Monday, November 8, 2021

வருங்காலத்திற்கான எழுத்து - எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி குறித்த உரையாடலின் எழுத்து வடிவம்

facebook  ல் உள்ள "வாசிப்போம் தமிழ் இலக்கியம் வளர்ப்போம்"  குழுவில் எழுத்தாளர்: இந்திரா பார்த்தசாரதி குறித்து பேசினேன். அந்த உரையின் கட்டுரை வடிவம் இது 

உரையின் youtube link :- https://www.youtube.com/watch?v=PnU__6FWmm8&t=2151s

நன்றி:- Shruti TV Literature


வாசிப்போம் தமிழ் இலக்கியம் வளர்ப்போம் குழுவின் வழியாக பல புத்தகங்களை அறிமுகம் செய்து கொள்கிறேன்.  அதன் அடுத்தகட்டமாக நிகழும் அந்த மாதாந்திர கூடுகை மிகவும் உபயோகமான ஒன்றாக உள்ளது. மந்திரமூர்த்தி சார் உள்ளிட்ட, 'வாசிப்போம் தமிழ் இலக்கியம் வளர்ப்போம்' குழுவின் நிர்வாகிகளுககு அவர்களின் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களில் ஒருவராக என் நன்றிகள்.. வணக்கங்கள்!!!


வருங்காலத்திற்கான எழுத்து - எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி குறித்த உரையாடலின் எழுத்து வடிவம்

எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி  குறித்து இதில் பேசுவது மகிழ்ச்சியானது. நான் வாசிப்பின் துவக்கத்தில் இருந்த போது அவரை  சிறிது வாசித்திருந்தேன். ஆனால் அவரை  தீவிரமாக நான் வாசிக்க ஆரம்பிக்கும்போது அவர் மிகவும் வியப்பளிக்கக் கூடிய ஒருவராக இருக்கிறார்.




இங்கு நாம் கவனிக்கும் ஒவ்வொரு நிகழ்வும் தனக்குப் பின்னால் பல பின்னல்களைக் கொண்டிருக்கின்றன. சித்தாந்த ரீதியில் / உணர்வு ரீதியில் /  இதுதான்  யதார்த்தம் அளவில் / இதுதான் அறம் என்று பல பின்னல்கள். ஒவ்வொரு சம்பவம் நடந்த பின்னாலும் இது ஏன் இப்படி நடக்குது என ஆராய்ந்தால் அதுக்கு பின் இதுதான் என கைநீட்டி சொல்ல முடியாத பல விஷயங்கள் இருக்கின்றன. ஒரு வலை போல அவை பிண்ணிப் பிணைந்து இருக்கின்றன.  இவ்வாறு அறிவும் உள்ளுணர்வும் கலந்து ஒன்றை அர்த்தப்படுத்திக்கொள்ள பார்க்கிறோம்.. ஆனால் அப்போது ஒன்று புரிகிறது.. அங்கு அதற்கும் மேலாக தனது தர்க்கத்துக்கு அப்பாற்பட்டு  ஒன்றும் நிகழ்ந்திருக்கிறது என்று.. அது தற்செயலா அல்லது விதிப்படியா என்று எல்லாம் போகவேண்டாம். மனிதர்களின் கையை மீறிய ஒன்று நிகழ்கிறது. நாம் அதை கவனிக்கிறோம்.. மீண்டும் இதை மனதில் வைத்தும் அடுத்த திட்டமிடலை நிகழ்த்துகிறோம். ஆனால் கண்டுக்கு புலப்படாத ஒன்று மீண்டும் வருகிறது.  எப்பொழும் ஒன்று இவ்வாறு நிகழ்ந்து கொண்டும்தான் இருக்கிறது.

சிலநடைமுறை உதாரணங்களையே பார்ப்போம். கோயிலுக்கு பக்கத்தில் வீடு வேணும்னு புறநகர் சொந்தவீட்டை விட்டுவட்டு   நகர் மத்திக்கு ஒரு வாடகை வீட்டை மாற்றிச் சென்ற ஒரு மாதத்தில்  அங்கிருந்த அண்டை வீட்டார் வழி கொரோனா வந்து பலியான ஒரு குடும்பத் தலைவர் உண்டு. தலைப்பிரசவம் தாய் வீட்லதான் நடக்கனும்  என்று வலுக்கட்டாயமாக ஊருக்கு  அழைத்து செல்லப்பட்டு அடுத்த இரு நாட்களிலேயே அவர்ரகள் இருந்த வீடு  சென்னை வெள்ளத்தில் மூழ்க கடவுள் காப்பாற்றினார் என்று சொன்னவர்கள்  உண்டு.  இது ஒரு தனிப்பட்ட நிகழ்வுகள். இவை தவிர பொதுவான நிகழ்வுகளுமுள்ளன. ஒரு போர் அல்லது கலவரம், இனப்படுகொலை  அல்லது ஒரு குறிப்பிட்ட மக்களுக்கு  அநீதி இழைக்கப்படும் போதும்  அவ்வாறே நிகழ்கிறது.   இந்திராகாந்தி கொலையை அடுத்த வன்முறை கோத்ரா சம்பவத்தை அடுத்த வன்முறை ராஜீவ்காந்தி கொலையானது என பல உதாரணங்கள் நமக்கு உண்டு.. அது மேற்சொன்ன பின் புலங்களில் பல  விதங்களில் விவாதிக்கப் படுகிறது.

