Thursday, September 1, 2022

விஷ்ணுபுரம் விருது 2022- சாரு நிவேதிதா

 2022 ம் ஆண்டுக்கான  விஷ்ணுபுரம் விருது எழுத்தாளர் சாரு நிவேதிதாவிற்கு என்கிற அறிவிப்பிற்கு  வாழ்த்துக்களும் வசைகளும் சேர்ந்தே வந்த வண்ணம் உள்ளன.  அதற்குக் காரணம் இங்கு உருவாகி வந்துள்ள ஒரு  பிம்பம். அதில் இருவரின் பங்கு சமமானது அல்ல. ஜெயமோகன் தனக்கு எதிரானவர் என்பதை  சாரு தனது நாவல்களில் அல்லது பதிவுகளில் குறிப்பிட்டப் படியே இருப்பார். இருவரில் ஜெ. தனக்கு எதிரானவர் என்பதை தொடர்ந்து எழுதி நிறுவிக் கொண்டதில் சாருவின் பங்குதான் அதிகம். ஒருமுறை ஜெ. வின் புத்தகத்தை மேடையில் கிழித்து எறிந்திருக்கிறார். ஒப்புநோக்க இதற்கு ஜெ. வின் எதிர்வினை குறைவான அளவில் இருக்கும். ஆனால் காத்திரமானதாகவும் இருக்கும். இப்பொழுது விருது அறிவிக்கப் பட்ட சமயத்தில் பலர் சாருவுக்கு எதிராக ஆற்றும் எதிர்வினைகள் கூட 'அங்கிருந்து' எடுக்கப் பட்டவையாகத்தான் உள்ளன. இதெல்லாம் பதினைந்து ஆண்டுகள் முன் நல்ல சுவாரசியமான வம்பு. இருவரின் அழகியலும் வேறு வேறு. இருவரின் வாசகர்களும் வேறு வேறு.  அப்போது  இணைய நண்பர்கள் சூழலில் சாரு அதிகம் வாசிக்கப்பட்டார். ஜெ.வின் வலைதளம் நிறுவப்பட்டு இருந்தது. ஆனால் விகடன் கவர் ஸ்டோரி  வெளியாகியிருக்கவில்லை.



சாரு எழுத்துக்களில் நான் முதலில் ராஸலீலா நாவலை வாசித்தேன். பின்நவீனத்துவக் கவிஞன் என்று தன்னைத் தானே அறிவித்துக் கொண்ட நண்பன் ஒட்டக் கூத்தன் நாவலை அளித்தான். அப்பொழுது சைதாப்பேட்டையில் எங்கள் பேச்சிலர் ரூம். சிங்கிள் பெட்ரூம். நண்பர்கள் தூங்க வேண்டும் என்பதால் மின்விளக்கை ஒளிரவைக்க இயலாமல் புத்தகத்தை கீழே வைக்க மனமும் இல்லாமல் நாற்காலியை பாத்ரூமில் போட்டு படித்தேன். அந்தளவிற்கு சுவாரசியமான நாவல்.  பின்னொருநாள் கொரோனா காலத்தில் ஒரு உரையாடலில் எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் அவர்களுடன் மாற்றுவகை எழுததுக்கள் குறித்த அவருடைய கருத்துக்களைக் கேட்டறிந்த போது, சாருவின் நடை குறித்தும் எனது இந்த 'ராஸலீலா வாசிப்பனுபவம்' குறித்தும் உரையாடியது நினைவுக்கு வருகிறது. நிற்க! ராஸலீலாவை வாசித்த காலத்தில்  உத்தமத் தமிழ் எழுத்தாளன் என்கிற பதத்தை வைத்து ஒரு சுவாரசியமான உரையாடல் ஆர்க்குட்டில் நிகழ்ந்தது. ஆனால் பிற்காலத்தில் அங்கேயே சென்று சேருவேன் என அப்போது தெரியாது.


