ஊட்டிக்கு மலைகளின் அரசி என்று பெயர் அல்லது இளவரசி...! ஏதோ ஒன்றாக இருக்கட்டும். குருடன் தூங்கினால் என்ன முழித்திருந்தால் என்ன என்பது போலத்தான் நானும் போகிறேன் வருகிறேன்.
'டால்பின் நோஸ் பாத்தியா?'
' இல்லீங்க நிறைய நோஸ்கட் தான் பார்த்தேன்..'
'சூசைட் பாயண்ட்? '
அது ஒவ்வொரு அமர்வுலயும் உண்டுங்க.. பின்னாலேந்து தள்ளிக்கூட வுடுவாங்க..
எனக்குப்பொதுவாக இருக்கும் பிரச்சனை ஒன்று உண்டு. ஒரு விஷயத்தை சொல்லிக்கொண்டிருக்கும்போதே அதில் உள்ள தவறு தெரிந்துவிடும். உடனே, அது அப்படி இல்ல.. ஆனான்னு சுத்தி நட்ட நடுவில் நிறுத்திவிடுவேன். பேசுவதற்கு முன்னால் அதை தனக்குள் ஒருமுறை பேசிப்பர்க்கவேண்டும் என்று நினைத்து யோசித்து இருக்கும் அந்த கேப்பில் அதற்கான பதிலை சொல்லியிருப்பார். அது தெரியாமல் நாம் அதையே கேட்க.. வேறென்ன..? சூசைட் பாயிணட் தான்.
திருப்பதி போல ஊட்டிக்கு போக ஒரு வழி வர ஒரு வழி என இல்லை. அதில் சமதளத்தில் ஓட்டிப்பழகிய இருவரில் ஒருவர் கீழிருந்து மேலாகவும் ஒருவர் மேலிருந்து கீழாகவும் வரும் சமயம் இருவரும் நேராக பார்த்து இது என்ன என அதிர்ச்சியாகி ஸ்தம்பிக்கும் ஓர் இமைக்கணத்தில் இருவருக்கு பின்னாலும் அனுமார் வாலாக அனைவரும் நின்று ஓய்வடுப்பது ட்ராபிக் ஜாம் என அழைக்கப்படுகிறது. அத்தகைய ஒன்றில் நாஞ்சில் நாடன் மாட்டிக்கொண்டதால் இந்தவருடம் எனது சிறுகதை கலந்துரையாடலுடன் துவங்கியது. செல்வேந்திரன் ஸ்டைலில் சொன்னால் 'நாராயண பலி"
அதன்பின் யுத்தகாண்டம் துவங்கிற்று.
நாஞ்சில் நாடன் அவர்களுக்கு ஒரு குழப்பம் இருக்கிறது. கிராமவாரியாக சுற்றியாயிற்று. மிதவையாய் ஒரு நகரை அடைந்து இன்று பல நாடுகள் சென்று வந்துவிட்டார். பின் கம்பராமாயணம். ஒரு இல் ஒரு வில் ஒரு சொல் என பழகிவிட்டார் போலும்.. பிரச்சனை என்னவெனில் ஒரு சொல், அதனால் இவரது will ரொம்ப ill ஆகிவிட்டது. அது ஒரு 'பிள்ளை'த்தமிழ் என சிலேடையாக சொல்லலாம். கடந்த மூன்று வருடங்களாக ஒரே புலம்பல். கடமை முடிந்தது. கிளம்பிவிடுகிறேன் என. போட்டோ எடுக்கையில், இப்பவே எடுத்துகங்க..அஞ்சலி எழுத யூஸ் ஆவும்ல என்றார். எனக்கு ஒரே சிரிப்பு. இப்படித்தான் வேலையை விடுவதைப் பற்றி முப்பது வயதுமுதல் அறுபது வயதுவரை பேசிக்கொண்டு இருந்ததாக ஜெ. தளத்தில் எழுதியிருக்கிறார்.
அவரது கதை ஒன்றில் வாத்தியார் வாலியை அம்போடு விட்டுவிட்டு வகுப்பில் "பலே சில்மிஷம்" செய்த ஒருவனை தலைமை ஆசிரியரிடம் அழைத்துச்சென்றுவிடுவார். வாலி அம்போடு அடுத்த நாள் வகுப்புவரை கிடப்பான். அதுபோல இங்கு இப்போதுதான் விபீஷசனோடு எழுவராகியிருக்காங்க. இன்னும் இன்று போய் நாளைவா.. அக்கினிபரிட்சைல்லாம் இருக்கு. இன்னுமார் நூறாண்டு கூட இருக்கவும் சார்.
நாஞ்சில் நாடனின் மோகித்தே பற்றி எப்பவும் மோகித்தே இருந்திருக்கிறேன்.மிதவையில், சதுரங்க குதிரையில் கூட , கூட இருப்பவர்களுடன் அவருக்கு சில குறைகள் இருந்தன. ஆனால், மோகித்தே ஒரு தரிசனம். ஏற்கனவே நாஞ்சில் நாடன் பற்றி நாலு வருசம் முன்னாடி எழுதிய கடிதம் ஜெ. தளத்தில் உள்ளது. அதைப்படித்துவிட்டு வரவங்க வரலாம். பஸ் பத்துநிமிசம் நிக்கும்.
அவரது சில ஆப்த வாக்கியங்களை நான் எப்பவும் நினைப்பதுண்டு. அதில் ஒன்று "கல்விக்கு மாற்று இல்லை" என்று விகடன்மேடையில் எழுதிய வரி. நாஞ்சில் சார் நல்ல உரையாடல்காரர். விஜயா பதிப்பகத்தில் ஷிமோகா ரவிஅண்ணனோடு நானும் உடனிருக்க நின்றபடியே ஒரு மணி நேரம் அரசு அலுவலகங்கள் சார்ந்த அனுபவங்கள் பற்றிபேசினார். அதன்பிறகு அவரைக்கண்ட வேலாயுதம் அவர்கள் அவர் அறைக்கு அழைத்துச்சென்று எங்களை அமரவைத்தார். அவர் பணி வாழ்க்கை சுந்தர்ராமசாமி என நீண்ட உரையாடல். நாம் கேட்டால் மட்டும் போதும். நமக்கும் சேர்த்து அவரே பேசிவிடுவார். மீன் வகைகளைப்பற்றி பேசினால், நான் மீன் சாப்படறதில்லீங்க எனக்கு வகைல்லாம் தேவையில்லைன்னு சொல்லக்கூடாது. வேங்கை,புலி,சிறுத்தை ன்னு நமக்கும் பல பேரு தெரியும். ஆனா நாம அதெல்லாம் சாப்பிடறதில்லை என்று நீட்டி சொல்லிவிட்டு அடுத்தவரிக்கு போவார்.
அன்றும் இன்றும் பேனாவில் எழுதும் ஒரு எழுத்தாளர். அவர் நினைவாற்றலுக்கு நிகராக உடலும் ஒத்துழைத்தாலொழிய இது சாத்தியம் இல்லை. தமிழுக்கு புதிய வார்த்தைகளை அருளியுள்ளார். கள்ளமெளனம் என்று இன்று படாதபாடு படும் வார்த்தை அவர் முதலில் உபயோகப்படுத்தியது. அதுபோல தமிழத்தில் உள்ள அனைத்து சாதியினருக்கும் ஒரு வார்த்தையை அவர் உண்டாக்கி சொல்லிவைக்கலாம். கடமை இருக்கு ஐயா..
இன்றிருக்கும் அரசியல்வாதிகளை எஃப் எம் ரேடியோவில் கூட ஓட்டுகிறார்கள். அதுவல்ல விசயம். முன்னர் ஐயாவும் அம்மாவும் மாறி மாறி ஆண்ட காலத்தில் கூட அதை இலக்கியத்தில் பதிவுசெய்த
எழுத்தாளர் இவர்தான். சமகாலத்தை எழுதுவது எழுத்தாளர்களுக்கு தேவையில்லை. அது பத்திரிக்கைக்காரன் வேலை என கும்பமுனியால் போகமுடியாது. அவர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள் என ஒரு அறம் பாடிவிட்டுத்தான் போவார். அது அகஸ்மார்த்தாக அந்த தொடரின் கடைசி கட்டுரையாகிவிட்டதா என்ற கேள்விக்கு இன்றுவரை கள்ளமெளனம்தான் பதில். (ஆனால், ஏவலோடு ஒப்பிட்டால் இதெல்லாம் சீவல்தான்)
ஒரு மொழி எப்படி துலங்கி வருகிறது என்பது பற்றி விளக்குவார். கம்பராமாயணத்தில் யானையை எத்தனை வகையா சொல்றான்.. அம்புக்கு எத்தனை வகை சொல்றான். தென்னை மரத்துக்கு என்ன பேரு என்று சொல்லும்போதே பீகாருக்கு போய்விடுவார். பீகார்ல தென்னை மரம் இல்லை அதனால் அங்க பன்னாடைன்னு திட்டறதும் இல்லை என்று ஒரு பொதுஅறிவு விடை சொல்லிவிட்டு கம்பனுக்கு மீள்வார்.
குறுந்தொகையில், சீவகனில், கம்பனில் உள்ள சொற்களில் அமிழ்ந்தவர். அனைத்தும் சொற்களில் அடக்கம் என்பது அவர் எண்ணம் என நினைக்கிறேன். சொற்களால் ஆனது உலகம் என நம்புபவர். அதானாலேயே சொல் பொறுக்காதவர்..
இவருக்கு நேரெதிராக ஒருவர் வருவார். சொல் ஏதும் தேவையில்லை. ஒரு மரத்தடி நிழல் போதும் அவருக்கு..
(தொடரும்)
No comments:
Post a Comment