Monday, April 8, 2024

வினா 40 விடை 40




ஒவ்வொரு குடிமகனும் குடிமகளும் மூன்று தேர்தல்களில் வாக்களிக்கின்றனர். உள்ளாட்சித் தேர்தல், சட்டமன்றத் தேர்தல், மாநிலங்களைத் தேர்தல். இவற்றில் தனது அடிப்படைத் தேவையான சாலை வசதி மின்கம்பம் கழிவுநீர் கால்வாய் போன்ற அன்றாட அல்லல்களுடன் தொடர்புடையது உள்ளாட்சித் தேர்தல். ஆகவே நாம் கவுன்சிலரை தேர்ந்தெடுக்கும் போது கட்சிக்கு அப்பாற்பட்ட ஒருவரைத் தேர்ந்தெடுக்க முகாந்திரம் உள்ளது.  இதைத் தவிர மற்ற இரு தேர்தல்களும் சித்தாந்தம் சார்ந்தவையாக உள்ளன. இதில் மேற்சொன்ன சாலை குடிநீர் முதல் கல்வி வேலை வாய்ப்பு நெடுஞ்சாலைப் போக்குவரத்து என சிறிது முதல் பெரிது வரை ஒவ்வொருவரும் சார்ந்திருக்கும் பிற அனைத்தும் இந்த இரு தேர்தல்களில் வரும் அரசுகள் இயற்றும் ஆணைப்படி நிகழ்கின்றன. நிர்வாகம் சார்ந்த மேற்சொன்ன பிரச்சனைகளைக் கையாளுவது என்பது எந்த அரசுக்கும் பொதுவானதாக உள்ளது. இதில் சாலையை அமைக்க வேண்டும் என்று ஒரு அரசும் மக்களுக்கு சாலை வசதி கூடாது என இன்னொரு அரசும் சொல்லப் போவதில்லை. 

இங்கு ஆதார் பான்கார்டு பொருளாதாரக் கொள்கை என இவை எதற்கும் எந்த ஒரு தேசியக் கட்சியும் பெருமை கொள்ள இயலாது. ஒருவர் வலியுறுத்திதை மற்றவர் கொண்டு வருவதும் மற்றவர் கொண்டு வந்ததை இவர் தீவிரப் படுத்துவதும் என ஒரு ரிலேரேஸ் போல தொடர்ச்சியாக முன்னோக்கி செல்வதுதான் நிகழ்கிறது.

ஆகவே நமது அடிப்படைத் தேவைகள் தாண்டி ஒரு அரசு அமைய வேண்டும் என்றும் இன்னொரு அரசு அமையக் கூடாது என்று நாம் விரும்ப அடிப்படைக் காரணமாக இருப்பது நமது சிந்தனையின் பாற்பட்ட விருப்பு வெறுப்பு சார்ந்த காரணிகளே தவிர வேறு காரணங்கள் முதன்மையானவை அல்ல. அந்த வகையில் பாராளுமன்றத் தேர்தல் என்பது ஏற்கனவே இருக்கும் விதிகளை  நிர்வாகிக்கவும்  அடிப்படை வசதிகளுக்கானது என்றும் நாம் கருதுவோமேயானால் அந்தப் பெருமை அந்த நிர்வாகத்தையும் அடிப்படை வசதிகளையும் அளித்து வரும் அரசு அதிகாரிகளிக்கும் அலுவலர்களுக்கும்  உரித்தானது. அவர்களை மேற்பார்வையிடும் செயலாளர்களுக்குமானது.  

தேர்தலில் இலவசங்களோ வாக்குறுதிகளோ ஒரு கட்சிதான் அளிக்கிறது என்றோ இன்னொரு கட்சி அளிக்காது என்றோ பிரித்துப் பார்க்கவியலாது. ஒரு கட்சிதான் வாக்காளர்களுக்கு பணம் அளிக்கிறது என்றோ இன்னொரு கட்சி அளிப்பதில்லை என்றோ கூட செய்திகள் வருவதில்லை.