அதன்பிறகான புத்தகக் கண்காட்சியில் சாருவை நேரில் சந்தித்து வாங்கியது கீழே படத்தில் உள்ள ஸீரோடிகிரி நாவல். இந்நாவலை வாசித்து ஒரு மாமாங்கம் ஆனபோதும் சமீபத்தில் 'பனி உருகுவதில்லை' விழாவில் சாருவை சந்தித்த போது இதன் ஏழாம் அத்தியாத்தின் வரிகளை, இதன் கவிதைகளை அவரிடம் நினைவிலிருந்து அப்படியே ஒப்பிக்க முடிந்தது.  ஆனால் ஸீரோடிகிரியை பைபிள் போல சுமந்து திரிந்த காலங்களில் கூட சாருவை சந்திக்க வேண்டும் எனத் தோன்றவில்லை. அப்பொழுது எனக்கு எழுத்தாளர்களை சந்திப்பதில்  ஒரு மனத்தடை இருந்தது.  ஆகவே ஆங்காங்கு விழாக்களில் சந்திக்கும் எழுத்தாளர்களோடு நின்று பேசுவது மட்டும்தான். அதன் பிறகு கேணி கூட்டம் நடந்ததால் பெரும்பாலான எழுத்தாளர்களை அருகில் காணும் வாயப்பும் கிடைத்தது. அதற்கும் சில வருடங்கள் கழித்து 2015 ல் தான் தயக்கம் நீங்கி ஜெ. வை தேடிப்போய் பார்த்தேன். அதுவும் அவர் சென்னை வந்திருந்த போது. பின் ஊட்டிக்குப் போனேன்.. பின் கோயமுத்தூருக்கு. ஆனால் சென்னையிலேயே பேச்சிலராக சுற்றித் திரிந்த நாட்களில் கூட  பாலகுமாரன் முதலான பலரை நேரில் சந்திக்க தயக்கம் இருந்தபடியேதான் இருந்தது. ஒரு வாசகன் தன் ஆதர்ச எழுத்தாளர் காணமாட்டான் என சுஜாதா எழுதிய ஒரு வரி என் மனதில் நின்றிருந்தது காரணமாக இருக்கக் கூடும். நான் இதைப் 'பனிஉருகுவதில்லை' விழா அன்று,  சாருவிடம் சொன்னபோது அவர் அதை மறுதலித்தார். மறுநாள் அதை தன் தளத்திலும் குறிப்பிட்டிருந்தார். எனது தனிப்பட்ட அனுபவத்தில் சொன்னால், சுஜாதா எழுதிய வரிதான் முதன்மைக் காரணம். ஊடகத்துறை அல்லது பதிப்புத்துறையை சாராத,  வாழ்க்கையிலும் 'செட்டில்' ஆகாத, ஒரு வாசகன் அந்த வரியைப் பற்றிக் கொள்வான் என்றுதான் நினைக்கிறேன். வாசகர் அதைத் தவறு  என உணர்ந்து அதைத்தாண்ட வேண்டுமானால் மற்ற எழுத்தாளர்கள் சுஜாதாவின் வீச்சைத் தாண்டிய ஒரு நம்பிக்கையை அளித்தபடி இருக்க வேண்டும். தமிழில் அதை தொடர்ச்சியாக ஜெ. செய்துவருகிறார். அவரிடமிருந்து விருது விழா என்றும், வாசகர் சந்திப்பு என்றும், காவிய முகாம், கவிதை அரங்கு வாசிப்பு பட்டறை என்றும் தொடர்ச்சியாக ஏதாவது அறிவிப்பு வந்தபடியே இருக்கும். எனக்கு மனதளவில் மிக நெருக்கமான எழுத்தாளரான நாஞ்சில்நாடனுடன் நான் முதன்முதலில் நின்று உரையாடியதே அத்தகைய  ஊட்டிக் கூட்டத்தின் நடைப்பயிற்சியில் தான். மற்றொரு வகையில் ஒரு கூட்டம் அல்லது  அமர்வுகள் என்பது நம்மை தொகுத்துக் கொள்ளவும் உதவும்.





