Friday, January 13, 2023

சுவருக்குள் சித்திரங்கள் மற்றும் கம்பிக்குள் வெளிச்சங்கள்

மரண வாக்குமூலம் மிகவும் கருணையுடன் பரிசீலிக்கப்படுகின்ற ஒன்று. மரணத் தருவாயில் எந்தவொரு மனிதனும் பொய் சொல்லமாட்டான் என நம்பி ஏற்கப் படுவது. தியாகு, தான் நேரடியாக சம்பந்தப்பட்ட வழக்குகளில் பாதிக்கப் பட்டவர்களின் மரண வாக்குமூலம் பெறப்பட்டு, வழக்கானது அதற்கு தோதாக  மாற்றி  எழுதப்பட்ட விதத்தைச் சொல்கிறார். தியாகுவும் நண்பர்களும் 'அழித்தொழிப்பு' செய்ய வேண்டி சேர்மேன் ஒருவரைக் கொல்கிறார்கள். அதைப் பார்த்த இருவர் ஏழுபேர் சேர்ந்து கொன்றதாக வாக்குமூலம் அளிக்கின்றனர். ஆனால்  இவர்கள் ஏழு பேர் அல்ல ஐந்துபேர்கள் தான். ஆனால் காவல்துறையினர் அந்த வாக்குமூலத்தை உண்மையாக்கவேண்டி இருவரை சேர்க்கிறார்கள். மற்றொன்று, ஒரு மணியக்காரர் ஒருவரை 'அழித்தொழிப்பு' செய்யும் போது அவர் குற்றுயிராக தப்பித்து விடுகிறார். அவர் தனது வாக்குமூலத்தில் தனது பகைவர்கள் பெயரை சொல்லிவிடுகிறார். நடுவர் நீதிமன்றம் அவர்களுக்கு தண்டனை வழங்கிவிடுகிறது. அதாவது 'அழித்தொழிப்பு'  செய்த தியாகுவுக்கும் தண்டனை ; குத்துப்பட்டவர் வாக்குமூலத்தில் அவராக சொன்ன அவருடைய பகைவர்களுக்கும் தண்டனை. சில விஷயங்களை தியாகு தர்க்கரீதியாக கேள்வி கேட்கும் போது நம்மால் எதிர்த் தரப்பை எடுக்க இயலவில்லை.



தியாகு அவர்கள் தனது  ஆரம்பகால வாழ்க்கையையும் சிறை அனுபவங்களையும்  சுவருக்குள் சித்திரங்கள் மற்றும் கம்பிக்குள் வெளிச்சங்கள் ஆகிய புத்தகங்களின் வாயிலாக எழுதியுள்ளார். அவரது இயற்பெயர் தியாகராஜன். கல்லூரி காலத்தில் அரசியலில் ஆர்வம் கொண்டு, பின் நக்ஸல்பாரி இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு அதில் பங்காற்றி வர்க்க எதிரிகளை 'அழித்தொழிப்பு' செய்கிறார். அதற்காக தூக்கு தண்டனை பெறுகிறார். அது பிறகு ஆயுள் தண்டனையாக குறைக்கப் பட்டு 1970 முதல் 1986 வரை சிறையில் இருக்கிறார். அதன் முதல் நான்காண்டு அனுபவங்கள் முதல் புத்தகமும் அடுத்த நான்காண்டு அனுபவங்கள் இரண்டாவது புத்தகமுமாக வந்திருக்கின்றன. கால ஒட்டத்தில் முன்னும் பின்னுமாக சென்று வரும் சித்தரிப்புகள் உண்டு. இதன் தொடர்ச்சி "விலங்கிற்குள் மனிதர்கள்" இன்னமும் புத்தக வடிவம் பெறவில்லை. 


சேரிப்பெண்ணை மணியக்காரரின் இளைய மகன் வம்பிழுக்க அதைத் தட்டிக் கேட்கப் போன அவளது அண்ணனுக்கு கத்திக்குத்து கிடைக்கிறது. அதை முறையிட எந்த அரசுத்துறைக்கும் கேட்க செவிகள் இல்லை என்று மக்கள் உணர்ந்த பின்னர் அவர்களுக்காக நியாயம் செய்ய  அங்கு களமிறங்குகிறார்கள் நக்சல்பாரிகள். தியாகு அவர்களில் ஒருவர். மணியக்காரரை அவர்கள் அழித்தொழிக்க முயல்வதின்  மூலம் பசுமையான தஞ்சையில் ஒரு சிவப்புத்துளி படர்கிறது. அதன் பின்னர் சிறிது காலம் சென்றபின்  திருச்சி சேர்மேனை அழித்தொழித்து கைதாகி சிறைக்குச் சென்றபின்னர் சிறைக்கூடம் அவருக்கு ஒரு போதிமரமாகிறது. அங்கு நிகழும் உரையாடலும் சந்திக்கும் மனிதர்களும் சிறையில் நிகழும் சம்பவங்களும் கலந்து ஒரு புரிதலை அளிக்கிறது. 


மூத்த தோழர்கள் ஏஜிகே எனப்படும் ஏ.ஜி.கஸ்தூரிரங்கன் ஏஎம்கே எனப்படும் ஏ.எம்.கோதண்டராமன் ஆகியோர்களின் ஆளுமைச் சித்தரிப்பு முக்கியமானது. தலைவர்கள் எங்கிருந்தாலும் தலைவர்கள் தான். அவர்கள் காவலர்களுக்கும் "தலைவரே" தான். ஏ.ஜி.கே அங்கும் சக கைதிகளின் வழக்குகளுக்கான மேல் முறையீடு முதல் காவலர்களின் உரிமைக்குரல் உரை அனைத்திற்கும் குரல் கொடுக்கிறார்; போராடுகிறார். சாரு மஜூம்தார் கண்ணதாசன் என ஆளுமைகளை சந்திக்கும் போதும் சரி; சந்துரு, பாலகிருஷ்ணன் போல சக கைதிகளை சந்திக்கும் போதும் சரி; ஒவ்வொருவரிடமும் மாணவராக கற்றுக் கொள்ளவும் வழிகாட்டியாக  சொல்லித்தரவும் தோழர்களாக தோள் கொடுக்கவும் தியாகுவிற்கும் அவரது நண்பர் லெனினிற்கும் பல சந்தர்ப்பங்கள் வாய்க்கின்றன. தியாகுவின் வாசிப்பும் சிந்தனையும் ஒரு கட்டத்திற்கு மேல் நக்ஸல் இயக்கம் மீதான தனது நிலைப்பாட்டை  மறுபரிசீலனை செய்யும் இடத்திற்கு அவரை இட்டு வருகின்றன.  அங்கு தோழர்கள் கொள்ளும் கோபமும் ஒருவருக்கொருவர் பேசாமல் இருப்பதும் பின் அவர்கள் உரையாடி தெளிவுறுவதும் என உணர்ச்சிகளும் சிந்தனையும் கலந்த பக்கங்கள்..


சித்தரிப்புகள், சிறைக்கைதிகளின் வாழ்வை விவரிக்கும் போது அவர்களின் கடந்தகாலத்திற்குச் சென்று திரும்புகின்றன. அங்கு அவை ஒவ்வொன்றும் குறுநாவலாகின்றன. தற்போது அவர்களின்  நிலையை சொல்லும் போது கறாரான மதிப்பீடாக ஆகின்றன. சிறைக் கலவரங்களைச் சொல்லும்போது ஆவணங்களாகி விடுகின்றன. சீவலப்பேரி பாண்டி வரும் இடங்களில் மர்மநாவலாகி விடுகின்றன.  தியாகுவும் லெனினும் உடனிருப்பவர்களுக்கு மார்க்ஸியத்தை சொல்லித்தரும் போது தத்துவ நூலாகிவிடுகின்றன. எந்த இடத்திலும் வாசிப்பு சுவாரசியம் குன்றாத ஓட்டமாகவும் விளங்குகின்றன. 




மருத்துவமனையும், நீதிமன்றமும் காவல் நிலையமும் ஒருமுறை உள்ளே காலடி எடுத்து வைத்தவரை தொடர்ந்து இழுக்காமல் விடாது; ஆகவே அந்தப் பக்கம் போகக் கூடாது என்று ஊரில் சொல்வார்கள். நானும் எந்தக் காலத்திலும் ஒரு மனிதன் சிறை செல்லக் கூடாது என்றே விரும்புகிறேன்.  ஆனால் அந்தக் காலம் அப்படி ஒரு லட்சியவாதத்தை சுமந்திருக்கிறது. அதற்குள்ளேயே, சிறைக்குச் சென்றதை சாதனையாக்கி அதன் நேரடி உலகியல் பலனை அரசியல் அதிகாரங்கள் வழி கைப்பற்றியவர்களும் உண்டு. ஆனால், கல்லூரி மாணவராக  இளம் போராளி தியாகு அவர்களின் முதிரா வேகம்,  சிறைக்குள் சித்திரங்களையும் கம்பிகளுக்கிடையே வெளிச்சங்களையும் மட்டும் கண்டடைந்திருக்கிறது. 


இந்த வருடத்தின் முதல் வாசிப்பே இவ்விரு புத்தகங்களாக அமைந்தது மகிழ்ச்சி. எனக்கு கதைசொல்லி என்றால் கி.ராஜநாராயணன் யுவன் சந்திரசேகர் ஆகியோர் நினைவிற்கு வருவார்கள். இனி தியாகுவும் நினைவிற்கு வருவார். இந்தப் புத்தகங்களின் இலக்கிய இடமும் இலக்கியப் பிரதிகளுக்குச் சளைத்தது அல்ல.


விஜயா பதிப்பத்தின் வெளியீடாக வந்துள்ளன. 


Saturday, December 31, 2022

Bye Bye 2022

2022 ம் ஆண்டும் எனக்கு ஒரு குறிப்பிடத்தக்க வருடமாக இருந்திருக்கிறது என்றே தோன்றுகிறது. 




புனைவுகள்

இவ்வாண்டில் மூன்று சிறுகதைகள் எழுதினேன். அவை வனம் மற்றும் புரவி இதழ்களில் வெளியாயின

கட்டுரைகள்

1) சூதாடி நாவல் குறித்த கட்டுரை கனலியில் வெளியாகியது

https://kanali.in/suthadi/


2) 'அ.முத்துலிங்கம் கட்டுரைகள்' குறித்த கட்டுரை 'ஆறாம் திணையின் கதவுகள்'தொகுப்பில் (விஜயா பதிப்பகம்)  வெளியானது


3) அல்கொஸாமா  நாவல் குறித்த கட்டுரை வல்லினம் இதழில் வெளியானது

https://vallinam.com.my/version2/?p=8562


4) வெண்முரசு குறித்த சியமந்தகம் கட்டுரை J 60 தளத்தில் வெளியானது


https://jeyamohan60.blogspot.com/2022/07/blog-post_18.html?m=1


5) விஷ்ணுபுரம் விருது அறிவிப்பை ஒட்டி எழுத்தாளர் சாரு நிவேதிதா அவர்களின் படைப்புலகம் குறித்த  இரு கட்டுரைகள் விருது அறிவிப்பை ஒட்டி வெளியாயின

https://kaliprasadh.blogspot.com/2022/09/2022.html?m=1

https://www.jeyamohan.in/176182/

நேர்காணல்

1. புரவி மாத இதழுக்காக எழுத்தாளர் இரா.முருகன் அவர்களை நேர்காணல் செய்திருந்தேன்.. நண்பர்சுரேஷ் பாபு உடன் வந்திருந்தார். அந்தப் பேட்டியை பதிவு செய்தார். நேர்காணல் இரு பாகங்களாக புரவி இதழில் வெளியாகியது.

2. மிளகு நாவல் குறித்த உரையாடலில் பங்கு பெற்றேன்

உரைகள்

1) தே- ஒரு இலையின் வரலாறு குறித்து


2) எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் அவர்களின் எண்கோணமனிதன் நாவல்  குறித்து


3) அய்யப்பன் மகாராஜனின் மூஞ்சிரப்பட்டன் தொகுப்பு குறித்து


4) விஷ்ணுபுரம் விழாவில் சாரு குறித்து


5) எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி அவர்களின் கதைகள் குறித்து ஹலோ எஃப் எம் ல் மற்றும் தமிழ் ஆடியோ புக் சேனலில் பேசினேன்


ஒருங்கிணைப்பு

1. குமரகுருபரன் - விஷ்ணுபுரம் விருது விழாத் தொகுப்பு


நற்றுணை கலந்துரையாடல்




A. பனி உருகுவதில்லை வெளியீட்டு விழா- (ஸீரோடிகிரி பதிப்பகத்துடன் இணைந்து) - அம்மாச்சி ஹால் வளசரவாக்கம்

B.  திருமந்திரம் - எழுத்தாளர் கரு.அறுமுகத்தமிழன் - வடபழனி சத்யானந்தா யோகமையம்

C. விடுதலைக்கு முந்தைய தமிழ்ச் சிறுகதைகள் :-  தொகுப்பாசிரியர் அர்விந்த் சுவாமிநாதன் -  zoom meeting 

D. காமிக்ஸ் மற்றும் கிராபிக்ஸ் நாவல்கள் குறித்த அமர்வு :- எழுத்தாளர் கிங் விஸ்வா - வடபழனி சத்யானந்தா யோகமையம்

E.ஜீவகரிகாலன் படைப்புகள் குறித்த  உரையாடல். கூடவே ஓவியங்கள் குறித்த சுவாரஸ்யமான அரட்டைக் கச்சேரி - வடபழனி சத்யானந்தா யோகமையம்

( நற்றுணை கலந்துரையாடலுக்கு தனது யோகா மையத்தை அளித்து வரும் குருஜி செளந்தர் மற்றும் அதற்கு நிதி உதவி செய்யும் நண்பர்கள் அனைவருக்கும் இத்தருணத்தில் நன்றி கூறவேண்டும். உடனிருந்து ஆலோசனை வழங்கி வரும் யாவரும் பதிப்பக நண்பர்களுக்கும் நன்றி )

 வாசித்தவை:-

( நினைவிலிருந்து வரும் பட்டியல். அவ்வப்போது குறித்து வைக்கவில்லை. ( 2023 ன் முதல் சபதமாக இதைக்கூட வைத்துக் கொள்ளலாம்.  )


1.கம்பராமாயணம் அயோத்யாகாண்டம் (நியூ செஞ்சுரி)

2.கம்பராமாயணம் ஆரண்யகாண்டம் ( நியூ செஞ்சுரி)

(கம்ப ராமாயண வாசிப்பிற்கு நன்றிகூற வேண்டியவர்கள்:- இம்பர்வாரி குழுமம் மற்றும் பெங்களூரு ஹரிகிருஷ்ணன் அவர்களன்  யூட்யூப் பதிவுகள்)

3.மூத்த அகதி - வாசுமுருகவேல் ( ஸீரோடிகிரி)

4.பார்த்தீனியம் - தமிழ்நதி ( நற்றிணை)

5.மூஞ்சிரப்பட்டன் - அய்யப்பன் மகாராஜன் ( யாவரும்) 

6.அல்கொஸாமா - கனகராஜ் பாலசுப்ரமணியம் ( ஸீரோ டிகிரி)

7.உன் கடவுளிடம் போ - தெய்வீகன் (தமிழினி)

8. கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள்- போகன்  ( கிழக்கு ) 

9.என்கோணமனிதன் - யுவன் சந்திரசேகர்

10.மிளகு - இரா.முருகன் ( ஸீரோ டிகிரி)

11.ஆஷஸ் & டைமண்ட்ஸ் - மணி எம்கே மணி (யாவரும்)

12. தே ஒரு இலையின் வரலாறு - ராய் மாக்ஸம் - தமிழில் சிறில் அலெக்ஸ் ( தன்னறம்)

14. விடுதலைக்கு முந்தைய தமிழ்ச் சிறுகதைகள் - தொகுப்பாசிரியர்:- அரவிந்த் சுவாமிநாதன் - (யாவரும்)

15. டிரங்குப் பெட்டிக் கதைகள் - ஜீவகரிகாலன் (யாவரும்)

16. கண்ணம்மா - ஜீவகரிகாலன் (யாவரும்)

17. ஒரு சம்பிரதாய தேநீர் சந்திப்பு - ஜீவகரிகாலன் (யாவரும்)

18.புதிய எக்ஸைல் - சாரு நிவேதிதா ( மறு வாசிப்பு) ( கிழக்கு பதிப்பகம்)

19.நரிக்குறவர் இன வரைவியல் - கரசூர் பத்மபாரதி (தமிழினி) 

20.திருநங்கையர் - கரசூர் பத்மபாரதி (தமிழினி)

21. உயிர் வளர்க்கும் திருமந்திரம் - எழுத்தாளர் கரு.ஆறுமுகத்தமிழன் (தமிழினி)

22.அ.முத்துலிங்கம் கட்டுரைகள் - 2 பாகங்கள்( நற்றிணை)

23. சியமந்தகம் - அழிசி பதிப்பகம்

24. நான்தான் ஒளரங்ஸேப் - சாரு நிவேதிதா (ஸீரோடிகிரி)

25:- பவுன்சர்  காமிக்ஸ்  - முத்து காமிக்ஸ்

26:-  லக்கிலுக் காமிக்ஸ்  - முத்து காமிக்ஸ்

 ட்ராஃப்ட் ஆக வாசித்தவை

1. ஆக்காண்டி - வாசு முருகவேல் ( எதிர்)

2. ஆழம் - சீ.முத்துசாமி ( யாவரும்)

3. பக்கார்டி - ஹரிசங்கர் (உயிர்மை)

4. மேடை உரைகள் - செல்வேந்திரன் ( ஸீரோடிகிரி)

 வாசித்துக் கொண்டிருப்பவை


1. சுவருக்குள் சித்திரங்கள் - தியாகு (விஜயா)

2. கம்பிக்குள் வெளிச்சங்கள் - தியாகு (விஜயா)

3. இரா.மீனாட்சி கவிதைகள் (காவ்யா) 

4. உலகசினிமா - தொகுப்பாசிரியர் எஸ்.ராமகிருஷ்ணன் ( உயிர்மை)



வெண்முரசு கலந்துரையாடல்களை  தொடர்ச்சியாக  நடத்தி வந்தோம். வெண்முரசுக்குப் பிறகு ஜெ. மூன்று நாவல்கள் எழுதினார். (குமரித்துறைவி/ அந்தமுகில் இந்தமுகில் / கதாநாயகி ). ஆனால் நான் வெண்முரசோடு தங்கிவிட்டேன்.  ஆனால் அவற்றை வாசிக்கவில்லை. மனது ஒன்றவில்லை. பாண்டிச்சேரியில் ஜெ.விடம் இதைக் கூறியபொழுது அது அவ்வாறே ஆகும் எனக் கூறினார்.


இவ்வருடத்தில் அவற்றை வாசிக்க வேண்டும் மற்றும் தமிழ்விக்கியில் நூறு பதிவாவது இட வேண்டும். பார்ப்போம்..


And finally,




Thursday, November 17, 2022

அறைக்கலன் - வம்பு பதிவு

அறைக்கலன் வம்பு ஒரு முடிவிற்கு வந்துவிட்டது (போல இருக்கறது) இனி எழுதலாம்


மெர்சல் படத்தில் ஒரு காட்சி. அங்கு விஜய் தான் வைத்தியம் பார்ப்பவர் தனது ஃபீஸ் இடுவதற்கு ஒரு பெட்டி வைத்திருக்கிறார். அதில் தனது மகனுக்காக சிகிச்சை எடுத்து அதில் பணம் போடாத ஒருவர் தனது மகனின் முதல் மாத சம்பளத்தை மொத்தமாக அதில் இடுவார். அது எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய சோற்றுக் கணக்கு கதை. கூட்டத்தில் ஒருவன் படமும் தனது இறுதி காட்சியாக அதையே வைத்திருக்கும். வணங்கான் என்கிற பெயரில் ஒரு படம் வருகிறது. அதுவும் ஜெ. கதையின் தலைப்புதான். அந்தக் கதையில் யானை மீது ஏறும் ஒருவன் குறியீடு அதற்குப்பின் வந்த கர்ணன் படத்தில்  ஹீரோயிசமாக காட்டப்படுகிறது. ஜெ. எழுதுவதற்கு முன்னும் யானையின் மேல் மனிதர்கள் அமர்ந்து போனார்கள்தானே என்று வாதிட்டால்  சொல்வதற்கு ஏதுமில்லை.  


ஒருநாள் இங்கு புதிய எழுத்தாளர்களி்ன் கதைகள் ஜெயமோகனின் கதையை போலவே இருக்கின்றன என்பார்கள். மற்றொருநாள் ஜெயமோகனின் எழுத்துக்கள் பாதிப்பை செலுத்தியிருக்கிறதா என்ன? என்றும் கேட்பார்கள். ஜெயமோகன் வாசகர்களை இந்துத்துவம் நோக்கி இழுக்கிறார் என்பார்கள். ஜெயமோகனை யாராவது வாசிக்கிறார்களா என்பார்கள். அநேகர் இத்தகைய  "தூண்டிற் புழுவினைப்போல் -வெளியே 

சுடர் விளக்கினைப்போல்" நிலைமையில் இருந்து வருகிறார்கள். 


இன்று கவிஞர் மனுஷ்யபுத்திரன் அவர்கள் ஜெயமோகனின் சிறுகதைகள் பேசப்பட்ட அளவுகூட வெண்முரசு பேசப்படவில்லை என்கிறார். ஆனால் வெண்முரசு சென்னை கூட்டத்தை ஒருங்கிணைத்தவர்களில்  ஒருவனாக சொல்ல சில விஷயங்கள் உள்ளன. சராசரியாக மாதம் முப்பது பேர் வரை வருவார்கள். இவர்கள் நேரில்  வர இயன்றவர்கள். கோவிட் காலத்தில் zoom ல் வைத்தபோது நூறு பேர்வரை வருவார்கள். அவர் மேலும்,  வெண்முரசு ஜெ. க்கு  அளிக்கப்பட்ட புரஜெக்ட் என்கிறார். அப்படி ஒரு புராஜெக்டாக அவருக்கு அளிக்கப் பட்டிருக்குமெனில் அதை அளித்தவர்கள் மனிதர்கள் மீது அன்பு கொண்டிருந்த தலைவர்களான மகாத்மா காந்தியாகவோ அல்லது அண்ணல் அம்பேத்கராகவோ இருப்பார்கள் என்று உறுதியாக சொல்லலாம். காரணம், வெண்முரசை வாசித்து புண்பட்டவர்களில் அநேகம் பேர்  பக்தர்களும் இந்துத்துவர்களும்தான். வெண்முரசு கலந்துரையாடல்  சென்னையில் மாதாந்திர கூட்டமாக ஆறு வருடங்கள் நடந்தது. இன்றும் பாண்டிச்சேரியிலும் கோவையிலும் நிகழ்கிறது. வெண்முரசுக்கு ஒரு ஆவணப்படம் வெளியானது. ஒரு இசைத்தொகுப்பு வந்தது. இதெல்லாம் வாசகர்கள் தானாக எடுத்துச் செய்தவை. கடைசியில் வாசகர்களை புராஜெக்ட் மேனேஜர்களாக்கிய பெருமை கவிஞரையே சாரும். 


ஜெ. வெண்முரசின் வழியாகவே புதிய சொற்களை அவர் உருவாக்கியுள்ளார். அநேக வார்த்தைகளை தமிழ்ப் படுத்தியுள்ளார். கண்ணன் நாவல் முழுவதும் இளைய யாதவனாகத்தான் வருவான்.  சாபவிமோசனம் எஅன்று வராது. சொல்மீட்சி என்று எழுதியிருப்பார். கைவிடுபடை என்பதற்கு அஸ்திரம் என்று  அகராதியில் இருந்தது. தானியங்கி அஸ்திரங்களுக்கு அந்தப் பெயர் வைத்திருந்தார். அணிசமையர் என்று அழகுக்கலை நிபுணர்களின் பெயராக வரும். கொடித்தோன்றல் என்ற பெயரில் ரத்த உறவினர் குறிப்பிடப்படுவார்கள். ராஜதந்திரம் என்பது அரசுசூழ்தல் என வரும். இவையாவும் இயல்பாக வருபவை. நான் தமிழ்படுத்தியிருக்கிறேன் பார் என்று துருத்திக்கொண்டு வருபவை அல்ல. வயிற்றாட்டி என்பது பிரசவம் பார்க்கும் தாதிக்கான பெயர். இப்படி யோசித்துப் பார்த்தாலே நினைவுக்கு வரும்  வார்த்தைகள் உள்ளன. இவையெல்லாம் அதன்  வாசகர்களிடையே இன்றும்  ஜாலியாக சொல்லப்படுபவைதான். மேற்சொன்ன சினிமா காட்சிகள் போல உடனே பொதுப் புழக்கத்துக்கு வந்துவிடாது. பிற்காலத்தில் புழக்கத்தில் வரலாம். 


கம்பராமாயணத்தில் வெய்யோன் என்று வருகிறது. இன்று பொதுமக்களிடையே யாருக்கும் அதன் பொருள் தெரியாது.  ஆகையால் கம்பன் என்ன எழுதிவிட்டான் என்று கேட்போமா என்ன? 


ஜெ. வெண்முரசை எழுதிக் கடந்த பின் நூறு சிறுகதைகள் எழுதிவிட்டார். குமரித்துறைவி, கதாநாயகி, அந்தமுகில் இந்தமுகில் என மூன்று நாவல்கள் வந்துவிட்டன. ஆனால் இன்றும் வெண்முரசை முதற்கனலில் இருந்து துவங்கி வாசிப்பவர்கள் இருக்கிறார்கள். பலர் இளம் வாசகர்கள். அதில் ஏதேனும் ஐயம் கேட்டு இன்றும்  எனக்கு  தொலைபேசி அழைப்புகள் வருகின்றன.


வம்புகளை வரவேற்கலாம். வம்புகளை வாசிக்கும் நூறில் ஒருவர் தீவிர இலக்கியத்துக்குள் வருகிறார். ஆகவே நல்லதுதான்.


ஒரு பின்குறிப்பு:- 


தனிப்பட்ட முறையில், ஜெ. மீதான வம்புகளை காழ்ப்புகளை கண்டு அதிகம் காண்டாவதோ எதிர்வினையாற்றுவதோ கிடையாது.  ஆனால் இந்த  'அறைக்கலன் ' சார்ந்த எதிர்க் கருத்துக்கள் சற்று எல்லை மீறிவிட்டன என்று தோன்றியது. ஆனாலும் அந்த எதிர்க்கருத்துக்களில்  பிரபு தர்மராஜின் ஒரு பதிவு வெடிச்சிரிப்பை அளித்தது. இந்தப் பதிவை புன்னகையுடன் எழுத அதுவும் ஒரு காரணம் :-) 


அந்தப் பதிவின் லிங்க் முதல் comment ல் இல்லை..

Monday, September 12, 2022

விவாதங்களும் துருவப்படுதலும் காவிய வாசிப்பும்

J60 - சியாமந்தகம் தளத்தில் வெளியான கட்டுரை




விவாதங்களும் துருவப்படுதலும் காவிய வாசிப்பும்

2014-ம் ஆண்டில் இரு சம்பவங்கள் நிகழ்ந்தன. பல சம்பவங்கள் நிகழ்ந்தன என்றாலும் இங்கு குறிப்பட விழையும் இரு சம்பவங்கள் அந்த ஆண்டில் நிகழ்ந்தன. ஒன்று2014 ஜனவரி ஒன்றாம் தேதி எழுத்தாளர் ஜெயமோகன் ‘வெண்முரசு’ நாவல் எழுதத் துவங்கினார். அதுவரை மகாபாரதம் குறித்து சிறுகதைகள், நாடகங்கள் எழுதியிருந்தவர் பெருநாவலாக அதை எழுதத் துவங்கியிருந்தார். இரண்டாவது சம்பவம்அதே ஆண்டு மே மாதம் பாரதீய ஜனதா கட்சி பாராளுமன்றத் தேர்தலில் வென்று ஆட்சி அமைத்தது. அதன் பின்னர் விகடன் (தடம்) பேட்டி ஒன்றில் ஜெ.விடம்பி.ஜெ.பி. ஆட்சிக்கு வந்ததன் பிறகு மகாபாரதம் சார்ந்த சீரியல்கள், திரைப்படங்கள் என அந்தக் கதை பரவலாக்கம் செய்யப்படுகிறது. ‘வெண்முரசு’ அதோடு எவ்வகையி்ல் வேறுபட்டது என்கிற கேள்வி எழுப்பப்பட்டது. பா.ஜ.க. ஆட்சி அமைக்காதிருந்தபோதும் ‘வெண்முரசு’ அறிவிப்பு வந்த நாளில் எழுந்த விமர்சனங்களின் தொகுப்பாகக்கூட அந்தக் கேள்வியைப் புரிந்துகொள்ளலாம். அந்தளவிற்கு இலக்கிய உலகில் அரசியல் சார்ந்து எதிர்மறையாக மட்டுமே அணுகப்பட்டது அந்த முயற்சி. தமிழ் இலக்கிய சூழலில் எந்த ஒரு முயற்சியும் அரசியலாகவே புரிந்துகொள்ளப்படும் என உணர வைத்த தருணங்கள் அவை.

 

சமீபத்தில் நிகழ்ந்த சமூக வலைதள உரையாடலின் விவாதம் ஒன்று எனக்கு நண்பர்கள் குழுவில் திரைச்சொட்டாக வந்துசேர்ந்தது. மிக சுவாரசியமானது. அதில், இரு கட்சித் தலைவர்களின் ஆதரவாளர்களுக்கான உரையாடலில் ஒருவருக்கு மற்றவரை மடையர் என நிரூபிக்கவேண்டிய கட்டாயம் இருந்ததை அந்த விவாதங்கள் வழி உள்வாங்க முடிந்தது. அதனால் அதில் ஒருவர் மற்றவரை தாயைப் புணர்பவனே என்றும் அதற்கு மற்றவர் இவரை சகோதரியின் உறுப்பான வடிகட்டிய முட்டாளே என்றும் (இந்தியில் இலக்கணப் பிழையோடு) விளிக்கத் துவங்கியிருந்தனர். இதில் சவால் என்பது ஓரிடத்தில் முந்தையவர் இந்திய மரபை முழுதும் வாசித்திருக்கிறேன், வாசிக்காமல் பேசாதே என்று சொல்வதும், மற்றவர் அப்படியென்றால் தசரதனின் அறுபதினாயிரம் மனைவிகளில் இருபத்திநாலாயிரத்து ஐநூற்று முப்பத்தி எட்டாவது மனைவியின் பெயர் என்ன சொல் என்று கேட்டதும் ஆகும். அந்தக் கடைசி கேள்வியோடு அந்த விவாதம் முடிவுற்றது. ஒருவேளை அவர் அதற்கான பதிலை தேடிக் கொண்டுவந்து விவாதத்தைத் தொடர்ந்திருக்கலாம். தெரியவில்லை. ஆனால் இங்கே கவனிக்கத்தக்கது தற்காலத்தில் ஓர் அரசியல் விவாதம் எவ்வாறு தனிப்பட்ட தாக்குதலாகி, பின் அந்த நிலத்தின் தொன்மம், அதன் முன்னோர்கள், அதனுடைய இலக்கியம் மற்றும் காவிய மரபு வரை ஆதிக்கம் செலுத்தி, அதன் சார்பாக வளைக்கப் பார்க்கிறது என்பதைத்தான்.

 

மேற்சொன்ன பத்தியில் கவனிக்கத்தக்க உப தலைப்பாக இன்னொன்று இருக்கிறது. அது, இன்றுவரையிலும் ஏன் எதிர் ஆள் மீதான ஒரு வசைச்சொல் அவர் வீட்டுப் பெண்கள்மீது பாய்கிறது என்பது. எதிர் தரப்பினை அவமதிக்க அன்றும் இன்றும் துகிலுரியப்படுபவர்கள் பெண்கள்தான் அல்லவா.

 

அரசியலைத் தவிர்த்துப் பார்த்தால் அடுத்த இடத்தில் வருவது திரைப்படங்கள். இன்று ஒரு திரைப்படத்தின் கதாநாயகனின் அறிமுகப் பாடலை ஒருவர் கேட்பாரானால், அவர் பெரிய ஆச்சரியத்தை அடையக்கூடும். அதன் வர்ணனைப்படி அந்த நாயகன் மலையைத் தூக்கிச் சென்று உடைத்துப் பொடியாக்கி வீசுபவர். பிறகு அதைக் கடலுக்குள் வீசிவிடுபவர். ஏன் அவ்வாறு செய்ய வேண்டும் என்று தெரியவில்லை. அவர்கள் புராணங்களில் அனுமானும் இரண்யாட்சகனும் தனித்தனியாக செய்தவற்றை ஒற்றை ஆளாகச் செய்துகொண்டிருக்கிறார்கள். இதனோடு கூட அவர்களது பிற கல்யாண குணங்களும் விதந்தோதபடுகின்றன. பிற பெண்ணைக் கண்ணெடுத்தும் காணாதவர் என்பது ஒரு மதீப்பீடு என்றால் அனைத்துப் பெண்களையும் வலையில் விழவைத்தவர் என்பதும் ஒரு மதிப்பீடு. ஒருவர் இராமனுக்குப் பிரதியாகிறார்மற்றவர் கண்ணனுக்கு.

 

இன்று பொதுவெளியில் விவாதிக்கத் துவங்கும் யாருமே தன் விவாதத்தில் தான் அறிந்தோ அறியாமலோ நமது காவியங்கள் மீதான ஒற்றை மதிப்பிட்டிற்கு வந்துவிடுகிறார்கள். அந்த ஒற்றை மதிப்பீடு என்பது பெரும்பாலும் இரு காரணங்களால் நிகழ்கிறது. 1) முழுதாக அதை வாசிக்காமல் அதன் மிகைப்பகுதிகளை மட்டும் கதைகளாகக் கேட்டல்2) அதன் திரண்ட கருத்து இதுதான் என்னும் முன்அவதானிப்போடு அணுகுவது. ஒருபுறம்அதன்மீது தான் அறிந்தவற்றை ஏற்றுவது என்பதை மறுப்பாளர்கள் செய்கிறார்கள் என்றால் அதன்மீது அறியாதவற்றை ஏற்றுவது என்கிற பிழையை நம்பிக்கையாளர்கள் செய்துவிடுகிறார்கள்.

 

பொதுவில் காவிய வாசிப்பு என்பது குழப்பத்தைத் தருவது கிடையாது. ஆனந்தம் தருவது. அது அடிப்படையில் ஒரு கதை சொல்கிறது. அதன் மேல் உணர்வுதர்க்கம்விழுமியம்தரிசனம் எல்லாம் நிலைகொள்கின்றன. அவை அனைத்திற்கும் அடித்தளமான ஒன்றுஅது ஒரு கதைக்களம் என்பது மட்டுமே. அது கேட்பவரை வசீகரிக்கச் செய்யும் கதைசொல்லலாக இருக்கிறது. அந்த வசீகரம் என்பது அதில் மிகையாக வெளிப்படுகிறது. அது கல்லளவு மிகை அல்ல. மலையளவு மிகை. பீமனின் பலத்திற்கு உதாரணம் சொல்ல யானைகள் தேவையாகின்றன. பரசுராமனின் வருகை என்பது ஒரு நிலநடுக்கத்தின் அறிகுறிகளாகத்தான் இருக்கின்றன.

 

ஒரு அறிவிப்பு என்று பார்த்தால்கூட இன்றைய திருமணங்களிலும் தாய்மாமன் அளிக்கும் சீதனம் என்பது லட்சம் கட்டி வராகன் என்று சொல்லியே ஏற்கப்படுகிறது. இதுவே அப்படி இருக்கையில் புனைவுலகம் எப்படி இருக்கும்அங்கு யதார்த்தத்திற்கும் யதார்த்தக் கதைகளுக்குமே பாரதூர இடைவெளி இருக்கிறது. யதார்த்தக் கதைகளில்கூடஒருவர் சொன்னதை மற்றவர் புரிந்துகொண்டார் என்பதைச் சொல்லும்போதும், ‘அவன் தலையைக் கவிழ்ந்தபடியே பேச்சற்று சிலையாக நின்றான்’, ‘பேசிச் சென்ற திசையையே கண்ணில் நீர் வழிய பார்த்தபடியே சிலை போல நின்றிருந்தான்’ போன்ற சொல்லாடல்கள் வந்துவிடுகின்றன. யதார்த்தத்தில் அப்படி யாராவது நிற்கிறார்களா என்னயதார்த்தக் கதைகளே அவ்வாறு இருக்கையில் காவிய வர்ணனை இன்னும் உச்சத்தில் நிற்கிறது. கம்பராமாயணத்தில் நகரப்படலத்தில் அயோத்தி நகரின் உயர்ந்த மதில்களைக் குறித்த வர்ணனை வருகிறது. அதன் உயரம் என்பது இந்திரலோகத்தைத் தொடுவது. எனவே அந்த மதிலில் வாழும் புறா தன் இணையோடு ஊடல் கொண்டு செல்கையில் அருகில் இருக்கும் இந்திரலோகத்தின் கற்பக விருட்சத்தின் கிளைகளில் சென்று பதுங்கிவிடுகிறது.

 

இந்தக் காவிய மிகை வர்ணனை என்பதில் சமகால அரசியல் கலக்கும்போது அதன் வரிகள் தன் தேவைக்கேற்ப புரிந்துகொள்ளப்படுகிறது. தன்னுடைய அரசியல் சரிநிலை வசதிக்கேற்ப மட்டுமே புராணங்களைப் புரிந்துகொள்வேன் என்கிற பிடிவாதம் பெருகியதும் ஒரு காரணம். தசரதனுக்கு ஆயுட்காலம் இத்தனை ஆயிரம் ஆண்டுகள் மற்றும் அறுபதினாயிரம் மனைவியர் என்பதை ஒரு தரவாக எடுத்துக்கொள்பவர் கழுவேற்றப்பட்ட சமணர்கள் எண்ணாயிரம் அல்ல என வாதிடுவார். அதேபோலத்தான் மாற்றுத் தரப்பும்எண்ணாயிரம் சமணர்கள் கொல்லப்பட்டனர் என ஏற்றுக்கொள்பவர் ஆயுட்காலத்தையும் அறுபதினாயிரம் மனைவியரையும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். ராமன் பெரிய அறத்தான் என்று புராணம் சொல்வதை ஏற்பதில்லை. ஆனால் புராணம் வழியாக மணிமேகலை கையில் அட்சய பாத்திரம்தான் கிடைத்தது என்று நம்புபவர். ஒரு வாசகர் இயல்பாக ஏற்படக்கூடிய இந்த வகை புறச்சிக்கல்களைக் கடந்தே காவிய வாசிப்பிற்குள் வரவேண்டும். கடப்பது என்றால் நடுஇரவில் சுடுகாட்டைக் கடப்பவர் போல தனக்குள் வீரமாகப் பாடிக்கொண்டோ அல்லது கண்களை இறுக்க மூடிக்கொண்டோ அதைக் கடந்துவிட இயலுமாபெரும்பாலும் சமூக வலைதள விவாதங்களைக் காண்கையில் அவ்வாறு நிகழ்ந்திருக்கவே வாய்ப்பு அதிகம் எனத் தோன்றாமல் இல்லை. ஆனால் அதைவிட எளிதானது முழுமையான காவிய வாசிப்பு என்கிற ஒரு நேரடி அணுகுமுறை.



முன்பு பேசிய ஒற்றை மதிப்பீடுகளுக்கான இரு காரணங்களில் முதன்மையானது மிகைப்படுத்தல்கள். ஒரு காவியம் நவீன நாவலுக்குள் வரும்போது எதிர்கொள்ளும் சவாலில் இந்த மிகையலங்கார சொற்கள் முக்கியமான ஒன்று. கர்ணன் கொடையாளி என்று சொல்வதால் மற்றவர்கள் கருமி என்றோ தானம், தருமம் செய்யாதவர்களோ அல்ல. அர்ஜூனனும் திருதனும்கூட ஓர் உயிரைக்காக்க தன்னுயிரை துச்சமெனக் கருதி முன்னிற்பவர்கள்தான். ஆனாலும் அவர்களில் கர்ணன் உச்சமானவன். கொடையளிப்பவனும் கொடையேயானவனும் வேறு வேறு. நீதி நூல்கள் வழியாகக் கொடையளிப்பது தன்னுடைய அறம் எனக் கருதி தன் முன் நிற்பவர்க்குக்கு என்ன வேண்டும் எனக் கேட்டு அளிப்பவன் கொடையளிப்பவன். தன் முன் நிற்பவருக்குள் ஊடுருவி அவர் வேண்டுவது யாது என உய்த்துணர்ந்து, கேட்பதற்கு முன்பே அதை அளிப்பவன் கொடையேயானவன். இவர்களில் கர்ணன் கொடையேயானவன். அவனது கொடை உள்ளம் அவன் பயின்று வந்தது அல்ல. அவன் கருவிலேயே இருந்தது. இருட்கனி நாவலில் சூதர் பாடலாக வரும் கர்ணனின் கதையில்குந்தி தன் குழந்தையை ஆற்றில் விடலாமா வேண்டாமா எனத் தத்தளிப்பதையும், கைவிட்டு கர்ணனின் ஓடம் விலகிச் செல்கையில் உருவான அவள் மனநிலையையும் விளக்குகிறார். அதை மனதில் ஓட்டி மீண்டும் காண்கையில் ஒரே நேரத்தில் தன் தாயின் கலக்கத்தையும் இன்னொரு தாயின் ஏக்கத்தையும் தீர்க்க தானே அதை உதைத்து நதியோட்டத்தில் நழுவுகிறான் என்பதை அறிகிறாள். தனக்கு ஒரு வாய் முலைப்பால்கூட புகட்டாத அன்னைக்கு அவன் அளித்த கொடை அது என உணர்கிறாள். இவ்வாறு சூதர் கதைகள் வழியாக கர்ணனது புகழ் மேலெழுகிறது

 

ஒருவரது குணத்தைக் காட்ட எதற்காக மிகையை நாடுகிறோம். ஏன் யதார்த்தத்திலிருந்து மேலெழுகிறோம் என்று கவனிக்கலாம். சமதளத்திலிருந்து மலைமீது ஏறுபவர் அங்கிருந்து வானத்தையா நெருக்கமாகப் பார்க்கிறார்அங்கிருந்து அவர் தான் வாழும் நிலத்தையே மீண்டும் பார்க்கிறார். அந்நிலத்தின் உச்சமானது எதுவோ, பரந்தது எதுவோ, அது காணக்கிடைக்கிறது. அந்தக் கோணம் ஒரு விஸ்தாரமான பார்வையை அளிக்கிறது. காவியம் அத்தகைய மேலெழுதலை அளிக்கிறது.

 

காவியத்தின் மீதான ஒற்றை மதிப்பீடுகளுக்கான இன்னொரு காரணம் அதன் திரண்ட கருத்து இதுதான் என்னும் முன் அவதானிப்போடு அணுகுவது. இங்கு மகாபாரதம் மீதான அரசியல் சார்ந்த முன் அவதானிப்பு என்ன என்று பார்த்தால்அது கிருஷ்ணன் உரைத்த கீதை மீதான அரசியல் சார்ந்த தன் மனப்பதிவு. முழுமையான வாசிப்பிற்கு அப்பாற்பட்டதும் ஆதரவு x எதிர்ப்பு என்ற இருநிலைக்குள் பொருத்திக்கொள்வதாகவும் உள்ளது. அதனால் அது கிருஷ்ணன் மீதான மனப்பதிவாகவும் ஆகிறது. கிருஷ்ணன் மகாபாரதத்தில் வருவதால் மகாபாரதத்தின் மீதான ஈர்ப்புக்கும் விலக்கத்துமே காரணமாக ஆகிவிடுகிறது. ஒருசாரார் கிருஷ்ணனைப் பார்த்து குளத்தில் நீராடும் பெண்களின் ஆடைகளை ஒளித்து வைக்கும் காமன் என்றும் மற்றவர் ஒற்றை விரலால் மலையைத் தூக்கிப்பிடித்து மழையிலிருந்து ஊரைக் காப்பாற்றிய சிறுவன் என்றும் மனப்பதிவு கொள்கின்றனர். கிருஷ்ணன் பல கோணங்களில் வெளிப்பட்டு இறுதியாக ஒரு தத்துவ ஞானியாக மட்டுமே எஞ்சும் ஒருவனாக ‘வெண்முர’சில் வருகிறான். (நான் இந்த முந்தைய வரியைச் சொல்வதற்கு முன் ‘வெண்முர’சின் அத்தனைப் புத்தகங்களையும் ஒருமுறை வாசித்துவிட்டோம் என்கிற நம்பிக்கையை அடிப்படையாகக் கொள்ளவேண்டியிருக்கிறது.)

 



கிருஷ்னன் யார் என்பதைத் தொகுப்பது என்பது சுலபமானது அல்ல. அவனது நெறி என்பது ராமனது சத்ரிய நெறி அல்ல. கிருஷ்ணனுடையது அரசியல் மறுக்கப்பட்டவருக்கான அறம். ராமராஜ்ய அரசியல் பேசுபவர்கள்கூட எதிர்கொள்ளத் தயங்கும் ஒன்று கிருஷ்ண ராஜ்யம்.