ஆகவே நிர்வாகம் கட்டமைப்பு வசதிகள்  வாக்குறுதி போன்றவற்றில் ஒரு கட்சியும் இன்னொரு கட்சியும் மாற்றுக் கருத்து கொள்வதில்லை. 


ஆகவே வாக்காளரின் மனச்சாய்விற்கு  கொள்கைகள் முக்கிய இடத்தை எடுக்கின்றன. ஒரு கட்சியின் சித்தாந்தம் வாக்காளருக்கு ஏற்புடையதா அது நமது மனவோட்டத்தற்கும் நம்பிக்கைக்கும் ஒத்திசைவாக உள்ளதா எனக் காண்பதே பாராளுமன்றத் தேர்தலில் வாக்காளரின் அடிப்படைக் காரணமாக உள்ளது. அதன் மீது வாரிசு அரசியல், ஊழல், மதவாதம், வளர்ச்சி, அண்டை நாட்டுடனான உறவுக் கொள்கை போன்ற காரணங்கள் பூசப் படுகின்றன. இத்தகைய காரணங்களின் வழியாக முதற்காரணம் இன்னமும் உன்னதப் படுத்திக் கொள்ளப் படுகிறது.


தனது சனாதன தர்மத்தை எதிர்த்து செயல்படும் அசுர அரசை எதிர்த்து வென்றது இராமாயாணமாக உள்ளது.  ஏற்கனவே நிலைபெற்ற தூய சத்ரிய குருதி வம்சத்தை எதிர்த்து பாண்டவர்கள் பெற்ற வெற்றி என்பது மகாபரதப் போராக ஆகிறது. தேவ அசுரப் போர் என்றும், அண்ணன் தம்பி போர் என்றும் நாம் வாசித்த இதிகாசங்களும்  நெறிகளுக்கு இடையிலான போராகவே இருப்பதையும் காணலாம். அது அதிகாரத்திற்கான நேரடிப் போர் என்பதால் குருதி சிந்தி் எட்டப் பட்டது.  நாகரீக உலகில் தேர்தல் என்பது அதே அதிகாரத்திற்கான போரின் மற்றொரு வடிவம். அதை முடிவு செய்வதில் பிற கருப்பொருட்கள் முக்கியப் பங்காற்றுகின்றன.



ஊழல், இயற்கை வளங்களின் மீதான மாநிலங்களின் உரிமை மறுக்கப் படுதல், சாதாரண குடிமக்களின் ஜனநாயக உரிமை பறிக்கப் படுதல், சுற்றுச் சூழல் சார்ந்த கொள்கை முடிவுகள், கல்விக் கொள்கைகள், அண்டை நாடுகளுடனான உறவு, நம்முடன் வணிக உறவில் நெருக்கமாக உள்ள நாடுகளுடனான உடன்படிக்கை, எரிபொருள், உணவுப்பொருள் விலையும் மக்களின் வாங்கும் திறனும் எனப் பல காரணிகள் ஒரு சாதாரண காலத்தில் ஒரு  அரசைத் தேர்ந்தெடுக்க தர்க்க ரீதியான காரணங்களாக அமைகின்றன. அசாதாரண காலங்களில் தர்க்கத்தை மீறிய காரணிகள் அமைந்து விடுகின்றன. எமர்ஜென்ஸிக்குப் பிறகான ஜனதாதள ஆட்சி அவ்வாறு அமைந்தது. ராஜீவ் கொலைக்குப் பிறகான காங்கிரஸ் ஆட்சி அவ்வாறு அமைந்தது. நிலையற்ற மூன்று பிரதமர்களைக் கண்டு, பின்னர் 'நிலையான ஆட்சி திறமையான பி்ரதமர்'  என்கிற பி்ரசாரத்தோடு மீண்டும் வாஜ்பேயி பிரதமரனதும் நிகழ்ந்தது. அந்த வரிசையில் இறுதி நிகழ்வாக  ஊழல் குற்றச் சாட்டுக்கள் குறித்து அவப்பெயரைச் சேர்த்துக் கொண்ட காங்கிரஸ் ஆட்சிக்குப் பின் பாஜக ஆட்சி அமைந்ததைக் கூறலாம். 


தற்போது நிகழும் பாராளுமன்றத் தேர்தல் அத்தகைய ஒரு ஒற்றைப்படை மனநிலைக்கு மக்களை இட்டுச் சென்று தர்க்கத்தை மீறிய ஒன்றாக மக்களை ஒருநிலைப் படுத்துமா என்கிற கேள்வி எழுகிறது. வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் நம்முடைய கண்முன் இரு கட்சிகள் உள்ளன. ஒன்று, மோதியைத் தலைமை வேட்பாளராகக் கொண்ட பாஜக தலைமையிலானது மற்றது காங்கிரஸ் ஒருங்கிணைத்துள்ள இன்னமும் பிரதமர் வேட்பாளர் அறிவிக்கப்படாத இண்டியா கூட்டணி. இப்போது இது அறிவுத் தளத்தில்,    இந்துத்துவ அடிப்படைவாத மனநிலை கொண்ட பாஜகவிற்கும் அதை எதிர்க்கும் பன்மைவாத மனநிலை கொண்ட இண்டியா கூட்டணிக்குமான மோதல் என்கிற விவாதமாக மட்டுமே எழுந்து நிற்கிறது. 

முன்பு திமுக தன்னுடை முதல் அரசினை அமைத்தபோது அதனுடன் கூட்டணியில் இருந்த இராஜாஜி பிராமணர்களிடம் வைத்த வேண்டுகோள் பிரசித்தமானது எனக் கூறுவர். பிராமண எதிர்ப்பு மனநிலை கொண்ட திமுகவுக்கு வாக்களிக்க பிராமணர்கள் தயங்க அவர்களிடம் ஒரு கையில் பூணூலைப் பிடித்துக் கொண்டு மறு கையால் திமுகவிற்கு வாக்களியுங்கள் என்று இராஜாஜி கேட்டுக் கொண்ட செய்தி அது.  அத்தகைய இடத்தில் இன்று நிற்பவர்களாக தமிழ்த் தேசியவாதிகளும் அமைப்பு சாரா இடதுசாரிகளும் உள்ளனர்.


வருகின்ற பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்ட விவாதங்களில்  இந்துத்துவ எழுச்சியைக் எதிர்க்கும் நோக்கம் இருந்தாலும் தமிழ்த்தேசிய கொள்கைபாற் பட்டவர்களுக்கு ஒரு நெருடல் உள்ளது. ஈழப்போரின் உச்சகட்டக் காலத்தில் ஈழப்படுகொலைக்கும் தமிழ்  மக்களின் புலம்பெயர்தலுக்கும் துணைநின்ற காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணிக்கு தற்போது எவ்வாறு வாக்களிப்பது என்கிற கேள்வி அது. அது சார்ந்த உணர்ச்சிகரமான தர்க்கப்பூர்வமான நாற்பது கேள்விகளும் அதற்கான பதில்களும் இதில் உள்ளன.  கேள்விகளை நலங்கிள்ளி எழுப்ப தோழர் தியாகு அதற்கு தனது பதில்களை எழுதுகிறார். தமிழ்த் தேசியர்கள் இந்தமுறை காங்கிரஸுக்கு வாக்களிக்க வேண்டும் என்கிற நிலைபாட்டின் எதிர்வினையாக கேள்விகளும் அதற்கான பதில்களும் உள்ளன. 