முதன்மைக் காரணம் இது என்றாலும் அது முழுமையான காரணமும் இல்லை. எழுத்தாளரோடு வாசகருக்கு இணக்கம் உருவாவது அவருடைய படைப்புகளின் வழியாகத்தான். ஒரு வாசகரின் தேடலை சரியாக address செய்யும் எழுத்தாளர்தான் நெருக்கமாகிறார். அந்த வகையில் அப்போது எனக்குள் இருந்த, நானும்கூட அறியாத சரியாக கேட்க இயலாத கேள்விகளுக்கு ஜெ. வை அடைவதுதான் சரியான பாதையாக தோன்றியிருக்க வேண்டும். அவ்வாறு தோன்றியபின் அதுவரையிலான தயக்கத்தையும் அது உடைத்துவிடும். அது ஒரு கிறுக்கு.  சென்னை வெள்ளம், குழந்தை பிறந்து ஒரு மாதம் ஆன நேரம் அப்போது கிளம்பி விஷ்ணுபுரம் விருது விழாவிற்கு போகத் தோன்றும் கிறுக்கு. இவ்வாறாக சாருவின் எழுத்தின் வழி   உத்தமத்தமிழ் எழுத்தாளராக  வந்தவர் அவ்வாறே எனக்குள் நிலைபெற்றும் விட்டார். இது சாருவின் படைப்புகள் குறித்த எனது கட்டுரை அல்ல. இவ்வருட விஷ்ணுபுரம் விருது விழா சார்ந்த அதன் வம்புகள் சார்ந்த பதிவு என்பதால் சாரு கூறிய பதத்தை ஜாலியாகச் சொல்கிறேன்.


நான் சொன்ன அந்த 'கேள்விகளுக்கு'  சாருவிடம் பதில்கள் இல்லையா என்றால், இருந்தன. ஆனால் அவை அந்தக் கேள்வியை அபத்தம் என்றன. ஆகவே, அவர் கேள்விகளை நிராகரிக்கச் சொன்னார் என்று சொல்வேன்.  அது அனைவருக்கும் இருக்கக்கூடிய, வாழ்க்கை-மரபு-தொன்மம்-அரசியல் கலந்த சராசரியான கேள்விகள்தான் என்றாலும் எழுத்தாளர்களே அதற்குச் சரியான பதிலைச் சொல்ல இயலும். ஜெ. தன் புனைவுகளின் வழி  அந்தக் கேள்விகளை எதிர் கொள்ளச் சொல்வார். சாரு அதைக் கலைத்துப் போடுவார். ஒருவகையில் இரண்டுமே சவால்கள்தான். எனக்கு அதை எதிர்கொள்ள வேண்டும் என்கிற  சவால் ஏற்புடையதாக இருந்தது. மற்றவருக்கு வேறு ஒன்று தோன்றலாம். எதையும் கலைத்துப் போடுவது சாருவின் எழுத்து. ஆனால் கலைப்பதற்கு முன் எதையாவது அடுக்கவேண்டும் அல்லவா. அதுவே தெரியாவிடில் என்னவாகும்.  மரபை கிண்டலடிப்பது என்பது எனக்கு மரபோடு கலந்தே வரும் ஒன்றுதான். அது எளிது. மன்னார்குடியில் எனக்கு ஆசிரியர்கள் காலையில் 'நீரின்று அமையாது உலகெனின்' சொல்லித்தருவதற்கு முதல்நாள் மாலையில் அண்ணன்கள் வாயிலாக 'மழைபெய்ஞ்சு ஊரெல்லாம் தண்ணி' மனப்பாடமாகி யிருக்கும். எதன் மீதும்  கிண்டல் என்பது சாதாரணமாகவே புழங்குவதுதான். ஆகவே எதை கலைக்க வேண்டும் என்று துல்லியமாக தெரிய வேண்டும். எனக்கு அதைச் சொன்னவராக ஜெ. இருந்தார். அவ்வாறே, மற்றவருக்கு பிற எழுத்தாளர்கள் இருப்பார்கள். 


அர்த்தம் தெரியாமலேயே உச்சரிக்கும் கெட்ட வார்த்தைளைப் போல சில நல்ல வார்த்தைகளும் இருந்தன. அதில் பின்நவீனத்துவமும் ஒன்று.   பின்நவீனத்துவ எழுத்து வகை  சாருவின் களம்.   ஜெ. பின்நவீனத்துவத்தை ஏற்கவில்லை. ஏற்கவில்லை என்றால் இங்கு விதந்தோதப்பட்ட பின்நவீனத்துவம் ஜெ. க்கு ஏற்புடையதாக இல்லை.  நவீனத்துவத்தை மறுத்து கடந்து போகும் பின்நவீனத்துவம் இங்கு தன் மரபிலிருந்தே வரவேண்டும் என்பது அவருடைய கருத்தாக இருந்தது. அடிப்படையில்  விஷ்ணுபுரத்தை ஒரு சிறந்த பின்நவீனத்துவ நாவலாகத்தானே வகைப்படுத்த முடியும்.  விஷ்ணுபுரம் நாவலில் அந்த கோபுரம் சிதறியடிக்கப்படும் முன் அது நேர்த்தியாக கட்டியெழுப்பப் பட்டிருக்கும். அவர் எதை உடைக்கிறார் என்பதற்கு முன் அதனுடைய பிரம்மாண்ட தோற்றம் பிரதிக்குள் நிறுவப்பட்டிருக்கும்.  இதையே அவரது மற்ற நாவல்களிலும் காணலாம். மாறாக, சாருவின் எழுத்தில் அவர் உடைக்கும் ஒன்று எதுவாக இருக்கறது என்றால் அது இங்கு பிறரால் கட்டியெழுப்பப் பட்ட ஒரு பிம்பமாக, நாம் அன்றாடம் காணும் ஒன்றிலிருந்து எழுந்து வருவதாக இருக்கும். அது தபால்துறையின் அதிகாரவர்க்கமாக  இருக்கும் அல்லது திரைப்படத்துறை மீதான ஒரு மாயபிம்பமாகவும் இருக்கும். இங்கு ஒரு சராசரி மனிதனை ஆட்கொள்ளும் புறக் காரணிகளான அரசியல் அல்லது சினிமா. ரஸலீலாவை வாசித்த காலத்தில் மலையாள சூப்பர்ஸ்டார் ஆயிரம் பெண்களை வீழ்த்தியதற்கு பார்ட்டி அளித்ததை ஆர்வமாக படித்து பேசியது நினைவுக்கு வருகிறது. இப்போது அது பின்னே சென்று, தபால்துறையில் ஸ்டெனோவின் அலைச்சல்தான் முதன்மையாக நினைவுக்கு வருகிறது. 


