Monday, July 20, 2020

முரசும் சொல்லும் - ஊ) பிழைகளின் சுழலிலிருந்து ஞானத்தின் வட்டத்திற்குள்

முந்தையது:-  முரசும் சொல்லும் - உ) விழைவின் கொடி

          தரிசனங்களாக எழுந்து வந்து பிற்காலத்தில் பெரு மதங்களாகி தத்துவத்திலும் நடைமுறைகளிலும் பெரும் ஆதிக்கத்தை செலுத்தியவற்றின் துவக்கால கால கூறுகளை வெண்முரசில் காணலாம்.  பிறருக்கான ஒழுக்கத்தை வலியுறுத்திய பரசுராமன், தனக்கான சுய ஒழுக்கம் கொண்டு உதாரணமாக விளங்கிய தசரதராமன், என்று பரவியதின் அடுத்தநிலை என்னவாக இருக்கும்? ஒவ்வொருவருக்குமானது தானே? அதுதான் இளையயாதவன் வழியாக நிகழ்கிறது. ஒவ்வொருவருக்கான அறம் என்பதை அறியும் முன் அவரவர் தரப்பு நியாயங்களும் அவர் தரப்பு அறிதல்களும் குறிப்பிடத் தக்கவை. அறியாமல் செய்வது பிழையன்று. ஆணவத்தில் செய்வதே பிழை. இவை இரண்டிற்கும் இடையிலான மற்றொன்று உள்ளது.  அது,  பிழை ஆற்றியவன் ஆற்றிய கனம் தன் தவறை உணர்ந்த பிறகு நிகழ்வது என்ன என்பது. ஆற்றிய பிழைக்கு முழுமனம் கனிந்து வருந்தினால் பிழைக்கான ஈடு இல்லாமல் ஆகிவிடுமா? அந்த கேள்வியையும் வெண்முரசு எழுப்பியே செல்கிறது. கதாபாத்திரங்கள் குற்ற உணர்ச்சி கொள்ளும் கணங்களும் பின் அவர்கள் பிழையீடு செய்யும் கணங்களும்  வருகின்றன. அவற்றிற்குப் பின்னால் அவர்களின் தனிப்பண்புகளும் சில அலைக்கழிப்பை அடைகின்றன.


முரசும் சொல்லும் - ஊ) பிழைகளின் சுழலிலிருந்து ஞானத்தின் வட்டத்திற்குள்
          
             இளம்வயதில் துருபதன், துரோணருக்கு வாக்கு அளித்து பின் அதை அவரே மீறி அவரை சிறுமை செய்கிறார். இவ்வாறு, துரோணருக்கு துருபதன் ஆற்றிய நட்பின் துரோகத்தை, துரோணர் தன் மாணவர்களை வைத்து ஈடு செய்து கொள்கிறார். அவர் சார்பாக அதை ஆற்றுபவன் அர்ஜுனன்.  அவன் தேர்த்தட்டில் வைத்து துருபதனை இழுத்து வருகிறான். ஆனால், அதன்பிறகு அவன் துரோணரிடமிருந்து விலகி இறுதியில், தான் இழிவு செய்த  துருபதனுடன் தான் இணைகிறான் என்பது ஒருபுறம். மற்றொருபுறம் துருபதன் தன் பாதி அரசினை துரோணரிடம் போரில் தோற்கிறான். ஆனால், அதே துரோணர், துருபதனின் மைந்தனுக்கு வில்வித்தை கற்றுத் தருகிறார். அவரிடம் கற்ற அந்த மைந்தனே இறுதியில் அவரைக் கொல்லவும் செய்கிறான். இந்த மனமாற்றம் அளிக்கும் சிக்கல் இதை ஒரு கதையாக கேட்கையில் சுவாரசியமாக இருந்து ஒப்புக் கொள்ளத் தோன்றினாலும் ஒரு நவீன இலக்கிய வாசகன் இதை இன்னும் அணுகி அறியவே விழைகிறான்.  