இங்கே ஒரு அறிஞர் அல்லது மேதை  என்பவர் அவற்றை தனித்தனியாக அணுகுகிறார். இந்த குழப்பங்களினூடாக எது ஒருவரை அப்படி செலுத்துகிறது என்று ஆராய்கிறார். அது  அவற்றில் சம்பந்தமே இல்லாத ஒரு தனிமனிதனுக்கு எப்படி பாதிப்புகளை அளிக்கிறது என   சொந்த விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டு அவற்றை விவாதிக்கிறார். உட்சபட்ச நேர்மையும் உளச்சான்றும் கொண்டு அலசுகிறார். பபுத்தகங்களிலோ  நிகழ்கால சம்பவமானாலும் அதன்மீதான தன் பார்வையை தர்க்கமும் உணர்வும் கலந்து வைக்கிறார். தமிழ் இலக்கியத்தின் அத்தகைய மாஸ்டர்களில் ஒருவரான இந்திரா பார்த்தசாரதி அவர்கள் குறித்து சிறுகுறிப்பு வரைக என்று என்னை யாராவது கேட்டால் மேற்சொன்னவாறுதான் துவங்குவேன்.. நான் அறிந்த வரையில் அவர் 15 நாவல்கள், 15 நாடகங்கள் மற்றும் 86 சிறுகதைகள் எழுதியுள்ளார். நான் அறிந்த வரையில் என்று என் சொல்கிறேன் என்றால் சென்ற புத்தக கண்காட்சியில் அவர் எழுதியிருந்த ஒரு புதிய நாவல் எனது கைகளுக்கு கிடைத்தது. இணையத்திலோ அல்லது ஆசிரியரின் பிற புத்தகங்கள் என அவரது புத்தக அட்டை குறிப்புகளிலோ அது இல்லை. ஆகவே என் லேட்டஸ்ட்  பட்டியலைத்  தாண்டிய ஒன்றும் எங்காவது இருக்கும் என்றே நம்புகிறேன் 

இந்த உரையின் வழி நான் அவரை தொகுத்துக் கொள்ளவும், புதிய வாசகர்கள் அவரை அணுகவும் அவரை  ஏற்கனவே முழுதாக வாசித்திருப்பவர்கள் மற்றும்  பிற எழுதித்தாளர்கள்  கலந்துரையாடவும் ஏற்ற ஒன்றாகவே இந்த குறிகிய நேரத்தில் கொண்டு செல்ல விரும்புகிறேன் 

இந்திரா பார்த்தசாரதியின் அணுகுமுறை என்பது பெரும்பான்மையாக தர்க்கமும், சைக்காலஜியும் அதற்கு பின்புலத்தில்  தத்துவமும் கலந்த ஒன்றாக உள்ளது. கூடவே எவ்வளவு தீவிரமான விஷயத்தை பேசினாலும் அதில் இழையோடும் மெலிய நகைப்பும் உண்டு. இந்த நகைப்பு என்பது தான் குறிப்பிடத்தக்கது என்று நினைக்கிறேன். நீ எவ்ளோ சீரியாசமாக பேசினாலும் சம்பந்தமில்லாத எதோ ஒன்று எங்கிருந்தோ வந்து எல்லாவற்றையும் மாத்திப்போடும்னு தெரிந்த ஒருவனால் அதையும் கருணையும் நகைப்பும் கலந்துதான் சொல்ல முடியும் என்று நினைக்கிறேன். அவரிடம் வெளிப்படுவது அந்த நகைச்சுவைதான் தவிர அபத்த நகைச்சுவை அல்லது வாசகருக்கு கிச்சு கிச்சு மூட்ட வேண்டிய என்னமோ இல்லை. மேலும் வாசகருக்கு ஒரு ட்விஸ்ட் காண்பித்து வியக்க வைக்க வேண்டும் என்கிற எண்ணம் ஏதும் இல்லை. இ.பாவிடம் கவனிப்பது அனைவரும் நம்பும் ஆதாரங்களுக்குள்  ஒரு மந்தமான  புள்ளியையையும் இணைப்பதுதான்.

