Tuesday, February 23, 2021

பண்ணைக்கு ஒருவன்

ஆள்தலும் அளத்தலும்’ சிறுகதை தொகுப்பிற்கு எழுத்தாளர் நாஞ்சில்நாடன் அவர்களின் முன்னுரை

இளைய நண்பர் காளிப்ரஸாத் ஐந்தாறு  ஆண்டுகளாக விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் மூலமாக அறிமுகம். அவர் சிறுகதை எழுதுகிறவர் என்றெனக்கு அப்போது தெரியாது. ஒரு வகையில் அவருக்கே அந்த உத்தேசம் இல்லாதிருந்திருக்கலாம். ’யானை வேட்டுவன் யானையும் பெறுமே’ எனும் சங்க இலக்கியப் பாடல்வரி நினைவுக்கு வருகிறது.

 

            நான்காண்டுகளில் பத்துக் கதைகள், ‘ஆள்தலும் அளத்தலும்’ எனும் தலைப்பில் இன்று நூலாகிறது. ஆள்தல் என்றால் அரசு செய்தல், ஆட்கொள்தல், அடக்கியாளுதல், வழங்குதல், கைக்கொள்ளுதல், கையாளுதல் எனப்பல பொருள். அளத்தல் என்றால் அளவிடுதல், மதிப்பிடுதல், ஆராய்ந்தறிதல் என்பன பொருள். ஆழமான தலைப்பு சிறுகதை தொகுப்புக்கு. கதைகளை வாசித்து வரும்போது, தமிழ்ப் படைப்பிலக்கியப் பண்ணைக்கு ஒருவன் போந்தனன் என்பது உற்சாகமளிக்கிறது.

 



            மனத்தின் அவத்தைகள், தட்டழிவுகள், பிறழ்வுகள், கனவு நிலை உரைத்தல்கள், பிரமைகள் என்பன சிறுகதைக் கருப்பொருட்கள். சம்பவங்கள், முரண்கள், குணச் சித்தரிப்புகள், வாழ்வியல் போராட்டங்கள் எனப் பிறிதொரு வகை. என்ன வகையாயினும் மொழித்திறனிலும் செய்நேர்த்தியிலும் கூறு முறையிலும் சிறுகதைகள் எம்மை ஈர்க்கின்றன. சிலசமயம் சொப்பனத்தில் விடும் அம்பலப்புழை பால் பாயசத்தை விடவும் கையில் இருக்கும் சுட்ட பணகுடிப் பனங்கிழங்கு மேலென்பது என் மனோபாவம்

 

            காளிப்ரஸாத் எழுதிய பழனி முதல் பராசக்தி ஈறான பத்துக் கதைகளும் எனக்கு உற்சாக வாசிப்பு அனுபவம் தந்தன. செப்டம்பர் 2016-ம் ஆண்டு சொல்வனம் இணைய இதழில் அவரெழுதிய ‘விடிவு’ என்றே சிறுகதை அன்றே மனதை அலைக்கழித்தது. இப்போது மறுமுறை வாசிக்கும்போது அது பேசாப் பொருளைப் பேசத் துணிந்த கதை எனத் தோன்றியது.

 

            1992-ம் ஆண்டு நானெழுதிய ஐம்பத்து ஒன்றாவது கதை ‘ஊதுபத்தி’யை ‘விடிவு’ நினைவூட்டியது. எனது சாதி வெறியை நிறுவுகிற கதையென்று பகைமுரண் கொண்ட இதழாசிரியர் ஒருவரும் மார்க்சீய அறிஞர் ஒருவரும் ஆவணப்படுத்தினர். நல்லூழ் நிமித்தமாகக் காளிப்ரஸாத் அத்தகு அவதூறு, தரமிறக்குதல் எதையும் இக்கதை மூலம் எதிர்கொள்ள நேராது. தொகுப்பின் உணர்வுப் பூர்வமாக கதை அது. உருக்கும் கதையுமாம்.

 

            என் மதிப்பீட்டில், தொகுப்பின் சிறந்த கதை, ‘ஆள்தலும் அளத்தலும்’. அருளாலர் ஒருவர் பிரசாதம் போலக் கொடுத்த நினைவுப் பரிசொன்று பூசையறையில் வைக்கப் பெறும் தகுதியுடையது. நகரத்துச் சூழலில் வேசியொருத்தியின் செய்கூலிக்கு சேதாரமின்றிப் பணயமாகப் போகும் சம்பவமே கதை. இதில் வேசி, தாசி, பரத்தை, விலைமகள், பொருட்பெண்டிர், தேவடியாள், இருமனப் பெண்டிர், களவுக் கிழத்தி, விலை முலையாட்டி எனும் சொற்கள் இன்று விலக்கப்பட்ட கனிகள் என உணர்ந்தால், பாலியல் தொழிலாளி எனும் சமூக நீதிச் சொல் பெய்து கொள்ளலாம்.

