Monday, April 8, 2024

வினா 40 விடை 40




ஒவ்வொரு குடிமகனும் குடிமகளும் மூன்று தேர்தல்களில் வாக்களிக்கின்றனர். உள்ளாட்சித் தேர்தல், சட்டமன்றத் தேர்தல், மாநிலங்களைத் தேர்தல். இவற்றில் தனது அடிப்படைத் தேவையான சாலை வசதி மின்கம்பம் கழிவுநீர் கால்வாய் போன்ற அன்றாட அல்லல்களுடன் தொடர்புடையது உள்ளாட்சித் தேர்தல். ஆகவே நாம் கவுன்சிலரை தேர்ந்தெடுக்கும் போது கட்சிக்கு அப்பாற்பட்ட ஒருவரைத் தேர்ந்தெடுக்க முகாந்திரம் உள்ளது.  இதைத் தவிர மற்ற இரு தேர்தல்களும் சித்தாந்தம் சார்ந்தவையாக உள்ளன. இதில் மேற்சொன்ன சாலை குடிநீர் முதல் கல்வி வேலை வாய்ப்பு நெடுஞ்சாலைப் போக்குவரத்து என சிறிது முதல் பெரிது வரை ஒவ்வொருவரும் சார்ந்திருக்கும் பிற அனைத்தும் இந்த இரு தேர்தல்களில் வரும் அரசுகள் இயற்றும் ஆணைப்படி நிகழ்கின்றன. நிர்வாகம் சார்ந்த மேற்சொன்ன பிரச்சனைகளைக் கையாளுவது என்பது எந்த அரசுக்கும் பொதுவானதாக உள்ளது. இதில் சாலையை அமைக்க வேண்டும் என்று ஒரு அரசும் மக்களுக்கு சாலை வசதி கூடாது என இன்னொரு அரசும் சொல்லப் போவதில்லை. 

இங்கு ஆதார் பான்கார்டு பொருளாதாரக் கொள்கை என இவை எதற்கும் எந்த ஒரு தேசியக் கட்சியும் பெருமை கொள்ள இயலாது. ஒருவர் வலியுறுத்திதை மற்றவர் கொண்டு வருவதும் மற்றவர் கொண்டு வந்ததை இவர் தீவிரப் படுத்துவதும் என ஒரு ரிலேரேஸ் போல தொடர்ச்சியாக முன்னோக்கி செல்வதுதான் நிகழ்கிறது.

ஆகவே நமது அடிப்படைத் தேவைகள் தாண்டி ஒரு அரசு அமைய வேண்டும் என்றும் இன்னொரு அரசு அமையக் கூடாது என்று நாம் விரும்ப அடிப்படைக் காரணமாக இருப்பது நமது சிந்தனையின் பாற்பட்ட விருப்பு வெறுப்பு சார்ந்த காரணிகளே தவிர வேறு காரணங்கள் முதன்மையானவை அல்ல. அந்த வகையில் பாராளுமன்றத் தேர்தல் என்பது ஏற்கனவே இருக்கும் விதிகளை  நிர்வாகிக்கவும்  அடிப்படை வசதிகளுக்கானது என்றும் நாம் கருதுவோமேயானால் அந்தப் பெருமை அந்த நிர்வாகத்தையும் அடிப்படை வசதிகளையும் அளித்து வரும் அரசு அதிகாரிகளிக்கும் அலுவலர்களுக்கும்  உரித்தானது. அவர்களை மேற்பார்வையிடும் செயலாளர்களுக்குமானது.  

தேர்தலில் இலவசங்களோ வாக்குறுதிகளோ ஒரு கட்சிதான் அளிக்கிறது என்றோ இன்னொரு கட்சி அளிக்காது என்றோ பிரித்துப் பார்க்கவியலாது. ஒரு கட்சிதான் வாக்காளர்களுக்கு பணம் அளிக்கிறது என்றோ இன்னொரு கட்சி அளிப்பதில்லை என்றோ கூட செய்திகள் வருவதில்லை.

ஆகவே நிர்வாகம் கட்டமைப்பு வசதிகள்  வாக்குறுதி போன்றவற்றில் ஒரு கட்சியும் இன்னொரு கட்சியும் மாற்றுக் கருத்து கொள்வதில்லை. 


ஆகவே வாக்காளரின் மனச்சாய்விற்கு  கொள்கைகள் முக்கிய இடத்தை எடுக்கின்றன. ஒரு கட்சியின் சித்தாந்தம் வாக்காளருக்கு ஏற்புடையதா அது நமது மனவோட்டத்தற்கும் நம்பிக்கைக்கும் ஒத்திசைவாக உள்ளதா எனக் காண்பதே பாராளுமன்றத் தேர்தலில் வாக்காளரின் அடிப்படைக் காரணமாக உள்ளது. அதன் மீது வாரிசு அரசியல், ஊழல், மதவாதம், வளர்ச்சி, அண்டை நாட்டுடனான உறவுக் கொள்கை போன்ற காரணங்கள் பூசப் படுகின்றன. இத்தகைய காரணங்களின் வழியாக முதற்காரணம் இன்னமும் உன்னதப் படுத்திக் கொள்ளப் படுகிறது.


தனது சனாதன தர்மத்தை எதிர்த்து செயல்படும் அசுர அரசை எதிர்த்து வென்றது இராமாயாணமாக உள்ளது.  ஏற்கனவே நிலைபெற்ற தூய சத்ரிய குருதி வம்சத்தை எதிர்த்து பாண்டவர்கள் பெற்ற வெற்றி என்பது மகாபரதப் போராக ஆகிறது. தேவ அசுரப் போர் என்றும், அண்ணன் தம்பி போர் என்றும் நாம் வாசித்த இதிகாசங்களும்  நெறிகளுக்கு இடையிலான போராகவே இருப்பதையும் காணலாம். அது அதிகாரத்திற்கான நேரடிப் போர் என்பதால் குருதி சிந்தி் எட்டப் பட்டது.  நாகரீக உலகில் தேர்தல் என்பது அதே அதிகாரத்திற்கான போரின் மற்றொரு வடிவம். அதை முடிவு செய்வதில் பிற கருப்பொருட்கள் முக்கியப் பங்காற்றுகின்றன.



ஊழல், இயற்கை வளங்களின் மீதான மாநிலங்களின் உரிமை மறுக்கப் படுதல், சாதாரண குடிமக்களின் ஜனநாயக உரிமை பறிக்கப் படுதல், சுற்றுச் சூழல் சார்ந்த கொள்கை முடிவுகள், கல்விக் கொள்கைகள், அண்டை நாடுகளுடனான உறவு, நம்முடன் வணிக உறவில் நெருக்கமாக உள்ள நாடுகளுடனான உடன்படிக்கை, எரிபொருள், உணவுப்பொருள் விலையும் மக்களின் வாங்கும் திறனும் எனப் பல காரணிகள் ஒரு சாதாரண காலத்தில் ஒரு  அரசைத் தேர்ந்தெடுக்க தர்க்க ரீதியான காரணங்களாக அமைகின்றன. அசாதாரண காலங்களில் தர்க்கத்தை மீறிய காரணிகள் அமைந்து விடுகின்றன. எமர்ஜென்ஸிக்குப் பிறகான ஜனதாதள ஆட்சி அவ்வாறு அமைந்தது. ராஜீவ் கொலைக்குப் பிறகான காங்கிரஸ் ஆட்சி அவ்வாறு அமைந்தது. நிலையற்ற மூன்று பிரதமர்களைக் கண்டு, பின்னர் 'நிலையான ஆட்சி திறமையான பி்ரதமர்'  என்கிற பி்ரசாரத்தோடு மீண்டும் வாஜ்பேயி பிரதமரனதும் நிகழ்ந்தது. அந்த வரிசையில் இறுதி நிகழ்வாக  ஊழல் குற்றச் சாட்டுக்கள் குறித்து அவப்பெயரைச் சேர்த்துக் கொண்ட காங்கிரஸ் ஆட்சிக்குப் பின் பாஜக ஆட்சி அமைந்ததைக் கூறலாம். 


தற்போது நிகழும் பாராளுமன்றத் தேர்தல் அத்தகைய ஒரு ஒற்றைப்படை மனநிலைக்கு மக்களை இட்டுச் சென்று தர்க்கத்தை மீறிய ஒன்றாக மக்களை ஒருநிலைப் படுத்துமா என்கிற கேள்வி எழுகிறது. வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் நம்முடைய கண்முன் இரு கட்சிகள் உள்ளன. ஒன்று, மோதியைத் தலைமை வேட்பாளராகக் கொண்ட பாஜக தலைமையிலானது மற்றது காங்கிரஸ் ஒருங்கிணைத்துள்ள இன்னமும் பிரதமர் வேட்பாளர் அறிவிக்கப்படாத இண்டியா கூட்டணி. இப்போது இது அறிவுத் தளத்தில்,    இந்துத்துவ அடிப்படைவாத மனநிலை கொண்ட பாஜகவிற்கும் அதை எதிர்க்கும் பன்மைவாத மனநிலை கொண்ட இண்டியா கூட்டணிக்குமான மோதல் என்கிற விவாதமாக மட்டுமே எழுந்து நிற்கிறது. 

முன்பு திமுக தன்னுடை முதல் அரசினை அமைத்தபோது அதனுடன் கூட்டணியில் இருந்த இராஜாஜி பிராமணர்களிடம் வைத்த வேண்டுகோள் பிரசித்தமானது எனக் கூறுவர். பிராமண எதிர்ப்பு மனநிலை கொண்ட திமுகவுக்கு வாக்களிக்க பிராமணர்கள் தயங்க அவர்களிடம் ஒரு கையில் பூணூலைப் பிடித்துக் கொண்டு மறு கையால் திமுகவிற்கு வாக்களியுங்கள் என்று இராஜாஜி கேட்டுக் கொண்ட செய்தி அது.  அத்தகைய இடத்தில் இன்று நிற்பவர்களாக தமிழ்த் தேசியவாதிகளும் அமைப்பு சாரா இடதுசாரிகளும் உள்ளனர்.


வருகின்ற பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்ட விவாதங்களில்  இந்துத்துவ எழுச்சியைக் எதிர்க்கும் நோக்கம் இருந்தாலும் தமிழ்த்தேசிய கொள்கைபாற் பட்டவர்களுக்கு ஒரு நெருடல் உள்ளது. ஈழப்போரின் உச்சகட்டக் காலத்தில் ஈழப்படுகொலைக்கும் தமிழ்  மக்களின் புலம்பெயர்தலுக்கும் துணைநின்ற காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணிக்கு தற்போது எவ்வாறு வாக்களிப்பது என்கிற கேள்வி அது. அது சார்ந்த உணர்ச்சிகரமான தர்க்கப்பூர்வமான நாற்பது கேள்விகளும் அதற்கான பதில்களும் இதில் உள்ளன.  கேள்விகளை நலங்கிள்ளி எழுப்ப தோழர் தியாகு அதற்கு தனது பதில்களை எழுதுகிறார். தமிழ்த் தேசியர்கள் இந்தமுறை காங்கிரஸுக்கு வாக்களிக்க வேண்டும் என்கிற நிலைபாட்டின் எதிர்வினையாக கேள்விகளும் அதற்கான பதில்களும் உள்ளன. 





இறந்த காலத்தில் பெற்ற காயமும், எதிர்காலம் பற்றிய ஐயமும்,  நிகழ்கால அச்சமும் கொண்ட கேள்விகளும் அவற்றை அவ்வாறே ஏற்றுக் கொண்டும் அதில் தற்போது செய்ய இயலுவது என்ன என்பதை எடுத்துக் கூறும் பதில்களும் உள்ளன. பதில் அளிப்பவர் மீதான உரிமையுடனும் நட்புடனும் கேள்விகளில் கேலியும் குத்தலும் வைத்தே கேட்கிறார். அவற்றிற்கு பதில் உரைக்கையில் பதிலுக்கு அத்தகைய உணர்ச்சி கலவாமல் தன்னிலை விளக்கமாகவும்  தனது திட்டங்களின் வெளிப்பாடாகவும் பதில் உரைக்கிறார். இரு பதில்களில்  கூறியதே கூறுவதால் உருவான எரிச்சல் தொனி பதிவாகியிருப்பது வாசிப்பில் தோன்றாமல் இல்லை.


கேள்விகளில் நியாயம் இருக்கிறது. அதைக் கண்ணகிக்கு இருந்த நியாயம் என்று கருதலாம். பழைய கோபமும் வஞ்சிக்கப்பட்ட வன்மமும், பல அனுபவங்களின் ஊடாக உண்டான அவநம்பிக்கையும் கொண்டுள்ளன. பதில்கள் வரலாற்று நோக்கு உடையவையாகவும் நீண்டகால நோக்கு உடையவையாகவும் உள்ளன என்பது சிறப்பானது.


இந்த உரையாடல்களில், லெனினிய நிலைப்பாடடை ஆதாரமாகக் கொண்டு  தேர்தல் புறக்கணிப்பு துவங்கி நோட்டா ஆதரிப்புக்கு வந்து தற்போது பாஜக எதிர்ப்பு காரணமாக எதிர்க்கட்சியை ஆதரிக்கும் வரை வந்த பயணம் உள்ளது. அதனுடன் ஒரு குற்றத்தை உணர்ச்சி வசப்பட்டு அணுகுவதும் தர்க்க ரீதியாக அணுகுவதும் கலந்தே வருகின்றது. இனவழிப்புக் குற்றவாளிகளை மன்னிக்கலாமா என்கிற கேள்விக்கான பதில் உள்ள இந்த பத்தியை உதாரணமாக கூறலாம். 


//இனவழிப்புக்கு நீதி என்பதன் சிறு பகுதிதான் தனிக் குற்றவாளிகளுக்கு எதிராகக் குற்றத் தீர்ப்பு வழங்கப்படுவதும் அவர்கள் தண்டிக்கப்படுவதும். இது குற்றவியல் நீதி! குற்றமிழைத்த அரசு தண்டிக்கப்படுவதுதான் அரசியல் நீதி! அரசியல் நீதிக்குத் துணை நில்லாத குற்றவியல் நீதியால் பயனில்லை. இட்லர் தண்டிக்கப்பட்டு நாசிச அரசு ஜெர்மனியின் நீடித்திருந்தால் எப்படி இருக்கும்? ஸ்லொபதான் மிலொசெவிக் தண்டிக்கப்பட்டு யுகொஸ்லாவியாவில் செர்பியப் பேரினவாத ஆதிக்கம் நீடித்திருந்தால் எப்படி இருக்கும்? இராசபட்சர்கள் தண்டிக்கப்பட்டு சிங்களப் பேரினவாதம் நிலைத்து நீடித்தால் எப்படி இருக்கும்?

 

இராசபட்சர்கள் தண்டிக்கப்படுவது ஈழத் தமிழர் இனவழிப்புக்கு ஈடுசெய் நீதி பெறுவதன் அடையாளம்தான். சிங்கள பௌத்தப் பேரினவாத அரசக் கட்டமைப்பு தகர்க்கப்பட்டுத் தமிழீழம் இறைமை மீட்பதே குற்றவியல்  நீதியின் நிறைவாகிய அரசியல் நீதி, அதாவது இனவழிப்புக்குக் காரணமான அரசக் கட்டமைப்பைக் கலைத்து இனவழிப்பின் மீள்நிகழ்வைத் தடுப்பது (non-recurrence) ஆகும்.

 

இந்த வரலாற்று அரசியல் பார்வை இல்லாமல் இனவழிப்புக் குற்றவாளிகளை வெறும் பழிக்குப் பழி நோக்கில் நாம் தண்டிக்கத் துடிக்கவில்லை. இராசபட்சர்கள், சோனியாக்களுக்கு எது தண்டனை? சிங்களப் பேரினவாதமும் இந்திய வல்லரசியமும் தமிழீழ விடுதலையைத் தடுக்கும் முயற்சியில் தோற்றுப் போகும் படி செய்வதுதான். ”உலகில் தமிழர்க்கு ஒரு கொடி கிடைக்கக் கூடாது என்றுதானே இனவழிப்புச் செய்தாய், இதோ அசலும் வட்டியுமாக இரு கொடிகள் உயர்த்துவோம்” என்று நான் பேசுவதன் பொருள் இதுதான். நீதிக்கான இயக்கம் என்பது இன்று விடுதலைக்கான இயக்கத்தின் ஒரு கட்டம்தான். விடுதலைக்கான இயக்கத்துக்கு அப்பால் நீதிக்கான இயக்கம் எதுவும் இல்லை.//



குறுகிய கால இலக்கு நீண்ட கால இலக்கு என இரு காரணிகள் உள்ளன. தியாகுவிற்கு நீண்டகால இலக்கு என்பது இருக்கிறது. அதற்கான ஒரு குறுகியகால இலக்காக காங்கிரஸ் திமுக ஆதரவினை முன்மொழிகிறார். எமர்ஜென்ஸி காலத்தில் அனைவரும் ஒன்று கூடி இந்திரா காந்தியை தோல்வியுறச் செய்தது  போல தற்போது மோதியைத் தோற்கடிக்க வேண்டும் என்பது அவருடைய கருத்தாக உள்ளது. 

இதற்கு முன் எமர்ஜென்ஸியில் கடுமையாக பாதிக்கப்பட்ட திமுகவே அதற்குப் பின்னர் இந்திரா காந்தியுடன் கூட்டணி அமைத்தது ஒரு எதிர்பாரா திருப்பம். இவ்வாறு திமுகவின் முரண்களை சான்றுகளுடன் சுட்டிக் காட்டி எழும் கேள்விகளுக்கு சமாளிப்பு ஏதுமின்றி அரசியல் போக்குகள் அடைவு பெற்ற மெய்ம்மைகள் ஆகியவற்றை வைத்து கூறும் பதில்கள் ஒருவிதத்தில் அரசியல் சுருக்கவுரைகள் எனக் கருதத் தக்கவை. திமுகவும் அதிமுகவும் காங்கிரஸ் மற்றும் பாஜகவுடன் இணைவது என்பது மாநிலத்தில் தனது போட்டிக் கட்சியை பழிவாங்கவும் தனது அதிகாரத்தை தக்கவைப்பதுமேயன்றி வேறு காரணங்கள் இல்லை. ஆனாலும் திமுக பாஜக கூட்டணி என்பது இயற்கைக்கு மாறான கூட்டணியாகவும் அதிமுக பாஜக கூட்டணி என்பது இயற்கைக்கு உகந்த கூட்டணியாகவும் நடைமுறையில் திகழ்ந்ததை   சுட்டுவது ஒரு நல்ல தர்க்கம்.


இது நூலாக வடிவம் பெற்றதால் முழுமை கூடியுள்ளதா எனப் பார்க்க வேண்டும். இரு காரணிகள் உள்ளன. முதலாவது, கேள்விகள் கேட்டுள்ள நலங்கிள்ளி  அதற்குப் பின்னர் தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளவில்லை என்று அறிவித்துள்ளார். ஆகவே அவர் இந்த பதில்களால் திருப்தியுறவில்லை என தெளிவாகிறது. ஆகையால் அவர் ஏன் இன்னமும் அது ஏற்புடையதல்ல என குறிப்பிட்டிருக்கலாம் எனத் தோன்றுகிறது. கேள்வி பதில் பொதுவாக நிகழ்வதால் அந்த உரையாடல் தனக்கான தரப்பை முன் வைத்திருத்தல் நலம். இங்கு கேள்விகள் பொதுவாக அத்தகைய நிலைத்தன்மை இல்லாது சில இடங்களில் தர்க்கமும் சில இடங்களில் தனிநபர் சீண்டலும் கொண்டுள்ளன.  ஆனால் பதில்கள் அத்தகைய பொது நோக்கைக் கொண்டுள்ளன.


இரண்டாவதாக, இருவருக்கிடையேயான உரையாடல் நூலாகத் தொகுக்கப்படுவதன் நோக்கம் அந்தக் குழப்பம் கொண்ட வாசகர்களின் தெளிவிற்காகவும் எனக்கொள்ளலாம். அந்த வகையில் இதன் வாசகர்கள் யார் என முடிவு செய்ய வேண்டியது அவசியமாகிறது. கேள்வி கேட்பவரும் பதில் உரைப்பவரும்  உறுதியாக வலதுசாரி சிந்தனையாளர்கள் அல்லர். ஆகவே தற்போதைய அரசின் செயல் திட்டங்களில் ஏற்பு உடையவர்களுக்கு இந்தக் கேள்வி கேட்பவருமே அந்நியர்தான் என்பதால் இதனுடைய வாசகர்கள் தமிழ்த்தேசியர்களும் குறிப்பிட்ட சில இடதுசாரித் தரப்பினரும் என சுருங்கி விடுகிறது. அது இந்த நூலின் பரப்பைக் குறுக்கி விடுகிறது. இன்று இந்துத்துவர் அல்லாத, பாஜகவினர் அல்லாத,  அதேநேரம் மீண்டும் பாஜக அரசு அமைந்தால் என்னவாகிவிடும் என்று கேட்கிற, சாமானிய மக்கள் உள்ளனர்.  அந்த மக்களின் சார்பாக கேள்விகளை  எழுப்பவில்லை. அடிப்படை வசதிகள் அதைத் தாண்டிய மின்னணு வர்த்தகம் உள்ளிட்ட பிற வசதிகள், தேசத்தின் வளர்ச்சி, பாதுகாப்பு உள்ளிட்ட காரணிகள் பாஜகவால் முன்வைக்கப் படுகின்றன. வளர்ச்சி, குஜராத் மாடல், ஊழலுக்கெதிரான அரசு  என பாஜக முன்வைக்கும் பிற  காரணிகள் தான் பொதுமக்கள் முன் பாஜக அரசு வைக்கும் கருத்துக்களாக உள்ளன. அவற்றை வைத்து எழும் கேள்விகளை கேட்பதும் அதற்கு தியாகு போன்று  அரசியல் அறிவும் கள அனுபவமும் மொழித் தேர்ச்சியும் கொண்ட ஒருவரின் பதிலும் பதிவு செய்யப் படுவது நன்றாக இருக்கும். வருகின்ற தேர்தல் என்கிற குறுகிய கால இலக்கை மனதில் வைக்காமல் மீது  நீண்டகால இலக்காக  மக்களின் அடிப்படை விழுமியங்கள் மீதான உரையாடலாக அவை இருத்தல் நலம் பயக்கும். இந்த நூலில் அதற்கான புள்ளிகள் உள்ளன. ஆனால் உரையாடலின் மையம் வேறு ஒன்று என்பதாலும் தற்போதைய தேர்தல் சூழல்களாலும் அவை விவாத நோக்கில் விலகியுள்ளன.

உடைத்தெறியும் கலைஞி

கீரனூர் ஜாகீர் ராஜாவின் வடக்கேமுறி அலிமா குறித்த கட்டுரை ( மயிர் இதழில் வெளியானது. )





(1)



நவீன இலக்கியத்தின் வருகை என்பதே ஒரு கலகச் செயல்பாடுதான் என்று கூறலாம். அதுவரை நடைமுறையில் உள்ள விதிகளை மாற்ற அறைகூவல் விடுகிறது. இனி ஒரு விதி செய்வோம் என்று அழைக்கிறது. ஆனால் அந்த லட்சியவாதத்தில் போகப் போக ஒரு தேக்கம் வந்துவிட்டதையும் காண்கிறோம். அல்லது அதன் மீது ஐயம் வருகிறது. கலை இலக்கியத்தில் அடுத்தகட்ட நகர்வு என்பது முந்தையதன் மீதான ஒரு நம்பிக்கையின்மையின் வழியாக எழுந்து வருகிறது. முந்தையது காலப்போக்கில் நீர்த்துப் போயிருக்கலாம் அல்லது நிகழ்காலம் அதைக் கடந்து வந்திருக்கலாம். உதாரணமாக நதிக்கரையில் தினசரி அனுஷ்டானங்களை மேற்கொண்ட சமூகம் மெல்ல அலுவலகப் பணிகளுக்கும் காலமாற்றங்களினால் பெரு நகரங்களுக்கும் நதியில்லாப் பகுதிகளுக்கும் புலம் பெயர்ந்து செல்ல  நேரும்போது அங்கு சித்தாந்த ரீதியானதும்  சடங்கு சார்ந்ததுமான சிக்கல்கள் உருவாகின்றன. நவீன உலகில் இரவுப் பணிக்கு அல்லது அதிகாலைப் பணிக்கு செல்ல வேண்டியவர் அதன் பொருட்டு இதுவரையிலான தனது அன்றாடத்தை மாற்றியமைக்க வேண்டியிருக்கிறது.  பாரம்பரியத்தை போற்றி வரும் அனைத்து சமூகத்திற்கும் இது ஒரு குழப்பத்தை வரவழைக்கிறது. அதிலிருந்து மேலெழ தன்னை மீளுருவாக்கம் செய்து கொள்கிறது. அதுவரைக்குமான தனது விழுமியங்கள் அறம் ஆகியவற்றை மீளுருவாக்கம் செய்து கொள்கிறது. இவ்வாறாக, இலக்கியத்தின் பேசுபொருளுக்கு புறக்காரணிகள் பெரிய பங்கு வகிக்கின்றன.


இந்த மாற்றம் என்பது இலக்கியக் கர்த்தாவிற்கு முக்கியமான கச்சாப்பொருள் என்று சொல்லலாம். அதை வைத்தே தனது தர்க்கங்களைக் கட்டியெழுப்புகிறார். அந்த விவாதம் மெய்யான கேள்வியை எழுப்பி ஆராய்கிறதா என்பதன் வழியகத்தான் அடுத்தகட்ட நகர்வு சாத்தியப்படுகிறது. தனித்தனி குழுவாக இருந்த மக்களை  தொழிற் புரட்சி மூலம் தொலைதூரப் பயணச் சாத்தியங்கள் மூலம் ஒன்றிணைத்த அறிவியல் அவர்களுக்கு மனதளவில் ஒரு தயக்கத்தையும் உருவாக்கி வைக்கிறது என்பதும் மறுப்பதற்கில்லை. ஆகவேதான் இதையொட்டி பழமை / சாஸ்திரத்திற்கும் புதுமை/யதார்த்தத்திற்கும் இடையில் ஒரு முரணியக்கம் உருவாகிறது. அதன் தாக்கம் சுற்றிவரப் பரவுகிறது. ஒருவகையில் தனித்து இருக்கும் உலகிலும் இது ஊடுருவ முயல்கிறது. இதனுடைய பிரதிபலிப்பைத் தான் இலக்கியமும் தத்துவமும் முன்னெடுக்கின்றன. ஓவியக்கலை என்பது நேரடி ஓவியமாக இருந்து பிறகு புகைப்படக் கலையின் வருகைக்குப் பிறகு நவீன ஓவியமாக புதிய பரிணாமம் எடுக்கின்றன. அதுவரை கண்ணுக்கு விருந்தளித்த ஓவியத்தை அதன்பின் வாசகர் யோசித்து உள்வாங்க வேண்டியிருக்கிறது. ஓவியம் இசை போலவே அதை இலக்கியத்திலும் காண முடிகிறது. புளியமரத்தின் கதை நாவலை நேரடியாக வாசிப்பதற்கும் தன் குறியீடை உணர்ந்து வாசிப்பதற்குமான வேறுபாட்டை வாசகர் உணர்கிறார். 


மரபிலக்கியம் வீரர்களை தெய்வங்களைப் பேசுகிறது என்றால் நவீன இலக்கியம் சாதாரண மனிதர்களைப் பேசுகிறது. மதங்கள் கொண்டிருக்கும் அதிகாரத்தை சாதாரண மனிதர்களின் விழுமியங்களோடு பொருத்துகிறது. எதையும் அறிவுகொண்டு ஆராய்ந்து விளங்குதலும் கூடவே பகுத்தறிவின் எல்லை மற்றும் தர்க்கத்தின் எல்லை என அதையும் கேள்விக்கு உள்ளாக்கி அதற்கு அப்பாலாக உள்ள உள்ளுணர்வுகளைக் கொண்டும் அறிதல் என்று நவீன இலக்கயம் முன்னெடுத்துச் செல்கிறது. நவீனத்துவம் அறிவியல் மூலம் மக்களை இணைத்தலும் நேர்மாறாக ஒவ்வொரு தனிமனிதனையும் தனியனாகவும் ஆக்கியிருக்கிறது என்பதும் அதன் மற்றொரு கூறாக உள்ளது. குலம், குழு, கூட்டம், குடும்பம் போன்ற விழுமியங்கள் தகர்ந்து தான், தனது தர்மம், தன்னுடைய பிறவியின் நோக்கம் என்று தனிமனித மையமும் நவீனத்துவத்தின் விளைவாகவே சாதாரண மக்களிடமும் வந்து சேருகிறது. அதன் இறுதி எல்லையாக இருத்தலிய சிக்கல் எழுந்து வருகிறது. குழுவாக இருத்தல் அல்லது தனியனாக தன்னறத்தை முன்னெடுத்தல் என்கிற குழப்பம் அதைத் தாண்டி தன்னிரக்கம் மனச்சிதைவு போன்ற உளவியல் பாடுகளும் வந்து சேர்ந்ததையும் கொண்டு நவீனத்துவத்தின் காலகட்டத்தை மதிப்பிடலாம். அதனுடைய தொடர்ச்சியாக வந்த பின்நவீனத்துவ காலகட்டம் அதன் முந்தைய வடிவமான நவீனத்துவம் எழுப்பிய சில விழுமியங்களை விடாமல் முன்னெடுத்தும் அதன் சில அடிப்படைகளை நிராகரித்தும் செல்வதைக் காண்கிறோம். அதன் இலக்கிய வடிவத்தில் தனித்தலையும் மனிதன், அதிகாரத்தின் முன் செயலற்று நிற்கும் மனிதன், தனக்கென அடையாளமற்று இருக்கும் பெண்கள், சிறுபான்மை மக்கள், ஒதுக்கப்பட்டோர் என அனைவரையும் தனக்குள் அடக்கிக் கொள்கிறது. அதற்கு அது தனது கூறுமுறையை முக்கிய ஆயுதமாகக் கையில் எடுத்துக் கொள்கிறது. முன்பின்னான மாறுபட்ட கூறுமுறை,  நவீனத்துவம் கொண்டுவந்த இலக்கணங்களை மீறுதல், தடுக்கப்பட்ட வரிகளை புறக்கணிக்கப்பட்ட சொல்லாட்சிகளைக் கையாளுதல் அதிகாரத்தை நிராகரித்தல் உன்னதங்களைப் பகடிசெய்தல் என்று அது எந்த வரைமுறைகளுக்குள்ளும் அடங்காது வெளிப்படுகிறது. 


கீரனூர் ஜாகீர் ராஜாவின் எழுத்துக்கள் இதன் கூறுகளுக்கு பொருத்திப் போகின்ற படைப்புகளாக இருக்கின்றன.  விளிம்புநிலை கலைஞர்களின் வாழ்க்கையைக் கூறும் கதைகள், உலகமயமாக்கலால் கைவிடப்பட்டவனின் கதைகள், தன்னகங்காரம் கொண்டு எழுவதால் கட்டுப்படுத்தப் பட்டவனின் கதைகள் என இவரது பாத்திரங்களை வரையறுத்து விடலாம். ஆங்காங்கு தெறித்து விழும் அங்கதமும் உண்டு.  உதவி இயக்குநர்கள் ஆங்காங்கு 'சீன் சொல்லி' இரவுணவை மதுவை ஏற்பாடு செய்துகொண்டு ஜீவிக்கும் கதையில் கதவைத் திறந்த நண்பனின் மூச்சுக் காற்றில் மதுவீச்சம் அடிப்பதை உணர்ந்து, 'சமூகம் தனக்கு முன்பாகவே சென்று விட்டது' என்று கதைசொல்லி நினைத்துக் கொள்கிறான். ( தேய்பிறை இரவுகளின் கதைகள்). நட்பு காதல் பரிவு அனைத்தையும் கேள்விக்குள்ளாக்கும் கதைகளும் அவரது பிற்காலத் தொகுப்புகளில் உள்ளன ( ஹலால் சிறுகதை தொகுப்பு ). இந்தச் சிறுகதை தொகுப்புகளின் நீட்சியாகவே அவரது அலிமாவும் வருகிறாள்.






(2)


இந்த நாவலையும் உள்ளடக்கி, கீரனூர் ஜாகீர் ராஜவின் பிற்காலக் கதைகளில் பொதுவான அம்சமாக நான்கு கூறுகளைக் காணமுடிகிறது. 1) மதங்களும் அமைப்புளும் கொண்டிருக்கும் அதிகாரத்தைக் கேள்விகேட்டல் 2) கலையுலகிலும் இலக்கிய உலகிலும் உள்ள காழ்ப்புகளை வெளிக்காட்டுதல் 3) உதிரிகளையும் முக்கியப் பாத்திரமாக சித்தரித்தல் 4) படைப்புக்குள்ளாகவே பிரதியையும் எழுத்தாளரையும் ஐயப்படுதல். இந்தப் பண்புகளை முழுதும் பின்நவீனத்துவ குணங்கள் என்று சொல்லலாம். அவர் செய்வது ஒருவகையில் சிதறடித்தலும் மீள்கட்டுமானமும்தான் என்றாலும்  அதன் வழியாக வாசகர் பெறுவது உணர்ச்சி வேகமோ அல்லது கலைத்துப் போட்டப் பெருமிதமோ அல்ல. அதனூடாக அவரது பாத்திரங்கள் வாசகருக்கு இன்னும் அண்மையாகிறார்கள். அவரது பெரும்பான்மையான கதைகளில் இஸ்லாமிய மக்களின் வாழ்க்கைப்பாடு பேசுபொருளாக இருக்கிறது. அதன் ஊடாக அவருக்கு "கட்டுடைக்கக்" கிடைப்பது என்னவாக இருக்கும் என்பது ஆராயத் தக்கது. தமிழிலக்கியத்தில் மிகவும் குறைவாகப் பதிவுசெய்யப் பட்டவைகளில் இஸ்லாமிய வாழ்க்கையும் ஒன்று. துவக்கத்தில் சொன்ன உதாரணத்தைப் பொருத்திப் பார்க்கும் பொழுது கும்பகோணத்திலிருந்து பிராமணர்கள் மும்பை சென்னை டெல்லி என புலம் பெயர்ந்து சென்றபோது தங்களது தினசரி அனுஷ்டானங்கள் குறித்த சிக்கலை  அவர்கள் எதிர்கொண்ட விதங்களை திஜா, இ.பா முதல் சுஜாதா பாலகுமாரன் வரை அனைவரும் எழுதியிருக்கிறார்கள். இதைச் சார்ந்த ஒரு படைப்பைக் கட்டுடைப்பது என்று வரும்பொழுது அதன் பல்வேறு கோணங்கள் குறித்த பார்வை வாசகருக்கு உருவாகியிருக்கிறது. ஆனால் அதுபோல் இஸ்லாமிய வாழ்வியல் பிரதியை அணுகும் பொழுது அதன் பிற கோணங்கள் பெரிதளவில் பதிவு செய்யப் படவில்லை. இங்கு இருக்கும் பார்வையில்  உலகலாவிய அளவில் ஊடகங்கள் வழி  உருவாகிய பார்வையும் இருக்கிறது. பொது ஊடகங்கள் எதிர்மறையாக சித்தரித்து வைத்துள்ள ஒற்றை மதவாத / தீவிரவாத அட்டையை எப்பொழுதும் கழுத்தில் மாட்டி நிற்கும் ஒரு சூழலை ஒவ்வொரு இஸ்லாமிய தனி மனிதனுக்குள்ளும் ஊடகங்கள் நுழைத்துவிட்டன. இனி சராசரி விருப்பு வெறுப்பு கலந்த மனிதர்களாக சித்தரிக்கவும்  இயலாத நிலையும் இருக்கிறது. இத்தகைய புறக்காரணிகள் சம்பந்தமின்றி கதைக்குள் நுழைந்து தரும் பார்வைக் கோணம் என்பது தற்காலச் சூழலில் தவிர்க்கவியலாதவையாகவும் இருக்கிறது. கீரனுர் ஜாகீர் ராஜாவின் எழுத்துக்கள் (அவை இருத்தலியலைப் பேசினாலும்) கலகக் கதைகள் என்று பிரசங்கம் செய்யப்படுவதற்கும் அவை காரணமாக அமைந்து விடுகின்றன


வடக்கேமுறி அலிமா ஒரு தேவதை அல்லது பைத்தியக்காரி அல்லது நடிகை அல்லது எழுத்தாளர். அவள் குறித்த பிறரின் மதிப்பீடுகள் என்று நாவலில் வருவது பைத்தியக்காரி, திருடி, கஞ்சா விற்பவள், கொலைகாரி  உள்ளிட்ட மொத்தம் பதிமூன்று குணங்கள். (ஒரு காட்சியாகப் பார்த்தால் அவர்  அவ்வாறு பட்டியலிட்டுக் கொண்டிருக்கும் போது அலிமா, பிண்ணனியில் அவள் தன் பையிலிருந்து  வாழைக்காய்  அப்பமும் நேந்திரங்காய் வற்றலும் எடுத்து தெருநாய்களுக்கு வீசிக் கொண்டிருக்கிறாள்).  விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்டவர்கள், சிறுபான்மை இன மக்கள், புறக்கணிக்கப் பட்டவர்கள் என மையத்தினால் ஒதுக்கப் பட்டவர்களின் குணநலன்களை இங்கு சுட்டியிருக்கிறார். இயல்பு நிலையில் இல்லாத மனிதர்களின் இயல்புகள். பொதுப் பார்வையில் உதிரிகள். ஒருபுறம் பிற பாத்திரங்கள் அவளை இழித்துரைத்துக் கொண்டே இருக்க ஆனால் கதைசொல்லி அவரை மீண்டும் மீண்டும் வேறு ஒன்றாக காண்பிக்க முயற்சித்துக் கொண்டே இருக்கிறார். அலீமா தனது விளையாட்டுகளில் ஒன்றாக  கபர்ஸ்தானில் ( பிணங்கள் அடக்கம் செய்யப்படும் இடம்) புதிய மய்யத்துகள் ( பிணங்கள்) அருகே நின்று கொண்டு அவள் கேள்விகள் எழுப்புகிறாள். அந்தக் கேள்விகள் மரித்தவரை சுவர்க்கத்திற்கு இட்டுச் செல்லும் தேவதை கேட்டும் கேள்விகளாக இருக்கின்றன. தலைதெறிக்க ஓடாதடி என்று பிறர் கூச்சலிட, அலீமா பட்டாம்பூச்சியாக பறந்தாள் என்கிறார். அவள் அழிக்கோடு முஸ்லியாருடன் ஓடிப்போகிறாள். பின்னர் எழுத்தாளர், நடிகை என பிற பரிணாமங்களைப் பெறுகிறாள். அதன் ஒவ்வொரு வெளிப்பாடுகளிலும் அவளது இளமைக்கால அனுபவங்களும் வீட்டின் சுற்றுப்புறமும் துணை நிற்கின்றன






(3)


இந்தக் கதையை அலிமாவின் கதை என்று மட்டும் கவனித்தால் அவளைச் சுற்றிவர இருக்கும் மம்மது, அம்மா, அஸ்லியார், ஷேக், பாப்பம்மா என பிற பாத்திரங்களும் உருவம் கொண்டு எழுகின்றனர். ஒவ்வொருவரின் நிலைப்பாடும் கோடிட்டுக் காட்டப்படுகிறது. அஸ்லியார் இறுதியில் தனக்கும் சித்துவேலையைக் கற்றுத் தரும்படி கேட்கும் சிஷ்யனிடம், ' முட்டாள் என் மக்களை நான் ஏமாத்தறேன். நீ வேணா சர்ச்சுக்குப் போ பாதிரியாகு கொள்ளயடி ' என்கிறார். அவரிடமிருந்து அலீமாவை அழைத்துக் கொண்டு ஓடும் மம்மது தனது உடல் வலிமையைக் காட்டி மகிழ்ந்திருந்து பணம்பெறும் விபச்சாரனாக இருக்கிறான். எது நடந்தாலும் எதுவும் கடவுளின் ஆணைப்படியே நடக்கிறது என்ற அவள் தந்தை இருக்கிறார். விளையாட்டுத்தனமான அலிமாவை இழுத்து வரும் வீட்டினர், அவ்வாறு இழுத்து வரும்  போதெல்லாம் அவளது அங்கங்களை தீத்தீண்டலிடும் காசிம் என அலீமாவைச் சுற்றிலும் மதம், காதல், கட்டுப்பாடு, காமம் என்ற சிறையிலிருந்து விடுபட்டு ஓடும் அலிமா பித்தம் பிடித்துக் கரைந்து வேறொரு அவதாரம் எடுக்கிறாள். 


நேரியல்பற்ற நடையில் சொல்லிச் சொல்லப்படுகிறது அலீமாவின் கதை. அவளது பிறப்பு, இளமைப் பருவம் தவிர, எதிர்பார்ப்புடன் அவள் இணங்கிச் செல்லும் முஸ்லியாருக்கு பொருளாசை தவிர தன்மீது அன்பில்லை என்பதை உணர்ந்து அங்கிருந்து மம்மதுவுடன் வெளியேறி அவன் அவளிடமிருந்த பொருள்களைப் பறித்துக்கொண்டு ஓடியபின்னர் மனநோய் காப்பகம் சென்று தப்பி வந்து எழுத்தாளராவது என நான்கு பருவங்களின் தொகுப்பு இந்த நாவல். அவளுடைய மாற்றங்கள் பகடியாக சொல்லப்படுகின்றது. அவள் தன்னுடைய ஆக்கங்களை கழிப்பறை சுவற்றில் கிறுக்க பதிப்பாளர் அனைத்துக் கழிப்பறைகளாக சென்று அதைப்படியெடுத்துப் பதிப்பிக்கிறார். அதன் வழியாக அவளது படைப்பிற்கு 'முட்டைச்சிம்னி' விருது கிடைக்கிறது. ஆங்காங்கே சிதறுண்டு இந்த சித்திரங்கள் வெளிப்பட்டாலும் தனித்து  வரும் மூன்று அத்தியாயங்கள் சேர்கையில் அது முழு வடிவத்தை எட்டுகிறது. அவை அதில் வரும் எழுத்தாளரின் அத்தியாயங்கள். எழுத்தாளராய் அலிமா வரும் அத்தியாயம், அலீமாவின் பெரியப்பா அவளுடைய கதையை எழுதும் அத்தியாயம், இந்நாவலாசிரியர் இடையில் வந்து தரும் தன்விளக்க அத்தியாயம். அவற்றில் தமிழ்த் திரைப்படக் கதாநாயக, நாயகியின் லட்சணம் முதல் எழுத்தாளரின், இயக்குநரின், பதிப்பாளரின் லட்சணங்கள் வரை பகடிக்குள்ளாக்கப் படுகின்றன. ( முத்துப் போன்ற பல்வரிசையுடன் சிரித்து வெட்கப்பட வேண்டும். பசுமை நிறைந்த சோலைகளிலே ஆடிப்பாட வேண்டும் ). அதிகாரம் எங்கெல்லாம் உருவாகிறதோ அங்கு முதலில் சென்று நிற்க வேண்டியது எழுத்தாளரின் விமர்சனம் என்பது. அது இந்நாவல் வழியாக கலை இலக்கிய உலகின் போலித்தனங்கள் மீதும், பொறாமை, ஆதிக்கம் அல்லது வாய்ப்பு வந்தவுடன் மாறிவிடும் சுபாவம் மீதும் விமர்சனமாக வெளிப்படுகின்றன. புத்திபேகம் தெருவைக் கண்டு கனவில் அதை மயக்க நிலையில் உள்வாங்கித் திரியும் எழுத்தாளனின் பாத்திரம் ஒரு கணத்தில் அச்சமும், பித்தும் கலந்த நிலையில் ஒரு நொடி பார்க்கும் அந்த ஒரு உருவம் அலிமாவாக இருக்கலாம். அவனது இல்லச் சூழலின் காரணமாக அவன் கரிசனத்துடன் நடத்தப்படுவதும் அந்த அத்தியாயத்தில் வருகிறது. கூடவே சில குமாஸ்தாக்களின் கதைகளும் உதிரியாக  வருகின்றன. குமாஸ்தாக்கள் போல கற்பனைவளம் சற்றும் அனுமதிக்கப் படாத எப்போதும் குறைகண்டுபிடிக்கப்படும் வேலையையே செய்துகொண்டிருக்கிற ஒருவன் கணப் பொழுதில் கண்ட காட்சியாகவும் அந்த அலீமா இருந்திருக்கலாம். குமாஸ்தாக்கள் வேலை பார்ப்பதும் கயிறு திரிக்கும் நிறுவனத்தில்தான். அவன் அலிமாவின் கதையையே திரித்துக் கொண்டும் இருக்கலாம். 


