நான் யார்?
எங்கிருந்து வந்தேன்? போன்றவை அடிப்படைக் கேள்விகள். மனிதனைத் தவிர வேறு உயிர்களுக்கு இந்த ஆர்வம்
ஏதும் இல்லை. ஆறாம் அறிவின் பக்க விளைவாக இதை சொல்லலாம். இந்த குழப்பம்
இருந்தாலும்  அதை பெரிதாக பற்றிக்
கொள்ளாமல் உலகியலில் ஆழ்வது என்பது பெரும்பான்மையினர் செய்வது. இதை அறிய வேண்டி
உலகியலைத் துறந்து இந்த தேடலை ஒட்டி அலைவது 
ஞானியருக்கானது. இந்த குழப்பம் ஒரு தருணத்தில் அனைவருக்கும்
எழக்கூடியதுதான். உலகியலில் ஒருவித ஞான மரபின் தொடர்பில் இருப்பவருக்கு பற்றிக்
கொள்ள ஒரு பிடிப்பு போதுமானது. அவர்கள் தனக்கான குருவை மத சித்தாந்தத்தைக்
கண்டடைகிறார்கள். ஆனால் எதையும் கேள்விக்கு உள்ளாக்கி தானே  முழுதும் அறிய விரும்புபவர்க்கு உலகியல்
கைகூடாமல்  ஞானமும் கைகூடாமல் போவதே
சாத்தியமானதாகிறது. முற்றிலும் தேடலில் அமர்ந்த புத்தனே தன வீட்டை விட்டு காட்டில்
சென்று அமர்ந்து பல  ஆண்டுகள் கழித்துதான்
அந்த உண்மையை அறிகிறான். புத்தனுக்கும் முன்னால் தோன்றிய கிருஷ்ணனும்
பாண்டவர்களின் வனவாச காலம் முழுவதும் ஊழ்கத்தில் அமர்ந்துதான் இதை அறிகிறான்.
ஆனால் மனிதனின் ஆசை என்பது அளப்பரியது. அது, தான் உலகியலில்
இருந்தபடியே அந்த அடிப்படைக்கு கேள்விகளை அறிய முடியுமா என்று தூண்டியபடியே
இருக்கிறது. தினகரன் அத்தகைய பேராசை கொண்ட ஒருவர். 
அடிப்படைக் கேள்விகள் என்பது உடநிடத காலத்தில் வரும் நசிகேதன் முதல் தாஸ்தாவ்யெஸ்கி
வரை அனைவரையும் அலைக்கழித்த ஒன்றுதான். தினகரன் அனைவரையும் வாசித்திருக்கிறார்.
காணும் அனைத்தினையும் அதற்கான
சமிக்ஞைகளாக  கருதுகிறார்.  மரணம் என்பது ஜீவாத்மாவின் ஒரு தொடர்ச்சியே
வினைப்பயன் என்றெல்லாம் செல்லும் நம் சிந்தனை மரபின் ஊடாக அவர் மரணம் என்பது ஒரு 'இடைவெளி'தான் 
என்கிற புரிதலை அடைகிறார். அந்த புரிதல் வரை அவரை செலுத்தியவைகளின் தொகுப்பு இந்த நாவல் 
தினகரன் மெத்த படித்தவர்
ஆனால் ஒரு கடைநிலை பணியிலேயே தன்னைப்
பொருத்திக் கொள்கிறார். பெரும் அலுவலக பொறுப்புகள் தன் தேடலுக்கு இடையூறாக
அமைந்துவிடும் என்று அவற்றைத் தவிர்க்கிறார். ஆனால் அவரது உடல் இச்சையை அவ்வாறு
விலக்கிவைத்தவர்  இல்லை. அது சார்ந்து ஒரு
அலைக்கழிப்பே அவருக்கு  எஞ்சி நிற்கிறது.  முற்றிலும் அதில் ஆழ்ந்து கிடப்பது. மற்றோரு
தருணத்தில் இணையின் அழைப்பையும் தவிர்த்துவிட்டு தான் ஒரு இம்போடெண்டோ என்று
குழம்புவது என அலைபாய்கிறார். அலுவலக வேலையிலும் முழுக்கவனம் செலுத்த இயலவில்லை.
ஒரு வேலையில் இருக்கும்பொழுது இந்த
சிந்தனைக்கு ஆட்பட்டு அப்படியே கால நேரம் தெரியாமல் அமர்ந்திருக்கிறார். அவர்  ஒரு தருணத்தில் தனக்கு மனநோய் இருக்கிறதோ என்று
கருதி அதற்கான சிகிச்சையும் மேற்கொள்கிறார். அத்தகைய தருணத்தில்தான் ஒரு உறவினரின் மரணம்
அவருக்கு ஒரு புரிதலை கொடுத்துவிட்டுச் செல்கிறது. 