 

குருக்ஷேத்திர யுத்தத்தில் ஆதரவு நாடுகள் தங்கள் பங்கு வீரர்களை அளிக்கின்றன. அந்த உரையாடலின்போது போரில் முதல் வரிசையில் நிற்பவர்கள் சாதாரண குடிமக்களே அன்றி வீரர்கள் அல்ல என்பதை யுதிஷ்டிரன் அறிகிறார். படைக்கலம் ஏந்தத் தெரியாத எளிய மனிதர்களை குருக்ஷேத்திரத்தில் போர்முகத்தில் நிறுத்துவதா என யுதிஷ்டிரன் குழம்பும் அந்தத் தருணம் ‘வெண்முரசு’ வரிசை நாவல்களில் ஒன்றான இமைக்கணத்தில் வருகிறது. நெறி நூல்களைப் பின்பற்றியே செல்லும் யுதிஷ்டிரன், அது பிழைத்தால், தானும் நெறிகளுக்கு அப்பாற்பட்டவனாக ஆகிறேன் என்று கருதி, அந்தத் தவறை நான் செய்யமாட்டேன் என்று அதற்கு மறுக்கிறான். இறுதியில் அவர்களைப் போருக்கு ஏற்க பராசர நீதியை ஆதாரமாக ஏற்கிறான். அதன் பொருட்டு நிகழும் சகாதேவனுடனான விவாதத்தில் மனஉளைச்சலும் அடைகிறான். அதன் பின்னர் அலைவுறும் அவன் மெய்த்தேடலுக்காக இளைய யாதவனான கிருஷ்ணனுடன் உரையாடுகிறான். கிருஷ்ணனுடனான உரையாடலுக்குப் பின்னர் அவன் கனவில் ஒரு காட்சியைக் காண்கிறான். அதில் பெருந்திரளான பசுக்களின் நடுவே ஒரு சிறு பாறைமேல் ஏறி நின்று குழலிசைக்கும் கரிய ஆயர் சிறுவனைக் காண்கிறான். அழகிய கருநிறம். மஞ்சள்நிற ஆடை. தலையில் விழிகொண்ட பீலி. அவ்விசை கேட்டு பசுக்கள் வந்துசேர்ந்துகொண்டிருந்தன. பசுக்களின் குரலோடு அப்பால் ஓநாய்களின் உறுமலைக் கேட்கிறான். ஆனால் ஆயர் சிறுவன் வேறேதோ காலவெளியில் இருந்தபடி குழல் வாசித்துக்கொண்டிருக்கிறான். “அனைத்துப் பசுக்களும் வந்துவிட்டனவா?” என்று அவனிடம் கேட்கிறான். ஒளி கொண்ட முகத்துடன் அந்தச் சிறுவன் திரும்பி, நீலமணி என மின்னிய விழிகளுடன், “இணைந்த நலனை நான் பேணுகிறேன்” என்கிறான். கனவில் கண்ட இளைய யாதவனின் இந்த பதில் மூலம் தனக்கான தெளிவை யுதிஷ்டிரன் அடைகிறான். அவனுடைய கேள்வி எளிய உயிர்களின் காரணமில்லா மரணம் என்றால்இளைய யாதவனின் பதில் அனைத்து உயிர்களுக்கான அறம் குறித்துச் செலுத்தும் ஒன்று. ஓநாய்களுக்காக ஒரு பசுவை அவன் விட்டுவிட்டானா அல்லது தன்னை நம்பிய உயிரினங்களுக்காக அவன் ஓநாய்களைப் பசியில் விட்டானாஅனைத்து உயிர்களுக்குமான வாழும் உரிமை என்கிற கருதுகோளுக்கு நாம் இன்று வந்துசேர்ந்திருக்கிறோம். சென்ற தலைமுறை வரை மிருகங்களை வேட்டையாடி, காடுகளை அழித்து, பாதைகளை உருவாக்கியதை வீரம் எனப் பாடிய நாம் நமது செளகரியங்களுக்காக காடுகளையும் பிற உயிர்களையும் அழிக்கலாகாது என்ற புரிதலை அடைந்துள்ளோம். ஆனால் இதைக் குறித்து ஒருவன் குருக்ஷேத்திர யுத்தம் நிகழ்ந்த காலத்தில் உரைத்திருக்கிறான் என்பது கவனிக்கத்தக்கது.

 

இன்று நம் காலத்தில் அனைத்து யுத்தங்களும் நேரடிப் போராக நிகழ்வது அல்ல. ஆனால் இன்றும் அதன் முதல் வரிசையில் நிற்கும் அப்பாவிகள் சாமானிய மக்களே. அவர்களும் தான் முதல் வரிசையில் நிற்பது அறியாமல் சமூக ஊடகங்களில் தன் நண்பர்களை, உறவினர்களை எதிர்த்து நிற்கின்றனர். குருக்ஷேத்திரத்தில் நின்று வாள் சுழற்றியவர்களுக்குதான் இங்கு ஏன் நிற்கிறோம் என்கிற புரிதல் இருந்திருக்கும். ஆனால் இன்றைக்கு சமூக ஊடகங்களில் களமாடுபவர்கள் தனக்கு அந்த புரிதல் இருக்கிறதா என சுயபரிசோதனை செய்துகொள்ளத்தான் வேண்டும்.


கேள்விகள் பெருகிய இன்றைய காலகட்டத்தில் அனைத்திற்குமான வாசல்களும் திறந்தபடியே இருக்கின்றன. அவை மாய அரங்கத்தின் கதவுகள் என்பதால் முட்டுச்சந்துக்குள் இட்டுச்செல்லும் வாசல்கள் அதிகம். துவங்கிய இடத்திற்கே மீண்டும் கொண்டுவந்து நிறுத்துபவையும் அதிகம். அதைக் கண்டறிவது கடினமானது. அதில் நம்பி நுழையத்தக்கவை காவிய வாசல்கள் மட்டுமே. தனது கேள்விக்கான பதிலை யுதிஷ்டிரன் பெற்றிருக்கலாம். இமைக்கணம் என்பது திரண்டு அனைவருக்கும் பொதுவான ஒன்றைச் சொல்வது அல்ல. அந்தந்த குழப்பத்தில் உள்ளவருக்கான நூல். அதில் இளைய யாதவனுடன் உரையாட வருபவரில் ஒருவராக யுதிஷ்டிரரும் வருகிறார். அவருக்கு உள்ளது தன் மீதான ஐயம். பின் தெளம்யர் வருகிறார். அவருக்கு உள்ளது ஒரு மரபின் மீதான ஐயம். இறுதியில் தர்மராஜாவான யமன் வருகிறான். அவனுடையது ஒட்டுமொத்த உலக இயங்கியலுக்கான ஐயம். கிருஷ்ணனின் அறம் என்கிற தராசு தட்டின் ஒரு முனையில் தன்னை நிறுத்தினால் அது தன்னறத்தைக் காட்டும். குலத்தை நிறுத்தினால் குலதர்மத்தைக் காட்டும். உலகத்தை நிறுத்தினால் உலகதர்மத்தைக் காட்டும்.

 

இன்றைய தலைமுறைக்கான உட்சபட்ச காவியப் படைப்பாக ‘வெண்முரசு’ வரிசை நூல்கள் உள்ளன. ‘வெண்முர’சை அணுகும்போது அதனூடாக நம்மையும் அறியாமல் வரலாற்று அறிவுசமூகக் கட்டமைப்புஅனைத்து தத்துவத் தளங்களின் அறிமுகம்அதுவரையிலான நீதி நூல்களின் தொகுப்பு என அனைத்தையும் அறிகிறோம். இலக்கியத்தில் அன்றைக்கான உட்சபட்ச நூலை வாசிப்பவர்கள் அதுவரையிலான அனைத்து சிந்தனை முறைகளையும் அதன்வழி தொகுத்துக்கொள்கிறார்கள். ஒரு முழுப்பார்வை கிடைக்கப்பெறாமல் தனக்கான தேடலை முன்னெடுத்துச் செல்வது கடினம். ‘வெண்முரசு’ எழுதப்பட்ட காலத்தில் அதன் உடனே பயணித்த அனுபவம் அளித்த உரையாடல்களும் தோழமைகளும் எனக்கு வாழ்நாள் பெறுமதியுடவை. அறிதலின் உவகை என்பது அளப்பரியது. அத்தகைய பேருவகைக்குள் இட்டுச்செல்லும் நாவல் ‘வெண்முரசு’. இன்றுமணிவிழா காணும் அந்நாவலின் ஆசிரியரைப் பணிந்து வணங்குவணங்குகிறேன்.

Thursday, September 1, 2022

விஷ்ணுபுரம் விருது 2022- சாரு நிவேதிதா

 2022 ம் ஆண்டுக்கான  விஷ்ணுபுரம் விருது எழுத்தாளர் சாரு நிவேதிதாவிற்கு என்கிற அறிவிப்பிற்கு  வாழ்த்துக்களும் வசைகளும் சேர்ந்தே வந்த வண்ணம் உள்ளன.  அதற்குக் காரணம் இங்கு உருவாகி வந்துள்ள ஒரு  பிம்பம். அதில் இருவரின் பங்கு சமமானது அல்ல. ஜெயமோகன் தனக்கு எதிரானவர் என்பதை  சாரு தனது நாவல்களில் அல்லது பதிவுகளில் குறிப்பிட்டப் படியே இருப்பார். இருவரில் ஜெ. தனக்கு எதிரானவர் என்பதை தொடர்ந்து எழுதி நிறுவிக் கொண்டதில் சாருவின் பங்குதான் அதிகம். ஒருமுறை ஜெ. வின் புத்தகத்தை மேடையில் கிழித்து எறிந்திருக்கிறார். ஒப்புநோக்க இதற்கு ஜெ. வின் எதிர்வினை குறைவான அளவில் இருக்கும். ஆனால் காத்திரமானதாகவும் இருக்கும். இப்பொழுது விருது அறிவிக்கப் பட்ட சமயத்தில் பலர் சாருவுக்கு எதிராக ஆற்றும் எதிர்வினைகள் கூட 'அங்கிருந்து' எடுக்கப் பட்டவையாகத்தான் உள்ளன. இதெல்லாம் பதினைந்து ஆண்டுகள் முன் நல்ல சுவாரசியமான வம்பு. இருவரின் அழகியலும் வேறு வேறு. இருவரின் வாசகர்களும் வேறு வேறு.  அப்போது  இணைய நண்பர்கள் சூழலில் சாரு அதிகம் வாசிக்கப்பட்டார். ஜெ.வின் வலைதளம் நிறுவப்பட்டு இருந்தது. ஆனால் விகடன் கவர் ஸ்டோரி  வெளியாகியிருக்கவில்லை.



சாரு எழுத்துக்களில் நான் முதலில் ராஸலீலா நாவலை வாசித்தேன். பின்நவீனத்துவக் கவிஞன் என்று தன்னைத் தானே அறிவித்துக் கொண்ட நண்பன் ஒட்டக் கூத்தன் நாவலை அளித்தான். அப்பொழுது சைதாப்பேட்டையில் எங்கள் பேச்சிலர் ரூம். சிங்கிள் பெட்ரூம். நண்பர்கள் தூங்க வேண்டும் என்பதால் மின்விளக்கை ஒளிரவைக்க இயலாமல் புத்தகத்தை கீழே வைக்க மனமும் இல்லாமல் நாற்காலியை பாத்ரூமில் போட்டு படித்தேன். அந்தளவிற்கு சுவாரசியமான நாவல்.  பின்னொருநாள் கொரோனா காலத்தில் ஒரு உரையாடலில் எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் அவர்களுடன் மாற்றுவகை எழுததுக்கள் குறித்த அவருடைய கருத்துக்களைக் கேட்டறிந்த போது, சாருவின் நடை குறித்தும் எனது இந்த 'ராஸலீலா வாசிப்பனுபவம்' குறித்தும் உரையாடியது நினைவுக்கு வருகிறது. நிற்க! ராஸலீலாவை வாசித்த காலத்தில்  உத்தமத் தமிழ் எழுத்தாளன் என்கிற பதத்தை வைத்து ஒரு சுவாரசியமான உரையாடல் ஆர்க்குட்டில் நிகழ்ந்தது. ஆனால் பிற்காலத்தில் அங்கேயே சென்று சேருவேன் என அப்போது தெரியாது.


அதன்பிறகான புத்தகக் கண்காட்சியில் சாருவை நேரில் சந்தித்து வாங்கியது கீழே படத்தில் உள்ள ஸீரோடிகிரி நாவல். இந்நாவலை வாசித்து ஒரு மாமாங்கம் ஆனபோதும் சமீபத்தில் 'பனி உருகுவதில்லை' விழாவில் சாருவை சந்தித்த போது இதன் ஏழாம் அத்தியாத்தின் வரிகளை, இதன் கவிதைகளை அவரிடம் நினைவிலிருந்து அப்படியே ஒப்பிக்க முடிந்தது.  ஆனால் ஸீரோடிகிரியை பைபிள் போல சுமந்து திரிந்த காலங்களில் கூட சாருவை சந்திக்க வேண்டும் எனத் தோன்றவில்லை. அப்பொழுது எனக்கு எழுத்தாளர்களை சந்திப்பதில்  ஒரு மனத்தடை இருந்தது.  ஆகவே ஆங்காங்கு விழாக்களில் சந்திக்கும் எழுத்தாளர்களோடு நின்று பேசுவது மட்டும்தான். அதன் பிறகு கேணி கூட்டம் நடந்ததால் பெரும்பாலான எழுத்தாளர்களை அருகில் காணும் வாயப்பும் கிடைத்தது. அதற்கும் சில வருடங்கள் கழித்து 2015 ல் தான் தயக்கம் நீங்கி ஜெ. வை தேடிப்போய் பார்த்தேன். அதுவும் அவர் சென்னை வந்திருந்த போது. பின் ஊட்டிக்குப் போனேன்.. பின் கோயமுத்தூருக்கு. ஆனால் சென்னையிலேயே பேச்சிலராக சுற்றித் திரிந்த நாட்களில் கூட  பாலகுமாரன் முதலான பலரை நேரில் சந்திக்க தயக்கம் இருந்தபடியேதான் இருந்தது. ஒரு வாசகன் தன் ஆதர்ச எழுத்தாளர் காணமாட்டான் என சுஜாதா எழுதிய ஒரு வரி என் மனதில் நின்றிருந்தது காரணமாக இருக்கக் கூடும். நான் இதைப் 'பனிஉருகுவதில்லை' விழா அன்று,  சாருவிடம் சொன்னபோது அவர் அதை மறுதலித்தார். மறுநாள் அதை தன் தளத்திலும் குறிப்பிட்டிருந்தார். எனது தனிப்பட்ட அனுபவத்தில் சொன்னால், சுஜாதா எழுதிய வரிதான் முதன்மைக் காரணம். ஊடகத்துறை அல்லது பதிப்புத்துறையை சாராத,  வாழ்க்கையிலும் 'செட்டில்' ஆகாத, ஒரு வாசகன் அந்த வரியைப் பற்றிக் கொள்வான் என்றுதான் நினைக்கிறேன். வாசகர் அதைத் தவறு  என உணர்ந்து அதைத்தாண்ட வேண்டுமானால் மற்ற எழுத்தாளர்கள் சுஜாதாவின் வீச்சைத் தாண்டிய ஒரு நம்பிக்கையை அளித்தபடி இருக்க வேண்டும். தமிழில் அதை தொடர்ச்சியாக ஜெ. செய்துவருகிறார். அவரிடமிருந்து விருது விழா என்றும், வாசகர் சந்திப்பு என்றும், காவிய முகாம், கவிதை அரங்கு வாசிப்பு பட்டறை என்றும் தொடர்ச்சியாக ஏதாவது அறிவிப்பு வந்தபடியே இருக்கும். எனக்கு மனதளவில் மிக நெருக்கமான எழுத்தாளரான நாஞ்சில்நாடனுடன் நான் முதன்முதலில் நின்று உரையாடியதே அத்தகைய  ஊட்டிக் கூட்டத்தின் நடைப்பயிற்சியில் தான். மற்றொரு வகையில் ஒரு கூட்டம் அல்லது  அமர்வுகள் என்பது நம்மை தொகுத்துக் கொள்ளவும் உதவும்.





முதன்மைக் காரணம் இது என்றாலும் அது முழுமையான காரணமும் இல்லை. எழுத்தாளரோடு வாசகருக்கு இணக்கம் உருவாவது அவருடைய படைப்புகளின் வழியாகத்தான். ஒரு வாசகரின் தேடலை சரியாக address செய்யும் எழுத்தாளர்தான் நெருக்கமாகிறார். அந்த வகையில் அப்போது எனக்குள் இருந்த, நானும்கூட அறியாத சரியாக கேட்க இயலாத கேள்விகளுக்கு ஜெ. வை அடைவதுதான் சரியான பாதையாக தோன்றியிருக்க வேண்டும். அவ்வாறு தோன்றியபின் அதுவரையிலான தயக்கத்தையும் அது உடைத்துவிடும். அது ஒரு கிறுக்கு.  சென்னை வெள்ளம், குழந்தை பிறந்து ஒரு மாதம் ஆன நேரம் அப்போது கிளம்பி விஷ்ணுபுரம் விருது விழாவிற்கு போகத் தோன்றும் கிறுக்கு. இவ்வாறாக சாருவின் எழுத்தின் வழி   உத்தமத்தமிழ் எழுத்தாளராக  வந்தவர் அவ்வாறே எனக்குள் நிலைபெற்றும் விட்டார். இது சாருவின் படைப்புகள் குறித்த எனது கட்டுரை அல்ல. இவ்வருட விஷ்ணுபுரம் விருது விழா சார்ந்த அதன் வம்புகள் சார்ந்த பதிவு என்பதால் சாரு கூறிய பதத்தை ஜாலியாகச் சொல்கிறேன்.


நான் சொன்ன அந்த 'கேள்விகளுக்கு'  சாருவிடம் பதில்கள் இல்லையா என்றால், இருந்தன. ஆனால் அவை அந்தக் கேள்வியை அபத்தம் என்றன. ஆகவே, அவர் கேள்விகளை நிராகரிக்கச் சொன்னார் என்று சொல்வேன்.  அது அனைவருக்கும் இருக்கக்கூடிய, வாழ்க்கை-மரபு-தொன்மம்-அரசியல் கலந்த சராசரியான கேள்விகள்தான் என்றாலும் எழுத்தாளர்களே அதற்குச் சரியான பதிலைச் சொல்ல இயலும். ஜெ. தன் புனைவுகளின் வழி  அந்தக் கேள்விகளை எதிர் கொள்ளச் சொல்வார். சாரு அதைக் கலைத்துப் போடுவார். ஒருவகையில் இரண்டுமே சவால்கள்தான். எனக்கு அதை எதிர்கொள்ள வேண்டும் என்கிற  சவால் ஏற்புடையதாக இருந்தது. மற்றவருக்கு வேறு ஒன்று தோன்றலாம். எதையும் கலைத்துப் போடுவது சாருவின் எழுத்து. ஆனால் கலைப்பதற்கு முன் எதையாவது அடுக்கவேண்டும் அல்லவா. அதுவே தெரியாவிடில் என்னவாகும்.  மரபை கிண்டலடிப்பது என்பது எனக்கு மரபோடு கலந்தே வரும் ஒன்றுதான். அது எளிது. மன்னார்குடியில் எனக்கு ஆசிரியர்கள் காலையில் 'நீரின்று அமையாது உலகெனின்' சொல்லித்தருவதற்கு முதல்நாள் மாலையில் அண்ணன்கள் வாயிலாக 'மழைபெய்ஞ்சு ஊரெல்லாம் தண்ணி' மனப்பாடமாகி யிருக்கும். எதன் மீதும்  கிண்டல் என்பது சாதாரணமாகவே புழங்குவதுதான். ஆகவே எதை கலைக்க வேண்டும் என்று துல்லியமாக தெரிய வேண்டும். எனக்கு அதைச் சொன்னவராக ஜெ. இருந்தார். அவ்வாறே, மற்றவருக்கு பிற எழுத்தாளர்கள் இருப்பார்கள். 


அர்த்தம் தெரியாமலேயே உச்சரிக்கும் கெட்ட வார்த்தைளைப் போல சில நல்ல வார்த்தைகளும் இருந்தன. அதில் பின்நவீனத்துவமும் ஒன்று.   பின்நவீனத்துவ எழுத்து வகை  சாருவின் களம்.   ஜெ. பின்நவீனத்துவத்தை ஏற்கவில்லை. ஏற்கவில்லை என்றால் இங்கு விதந்தோதப்பட்ட பின்நவீனத்துவம் ஜெ. க்கு ஏற்புடையதாக இல்லை.  நவீனத்துவத்தை மறுத்து கடந்து போகும் பின்நவீனத்துவம் இங்கு தன் மரபிலிருந்தே வரவேண்டும் என்பது அவருடைய கருத்தாக இருந்தது. அடிப்படையில்  விஷ்ணுபுரத்தை ஒரு சிறந்த பின்நவீனத்துவ நாவலாகத்தானே வகைப்படுத்த முடியும்.  விஷ்ணுபுரம் நாவலில் அந்த கோபுரம் சிதறியடிக்கப்படும் முன் அது நேர்த்தியாக கட்டியெழுப்பப் பட்டிருக்கும். அவர் எதை உடைக்கிறார் என்பதற்கு முன் அதனுடைய பிரம்மாண்ட தோற்றம் பிரதிக்குள் நிறுவப்பட்டிருக்கும்.  இதையே அவரது மற்ற நாவல்களிலும் காணலாம். மாறாக, சாருவின் எழுத்தில் அவர் உடைக்கும் ஒன்று எதுவாக இருக்கறது என்றால் அது இங்கு பிறரால் கட்டியெழுப்பப் பட்ட ஒரு பிம்பமாக, நாம் அன்றாடம் காணும் ஒன்றிலிருந்து எழுந்து வருவதாக இருக்கும். அது தபால்துறையின் அதிகாரவர்க்கமாக  இருக்கும் அல்லது திரைப்படத்துறை மீதான ஒரு மாயபிம்பமாகவும் இருக்கும். இங்கு ஒரு சராசரி மனிதனை ஆட்கொள்ளும் புறக் காரணிகளான அரசியல் அல்லது சினிமா. ரஸலீலாவை வாசித்த காலத்தில் மலையாள சூப்பர்ஸ்டார் ஆயிரம் பெண்களை வீழ்த்தியதற்கு பார்ட்டி அளித்ததை ஆர்வமாக படித்து பேசியது நினைவுக்கு வருகிறது. இப்போது அது பின்னே சென்று, தபால்துறையில் ஸ்டெனோவின் அலைச்சல்தான் முதன்மையாக நினைவுக்கு வருகிறது. 


பின்நவீனத்துவம் என்றால் சாருவுடன் கூடவே ரமேஷ்பிரேதன், யுவன் சந்திரசேகர்,பா.வெங்கடேசன் மற்றும் சுரேஷ்குமார இந்திரஜித் ஆகியோரையும் இன்னும் பலரையும் நினைவில் கொண்டு வருகிறோம். இவர்களில் சுரேஷ்குமார இந்திரஜித் ஏற்கனவே விஷ்ணுபுரம் விருது வாங்கியிருக்கிறார். இன்று இந்த விருது அறிவிப்பு  இதில் பிறருக்கு அறிவிக்கப் பட்டிருந்தால் இந்த சலசலப்பு எழுந்து வந்திருக்காது என்று உறுதியாக சொல்லலாம். ஆகவே, சாரு மீது மட்டும் உருவாகிவரும் விமர்சனமாகத்தான் இது உள்ளது. அதற்கு காரணமாக எதை சொல்லமுடியும் என்றால் அவர் தன் படைப்புகளின் வழியாக தன்னை வெளிப்படுத்திக் கொண்ட விதத்தைத்தின் சொல்ல முடியும். படைப்பு ரீதியாக  சாரு எங்கு வேறுபடுகிறார் என்று பார்க்கலாம். முதற்காரணமாக அனைவரும் சொல்வது, சாருவின் எழுத்தில் உள்ள ஒருவித தீவிரமற்றத் தன்மை உள்ளது என்பது. இந்தக் கருத்தில் பெரும்பாலானவை அவருடைய புனைவை வாசிக்காத, புனைவை வாசிப்பதற்கு மனத்தடை கொண்ட, ஆனால் வலைதள கட்டுரைகளை வாசித்ததன் வயிலாக உருவானவை கூட. சாருவின் கட்டுரைகள் பிடிக்கும் என்று தொடர்ந்து சொல்வதன் வாயிலாக அவரை சிறுமை படுத்த முயன்றவண்ணம் இது அவ்வப்போது நிகழும். அவற்றைத்  தவிர்த்து விடலாம். ஆனால் அவரது புனைவுகளை வாசிக்கும் ஒருவர் கூட ஒரு குழப்பத்திற்குள் போய்விடுகிறார். வாசித்துக் கொண்டிருக்கும்போதே  அவை திடீரென ஒரு இடத்தில் வம்புக்கதையாக மாறுகிறது. முன்பு சொன்னது போல மலையாள நடிகரின் சாகஸத்தை நுழைக்கிறது. ஒரு அரசு அலுவலகத்தில் நிகழ்ந்த காமக்களியாட்டத்தை சொல்கிறது.  ஆகவே அதைச் சொல்லிச் சாருவை புறக்கணிப்பது நிகழ்கிறது. இரண்டாவதாக அவரை வாசிப்பவருக்கு அவர் தனது ஆளுமை குறித்தும் ஒரு குழப்பத்தை உருவாக்கிவிடுகிறார். நாயகன் ஒரு ஸ்திரீலோலன் என்று சொல்லியபடி போகும் எழுத்து அவர் ஒரு அரவாணி என்று ஒரு இடத்தில் சொல்லிவிடும். இதை ஒரு விளையாட்டாகவும் அவர் நிகழ்த்தியபடி இருப்பார். ஜெ. தனது கட்டுரையில் இதைச்சுட்டிக்காட்டி பிறழ்வெழுத்து என வேறுபடுத்துகிறார். நான் பிற்காலத்தில் வாசித்த தஞ்சை பிரகாஷ் எழுத்துக்கள் எனக்கு சாருவுக்கு முன்னோடியாகத் தோன்றின. சாருவுமே அவரைத் தனக்கு பிடித்த எழுத்தாளராக கூறியுள்ளார். அந்த விதத்தில் அவருக்கு லக்ஷ்மிசரவணகுமார் ஒரு தொடர்ச்சியாகவும் இருக்கிறார். ஆனால் அவை  யதார்த்த தளத்தில் சென்று கொண்டிருக்கும். காமம் சார்ந்த கதைகள்  என்று எடுத்துக் கொண்டாலும் அதில் ஜி.நாகரஜன் கதைகள் நினைவுக்கு வருகின்றன. ஆனால் அவை பிறழ்வை விதந்தோதவில்லை. மாறாக ஒழுக்கத்தை விதந்தோதுகின்றன. தஞ்சை பி்ரகாஷ் கதைகள் கூட ஒழுக்கத்தை விதந்தோதி முடிகின்றன. ஆனால் சாரு அதைச் செய்வதில்லை. அவர் ஒழுக்க மீறலை விதந்தோதுவதை, அதை ஒரு கிளர்ச்சியூட்டும் உத்தியாக கொண்டு செல்வதை தன் படைப்புகளில் குறிப்பிட்டபடியே இருக்கிறார்.  முதல் வாசிப்பை இவையே நிறைக்கின்றன. ஆனால் காலப்போக்கில் ராஸலீலாவின் வரிகளை விட  ஸீரோடிகிரியின் கவிதைகள் நினைவில் தங்கிவிடுகின்றன. தஞ்சை பிரகாஷ் படைப்புகளில் அப்படி ஏதும் நினைவில் தங்கவில்லை. ஆகவே பிறழ்வெழுத்தினை முன்வைத்தவர் என்பது அவருக்கான சரியான குறிப்பாக உள்ளது. 






இங்கு இன்னொன்றும் சொல்லவேண்டும். இங்கு நவீனத்துவம் பின்நவீனத்துவம் பேசும் எழுத்துக்கள் இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டிலிருக்கும் வாசகனை மரபு நோக்கிப் பின்னோக்கி இழுப்பவை. ஆனால் அந்த வாசகனை live ல் வைப்பவை அல்லது முன்னோக்கி இழுப்பவை சாருவின் எழுத்துக்கள் தான். ஆகவே இயல்பாகவே ஜெ. வை ஆதர்சமாக கொண்டவருக்கு சாரு பிடிபடமாட்டார். உதாரணமாக ஜெ. வின் எழுத்துக்கள் வாயிலாக அவரது தந்தையின் கண்டிப்பான உருவம் வாசகருக்குள் எழுகிறது. ஆனால் இன்றைய ஜெ. பதிவுகள் அல்லது அவர் எழுதிய தனிமைக்காலக் கதைகளில் அவர் காட்டும் இளம் பருவச் சித்திரங்கள் அவர் மீது ஒரு அன்பை செலுத்துவதாக உள்ளன. மேற்சொன்ன மரபை கலைத்துப் போடும் எழுத்துக்காரரான யுவன் படைப்புகளில் கூட கரட்டுப்பட்டியும் அவரது தந்தையும் தொடர்ந்து வருகிறார்கள். அதை வாசிக்கும்போது நமது மனமும் உணர்ச்சிவயப் படத்தான் செய்கிறது. ஆனால் சாருவிடம் அத்தகைய நெகிழ்ச்சி ஏதும் காணமுடியாது. அவரது நைனா சாருவால் கலாய்க்கப்பட்டுக் கொண்டேதான் இருக்கிறார். அந்த வகையில் சாரு நவீன இலக்கிய வாசகனுக்கு என்றும் ஒரு 'தோஸ்தாகவே'  இருப்பவர். சில நேரங்களில் அந்த இளைஞன் மீண்டும் பழமையை நோக்கி மாறிச்செல்லலாம். ஆனால் அடுத்த தலைமுறை வரும். அவர்கள் சாருவை தோஸ்த்தாக கொண்டாடுவார்கள். சாரு இத்தனை வருடங்களாக கைக்கொண்டிருக்கும் இந்த இடம் அவருக்கு மட்டுமேயானது என சொல்லலாம்.


இந்த வம்பில் இரண்டாவது காரணமாக  ஜெ.விற்கும் சாருவுக்கும் இருக்கும் பூசலை சொல்பவர்கள் உண்டு. இருவரும் முரண்பட்ட காலமான 2008 ல் முன்பு எழுதியதை எடுத்துப் போட்டு இப்போது விருது காலத்தில்  காரணம் கேட்பவை. பிறழ்வெழுத்து கட்டுரை 2011 ல் எழுதப்பட்ட ஒன்று என்பதையும் வசதியாக  மறந்துவிடும் பதிவுகள். ஆனால் இருவரையும் வாசித்து வந்தவன் என்கிற வகையில்  இருவருக்கும் பொதுவான ஒன்றே எனக்கு கவனத்தில் இருக்கிறது. முதலாவது இருவரும் வெளிப்படுத்தும் அரசியலற்றத் தன்மை. எந்தவொரு பொது விஷயத்திலும் இருவரின் தரப்பும் ஒன்றாகவே இருப்பதைக் காண்லாம்.  சாரு சில பதிவுகளில் 'எதுக்கு இங்க்கை வேஸ்ட் பண்ணுவானேன்' என நினைத்தோ என்னவோ  ஜெ. பதிவின் லிங்க்கை கொடுத்து இதுவே என் கருத்தும் என சொல்லிவிடுவதும் நிகழும். ஜெ.விற்கு ஏற்பட்ட சில சங்கடங்களின் போது எழுத்துலகம் அமைதி காத்திருக்க சாருவிடமிருந்து மட்டும்தான் ஆதரவு பதிவு வரும். அதுபோலவே சாரு பணம் கேட்கிறார் வகைப் பதிவுகளுக்கு ஜெ. மட்டும் எதிர்வினையாற்றியிருப்பார். இங்கே லாலாலா பாடுவது எனது நோக்கம் அல்ல. தங்களது படைப்புலகம் சார்ந்து எதிரெதிர் ஆளுமைகளாக நிறுத்தப் பட்டிருப்பவர்கள் குறித்து ஒரு வாசகன் அறிந்து முழுமையாக அறிந்து கொள்ள இவை படைப்புகளைத் தாண்டிய புரிதல்களை அளிப்பவை. அனைத்து விதங்களிலும் கவனித்துப் பார்ப்பது அவசியமாகிறது என்றே கருதுகிறேன்.


இவை தவிர சொல்லப்படுகின்ற பிற வம்புக் காரணங்கள் தனிப்பட்ட காரணங்களால் சொல்லப்படுபவை. அவை எழுத்துத் தரப்பில் பொருட்படுத்தத் தக்கவையாக இல்லை என்பதால் அவற்றைக் கடந்து செல்லலாம்.


விஷ்ணுபுரம் விருது ஒரு கவனிக்க வேண்டிய ஆளுமையை தொடர்ந்து முன்னிறுத்தி வருகிறது. ஆனால் சாரு கவனிக்கப்படாத ஆளுமை கிடையாது. அவரது வாசகப் பரப்பும் பெரியது. ஆனால், அவர் முழுமையாக கவனிக்கப் படவில்லை என்பதும் உண்மை. அவர் மீதான உதாசீனம் என்றும் இருந்தபடியே இருக்கும். சாஹித்ய அகாடமி உள்ளிட்ட வேறு அங்கீகாரம் அவரது எழுத்துகளுக்கு வாய்ப்பில்லை என்றும் தனக்கு விருது என ஒன்று கிடைத்தால் அது விஷ்ணுபுரம் விருதாகத்தான் இருக்கும் என்றும் முன்பு சாரு கூட பதிவிட்டிருந்தார். அதுதான் இப்போது நிகழ்ந்தும் இருக்கிறது. மேலோட்டமாக பார்த்தால் கூட, ஒரு புனைவெழுத்தாளராக சாருவின் படைப்புகள் மீதான பதிவுகள் என்பது அவர் எழுதியிருக்கும் புத்தகங்கள் அளவோடு ஒப்பிட குறைவானவையே. விஷ்ணுபுரம் விருது அளிக்கப்படும் பொழுது விருது பெறும் எழுத்தாளர் மீதான கட்டுரைகள் தொகுத்து புத்தகமாக வெளியிடப்படும். ஒரு ஆவணப்படம் வெளியிடப்படும். அவ்வகையில் இந்த வருட விஷ்ணுபுரம் விருது தமிழ் வாசகபரப்பில், சாருவின் புனைவுகள் மீதான  ஒரு ஒட்டுமொத்த மறு வாசிப்பிற்கு வழிவகுக்கும் என்றே எதிர்பார்க்கிறேன்.

Saturday, June 18, 2022

இரா.முருகன்- மிளகு நாவல் குறித்த உரை

எழுத்தாளர் இரா.முருகன் அவர்களின் மிளகு நாவல் குறித்து zoom கலந்துரையாடல் நிகழ்ந்தது. அதில் ஆற்றிய அறிமுக உரை


மிளகு நாவல் குறித்த இந்த கருத்தரங்கில் பங்கு கொள்ள இணைந்திருக்கும் எழுத்தாளர். இரா.முருகன் அவர்களுக்கும் இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்பாளர்கள் வாசகர்கள் அனைவருக்கும் என்னுடைய இனிய மாலை வணக்கங்களை உரித்தாக்குகிறேன்


புராணக் கதைகள் முதல் சமகால கிசுகிசுக்கள் வரை நாம் அன்றாடம் புனைவிலேயே புழங்கிவருகிறோம். கதைசொல்லல் வழியாக ஒரு சம்பவத்தை விவரிக்கும் போது அதில் சுவாரசியம் கூடிவிடுகிறது. Unexpected twist என்பார்கள். அதுபோல பல விஷயங்கள் யதார்த்த வாழ்வில் நிகழ்ந்த படிதான் இருக்கின்றன. யோசித்துப் பாருங்கள்.. சுனாமி என்பது எத்தனை பெரிய ட்விஸ்ட். திடீரென கடல் எழுந்துவந்து நிலத்தையும் உயிர்களையும் கவ்விக்கொண்டு போகிறது. ஆனால் இன்று அதை விவரிப்பவர்கள் கூட அதில் ஒரு சுவாரசியத்தை  சேர்க்கிறார்கள். திடீரென கடல் எழுந்து வந்தது என்பதை சொல்வதற்கு முன் ஒரு சுவாரசியம் தேவையாகிறது. நான் சும்மா நின்றுகொண்டிருந்தேன். ஒரு படகு வந்து அருகில் விழுந்தது. என்னான்னு பார்த்தால் சுனாமி என்கிற அளவில் அந்த பிரம்மாண்டத்தை இன்னும் பிரம்மாண்டமாகவோ அல்லது சுவாரசியமாகவோ சொல்ல வேண்டியிருக்கிறது. ஒரு தரவுகள் சொல்லும் அபுனைவு பத்திரிக்கையானாலும் புத்தகமானாலும் அது ஒரு புனைவு சம்பவத்தோடே ஆரம்பிப்பதைக் காண்கிறோம்.  எதையும் ஒரு கதைசொல்லல் ஆக்குகிறோம். அது ஏன் செய்கிறோம் என்றால் அதுவே கேட்பவருக்கு ஆர்வத்தை அளிக்கிறது என்பதால். கதையாக சொல்லும் போது அதில் ஒன்றை ஒன்றை இணைக்கும் பரவசம் சொல்பவருக்கும் உருவாகிறது. அவரும் ஒரு விஷயத்தைக் கண்டடைகிறார்.





இங்கே கண்டடைபவர்களில் வரலாற்று விமர்சகரும் புனைவாசிரியரும் இரண்டாக பிரிகிறார்கள். இவ்வாறு நடந்தவற்றைத் தொகுத்து அதற்குப்பின்னால் ஒரு முன் வரையறுக்கப்பட்ட வழிநடத்தல் இருக்கிறது என்று சொல்பவர்கள் உண்டு. இன்று உட்கார்ந்து பின்னோக்கிப் பார்த்து அவை அனைத்திற்குமான ஒரு சரடை  தானே உருவாக்கி அதை வரையறுப்பது. இன்றைக்கான அரசியல் சமூக உரையாடல்களில் இதைப் பார்க்கிறோம். உலகியல் போக்கில் எதார்த்தமாக நடக்கும் ஒரு விஷயத்தில் தானும் தன் சித்தாந்தமும் சம்பந்தப் பட்டிருந்தால் அது அன்றே சொன்ன நற்சிந்தனை என்றும் அவ்வாறு அல்லாமல் எதிர்தரப்பு பங்கேற்றிருந்தால் அது அன்றே நிகழ்ந்த சதிக்கோட்பாடு என்றும் தன் மனநிலைக்கு ஏற்ப வரலாற்றை வளைப்பது. அன்றும் விவாதங்களில் இதைப் பார்க்கிறோம்


இரண்டாவதாக வருவது புனைவைழுத்தாளரின் இடம். புனைவெழுத்தாளர் எவ்வாறு மாறுபடுகிறார்? புனைவெழுத்தாளரிடம் முன்கூட்டிய அவதானிப்பு ஏதும் இல்லை. நான் இதை நிரூபிக்கப் போகிறேன் என்று சொல்லிவிட்டு அதில் இறங்கும் சித்தாந்த சாய்வோ அல்லது பாத்திரத்தின்  குணநலன் சார்ந்த முன்முடிவோ இருப்பதில்லை. புனைவெழுத்தாளர் என்றாலும் அதில் வாசக சுவாரசியத்திற்காக எழுதுகிறேன் என்று சொல்லி எழுதுபவர்கள் உண்டு. இன்றைய தொலைக்காட்சித் தொடர்களில் அத்தகைய  வடிவம் இடம்பெறுகிறது. பார்வையாளர்கள் கவனம் தொடரில் ஒரு  துணைக்கதாபாத்திரத்தின் மீது செல்கிறது  என்பதை சர்வே மூலம் அறிந்தபின் அந்த கதாபாத்திரத்தை நீட்டிக்கிறார்கள்.  அவை புனைவெழுத்துக்களிலேயே வெகுஜனப் படைப்புகள். ஆனால் புனைவெழுத்தாளரிடம் இருக்கும் மற்றொரு வகை தீவிர இலக்கியம் சார்ந்த்து. அங்கு முன் முடிவுகள் இல்லை் வாசக ஏற்பு என்பது பொருட்டு இல்லை. அவரும் எழுதும் போது அந்தக். கதாபாத்திரமாக வாழ்ந்து அதன் நிலைப்பாட்டை எடுக்கிறார். அங்கு எழுத்தாளன் கதாபாத்திரத்தைச் செலுத்துவது கிடையாது. அவனும் சுழலில்  அடித்துக் கொண்டு போகிறான். அதற்கு முந்தைய கணம் வரை அந்தப் படகு அங்கு வந்து விழவே இல்லை. அது வாசிப்பவருக்கு இணையாகவே எழுதுபவருக்கும் அதிர்ச்சி அளிக்கிறது. ஆகவே புனைவெழுத்தாளரிடம் நம்பிக்கைகூட உண்டாகிறது. 


இங்கே இன்னொரு பிரச்சனை இருக்கு..

வாசகரை மகிழ்விக்க எழுதுவது இலக்கியம் அல்ல என்பது உண்மைதான். அதற்காக அதை தவறாக உள்வாங்கிக் கொண்டு வாசகருக்குப் புரிந்துவிட்டால் அது இலக்கியம் அல்ல என்று கருதிக்கொண்டு மிகவும் கடினமாக எழுதப்படும் எழுத்துக்கள் உண்டு. ஆத்தைத்தாண்டி கொல்லைக்கு போகும்போது நெரிஞ்சி முள் குத்திவிட்டது என்பதையை முக்காலைக் கையிலெடுத்து மூவிரண்டைக கடக்கையிலியே ஐந்து தலை நாகம் ஒன்று அழுந்தக் கடித்ததம்மா என்று கூறும் கவிமரபை சார்ந்தவர்கள். வாசகர்களிடம் கூட அத்தகைய மனப்பிம்பம் உண்டு. ஆர்வக கோளாறு என்று சொல்லுவோம் அல்லவா.. சாலை போடப்பட்டாலும் கல்லிலும் முள்ளிலும் நடந்து விழுந்து புரண்டு மேலேறி வந்தேன் என்று சொல்லிக் கொள்வதில் ஒரு பெருமை. அந்த மலைக்கு தார்ரோடு போட்டு பத்து வருடம் ஆகிருக்கும். 


பொதுவாக இந்த வரையறுப்பில் ஒரு பிரச்சனை என்பது இதன் அளவைக் கண்டறிவது கடினமாக இருக்கிறது. அது பிரதி சார்ந்து முன்வைக்கப்படுகிறது. ஒரே எழுத்தாளரின் இரு படைப்புகள் மாறுபடுகின்றன.. ஒன்று ஏற்கப் படுகிறது ஒன்று நிராகரிக்கப்படுகிறது. உள்ளடக்கம், நடை, மொழி கதாபாத்திரங்களின் நம்பகத்தன்மை என அனைத்திலும் கச்சிதம் கொண்டிருக்கும் எழுத்தாளர்கள் காலப்போக்கில் நிற்பதையும்.. அவ்வாறு இல்லாமல் போனவர்கள் சாதாரண  காட்ஜெ்களின் வருகைகளினாலேயே  டீவி சீரியல்கள் வருகையினாலேயே காலப்போக்கில் அடித்துச் செல்லப்படுவதையும் காண்கிறோம்.. ஏன் காணாமல் போகிறார்கள் என்றால் அவர்களின் மொழியோ அல்லது அவர்களின் மனப்பாங்கு வாசக ஏற்பை கவனம் கொண்டு இயங்குகிறது. அல்லது இன்றைக்கு சமூக அல்லது அரசியல் பார்வை இவ்வாறாக இருக்கிறது. நாம் அதனோடு ஒத்துப் போவதுதான் நமக்கு நல்லது என்று நினைக்கிறது. அவ்வாறாகவே ஒரு சந்தர்ப்பவாதமாக ஆகிறது.





ஒரு இலக்கியவாதி இதற்கு ஆட்படாதவனாக இருக்கிறான். அவனால் ஒற்றை நிலைப்பாட்டை எடுக்க இயலவில்லை ஒட்டு மொத்த உலகிற்கும் பொதுவான ஒரு சித்தாந்த்த்தை அவனால் வைக்க முடியவில்லை. ஆகவே அவன் அனைத்திற்கும் எதிர்க்குரலை பதிவு செய்தபடியே இருக்கிறான். அதை தீர்க்கமாகவோ அல்லது மெலிதாகவோ சொல்கிறான். கைம்மீறிப் போனபின் அவன் பெரிய உரத்த சிரிப்போடு அதைக் கத்திக் கூறுகிறான்..


நான் இரா.முருகன் அவர்களின் படைப்புலகிற்கு அத்தகைய ஒரு  உரத்த நகைப்போடுதான் நுழைந்தேன். அங்கே அவர் என்னை அதை விடவும் பெரிய சிரிப்போடு வரவேற்றார். அத்தகைய சிரிப்புடன் அவர் சுட்டிக் காண்பித்த உலகில் ஒரு சமையற்கார குடும்பம் புகையிலை விற்றுக் கொண்டு இருந்தது. அதிகாரம் இழந்த ராஜா தன் ராணியோடு உலவிக்கொண்மிருந்தார்.  நூறாண்டிற்கும் முந்தைய கதையில் கதை நடக்கும் அந்த காலத்திற்கும் நூற்றாண்டுகள் முந்தைய முன்னோர்கள் ஆவியாக வந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.


அங்கிருந்து அவரின் சிறுகதைகளுக்குள் சென்றேன். அங்கே அன்று துவங்கி வளர்ந்து கொண்டிருந்த தகவல் தொழில்நுட்பத்துறையின் பணியாளர்கள் இருந்தார்கள்.  நண்பர்களே அந்த காலகட்டத்தில் பொது மனநிலை என்பது எப்படி இருந்த்து என்றால், அன்று  திரைப்படங்கள்  ஐடி ஊழயர்களின் விரல்கள் துண்டாவதாக படம் எடுத்து மகழ்ந்து கொண்டிருந்தன. அதைப் பார்த்து கைதட்ட பெரும்திரளும் இருந்தது.


ஆனால் இரா.முருகன் காட்டிய கதையில்  அவர்கள் மன உளைச்சலில்  தற்கொலை செய்து கொண்டிருந்தார்கள். பத்து மாதத்தில் ஒரு பெண் குழந்தை பெறுவாள் என்றால் நாம் நான்கு பெண்களை வைத்து இரண்டரை மாத்ததில் அந்தக் குழந்தையை பெற்று விடமுடியும்தானே என்று கணினி உலகம் ஆலோசிக்கும் அபத்தத்தை ஒருவர் மட்டுமே அன்று எழுதிக் கொண்டிருந்தார்.


இலக்கியவதிகளிடம் இருக்கும் first bench student மனப்பாங்கு அவரிடம் இல்லை. ஒரு எழுத்தாளர் நட்சத்திர அந்தஸ்து உள்ள திரைப்பட நடிகரை தெரியாது  என்று சொல்லிக் கொள்வதும் ஒரு இலக்கியவாதி வெகுஜன கதைகள் எழுதுபவரை எள்ளுவதும் சாதாரணமாக காணக்கூடியது.   ஒரு சம்பிரதாயமாக ஆரம்பகட்ட இலக்கிய வாசகர்களிடமும் அது இருந்தது. இரா.முருகன் அவர்களுக்கு  இலக்கியப் படைப்பு  வெகுஜனப் படைப்பு இரண்டும் படைப்பு சார்ந்த ஒன்றுதானே தவிர படைப்பாளிகள் சார்ந்த ஒன்று அல்ல என்கிற கவனம் இருந்த்து. அன்னந்தண்ணி புழங்க்கூடாது என்று கோடு போட்டு விலக்கிவைக்கப்படிருந்த பிரிவினையை இரா.முருகன் மெல்ல தாண்டவும் செய்தார். அந்த மீறலில் கலகம் ஏதும் இல்லை. அது இதைச் செய்யாதே என்று சொன்னால் இல்லை அப்படிச் செய்தால் என்ன என செய்து பார்க்கும்  ஒரு குழந்தைக்குரிய குதூகல மீறலாக இருந்தது. அவ்வகையில் சொல்லமுடியாத அளவிற்கு  தமிழ் இலக்கிய உலகிற்கு  புதிய வார்த்தைகளை கொடையாக அளித்துள்ளார். சொல்லமுடியாத அளவு என்பது எண்ணிக்கை சார்ந்து அல்ல.. இடம் பொருள் ஏவல் சார்ந்தது. அதை இதோடு நிறுத்திக் கொள்வோம்..


அத்தகைய ஒரு குதூகல மீறல்தான் மிளகு நாவலில் பரமனைக் கொண்டு வருகிறது.

மிளகு நாவலின் சில அத்தியாங்களை சொல்வனம் இதழில் கண்டிருந்தேன். ஆனால் வாசிக்கவில்லை. அதை நாவலாக வாசிக்க வேண்டும் என்பதே முதன்மையான காரணம். புத்தக கண்காட்சியில்  ஸீரோடிகிரி பதிப்பகம் சென்றேன். அங்கு ராம்ஜி மற்றும் காயத்ரி இருவரும் இருந்தனர். நூறுகி்ராம் மிளகு கொடுங்க என்று கேட்டேன்.  கிராம் கணக்கில் அல்லாது கிலோ கணக்கில்தான் அரங்கில் மிளகு கிடைத்தது. சொல்வனம் மிளகின் சில்லறை வியாபரம் பார்த்தார்கள் என்றால் இவர்கள் மொத்த வியாபாரியாக இருந்தனர். அவ்வாறாக இந்த வருடத்தின் வாசிப்பு என்பது மிளகு நாவல் வழியாகத்தான் துவங்கியது.


தன் எழுத்தின் மீதும் எழுத்தாளர் கொள்ளும் பெரிய நம்பிக்கை என்பது இந்த இடத்தில் வாசகரை இது எவ்வாறு உணரச்செய்யும் என அறிந்து அதை செயலில் காட்டுவது.  விஸ்வரூபம் நாவலிலி் மகாலிங்கம் ஆப்பிரிக்க நாட்டில் சிறையில் அடைபட்டிருக்கும் போது மனைவிக்கு்கடிதம் எழெதுவார். அந்தக் கடித்த்தை அவர் சொல்லச் சொல்ல சிறைப்பணியாளர் எழுதுவார்.. அதில் அவர் வர்ணிப்பது எவ்வாறு தான்  திருக்கருக்குன்றத்தில் ரெட்டிகன்னிகையால் ஈர்க்கப்பட்டேன் என்பது.  அதை எழெதிக்கொண்டே வரும் சிறைப்பணியாளர் அடுத்தநாள் ஒரு்கடிதம் அனுப்புவார். ஐயா உங்கள் கடிதங்களை எழுதி எழுதி எனக்கு காம உணர்வு மேம்பட்டுவட்டது.. ஆகையால் இனி எழுதுவதாக இல்லை என்பது போல ஒரு்பிலாக்கணம் வைப்பார். இந்த வரியை தன் வரிகள் மீது நம்பிக்கை இல்லாத ஒருவர் எழுதி விட முடியாது..  இதைத் திரைப்படங்களில் பார்க்கலாம்.. கதாநாயகன் வில்லன் ஆட்களை  அடிக்கும் போது கூட்டத்தில் இருக்கும் ஒருவர் அவரை நல்லா அடிங்க என்று சொல்லுவார். அவ்வாறு சொல்லும் பாத்திரத்தின் மனோபவத்தோடு அந்த திரைப்பட பார்வையாளர்களின் மனநிலை ஒத்து போகனும்.  ரசிகனின் மனநிலையை அந்த நபர் வெளிப்படுத்த வேண்டும். அத்தகைய திரைப்படங்கள் வெற்றி அடைகின்றன. ஒரு கமர்ஷியல் படத்தில் அதைக் கொண்டுவருவது இயல்பானது.  ஆனால் இலக்கிய வாசகனை அவ்வாறு உணர வைப்பது கடினம்.  அதை சாதிப்பவர்களே பெரும் இலக்கிய கர்த்தாவாக அறியப் படுகிறார்கள். இரா.முருகனின. படைப்புகளில் அவ்வாறு  சங்கரனின் மனத்தவிப்பு முதல்   திலீப் அகல்யபின் அலைக்கழிப்பு என வரும்  எல்லாம் வாசகரை ஒன்றச் செய்கின்றன.


அரசூர் வம்சம் நாவல்கள் தவிர பிற நாவல்களை வாங்கி வைத்தாலும் இன்னும் வாசிக்கவில்லை. நான் அவரது சிறுகதைகளை வாசிக்கத் துவங்கினேன்.  மிளகு நாவல் வெளியாவதை அறிந்து அதை வாங்கி வாசிக்கத் துவங்கியபோது அதில் பரமன் திடீரென பிரத்யட்ஷமகியிருந்தார்.  அது ஒரு அதிர்ச்சியாகவும் இருந்தது. ஒருவகையில்

மிளகு நாவல் ஒரே சமயதத்தில் தனித்த நாவலாகவும்   இருக்கிறது.  அரசூர் வம்ச நாவல்களின் வரிசையின்  இறுதிநாவலாகவும்   திகழ்கிறது. ராணி சென்னபைரா தேவியின் கதை என்ன என சொல்கிறது.  அதற்கு பிற்காலத்தில் என்ன மதிப்பு இருந்த்து என்றும் சொல்கிறது.. அன்றைக்கு பெரிய போட்டியாக இருந்த அது, தற்காலத்தில் என்ன கவனத்தைப் பெற்றிருக்கிறது எனவும் சொல்கிறது. அந்தப் போட்டியின்  தற்கால விளைவு என்னவாக இருக்கிறது என சொல்கிறது.  இவ்வாறு இரு விதங்களில் இது நிகழ்கிறது.


இங்கு பரமன் அவ்வாறு கால சுழற்சியில் முன்னும் பின்னும் செல்கிறார்.மிளகு ராணியின் கதையும், பெரிய சங்கரன் - பகவதிக்குட்டி   குடும்பத்தின் ஐந்தாம் தலைமுறைக் கதையும் இவரால் ஒரு கோட்டில்  இணைகிறது. அந்தக் காலத்திற்கும் இந்தக் காலத்திற்கும் பொதுவான அம்சங்களோடு இவை இணைகின்றன. இரு காலத்திலும் ஒருவர் மற்றவரை பிரதி செய்கிறார்கள். சிலர் அதே குணத்துடன் அவ்வாறே; சிலர்  குணம் மாறுபட்டு; நேமிநாதனுக்கும் ரோஹிணிக்கும் பிறந்த மஞ்சுவிற்கு பராமன்தான் தந்தையாக இருக்கிறான்.  சின்ன சங்கரனுக்கு கொச்சு தெரசாவுக்கும் பிறந்த மருதுவிற்கு முசாஃபர்த்தான் தந்தையாக இருக்கிறான். அங்கும் இங்கும் மஞ்சுநாத்தும்  மருதுவும் தன் ரத்தஉறவான தந்தையைவிட இந்தப் 'பெயரளவு' தந்தையுடன்தான் பெரிதும் பாசமாக இருக்கிறார்கள்.





ஒரு கட்டத்தில் மிளகு என்பது ஒரு metopher  ஆக ஆகிறது. சந்நியாசம் மேற்கொள்பவர்கள் உப்பு காரம் தவிர்க்க வேண்டும் என்கிறார்கள். ஒரு விஷயத்தில் சொரணையற்று யாராவது இருந்தால் உன் உணவில் காரம் இல்லையா என்கிறார்கள்? மிளகு என்பது உணர்வோடு தொடர்பு கொண்டதாக ஆகிறது. பரமனுக்கு திலீப்பை விடவும் மஞ்சுநாத் மீதும் சில தருணங்களில்  மஞ்சுநாத்தை விட திலீப் மீதும் காரம் அதிகமாக இருக்கிறது. சில பாத்திரங்களை மிளகு கொடியாக சூழ்ந்து கொள்கிறது. இதுபோல குறிப்பிட்ட ஒன்று தொடர்ந்து வருவது அவரது தனிச்சிறப்புகளில் ஒன்று. அச்சுதம் கேசவம் நாவலில் மயில்கள் அவ்வாறு வரும்..


இரா.முருகன் அவர்களின் மீறல் பற்றி முன்பு கூறினேன் அல்லவா.. அந்த் மீறலுக்கான மற்றொரு உதாரணம் அவரது்நடை. ஒரே நாவலின்  நவீன இலக்கியத்தின் அத்தனை கூறுமுறைகளையும் தேவைக்கேற்ப  கையாண்டிருக்கிறார். இப்போது அதை magical realism என்பதா வரலாற்று நாவல் என்பதா யதார்த்த நாவல் என்பதா.. அதை வகைப்படுத்துவதும் கடினமாக இருக்கிறது.  குறியீடு், உருவகம் மாய எதார்த்தம் என அனைத்தும் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளாமல் தானாகவே வந்துபோகும் என்பதே அவருடைய நாவல்களின் தனித்துவம்.


இதில் ஒரு ஜம்ப் இருக்கும். எங்கிருந்து எங்கு தாவுகறது என அறிவது கடினம்.. மிளகுராணி-நேமிநாதன் பிரச்சனையில் வரும் தாமஸ் அகஸ்டின்ஹோவை உறங்க விடாமல் துன்புறுத்தும் ஒரு பெருச்சாளி.  சமகாலத்தில் அங்கு  சுரண்டி உண்டு கொழுக்கும் அந்நிய வியாபார அரசியலுக்கான   குறியீடாக ஆகிறது.   இறுதியில் அவர் அலறி எழ  அனைவரும் பற்றி என்ன என வினவுவார்கள்..,  ஒரு பணியாள்  'எலி அம்மணமா ஓடுதாம்' என்று அதை விளக்கும் ஒரு வரியில்  பிற்காலத்தில் இருந்து  அதைக் கண்டு நகைக்கும் பகடியாக ஆகிவிடுகிறது.  மிளகுராணி நேமிநாதன் பிரச.சனையில் போர்த்துகீசியரின் பங்கு வேறு என்னவாக இருக்கும? இதுபோல பல உண்டு. நான் எனது பதிவில் கூட எழுதியிருந்தேன்.  பாரதியாரின் கும்மிப்பாட்டு, காந்தியின் உப்பு சத்தியாகிரகம் எல்லாம் பதினாறாம் நூற்றாண்டில் வருகிறது.  இந்த விளையாட்டின்  உச்சகட்டமாக மிளகு ராணியைப் பார்த்து 'அம்மா.. நீங்கள்தான் மக்களின் முதல்வர்' என்கிறது ஒரு கதாபாத்திரம். இது எல்லாம் நடையும் சுவாரசியமும் சார்ந்தவை


ஆனால் அனைத்திற்கும் மேலதிகமாக ஒன்று உள்ளது..  நண்பர்களே ஒரு பிரசித்தி பெற்ற அறிவியல்  கேள்வி உண்டு.. தத்துவக் கேள்வியாகவும் கொள்ளலாம்.


“If a tree falls in a forest, and there’s no one around to hear it, does it make a sound,”


ஒரு காட்டில் மரம் ஒன்று விழுந்தால், அதைக் கேட்க யாரும் இல்லை என்றால், அது ஒலி எழுப்புமா?


ஆம் என்றும் இல்லை என்றும் இதற்கு இரு விடைகளையும் அதற்கு ஆதரவாக பல காரணிகளையும் தொகுத்துக் கொள்ள முடியும்.. ஆம் என்றாலே யாரோ கேட்டார்கள் என பொருள் வருகிறது. அறியப்படுவதற்கு அறிபவர் ஒருவர் வேண்டும் என்று விரிவடைந்து செல்கிறது.


ஒரு  பயணி எங்கோ ஒரு சிதிலமடைந்த கோயிலைக் காண்கிறான். உடனே அவர் மனம் புண்படுவதைக் காண்கிறோம். இரண்டாயிரம் வருடம்முன்பு கட்டியது இதை இன்று கவனிப்பாரற்று விட்டிருக்கிறோம் என்று மனம் குமுறுகிறார்.  சுவடற்றுப் போன ஒரு புராதனத்தை பார்க்கையில் மனம் பதற்றம் கொள்கிறோம்.  ஆனால் அது அங்கேதான் இருந்தது. இவர் சென்று காணும் ஒரு கணத்திற்கு முன்பு வரை அது அங்கேதான் இருந்தது. அது தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டதும் நாம் அதன் கதையை அறிகிறோம். அந்தக் கதையை நமக்கு ஏற்றவாறு புரிந்து கொள்கிறோம். இங்கே மிளகுராணி ஆண்ட கெஸுரப்பாவை பிடித்த நாயக்கர் அரசு அவர்களிடமிருந்து பிரித்த போச்சுகீசியர்கள் ஆங்கிலேயர்கள் என மாறி மாறி இன்று அடையாளம் இல்லாமல் கிடப்பதை நாவல் பதிவு செய்கிறது. இன்று அதை தொடுவதன் மூலம் மொத்த வரலாற்றையும் நாவல் விரித்து காட்டுகிறது.


மீண்டும் முதல் பத்திக்கு வருகிறேன். அதை ஒரு வரலாற்று ஆசிரியர் சொல்லிவிட முடியும்.  ஆனால் ஒரு புனைவெழுத்தாளன் அதில் பொற்காலத்தை கண்டு சொல்ல மாட்டான். அல்லது இருண்டகாலத்தையும் கண்டடைய மாட்டான். அங்கிருந்து அவர் காட்டவிரும்புவது இன்றுவரை அதில் தொடருவது என்ன என்பதும் விலகிவருவது என்ன என்பதும்தான். சமீபத்தில் புரவி இதழுக்காக இரா.முருகன் அவர்களைப் பேட்டி  எடுக்கு நானும் நண்பர் சுரேஷ்பாபுவும் சென்றிருந்தோம். அபபொழுது அவரிடம் தற்காலத்தில் உள்ள existential குழப்பங்களையும் திடீரென ஒருவர் IT யை விட்டுவிட்டு agriculture செய்ய புறப்படுவதையும் பற்றி கேட்டிருந்தேன். அதற்கு பதிலாக மிகவும் யதார்த்தமானதாகவும் நடைமுறைக்கு உரித்ததாகவும் பதில் கூறினார். அந்த பதிலில் இவ்வாறு வரும்.. இன்றைக்கு நல்லா சம்பாதிக்கிறாங்கதான்.. நல்லா இருக்காங்க..நல்லாவே இருக்கட்டும்.. ஆனால் சிலர் வேலையை விட்டு போறாங்க என்று பதிலை தொடர்ந்தார்..


இந்த பதிலில் நடுவில் வரும் நல்லாவே இருக்கட்டும்  என்ற வார்த்தை அந்த பதிலுக்கு தொடர்பில்லாத வார்த்தை.. அதை பதிவு செய்துகொண்டிருந்த எனக்கு ஒரு கணம் மன நெகழ்வு உண்டாக்கியது. அது அரசூர் வம்சத்தில் பகவதி கல்யாணமாகி புகுந்த வீடு போகும் போது ஒரு பாட்டி குரல்ல வந்து பேசும் முன்னோர்களின் சொல். அது அறிந்து யோசித்து சொல்லப்படுவதில்லை. உள்ளிருந்து எழுந்து வருகிறது. நண்பர்களே! அந்த ஒரு கணம்தான் வரலாற்று அறிஞருக்கும் இலக்கியவாதிக்குமான இடைவெளி. அந்த ஒரு கணம் என்பது காலத்திற்கும் தூரத்திற்கும் அப்பாற்பட்டு என்றும் நிலைத்திருக்கும் ஒரு அபூர்வ கணம். இந்த நாவலில் வரும்  பரமன்  அத்தகைய ஒரு கணம். மஞ்சுநாத்திற்கும்  திலீப்பிற்கும் பொதுவான ஒரு கணம். ஆனால் அதை வரையறுக்க 1200 பக்கங்கள் தேவை. ஆனால் மற்றொன்று நண்பர்களே.. அதை வாசிக்கத் தேவை ஒரு கணம் தான்!!!!


மிளகு நாவல் குறித்த முந்தைய கட்டுரை




Sunday, March 6, 2022

மிளகு

மிளகு நாவல் வழி துவங்கியது  இவ்வருடத்தின் புத்தக கண்காட்சிப் புதுவரவுகளுக்கான வாசிப்பு. இரா. முருகன் அவர்களின்  சிறுகதைகளில்  அவர் காட்டும் கணிப்பொறி உலகம் மற்றும் பழைய காலக்  கதைகளில் தொடர்ந்து  வரும் ஐயனை என்கிற கதாபாத்திரம் பற்றிய சித்தரிப்புகள் நினைவில் நிற்பவை. ஆனால் அவரை தீவிரமாக வாசிக்க ஆரம்பித்தது அரசூர் வம்சம் நாவல் வழியாகத்தான்.  'அரசூர் வம்சம்' முதல் 'வாழ்ந்து போதீரே'  வரை தொடர்ச்சியான வாசிப்பு. இதில் துவக்கமான  அரசூர் வம்சம் நாவல் ரகளையானது. அதன் ஒவ்வொரு வரிகளையும் சொல்லிச் சொல்லிச் சிரித்தபடி நாங்கள் ஒரு முறை காரில் பயணித்துக் கொண்டிருந்தோம் ( ஷிமோகா ரவி அண்ணன், சுந்தரவடிவேலன், சுநில் கிருஷ்ணன் மற்றும் நான் ). விமான நிலையத்தில் ஒற்றுமையாக வந்த யாரோ  இருவரை பார்த்து பனியன் சகோதரர்கள் எனக் குறிப்பிட்டு சிரித்ததும் நினைவில் இருக்கிறது. இதனுடைய இரண்டாவது நாவலான விஸ்வரூபம் காமத்திலும், அச்சுதன் கேசவம் அலைச்சலிலும் வாழ்ந்து  போதீரே உணர்ச்சியிலும்  நிறைவும் கொண்ட நாவலாக எனது மனப்பதிவு. அவை ஒவ்வொன்றைப் பற்றியும் தனித்தனியாக எழுதவேண்டும். மிளகு நாவல் ஒரே சமயதத்தில் தனித்த நாவலாகவும்    அரசூர் வம்ச நாவல்களின் வரிசையின்  இறுதிநாவலாகவும்   திகழ்கிறது. ராணி சென்னபைரா தேவியின் கதையாகவும் அதன் தற்கால புரிதலாகவும் இரு விதங்களில் இது நிகழ்கிறது. 



ஐம்பது வருடங்களுக்கு மேலாக ஆட்சியில் இருக்கும் மிளகுராணியின் அரசாங்கம் வீழ்த்தப்படும் கதை. இது ஒரு சரித்திர புத்தகத்தின் ஒரு பத்தியில் சொல்லப்பட்டாலும் கூட என்ன நடந்திருக்கும் என்பது எளிதில் புரிந்து விடும். அந்த அளவிற்கு நாம் அறிந்த போர், தியாகம் மற்றும் துரோகம் கலந்த அரசக்கதைத்தான். ஆனால் 1200 பக்கங்களில் அதை வாசிக்கும்போது எங்கும் சுவாரசியம் குறைவதில்லை என்பதைக் குறிப்பிட்டே ஆக வேண்டும்.  அதற்கு நவீன இலக்கியத்தின் அத்தனை கூறுமுறைகளையும் தேவைக்கேற்ப  கையாண்டிருக்கிறார். குறியீடு், உருவகம் மாய எதார்த்தம் என அனைத்தும் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளாமல் தானாகவே வந்துபோகும் என்பதே அவருடைய நாவல்களின் தனித்துவம். அது இங்கும் உண்டு.  இதில் ஒரு  ரசிக்கத்தக்க உதாரணத்தை இங்கு தருகிறேன்.. மிளகுராணி-நேமிநாதன் பிரச்சனையில் ஆதரவாக வரும் தாமஸ் அகஸ்டின்ஹோவை உறங்க விடாமல் துன்புறுத்தும் பெருச்சாளி சமகாலத்தில் அங்கு  சுரண்டி உண்டு கொழுக்கும் அந்நிய வியாபார அரசியலுக்கான   குறியீடாக தோன்றினாலும்  இறுதியில் அவர் அலறி எழ  அனைவரும் பற்றி என்ன என வினவ,  ஒரு பணியாள்  'எலி அம்மணமா ஓடுதாம்' என்று அதை விளக்கும் ஒரு வரியில்  பிற்காலத்தில் இருந்து  அதைக் கண்டு நகைக்கும் பகடியாக ஆகிவிடுகிறது. இது தவிர பாரதியாரின் கும்மிப்பாட்டு, காந்தியின் உப்பு சத்தியாகிரகம் எல்லாம் பதினாறாம் நூற்றாண்டில் வருகிறது.  இந்த விளையாட்டின்  உச்சகட்டமாக மிளகு ராணியைப் பார்த்து 'அம்மா.. நீங்கள்தான் மக்களின் முதல்வர்' என்கிறது ஒரு கதாபாத்திரம். 


இதில் மிளகுராணியாக வரும் ராணி சென்னபைரா தேவியின் ஆளுமையை வடிவமைத்த விதம் அவளை முதன்மைப் பாத்திரமாக நிறுத்துகிறது. பிற்பகுதியில் சொற்பமே விளக்கப்படும் அவளது பால்யமும், ஆசிரியர் மீதான அவளது ஈர்ப்பும் சேர்ந்தே அந்த பாத்திரத்தை முழுமையாக்குகின்றன. அவளுக்கு அப்படியே எதிர் பாத்தி்மாக வரும் ரோஹிணியின் பாத்தி்ரமும் அத்தகைய ஆளுமை கொண்டது ஆனால் எதிர்மறையான குணங்கள் கொண்டது. இறுதியில் பிஷராடி சொல்வது போல இவை எல்லாம் ஒருவர் மற்றவரை பிரதி்செய்வதுதான் இது. யார் யாராகவும் எத்தருணத்திலும் மாறியும் விடலாம் ஆச்சரியப்பட ஏதும் இல்லை என ஒரு மெய்யியலாக கருதவும் வைக்கிறது.


நாட்டில் குழப்பத்தை உண்டாக்க பிரிவினைவாதிகளால்  வழிபாட்டுத்தலங்களில் சேதம் உண்டாக்கப் படுகிறது. இரு பெரும் மதங்களான சமணமும் சைவமும் மோதுகின்றன. இடையே குளத்திலிருந்து பிரத்யட்சமாகும் விநாயகர்  திடீர் பிரபலமாகிறார். இவற்றை எல்லாம் வாசிக்கும் போது,  சமயங்களில் எப்பொழுதும் வரலாறு ஒரே போலத்தான் இருக்கிறதோ!! நாம்தான் அது புரியாமல் ஏதோ ஒரு தரப்புக்காக தீவிர நம்பிக்கையுடன் வாதாடிக்கொண்டு இருக்கிறோமோ என்று கூட தோன்றிவிடுகிறது.



 இதுவரையிலான அரசூர் தொடர் நாவல்களில் அதிகம் கவனிக்கப்படாமல் போன பரமன்  ( அச்சுதம் கேசவம் நாவலின் பாதியில் விமான பயணத்தில்  காணாமல் போகிறவர் ) இங்கு அவ்வாறு கால சுழற்சியில் முன்னும் பின்னும் செல்கிறார்.மிளகு ராணியின் கதையும், பெரிய சங்கரன் - பகவதிக்குட்டி   குடும்பத்தின் ஐந்தாம் தலைமுறைக் கதையும் இவரால் ஒரு கோட்டில்  இணைகிறது. அந்தக் காலத்திற்கும் இந்தக் காலத்திற்கும் பொதுவான அம்சங்களோடு இவை இணைகின்றன. இரு காலத்திலும் ஒருவர் மற்றவரை பிரதி செய்கிறார்கள். சிலர் அதே குணத்துடன் அவ்வாறே; சிலர்  குணம் மாறுபட்டு;

 

நேமிநாதனுக்கும் ரோஹிணிக்கும் பிறந்த மஞ்சுவிற்கு பராமன்தான் தந்தையாக இருக்கிறான்.  சின்ன சங்கரனுக்கு கொச்சு தெரசாவுக்கும் பிறந்த மருதுவிற்கு முசாஃபர்த்தான் தந்தையாக இருக்கிறான். அங்கும் இங்கும் மஞ்சுநாத்தும்  மருதுவும் தன் ரத்தஉறவான தந்தையைவிட இந்தப் 'பெயரளவு' தந்தையுடன்தான் பெரிதும் பாசமாக இருக்கிறார்கள். முந்தைய நாவல்களில் வரும் 'நீலகண்டன்' என்கிற காமத்தால் அழிந்த ஒரு பாத்திரம் ஆவியாக  மகனே! மகனே! என அலைவது போல இங்கு சிறுவன் மஞ்சு அப்பா! அப்பா! என்று அலைகிறான். ஏதும்  பற்று இல்லாதவனாக வரும் பரமன்  16ம் நூற்றாண்டுக்குள் சென்றுவிட்டு அங்கிருந்து தப்பி  மீண்டும் 20ம் நூற்றாண்டுக்குள் வர ஏங்கியபடி இருப்பவன். ஆனால்  அங்கிருந்த   தனது மைந்தன் மீதான அன்பில் அந்த காலச்சுழற்சிக்குள் தானாக விரும்பிச் சென்று சிக்கிக் கொள்கிறான். 


கிட்டத்தட்ட அனைவருக்கும் இருக்கக் கூடிய ஒரு fantacy  கற்பனை என்பது தற்போதைய அறிவுடனும் புரிதலுடனும் நாம் அப்படியே பால்யத்திற்கோ அல்லது இளமைக்கோ திரும்பி வாழ்க்கையை மாற்றி அமைத்துவிட முடியுமா  என்பது. புளியமரத்தின் கதை நாவலில் பார்க்கில்  அமர்ந்து இருக்கும் வயதானவர்கள் இவ்வாறு யோசித்துக் கொண்டிருப்பதாக எழுதியிருப்பார். இந்த தளத்தில் திரைப்படங்களும் வந்துள்ளன.  பற்றற்ற தன்மை என்பது மதங்களின் கோட்பாடுகளில் ஒன்று.  ஆனால் வயது  முதிர்ச்சி ஆக ஆக பற்று கூடுகிறதா அல்லது குறைகிறதா என்பது சுயபரிசோதனைக்குரிய ஒன்று.  பால்யம் என்றில்லை, வேறு நூற்றாண்டிற்குள் போனால் கூட பற்றில்தான் சிக்குவோம் என்று பரமன் காட்டிவிடுகிறார். அதை ஒரு வேடிக்கை கதையாக இரா.முருகன் சொல்லிச் செல்கிறார்.



இத்தனை தளங்களில் வைத்து யோசிக்க வேண்டாம் என்றாலும் மிக நேரடியாக மிளகு வர்த்தகம் எவ்வாறு எழுந்து வந்து வர்த்தகர்களின் கையில் சிக்கியது என்கிற ஒரு நேரடி கதையாகவும் இதை வாசித்து விடலாம்தான். இதற்குள் வரும்  நாயக்கர் அரசாங்கம், அண்டை சமஸ்தானங்கள் அரசியல் முதல் பிற்காலத்தில்  பிரிட்டிஷ் கைக்கு போனது வரையிலான சித்திரத்தை பெற்று விடலாம். இன்று உணவக மேசைகளில் எளிதில் கிடைக்கும் சால்ட் அண்ட் பெப்பரில் சாலட்டின் கதை இங்கு பரவலாக அறியப்பட்டு விட்டது.  அடுத்ததாக பெப்பரின் கதையை சுவாரசியமாக சொல்ல வந்துவிட்டது  மிளகு நாவல்.