Saturday, May 12, 2018

காவியமுகாம் (அல்லது) ஊரான் பிள்ளைய ஊட்டியில் வளர்த்தல் - 2

முந்தையதின் தொடர்ச்சியாகக்கூட வாசிக்கலாம்

கவிதைகள் பிடிபடாதவையாகவே இருக்கும் எப்பொழுதும். அதனால் கவிஞர்களுடன் நான் உரையாடுவதில்லை. ஆனால் யாராவது உரையாடினால் அருகில் நின்று கேட்டுக்கொண்டிருப்பது வழக்கம். அவ்வப்போது ஆமாம் என்று கூட சொல்லி தலையாட்டுவேன்.  நான் ஸ்வாஹா சொல்ல மட்டும்  வந்தவன் என்பது தெரியாமல் நண்பர்கள் கவிதை பற்றி என்னிடம் கருத்தும் கேட்டிருக்கிறார்கள். 


என் நண்பன் நன்றாக கவிதை எழுதுவான். கல்லூரி ( பாலிடெக்னிக்னாலும்)  நாட்களில்  ஆட்டோகிராபில் அனைவருக்கும் கவிதை எழுதித் தருவான். எனக்கு சிறந்த கவிதை எழுதித்தந்தான்..

"வாழ்க்கை ஒரு ஐஸ்கிரீம்..
உருகுவதற்குள் நக்கிவிடு

வாழ்க்கை ஒரு தேநீர்..
ஆறுவதற்குள் உறிந்து விடு..."

ஒவ்வொரு பதார்த்தமாக நான்லீனியராக  தொடர்ந்து அப்பளத்தில்  முடியும் அந்தக் கவிதை

அவன் இப்போது தன் மகளுக்கு பாரதி என்று பெயர்வைத்திருக்கிறான்..

கவிதை என்று நினைப்பவர்கள் மனதில் இப்படி ஒரு தாக்கத்தை முதலில் ஏற்படுத்தியவர் பாரதிதான். படித்தால்,  பெண்சுதந்திரமா, நாட்டுப்பற்றா கண்ணன் பாடல்களா என புரியுமளவு  எளிதான கவிதைகளாக எழுதியிருக்கிறார்.. அதை நம்பி நவீன கவிதைகளை படிக்கத்துவங்கும்போதுதான் உருவகம் குறியீடு படிமம் போன்ற சிக்கல்களில் மாட்டிக்கொள்கிறேன்

கவிஞர் தேவதேவன் அவர்களின் விஷ்ணுபுர விருது ஏற்புரை மிகப்பெரியது. அதைவைத்தே அவரும் ஜெயமோகன் போன்றதொரு உரையாடல்காரர் என எண்ணியிருந்தேன். ஆனால் அவர் மிக அமைதியானவர். அவரை 2015 ஊட்டி கூட்டத்தில் முதலில் சந்தித்தபோது, நண்பர்கள் மூலம் கேள்விப்பட்டிருந்த தம்பான் சுவாமிகள் இவர்தான் என நினைத்து வணங்கி சென்றுவிட்டேன். ஒரு மலரை செடியிலிருந்து பியக்காமல் அப்படியே உள்ளங்கையில் பிடித்து பார்த்துக்கொண்டிருந்தார். அவருடன் நடைபயணத்தில் உரையாடும்போது ( அரங்கில் அவர் உரையாடி பார்த்ததில்லை) கவிதை,கவிஞன் போன்ற நுண்ணுயிர்கள் பற்றி  சற்று உணரமுடியும்.



அவருக்கு ஒரு கவிதை அரங்கு இருக்கும். அவர் பொறுமையாக  இந்த குறியீட கவிதைல திடீர்னு மாத்த  முடியாதுங்கிறத நாம கவனத்தில் வைக்கனும் என்பார். ஜெ. உடனே, அவர் சொல்றது புரியுதா.. கவிதைல சில முக்கியமான விஷயங்களை புரிஞ்சிகனும், குறியீடு உருவகம் படிமம் னனு விஷயங்கள் இருக்கு. படிமம்ங்கிறது அதன் இமேஜ். அது அந்தந்த கவிதைக்குபொதுவானது. ஆனால் குறியீடுங்கிறது வேற. உதாரணமா பாம்புங்கிறது இப்பவரை விழைவைக்குறிக்குது.. அல்லது சாத்தான். அதைதிடீர்னு இந்த கவிதைல பாம்பு தென்னைமரத்துக்கான குறியீடு ன்னு சொல்லக்கூடாது. ஏன்னா அது இவ்வளவு நாள்  நிலைபெற்றுவிட்ட ஒன்று.. இப்படியாக அரைமணி நேரம் போனதும் அரங்கு முடிந்துவிடும். என்னை எங்க பேசவிடறாங்க என தேவதேவன் விரக்தியடைந்த நிலையில் ஒரு இளம் வாசகர் உங்க அரங்கு அருமைசார் என்று சொல்லிவிட்டுப் போவார்.