அலிமாவின் கதை அவள் புகைக்கும் கஞ்சாவைப் போலவே நாற்றமெடுக்கக் கூடியது. மணக்கக் கூடியது. அப்போது அவளைக் கடந்து செல்லும் பல்வேறு மனிதர்களுடன் இந்நாவலில் வாசகரை பொருத்திக் கொள்ளலாம் கூட. அவள் ஏழு பருவங்களிலும் ஏழு குதிரைகளில் ஒரே நேரத்தில் பயணம் போகிறவள். அவளே சொல்வது போல ஒரு குதிரையில் கூட போக வக்கில்லாதவர்களும் இருக்கிறார்கள் தானே.  அலிமாவைப் பற்றி அவளது  இயக்குநர் அகரன் கூறுவதாக ஒரு வரி நாவலில் வருகிறது. "அவளுக்குப் பிம்பம் கிடையாது. இனி அதைக் கட்டமைக்கவும் முடியாது. அதற்கு மிகவும் பிரயாசைப் படவேண்டும். ஏற்கனவே எல்லாவற்றையும் அலிமா சுக்குநூறாக உடைத்தெறிபவள்" அத்தனைக்கும் மேல், இந்தக் கேள்வியை இந்நாவல் விட்டுவைக்கிறது. அவளுடைய வாழ்க்கையை பிறப்பு முதல் அனைத்து விஷயங்களையும் ஏற்கனவே அவளது பெரிய தகப்பன் எழுதி வைத்திருக்கிறான். அலிமாவின் அத்தனை மீறல்களும் ஏற்கனவே எழுதப் பட்டவைதானா அல்லது அது பிரமையா.. எழுதப் பட்டவை என்றால் அவளது மீறல்களுக்கு என்னதான் பொருள். கேள்வியை முன்வைத்து விட்டு  அலிமா சிட்டாகப் பறந்து விடுகிறாள். வாசகர்கள் அதை கேள்வியாகவோ பகடியாகவோ சுமந்து திரியலாம்


***



ஒரு துளியில் அடங்கும் சுற்றுவட்டம்







1



சிறுகதைகளில் எழுத்தாளர் வெளிப்படுகிறாரா அல்லது தன்னை முழுதும் வெளியே நிறுத்திக் கொள்கிறாரா என்பதைக் கண்டறிவது ஒரு சுவாரசியமான விளையாட்டு. அதற்கடுத்து தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் எழுத்துக்களில் முழுமையாக அவருடைய இயல்பு வெளியாகிறதா அல்லது கதைக்கு மட்டும் நேர்மையாக இருக்கிறாரா என்பதும் நோக்கப்படும். எமக்குத் தொழில் கவிதை நாட்டுக்கு உழைத்தல் என்பது ஒரு பி்ரகடனம் ( பாரதி). மானுட இனத்தை ஆட்டிவைப்பேன்; அவர் மாண்டு வைத்தால் அதைப் பாடி வைப்பேன் என்பது ஒரு கலகம்( கண்ணதாசன்) . என் எழுத்துக்கள் என்னை நான் அறியும் முயற்சி என்பது ஒரு ஒப்புதல் ( நாஞ்சில் நாடன்). பொதுவாக சொல்லப்படுவது என்பது ‘இலக்கியம் ஒரு காலத்தின் கண்ணாடி’ என்பது. தன்னை விலக்கிக் கொண்டு சமூகத்தைப் பிரதிபலிப்பது எழுத்தாளனின் பணி என்பது பொதுக்கூற்று. என்.ஸ்ரீராமின் கதைகளை அணுகும் போது முதற்பார்வையில் அவர் இந்தவகை எழுத்தாளராக உணர வைக்கிறார். தர்க்கங்களுக்கு ஆட்படாத மனிதர்களையே எழுதிவருபவர். சென்றகணம், வரும் கணம் ஆகியவை பொருட்டு இல்லாத நிகழ்காலத்தை வாழும் எளிய மனிதர்களின் கதைகள். ஆகவே வாழ்தலுக்காக எதையும் உதிர்ப்பதையும் மறுப்பதையும் இயல்பாக செய்துவிட்டுப் பின் அதற்கான குற்றவுணர்ச்சியை வேறெங்கோ வடிகாலாக்கிச் செல்லும் நாட்டுப்புற குணம். தாமரைநாச்சி ஆறுமுகக்காவடி ஆகிய கதைகளை உதாரணமாகக் கூறலாம். மேற்கொண்டு நகர தாமரைநாச்சியைப் பலிகொடுக்கும் குடும்பம், தன்னுயிரைக் காப்பாற்றியிருந்தாலும் சாதியில் கீழானவனின் காவடியை எடுக்க சீறும் மனம். சென்னையில் உதவி இயக்குநராக இருப்பவரின் வாழ்க்கையைக் காட்டும் வண்ணக கனவுகளும் அப்பாவும், தனது குடும்பத்தை விட்டு தனது எஜமானர் வீட்டிற்கு சமையற்காரனாக இருக்கும் தந்வர்கள் நூதனமாக வெளியேற்றும் விசுவாசம் ஆகிய கதைகள் அவர் நடையில் சிறந்து வெளிப்பட்டாலும் அவரது கதை உலகிற்கு வெளியே நிற்பவை என்றும் சொல்லலாம்.




என்.ஸ்ரீராம் கதைகளை வாசித்தபிறகு அவரை, நாட்டுப்புறப் பாடகன் என்பதைப் போல நாட்டுப்புறக் கதை சொல்லி என்றுதான் அடையாளப்படுத்த முடிகிறது. அவர் சொற்களில் வர்ணனைகளில் வெளிப்படுவது கச்சிதமான வாக்கிய அமைப்பு என்றாலும் அது ஒரு கிராமத்தானின் வட்டாரப் பேச்சுமொழியாகவே இருக்கிறது. அவர்கள் பாடும் ஏலோலோவாக அந்த நடை இருக்கிறது. சித்தார்த்தி வருஷ வெய்யிலும் ஆவணி்மாத மழையும் என வருகின்றன நாள்குறிப்புகள். நெட்டுக்கட்டு வீட்டைப் பற்றிய வர்ணனையை துவக்கும் போது ஊர்ப்பொது கிணற்றில் தண்ணிசேந்த வரும் பெண்கள் கயிற்றை அந்த வீட்டின் திண்ணையில் போட்டுச் செல்வார்கள். இரவும் பகலும் கிணற்றில் கப்பிகள் உருளும் சப்தம் வீட்டுக்குள் கேட்படியே இருக்கும் என்று துவங்குகிறது. ஊர்க்கதைகள் மொத்தமும் அந்த வீட்டிற்கும் அந்த வீட்டுக் கதைகள் ஊருக்கும் தெரிந்தபடியே இருக்கும் என்கிற சித்திரம் உருவாகிவிடுகிறது (நெட்டுக்கட்டு வீடு). தத்தமது தந்தைகளின் தொடுப்புகளை அறிய ஒரு தலைமுறையை ஆண்ட தாசிக்குறத்தியை அணுகி பணம் கொடுத்து ரகசியங்களைக் கேட்கும் கதை (வெளிவாங்கும் காலம்). ஒரு சொல் பொறுக்காமல் பல வீர சாகசங்கள் வழி அதைக் கடக்க முயலும் ஓடக்காரன் கதை (நதிப்பிரவாகம்) ஆகியவையே மேற்சொன்ன கதைகளைவிடவும் அவரது கதைஉலகிற்குள் நுழைய ஏற்றவை. தற்போதைய மூத்த எழுத்தாளர்களான ஜெயமோகன் எஸ்.ராமகிருஷ்ணன் தலைமுறையை தொட்டு வந்த எழுத்தாளர்களில் என்.ஸ்ரீராமின் கதைகள் முக்கியமானவை. நீ்ண்ட கதைகளானாலும் குழப்பமில்லாமல் தொகுத்துக்கொள்ளும் வகையில் சொல்வதி்ல் அவரது தனித்துவமான நடைக்கும் முக்கிய பங்கு உண்டு. ஆங்காங்கு இடைபடும் சடைவு திடுமுட்டி போன்ற கொங்கு நிலப்பகுதியின் சொற்பிரயோகங்களை துருத்தல் இல்லாமல் இலகுவாக கையாளுவதையும் குறிப்பிட வேண்டும். அவ்வாறு அவரது புனைவுலகில் நுழைகையில் அவரது கதைகளின் இரு வேறு வகைமைகளை உணரமுடிகிறது. அவற்றை பொது சிறுகதை வகைகளோடு ஒப்பிடுகையில் ஒருவித மீறல் என்றும் சொல்லலாம். முதலாவது தொன்மமும் யதார்த்தமும் கலக்கும் விதம். மற்றது சிறுகதையின் வடிவமும் உள்ளடக்கமும் கலக்கும் விதம்.










2







நாட்டுப்புறக் கதைகள் குலசாமிக்கதைகள் இரண்டும் ஒரு களத்தில் நிகழ்பவை என்றாலும் வேறுபாடுகளில் முக்கியமானது அறமீறலை அவை எதிர்கொள்ளும் விதம். சொல்வழக்கில் திகழும் நாட்டுப்புறக் கதைகளில் குற்றவுணர்ச்சி பாவனை குறைவு. ஆகவே அதன் எல்லைகள் விரிகின்றன. அதன் உள்ளடக்கம் மிகவும் கற்பனைத் திறன் கொண்டதாகவும் நிகழ்வுகள் அற்புதங்கள் நிறைந்ததாகவும் இருக்கின்றன. விராடபர்வம் வாசித்தால் மழை வரும் என்பது ஐதீகம். அதன் நீட்சியை நாம் கண்டுகொண்டே இருக்கலாம். சமீபத்தில் மகாபாரத கதையை ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்த்த திரு.அருட்செல்வ பேரரசன் தான் விராட பர்வம் மொழிபெயர்த்த போது மழைபொழிந்ததை தனது பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதை மனம் நினைவுபடுத்திப் பார்த்தபடியே இருப்பதைக் காணலாம். அதன்படி நிகழ்ந்தால் அல்லது நிகழாமல் போனால் அதை ஒட்டிய காரணங்களை காரணிகளுடன் ஒப்பிட்டுப்பார்க்கத் தேடுகிறோம். நமது தர்க்கத்தோடு பொருத்தப் பார்க்கிறோம். யதார்த்தத்தில் என்னவானாலும் கதையை அதற்கேற்ப மாற்றுவது இல்லை. ஆகவே, கதைகள் தர்க்கத்தைத் தாண்டி நிற்பவையாக உள்ளன. ஆனால் நமது புரிதலுக்கு ஏற்ப அதை வளைத்து நாம் உள்வாங்கிக் கொள்கிறோம். ஆண்டாள் ஸ்ரீரங்கத்து பெருமாளுடன் ஐக்கியமாகிறார் இராமலிங்க வள்ளலார் அருட்பெரும் ஜோதியாக ஆகிறார். இவற்றை தர்க்கமனம் கொண்டு விளங்கிக் கொள்ள நினைத்தால் எவ்வளவு முயன்றாலும் நாம் வாசித்த சொல்லப்பட்ட கதைகளை வைத்து விளக்கும் போது மூலத்தில் உள்ள மாயம் குறைகிறது. மாயம் இருக்கும் போதே அவை கதைகளாகின்றன. கதைகளாக இருக்கும் போதே அவற்றிற்கான முழுநியாயமும் கிடைக்கிறது. கதைகள் சொல்லும் குறியீடுகளை வைத்து பார்க்கும் போது சாமானியனுக்கு உருவாகும் அகத்திறப்பு முக்கியமானது. வள்ளலாரின் ஜோதி வடவைத்தீயை அணைக்க ஏற்றப்பட்ட நெருப்பாக அதே வடலூரில் திகழ்வதை உணரும் கணத்தில் அடையும் ஒருவித பரவசத்தை கதைகள்தான் அளிக்க இயலும்.




இரண்டாவதாக, ஒரு புராணத்தை அல்லது பழங்கதையை சம்பந்தப்பட்ட நபர்களை மட்டும் வைத்து சமகால புரிதல்கொண்டு ஒப்பிட்டுப் பார்க்கையில் உருவாகும் புரிதல் குறுகிய ஒன்றாக ஆகிவிடுகிறது. ஒரு சதுரங்க களத்தை மீட்டுறுத்திப் பார்க்கும் போது ஒட்டுமொத்த பலகையும் காட்சிக்கு வர வேண்டும். வீழ்ந்த காய்கள் எவை? அவை எப்படி வீழ்த்தப் பட்டன? இருக்கும் காய்கள் எவை? ஒரு நகர்வு யார் யாருக்கு வழியளிக்கும் ஆகியவை முக்கியம். ஆகவே நாம் அவற்றைப் புரிந்து கொள்ள அங்கு பயணிக்க வேண்டும். அவ்வாறில்லாமல் அவர்களை நமது நிகழ்காலத்திற்கு இழுத்தால் அதுவும் குறைவான புரிதலாக ஆகிறது.




நாட்டுப்புறக் கதைகளை இலக்கியத்தில் அவ்வாறாகவே எழுதியவர்களில் கி.ரா முதன்மையானவர். துவக்கத்தில் அதை தன் தர்க்கத்திற்கு ஏற்ப சற்று மாற்றினாலும் பிற்காலத்தில் அந்தக் கதைகளை மாற்றக் கூடாது என்கிற புரிதலை அடைந்ததாக தனது உரையாடல்களில் கூறுகிறார். புராணக் கதைகளின் சாயலோடு நவீன இலக்கியத்தில் எழுதுவது (ஜடாயு), நாட்டுப்புறக் கதைகளை நவீன சிறுகதையாக எழுதுவது என்று அவரது கதைகளில் கண்கிறோம். சமகால எழுத்தாளர்களில் மூத்தவர்களில் நாஞ்சில்நாடன் தொன்மங்களை கையாளும் விதம் குறிப்பிடத்தக்கது. அவரது கதைகளில் மாடனும் முனியும் நமது மரபின் சாட்சிகளாக உள்ளனர். முதியோர்களைக் கைவிடும் மைந்தர்கள், அறம்மீறும் அதிகாரிகள், மக்களைப் பொருட்படுத்தாத தலைவர்களை காணும்போது அறம் பாடுபவர்களாக அவர்கள் எழுந்து வருகிறார்கள். ஜெயமோகன் கதைகளில் தொன்மங்களை தர்க்கத்தோடு அணுகுவதை காணலாம். புரிந்து கொள்ளும் யத்தனிப்பு அல்லது அதில் உள்ள பூடகத்தன்மையை இன்னும் பூடமாக்குவது ஆகியவை அவரது கதைகளில் நிகழ்கின்றன. மற்றொரு புறம் நாட்டார் தெய்வங்கள் பெருமதங்களோடு இணைவதில் உள்ள அபத்தங்களையும் சுட்டுகிறார் ( மாடன் மோட்சம்). ஆசிரியர்களின் குரல் வெளிப்படும் கதைகள் என்று இவ்விருவரின் கதைகளை வகைப்படுத்தலாம்.




அந்த வகையில் என் ஸ்ரீராம் கதைகளை தனித்துவமாக்குவது அவற்றில் உள்ள ஆசிரியரற்றதன்மை. ஆசிரியரின் தர்க்க அறிவு இடராத காரணத்தால் அவை கேள்விகளாக புரிதலாக மாறாமல் கதைகளாக அப்படியே நீடிக்கின்றன. அதில் உள்ள மாயத்தன்மை அப்படியே தொடர்கிறது. நிகழ்காலத்தில் அவை எவ்வாறு முரண்படுகின்றன தேய்கின்றன என்கிற பார்வையை சொல்லிவிட்டு ஒதுங்கிவிடுகிறது. ஆகவே அவர் கதைகளில் உடுக்கு அடித்தால் மழை வருகிறது. கருட மந்திரம் பாடி அதனால் கருடன் வந்து அடித்து சித்தப்பாவிற்கு பாம்பு கடித்த விஷம் இறங்குகிறது. அம்மன் சக்தியால் அநியாயம் செய்தவனின் பார்வை பறிபோகிறது. அவற்றை மாய யதார்த்தமாக அவர் வழங்கவில்லை. தொன்மங்கள் கதைகளில் அவ்வாறே நிகழ்கின்றன. அவ்வாறு கதைகள் அற்புதங்களையும் பேசவில்லை; அவற்றை தர்க்கத்தோடும் அணுகவில்லை. அதாவது அற்புதம் நிகழ்ந்து வரம் பெற்று யாரும் வாழ்ந்துவிடுவதில்லை. அவர் இரு சர்ப்பங்கள் பிணைவது போல அவற்றைப் பிணைக்கிறார். நாகமும் சாரையும் தனித்தனி. ஆனால் பிணையும் போது அதை நாம் நாகம் என்றும் சொல்வதில்லை. சாரை என்றும் சொல்வதில்லை. அவை பிணைசர்ப்பங்களாகத்தான் நிற்கின்றன. நெட்டுக்கட்டு வீடு கதையில் மண்ணில் புதைவுண்டு கிடக்கும் மாந்திரீகம் வெளியே வருவதற்கும் பழனாத்தாள் வாழ்க்கை புதைவுண்டு போவதற்கும் ஒரு இணைப்பை வாசகரால் கொடுக்கவே முடியாது. இரண்டும் வெவ்வேறு. ஆனால் ஒரே கதைக்குள் வருவதால் அவ்விரண்டையும் கவனிக்க வேண்டியிருக்கிறது. செல்லியக் கவுண்டரின் மனதில் புதைந்திருக்கும் பழமை வெளியே வரும்போது பழனாத்தாள் உயிரைவிட வேண்டியிருக்கிறது. அவரது கதைகளில் வரும் தொன்மமும் யதார்த்தமும் அவ்வாறே நிலைகொண்டு எழுகின்றன. இதில் எது சாரை எது நாகம்?




உடுக்கடிக்கும் கலைஞன் தனக்கான வாழ்வை இழந்து பழனி படிக்கட்டில் பிச்சை எடுக்க அமர்வது ஒரு கதை (உடுக்கை விரல்) . ஆனால் அது துவங்குவது மூன்று தலைமுறைக்கு முன் உடுக்கடித்து மழை கொண்டு வந்ததும் இறந்தவர்களை எழுப்பியதுமான காலகட்டத்தில். முதலில் உடுக்கு அடிக்கையில் பத்தாயிரம் பேர் பார்ப்பதாக நினைத்துக்கொள் என்று அவனிடம் அப்பா சொல்கிறார். இறுதி உடுக்கு அடிக்கையில் அவன் வெள்ளத்தையும் நினைத்துக்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது. சாரையிடம் நாகம் வீழந்து விடுகிறது.








3




சிறுகதைகளுக்கான வடிவம் எவ்வாறு இருக்கவேண்டும் என்று பலரும் எழுதியிருக்கின்றனர். சிறுகதையை தீர்மானிப்பது பக்க அளவா உள்ளடக்கமா? சிறுகதை எழுதும் போது வாசகர்களை மனதில் வைத்து எழுதுவதா அல்லது தன்னை நிறுத்தி எழுதுவதா என்கிற விவாதமும் தொடர்ந்தபடியே உள்ளன. தற்போது கிட்டத்தட்ட ஒரு திரைமொழிக்கான எதிர்பார்ப்பை கட்டாயத்தையும் சிறுகதையில் வைப்பது நிகழ்கிறது. (முதல் ஃப்ரேமில் துப்பாக்கி வந்தால் படம் முடிவதற்குள் அது வெடித்தாக வேண்டும்). ஒரு சிறுகதை ஒரு காலகட்டத்தை சொல்லவேண்டும். நீண்ட காலத்தை சொன்னால் அது ஒரு மனிதனின் வாழ்க்கை திருப்பங்களை சொல்லவேண்டும் ஆகிய நிர்பந்தங்கள் சிறுகதைக்கு உண்டு. சிறுகதை நாவல் என்கிற வடிவம் இன்னும் மாறி குறுங்கதை சிறுகதை குறுநாவல் நாவல் என்று விரிந்த போது குறுங்கதைக்கும் குறுநாவலுக்கும் இடையே சிறுகதை என்கிற வடிவத்தின் நோக்கம் என்ன என்பதும் கேள்வியாகிறது.




தி.ஜாவின் முக்கியமான சிறுகதைகளில் ஒன்று தவம். விலைமாது மீது ஏக்கம் கொண்ட கதையின் நாயகன் சிங்கப்பூர் சென்று அவளுக்கான பொருளை ஈட்டிக் கொண்டு வரும்போது முதியவளான அவள் அவனுக்கு ஒரு முத்தம் கொடுக்கிறாள். கதையோட்டம் பத்து இருபது வருடங்களானாலும் அது நாயகனின் விழைவு என்கிற ஒற்றைப் புள்ளியை நோக்கி குவிவதால் அது இடையூறாக இருப்பதில்லை. ஜெயமோகனின் ஈறாருகால்கொண்டெழும் புரவி என்கிற சிறுகதையும் இத்தகைய ஒரு புள்ளியை மையமாக கொண்டு எழும் படைப்பு. ஒரு மனிதரின் ஆயுட்காலத்தை வர்ணிக்கிறது. பக்க அளவிலும் பெரியது. யுவன் சந்திர சேகரின் சிறுகதையான ‘இருபத்துமூன்று காதல் கதைகள்’ உள்ளிட்ட ஏனைய கதைகளும் சுமார் ஐம்பது பக்கங்கள் வரை நீள்கின்றன. ஆனால் கால ஒட்டத்தில் ஓரிரு வருடங்களுக்குள் நிகழும் சம்பவங்கள். அவையும் சிறுகதை என்றே தொகுக்கப் படுகின்றன. அதன் உள்ளடக்கம் என்பது சிறுகதைக்கானது என்றே அவற்றின் ஆசிரியர்கள் கருதுகிறார்கள்.




என்.ஸ்ரீராம் கதைகளில் பெரும்பாலானவை அறுபது வருட வாழ்வை சொல்கின்றன. அதில் சில நூறு வருட வாழ்க்கையையும் சொல்பவை . அதற்குள் யதார்த்த வாழ்வு, தொன்மம், பருவநிலை மாற்றம் , சமூகம் நகர்ந்து செல்லும் நிர்பந்தம் என அனைத்தும் பிணைந்து வருகின்றன. அவர் சொல்ல வருவது ஒரு மையத்தை அல்ல என்பதும் கதையின் மையம் ஒரு கதாபாத்திரத்தை விட்டு மற்றொரு கதாபாத்தி்த்துக்கு கதைக்குள்ளாகவே தாவுவதையும் காணமுடிகிறது. அந்தவகையில் அவருடைய நடை மேற்சொன்ன வடிவங்களுக்குள் ஆட்படாத ஒரு தனித்துவ பாணியாக உள்ளது. ஒருவகையில் சிறுகதைகள் அனைத்தும் நாவலுக்கான கனம் கொண்டவையாக உள்ளன. மீசை வரைந்த புகைப்படம் அதற்கு ஒரு சிறந்த உதாரணம். கதை மாமாவிடம் துவங்கி சுகுணாவிடம் சென்று கதைசொல்லியின் மனைவியிடம் வந்து முடிகிறது.




ஆண்டு கணக்குகளின் படி அறுபது வருடம் என்பது ஒரு சுற்றுவட்டம் எனப்படுகிறது. அந்த அறுபது வருடங்களில் ஒருவரது வாழ்க்கையை ஒற்றைப் பார்வையில் சொல்லிவிட முடியாது. அதைச் சொல்லும் போதே அவரைப் பாதித்த பிற காரணிகள் யாவை அதனால் அவனது வாழ்க்கை மாறுவது எப்படி என்பதையும் காணவேண்டும். அதிலும் இருபதாம் – இருபத்தொன்றாம் நூற்றாண்டுகளில் எழுத வருகிறவர்களை ஒரு யுகசந்தியை கண்டவர்களாக கூறலாம். விழுமியங்களும், நம்பிக்கைகளும் கண்முன்னலே வேறொன்றாக உருமாறுவதைக் காண்கிறார்கள். அதன் தாக்கம் அவர்களின் கதைகளில் வெளிப்படுகிறது. என்.ஸ்ரீராம் கதைகளிலும் அது வெளிப்படுகிறது. ஆனால் அவர் வாதியும் அல்ல பிரதிவாதியும் அல்ல நீதிபதியும் அல்ல. அவர்களில் தன்னை ஒரு சாட்சியாகவே நிறுத்திக்கொள்கிறார். கொடுமுடி ஆறும் அமராவதி ஆறும் சண்முக நதியும் பொங்கியும் வறண்டும் நிற்கும் காலத்தைக் கடந்தபடி ஓடிக்கொண்டிருக்கிறது கதைகள். இருபதடியில் தண்ணீர் வந்த காலமும் ஐநூறு அடிக்கும் போர் போட்டு தண்ணீர் வராத காலமும் வருகிறது. புரட்டாசி பெருமழையும் வருகிறது. வெகுதான்ய வருட பஞ்சமும் வருகிறது. அனைத்தும் ஒரு சிறுகதை வடிவத்தில் சுருங்கி இருக்கிறது. ஒருவித சங்குசக்கரம் பட்டாசு போன்று உள்ளங்கை அகலத்தில் சுருண்டு கிடக்கின்றன கதைகள். அதைப் பற்றவைத்து சுழல வைப்பது என்பது வாசகர் கையில் உள்ளது. அவ்வாறு கதைகளை விரித்தெடுக்கும் வாசகர் அதன் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் பின்னாலும் ஒரு நாவலுக்கான களம் இருப்பதை உணரமுடியும்.

Friday, January 13, 2023

சுவருக்குள் சித்திரங்கள் மற்றும் கம்பிக்குள் வெளிச்சங்கள்

மரண வாக்குமூலம் மிகவும் கருணையுடன் பரிசீலிக்கப்படுகின்ற ஒன்று. மரணத் தருவாயில் எந்தவொரு மனிதனும் பொய் சொல்லமாட்டான் என நம்பி ஏற்கப் படுவது. தியாகு, தான் நேரடியாக சம்பந்தப்பட்ட வழக்குகளில் பாதிக்கப் பட்டவர்களின் மரண வாக்குமூலம் பெறப்பட்டு, வழக்கானது அதற்கு தோதாக  மாற்றி  எழுதப்பட்ட விதத்தைச் சொல்கிறார். தியாகுவும் நண்பர்களும் 'அழித்தொழிப்பு' செய்ய வேண்டி சேர்மேன் ஒருவரைக் கொல்கிறார்கள். அதைப் பார்த்த இருவர் ஏழுபேர் சேர்ந்து கொன்றதாக வாக்குமூலம் அளிக்கின்றனர். ஆனால்  இவர்கள் ஏழு பேர் அல்ல ஐந்துபேர்கள் தான். ஆனால் காவல்துறையினர் அந்த வாக்குமூலத்தை உண்மையாக்கவேண்டி இருவரை சேர்க்கிறார்கள். மற்றொன்று, ஒரு மணியக்காரர் ஒருவரை 'அழித்தொழிப்பு' செய்யும் போது அவர் குற்றுயிராக தப்பித்து விடுகிறார். அவர் தனது வாக்குமூலத்தில் தனது பகைவர்கள் பெயரை சொல்லிவிடுகிறார். நடுவர் நீதிமன்றம் அவர்களுக்கு தண்டனை வழங்கிவிடுகிறது. அதாவது 'அழித்தொழிப்பு'  செய்த தியாகுவுக்கும் தண்டனை ; குத்துப்பட்டவர் வாக்குமூலத்தில் அவராக சொன்ன அவருடைய பகைவர்களுக்கும் தண்டனை. சில விஷயங்களை தியாகு தர்க்கரீதியாக கேள்வி கேட்கும் போது நம்மால் எதிர்த் தரப்பை எடுக்க இயலவில்லை.



தியாகு அவர்கள் தனது  ஆரம்பகால வாழ்க்கையையும் சிறை அனுபவங்களையும்  சுவருக்குள் சித்திரங்கள் மற்றும் கம்பிக்குள் வெளிச்சங்கள் ஆகிய புத்தகங்களின் வாயிலாக எழுதியுள்ளார். அவரது இயற்பெயர் தியாகராஜன். கல்லூரி காலத்தில் அரசியலில் ஆர்வம் கொண்டு, பின் நக்ஸல்பாரி இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு அதில் பங்காற்றி வர்க்க எதிரிகளை 'அழித்தொழிப்பு' செய்கிறார். அதற்காக தூக்கு தண்டனை பெறுகிறார். அது பிறகு ஆயுள் தண்டனையாக குறைக்கப் பட்டு 1970 முதல் 1986 வரை சிறையில் இருக்கிறார். அதன் முதல் நான்காண்டு அனுபவங்கள் முதல் புத்தகமும் அடுத்த நான்காண்டு அனுபவங்கள் இரண்டாவது புத்தகமுமாக வந்திருக்கின்றன. கால ஒட்டத்தில் முன்னும் பின்னுமாக சென்று வரும் சித்தரிப்புகள் உண்டு. இதன் தொடர்ச்சி "விலங்கிற்குள் மனிதர்கள்" இன்னமும் புத்தக வடிவம் பெறவில்லை. 


சேரிப்பெண்ணை மணியக்காரரின் இளைய மகன் வம்பிழுக்க அதைத் தட்டிக் கேட்கப் போன அவளது அண்ணனுக்கு கத்திக்குத்து கிடைக்கிறது. அதை முறையிட எந்த அரசுத்துறைக்கும் கேட்க செவிகள் இல்லை என்று மக்கள் உணர்ந்த பின்னர் அவர்களுக்காக நியாயம் செய்ய  அங்கு களமிறங்குகிறார்கள் நக்சல்பாரிகள். தியாகு அவர்களில் ஒருவர். மணியக்காரரை அவர்கள் அழித்தொழிக்க முயல்வதின்  மூலம் பசுமையான தஞ்சையில் ஒரு சிவப்புத்துளி படர்கிறது. அதன் பின்னர் சிறிது காலம் சென்றபின்  திருச்சி சேர்மேனை அழித்தொழித்து கைதாகி சிறைக்குச் சென்றபின்னர் சிறைக்கூடம் அவருக்கு ஒரு போதிமரமாகிறது. அங்கு நிகழும் உரையாடலும் சந்திக்கும் மனிதர்களும் சிறையில் நிகழும் சம்பவங்களும் கலந்து ஒரு புரிதலை அளிக்கிறது. 


மூத்த தோழர்கள் ஏஜிகே எனப்படும் ஏ.ஜி.கஸ்தூரிரங்கன் ஏஎம்கே எனப்படும் ஏ.எம்.கோதண்டராமன் ஆகியோர்களின் ஆளுமைச் சித்தரிப்பு முக்கியமானது. தலைவர்கள் எங்கிருந்தாலும் தலைவர்கள் தான். அவர்கள் காவலர்களுக்கும் "தலைவரே" தான். ஏ.ஜி.கே அங்கும் சக கைதிகளின் வழக்குகளுக்கான மேல் முறையீடு முதல் காவலர்களின் உரிமைக்குரல் உரை அனைத்திற்கும் குரல் கொடுக்கிறார்; போராடுகிறார். சாரு மஜூம்தார் கண்ணதாசன் என ஆளுமைகளை சந்திக்கும் போதும் சரி; சந்துரு, பாலகிருஷ்ணன் போல சக கைதிகளை சந்திக்கும் போதும் சரி; ஒவ்வொருவரிடமும் மாணவராக கற்றுக் கொள்ளவும் வழிகாட்டியாக  சொல்லித்தரவும் தோழர்களாக தோள் கொடுக்கவும் தியாகுவிற்கும் அவரது நண்பர் லெனினிற்கும் பல சந்தர்ப்பங்கள் வாய்க்கின்றன. தியாகுவின் வாசிப்பும் சிந்தனையும் ஒரு கட்டத்திற்கு மேல் நக்ஸல் இயக்கம் மீதான தனது நிலைப்பாட்டை  மறுபரிசீலனை செய்யும் இடத்திற்கு அவரை இட்டு வருகின்றன.  அங்கு தோழர்கள் கொள்ளும் கோபமும் ஒருவருக்கொருவர் பேசாமல் இருப்பதும் பின் அவர்கள் உரையாடி தெளிவுறுவதும் என உணர்ச்சிகளும் சிந்தனையும் கலந்த பக்கங்கள்..


சித்தரிப்புகள், சிறைக்கைதிகளின் வாழ்வை விவரிக்கும் போது அவர்களின் கடந்தகாலத்திற்குச் சென்று திரும்புகின்றன. அங்கு அவை ஒவ்வொன்றும் குறுநாவலாகின்றன. தற்போது அவர்களின்  நிலையை சொல்லும் போது கறாரான மதிப்பீடாக ஆகின்றன. சிறைக் கலவரங்களைச் சொல்லும்போது ஆவணங்களாகி விடுகின்றன. சீவலப்பேரி பாண்டி வரும் இடங்களில் மர்மநாவலாகி விடுகின்றன.  தியாகுவும் லெனினும் உடனிருப்பவர்களுக்கு மார்க்ஸியத்தை சொல்லித்தரும் போது தத்துவ நூலாகிவிடுகின்றன. எந்த இடத்திலும் வாசிப்பு சுவாரசியம் குன்றாத ஓட்டமாகவும் விளங்குகின்றன. 




மருத்துவமனையும், நீதிமன்றமும் காவல் நிலையமும் ஒருமுறை உள்ளே காலடி எடுத்து வைத்தவரை தொடர்ந்து இழுக்காமல் விடாது; ஆகவே அந்தப் பக்கம் போகக் கூடாது என்று ஊரில் சொல்வார்கள். நானும் எந்தக் காலத்திலும் ஒரு மனிதன் சிறை செல்லக் கூடாது என்றே விரும்புகிறேன்.  ஆனால் அந்தக் காலம் அப்படி ஒரு லட்சியவாதத்தை சுமந்திருக்கிறது. அதற்குள்ளேயே, சிறைக்குச் சென்றதை சாதனையாக்கி அதன் நேரடி உலகியல் பலனை அரசியல் அதிகாரங்கள் வழி கைப்பற்றியவர்களும் உண்டு. ஆனால், கல்லூரி மாணவராக  இளம் போராளி தியாகு அவர்களின் முதிரா வேகம்,  சிறைக்குள் சித்திரங்களையும் கம்பிகளுக்கிடையே வெளிச்சங்களையும் மட்டும் கண்டடைந்திருக்கிறது. 


இந்த வருடத்தின் முதல் வாசிப்பே இவ்விரு புத்தகங்களாக அமைந்தது மகிழ்ச்சி. எனக்கு கதைசொல்லி என்றால் கி.ராஜநாராயணன் யுவன் சந்திரசேகர் ஆகியோர் நினைவிற்கு வருவார்கள். இனி தியாகுவும் நினைவிற்கு வருவார். இந்தப் புத்தகங்களின் இலக்கிய இடமும் இலக்கியப் பிரதிகளுக்குச் சளைத்தது அல்ல.


விஜயா பதிப்பத்தின் வெளியீடாக வந்துள்ளன. 


Saturday, December 31, 2022

Bye Bye 2022

2022 ம் ஆண்டும் எனக்கு ஒரு குறிப்பிடத்தக்க வருடமாக இருந்திருக்கிறது என்றே தோன்றுகிறது. 




புனைவுகள்

இவ்வாண்டில் மூன்று சிறுகதைகள் எழுதினேன். அவை வனம் மற்றும் புரவி இதழ்களில் வெளியாயின

கட்டுரைகள்

1) சூதாடி நாவல் குறித்த கட்டுரை கனலியில் வெளியாகியது

https://kanali.in/suthadi/


2) 'அ.முத்துலிங்கம் கட்டுரைகள்' குறித்த கட்டுரை 'ஆறாம் திணையின் கதவுகள்'தொகுப்பில் (விஜயா பதிப்பகம்)  வெளியானது


3) அல்கொஸாமா  நாவல் குறித்த கட்டுரை வல்லினம் இதழில் வெளியானது

https://vallinam.com.my/version2/?p=8562


4) வெண்முரசு குறித்த சியமந்தகம் கட்டுரை J 60 தளத்தில் வெளியானது


https://jeyamohan60.blogspot.com/2022/07/blog-post_18.html?m=1


5) விஷ்ணுபுரம் விருது அறிவிப்பை ஒட்டி எழுத்தாளர் சாரு நிவேதிதா அவர்களின் படைப்புலகம் குறித்த  இரு கட்டுரைகள் விருது அறிவிப்பை ஒட்டி வெளியாயின

https://kaliprasadh.blogspot.com/2022/09/2022.html?m=1

https://www.jeyamohan.in/176182/

நேர்காணல்

1. புரவி மாத இதழுக்காக எழுத்தாளர் இரா.முருகன் அவர்களை நேர்காணல் செய்திருந்தேன்.. நண்பர்சுரேஷ் பாபு உடன் வந்திருந்தார். அந்தப் பேட்டியை பதிவு செய்தார். நேர்காணல் இரு பாகங்களாக புரவி இதழில் வெளியாகியது.

2. மிளகு நாவல் குறித்த உரையாடலில் பங்கு பெற்றேன்

உரைகள்

1) தே- ஒரு இலையின் வரலாறு குறித்து


2) எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் அவர்களின் எண்கோணமனிதன் நாவல்  குறித்து


3) அய்யப்பன் மகாராஜனின் மூஞ்சிரப்பட்டன் தொகுப்பு குறித்து


4) விஷ்ணுபுரம் விழாவில் சாரு குறித்து


5) எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி அவர்களின் கதைகள் குறித்து ஹலோ எஃப் எம் ல் மற்றும் தமிழ் ஆடியோ புக் சேனலில் பேசினேன்


ஒருங்கிணைப்பு

1. குமரகுருபரன் - விஷ்ணுபுரம் விருது விழாத் தொகுப்பு


நற்றுணை கலந்துரையாடல்




A. பனி உருகுவதில்லை வெளியீட்டு விழா- (ஸீரோடிகிரி பதிப்பகத்துடன் இணைந்து) - அம்மாச்சி ஹால் வளசரவாக்கம்

B.  திருமந்திரம் - எழுத்தாளர் கரு.அறுமுகத்தமிழன் - வடபழனி சத்யானந்தா யோகமையம்

C. விடுதலைக்கு முந்தைய தமிழ்ச் சிறுகதைகள் :-  தொகுப்பாசிரியர் அர்விந்த் சுவாமிநாதன் -  zoom meeting 

D. காமிக்ஸ் மற்றும் கிராபிக்ஸ் நாவல்கள் குறித்த அமர்வு :- எழுத்தாளர் கிங் விஸ்வா - வடபழனி சத்யானந்தா யோகமையம்

E.ஜீவகரிகாலன் படைப்புகள் குறித்த  உரையாடல். கூடவே ஓவியங்கள் குறித்த சுவாரஸ்யமான அரட்டைக் கச்சேரி - வடபழனி சத்யானந்தா யோகமையம்

( நற்றுணை கலந்துரையாடலுக்கு தனது யோகா மையத்தை அளித்து வரும் குருஜி செளந்தர் மற்றும் அதற்கு நிதி உதவி செய்யும் நண்பர்கள் அனைவருக்கும் இத்தருணத்தில் நன்றி கூறவேண்டும். உடனிருந்து ஆலோசனை வழங்கி வரும் யாவரும் பதிப்பக நண்பர்களுக்கும் நன்றி )

 வாசித்தவை:-

( நினைவிலிருந்து வரும் பட்டியல். அவ்வப்போது குறித்து வைக்கவில்லை. ( 2023 ன் முதல் சபதமாக இதைக்கூட வைத்துக் கொள்ளலாம்.  )


1.கம்பராமாயணம் அயோத்யாகாண்டம் (நியூ செஞ்சுரி)

2.கம்பராமாயணம் ஆரண்யகாண்டம் ( நியூ செஞ்சுரி)

(கம்ப ராமாயண வாசிப்பிற்கு நன்றிகூற வேண்டியவர்கள்:- இம்பர்வாரி குழுமம் மற்றும் பெங்களூரு ஹரிகிருஷ்ணன் அவர்களன்  யூட்யூப் பதிவுகள்)

3.மூத்த அகதி - வாசுமுருகவேல் ( ஸீரோடிகிரி)

4.பார்த்தீனியம் - தமிழ்நதி ( நற்றிணை)

5.மூஞ்சிரப்பட்டன் - அய்யப்பன் மகாராஜன் ( யாவரும்) 

6.அல்கொஸாமா - கனகராஜ் பாலசுப்ரமணியம் ( ஸீரோ டிகிரி)

7.உன் கடவுளிடம் போ - தெய்வீகன் (தமிழினி)

8. கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள்- போகன்  ( கிழக்கு ) 

9.என்கோணமனிதன் - யுவன் சந்திரசேகர்

10.மிளகு - இரா.முருகன் ( ஸீரோ டிகிரி)

11.ஆஷஸ் & டைமண்ட்ஸ் - மணி எம்கே மணி (யாவரும்)

12. தே ஒரு இலையின் வரலாறு - ராய் மாக்ஸம் - தமிழில் சிறில் அலெக்ஸ் ( தன்னறம்)

14. விடுதலைக்கு முந்தைய தமிழ்ச் சிறுகதைகள் - தொகுப்பாசிரியர்:- அரவிந்த் சுவாமிநாதன் - (யாவரும்)

15. டிரங்குப் பெட்டிக் கதைகள் - ஜீவகரிகாலன் (யாவரும்)

16. கண்ணம்மா - ஜீவகரிகாலன் (யாவரும்)

17. ஒரு சம்பிரதாய தேநீர் சந்திப்பு - ஜீவகரிகாலன் (யாவரும்)

18.புதிய எக்ஸைல் - சாரு நிவேதிதா ( மறு வாசிப்பு) ( கிழக்கு பதிப்பகம்)

19.நரிக்குறவர் இன வரைவியல் - கரசூர் பத்மபாரதி (தமிழினி) 

20.திருநங்கையர் - கரசூர் பத்மபாரதி (தமிழினி)

21. உயிர் வளர்க்கும் திருமந்திரம் - எழுத்தாளர் கரு.ஆறுமுகத்தமிழன் (தமிழினி)

22.அ.முத்துலிங்கம் கட்டுரைகள் - 2 பாகங்கள்( நற்றிணை)

23. சியமந்தகம் - அழிசி பதிப்பகம்

24. நான்தான் ஒளரங்ஸேப் - சாரு நிவேதிதா (ஸீரோடிகிரி)

25:- பவுன்சர்  காமிக்ஸ்  - முத்து காமிக்ஸ்

26:-  லக்கிலுக் காமிக்ஸ்  - முத்து காமிக்ஸ்

 ட்ராஃப்ட் ஆக வாசித்தவை

1. ஆக்காண்டி - வாசு முருகவேல் ( எதிர்)

2. ஆழம் - சீ.முத்துசாமி ( யாவரும்)

3. பக்கார்டி - ஹரிசங்கர் (உயிர்மை)

4. மேடை உரைகள் - செல்வேந்திரன் ( ஸீரோடிகிரி)

 வாசித்துக் கொண்டிருப்பவை


1. சுவருக்குள் சித்திரங்கள் - தியாகு (விஜயா)

2. கம்பிக்குள் வெளிச்சங்கள் - தியாகு (விஜயா)

3. இரா.மீனாட்சி கவிதைகள் (காவ்யா) 

4. உலகசினிமா - தொகுப்பாசிரியர் எஸ்.ராமகிருஷ்ணன் ( உயிர்மை)



வெண்முரசு கலந்துரையாடல்களை  தொடர்ச்சியாக  நடத்தி வந்தோம். வெண்முரசுக்குப் பிறகு ஜெ. மூன்று நாவல்கள் எழுதினார். (குமரித்துறைவி/ அந்தமுகில் இந்தமுகில் / கதாநாயகி ). ஆனால் நான் வெண்முரசோடு தங்கிவிட்டேன்.  ஆனால் அவற்றை வாசிக்கவில்லை. மனது ஒன்றவில்லை. பாண்டிச்சேரியில் ஜெ.விடம் இதைக் கூறியபொழுது அது அவ்வாறே ஆகும் எனக் கூறினார்.


இவ்வருடத்தில் அவற்றை வாசிக்க வேண்டும் மற்றும் தமிழ்விக்கியில் நூறு பதிவாவது இட வேண்டும். பார்ப்போம்..


And finally,




Thursday, November 17, 2022

அறைக்கலன் - வம்பு பதிவு

அறைக்கலன் வம்பு ஒரு முடிவிற்கு வந்துவிட்டது (போல இருக்கறது) இனி எழுதலாம்


மெர்சல் படத்தில் ஒரு காட்சி. அங்கு விஜய் தான் வைத்தியம் பார்ப்பவர் தனது ஃபீஸ் இடுவதற்கு ஒரு பெட்டி வைத்திருக்கிறார். அதில் தனது மகனுக்காக சிகிச்சை எடுத்து அதில் பணம் போடாத ஒருவர் தனது மகனின் முதல் மாத சம்பளத்தை மொத்தமாக அதில் இடுவார். அது எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய சோற்றுக் கணக்கு கதை. கூட்டத்தில் ஒருவன் படமும் தனது இறுதி காட்சியாக அதையே வைத்திருக்கும். வணங்கான் என்கிற பெயரில் ஒரு படம் வருகிறது. அதுவும் ஜெ. கதையின் தலைப்புதான். அந்தக் கதையில் யானை மீது ஏறும் ஒருவன் குறியீடு அதற்குப்பின் வந்த கர்ணன் படத்தில்  ஹீரோயிசமாக காட்டப்படுகிறது. ஜெ. எழுதுவதற்கு முன்னும் யானையின் மேல் மனிதர்கள் அமர்ந்து போனார்கள்தானே என்று வாதிட்டால்  சொல்வதற்கு ஏதுமில்லை.  


ஒருநாள் இங்கு புதிய எழுத்தாளர்களி்ன் கதைகள் ஜெயமோகனின் கதையை போலவே இருக்கின்றன என்பார்கள். மற்றொருநாள் ஜெயமோகனின் எழுத்துக்கள் பாதிப்பை செலுத்தியிருக்கிறதா என்ன? என்றும் கேட்பார்கள். ஜெயமோகன் வாசகர்களை இந்துத்துவம் நோக்கி இழுக்கிறார் என்பார்கள். ஜெயமோகனை யாராவது வாசிக்கிறார்களா என்பார்கள். அநேகர் இத்தகைய  "தூண்டிற் புழுவினைப்போல் -வெளியே 

சுடர் விளக்கினைப்போல்" நிலைமையில் இருந்து வருகிறார்கள். 


இன்று கவிஞர் மனுஷ்யபுத்திரன் அவர்கள் ஜெயமோகனின் சிறுகதைகள் பேசப்பட்ட அளவுகூட வெண்முரசு பேசப்படவில்லை என்கிறார். ஆனால் வெண்முரசு சென்னை கூட்டத்தை ஒருங்கிணைத்தவர்களில்  ஒருவனாக சொல்ல சில விஷயங்கள் உள்ளன. சராசரியாக மாதம் முப்பது பேர் வரை வருவார்கள். இவர்கள் நேரில்  வர இயன்றவர்கள். கோவிட் காலத்தில் zoom ல் வைத்தபோது நூறு பேர்வரை வருவார்கள். அவர் மேலும்,  வெண்முரசு ஜெ. க்கு  அளிக்கப்பட்ட புரஜெக்ட் என்கிறார். அப்படி ஒரு புராஜெக்டாக அவருக்கு அளிக்கப் பட்டிருக்குமெனில் அதை அளித்தவர்கள் மனிதர்கள் மீது அன்பு கொண்டிருந்த தலைவர்களான மகாத்மா காந்தியாகவோ அல்லது அண்ணல் அம்பேத்கராகவோ இருப்பார்கள் என்று உறுதியாக சொல்லலாம். காரணம், வெண்முரசை வாசித்து புண்பட்டவர்களில் அநேகம் பேர்  பக்தர்களும் இந்துத்துவர்களும்தான். வெண்முரசு கலந்துரையாடல்  சென்னையில் மாதாந்திர கூட்டமாக ஆறு வருடங்கள் நடந்தது. இன்றும் பாண்டிச்சேரியிலும் கோவையிலும் நிகழ்கிறது. வெண்முரசுக்கு ஒரு ஆவணப்படம் வெளியானது. ஒரு இசைத்தொகுப்பு வந்தது. இதெல்லாம் வாசகர்கள் தானாக எடுத்துச் செய்தவை. கடைசியில் வாசகர்களை புராஜெக்ட் மேனேஜர்களாக்கிய பெருமை கவிஞரையே சாரும். 


ஜெ. வெண்முரசின் வழியாகவே புதிய சொற்களை அவர் உருவாக்கியுள்ளார். அநேக வார்த்தைகளை தமிழ்ப் படுத்தியுள்ளார். கண்ணன் நாவல் முழுவதும் இளைய யாதவனாகத்தான் வருவான்.  சாபவிமோசனம் எஅன்று வராது. சொல்மீட்சி என்று எழுதியிருப்பார். கைவிடுபடை என்பதற்கு அஸ்திரம் என்று  அகராதியில் இருந்தது. தானியங்கி அஸ்திரங்களுக்கு அந்தப் பெயர் வைத்திருந்தார். அணிசமையர் என்று அழகுக்கலை நிபுணர்களின் பெயராக வரும். கொடித்தோன்றல் என்ற பெயரில் ரத்த உறவினர் குறிப்பிடப்படுவார்கள். ராஜதந்திரம் என்பது அரசுசூழ்தல் என வரும். இவையாவும் இயல்பாக வருபவை. நான் தமிழ்படுத்தியிருக்கிறேன் பார் என்று துருத்திக்கொண்டு வருபவை அல்ல. வயிற்றாட்டி என்பது பிரசவம் பார்க்கும் தாதிக்கான பெயர். இப்படி யோசித்துப் பார்த்தாலே நினைவுக்கு வரும்  வார்த்தைகள் உள்ளன. இவையெல்லாம் அதன்  வாசகர்களிடையே இன்றும்  ஜாலியாக சொல்லப்படுபவைதான். மேற்சொன்ன சினிமா காட்சிகள் போல உடனே பொதுப் புழக்கத்துக்கு வந்துவிடாது. பிற்காலத்தில் புழக்கத்தில் வரலாம். 


கம்பராமாயணத்தில் வெய்யோன் என்று வருகிறது. இன்று பொதுமக்களிடையே யாருக்கும் அதன் பொருள் தெரியாது.  ஆகையால் கம்பன் என்ன எழுதிவிட்டான் என்று கேட்போமா என்ன? 


ஜெ. வெண்முரசை எழுதிக் கடந்த பின் நூறு சிறுகதைகள் எழுதிவிட்டார். குமரித்துறைவி, கதாநாயகி, அந்தமுகில் இந்தமுகில் என மூன்று நாவல்கள் வந்துவிட்டன. ஆனால் இன்றும் வெண்முரசை முதற்கனலில் இருந்து துவங்கி வாசிப்பவர்கள் இருக்கிறார்கள். பலர் இளம் வாசகர்கள். அதில் ஏதேனும் ஐயம் கேட்டு இன்றும்  எனக்கு  தொலைபேசி அழைப்புகள் வருகின்றன.


வம்புகளை வரவேற்கலாம். வம்புகளை வாசிக்கும் நூறில் ஒருவர் தீவிர இலக்கியத்துக்குள் வருகிறார். ஆகவே நல்லதுதான்.


ஒரு பின்குறிப்பு:- 


தனிப்பட்ட முறையில், ஜெ. மீதான வம்புகளை காழ்ப்புகளை கண்டு அதிகம் காண்டாவதோ எதிர்வினையாற்றுவதோ கிடையாது.  ஆனால் இந்த  'அறைக்கலன் ' சார்ந்த எதிர்க் கருத்துக்கள் சற்று எல்லை மீறிவிட்டன என்று தோன்றியது. ஆனாலும் அந்த எதிர்க்கருத்துக்களில்  பிரபு தர்மராஜின் ஒரு பதிவு வெடிச்சிரிப்பை அளித்தது. இந்தப் பதிவை புன்னகையுடன் எழுத அதுவும் ஒரு காரணம் :-) 


அந்தப் பதிவின் லிங்க் முதல் comment ல் இல்லை..

Monday, September 12, 2022

விவாதங்களும் துருவப்படுதலும் காவிய வாசிப்பும்

J60 - சியாமந்தகம் தளத்தில் வெளியான கட்டுரை




விவாதங்களும் துருவப்படுதலும் காவிய வாசிப்பும்

2014-ம் ஆண்டில் இரு சம்பவங்கள் நிகழ்ந்தன. பல சம்பவங்கள் நிகழ்ந்தன என்றாலும் இங்கு குறிப்பட விழையும் இரு சம்பவங்கள் அந்த ஆண்டில் நிகழ்ந்தன. ஒன்று2014 ஜனவரி ஒன்றாம் தேதி எழுத்தாளர் ஜெயமோகன் ‘வெண்முரசு’ நாவல் எழுதத் துவங்கினார். அதுவரை மகாபாரதம் குறித்து சிறுகதைகள், நாடகங்கள் எழுதியிருந்தவர் பெருநாவலாக அதை எழுதத் துவங்கியிருந்தார். இரண்டாவது சம்பவம்அதே ஆண்டு மே மாதம் பாரதீய ஜனதா கட்சி பாராளுமன்றத் தேர்தலில் வென்று ஆட்சி அமைத்தது. அதன் பின்னர் விகடன் (தடம்) பேட்டி ஒன்றில் ஜெ.விடம்பி.ஜெ.பி. ஆட்சிக்கு வந்ததன் பிறகு மகாபாரதம் சார்ந்த சீரியல்கள், திரைப்படங்கள் என அந்தக் கதை பரவலாக்கம் செய்யப்படுகிறது. ‘வெண்முரசு’ அதோடு எவ்வகையி்ல் வேறுபட்டது என்கிற கேள்வி எழுப்பப்பட்டது. பா.ஜ.க. ஆட்சி அமைக்காதிருந்தபோதும் ‘வெண்முரசு’ அறிவிப்பு வந்த நாளில் எழுந்த விமர்சனங்களின் தொகுப்பாகக்கூட அந்தக் கேள்வியைப் புரிந்துகொள்ளலாம். அந்தளவிற்கு இலக்கிய உலகில் அரசியல் சார்ந்து எதிர்மறையாக மட்டுமே அணுகப்பட்டது அந்த முயற்சி. தமிழ் இலக்கிய சூழலில் எந்த ஒரு முயற்சியும் அரசியலாகவே புரிந்துகொள்ளப்படும் என உணர வைத்த தருணங்கள் அவை.

 

சமீபத்தில் நிகழ்ந்த சமூக வலைதள உரையாடலின் விவாதம் ஒன்று எனக்கு நண்பர்கள் குழுவில் திரைச்சொட்டாக வந்துசேர்ந்தது. மிக சுவாரசியமானது. அதில், இரு கட்சித் தலைவர்களின் ஆதரவாளர்களுக்கான உரையாடலில் ஒருவருக்கு மற்றவரை மடையர் என நிரூபிக்கவேண்டிய கட்டாயம் இருந்ததை அந்த விவாதங்கள் வழி உள்வாங்க முடிந்தது. அதனால் அதில் ஒருவர் மற்றவரை தாயைப் புணர்பவனே என்றும் அதற்கு மற்றவர் இவரை சகோதரியின் உறுப்பான வடிகட்டிய முட்டாளே என்றும் (இந்தியில் இலக்கணப் பிழையோடு) விளிக்கத் துவங்கியிருந்தனர். இதில் சவால் என்பது ஓரிடத்தில் முந்தையவர் இந்திய மரபை முழுதும் வாசித்திருக்கிறேன், வாசிக்காமல் பேசாதே என்று சொல்வதும், மற்றவர் அப்படியென்றால் தசரதனின் அறுபதினாயிரம் மனைவிகளில் இருபத்திநாலாயிரத்து ஐநூற்று முப்பத்தி எட்டாவது மனைவியின் பெயர் என்ன சொல் என்று கேட்டதும் ஆகும். அந்தக் கடைசி கேள்வியோடு அந்த விவாதம் முடிவுற்றது. ஒருவேளை அவர் அதற்கான பதிலை தேடிக் கொண்டுவந்து விவாதத்தைத் தொடர்ந்திருக்கலாம். தெரியவில்லை. ஆனால் இங்கே கவனிக்கத்தக்கது தற்காலத்தில் ஓர் அரசியல் விவாதம் எவ்வாறு தனிப்பட்ட தாக்குதலாகி, பின் அந்த நிலத்தின் தொன்மம், அதன் முன்னோர்கள், அதனுடைய இலக்கியம் மற்றும் காவிய மரபு வரை ஆதிக்கம் செலுத்தி, அதன் சார்பாக வளைக்கப் பார்க்கிறது என்பதைத்தான்.

 

மேற்சொன்ன பத்தியில் கவனிக்கத்தக்க உப தலைப்பாக இன்னொன்று இருக்கிறது. அது, இன்றுவரையிலும் ஏன் எதிர் ஆள் மீதான ஒரு வசைச்சொல் அவர் வீட்டுப் பெண்கள்மீது பாய்கிறது என்பது. எதிர் தரப்பினை அவமதிக்க அன்றும் இன்றும் துகிலுரியப்படுபவர்கள் பெண்கள்தான் அல்லவா.

 

அரசியலைத் தவிர்த்துப் பார்த்தால் அடுத்த இடத்தில் வருவது திரைப்படங்கள். இன்று ஒரு திரைப்படத்தின் கதாநாயகனின் அறிமுகப் பாடலை ஒருவர் கேட்பாரானால், அவர் பெரிய ஆச்சரியத்தை அடையக்கூடும். அதன் வர்ணனைப்படி அந்த நாயகன் மலையைத் தூக்கிச் சென்று உடைத்துப் பொடியாக்கி வீசுபவர். பிறகு அதைக் கடலுக்குள் வீசிவிடுபவர். ஏன் அவ்வாறு செய்ய வேண்டும் என்று தெரியவில்லை. அவர்கள் புராணங்களில் அனுமானும் இரண்யாட்சகனும் தனித்தனியாக செய்தவற்றை ஒற்றை ஆளாகச் செய்துகொண்டிருக்கிறார்கள். இதனோடு கூட அவர்களது பிற கல்யாண குணங்களும் விதந்தோதபடுகின்றன. பிற பெண்ணைக் கண்ணெடுத்தும் காணாதவர் என்பது ஒரு மதீப்பீடு என்றால் அனைத்துப் பெண்களையும் வலையில் விழவைத்தவர் என்பதும் ஒரு மதிப்பீடு. ஒருவர் இராமனுக்குப் பிரதியாகிறார்மற்றவர் கண்ணனுக்கு.

 

இன்று பொதுவெளியில் விவாதிக்கத் துவங்கும் யாருமே தன் விவாதத்தில் தான் அறிந்தோ அறியாமலோ நமது காவியங்கள் மீதான ஒற்றை மதிப்பிட்டிற்கு வந்துவிடுகிறார்கள். அந்த ஒற்றை மதிப்பீடு என்பது பெரும்பாலும் இரு காரணங்களால் நிகழ்கிறது. 1) முழுதாக அதை வாசிக்காமல் அதன் மிகைப்பகுதிகளை மட்டும் கதைகளாகக் கேட்டல்2) அதன் திரண்ட கருத்து இதுதான் என்னும் முன்அவதானிப்போடு அணுகுவது. ஒருபுறம்அதன்மீது தான் அறிந்தவற்றை ஏற்றுவது என்பதை மறுப்பாளர்கள் செய்கிறார்கள் என்றால் அதன்மீது அறியாதவற்றை ஏற்றுவது என்கிற பிழையை நம்பிக்கையாளர்கள் செய்துவிடுகிறார்கள்.

 

பொதுவில் காவிய வாசிப்பு என்பது குழப்பத்தைத் தருவது கிடையாது. ஆனந்தம் தருவது. அது அடிப்படையில் ஒரு கதை சொல்கிறது. அதன் மேல் உணர்வுதர்க்கம்விழுமியம்தரிசனம் எல்லாம் நிலைகொள்கின்றன. அவை அனைத்திற்கும் அடித்தளமான ஒன்றுஅது ஒரு கதைக்களம் என்பது மட்டுமே. அது கேட்பவரை வசீகரிக்கச் செய்யும் கதைசொல்லலாக இருக்கிறது. அந்த வசீகரம் என்பது அதில் மிகையாக வெளிப்படுகிறது. அது கல்லளவு மிகை அல்ல. மலையளவு மிகை. பீமனின் பலத்திற்கு உதாரணம் சொல்ல யானைகள் தேவையாகின்றன. பரசுராமனின் வருகை என்பது ஒரு நிலநடுக்கத்தின் அறிகுறிகளாகத்தான் இருக்கின்றன.

 

ஒரு அறிவிப்பு என்று பார்த்தால்கூட இன்றைய திருமணங்களிலும் தாய்மாமன் அளிக்கும் சீதனம் என்பது லட்சம் கட்டி வராகன் என்று சொல்லியே ஏற்கப்படுகிறது. இதுவே அப்படி இருக்கையில் புனைவுலகம் எப்படி இருக்கும்அங்கு யதார்த்தத்திற்கும் யதார்த்தக் கதைகளுக்குமே பாரதூர இடைவெளி இருக்கிறது. யதார்த்தக் கதைகளில்கூடஒருவர் சொன்னதை மற்றவர் புரிந்துகொண்டார் என்பதைச் சொல்லும்போதும், ‘அவன் தலையைக் கவிழ்ந்தபடியே பேச்சற்று சிலையாக நின்றான்’, ‘பேசிச் சென்ற திசையையே கண்ணில் நீர் வழிய பார்த்தபடியே சிலை போல நின்றிருந்தான்’ போன்ற சொல்லாடல்கள் வந்துவிடுகின்றன. யதார்த்தத்தில் அப்படி யாராவது நிற்கிறார்களா என்னயதார்த்தக் கதைகளே அவ்வாறு இருக்கையில் காவிய வர்ணனை இன்னும் உச்சத்தில் நிற்கிறது. கம்பராமாயணத்தில் நகரப்படலத்தில் அயோத்தி நகரின் உயர்ந்த மதில்களைக் குறித்த வர்ணனை வருகிறது. அதன் உயரம் என்பது இந்திரலோகத்தைத் தொடுவது. எனவே அந்த மதிலில் வாழும் புறா தன் இணையோடு ஊடல் கொண்டு செல்கையில் அருகில் இருக்கும் இந்திரலோகத்தின் கற்பக விருட்சத்தின் கிளைகளில் சென்று பதுங்கிவிடுகிறது.

 

இந்தக் காவிய மிகை வர்ணனை என்பதில் சமகால அரசியல் கலக்கும்போது அதன் வரிகள் தன் தேவைக்கேற்ப புரிந்துகொள்ளப்படுகிறது. தன்னுடைய அரசியல் சரிநிலை வசதிக்கேற்ப மட்டுமே புராணங்களைப் புரிந்துகொள்வேன் என்கிற பிடிவாதம் பெருகியதும் ஒரு காரணம். தசரதனுக்கு ஆயுட்காலம் இத்தனை ஆயிரம் ஆண்டுகள் மற்றும் அறுபதினாயிரம் மனைவியர் என்பதை ஒரு தரவாக எடுத்துக்கொள்பவர் கழுவேற்றப்பட்ட சமணர்கள் எண்ணாயிரம் அல்ல என வாதிடுவார். அதேபோலத்தான் மாற்றுத் தரப்பும்எண்ணாயிரம் சமணர்கள் கொல்லப்பட்டனர் என ஏற்றுக்கொள்பவர் ஆயுட்காலத்தையும் அறுபதினாயிரம் மனைவியரையும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். ராமன் பெரிய அறத்தான் என்று புராணம் சொல்வதை ஏற்பதில்லை. ஆனால் புராணம் வழியாக மணிமேகலை கையில் அட்சய பாத்திரம்தான் கிடைத்தது என்று நம்புபவர். ஒரு வாசகர் இயல்பாக ஏற்படக்கூடிய இந்த வகை புறச்சிக்கல்களைக் கடந்தே காவிய வாசிப்பிற்குள் வரவேண்டும். கடப்பது என்றால் நடுஇரவில் சுடுகாட்டைக் கடப்பவர் போல தனக்குள் வீரமாகப் பாடிக்கொண்டோ அல்லது கண்களை இறுக்க மூடிக்கொண்டோ அதைக் கடந்துவிட இயலுமாபெரும்பாலும் சமூக வலைதள விவாதங்களைக் காண்கையில் அவ்வாறு நிகழ்ந்திருக்கவே வாய்ப்பு அதிகம் எனத் தோன்றாமல் இல்லை. ஆனால் அதைவிட எளிதானது முழுமையான காவிய வாசிப்பு என்கிற ஒரு நேரடி அணுகுமுறை.



முன்பு பேசிய ஒற்றை மதிப்பீடுகளுக்கான இரு காரணங்களில் முதன்மையானது மிகைப்படுத்தல்கள். ஒரு காவியம் நவீன நாவலுக்குள் வரும்போது எதிர்கொள்ளும் சவாலில் இந்த மிகையலங்கார சொற்கள் முக்கியமான ஒன்று. கர்ணன் கொடையாளி என்று சொல்வதால் மற்றவர்கள் கருமி என்றோ தானம், தருமம் செய்யாதவர்களோ அல்ல. அர்ஜூனனும் திருதனும்கூட ஓர் உயிரைக்காக்க தன்னுயிரை துச்சமெனக் கருதி முன்னிற்பவர்கள்தான். ஆனாலும் அவர்களில் கர்ணன் உச்சமானவன். கொடையளிப்பவனும் கொடையேயானவனும் வேறு வேறு. நீதி நூல்கள் வழியாகக் கொடையளிப்பது தன்னுடைய அறம் எனக் கருதி தன் முன் நிற்பவர்க்குக்கு என்ன வேண்டும் எனக் கேட்டு அளிப்பவன் கொடையளிப்பவன். தன் முன் நிற்பவருக்குள் ஊடுருவி அவர் வேண்டுவது யாது என உய்த்துணர்ந்து, கேட்பதற்கு முன்பே அதை அளிப்பவன் கொடையேயானவன். இவர்களில் கர்ணன் கொடையேயானவன். அவனது கொடை உள்ளம் அவன் பயின்று வந்தது அல்ல. அவன் கருவிலேயே இருந்தது. இருட்கனி நாவலில் சூதர் பாடலாக வரும் கர்ணனின் கதையில்குந்தி தன் குழந்தையை ஆற்றில் விடலாமா வேண்டாமா எனத் தத்தளிப்பதையும், கைவிட்டு கர்ணனின் ஓடம் விலகிச் செல்கையில் உருவான அவள் மனநிலையையும் விளக்குகிறார். அதை மனதில் ஓட்டி மீண்டும் காண்கையில் ஒரே நேரத்தில் தன் தாயின் கலக்கத்தையும் இன்னொரு தாயின் ஏக்கத்தையும் தீர்க்க தானே அதை உதைத்து நதியோட்டத்தில் நழுவுகிறான் என்பதை அறிகிறாள். தனக்கு ஒரு வாய் முலைப்பால்கூட புகட்டாத அன்னைக்கு அவன் அளித்த கொடை அது என உணர்கிறாள். இவ்வாறு சூதர் கதைகள் வழியாக கர்ணனது புகழ் மேலெழுகிறது

 

ஒருவரது குணத்தைக் காட்ட எதற்காக மிகையை நாடுகிறோம். ஏன் யதார்த்தத்திலிருந்து மேலெழுகிறோம் என்று கவனிக்கலாம். சமதளத்திலிருந்து மலைமீது ஏறுபவர் அங்கிருந்து வானத்தையா நெருக்கமாகப் பார்க்கிறார்அங்கிருந்து அவர் தான் வாழும் நிலத்தையே மீண்டும் பார்க்கிறார். அந்நிலத்தின் உச்சமானது எதுவோ, பரந்தது எதுவோ, அது காணக்கிடைக்கிறது. அந்தக் கோணம் ஒரு விஸ்தாரமான பார்வையை அளிக்கிறது. காவியம் அத்தகைய மேலெழுதலை அளிக்கிறது.

 

காவியத்தின் மீதான ஒற்றை மதிப்பீடுகளுக்கான இன்னொரு காரணம் அதன் திரண்ட கருத்து இதுதான் என்னும் முன் அவதானிப்போடு அணுகுவது. இங்கு மகாபாரதம் மீதான அரசியல் சார்ந்த முன் அவதானிப்பு என்ன என்று பார்த்தால்அது கிருஷ்ணன் உரைத்த கீதை மீதான அரசியல் சார்ந்த தன் மனப்பதிவு. முழுமையான வாசிப்பிற்கு அப்பாற்பட்டதும் ஆதரவு x எதிர்ப்பு என்ற இருநிலைக்குள் பொருத்திக்கொள்வதாகவும் உள்ளது. அதனால் அது கிருஷ்ணன் மீதான மனப்பதிவாகவும் ஆகிறது. கிருஷ்ணன் மகாபாரதத்தில் வருவதால் மகாபாரதத்தின் மீதான ஈர்ப்புக்கும் விலக்கத்துமே காரணமாக ஆகிவிடுகிறது. ஒருசாரார் கிருஷ்ணனைப் பார்த்து குளத்தில் நீராடும் பெண்களின் ஆடைகளை ஒளித்து வைக்கும் காமன் என்றும் மற்றவர் ஒற்றை விரலால் மலையைத் தூக்கிப்பிடித்து மழையிலிருந்து ஊரைக் காப்பாற்றிய சிறுவன் என்றும் மனப்பதிவு கொள்கின்றனர். கிருஷ்ணன் பல கோணங்களில் வெளிப்பட்டு இறுதியாக ஒரு தத்துவ ஞானியாக மட்டுமே எஞ்சும் ஒருவனாக ‘வெண்முர’சில் வருகிறான். (நான் இந்த முந்தைய வரியைச் சொல்வதற்கு முன் ‘வெண்முர’சின் அத்தனைப் புத்தகங்களையும் ஒருமுறை வாசித்துவிட்டோம் என்கிற நம்பிக்கையை அடிப்படையாகக் கொள்ளவேண்டியிருக்கிறது.)

 



கிருஷ்னன் யார் என்பதைத் தொகுப்பது என்பது சுலபமானது அல்ல. அவனது நெறி என்பது ராமனது சத்ரிய நெறி அல்ல. கிருஷ்ணனுடையது அரசியல் மறுக்கப்பட்டவருக்கான அறம். ராமராஜ்ய அரசியல் பேசுபவர்கள்கூட எதிர்கொள்ளத் தயங்கும் ஒன்று கிருஷ்ண ராஜ்யம்.

 

குருக்ஷேத்திர யுத்தத்தில் ஆதரவு நாடுகள் தங்கள் பங்கு வீரர்களை அளிக்கின்றன. அந்த உரையாடலின்போது போரில் முதல் வரிசையில் நிற்பவர்கள் சாதாரண குடிமக்களே அன்றி வீரர்கள் அல்ல என்பதை யுதிஷ்டிரன் அறிகிறார். படைக்கலம் ஏந்தத் தெரியாத எளிய மனிதர்களை குருக்ஷேத்திரத்தில் போர்முகத்தில் நிறுத்துவதா என யுதிஷ்டிரன் குழம்பும் அந்தத் தருணம் ‘வெண்முரசு’ வரிசை நாவல்களில் ஒன்றான இமைக்கணத்தில் வருகிறது. நெறி நூல்களைப் பின்பற்றியே செல்லும் யுதிஷ்டிரன், அது பிழைத்தால், தானும் நெறிகளுக்கு அப்பாற்பட்டவனாக ஆகிறேன் என்று கருதி, அந்தத் தவறை நான் செய்யமாட்டேன் என்று அதற்கு மறுக்கிறான். இறுதியில் அவர்களைப் போருக்கு ஏற்க பராசர நீதியை ஆதாரமாக ஏற்கிறான். அதன் பொருட்டு நிகழும் சகாதேவனுடனான விவாதத்தில் மனஉளைச்சலும் அடைகிறான். அதன் பின்னர் அலைவுறும் அவன் மெய்த்தேடலுக்காக இளைய யாதவனான கிருஷ்ணனுடன் உரையாடுகிறான். கிருஷ்ணனுடனான உரையாடலுக்குப் பின்னர் அவன் கனவில் ஒரு காட்சியைக் காண்கிறான். அதில் பெருந்திரளான பசுக்களின் நடுவே ஒரு சிறு பாறைமேல் ஏறி நின்று குழலிசைக்கும் கரிய ஆயர் சிறுவனைக் காண்கிறான். அழகிய கருநிறம். மஞ்சள்நிற ஆடை. தலையில் விழிகொண்ட பீலி. அவ்விசை கேட்டு பசுக்கள் வந்துசேர்ந்துகொண்டிருந்தன. பசுக்களின் குரலோடு அப்பால் ஓநாய்களின் உறுமலைக் கேட்கிறான். ஆனால் ஆயர் சிறுவன் வேறேதோ காலவெளியில் இருந்தபடி குழல் வாசித்துக்கொண்டிருக்கிறான். “அனைத்துப் பசுக்களும் வந்துவிட்டனவா?” என்று அவனிடம் கேட்கிறான். ஒளி கொண்ட முகத்துடன் அந்தச் சிறுவன் திரும்பி, நீலமணி என மின்னிய விழிகளுடன், “இணைந்த நலனை நான் பேணுகிறேன்” என்கிறான். கனவில் கண்ட இளைய யாதவனின் இந்த பதில் மூலம் தனக்கான தெளிவை யுதிஷ்டிரன் அடைகிறான். அவனுடைய கேள்வி எளிய உயிர்களின் காரணமில்லா மரணம் என்றால்இளைய யாதவனின் பதில் அனைத்து உயிர்களுக்கான அறம் குறித்துச் செலுத்தும் ஒன்று. ஓநாய்களுக்காக ஒரு பசுவை அவன் விட்டுவிட்டானா அல்லது தன்னை நம்பிய உயிரினங்களுக்காக அவன் ஓநாய்களைப் பசியில் விட்டானாஅனைத்து உயிர்களுக்குமான வாழும் உரிமை என்கிற கருதுகோளுக்கு நாம் இன்று வந்துசேர்ந்திருக்கிறோம். சென்ற தலைமுறை வரை மிருகங்களை வேட்டையாடி, காடுகளை அழித்து, பாதைகளை உருவாக்கியதை வீரம் எனப் பாடிய நாம் நமது செளகரியங்களுக்காக காடுகளையும் பிற உயிர்களையும் அழிக்கலாகாது என்ற புரிதலை அடைந்துள்ளோம். ஆனால் இதைக் குறித்து ஒருவன் குருக்ஷேத்திர யுத்தம் நிகழ்ந்த காலத்தில் உரைத்திருக்கிறான் என்பது கவனிக்கத்தக்கது.

 

இன்று நம் காலத்தில் அனைத்து யுத்தங்களும் நேரடிப் போராக நிகழ்வது அல்ல. ஆனால் இன்றும் அதன் முதல் வரிசையில் நிற்கும் அப்பாவிகள் சாமானிய மக்களே. அவர்களும் தான் முதல் வரிசையில் நிற்பது அறியாமல் சமூக ஊடகங்களில் தன் நண்பர்களை, உறவினர்களை எதிர்த்து நிற்கின்றனர். குருக்ஷேத்திரத்தில் நின்று வாள் சுழற்றியவர்களுக்குதான் இங்கு ஏன் நிற்கிறோம் என்கிற புரிதல் இருந்திருக்கும். ஆனால் இன்றைக்கு சமூக ஊடகங்களில் களமாடுபவர்கள் தனக்கு அந்த புரிதல் இருக்கிறதா என சுயபரிசோதனை செய்துகொள்ளத்தான் வேண்டும்.


கேள்விகள் பெருகிய இன்றைய காலகட்டத்தில் அனைத்திற்குமான வாசல்களும் திறந்தபடியே இருக்கின்றன. அவை மாய அரங்கத்தின் கதவுகள் என்பதால் முட்டுச்சந்துக்குள் இட்டுச்செல்லும் வாசல்கள் அதிகம். துவங்கிய இடத்திற்கே மீண்டும் கொண்டுவந்து நிறுத்துபவையும் அதிகம். அதைக் கண்டறிவது கடினமானது. அதில் நம்பி நுழையத்தக்கவை காவிய வாசல்கள் மட்டுமே. தனது கேள்விக்கான பதிலை யுதிஷ்டிரன் பெற்றிருக்கலாம். இமைக்கணம் என்பது திரண்டு அனைவருக்கும் பொதுவான ஒன்றைச் சொல்வது அல்ல. அந்தந்த குழப்பத்தில் உள்ளவருக்கான நூல். அதில் இளைய யாதவனுடன் உரையாட வருபவரில் ஒருவராக யுதிஷ்டிரரும் வருகிறார். அவருக்கு உள்ளது தன் மீதான ஐயம். பின் தெளம்யர் வருகிறார். அவருக்கு உள்ளது ஒரு மரபின் மீதான ஐயம். இறுதியில் தர்மராஜாவான யமன் வருகிறான். அவனுடையது ஒட்டுமொத்த உலக இயங்கியலுக்கான ஐயம். கிருஷ்ணனின் அறம் என்கிற தராசு தட்டின் ஒரு முனையில் தன்னை நிறுத்தினால் அது தன்னறத்தைக் காட்டும். குலத்தை நிறுத்தினால் குலதர்மத்தைக் காட்டும். உலகத்தை நிறுத்தினால் உலகதர்மத்தைக் காட்டும்.

 

இன்றைய தலைமுறைக்கான உட்சபட்ச காவியப் படைப்பாக ‘வெண்முரசு’ வரிசை நூல்கள் உள்ளன. ‘வெண்முர’சை அணுகும்போது அதனூடாக நம்மையும் அறியாமல் வரலாற்று அறிவுசமூகக் கட்டமைப்புஅனைத்து தத்துவத் தளங்களின் அறிமுகம்அதுவரையிலான நீதி நூல்களின் தொகுப்பு என அனைத்தையும் அறிகிறோம். இலக்கியத்தில் அன்றைக்கான உட்சபட்ச நூலை வாசிப்பவர்கள் அதுவரையிலான அனைத்து சிந்தனை முறைகளையும் அதன்வழி தொகுத்துக்கொள்கிறார்கள். ஒரு முழுப்பார்வை கிடைக்கப்பெறாமல் தனக்கான தேடலை முன்னெடுத்துச் செல்வது கடினம். ‘வெண்முரசு’ எழுதப்பட்ட காலத்தில் அதன் உடனே பயணித்த அனுபவம் அளித்த உரையாடல்களும் தோழமைகளும் எனக்கு வாழ்நாள் பெறுமதியுடவை. அறிதலின் உவகை என்பது அளப்பரியது. அத்தகைய பேருவகைக்குள் இட்டுச்செல்லும் நாவல் ‘வெண்முரசு’. இன்றுமணிவிழா காணும் அந்நாவலின் ஆசிரியரைப் பணிந்து வணங்குவணங்குகிறேன்.