Sunday, June 14, 2020

எழுத்தாளர் ஜெயமோகன் -தனிமையின் புனைவுக் களியாட்டு- 2) இறைவன்

தனிமையின் புனைவுக் களியாட்டு

1) குருவி


இந்தப் புனைவுக் களியாட்டுக் கதைகளை வாசகனாக நம் ரசனைக்கேற்ப  நாம் வகைப்படுத்தலாம். கரடிநாயர் கதைகள், பணியிடக்கதைகள், வரலாற்றுச் சம்பவங்களின் அடிப்படைக் கதைகள், ஊட்டி குருகுல கதைகள் என  கதை நிகழும் களத்தை வைத்தும் பிரிக்கலாம். அவற்றையே குறுக்கும் நெடுக்குமாக அதன் உள்ளடக்கதை வைத்து வேறுவிதமாகவும் வகைப்படுத்தலாம்.  முன்பு விவாதித்த குருவி இன்றைய கதையான இறைவன் இரண்டும் ஒரு வகையில் வருபவை. மாயப்பொன் கதையையும் இந்த வகையில் அடைக்கலாம். படைப்பு எழுந்து வருவது, படைப்பாளியின் மனம் என்று வகைப்படுத்தலாம். இந்த இறைவன் கதை ஒரு சுவர் ஓவியன் பற்றியது. 


சுவரோவியமாக, பழைய ஓவியமாகிப்போன பகவதி அந்த வீட்டில் முற்றிலும் அழிந்து நிற்க, மீண்டும் அவளை வரைந்தெடுக்க வருகிறான் ஓவியன் மாணிக்கம் ஆசாரி. இசக்கியம்மை  அந்த வீட்டிலேயே ஐம்பது வருடங்களாக இருப்பவள். அவளுக்கு அந்த பகவதி ஒரு இளம் வயது தோழி போல. இளம் வயதில் கண்ட அந்த பகவதி ஓவியத்தை அதன்பின் அவள் கண்கொண்டு காணவில்லை.  பெற்றோர், கணவன் மகள் என ஒவ்வொருவராக மறைந்துவிட அவள் வாழ்க்கையில் அதன் பின் எதுவுமே  எஞ்சவுமில்லை. இளம்வயதில் அனைத்தையும் இழந்து தன் சித்தி வீட்டில் ஒண்டிக் கிடக்கிறாள் அவள். இப்பொழுது அவர்கள் வீட்டில் பரட்டைத்தலை கிழவியாக இருக்கிறாள். ஆனாலும் தன்னைப் பாதித்த அந்த பகவதி ஓவியத்தை அவள் பார்ப்பதுல்லை. மணிச்சத்தம் கேட்கையில் எழுந்து கன்னத்தில் போட்டுக்கொள்வதுடன் சரி.  ஐம்பது வருடங்கள் செல்ல,  இப்பொழுது அந்த ஒவியத்தை வரைய ஒருவன் வருகிறான். அதைப் பார்த்ததில்லை என்றாலும் பகவதியை மீண்டும் வரைவது அவளுக்கு ஆரம்பத்தில் உவப்பாகவும் இல்லை. 



 இந்தக் கதையில் இறைவனாக வருபவன் மாணிக்கம் ஆசாரி. படைப்பாளி. படைப்பாளிகளுக்கேயான அபூர்வ குணமான திமிரும் கொண்டவன்.  பணிவும் கொண்டவன். நாட்கள் செல்லச் செல்ல மெல்ல மாணிக்கம் ஆசாரியின் கையிலிருந்து எழுந்து வருகிறாள் பகவதி. சுவற்றில் பகவதியை வரைய வந்த மாணிக்கம் ஆசாரி முதலில் இசக்கியம்மையைத்தான் பார்க்கிறான்.  அவன் வரையத் துவங்கும் வரை அவள்தான் அவன் பேச்சுத்துணையாகவுமே இருக்கிறாள்.  ஓவியம் எழும்பத் துவங்கியதும் அவன் அறையை தாளிட்டுக் கொண்டு படம் வரைந்த பின் தான் கதவைத் திறந்து அனைவரையும் அழைக்கிறான். அங்கே பகவதி எழுந்து நிற்க அதைப் பார்த்து அனைவரும் நெக்குருக நிற்கின்றனர் . இசக்கியம்மை பெரும் தயக்கத்துடன் உள்ளே சென்று அந்த ஓவியத்தைப் பார்க்கிறாள். அவளது இளம் வயது தோழி அல்லவா பகவதி... அவர்களுக்குள் உரையாடலும் நிகழத் துவங்குகிறது. 

மாணிக்கம் ஆசாரிக்கு, வரைந்து முடித்தபின் எழும் வெறுமை அவனை ஆட்கொள்கிறது. ஓவியத்திற்கான கூலி எவ்வளவு என்று கேட்கும்  வீட்டு உரிமையாளனோ பூஜை செய்யும் போற்றியோ அவனுக்கு ஒரு பொருட்டு இல்லை. அவர்களுக்கு அவன் பதிலும் சொல்வதில்லை. அவனது பதிலுமே ஏச்சாகத்தான் வெளிப்படுகிறது. இளையவளுக்குப் பின் அவனிடம் மூத்தவள்தானே இறங்குவாள் என்கிறார் போற்றி.  ஆம் ஸ்ரீதேவி போய் மூதேவி ஏறி நிற்கிறான் மாணிக்கம் பிள்ளை. ஆனால், ஏற்கனவே அந்த மூத்தவளின் ஆசியை பெற்றவள்  இசக்கியம்மை.  ஐம்பது வருடங்களாக பீடிக்கப்பட்டிருப்பவள். அவனுக்கான கூலி என்ன என்பதை அவளே அளிக்கிறாள்.  அந்த இறைவன் கண்ணீர் மல்க எழுந்து அந்த மூத்தவளை அணைத்துக் கொள்கிறான்.



இசக்கியம்மைக்கு மட்டுமே அவள் பகவதி. மாணிக்கம் பிள்ளை பகவதியை எழுப்பி கொண்டுவருவதே அவளுக்காகத்தான் என்று எண்ண வைக்கிறது கதை. அவன், இறைவன் என்று உணர்பவளும் அவள் மட்டும் தான். மற்றவர்களுக்கு அது ஓவியம்.  அவன் ஓவியன். அவர்கள் அவனிடம் கூலி தான் பேசுகிறார்கள். அவன் படைப்பின் திறன் உணர்ந்த இசக்கியம்மை யாருமே கண்டிருக்க வாய்ப்பில்லாத, இரண்டு வயதில் காய்ச்சலில் இறந்த தன் குழந்தையையே வரையச் சொல்லி யாசிக்கிறாள்.  அவனுக்கான உண்மையான அளி அதுதான்.  இந்தக் கதையை படிக்கையில் நாம் தினமும் காணும் எத்தனையோ சுவர் ஓவியர்களும் திரைசீலை ஒவியர்களும் நினைவுக்கு வரலாம். ஆனால்  ஒவியம் என்ற எல்லைக்குள் வைத்து நேரடியாக அணுகுகையில் அது கதையை சுருக்கிவிடும் அபாயம்தான் இருக்கிறது. எழுத்து, இசை, சிற்பம் ஓவியம் என ஒரு படைப்பினை உருவாக்கும் எந்த ஒரு பிரம்மனுக்குமானது. எத்தனை முறை படித்தாலும் மனதை விம்ம வைக்கும் சிறுகதை இது.




2 comments:

Anonymous said...

Wonder full observation..day by day your writing skills are improving. As a friend i am very proud of you Kali..Keep going..Your sense of comedy is missing some time..k feel that is the key.

ஜனார்த்தனம் க said...

அருமையான திறனாய்வாக அமைந்த கட்டுரை.பாராட்டுக்கள்.