உதாரணமாக, கீழ்வெண்மணி சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட குருதிப்புனல் நாவலில் நாவல் முழுவதும் பண்ணையார் ஒருகொடுங்கோலனாக வருகிறார். தவறு மொத்தமும் அவர் மீதுதான் உள்ளது இந்த இடத்தில் அவர் பொதுமனநிலையிலிருந்து நாவலில் எங்கும் மாறுபடவில்லை. அந்த விவசாயிகள் எரிப்பு சம்பவத்திற்கு முன்பாக அந்த பண்ணையாரை ஆண்மையற்றவன் என்று சொல்லும் இடம் வருகிறது. நான் வாசிப்பின் துவக்கத்தில் இருந்தபோது அந்நாவலை வாசித்திருக்கிறேன்.  அறிமுகத்தில் சொன்னது போல நான் தஞ்சை மாவட்டத்துக்காரன். கல்லூரி படிப்பு நாகப்பட்டினத்தில் நிகழ்ந்த்து. எனக்கு கீழ்வெண்மனி சோகத்தின் மீது தனிப்பட்ட ஆதங்கமும் உண்டு. அந்த சூழலில் குருதிப்புனல் நாவல் எனக்கு ஒரு ஒவ்வாமையை கூட அளித்தது என்று சொல்லலாம். வெளிவந்த காலத்திலும் அது விவாதங்களை கிளப்பியிடுக்கிறது. ஆனால் இஅப்போது வாசக்கையில் அந்த நாவலில் அவர் அந்த triggering  point ஐயும் ஏன் புனைவுக்குள் கொண்டுவருகிறார் என்று பார்க்கிறேன். அது அவருடைய பார்வைக்கு ஒரு உதாரணம். அந்த வசவு அவனைத்தூண்டியதாக சொல்லும்போது அது அந்த போராட்டத்தின் மாண்பை குறைக்கிறது என்று கருதவும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அந்த வசவு  இல்லையென்றால் அந்த எரிப்பு  நிகழ்ந்தே இருக்காது  என்றும் அவர் சொல்லவில்லை. அப்படி இருக்கையில் அதை  அவர் கதையல் வைப்பது  வெறுமனே வாசகரை யோசிக்க வைக்கத்தான் என்று கருதுகிறேன்.. 

உணர்ச்சிப் பூர்வமான வர்ணனைகளை கவனமாக தவிர்த்து எழுதுகிறாரோ என்றுமே தோன்றும்.

இங்கிருந்து அவரது எழுத்து பின்புலத்தற்கு செல்வோம்.

முற்போக்கு எழுத்துக்கள்  என்ற வகைப்பாடு தமிழ் இலக்கியத்தில்  இருக்கிறது.  அது முற்போக்கு அரசியல் ரீதியான எழுத்துக்களாக உள்ளன. அதில் பங்காற்றுபவர்கள் முற்போக்கு எழுத்தாளர்கள் என்கிற அடையாளம் உண்டு. அப்படியானால் தன்னை அவ்வாறு அறிவிக்காதவர்கள் முற்போக்கானவர்கள்  அல்ல என்று பொருள் அல்ல. ஒருவர் எழுதுகிறார் என்றாலே அவர் மீறுகிறார் என்பதுதான் பொருள். ஏற்கனவே இருப்பதை உரைப்பவர்கள் உரையாசிரியர்கள் தான் அல்லவா. எப்போது ஒருவர் எழுத வருகிறார் அப்போதே அவர் முன்னோக்கி பார்க்கத்தான் செய்கிறார். அந்த விதத்தில் நவீன இலக்கிய எழுத்தாளர்களில்  பிற்போக்காக எழுதும் ஒருவர் யாரும் என் கண்ணில் படவில்லை என்பதை இப்போது சொல்லிவிடுகிறேன். 

இதில் இ.பாவின் எழுத்து முற்போக்கு தத்துவங்களை அடிப்படையாக கொண்டது என்று சொல்லலாம். மார்க்ஸியத்தையும் இந்திய தத்துவங்களையும் அகடமிகலாகவே பயின்றிருக்கிறார்.  இலக்கியத்தில் அதை அவர் எங்கெங்கெல்லாம் வைக்கிறார் என்பதை காண்பது அவசியமானது. அது சுவாரசியமானதும் கூட. உதாரணமாக அவருடைய ராமானுஜர் நாடகம் முதலாழ்வார்கள் சந்திப்பில் துவங்குகிறது. அந்தக் கதை பரவலாக அறியப்பட்ட ஒன்றுதான். உபன்யாசங்களில் பக்திக் கதையாக உரைக்கப்படுகறது.  பலத்த மழையில் ஒரு குடிசையில் பொய்கையாழ்வார் கால் நீட்டி உறங்கிக் கொண்டிருக்க அங்கு பூதத்தாழ்வார் வருகிறார். ஆகவே இருவரும் அமர்கிறார்கள். பின் அங்கு பேயாழ்வார் வருகிறார். அப்போது அவர்கள் இருவரும் எழுந்து கொண்டு இனி மூவர் நிற்கலாம் என்கிறார்கள். அப்போது அங்கு கடவுள் வர திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் என்று பாசுரம் பாட ஆரம்பிக்கிறார்கள். இது பக்தி மரபு. அதுவே இப்படி யோசித்து பாருங்கள்….  இங்கே இருப்பதை பொதுவாக பங்கு கொண்டால் அங்கு இறைவன் உறையும் வீடு  என்பது பொதுடைமை சித்தாந்தம். இந்த அடிப்படை தான் அவருடைய புரிதல். ஒரு connectivityஐ establish செய்கிறார். 