தினகரனின் அவஸ்தையை
சுற்றியுள்ள நபர்கள் நன்றாக புரிந்து  கொள்கிறார்கள்.
அவர் ஏமாற்றவில்லை என்பதும் அவருக்கு உண்மையாகவே அந்த குழப்பம் இருக்கிறது என்றும்
அதற்கு தன்னால் இயன்றதை செய்யவும் அவர்கள் சித்தமாக இருக்கிறார்கள். ஹோட்டல்
சர்வர் முதல் மனைவிவரை அனைவரும் அதக அனுசரணையாகவே செய்கிறார்கள். ஆனால், அவருடைய கேள்விகளுக்கான பதிலாக  இந்த நாவல் தெளிவாக ஒன்றை சொல்லிவிடுகிறதா? என்றால் இல்லை. இது ஒன்றும் பெரிய ரகசியம் இல்லை. இதன் முடிவு என்னவாக
இருக்கும் என்பது இந்த நாவலைக் கையில் எடுக்கும்  
அனைவருக்கும்  தெரிந்த ஒன்றாகத்தான்
இருக்கும். அப்படி ஒன்று நிகழ்ந்திருந்தால் இன்று இதை பற்றி நான் எழுதிக்
கொண்டிருக்க மாட்டேன். இந்நேரம் இந்த நாவல் புனித நூலாக ஆகி உரைகள் எழுதப்
பட்டிருக்கும். அதிருஷ்டவசமாக அல்லது
துரதிஷ்டவசமாக    அவ்வாறு ஆகாமல்  இலக்கிய தரத்துடன் நின்றுவிடுகிறது. 
நாவலின் பெரிய  பலம் என்பது அதில் உள்ள ஒரு அப்பட்டமான
அணுகுமுறை. தன்  தயக்கம், தோல்வி, அவமானம் என அனைத்தையும் பாசாங்கு இல்லாமல் முன்
வைக்கிறார். தாஸ்தாவ்யேஸ்கி மரணத்தின் விளிம்பு வரை சென்று மீண்டு வந்ததை போல
தானும் முயற்சிக்க எண்ணி மாடியின் விளிம்பு வரை சென்று கீழே குதிக்க யோசிக்கிறார்.
முழு பிரக்ஞையுடன் அதைச செய்வதால் அவர் குதிக்கவும் இல்லை. அதே சமயம் அவரது தேடல்
வெற்றியடையவும் இல்லை. இந்த நாவல் முழுவதுமே இருக்கும் குழப்பம் என்பது இந்த  பிரக்ஞை உள்ள மற்றும் அற்ற நிலைகளின்
குழப்பமாக இருப்பதுதான். தாஸ்தாவ்யேஸ்கி நாவலின் நாயகர்கள் போல தினகரன் முழுவதாக
ஒரு பேரதிர்ச்சியைக் கண்டு செயலிழக்கவும் இல்லை. அல்லது இந்திய மரபின் ஞானத்தேடல்
போல முற்றிலும் தன்னை விடுவித்துக் கொள்ளவும் இல்லை. கீழைத்தேச மற்றும் மேலைத்தேச
ஞான மரபை அறிந்தவராக இருப்பதால் மேலும் மேலும் என்று அதை துழாவியபடியே செல்கிறார்.
அவர் நிலையழிந்து போகும் தருணங்கள் வருகின்றன. காசு  சுண்டிவிடும்போதும், அலுவலக இயந்திரத்தைக் கண்டு அமர்ந்திருக்கும்போதும் அவருக்கு காலம் தூரம்
கடந்த நிலை உருவாகிறது. ஆனால அவர் மூர்ச்சையாவதும்  அல்லது உடனே விழிப்படைவதும் உண்டாகிறது. சாவு
ஒரு உருவம் கொண்டு அவருடன் பேசாத துவங்குகிறது. அவர்   அதனுடன் 
உரையாடத துவங்குகிறார். இதில் அகவெளியில் நிகழ்வது எது? புறவெளியில் நிகழ்வது எது? என்கிற குழப்பம் அவருக்கும் உண்டாகிறது.
சுற்றியிருப்பவர்கள் அது உணர்ந்தாலும் கண்டுகொள்வதில்லை. இறுதியில்  இடைவெளி என்ற 
சித்தாந்தத்தை பற்றிக் கொண்டதும் அதற்கேற்ப சில பரிசோதனைகளை செய்து
தன்னுடைய  ஆய்வை நிறுத்திக் கொள்கிறார். 
நாவலின் மற்றோரு பலம்
என்பது பிறழ்வு நிலையை இலகுவாக எழுதியிருக்கும் நடை. சட்டை மாற்றுவது போலத்தான்
உயிர் உடலை மாற்றுகிறது.. காந்தி வெற்றுடம்புடன் நின்றததுதான் அவரது தற்காப்புக்கு
முதன்மை காரணம்  போன்ற வரிகள்  மூலம் பல நீண்ட விவாதங்களை எளிதில்
தாண்டிச்  செல்கிறார்.  மூணு சிட்டு விளையாட்டால் அவர் காணும் நுட்பம்
பிடிபட்டதும் அதிலிருந்து விலகுவது. அவர் கல்பனா என்ற
பெண்ணுடன் அவருக்கு இருந்த உறவு உண்மையா அல்லது அவருடைய புனைவா ( கல்பனா
பெயர்க்காரணம்) என்பது வாசிப்பை சுவாரஸ்யமாக்குபவை. ஆனாலும் இது நாவலின் முடிவை
நோக்கி எந்த வித எதிர்பார்ப்பையும் உருவாக்கவில்லை என்பதும் உண்மை 
|  | 
நாவலின் நாயகன்
தினகரனுக்கும், நாவலாசிரியர் எஸ்.சம்பத்துக்கும் பெரிய
வேறுபாடு எதுவும் இல்லை. இந்த நாவலின் 
முன்னுரையை வெங்கட் சாமிநாதன் எழுதியிருக்கிறார். எழுத்தாளர். சம்பத் பற்றி அவர் அளிக்கும்  சித்திரம் மிகவும் ஆர்வமானது. பழுப்பு நிறப் பக்கங்களில்
சாரு அனைத்தையும் தொகுத்து எழுதியிருக்கிறார். 
சம்பத்தின்  மரணமும்  அவரது பதட்டமும் அலைச்சலும் கொண்ட  வாழ்க்கை சம்பவங்களோடு இடைவெளி தினகரனை  வாசிக்கையில் அந்தப் பின்புலம் இந்த நாவலை  இன்னொரு தளத்திற்கு இட்டுச்  செல்கிறது என்பது மறுப்பதற்கில்லை.  சென்றமுறை எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதியை
சந்தித்த பொழுது அவர் ஒரு தகவல் கூறினார். எழுத்தாளர் சம்பத் அறுநூறு பக்க நாவல்
ஒன்று எழுதி சரிபார்க்க இவரிடம் கொடுத்துள்ளார். பதினைந்து நாட்கள் கழித்து
நாவலைப் பற்றி அவரிடம் கருத்து கேட்கையில் "நாவலைப் படித்துக்
கொண்டிருக்கிறேன்' என்று இந்திரா பார்த்தசாரதி பதில் அளிக்கிறார்.
இத்தனை நாட்களில் முழுமையாக உங்களை வாசிக்க வைக்கவில்லையென்றால் அது நாவலின்
தோல்வியே என்று கூறியபடி, அந்த நாவலை எரித்துவிடுகிறார் சம்பத். இன்று
போல அப்பொழுது கணினியில் சேமிக்கும் முறையெல்லாம் வழக்கத்தில் இல்லை. கையால்
எழுதியதுதான். அதைத்தான் முற்றிலுமாக எரித்து சாம்பலாக்கியிருக்கிறார். இடைவெளி
நாவல் வாசித்தபின், அந்த நிகழ்வை எண்ணிப்பார்க்கிறேன்.  இன்று அந்தப் பிரதி  இருந்திருந்தால் அது ஒருவேளை அவரை
தமிழிலக்கியத்தின் தாஸ்தாவ்யேஸ்கியாக 
அடையாளம் காட்டியிருக்கும் என்று எண்ணவைக்கிறது இடைவெளி என்னும் இந்த நூறு
பக்க   நாவல் காட்டும் சித்திரம். 

மிக நுட்பமாக வாசித்து, தத்துவரீதியான விளக்கங்களயும் அலசல்களயும் அளித்துள்ளீர்கள். சிறிய நாவலுக்கு அருமையான, ஆழமான நீண்ட கட்டுரை. நான் வாசித்தபோது இந்நாவலை மரணத்தின் மீதான ஆய்வு என்பதுடன் நிறுத்திக் கொண்டேன். அதை நீங்கள் முழு வாழ்வின் மீதான விசாரணையாக நீட்டித்துள்ளது அருமை.
ReplyDeleteமிக்க நன்றி திரு.ஜெகதீசன்
ReplyDeleteநாவலைப் படிக்கத்
ReplyDeleteதூண்டும் அருமையான விமர்சனம்
வாழ்த்துக்கள்
மிக்க நன்றி திரு.இஷ்ரஜ்
ReplyDelete