            பாரதக் கதையை மொத்தமாக நோக்குகையில், துவக்கத்தில் இது ஒரு பிழைகளின் சுழலாக இருக்கிறது. அவை ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கப்பட்டு இருக்கின்றன. அது தலைமுறைகளாக தொடரும் வஞ்சம் என்று சொல்லப் படுகிறது என்றாலும், பாண்டவர்கள்-கெளரவர்கள் காலத்திலேயே வைத்துப் பார்த்தால் கூட,  துச்சாதனன் பீமனுக்கு விஷம் அளிப்பது, பிறகு பாண்டவர்கள் கூர்ஜரத்தை தவறான போரினால் வெல்வது, தருமனின் யதார்த்தமான நீதிச் சொற்களால் துரியனின் அகங்காரம் சீண்டப்படுவது, கெளரவர்கள் வாரணாவதம் திட்டம் தீட்டுவது, பாண்டவர்கள் அரக்கு மாளிகையில் சில அப்பாவி மானுடர்களை பலியாக்கித் தான் தப்பிப்பது இவை அனைத்தும் பிழைகளின் சுற்றாகவே இருக்கிறது. பிழைகளாலேயே முடையப் பட்ட ஒரு சிலந்தி வலை போலக் காட்சியளிக்கிறது. ஒருவிதத்தில்  அவர்கள் ஆற்றும் ஒவ்வொன்றுமே, அரச தர்மத்தில் நீதி என்று சொல்லி நியாயப் படுத்தப்பட்டும் விடுகிறது. . ஏதோ ஒரு அறநூலின் நீதி இதை சரியானது என்று சான்று என்று கூறுகிறது. அல்லது அது ஏன் தவறில்லை என்ற விளக்கத்தை இளைய யாதவனோ கணிகரோ அளிக்கின்றனர். இதைப் பின்பற்றி கதாபாத்திரங்கள் செல்கின்றனர். 


            இந்த நீதி என்கிற சொல் எழுந்து வந்த பாதை வேதம், தத்துவம் மற்றூம் உணர்வுப் பின்புலம் கொண்டது.  ஆகவே, அதன் ஊடாக அலைக்கழிக்கப்படும் மனிதர்கள் அனைவரும் அதை விளங்கிக் கொள்ளவே முயற்சிக்கின்றனர். இது ஏன் இவ்வாறு நிகழ்கிறது என்பதை அறிய விழைகின்றனர். அதனூடாக எழுந்து வருகிறது பெரும் மானுட ஞானம்.

          மனிதனின் ஆதி உணர்வில் ஒன்று பயம். அதன் உச்சம் என்பது மரணம். ஆகவே அவர்கள் முதலில் மரண தேவனை வழிபடுகிறார்கள். மரணத்தை வெல்ல அவர்கள் பிரார்த்திக்கிறார்கள். பின் செல்வம் அவர்களை ஆட்கொள்கிறது. அதை அருள பிரார்த்திக்கிறார்கள். அதன் பின் அதிகாரம் மற்றும் அதை அடைவதற்கான நெறிகள் . அதற்கான வேட்கையும் துவங்குகிறது. இவை னைத்தயும் வென்று ஆளும் திறனும் விழைவும் அதற்கடுத்தது.  அச்சத்தில் துவங்கி உச்ச விழைவு வரை செல்லும் இந்த வளர்ச்சியே முறையே  யமன் குபேரன் வருணன் இந்திரன் வழிபாடு என வளர்கிறது. இதற்கு எதிராக கட்டற்ற விழைவு கொண்ட ஆசுர வேதமும் போரிடுகிறது. வெண்முரசு அந்த ஆதி உணர்வு எழுந்த தருணம் முதற்கொண்டு அனைத்தையும் அலசத் துவங்குகிறது. இறுதியாக இந்திரன் மற்றவர்களை அடக்கி ஆள, அவனுக்கு எதிராக ஆசுர வேதம் முளைத்து வருவதும் சொல்லப்படுகிறது. விருத்திரனின் அசுர வேதம், அது இறுதியாக இந்திரனால் வெல்லப் படுகிறது. பாரத காலத்தில் இந்திரவேதத்தை இளைய யாதவனின் நாராயணவேதம் முறியடிக்கிறது. நாராயண வேதம் அனைத்து உயிர்களுக்குமானது.  அதற்கும் மேல் ஒன்று உள்ளது.  அது பாசுபதம். அடியும் முடியும் அறியாது நின்று எரியும் தழல். இவற்றை வெண்முரசு வாயிலாக அணுகுகையில் வாசகர்கள் சமகால பாரதக் கதாபாத்திரங்களை மட்டுமன்றி அவர்கள் ஆழுள்ளத்திலிருந்து அடக்கி ஆளும் தொல்மரபு, அதன் வழியாக அவர்கள் தங்களுக்குள் கொள்ளும் அடிப்படை உணர்ச்சியையும் அறிய முடிகிறது. திருஷ்ட்யத்யும்னனின் அலைச்சல் ஊடாக இந்திர நீலத்தில்  அறியும் நாராயண வேதமும், அர்ஜுனின் அலைச்சல் ஊடாக கண்டீபத்தில் வெளிப்படும் சமண வேதமும் பின் கிராதத்தில் வெளிப்படும் திசைப்பயணமும் பாசுபதமும் இவ்வாறு உரைத்துச் செல்கின்றன.



இவை தவிர கொல்லாமை குறித்து போதிக்கும் சமணம் மற்றும் அதன் நெறிகள் குறிப்பிடத்தக்கவை. வணிகர்கள் தங்கள் வணிகப் பொருள்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் இந்த சமண நெறியை போற்றிப் பாராட்டி முன்னெடுக்கிறார்கள். அவர்களாலேயே ஆங்காங்கு அன்ன சத்திரங்கள் கட்டப் படுகின்றன. இது வணிகம் சார்ந்த காரணமாக வெண்முரசில் சொல்லப் படுகிறது. துவாரகை எழுவதே வணிகத்தால் தான். இளைய யாதவன் அஸ்தினாபுரியில் ஒரு வணிகன் தன் கடைக்கு வெளியே உப்பை சிந்தி வைக்கிறான். அவ்வாறு சிந்தியிருக்கும் உப்பின் நரநரப்பு மது அருந்தி தெருவில் துயிலும் மக்களை அவன் கடைக்கு முன் அண்டவிடாமல் செய்கிறது. அவனை இளைய யாதவன் துவாரகைக்கு அழைத்துச் சென்றூ குடியமர்த்துகிறான். இது ஒரு சோறு பதமாக சொல்லப் படுகிறது. மற்றொரு புறம் சமண ஞானத்தின் எழுகையும் சொல்லப் படுகிறது. சமணத்திலும் பாரதக் கதை எழுதப் பட்டிருப்பதும் அதில் கிருஷ்ணனை விட பலராமருக்கு அதிகம் முக்கியத்துவம் இருப்பதும் இது சார்ந்த விவாதங்களினூடே நான் அறிந்த ஒன்று. சமண பாரதம் என்கிற இந்தக் கதைசொல் முறை வெண்முரசு வாயிலாகத்தான் தமிழகத்தில் வருகிறது என்று நினைக்கிறேன். இதில் துவாரகையில்  அரிஷ்டநேமியால் இளைய யாதவனே மற்போரில் தோற்கடிக்கப் படுவது நிகழ்கிறது, அதனால் அரிஷ்டநேமிக்கு அரசு உரிமை அளிக்கப் படுவதும் அதற்கு முன்பான அவரது மண நிகழ்வும் ஒருக்கப் படுகிறது. அப்பொழுது அங்கு விருந்திற்காக கொல்லப்பட கட்டிவைக்கப்பட்ட ஆட்டு மந்தையைக் கண்ட கணத்தில் அவர் ஞானமடைவதும் தன்னை முற்றீலும் மழித்துக் கொண்டு அவருக்கான சுப்ரதீபம் என்கிற அந்த வெள்ளையானையிலேயே அவர் நேமிநாதராக அருகமலைக்குச் செல்வதும் நிகழ்கிறது. அரசுக்கான வேதத்துக்கான போர் என்று பாரதப்போர் சொல்லப்பட்டாலும் அரசை மறுப்பதன் மூலம் எழுந்து வந்த கருணையின் வேதமாக அருக நெறி வெண்முரசில் நிலைகொள்கிறது.


          உபநிடதம் என்பது ஒருவரின் அருகில் அமர்ந்து பயில்தல் என்று சொல்லப் படுகிறது. ஆரண்யகங்களில் யுதிஷ்டிரன் ஆசிரியர்களின் அருகில் அமர்ந்து அதை அறிகிறான். அலைந்து திரிந்து பார்த்தன் வேதம் துவங்கிய இடம் முதல் பாசுபதம் வரை அறிகிறான். விலங்குகளை ஒத்த மனம் கொண்டவன் பீமன். அவன் தனக்கான தேடலில் துவக்கம் முதல் இன்று வரை நில்லாது சுழலும் காதலை அறிகிறான். பாண்டவர்களில் துவக்கத்தில் வேறொன்றிடம் மனம் இணையாமல் தனித்த மனம் கொண்ட கதாபாத்திரங்கள் இவர்கள். நகுல சகாதேவர்கள் ஒருவர் மற்றவர் மீது  அதிக பற்று கொள்கிறார்கள். மேலும் புரவி சாஸ்திரம் நிமித்த சாஸ்திரம் மீதும் ஈடுபாடு கொண்டவர்கள். ஆனால், தருமன் தன் அறம் மீதும், பீமன் தன் தசை பலத்தின் மீதும், அர்ஜுனன் தன் வீரத்தின் மீதும் பற்று கொண்டவர்கள். ஆகவே அவர்களுக்கு அறிதல் வேட்கை அதிகம் இருக்கிறது. தான் அறிய  வேண்டியது வெல்ல வேண்டியது இன்னும் என்ன என்கிற தேடல் கொண்டவர்களாகவே அவர்கள் வருகின்றனர்.  அங்கிருந்து அலைந்து சென்று அதை, ஞானத்தின் மீதான தேடல், அன்பின் மீதான தேடல்,  வீரத்தின் மீதான தேடல் வழியே அறிகிறார்கள். அன்னையர் வழிபாடு திரெளபதி வாயிலாக வருகிறது.  இவர்கள் தவிர, திருஷ்ட்யத்யும்ணன் கிருஷ்ணனை எட்டு நாயகிகள் அடைந்த கதைகளின் ஊடாக தன் குழப்பத்திலிருந்து விடுதலை கொள்கிறான்.

          இந்த நாவல்களை அறிகையில் அவை தத்துவத்தினூடாக யோகம் தியானம் ஆகியவற்றையும் தொட்டுச் செல்கின்றன  என்று உணரமுடியும். அவை தனித்தனியே தன் வடிவமைப்பில் ஒரு ஒழுங்கைக் கொண்டுள்ளன. ஏழு என்கிற எண் இந்திர நீலத்தில் ஒரு இழையாக தொடர்ந்து வருகிறது. சத்யபாமை இளைய யாதவனை நோக்கி ஏழு அடிகள் வைப்பது, சிசுபாலன் ஏழு முறை நீந்திக் கடப்பது, ஏழு சுற்றுக்கு மேல் தேவியருடன் இளைய யாதவன் அம்ர்ந்திருக்கும் மாளிகை என அவை தொடர்கின்றன. அவை யோக மரபில் வரும் ஏழு சக்கரங்களைச் சொல்வதாக ஒவ்வொரு இடத்திலும் பொருள் கொள்ளத்தக்க வகையிலேயே வருகின்றன. ஏழு பிறவிகள் ஏழு கன்னியர் என்று நமக்கு இருக்கும் மரபு ரீதியான தொடர்பையும் சுட்டுகின்றன. வைணவத்தில் பரம்பொருளை ஆசிரியர் வழியாக அடைவது போல திருஷ்டயுத்யும்னன் கிருஷ்ணனை சாத்யகி வழியாக அடைகிறான்.  எட்டு நாயகியரும் அஷ்ட லெட்சுமிகளை பிரதி பலிக்கிறார்கள். அன்னலெக்‌ஷ்மியாக ருக்மிணி, சந்தான லெக்‌ஷ்மியாக காளந்தி என. அதேபோல பாசுபதம் எழுந்து வரும் கிராதம் நாவலில் பிச்சாண்டவர், கஜசம்ஹார மூர்த்தி முதல் மாதொருபாகன், சோமாஸ்கந்தர் வரையிலான சிவனின் அனைத்து வடிவங்கள் வருகின்றன. இறுதியில் அனலில் நடனமிடும் நடராஜனும்.



          ஆனால் இவையனைத்திலும் நாம் அறிய ஒன்று இருக்கிறது. இவர்கள் யாரும் அதை அறிந்ததால் மட்டும் மேன்மையுற வில்லை.  தன் தேடலின் உச்சத்தை அறிந்த பின் தன்னை சோதனைக்குள் உட்படுத்துகிறார்கள். ஒவ்வொரு நாவலிலும் அது நிகழும் இடம் முக்கியமானது.  அனைத்தும் அறிந்த பின், தருமன் கந்தமான மலையில் தன்னை எரித்து மீள்கிறான். அர்ஜுனன் இந்திர சபையில் பெண்ணாக உருக்  கொள்கையில் இளையயாதவன் மீதான அன்பை உணர்ந்து மீள்கிறான். பீமன் அந்த செளந்திக ம்லை உச்சியில் அந்த மதுவை அருந்திய பின் மீள்கிறான்.  அதுவே, அறிதலுக்கும் உணர்தலுக்குமான வேறுபாடு என்று கருதுகிறேன். வெறும் அறிதல் அல்ல, அந்த உணர்தலே அவர்களின் தயக்கத்தைப் போக்குகிறது.  தன்பின் குருஷேத்திர யுத்தத்தில் தருமன் அறத்துக்காகவும், அர்ஜுணன் இளைய யாதவனின் சொல்லுக்காகவும், பீமன் திரெளபதியின் வஞ்சத்துக்காகவுமே ஆயுதம் ஏந்துகிறார்கள். பிழையின் சுழலாக துவங்கும் இது ஞானத்தின் ஒளிவட்டமாக முழுமை கொள்கிறது.

தொடர்ச்சி:- முரசும் சொல்லும் - எ) தன்னறத்தின் தடத்தில்

No comments: