Friday, February 25, 2022

திலுகோத்தி சாலுமா 2.0

மணி எம்,கே. மணி அவர்களின் மூன்றாவது சிறுகதை தொகுப்பான "ஆஷஸ் & டைமண்ட்ஸ்" யாவரும் பதிப்பகம் வாயிலாக வெளியாகியுள்ளது. அந்த தொகுப்பிற்கான எனது முன்னுரை

திலுகோத்தி சாலுமா 2.0

ஒரு வாசகனாக நான்,  மணி எம்.கே.மணி அவர்களின் கதைகளை  இணைய இதழ்களில் தேடி வாசிப்பதுண்டு. அவர் ஒரு  சிறுகதையை கச்சிதமாக சொல்வதை கவனித்தபடி இருப்பேன். அந்த வகையில் அவருடைய முந்தைய தொகுப்பான "டிவைன் ஹார்ட் டிஸ்கோ ஓட்டல்" சென்ற வருடத்தில் வெளியான சிறுகதை தொகுப்புகளில் எனக்கு மிகவும் பிடித்திருந்த  ஒன்று. அதன் இரு கதைகளை ஊரடங்கு காலத்தில் எழுத்தாளர் ஜெயமோகன் தன்னுடைய வலைதளத்தில் ‘வாசிக்க வேண்டிய கதைகளாக’ சொல்லி சுட்டி அளித்திருந்தார். சென்ற  தொகுப்பில் பல கதைகள் காமம்/கள்ள உறவு ஆண்பெண் உளநிலை ஆகியவற்றை சுற்றி  வந்தன. கதாசிரியருக்கு  அதன் வழி வாசகனுக்கு  கிளர்ச்சியூட்டும் எண்ணம் இல்லை. ஆனால் அவற்றில் காமம் பேசுபொருளாக இருந்தது.  இந்த வருடம் அவருடைய அடுத்த தொகுப்பாக “ஆஷஸ் அண்ட் டைமண்ட்ஸ்” வெளியாகிறது.  ஒப்பிடுகையில் இந்த தொகுப்பில் அவரது முந்தைய கதைகளின் மையப்பொருளைவிடவும் தீவிரமான கதைக்கருக்களைக் கையாண்டுள்ளார். ஒரு வியப்பைக் கடந்து அதன் பலவகைப் பக்கங்களையும்  அலசும் இடத்திற்கு இந்தக் கதைகள் இட்டுச் செல்கின்றன.



ஒரு யதார்த்தகதை எழுதும் சிறுகதை ஆசிரியர் தடாலடியாக திருப்பங்களை வைக்க இயலாது. அதிக கதைத் திருப்பங்கள் வாசகருக்கு அது திரைப்படம் பார்ப்பது போல உணர்வை தந்து விடுகிறது. தமிழ் மனதிற்கு திரைப்படம் என்றால் வணிகப்படம்தான் என்பதால் அந்த அளவீட்டோடு சொல்லப்படுவது இது. திரைப்படம் என்பதே யதார்த்தத்தில் காண இயலாத கற்பனைகளின் வீச்சு கொண்டது. ஆகவேதான் திரைப்படங்களுக்கு இணையாகவே திரைப்படக் கலைஞர்களின் பேட்டிகள் உரையாடல்கள் மிகவும் அதிகமாக காணப்படுகின்றன.  அவர்களது வாழ்க்கைத் தொடர்கள் ரசிக்கப்படுகின்றன. இடிக்கப்படும் ஒரு திரையரங்கம் கூட பல கொண்டாட்டங்களை நினைவு படுத்துகிறது. ஆகவே,  ஒரு சிறுகதை ஆசிரியருக்கு சினிமா உலகம் போல சுவாரசியமான ஒன்று உண்டா என்று தோன்றும். காரணம் அங்கு திடீர் வளர்ச்சி திடீர் வீழ்ச்சி எல்லாமே யதார்த்தமாக நிகழ்பவை.  ஒரு யதார்த்த கதை ஆசிரியர் தடாலடி திருப்பங்களை ‘அங்கு’ வைக்கலாம். விசித்திரமான சம்பவங்கள், மனதை மயக்கும் வர்ணனைகள், அறிந்த மனிதர்கள் மீதான கிசுகிசுக்கள் ஆகியவை ஆர்வமூட்டுகின்றன. அங்கிருந்து வரும் கதைகள் வெகுஜன வாசகருக்கு அளிக்கும் உவகையை கருத்தில் கொள்பவை. அசோகமித்திரன் போல விதிவிலக்குகள் உண்டு. ஆனால் அசோகமித்திரன் அதை ஒரு இலக்கியவாதி பிற துறையை அணுகுவது போல அணுகுபவரே அல்லாது அவருக்கு அதன் ஆரவாரத்தில் பங்கு இல்லை. அவருக்கு  அந்த துறை  மீதான அங்கதம் / விலக்கம் தெரிகிறது.


இவ்வாறு அந்த துறையில் பொது வாசகருக்காக  எழுதப்படுவது மற்றும் அதன் மீது அங்கதம் / விலக்கம் கொண்டு எழுதப்படுவது என இரு எல்லைகளில் தான் அவை வாசிக்கப்படுகின்றன. அதற்கு இடையே பல கோடுகள் உண்டு. அதில் ஒரு வரிசையில் எழுத்தாளர் சுஜாதா, இயக்குனர் தாமிரா, எழுத்தாளர் விஜயமகேந்திரன் ஆகியோர் தங்கள் கதைகளை  எழுதியுள்ளனர். திரையுலகில் கிடைக்கும் வாய்ப்பு, வாய்ப்புக்காக செய்யும் சமரசம், கை நழுவிய வெற்றித் தருணங்கள், வெற்றிகரமாக இருக்கும் தருணத்தில் பிரிந்த சாதனையாளர்கள் என எளிதில் வாசகர் தன்னை அந்தக் கதைகளோடு இணைத்துக் கொள்ள முடியும். அவை மிகவும் சுவாரசியமானவை.


அந்தக் கதைகளுக்கும் ஒரு வெளியாளாக அதை நோக்கும் அசோகமித்திரன் கதைகளுக்கும்  இடைப்பட்ட    இன்னொரு இடம் உண்டு. எழுத்தாளர் எம்.கே.மணி அந்த இடத்தில்தான் களமாடுகிறார். அதனாலேயே அவை ஒரு புதிய களமாக உணரச் செய்கின்றன. நல்ல சுவாரசியமான கதைகள்.  பெரும்பாலும் சினிமா மனிதர்கள் பற்றிய கதைகள். ‘ராவான’ வார்த்தைப் பிரயோகம். திரையுலக வார்த்தைகளில் சொல்ல வேண்டுமெனில் ஒரு ஷாட்டில் புரிய வைப்பது போல கச்சிதமான மொழிநடை. அவை புரியவைக்கின்றன என்பதுதான் இங்கு குறிப்பிடத்தக்கது. அவர் சொல்லுவதில்லை



ஆசிரமம் நடத்தும் ஒருவர். அவரது மோசமான இன்னொரு  பக்கம் கதை சொல்லிக்குத் தெரிந்த ஒன்று. அங்கு தன் அக்காவின்  தோழியின் மகளை சேர்க்க வேண்டும். அங்கே கதைசொல்லியின் தவிப்பும் அவர் அங்கு ஏதும் சொல்லப்போவதில்லை, தன்  நண்பரை மாட்டிவிடப்போவதும் இல்லை என்பது துல்லியமாக வெளிப்படும்  வரிகள் ஒரு சிறந்த உதாரணம். 


// அக்காவிடம் நான் என்னென்னவோ சொல்ல விரும்பினேன். உலகு வெகுளித்தனத்தில் திளைத்து தன் பாட்டிற்கு இருக்கிறது. அவர்கள் கடவுளை எதிர்பார்க்கிறார்கள். நன்மையை எதிர்பார்க்கிறார்கள். என்னுடைய மொழியை எவ்வளவு விரயம் செய்தாலும் அவர்களுக்கு உண்மை என்பது உடைந்த கண்ணாடிப் பாத்திரத்தின் பல்வேறு எதிரொளிப்புகள் என்பது புரியாது.//


தெய்வமே என்கிற ஒரு கதை, ஒரு கதைக்குள் மூன்று சிறுகதைகள் கொண்டது. அம்மூன்றும் ஒன்றை ஒன்று மாற்றுகிறது, புரியவும் வைக்கிறது. அதற்கு மேல் புரியாமல் ஒன்று உண்டு அதை தெய்வத்திடம் விட்டுவிடுகிறது.


வெறும் சாட்சியாக மட்டுமே கடந்த  அசாதாரண நிகழ்வுகளின்  தொகுப்பு போல எந்த இடத்திலும் ஒரு விலகல் தன்மை கொண்டவை இவரது கதைகள்.  ஒவ்வொன்றும் இந்த யதார்த்த உலகில் இருந்தும் அந்த உலகுடன்  ஒன்றிணையாத  முழுவதும் விலகாமல் ஒட்டிக் கொண்டும் இருக்கிற  ஒருவனின் கசப்புகள். இந்தத் தொகுப்பில் அவனது தனிமையை  வாசகருக்கு  கள்ளாக மாற்றிப் படைத்திருக்கிறார்.  


திட்டமிட்டு செயல்படாமல் அதிகம் உணர்ச்சி வேகத்தில் இயங்கும் மனிதர்களைக் கொண்ட உலகத்தில் பெரும்பாலும் அபத்த சூழல்களே உருவாகின்றன.  அது காண்பவருக்கு நகைப்பையே உருவாக்கும். அது வாசகரை தொற்றிக்கொள்ளும். ஒரு  "black  humour". அதுவும் இவருடைய பலம். அநாதை இல்லங்களுக்கு உருப்படி  அனுப்பும் தொழில் செய்பவருக்கு அது ஒரு பிளாக்மெயில் வழியாக வரும் சொத்து ஒன்றைக் குறித்து சொல்லும் இடம் ஒரு உதாரணம் ( தாயின் மணிக்கொடி )

"அறை எண் நாற்பது என்பதால் ஜிகே நாற்பது லட்சம் கேட்டார். மற்றும் பாண்டியில் இருக்கிற இந்த தாயின் மணிக்கொடி மன நல ஆஸ்ரமத்தை கொசுறாகக் கேட்டார்."


துணை நடிகர்களில் வீட்டுச் செலவிற்காகத் தன்னுடைய கிட்னியை விற்கும் ஒருவரின் கதை மிகவும் பாரமானது. பிறிதொரு சமயத்தில் அவரால் தன் மைந்தனையும் காப்பாற்ற இயலவில்லை. இறுதியில் அவர் புகழ்பெற்ற நடிகராக ஆகிறார் என்று முடிகிறது. ஆனால் ஒருவன் தன் வேட்கைக்காக எதையெல்லாம் பலி கொடுக்க வேண்டியிருக்கிறது  என்பது அதன் வேதனையான இன்னொரு பக்கம். சுயமரியாதை முதற்கொண்டு  எதையெல்லாம் பலிகேட்கிறது இந்த உலகம் என்று யோசிக்கவும்  வைக்கிறது. இங்கே நாம் காணும் துணை நடிகர்களின் வறுமை என்பது வெறும் பட்டினி மாத்திரம் அல்ல என்று சொல்லும் கதை அது. அது போன்றே உதவி இயக்குனர்களின் கதையை சொல்லும் "விக்ரமாதித்யர்களின் டொக்கு கத்தி" என்கிற கதை. அவர் சற்று மனநலம் பாதித்த தன தம்பியையும் வைத்து பராமரிக்கிறார். பின்னொரு காலத்தில் சீரியல்கள் வழி காசும் சற்று புரள்கிறது.  ஒரு ஆசிரமத்திற்கு பணம் கட்டி தம்பியை அங்கே சேர்த்தபின், சொற்ப நாட்களில் தம்பி இறந்து போகிறான். அதற்குப் பிறகான வாழ்க்கையை வர்ணிப்பது கவனிக்கத்தக்கது. 


"எனது வாழ்வில் நான் அது போன்ற ஒரு நிம்மதியை அடைந்ததே கிடையாது. ஒரே நேரத்தில் இருவரும் விடுதலை அடைந்திருக்கிறோம். ஒரு மரணம் நமக்கு அதிர்ஷ்டம் போல வந்ததை வியந்து சந்தோசம் கொள்ளும்போது அதைக் கொணர்ந்த இந்த வாழ்வைப் பற்றி சொல்ல என்ன உண்டு? நான் எனது சினிமா வாழ்வை மீண்டும் அடைந்தேன். "





இந்தத் தொகுப்பின் சினிமா பின்புலம் இல்லாத ஏனைய கதைகளும் கவனிக்கத் தக்கவை.  நத்திங், தசரதம், உங்களுக்கு என்னைத் தெரியாது!, இதான் மச்சான் லைப்! உள்ளிட்ட கதைகள். அசாதாரண மனிதர்கள் சாதாரணமாக வந்து போகும் கதைகளாக உள்ளன.  அசாதாரண மனிதர்கள் என்பது அவர்கள் செய்யும் செயல்களால் மட்டும் அல்ல. அது அவர்கள் எதிர்கொண்ட வாழ்க்கைச் சூழலும் கொண்டுதான். அதில் வைரங்களானவர்களையும் புழுதியாய்ப் போனவர்களையும் இத்தொகுப்பில்    காணலாம்


தொகுப்பிற்கான முன்னுரை என்பது வாசகருக்காக ஒரு நாற்காலியை இழுத்துப் போடுவதுதானே தவிர  இழுத்துப் போட்ட நாற்காலியில்  தானே அமர்வது அல்ல என்பதால் இதோடு உங்கள் சுவாரசியத்திற்கு இடம் விட்டுவிட்டு நகர்கிறேன்.


"திலுகோத்தி சாலுமா" என்பது எம்.கே.மணி அவர்களின் முந்தைய தொகுப்பின் ஒரு கதை. ஒரு இசையமைப்பாளர் பாடல் வரிகள் வருவதற்கு முன்பாக வெற்று வார்த்தைகளை நிரப்பி பாடும் வரி அது. அதை இவ்வாறும் பொருள் கொள்ளலாம்.  ஒரே நேரத்தில் மிகவும் ரசிக்கத்தக்கதாகவும்  ஆனால் அதற்கான பொருள் விளங்காமலும் போகும் வாழ்வின் அபத்த சூழ்நிலைகளை உள்ளடக்கிய வார்த்தைகள் என்று. இந்தமுறை அங்கு    தபேலா பின்னணி இசையுடன் ஆர்மோனியமும் ஒலிக்க இன்னும் நுணுக்கமான  "திலுகோத்தி சாலுமா" தருணங்களை இந்த “ஆஷஸ் அண்ட் டைமண்ட்ஸ்” தொகுப்பில் நீங்கள் வாசிக்கலாம். 


ஆன்லைனில் புத்தகம் வாங்க :- be4books Website link

No comments:

Post a Comment