இந்த மார்க்சிய அணுகுமுறையை அவர் வைப்பதால் அவர் படைப்புகளை வாசிக்கையில் பெரியதிறப்புகள் உண்டாகின்றன. ராமானுஜர் காலத்தில் வரும் சோழ மன்னன் சைவ வெறியால் வைணவரான ராமானுஜரை ஒழித்தான் என்று வருகையில், தன நாடகத்தில் அவர் அது வேறு விதமாக அணுகுகிறார். உண்மையில் ராமானுஜரை சைவர்கள் மட்டும்தான் எதிர்த்தார்கள் என்பதே தவறு.. அவரது சமகால வைணவர்களும் அவரை எதிர்த்தார்கள் என்பதை எடுத்துரைக்கிறார். சப்த விஷ்ணு வர்த்தனன் என்கிற பட்டப்பெயர் கொண்டு விளங்கிய அந்த சோழ மன்னன் முதலாம் குலோத்துங்கன், வைணவரை பகைக்கவில்லை என்பதும் அவன் வைணவர்களை ஆதரிக்க வேண்டியே ராமானுஜரை தண்டிக்க முடிவே செய்தான் என்பதும் அவர் சுட்டும் இடம். காரணம் அவர் ஒரு்புரட்சியாளர். அரசுக்கு எதிரானவர். இன்றைக்கும் அப்படித்தானே.. விளையாட்டாக சொல்லனும்னா வைணவர்களுக்கு பெரும் எதிர்ப்பு சைவர்களிடமிருந்து வராது. அடுத்த கலை வைணவரிடமிருந்துதான் முதலில் வரும்.. இந்த யதார்த்த புரிதல் கொண்டவருக்கு ராமானுஜர் யாரால் கடுமையாக எதிர்க்கப் பட்டிருப்பார் என அறிவது கடினம் ஒன்றும் அல்ல

இ.பாவின் படைப்புகளில் ஒவ்வொரு பாத்திரங்களும் ஒவ்வொரு தரப்பின் சொற்களாக வருகிறார்கள். அதாவது அவருடைய குணாதிசயங்களை வைத்து ஒரு உரையாடலாக நிகழ்கிறது. துவக்கத்தில் ஒன்றாக துவங்கி பின் உரையாடல் அனுபவங்கள் வழியாக மாறி பின் நாவல் இறுதியில் வேறொன்றாக மாறுகிறார்கள். அவர்கள் தான் ஏன் அவ்வாறு இருக்கிறேன் என்று உணரவும் அதையும் விவாதிக்கவும் செய்கிறார்கள். ஆகவேதான் அவரை அறிவுத்தரப்பாகவே பெரும்பாலும் அணுக முடிகிறது. Intellectual approach அதிகம் இருக்கிறது. அந்த வகையில் அவர் நாவலில் செய்வது என்னவென்றால் ஒரு கருத்து பரிமாற்றம்தான் என்று சொல்லலாம். ஆகவே அது அன்றாட சிக்கல்களுக்குள் இருப்பதும் இல்லை. அன்றாட சிக்கல்களுக்குள் ஆட்படும் ஒருவருக்கு இ.பா. அந்நியமாகவே ஆகிவிடுகிறார். அதற்காக இந்த நாடு எங்கே போகிறது என்று கவலைப்படவும் தேவையில்லை. சும்மா ஒருநாள் மொட்டைமாடியில் உட்கார்ந்து traffic ஐ பார்த்து இத்தனை பேர் எங்கே போகிறார்கள் என்று யோசிப்போம் அல்லவா.. அந்த மாதிரி உட்கார்ந்து யோசிப்பவராக இருந்தாலும் போதும்.. அன்றாட சிக்கல் அல்லாத ஆனால் அந்த மனோத்ததுவ குழப்பங்களும் மற்றும் சித்தாந்த குழப்பங்களும் கலந்தவர்களாகத்தான்  கதாபாத்தரங்களை அவர் உருவாக்குகிறார்.  ஏன் குறிப்பிட்டு சொல்கிறேன் என்றால் அன்றாட சிக்கல் இல்லாதவர்களின் கதை என்றால் பொருளாதார ரீதியாக அப்பர் மிடில்கிளாஃ் வாழ்க்கை என்று எடுத்துக் கொள்ளக்கூடாது என்பதற்குத்தான்.   ரெண்டு பாத்திரங்கள் பேசுகின்றன என்றால் அவை வேறு சிந்தனை வயப்பட்டவர்களாக இருப்பார்கள்.. தன்முனைப்பு கொண்டவர்களாகவும் இருப்பார்கள். அவர் பழம் விற்கும் பாட்டியாக இருந்தாலும் சரி. ஹலோ சொன்ன பிறகு உடனே ஒரு அறிவார்ந்த உரையாடலுக்குள் இறங்கிவிடுவார்கள். அவர்கள் உரையாடவில்லை என்றால் கதைசொல்லி தானாக ஒரு போஸ்டரையோ எதையோ வைத்து இழுத்தும் விடுவார். நவீன சமூகம் சார்ந்து என்றல்லை வரலாற்றை எழுதுகையில் கூட அப்படித்தான்

இப்பொழுது நாம் ஒளரங்கசீப் நாடகத்திற்கு வருவோம். அதை வாசித்து முடித்தபின் தோன்றியது யாதெனின், ஒருவேளே ஒளீரங்கசீப்பிற்கு பதிலாக அவரது அண்ணன் தாரா ஆட்சியமைத்திருந்தால் இன்றைக்கு இந்தியா எப்படி ஆகியிருக்கும் என்பதே. ஆங்கிலேயர்கள் கால்பதிக்கும் காலத்திற்கு சற்று முன்பு நிகழ்ந்த ஒளரங்கசீப்  ஆட்ச்சிதான்  இன்று நாம் எதிர்கொள்ளும் மதப்பிரச்சனை சுதந்திர இந்தியாவின் பிரிவினை என பல விஷயங்களுக்கு அடிப்படையாக அமைந்தது என்றே தோன்றுகிறது.  இன்று உருவாகியுள்ள்ள இந்துத்துவ வீர வழிபாட்டில் சத்ரபதி சிவாஜிக்கு தனித்த இதன் உண்டு. ஆனால் ஒளரங்கசீப்பிற்கு பதிலாக தாரா ஆண்டிருந்தால் சத்ரபதி சிவாஜிக்கான தேவையே கூட இல்லாமல் போயிருக்கலாம். இன்று உலகின் சிறந்த கிரிக்கெட் அணி உருவாகியிருக்கும். ஆனால் யோசித்து பார்த்தால் அன்றையகாலத்தில் ஒளரங்கசீப்பின் அரசும் பெரும்பாலான மக்களால் ஏற்றுக்கொல்லப் பட்டிருக்கிறது. ராஜபுத்திரர்கள் அவருக்கு விசுவாசமாக இருக்கிறார்கள். இந்து முஸ்லீம் ஒற்றுமையாக இருக்க விரும்பிய தாராவை வீட ஒளரங்கசீப்பை ஏன் மக்கள் விரும்புகிறார்கள் என்பது கூட கவனிக்க வேண்டிய ஒன்று. ஆனால் இன்று ஒளரங்ககசீப்பின் மீதான புரிதல் வேறு ஒன்றாகத்தான் உள்ளது. இந்த வேறுபாட்டை ஆராய்கிறார். ஒற்றை மதப்பிரசரம் கொண்டு ஒளரங்கசீப் சாதித்தது அதன் எதிர்தரப்பின் வளர்ச்சியை தான் என்கிறார். இறுதிக் காலத்தில் அதை அவருமே உணருவதாக நாடகம் நிறைவடைகிறது.




இவ்வாறுதான் அதற்கும் முந்தைய ராமானுஜர் காலத்தையும் அதற்கும் முந்தைய மகாபாரத காலத்தையும் எழுதியுள்ளார். அந்த விதத்தில் அவருடைய கிருஷ்ணா கிருஷ்ணா நாவலை மஹாபாரதம் மீதான அவருடைய  மார்க்சிய  critic  என்றே கருதலாம். கம்சன் ராதை குறித்து அவர் சொல்வது தத்துவ அணுகுமுறை என்றால்  சத்ரிய அரசு குறித்து அவர் சொல்வது எல்லாமே அரசியல் அணுகுமுறை. பக்திக்கு அப்பாற்பட்டு நிற்கும் நாவல் என்றும் சொல்ல முடியாது. அவருடைய கிருஷ்ணா கிருஷ்ணா நாவல் பக்தியையும் தத்துவார்த்தமாக வரையறுக்கிறது.

நான் இதுவரையில் சொன்ன இந்தப் பின்னணி அவரை அணுகுவதற்கு உதவியாக இருக்கும் என்றே கருதுகிறேன். அவருடைய நாவல்களில் தந்திரபூமி, குருதிப்புனல், கிருஷ்ணா கிருஷ்னா மேலும் சில சிறுகதைகள் ஒளீரங்கசீப் மற்றும் ராமானுஜர் ஆகிய நாடகங்களை இந்த உரையாடலுக்கான மறுவாசிப்பு செய்தேன்.  புத்தக கண்காட்சியில் எதிர்பாராத விதமாக வாங்கிய ஏசுவின் தோழர்கள் என்னும் நாவலை முதல்முறையாக இவ்வருடம்தான் வாசித்தேன். எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் அந்த நாவலை எடுத்து வைத்திருந்தார். அவர்தான் இதை வாங்கி வாசிக்கவும் சொன்னார். எனக்கு இப்படி ஒரு நாவல் அவர் எழுதியிருப்பதும் அன்றுதான் தெரியவந்த்து.  முன்பே கூறியது போல இந்நாவல் அவரது படைப்பு பட்டியலில் இல்லை. ஆனால் இன்றைய  உரையாடலுக்கு தேர்ந்தெடுத்ததற்கு காரணம், இந்நாவல் அவரது வழக்கமான அணுகுமுறையிலிருந்து மாறுபட்டதாக தோன்றியதுதான். ஏசு என்னும் ஆன்மீகமும் தோழர்கள் எனும் கம்யூனிசமும் கலந்த ஒன்றுதான் என்றாலும் அது  ஒரு odd man out என்பார்கள் அல்லவா அப்படியான நாவல்தான்..

நான் இதை சொல்லும்போது ஒரு பகடி இருக்கிறது இந்நாவல் எழுதப்பட்டது 1985ல், அதற்குப் பிறகு அவர் எழுதியதை முதலில் வாசித்திருக்கிறேன். ஆனால் இந்நாவலை இப்பொழுதான் வாசிக்கிறேன். ஆகவே முன்பு சொன்னதை மாற்றி சொல்லலாம்..  அவரது பிந்தைய படைப்புகளை விட இதில் உணர்ச்சி கூடுதலாக இருக்கிறது என்று வேண்டுமானால் சொல்லலாம். பொதுவாக  அவர் படைப்புகளில் intellectual discussion இருக்கும்.. உணர்ச்சிகரமான பகுதிகள் அதைவிட குறைவாக இருக்கும்.  இந்நாவலில் கூட அத்தகைய சித்தாந்த வரலாற்று ரீதியிலான அலசல்கள்தான் மையம் என்றாலும் அதன் உணர்ச்சிப்பூர்வமான பகுதிகள் ஆங்காங்கு இருக்கின்றன. 

ஒரு படைப்பு எப்பொழுது செவ்வியல் அந்தஸ்து பெறுகிறது என்றால், அது எழுதப்பட்ட காலத்திற்கு பின்பும் வாசிக்க பொருத்தப்பாடு இருப்பது போல உள்ளது தான். அந்த விதத்தில் இ.பா வின் சிறுகதைகள் நாவல்கள் நாடகங்கள் எல்லாம் இன்றைக்கு வாசிக்கும்போதும் சமகால பொருத்தம் இருக்கிறது. ஒளரங்கசீப்பின் ஒற்றை மத நோக்கு சமகாலத்தில் விதந்தோத பட்டாலும் பிற்காலத்தில் எப்படி பார்க்கப்படுகறது என்பதை பார்க்கிறோம். கொரானா காலத்தைப் போல அவருடைய பிளேக் கால கதைகளும் இன்று பொருந்தி வாசிக்க முடிகிறது. 

அந்த விதத்தில் ஏசுவின் தோழர்கள் நாவல் போலந்தில் நிகழும் கதை. போலந்து பல உலக இலக்கியங்களிலும் உதாரணமாக எடுத்து கையாளப்பட்டட பிரதேசம். ஐசக் பால்வ்யேஷ் சிங்கரின் ஷோஷா நாவல் நினைவுக்கு வருகிறது. போலந்திற்கு பணிநிமித்தம் செல்லும் ஒரு கல்லூரி விரிவுரையாளர் எதிர்கொள்ளும் நிகழ்வுகளும் மனிதர்களும்தான் இந்த நாவல் . இதற்குள் மேலை தத்துவம் கீழை தத்துவம் அங்குள்ள அரசியல் இங்குள்ள அரசியல் என எல்லாம் கலந்து ஒரு சித்திரம் எழுந்து வருகிறது. முன்பே சொன்னது போல தர்க்கத்திற்கும் அப்பாற்பட்ட ஒன்று கலந்து இந்நாவல் நிறைவடைகிறது. இ.பாவின் நகைப்பு முன்னுரையிலிருந்தே துவங்கி விடுகிறது. அது இவ்வாறு துவங்குகிறது. அவர் போலந்திற்கு போவதற்கு முன்னால் இந்திய அரசு அவரிடம் ஒரு சுய கையொப்பமிட்ட சான்றிதழ் கேட்கிறது. "நான் பைத்தியம் இல்லை.."  என்கிற சான்றிதழ் வேண்டும் என்கிறார்கள் என்கிறார். ஆரம்பத்தில் நான் அதிர்ச்சி  அடைந்தாலும் போலந்து சென்று சேர்ந்தபின் பாரத தேசம் தவறிப்போய் செய்தெ சில புத்திசாலிதங்களில் இதுவும் ஒன்றாக இருக்கலாம் என்று தோன்றியது என்கிறார் 

போலந்து மீது பற்றும் தாயநாடான இந்தியா மீது ஒருவித ஒவ்வாமையும் கொண்டு விளங்கும் டிஎன்டி. அவரது போலந்து மனைவி டெல்லியில்  பயணம் செய்த காலத்தில் வன்புணர்வு செய்யப்பட்டு மனநிலை பாதிக்கப்பட்டு இறந்தவர். அவரது மக்கள் ஆஷா மேலும் அவர்களின் உறவுக்கார பெண். இவர்கள் தவிர சில உள்ளூர் `நண்பர்கள் கொண்ட நட்பு சூழல் புரொபஸருக்கு வாய்க்கிறது.வெவ்வேறு இயல்புகள் மற்றும் சிந்தனைகள் கொண்ட ஒவ்வொருவரும் நாவல் முடியும் தருவாயில் எவ்வாறு மாறிவிடுகிறார்கள் என்பதைக் காணலாம்.  பொதுவாகவே இப்பாவின் நாவல்களில் கதை சொல்லியின் சிந்தனையில் ஏற்பட்ட மாற்றம் தெரிவதில்லை. தந்திரபூமியின் நாயகன் தன இயல்பை மாற்றிக் கொள்வதுண்டு. குருதிப்புனலிலும் ஏசுவின் தோழர்களிலும் அவன் கிட்டத்தட்ட ஒரு பார்வையாளராகத்தான் வருகிறான். ஏசுவின் தோழர்கள் நாவலின்  இறுதியில் ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒரு வித தெளிவு பெற்று பொருந்த, தர்க்கத்துக்கு அப்பாற்பட்ட ஒரு விபத்து நிகழ்ந்து நாவலை முடித்து வைக்கிறது.

இந்தியா மீது வெறுப்பு கொண்டிருந்த ஆஷா மாறுவதும், கடினமான நபர் என்று கருதிய டிஎன்டி  மரணம் நிகழும் தருணனும் உணர்ச்சிகரணமான இடங்கள். இந்த நாவலுக்கு இடையே இ.பா வைக்கும் சில வசன தெறிப்புகள் / observation கள் கவனிக்கத்தக்கவை.

மனைவிமீதான தனிப்பட்ட கோபத்தால் எதிர் அரசியல் சார்புநிலை ஒருவன் எடுக்கிறான். தனிப்பட்ட கோபம் சம்பந்தப்பட்ட ஒருவன் அரசியல் தலையெழுத்தை மாற்றுவதை கூறுகிறார்.. நம்ம நாட்டுக்கு எவ்ளோ பொருத்தம்!!! இதுபோல போலாந்துக்காரர்களுக்கும் இந்தியாவிற்குமான முக்கியமான ஒற்றுமையாக பலவற்றை குறிப்பிடுகிறார்.. மிக முக்கியமாக நேரந்தவறாமை. இருவரும் சொன்ன நேரத்திற்கு வருவதில்லை.

எங்கள் ஊரில் சுதந்திரம் பெற்ற பிறகு முதல் அதிபரை நாங்கள் கொன்றோம் என்று ஒருவர் வருத்தம் தொனிக்க ஒருவர் புரொபசரிடம் கூற, அவரிடம் புரொபஸர் சொல்வார்.  இதென்ன பிரமாதம் நாங்கள் எங்களுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்த்தவரையே கொன்னிருக்கோமே என்று

"இந்தியாவின் தேசியமொழி இந்தி. ஆனால் நாங்கள் தமிழில் பேசினால்தான் நீங்கள் மதிப்பீர்கள்" என்று ஆஷா கூறும்போது "தமிழும் இந்தியாவில் ஒரு தேசியமொழிதான்.." என்று பதிலளிப்பார். ஸொமோட்டாவில் French fries ஆர்டர் செய்த போது  இந்த கட்டுரையில் இந்த வரியை எழுதிக் கொண்டிருந்தேன்.. அந்தளவிற்கு அது சமகால பிரச்சனையாகவும் உள்ளது. அந்த மொழிசார் அடையாளம் சார்ந்த விவாதங்கள் அதற்குள் எழும் தனிமனித விழைவுகள் எல்லாமே அதைவிட அதிகமாக  இன்று சோஷியல் மீடியாவில் புழங்கி வருவதை காண்கையில்  அந்த பொருத்தம்  இருக்கத்தான் செய்கிறது.

நமக்கு என்னவொரு பற்று  இருக்கிறது என்று நாம் பெருமை படவும் முடியாது. ஏனெனில் அடுத்த வரி அப்படி வரும்..

போல்விஷ்  மக்களைப்போல இந்தியர்களும் முரண்பாடு மனநிலை கொண்டவர்கள். தேசியம் நாட்டுப்பற்று என்றெல்லாம் பேசிக்கொண்டு ஆனால் போலந்தை விட்டு எப்போது வெளியேறலாம் என்று ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் காத்திருப்பது போல்விஷ் மக்களின் இயல்பு. பாரதமாதா என்று நாட்டை தாய் ஸ்தானத்திற்கு உயர்த்திவிட்டு வரதட்சணை காரணமாகப்பெண்களை தீயிலிட்டு எரிப்பது பாரத பண்பாடு. 

ஒரு உபநிஷத வரி உண்டு.. குடஹாசம் மடஹாசம் என்று.. அந்த வானத்தில் இருப்பதுதான் இந்த குடத்திலும் இருக்கிறது என்பது பொருள்.. இ.பா. வின் எழுத்துக்கள் அத்தகையவையே.. அவர் சொல்வது தனிமனிதனின் பிரச்சனை அல்ல.. ஒட்டு மொத்த ஜனத்திரளின் அலசல் அவர் செய்வது. ஆகவே அவர்கதையில் ஒரு பாத்திரத்தை நாம் புரிந்துகொண்டால் அதை விரித்து எடுத்து ஒரு சமுதாய அமைப்பை நாம் புரிந்து கொள்ள முடியும். முகம் தெரியாத அன்பு முகம்தெரியாத கோபம் மக்களிடையே இருக்கிறது. நம்மை ஆள்வது நாமா, சித்தாந்தமா அல்லது அடுத்தவரின்  சுயநலமா என்று அவர்களுக்கு தெரியவில்லை. இது ஒவ்வொரு மனிதனின் பிரச்சனை ஆனால் அவர்கள் எளிய மனிதர்கள்தான். சிலுவையுடன் சுத்தியும் அரிவாளும் கொண்டு ஏசுவின் வருகைக்காக காத்திருக்கும் தோழர்கள் என்று சொல்கிறார்..




தீபாவளி என்பதால் அது சம்பந்தமான உதாரணத்தோடு ஒன்று சொல்லிக் கொள்கிறேன். இ.பா தன் ஒவ்வொரு படைப்புகளிலும் வாசிப்பவர் சிந்தனைக்குள் மெல்ல திரியை கிள்ளி  சிறிது பற்ற வைக்கிறார்.. அதை உள்வாங்கும் வாசக மனம் ராக்கெட்டாக இருந்தால் மேலே உயர்ந்து சென்று சிதறுகிறது. பிஜிலியாக இருந்தால் இருந்த இடத்திலேயே சிதறுகிறது. எவ்வாறானாலும் சிதறல் மட்டும் நிச்சயம். ஆகவே நீங்கள் அவரை வாசித்திருக்காத பட்சத்தில் இப்போது வாசிக்க துவங்கலாம். முன்பே வாசித்திருந்தால் இன்று மறுவாசிப்பை துவங்கலாம். ஏனெனில் அவருக்கான தேவை உள்ள காலத்தில் நாம் இருக்கிறோம். அவர் எழுதிய காலத்தில் அவர் எழுத்தாளர்களுக்கான எழுத்தாளராகத்தான் இருந்திருப்பார் என்று நம்புகிறேன். இப்போதுதான் அவர் வாசகர்களுக்கான எழுத்தாளராக எழுந்து வருகிறார் என்பது என் கருத்தாகும்.

ஒருவரது வாழ்நாள் என்பது அவர் எத்தனை காலங்கள் உலகிற்கு பயன்படுகிறார் என்பதில் இருந்து கணக்கிடப்படுகிறது என்று ஒரு பார்வை உண்டு. அப்படிப்பார்த்தால் வள்ளுவரின் ஆயுள் இன்னும் எத்தனை ஆண்டுகளாக இருக்கும்? அவருக்குப் பின் வந்த கவிராயர்களின் ஆயுள் முடிந்து போயும் அவர் இன்றும் புதிதாக கண்டடையப்பட்டுக்கொண்டே இருக்கிறார் அல்லவா? எனக்கு இ.பா குறித்தும் அப்படித்தான் தோன்றுகிறது. ஒவ்வொரு தனிமனிதனும் வாட்சப் குழுவிற்குள் சித்தாந்த விவாதங்களில் இறங்குவதை சமீப காலமாக பார்க்கிறேன்… உணர்கிறேன். ஒரு குடும்பத்தில் சீர் வரிசை முறையில் சண்டை வரலாம்.. ஒரு நண்பர்கள் குரூப்பில் சினிமாவிக்காக காதலுக்காக சண்டை வரலாம்.  ஆனால் அலுவலக குரூப்பில் கூட சித்தாந்த சண்டைகள் நிகழும் காலத்தில் நாம் இருக்கிறோம். அரசு,  சமூகம் சார்ந்த எந்த ஒரு சிறிய செயல் கூட அது எந்த சித்தாந்தம் எந்த மரபு எந்த மண்ணுக்கு உரியது என்று நாட்கணக்கில் விவாதிக்கப்படுகறது.  இ.பாவிற்கான தேவை எழுதப்பட்ட காலத்தைவிட இப்போது பெருகியுள்ளது என்றே நான் நினைக்கிறேன். அடுத்த நூறாண்டுகளுக்கு அவர் நேரடியாகவும் மறைமுகமாகவும் நம் உரையாடல்களில் இடம்பிடித்துக்கொண்டே இருப்பார். இந்த அமர்வு அதற்கான ஒரு துவக்கப்புள்ளியாக இருக்கும்..

 அனைவருக்கும் நன்றி!!



No comments: