Monday, May 21, 2018

காவியமுகாம் (அல்லது) ஊரான் பிள்ளைய ஊட்டியில் வளர்த்தல் - 3

தொடர்ச்சி..

ஊட்டி காவிய முகாம் எப்பொழுதும் கம்பராமாயண அரங்கோடு துவங்கும். நாஞ்சில் நாடன் துவக்கிவைப்பார். நான் சென்ற முதல் வருடம் நாஞ்சில் நாடன் வாசிக்க அதை ஜடாயு பாட திருமூலநாதன் ஓத என ரகளையாக இருந்தது. அங்கு சென்றபோதுதான் பெங்களூருவில் ஜடாயு பல வாரங்களாக நடத்திக்கொண்டு வருகிறார் என்பதும் அறிந்தேன். அந்த பாடல்களை கண்ணதாசன் எங்ஙனம் திரைப்பாடல்களாக வைத்தார் என சுரேஷ் வெங்கடாத்ரி பாடுவார். ( அரங்கில் பாடமுடியாது. இரவு தூங்கும் முன் திரையிசைக்கச்சேரி நடக்கும். இறுதியாக ரகு மற்றும் யோகேஸ்வரன் என்னும் ஜெய விஜயர்களால் அது ஒரு முடிவுக்கு வந்தது)

நிற்க! சொல்ல வந்தது அதுவல்ல..


ராமனும் லெட்சுமணனும் கிட்கிந்தையை அடைகிறார்கள், சீதையைக்காணவில்லை, அவளை ராவணன் தூக்கிச்சென்றான் என்று ஜடாயு வழியாக அறிந்திருக்கிறார்கள். ராமன் மிகவும் மனம் பேதலித்து இருக்கும் தருணம். அங்கே லெட்சுமணன் அந்த வனத்தின் அழகு பற்றிக்கூறுகிறான். அந்த வர்ணனை மிக அழகாக முடிந்து அதையெல்லாம் காணுங்கள் என்கிறான். அதற்கு ராமனின் மறுமொழி

யாழிசை மொழியோடன்றி யான் உறும் இன்பம் என்னோ!!”

எனத் துவங்குகிறது! யாழின் இசையத்தவிர நான் அடையும் இன்பம் வேறு உண்டோ என்கிறான் ராமன்.

“ சீதையின் குரலை சொல்றான் ராமன்” என்றார் நாஞ்சில். என காவிய வாசிப்பின் அடுத்த நிலை இந்த வரியோடுதான் துவங்கியது. அந்த படலம் முழுவதுமே அப்படி ராமனின் பித்துநிலையைத்தான் படிக்க முடியும். சதா அவள் நினைவாகவே இருக்கும் ராமனிடம் சீதையைத்தேடிச்செல்லும் அனுமன் அவளின் அங்க அடையாளங்களைக் கேட்கிறான்.

அதற்கு பித்து பிடித்தார்ப்போல் இருக்கும் ராமனின் பதில்களில் ஒன்று..

வார் ஆழிக் கலசக் கொங்கை வஞ்சிபோல் மருங்குலாள்தன்
தார் ஆழிக் கலை சார் அல்குல் தடங் கடற்கு உவமை-தக்கோய்!-
பார் ஆழி பிடரில் தாங்கும் பாந்தளும், பனி வென்று ஓங்கும்
ஓர் ஆழித் தேரும் ஒவ்வார், உனக்கு நான் உரைப்பது என்னோ?

மேற்கண்ட பாடல் ஆபாசம் என்று சொல்லப்பட்டு கம்பரசம் வந்து கம்பராமாயணத்தை எரிப்பதுவரை போய் நிற்கிறது. ஆனாலும் ஒருத்தன் இதை மீண்டும் பரப்ப வந்தானே என்றார் ஜெயமோகன் இடைவேளையின் போது. அன்றும் அதன் பின்னும் உரையாடியும் கேட்டும் படித்தும் புரிந்துகொண்டதன் சுருக்கம் இது,

பக்தியை எதிர்க்கவும் பகுத்தறிவு வளர்க்கவும் தனக்கு சாதி ரீதியாக  பிரச்சனை பெரிதாக வாராமல் இருக்கவும் ஒரு ஆரிய திராவிட கதைக்கு ஏதுவாக இருப்பதாலும்  ஒரு கல்லில் நாலஞ்சு மாங்காய்கள் அடிக்க கம்பராமாயண எதிர்ப்பை கையிலெடுக்கின்றனர் திராவிட ( முன்னேற்ற ? ) இயக்கத்தினர். மற்ற அனைத்தையும் விட அரசியல் ரீதியாக வேறு எதிலும் கை வைக்கவும் முடியாமல் போக இளைத்தவனாக சிக்கியது கம்பராமாயணம் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. அதில் ஒரு மேடையில் ஆற்றிய உரையில்தான் மேற்கண்ட பாடல் கிண்டலாக சொல்லப்படுகிறது. ( அந்த பேச்சின் பாவனைகளை உங்களிமே விட்டுவிடுகிறேன்..நான் மிமிக்ரி செய்ய விரும்பவில்லை :-) )

அதைக்கேட்டு அதிர்ந்து கம்பனை இழிந்து பேசுவதைக் கேட்கவா நான் இன்னுமுயிரோடு இருக்கிறேன் என தற்கொலை செய்ய முடிவு செய்து பின் அதிலிருந்து மீண்டு காரைக்குடி கம்பன் கழகத்தை அமைத்தவர் சாமிநாத கனேசன் அவர்கள்.  தன்னை கம்பனுக்கு அடியவன் என அறிவித்துக்கொண்டு தொண்டனுக்கு சட்டை இல்லை என சட்டை அணியாமல் இருந்தவர்.    கம்பனடிப்பொடி சா.கணேசன் என்று அழைக்கப்பட்ட கணேசன் அவர்களின் வாழ்க்கை வரலாறும் அதன் பின்னரே கேட்டும் வாசித்தும் அறிந்தேன். வலியது வாழும் என்கிற இயற்கையின் நெறி ஞாபகம் வந்தது.



இந்தளவு மற்ற காவியங்களோ காப்பியங்களோ நம்மை வந்தடையவில்லை என்பதும் உண்மை. சமீபத்தில் அளவை நெறியினர் என்று மீமாம்சகர்களை குறிப்பிடுவது மணிமேகலையிலிருந்து உள்ள பழக்கம் என்பதை வெண்முரசு உரையாடல்கள்களில் படித்தபோது ஆச்சரியமாக இருந்தது. இன்னும் அறியவேண்டிய தமிழ் காவியங்களே இன்னும் எவ்வளவு இருக்கின்றன!!

ஒருமுறை ஜெயமோகன் கூறினார்.. இன்று நாம் பேசும் இந்த தருணத்திலும் உலகில் எங்கோ ஒரிடத்தில் கம்பன் வாசிக்கப்பட்டுக்கொண்டிருப்பான் என்று. நானும் யோசித்துப்பார்க்கிறேன்.. ஊட்டி கம்பராமாயண அரங்கில்தான் அந்த புத்தகத்தை முதலில் கையில் தொட்டுப்பார்க்கிறேன்..எனக்கு இது பள்ளியில் மனப்பாடப்பகுதியாகவும் இருந்ததில்லை. ஆனால் அதற்கு முன்பாகவே  எனக்கு

“தோள் கண்டார் தோளே கண்டார் “

“ அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்”

“ ஆழிசூழ் உலகெலாம் பரதனே ஆள “

” குகனொடு ஐவரானோம்”

”கண்டேன் சீதையை”

“இன்று போய் நாளை வா”

” கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்”

என பாடல்கள் தெரியும். எங்கோ எப்படியோ இவை என் காதில் விழுந்து வைத்திருக்கின்றன.



ஈரோடு புத்தக கண்காட்சியில் நெல்லை கண்ணன், தனக்கு திருமணமான புதிதில் கம்பன் உரையாற்றியே அந்த காலத்திலேயே அஞ்சாயிரம் சம்பாதிப்பேன் என்று கூறினார். ஒரு பக்கம் அதன் நாடகீய தருணங்கள் சொல்லப்பட வாலியை கொன்றது தவறா, அக்கினிப்பிரவேசம் தவறா என விவாதங்கள் எழ பட்டிமன்றங்கள் என பேச  ஒரு வாசகனின் ஆரம்பம் அங்கே நிகழ்கிறது.

ஆனால் அதோடு நிற்கிறது.

இன்றும் யூட்யூபில் கம்பன் பற்றிய உரைகள் கிடைக்கின்றன. அதில், இலங்கை ஜெயராஜ், D.A ஜோசஃப், நெல்லை கண்ணன், அப்துல் ரகுமான், கவிஞர் வாலி , சாலமன் பாப்பையா உள்ளிட்ட பல நட்சத்திரப்பேச்சாளர்களின் உரைகள் கிடைக்கின்றன. ஆனால் அதிலிருந்து அடுத்த கட்டம் நகர நமக்கு நெருங்கி உரையாட அருகில் அமர்த்தி சொல்ல ஆசிரியர்களை தேடிச் செல்லவேண்டும். நண்பர்களாக இணைந்து அதை கொண்டு செல்ல வேண்டும். அதற்கு இன்னும் பெரிய அறிமுகம் மற்றும் கம்பன் பற்றிய  விளக்கம் தேவைப்படுகிறது. அதை நவீன வாசகர்களிடம் கொண்டு சொல்வதை நாஞ்சில் நாடன் அளவிற்கு வேறு ஒருவர் இன்னும் செய்யவில்லை என்று நினைக்கிறேன். ஒவ்வொரு மேடையிலும் கம்பன் புகழ் பாடுகிறார். பிரளயமே வந்து மொத்தம் அழிந்தாலும் தமிழின் மொத்த சொற்களையும் கம்பராமாயணத்தை வைத்து மீட்டுவிடலாம் என்றார் ஒருமுறை.

அவர் தன்னை ஒரு மாணவனாகவே கருதி அங்கே நிற்பது இன்னும் அழகாக இருக்கும். சில இடங்களில் ஜடாயுவிடம் சரியா எனக் கேட்பார். சில இடங்களில் ஜெயமோகன் அதை வேறொரு தளத்தில் வைத்து விளக்குவார். உதாரணமாக,
“எந்தை நீ  யாயும் நீ எம்முன் நீ  தவவந்தனைத் தெய்வம் நீ” என்று விபீஷணன் ராவணனிடம் சொல்லும் பாடல்,  அதை என் தந்தை தாய் முன்னவன் ( அண்ணன்) தெய்வம் நீ,  என உரையில் இருப்பதை நாஞ்சில் சொல்ல, ஜெ.  குறுக்கிட்டு “ முன்” ந்க்கிறது முன்னோரா இருக்க வாய்ப்பு இருக்கு.. என கூறினார். அதை ஒருமுறை படித்துப்பார்த்தவர் தலையாட்டியபடி, சுழித்து குறித்து வைத்துக்கொண்டார்


அங்கே ஒருவன் கற்க இன்னும் நிறையவே உள்ளன

தொடரும்..







No comments:

Post a Comment