 

            கிராமத்துப் பிறப்புகள், வளர்ப்புகள் பிழைப்புக்காக நகர் நோக்கி நகரும் போது சந்திக்கும் அலைக்கழிப்புக்களை அற்புதமாகச் சொல்லும் கதை மேற்சொன்ன ‘ஆள்தலும் அளத்தலும்’. மடாதிபதிகள் இருக்கட்டும், பெரு நகரங்களில் வாழ்பவர்கள் சொந்த ஊருக்கு வருகை புரிகையில், தம்மைக் காணவரும் படித்த வேலைக்குத் தொண்ணாந்து நிற்கிற இளைஞனிடம் பகட்டாகச் சொல்வார், ‘ பம்பாய் பக்கம் வந்தா என்னை வந்து பாரு என்னா! ‘என்று. சிலரைப் போய் பார்த்த அனுபவம் உண்டெனக்கு. தேடுவது ஒன்று, கண்டடைவது மற்றொன்று என்பதை அனுபவமாக்கும் கதையது

 

            மதிப்பு’ என்றொரு கதையும் தொகுப்பில் மதிப்பான கதை. விற்பனை, ஒப்பந்தம், பராமரிப்பு போன்ற பணிகளில் ஈடுபடுவோர் இந்தக் கதையைத் தீவிரமான பொருளில் புரிந்து கொள்வார்கள். அன்பு, பெருந்தன்மை, தன்னலம், வஞ்சம், உள்க்குத்து, தன்படை வெட்டிச் சாதல் எனப் படுபவை ஊடும் பாவுமாக நெய்யப்பட்டுக் கொண்டிருக்கிற சமூகப் பின்புலத்தில், இந்தக் கதைக்கென்றோர் தனித்துவம் உண்டு. கதையின் இறுதிப் பத்தியில் அவலமான திருப்பம். சிறுகதையின் இலக்கணம் என்று கொள்வாருண்டு இறுதி வரிகள் தரும் திருப்பத்தினை. கடந்து போனதொரு தேசீய நெருக்கடி சரியா தவறா எனும் கேள்விக்கு நம்மை ஆட்படுத்தாமலேயே தரப்பட்ட அதிர்ச்சி இக்கதையின் இறுதி

 

            கரி’ என்றொரு சொல்வனத்தில் வெளியான கதை. ஒரு ஸ்ரீலஸ்ரீ உருவாகும் கதை. சிற்றின்பம், பேரின்பம் என இரண்டைத்தான் இன்பம் என்றனர். ஒன்றைக் கடக்க இன்னொன்று. அல்லது ஒன்றைக் கடந்தால் இன்னொன்று. நமது புராணங்களில் இரண்டுக்குமான எடுத்துக்காட்டுகள் உண்டு. நாம் காசு கொடுத்து கடிக்கிற பட்டியை வாங்க விரும்பவில்லை. வாசிக்க ஈர்ப்பான கதை இது.

 

            முன்னுரை எழுதுவது என்பது தொகுப்பின் அனைத்துக் கதைகளுக்கும் ஐயம்பெருமாள் கோனார் நோட்ஸ் எழுதுவதல்ல என்பதை அறிவோம். எனவே முடிப்புரையாகச் சில சொற்கள்.

           

            பெரும்பாலான இந்தக் கதைகள் நல்ல வாசிப்பு அனுபவம் வழங்குகின்றன. ஈர்ப்பான கூறுமொழி. சொந்த அனுபவங்களா அல்லது சாட்சியாக நின்றவையா என்று அனுமானிக்க முயல்வது வாசகனின் வேலை அல்ல. ஆனால் நம்பகத்தன்மைக்கு என்றொரு தனியான வசீகரம் உண்டு.

 

            சம்பிரதாயமான சில புத்திமதிகள் கூறுவார்கள், வழக்கமாக முன்னுரை எழுதுவோர். அதனைத் தவிர்க்க விரும்புகிறேன். ‘அழுதாலும் பிள்ளை அவள் தானே பெறனும்!’ என்பது நம் இலக்கியக் கொள்கை.

 

            காலத்தால் தொடரும் முயற்சியும், ஊக்கமும், உழைப்பும், நுட்பமான பார்வையும், சமநிலைச்சீர் கோடாமையும், மொழித்திறனும், கலைத் தேர்ச்சியும் மேலும் காளிப்ரஸாத்துக்கு வாய்க்க இந்தக் கலைமகள் வழிபாட்டுத் தினத்தில் வாழ்த்துகிறேன்!

 

மிக்க அன்புடன்,                            

நாஞ்சில்நாடன்

25 அக்டோபர் 2020   

ஆள்தலும் அளத்தலும் - முன்னுரை

புத்தகம் வாங்க

No comments: