Saturday, January 25, 2020

பேய்ச்சி - ம.நவீன்

தமிழகத்திலிருந்துக் கிளம்பி மலேயா சென்ற புலம் பெயர் மக்களின் வாழ்க்கையை தலைமுறை வாரியாக  வருடக்கணக்குளோடு அளித்த நாவல்கள் ஏற்கனவே மலேயா வில் எழுதப்பட்டிருக்கின்றன. அதை எழுதியவர்களில் சீ.முத்துச்சாமி முக்கியமானவர். கிளம்பிச் சென்று அங்கே இறங்கிக் காட்டை முழுதாகப் பார்த்து பிரமித்த கணம் முதல், அங்கிருந்த துரைமார்கள், கங்காணி, உலகப்போரில் பங்கு பெறுவது, மலேய சுதந்திரப்போர் அத்ற்குப்பிறகான தமிழ்த் திரைப்படங்களின் தாக்கங்கள், திராவிட அரசியல், கம்யூனிசம், மண்ணின் மந்தர் போராட்டம் என அனைத்துடனும் பின்னித் தொடரும் தோட்ட வாழ்க்கையை அவர் இரு நாவல்களில் விவரித்து விட்டார். அவர் அளித்த அடித்தளத்திலிருந்து எழும்பி அடுத்த கட்டத்திற்குப் பாய்ந்திருக்கிறது நவீனின் பேய்ச்சி நாவல். மிதமான வேகத்தில் செல்லும் வண்டியை அடுத்த கியருக்கு மாற்றி வேகமெடுப்பதைப் போல தன் நடையிலும், கதை சொல்லும் விதத்திலும் அடுத்த வேகமெடுத்து முன்சென்றிருக்கிறார். முதல் அத்தியாயத்தில் திருநெல்வேலியில் கொப்பேரன் காத்தாயியிடமிருந்து துவங்குவதில் இருக்கும் கண்ணி இறுதி அத்தியாத்தில் குமரன் மாலதியோடு முடியும் வரைத் தொடர்கிறது. ஆனால் முதலிலும் கடைசியிலும் வரும் அவர்கள் அல்ல அதன் பாத்திரங்கள். கொப்பேரனுக்கு  அடுத்த தலைமுறையில் வரும் ராமசாமி, மணியம், சின்னி,  ஓலம்மா,  ஆகியோரின் கதையாக சென்று முடி நாவலின் பேய்ச்சி யார் என்பது வெளிப்படும் உச்சகட்டத் தருணத்துடன் நிறைவடைகிறது.



பேய்ச்சி தவிர, கையுடைந்த முனி, பூனியான் இறுதியில் ஜின் என மந்திரீகத் தளத்தில் செல்வது போலச் சென்றாலும், அனைத்து இலக்கிய கர்த்தாக்களைப் போலவே நவீனும் இந்த நாவலில் சொல்ல வருவது அந்த கால கட்டத்தையும் அன்றைய மக்களின் வாழ்க்கையையும் தான் என்று சொல்லலாம். ஆனால் வாசகனின் கவனத்தைப் பேய்ச்சியை நோக்கி திருப்பியதன் மூலம் அதை இன்னும் சுவாரசியமாக்கியிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். அத்தியாயங்களின் அருகில் இருக்கும் வருடக் கணக்கு போல அது மிக நேர்த்தியாகக் கையாளப் பட்டிருக்கிறது

ஓலம்மாவின் பண்ணை துவங்கி வளர்வது,  ராமசாமியின் தோட்டத்தில் இருக்கும் மரவகைகள், அவர் மருந்து அரைக்கும் விதம் போன்றவை முழுக்கவே தகவல்களாக ஆகிவிடும் ஆபாயம் உண்டு ஆனால் அவற்றை சம்பவங்களின் வழியாக சொல்லும் விதம் மூலமே அந்த அபாயம் நேராமல் பார்த்துக் கொள்கிறார். மேலும்  கிடைத்த இடைவெளிகளிலெல்லாம் சுவாரசியங்களும் அதிர்ச்சிகளையும் அளித்து வாசகனை நகரவிடாமல் செய்கிறார். கொப்பேரன் மீண்டும் மருத்துவத்தைத் துவக்கும் தருணத்தைச் சொல்லலாம்.  அதேபோல, அப்போய் ராமசாமிக்காக காத்திருக்கையில் உள்ளே மற்றொருவர் அவருடன் பேசிகொண்டிருக்கிறார். அந்த இடத்தில் அப்போய்க்குப் புரிய வாய்ப்பிலாத ஒரு உரையாடல் அங்கே நிகழ்கிறது. நாவலில், அந்த ஒரு உரையாடலுக்கு ஆசிரியர் அளித்திருக்கும் முக்கியத்துவத்தையும் குறிப்பிட்டுச் சொல்லலாம்