நாஞ்சிலுக்கு நேரெதிர் என்று இவரைக்குறிப்பிட்டது காரணமாகத்தான்..இங்கே பாரதியின் பேர் அடிபட்டதும் அப்படித்தான்..

இது விஷ்ணுபுரம்விழா சம்பவம், நாஞ்சில் பேசுகிறார்..

சொற்களை அருமையாக கையாளத்தெரிந்தவன்தான் கவிஞன். சொல் இல்லையென்றால் கவிதை இல்லை. பாரதி,

சூதர் மனைகளிலே -- அண்ணே!
தொண்டு மகளிருண்டு.
சூதிற் பணய மென்றே -- அங்கோர்
தொண்டச்சி போவதில்லை

என்கிறான். இதை நாஞ்சில்நாடன்  உணர்ச்சியோடு  உரைக்கக் கேட்க வேண்டும். நல்ல புல்லரிப்பு எழக்கூடும். இதில் எப்படி மலர்களைத்தொடுப்பது போல சொற்களை அமைக்கிறான் பாருங்க.  அவனுக்குப்பின் கவிஞன் யாரும் இல்லை என்று சொன்னபோது கிளர்ந்தெழுந்தார் தேவதேவன். சரி சாதாரணமாக எழுந்தார்.

கவிதை என்பது கவிஞன் உணரும்  தரிசனத்தை அடுத்தவருக்கு கடத்த செய்யும் முயற்சி. அதை அவன் தனக்குள் வைத்துக்கொள்கிறான். பிறகு அடுத்தவருக்கு உரைக்கும்போது அவன் அடைந்ததை முழுமையாக சொல்ல முடியாது. அந்தளவு சொற்கள் எந்த மொழியிலும் இல்லை. அதை அவன் குறிப்பிட்டு சொல்ல முயல்கையில் அந்த கவிஞன் மற்றும் அவன் சொல்லும் இடம் தருணம் போன்ற இடம் பொருள் ஏவல்களையும் கொண்டு அந்த கவிதையை வாசித்து அந்த கவிஞன் அடைந்த தரிசனத்தை வாசகனும் அடைய வேண்டும். ஆகவே அங்கு அதிகம் உழைப்பு தேவைப்படுகிறது.  சொற்களை கட்டும் கவிஞன் மகாகவிஞன் அல்ல. கவிதை என்பது நிகழ வேண்டும். சொல்லப்படக்கூடாது. அங்கே சொற்களைத்தாண்டி ஒன்று வேண்டும். ஆகவே கவிதை என்பது சொல்லில் அல்ல. சொல்லின்மையில் உள்ளது என்றார்.

ஆகவே கவிஞன் மெளனத்தில் சொல்லி அதைவாசகன் மெளனத்தில் உணர்ந்து ஒரு மெளனகுருவாக வாழலாம் நன்றி. என முடித்துக்கொண்டார் நாஞ்சில்.

விசு பட ரேஞ்சில் ஒரு விவாதம் நிகழுமென எதிர்பார்த்து ஏமாந்ததுதான் மிச்சம்

ஆனால் அந்த உரையாடலுக்குப் பின்,  ஒவ்வொரு கவிதை அரங்கிலும்  அந்தகரணவிருத்தி ததாகரணவிருத்தி சப்தகரணவிருத்தி என  வார்த்தைகளைக் கூறிவிட்டு, மாயக்கலை நிபுணர் போல கையை மட்டும் அசைத்துவிட்டு, வேணுவெட்றாயன்  உரை அல்லது  மோனோ ஆக்டிங்  நிகழ்த்திப்போகும் போது ஏவி மணிகண்டன் மட்டுமல்லாது இன்னும் சிலரும் கை   தட்டுகின்றனர்




No comments:

Post a Comment