பின்நவீனத்துவம் என்றால் சாருவுடன் கூடவே ரமேஷ்பிரேதன், யுவன் சந்திரசேகர்,பா.வெங்கடேசன் மற்றும் சுரேஷ்குமார இந்திரஜித் ஆகியோரையும் இன்னும் பலரையும் நினைவில் கொண்டு வருகிறோம். இவர்களில் சுரேஷ்குமார இந்திரஜித் ஏற்கனவே விஷ்ணுபுரம் விருது வாங்கியிருக்கிறார். இன்று இந்த விருது அறிவிப்பு  இதில் பிறருக்கு அறிவிக்கப் பட்டிருந்தால் இந்த சலசலப்பு எழுந்து வந்திருக்காது என்று உறுதியாக சொல்லலாம். ஆகவே, சாரு மீது மட்டும் உருவாகிவரும் விமர்சனமாகத்தான் இது உள்ளது. அதற்கு காரணமாக எதை சொல்லமுடியும் என்றால் அவர் தன் படைப்புகளின் வழியாக தன்னை வெளிப்படுத்திக் கொண்ட விதத்தைத்தின் சொல்ல முடியும். படைப்பு ரீதியாக  சாரு எங்கு வேறுபடுகிறார் என்று பார்க்கலாம். முதற்காரணமாக அனைவரும் சொல்வது, சாருவின் எழுத்தில் உள்ள ஒருவித தீவிரமற்றத் தன்மை உள்ளது என்பது. இந்தக் கருத்தில் பெரும்பாலானவை அவருடைய புனைவை வாசிக்காத, புனைவை வாசிப்பதற்கு மனத்தடை கொண்ட, ஆனால் வலைதள கட்டுரைகளை வாசித்ததன் வயிலாக உருவானவை கூட. சாருவின் கட்டுரைகள் பிடிக்கும் என்று தொடர்ந்து சொல்வதன் வாயிலாக அவரை சிறுமை படுத்த முயன்றவண்ணம் இது அவ்வப்போது நிகழும். அவற்றைத்  தவிர்த்து விடலாம். ஆனால் அவரது புனைவுகளை வாசிக்கும் ஒருவர் கூட ஒரு குழப்பத்திற்குள் போய்விடுகிறார். வாசித்துக் கொண்டிருக்கும்போதே  அவை திடீரென ஒரு இடத்தில் வம்புக்கதையாக மாறுகிறது. முன்பு சொன்னது போல மலையாள நடிகரின் சாகஸத்தை நுழைக்கிறது. ஒரு அரசு அலுவலகத்தில் நிகழ்ந்த காமக்களியாட்டத்தை சொல்கிறது.  ஆகவே அதைச் சொல்லிச் சாருவை புறக்கணிப்பது நிகழ்கிறது. இரண்டாவதாக அவரை வாசிப்பவருக்கு அவர் தனது ஆளுமை குறித்தும் ஒரு குழப்பத்தை உருவாக்கிவிடுகிறார். நாயகன் ஒரு ஸ்திரீலோலன் என்று சொல்லியபடி போகும் எழுத்து அவர் ஒரு அரவாணி என்று ஒரு இடத்தில் சொல்லிவிடும். இதை ஒரு விளையாட்டாகவும் அவர் நிகழ்த்தியபடி இருப்பார். ஜெ. தனது கட்டுரையில் இதைச்சுட்டிக்காட்டி பிறழ்வெழுத்து என வேறுபடுத்துகிறார். நான் பிற்காலத்தில் வாசித்த தஞ்சை பிரகாஷ் எழுத்துக்கள் எனக்கு சாருவுக்கு முன்னோடியாகத் தோன்றின. சாருவுமே அவரைத் தனக்கு பிடித்த எழுத்தாளராக கூறியுள்ளார். அந்த விதத்தில் அவருக்கு லக்ஷ்மிசரவணகுமார் ஒரு தொடர்ச்சியாகவும் இருக்கிறார். ஆனால் அவை  யதார்த்த தளத்தில் சென்று கொண்டிருக்கும். காமம் சார்ந்த கதைகள்  என்று எடுத்துக் கொண்டாலும் அதில் ஜி.நாகரஜன் கதைகள் நினைவுக்கு வருகின்றன. ஆனால் அவை பிறழ்வை விதந்தோதவில்லை. மாறாக ஒழுக்கத்தை விதந்தோதுகின்றன. தஞ்சை பி்ரகாஷ் கதைகள் கூட ஒழுக்கத்தை விதந்தோதி முடிகின்றன. ஆனால் சாரு அதைச் செய்வதில்லை. அவர் ஒழுக்க மீறலை விதந்தோதுவதை, அதை ஒரு கிளர்ச்சியூட்டும் உத்தியாக கொண்டு செல்வதை தன் படைப்புகளில் குறிப்பிட்டபடியே இருக்கிறார்.  முதல் வாசிப்பை இவையே நிறைக்கின்றன. ஆனால் காலப்போக்கில் ராஸலீலாவின் வரிகளை விட  ஸீரோடிகிரியின் கவிதைகள் நினைவில் தங்கிவிடுகின்றன. தஞ்சை பிரகாஷ் படைப்புகளில் அப்படி ஏதும் நினைவில் தங்கவில்லை. ஆகவே பிறழ்வெழுத்தினை முன்வைத்தவர் என்பது அவருக்கான சரியான குறிப்பாக உள்ளது. 






இங்கு இன்னொன்றும் சொல்லவேண்டும். இங்கு நவீனத்துவம் பின்நவீனத்துவம் பேசும் எழுத்துக்கள் இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டிலிருக்கும் வாசகனை மரபு நோக்கிப் பின்னோக்கி இழுப்பவை. ஆனால் அந்த வாசகனை live ல் வைப்பவை அல்லது முன்னோக்கி இழுப்பவை சாருவின் எழுத்துக்கள் தான். ஆகவே இயல்பாகவே ஜெ. வை ஆதர்சமாக கொண்டவருக்கு சாரு பிடிபடமாட்டார். உதாரணமாக ஜெ. வின் எழுத்துக்கள் வாயிலாக அவரது தந்தையின் கண்டிப்பான உருவம் வாசகருக்குள் எழுகிறது. ஆனால் இன்றைய ஜெ. பதிவுகள் அல்லது அவர் எழுதிய தனிமைக்காலக் கதைகளில் அவர் காட்டும் இளம் பருவச் சித்திரங்கள் அவர் மீது ஒரு அன்பை செலுத்துவதாக உள்ளன. மேற்சொன்ன மரபை கலைத்துப் போடும் எழுத்துக்காரரான யுவன் படைப்புகளில் கூட கரட்டுப்பட்டியும் அவரது தந்தையும் தொடர்ந்து வருகிறார்கள். அதை வாசிக்கும்போது நமது மனமும் உணர்ச்சிவயப் படத்தான் செய்கிறது. ஆனால் சாருவிடம் அத்தகைய நெகிழ்ச்சி ஏதும் காணமுடியாது. அவரது நைனா சாருவால் கலாய்க்கப்பட்டுக் கொண்டேதான் இருக்கிறார். அந்த வகையில் சாரு நவீன இலக்கிய வாசகனுக்கு என்றும் ஒரு 'தோஸ்தாகவே'  இருப்பவர். சில நேரங்களில் அந்த இளைஞன் மீண்டும் பழமையை நோக்கி மாறிச்செல்லலாம். ஆனால் அடுத்த தலைமுறை வரும். அவர்கள் சாருவை தோஸ்த்தாக கொண்டாடுவார்கள். சாரு இத்தனை வருடங்களாக கைக்கொண்டிருக்கும் இந்த இடம் அவருக்கு மட்டுமேயானது என சொல்லலாம்.


இந்த வம்பில் இரண்டாவது காரணமாக  ஜெ.விற்கும் சாருவுக்கும் இருக்கும் பூசலை சொல்பவர்கள் உண்டு. இருவரும் முரண்பட்ட காலமான 2008 ல் முன்பு எழுதியதை எடுத்துப் போட்டு இப்போது விருது காலத்தில்  காரணம் கேட்பவை. பிறழ்வெழுத்து கட்டுரை 2011 ல் எழுதப்பட்ட ஒன்று என்பதையும் வசதியாக  மறந்துவிடும் பதிவுகள். ஆனால் இருவரையும் வாசித்து வந்தவன் என்கிற வகையில்  இருவருக்கும் பொதுவான ஒன்றே எனக்கு கவனத்தில் இருக்கிறது. முதலாவது இருவரும் வெளிப்படுத்தும் அரசியலற்றத் தன்மை. எந்தவொரு பொது விஷயத்திலும் இருவரின் தரப்பும் ஒன்றாகவே இருப்பதைக் காண்லாம்.  சாரு சில பதிவுகளில் 'எதுக்கு இங்க்கை வேஸ்ட் பண்ணுவானேன்' என நினைத்தோ என்னவோ  ஜெ. பதிவின் லிங்க்கை கொடுத்து இதுவே என் கருத்தும் என சொல்லிவிடுவதும் நிகழும். ஜெ.விற்கு ஏற்பட்ட சில சங்கடங்களின் போது எழுத்துலகம் அமைதி காத்திருக்க சாருவிடமிருந்து மட்டும்தான் ஆதரவு பதிவு வரும். அதுபோலவே சாரு பணம் கேட்கிறார் வகைப் பதிவுகளுக்கு ஜெ. மட்டும் எதிர்வினையாற்றியிருப்பார். இங்கே லாலாலா பாடுவது எனது நோக்கம் அல்ல. தங்களது படைப்புலகம் சார்ந்து எதிரெதிர் ஆளுமைகளாக நிறுத்தப் பட்டிருப்பவர்கள் குறித்து ஒரு வாசகன் அறிந்து முழுமையாக அறிந்து கொள்ள இவை படைப்புகளைத் தாண்டிய புரிதல்களை அளிப்பவை. அனைத்து விதங்களிலும் கவனித்துப் பார்ப்பது அவசியமாகிறது என்றே கருதுகிறேன்.


இவை தவிர சொல்லப்படுகின்ற பிற வம்புக் காரணங்கள் தனிப்பட்ட காரணங்களால் சொல்லப்படுபவை. அவை எழுத்துத் தரப்பில் பொருட்படுத்தத் தக்கவையாக இல்லை என்பதால் அவற்றைக் கடந்து செல்லலாம்.


விஷ்ணுபுரம் விருது ஒரு கவனிக்க வேண்டிய ஆளுமையை தொடர்ந்து முன்னிறுத்தி வருகிறது. ஆனால் சாரு கவனிக்கப்படாத ஆளுமை கிடையாது. அவரது வாசகப் பரப்பும் பெரியது. ஆனால், அவர் முழுமையாக கவனிக்கப் படவில்லை என்பதும் உண்மை. அவர் மீதான உதாசீனம் என்றும் இருந்தபடியே இருக்கும். சாஹித்ய அகாடமி உள்ளிட்ட வேறு அங்கீகாரம் அவரது எழுத்துகளுக்கு வாய்ப்பில்லை என்றும் தனக்கு விருது என ஒன்று கிடைத்தால் அது விஷ்ணுபுரம் விருதாகத்தான் இருக்கும் என்றும் முன்பு சாரு கூட பதிவிட்டிருந்தார். அதுதான் இப்போது நிகழ்ந்தும் இருக்கிறது. மேலோட்டமாக பார்த்தால் கூட, ஒரு புனைவெழுத்தாளராக சாருவின் படைப்புகள் மீதான பதிவுகள் என்பது அவர் எழுதியிருக்கும் புத்தகங்கள் அளவோடு ஒப்பிட குறைவானவையே. விஷ்ணுபுரம் விருது அளிக்கப்படும் பொழுது விருது பெறும் எழுத்தாளர் மீதான கட்டுரைகள் தொகுத்து புத்தகமாக வெளியிடப்படும். ஒரு ஆவணப்படம் வெளியிடப்படும். அவ்வகையில் இந்த வருட விஷ்ணுபுரம் விருது தமிழ் வாசகபரப்பில், சாருவின் புனைவுகள் மீதான  ஒரு ஒட்டுமொத்த மறு வாசிப்பிற்கு வழிவகுக்கும் என்றே எதிர்பார்க்கிறேன்.

No comments:

Post a Comment