இதுபோன்ற நாவல்களில் பெரும் சவால் உண்டு என்று தோன்றுகிறது. தோட்ட வாழ்வும் இலக்கியமும் தமிழகத்திற்கு அந்நியம் என்றாலும் பல நாவல்கள் மூலம் தோட்ட வாழ்வு தமிழக வாசகர்களுக்கு அறிமுகமாகிவிட்டது. தமிழகம் அறியாத இன்னும் சில மலேய எழுத்தாளர்களால் இன்னும் பலமுறைகூட, மலேய இலக்கியத்தில் தோட்ட வாழ்வும் அவலங்களும் குடியும் பெண்பித்தும் சொல்லப்பட்டிருக்கும் என்றும் நம்பலாம். அத்தகைய தருணத்தில் மீண்டும் நுட்பமாக அதைச் சொல்வதில் வெற்றி பெறுவதிலேயே ஒரு புதிய நாவலாசிரியனின் திறன் வெளிப்படுகிறது.  அதை மிக இயல்பாகக் கடக்கிறார் நவீன்.  அதிர்ச்சியையோ அல்லது ஒரு தீர்க்கமான உரையாடலையோ எதிர்பார்க்கும் இடத்தில் நெகிழ்ச்சியும், ஆனால், வாசகன் எதிர்பார்க்காமல் ஒரு இடத்தில் திடீரென வரும் அதிர்ச்சியும் என மாறி மாறி வருவதன் மூலம் அதைச் சாதித்திருக்கிறார். மணியம் மற்றும் ஆசிரியரின் மரணம் ஒன்றுக்கு உதாரணம் என்றால் மற்றொன்றிற்கு ஆங்சாக்களின் முடிவைச் சொல்லலாம். அவையிரண்டுமே ஒவ்வொரு வகையில் திகைப்பில் ஆழ்த்திவிடுகின்றன. பல இடங்களில்  நவீனின்  சின்னஞ்சிறு வர்ணனைகளும் சுருங்கக் கூறுதலுமே கூட அதற்கு பலம் சேர்த்து விடுகின்றன. ஓலம்மா தன் மகனை மணமாகவும் ஒலியாகவும் மட்டுமே நினைவு கூர்ந்தாள் என்பதும் மற்றொரு இடத்தில் எதுவானாலும் ஓலம்மா அதைச் சுயமாக தயாரிக்கவே கற்றுத் தந்தாள் என்பதும் சொல்ல வருவதை வெகு சுருக்கமாக வாசகனுக்குள் கடத்தி விடுகின்றன.  இந்த நாவல் ஆங்காங்கு இருந்த தோட்டங்கள் அழிந்து செம்பனை உருவாகும் காலத்தையும் சொல்கிறது. அதுவரை தோட்டத்தில் இருந்த தமிழர்கள் நகரங்களுக்கு குடிபெயர்கிறார்கள். அதற்கேற்றார்போல ஒருபுறம் மெல்ல மெல்ல கையுடைந்து ஒட்டுப்போட்ட முனியாகவே அவர் நிற்பதும்  பேச்சிக்கு கவனிப்பாரற்று போவதும் மறுபுறம்  முருகன் உயர்ந்து எழுவதையும் நாவலிலேயே காணமுடிகிறது.



அதிக அளவில் வட தமிழக மக்களும் காரைக்குடி மற்றும் தஞ்சை பகுதி மக்களும் மலேசியாவிற்கு நாகை மற்றும் சென்னை வழியாக சென்றார்கள் என்றுதான் அறியமுடிகிறது. அந்தப் பகுதிகளில் பேச்சியோ காத்தாயியோ பேயாக கருதப்படுவதில்லை. அங்கு பேச்சி, பேச்சுக்கு அதிபதியான சரஸ்வதியின் வடிவமாக கருதப்படுகிறாள். அதேபோல காத்தாயியும் காக்கின்ற அம்மனாகவே கருதப்படுவாள். சில இடங்களில் வேத அறிஞர் கார்த்தாயாயினி என்றும். இன்றுமே கூட கோயில்களில், காத்தாயி குழந்தையம்மனாக தன் கரங்களில் ஒரு குழந்தையை ஏந்தி நிற்பதும் உடல்நலம் சரியில்லாத குழந்தைகளுக்கு அவளிடம் மந்திரித்த வேப்பிலைகளை வாங்கி செல்வதும் சென்னையில் கூட காணக்கிடைக்கிறது. ஆனால், இந்நாவல் துவக்கத்திலிருந்தே அவர்களை குழந்தை பலி கேட்பவர்களாகச் சொல்கிறது. நாவலில் காத்தாயி என்பது வெறும் பெயராக மட்டுமே இருக்கிறது என்பதும் அவள் பேச்சிதான் என்றும் முதல் அத்தியாத்திலேயே வந்தும் விடுகிறது. மேலும் பலிகேட்கும் அந்த பேய்ச்சிகள் நெல்லை சுற்றுவட்டார மாவட்டங்களில் நிறைந்திருக்கிறாள் என்பதை திருச்சி தண்டாத நான் ஜெயமோகன் எழுத்து வழியாக  அறிந்திருக்கிறேன். ஆசிரியர் இந்த நாவலில்   அதை ஒரு நேர்த்தியாக இழுத்துக் கொண்டு வந்து கட்டிவிட்டார். கொப்பேரன் நெல்லையில் பிறந்து காரைக்குடி வந்து அங்கிருந்து மலேயா வந்தவராகி இருக்கிறார் என்பதால் அந்தப் பேய்ச்சிக்கு பொருந்தி வருகிறது. ஆனால் இறுதியில், பேய்ச்சி உருவத்தில் இருப்பது யாரென்று தெரிய வரும்போது, அவர்  இந்நாவலில் உருவகப்படுத்தியிருக்கும் பேய்ச்சி வேறொருத்தியாக எழும்பி நிற்கிறாள். அத்தனை மனிதர்களைப் பலிவாங்கிய அந்தப் பேய் என்னவென்று அறிகையில் ஒரு சிலிர்ப்பு எழுகிறது. அது, இந்த நாவலையும் நாவலாசிரியரையும் இன்னொரு உயரத்திற்குக் உயர்த்திச் சென்று நிறுத்திவிடுகிறது

No comments: