும் என்கிற எதிர்பார்ப்பும் இருக்கும்.  அவ்விதத்தில்  உணர்ச்சிக்கு அப்பாற்பட்டு நின்று சுருங்கக் கூறும் இவரது நடை  அதைத் தவிர்த்துச் சம்பவங்களைத் தொகுத்துக்கொள்ள உதவுகிறது.  மகாபாரதத்தில் துரியோதனன் சார்பாகப் பேசலாம். அதற்காக வாரணாவத்தை  நியாயப்படுத்தக் கூடாது அதுதான் அடிப்படை அறம். அந்தப் புரிந்துணர்வு நாவலாசிரியருக்கும் இருக்கிறது. நாவல், அந்தச் சூழல் குறித்த ஊகங்களையும் கிசுகிசுப் பாணியில்  சொல்லிச் செல்கிறது. மேலும் ஆசிரியர் சொல்வதையெல்லாம் அப்படியே ஏற்றுக்கொள்ள  இலக்கிய வாசகர்  ஆறாம் வகுப்பு மாணவர் அல்லர். அந்த வகையில் சூழலை  எவ்வாறு உள்வாங்கிக் கொள்கிறோம் என்பதில் வாசகரின் பங்கும் உள்ளது. வாசகரின் மனச்சாய்வும்  உள்ளது.  


ஒருபுறம் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம், மறுபுறம் மதரீதியாக அதை அணுகிப் போராட்டத்தைக் குழப்பிவிடும் ஆளும் அரசின் சாணக்கியம். மறுபுறம் இதனால் அல்லாடும் சாமானியர்கள். இதைப் புரிந்துகொள்ள முடிந்தாலும், இதற்கிடையே, இதைப் பேசித் தீர்க்க நிகழ்ந்த முயற்சிகள் என்னென்ன என்பதை ஆசிரியர் விளக்கியிருக்கலாம். ஏன் வலுக்கட்டாயமாக இந்த உடனடி வெளியேற்றம் நிகழ்ந்தது என்பதை இன்னும் விளக்கமாகப் புனைவில் பொருத்திப் பார்த்திருக்கலாம்.    


ஒருசில இயக்கத்தினர் செய்த தவறுக்கு ஒட்டுமொத்தத் தமிழினத்தையும் அழிக்கத் துணியலாமா என்ற கேள்வி ஸ்ரீலங்கா அரசை நோக்கிக் கேட்கப்படும். அந்தக் கேள்வியையே இறுதியில் இயக்கத்தினரை நோக்கிக் கேட்கத் தூண்டுகிறது நாவலின் இறுதி அத்தியாயம்.. ஒருசிலரின் செயல்பாடுகள் மீதான ஐயத்திலா இத்தனை மக்களை வெளியேற்றினீர்? அவர்களிடம் வழிப்பறியும் செய்தீர்? பலரின் உள்ளே இருந்த குழந்தைமையைப் போட்டு உடைத்தீர்? என்ற கேள்வியை எழுப்பிய வண்ணம் நிறைவடைகிறது நாவல்.






கலாதீபம் லொட்ஜ்


முந்தைய நாவலான ’ஜப்னா பேக்கரி’யில் ஒரு வரி வரும், ” ’’சிநேகிதம்கூட பிரச்சனையாக மாறும் துயரம் யாருக்கும் நிகழக் கூடாது” என.. இந்த இரண்டாம் நாவல் ’கலாதீபம் லொட்ஜி’ன் மையமாக இருப்பது அந்தப் புள்ளிதான்.


ஒரு போராளிப் பெண்ணுடன் இருமுறை பேசிய இளைஞன், ஏதும் அறியாத  அப்பாவி மனநிலை கொண்டவன்.   போலீசின் சித்திரவதைக்   கூடங்களில் சிக்கிச் சிதறிப்போகும் அவனது  வாழ்க்கை. ஒருவர் ஈழத்திலிருந்து கிளம்பி அகதியாகவோ அல்லது உறவினரைச் சந்திக்கவோ அயல்நாட்டிற்குச் சென்றுசேர்வது என்பதிலுள்ள சிக்கல்களைக் களமாகக் கொண்ட நாவல், அதிகம் சொல்லப்படாத கொழும்பு நகர்ப்புற வாழ்வைச் சொல்லிப் போகிறது. மலையகம், ஈழம் சார்ந்த கதைகளைப் படித்திருந்தாலும் நகர்ப்புற வாழ்வின் அச்சங்களும்  நம்பிக்கைகளும் கொண்ட நாவல் இது. அயல்நாடு செல்லும் வழியில் கொழும்பில் லாட்ஜில் தங்க நேரிடும் குடும்பமும் அவர்களைச் சுற்றியுள்ள பாத்திரங்களின் அலைச்சலும் சொல்லப்படுகிறது.


அயல்நாடு செல்பவர்கள் தங்கியிருக்கும் லாட்ஜின் அறைக்கு எப்பொழுது  வேண்டுமானாலும் உறவினரிடமிருந்து  அழைப்பு வரலாம். அதை வந்து சொல்வதற்கென ஒருவர் இருக்கிறார். அவரிடம் நலம் விசாரிக்காமல் யாரும் செல்வதில்லை. அது ஒரு கிரக உறவுபோல.  கிரஹாம்பெல் உறவு என்றும் சொல்லலாம் என்று அறிமுகப்படுத்தும் சரளமான நடை இதிலும் உண்டு.


ஈழத்தில் அரசியல் கடசிகள், அரசாங்க அதிகாரிகளின் லஞ்ச  லாவண்யங்கள், சிறுநீர் சோதனையில் நோய் இல்லை எனக்காட்ட  நிகழும் தில்லுமுல்லு என அனைத்தையும் முந்தைய நாவல் போலவே சுருங்கச் சொல்லியே விளக்கிவிடுகிறார்.  தலைநகரம்,  எல்லா தலைநகரம்போல மொழி இனம் குறித்த பாகுபாடு ஏதும் இன்றித்தான் இருக்கிறது. சந்திரனிடம் பழக்கமாகும் அபயசேகர  ஒரு பரிமாணத்தைக் காட்டினால், சிங்களவர்களே பரவாயில்லை என்கிற அளவில் தமிழர்களிடம் கறாராக நடந்துகொள்ளும் தமிழர் மங்கையற்கரசி மற்றோரு பரிமாணம்.  வெளிநாடு போகும் வழியில்  லாட்ஜில் தங்கியிருக்கும் தாரிணி, கொழும்புஆன்ரீ ( ஆண்ட்டி) யின் மகனைக் கண்டதேயில்லை. அவன் சிறையில் இருக்கிறான். அவள் அறிந்ததெல்லாம் அவன் அம்மாவுடனான உரையாடல் வழிதான். இறுதியில் தன மகனைக் காணச்செல்லும் அம்மாவிடம் அவனுக்கான காதல் கடிதத்தைக் கொடுத்து அனுப்பிவிட்டுத் தன் தந்தை, தம்பியுடன் வெளிநாடு கிளம்புகிறாள் தாரிணி. மண்ணை விட்டு விலகிச் செல்லும் மனிதர்களுக்கு அந்த மண்ணின் மீதான பற்றும் அதற்காகப் போராடும் மனிதர்கள் மீதான அன்பும் நாவலில் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கவை.


புத்திரன்


மண்ணை விட்டு விலகிச் செல்லும் மனிதர்களுக்கு அந்த மண்ணின் மீதான பற்று முந்தைய நாவலில் சொல்லப்பட்டதுபோல தன் மக்களைப் பிரிந்த தாய்மண்ணின் ஏக்கம்தான் புத்திரன் நாவல். சுந்தரி என்பது அழகானவள் என்ற பொருள் கொண்டது. நாவலின் நாயகி பெயர் அது. அதை அந்த மண்ணிற்கான குறியீடாகவும் கொள்ளலாம். 


கொரோனா காலத்தில் அனைவரும் தன் சொந்த ஊருக்குத் திரும்ப, புலம்பெயர்  வாழ்வில் அங்கு செல்லமுடியாத   ஏக்கத்தை எழுத்து வழியாக ஆசிரியர் தீர்த்துக்கொண்ட நாவல் எனலாம். மூன்று நாவல்களில் அதிகம் உணர்ச்சிவசப்படும் தருணங்கள் கொண்ட  நாவலாகவும் இது உள்ளது. தன் சிறுபிராயத்தை அசைபோடும் நினைவுகள் நிறைந்த சில நாவல்கள் ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்தவர்களால் எழுதப்பட்டுள்ளது. இது அந்த வரிசையில் சென்று அமர்கிறது.


நயினாதீவு மக்களின் வாழ்க்கையும் இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் கிடந்து அல்லாடும் வாழ்க்கையும் உரைக்கப்படுகிறது. ஒருவிதத்தில் முந்தைய நாவல்களில் உள்ள ‘தள்ளி நின்று பார்க்கும்’ தன்மையை விட்டுவிட்டு நம்மையும் உணர்ச்சிக்குள் இழுத்துவிடுகிறது எழுத்து. அதனாலேயே கதாசிரியரின் மற்ற இரு நாவல்களிலிருந்து வேறுபட்டிருக்கிறது . வாசு முருகவேலின் படைப்புலகில் நுழைய விரும்புபவர்கள் இதிலிருந்து துவங்கலாம். 


மூன்று நாவல்களிலும் பொதுவாக இருப்பது எள்ளல் நிறைந்த நடையும் ஏனைய ஈழ நாவல்களில்  அதிகம் உரைக்கப்படாத இடங்களைத் தொட்டு் நிரப்பும் உள்ளடக்கமும் ஆகும். அல்லது அதிக முக்கியத்துவம் இல்லாதுபோன இடங்களை நோக்கி ஒளியைப் பாய்ச்சுதல் என்றும்  சொல்லலாம். புத்திரன் நாவலில் திருவெம்பாவை சொல்ல அந்த முழுக் கிராமமும்  தயாராவது ஒரு குறிப்பிடத்தக்க இளம்பிராய  நிகழ்வு. நாஸ்டால்ஜியா என்பது நல்ல வாழ்க்கை வாழ்ந்தவருக்கே சுகமான ஒன்று. அகதியாக அலைக்கழிக்கப்பட்டவருக்கு அல்ல என்பதும் உண்மை.  முதலில் மனுஷன் போனான். பின் மகன் போனான். கடைசியாக மண்ணும் போய்விட்டது என்று ஒருத்தி காரி உமிழ்வாள். அனைத்தையும் செரித்துக்கொண்ட மண் அதையும் செரித்துக்கொண்டது என்ற வரி முதல் நாவலில் ஒரு வர்ணனையில் வரும். அந்த வாழ்க்கை பாரத்தை எளிய விவரிப்பின் மூலம் கடத்துகின்றன இவரது நாவல்கள். பொதுவாக குழந்தைகளே முக்கிய கதாபாத்திரமாகவும், சம்பவங்கள் குழந்தைகளின் சிறார்களின் பார்வையிலும் உரைக்கப்படுவது இவர் நாவலின் முக்கிய அம்சம். ஈழ அரசியல், சமூக அவலங்களைப் பொறுத்தமட்டில் தமிழக மக்களின் புரிந்துணர்வு ஒரு குழந்தைக்கு இணையானதுதான். இந்த நாவல்களில் வரும் குழந்தைகளின் உள்ளம், அங்கு நிகழும் சம்பவங்களைக் கண்டு  மெல்ல முதிர்ச்சி அடைவதைப் போலவே சில புரிதல்களை நோக்கி வாசகர்களை இவை செலுத்துகின்றன.  எங்கோ பிறந்து உள்நாட்டிலோ அயல்நாட்டிலோ அலைக்கழிக்கப்படும் மக்களின் வாழ்வை அனைத்து ஈழ எழுத்தாளர்களும் உரைத்துள்ளனர். அவை எதையும் வாசிக்காதவர்கள் வாசு முருகவேலிடமிருந்து துவங்கலாம்.  அவை அனைத்தையும் வாசித்தோர் அந்தப் பெரும் பயணத்தில் சொல்லாமல் விட்டுப்போன  இடைவெளிகளை வாசு முருகவேலின் வழியாக அறிந்துகொள்ளலாம்.

No comments:

Post a Comment