இறந்த காலத்தில் பெற்ற காயமும், எதிர்காலம் பற்றிய ஐயமும்,  நிகழ்கால அச்சமும் கொண்ட கேள்விகளும் அவற்றை அவ்வாறே ஏற்றுக் கொண்டும் அதில் தற்போது செய்ய இயலுவது என்ன என்பதை எடுத்துக் கூறும் பதில்களும் உள்ளன. பதில் அளிப்பவர் மீதான உரிமையுடனும் நட்புடனும் கேள்விகளில் கேலியும் குத்தலும் வைத்தே கேட்கிறார். அவற்றிற்கு பதில் உரைக்கையில் பதிலுக்கு அத்தகைய உணர்ச்சி கலவாமல் தன்னிலை விளக்கமாகவும்  தனது திட்டங்களின் வெளிப்பாடாகவும் பதில் உரைக்கிறார். இரு பதில்களில்  கூறியதே கூறுவதால் உருவான எரிச்சல் தொனி பதிவாகியிருப்பது வாசிப்பில் தோன்றாமல் இல்லை.


கேள்விகளில் நியாயம் இருக்கிறது. அதைக் கண்ணகிக்கு இருந்த நியாயம் என்று கருதலாம். பழைய கோபமும் வஞ்சிக்கப்பட்ட வன்மமும், பல அனுபவங்களின் ஊடாக உண்டான அவநம்பிக்கையும் கொண்டுள்ளன. பதில்கள் வரலாற்று நோக்கு உடையவையாகவும் நீண்டகால நோக்கு உடையவையாகவும் உள்ளன என்பது சிறப்பானது.


இந்த உரையாடல்களில், லெனினிய நிலைப்பாடடை ஆதாரமாகக் கொண்டு  தேர்தல் புறக்கணிப்பு துவங்கி நோட்டா ஆதரிப்புக்கு வந்து தற்போது பாஜக எதிர்ப்பு காரணமாக எதிர்க்கட்சியை ஆதரிக்கும் வரை வந்த பயணம் உள்ளது. அதனுடன் ஒரு குற்றத்தை உணர்ச்சி வசப்பட்டு அணுகுவதும் தர்க்க ரீதியாக அணுகுவதும் கலந்தே வருகின்றது. இனவழிப்புக் குற்றவாளிகளை மன்னிக்கலாமா என்கிற கேள்விக்கான பதில் உள்ள இந்த பத்தியை உதாரணமாக கூறலாம். 


//இனவழிப்புக்கு நீதி என்பதன் சிறு பகுதிதான் தனிக் குற்றவாளிகளுக்கு எதிராகக் குற்றத் தீர்ப்பு வழங்கப்படுவதும் அவர்கள் தண்டிக்கப்படுவதும். இது குற்றவியல் நீதி! குற்றமிழைத்த அரசு தண்டிக்கப்படுவதுதான் அரசியல் நீதி! அரசியல் நீதிக்குத் துணை நில்லாத குற்றவியல் நீதியால் பயனில்லை. இட்லர் தண்டிக்கப்பட்டு நாசிச அரசு ஜெர்மனியின் நீடித்திருந்தால் எப்படி இருக்கும்? ஸ்லொபதான் மிலொசெவிக் தண்டிக்கப்பட்டு யுகொஸ்லாவியாவில் செர்பியப் பேரினவாத ஆதிக்கம் நீடித்திருந்தால் எப்படி இருக்கும்? இராசபட்சர்கள் தண்டிக்கப்பட்டு சிங்களப் பேரினவாதம் நிலைத்து நீடித்தால் எப்படி இருக்கும்?

 

இராசபட்சர்கள் தண்டிக்கப்படுவது ஈழத் தமிழர் இனவழிப்புக்கு ஈடுசெய் நீதி பெறுவதன் அடையாளம்தான். சிங்கள பௌத்தப் பேரினவாத அரசக் கட்டமைப்பு தகர்க்கப்பட்டுத் தமிழீழம் இறைமை மீட்பதே குற்றவியல்  நீதியின் நிறைவாகிய அரசியல் நீதி, அதாவது இனவழிப்புக்குக் காரணமான அரசக் கட்டமைப்பைக் கலைத்து இனவழிப்பின் மீள்நிகழ்வைத் தடுப்பது (non-recurrence) ஆகும்.

 

இந்த வரலாற்று அரசியல் பார்வை இல்லாமல் இனவழிப்புக் குற்றவாளிகளை வெறும் பழிக்குப் பழி நோக்கில் நாம் தண்டிக்கத் துடிக்கவில்லை. இராசபட்சர்கள், சோனியாக்களுக்கு எது தண்டனை? சிங்களப் பேரினவாதமும் இந்திய வல்லரசியமும் தமிழீழ விடுதலையைத் தடுக்கும் முயற்சியில் தோற்றுப் போகும் படி செய்வதுதான். ”உலகில் தமிழர்க்கு ஒரு கொடி கிடைக்கக் கூடாது என்றுதானே இனவழிப்புச் செய்தாய், இதோ அசலும் வட்டியுமாக இரு கொடிகள் உயர்த்துவோம்” என்று நான் பேசுவதன் பொருள் இதுதான். நீதிக்கான இயக்கம் என்பது இன்று விடுதலைக்கான இயக்கத்தின் ஒரு கட்டம்தான். விடுதலைக்கான இயக்கத்துக்கு அப்பால் நீதிக்கான இயக்கம் எதுவும் இல்லை.//



குறுகிய கால இலக்கு நீண்ட கால இலக்கு என இரு காரணிகள் உள்ளன. தியாகுவிற்கு நீண்டகால இலக்கு என்பது இருக்கிறது. அதற்கான ஒரு குறுகியகால இலக்காக காங்கிரஸ் திமுக ஆதரவினை முன்மொழிகிறார். எமர்ஜென்ஸி காலத்தில் அனைவரும் ஒன்று கூடி இந்திரா காந்தியை தோல்வியுறச் செய்தது  போல தற்போது மோதியைத் தோற்கடிக்க வேண்டும் என்பது அவருடைய கருத்தாக உள்ளது. 

இதற்கு முன் எமர்ஜென்ஸியில் கடுமையாக பாதிக்கப்பட்ட திமுகவே அதற்குப் பின்னர் இந்திரா காந்தியுடன் கூட்டணி அமைத்தது ஒரு எதிர்பாரா திருப்பம். இவ்வாறு திமுகவின் முரண்களை சான்றுகளுடன் சுட்டிக் காட்டி எழும் கேள்விகளுக்கு சமாளிப்பு ஏதுமின்றி அரசியல் போக்குகள் அடைவு பெற்ற மெய்ம்மைகள் ஆகியவற்றை வைத்து கூறும் பதில்கள் ஒருவிதத்தில் அரசியல் சுருக்கவுரைகள் எனக் கருதத் தக்கவை. திமுகவும் அதிமுகவும் காங்கிரஸ் மற்றும் பாஜகவுடன் இணைவது என்பது மாநிலத்தில் தனது போட்டிக் கட்சியை பழிவாங்கவும் தனது அதிகாரத்தை தக்கவைப்பதுமேயன்றி வேறு காரணங்கள் இல்லை. ஆனாலும் திமுக பாஜக கூட்டணி என்பது இயற்கைக்கு மாறான கூட்டணியாகவும் அதிமுக பாஜக கூட்டணி என்பது இயற்கைக்கு உகந்த கூட்டணியாகவும் நடைமுறையில் திகழ்ந்ததை   சுட்டுவது ஒரு நல்ல தர்க்கம்.


இது நூலாக வடிவம் பெற்றதால் முழுமை கூடியுள்ளதா எனப் பார்க்க வேண்டும். இரு காரணிகள் உள்ளன. முதலாவது, கேள்விகள் கேட்டுள்ள நலங்கிள்ளி  அதற்குப் பின்னர் தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளவில்லை என்று அறிவித்துள்ளார். ஆகவே அவர் இந்த பதில்களால் திருப்தியுறவில்லை என தெளிவாகிறது. ஆகையால் அவர் ஏன் இன்னமும் அது ஏற்புடையதல்ல என குறிப்பிட்டிருக்கலாம் எனத் தோன்றுகிறது. கேள்வி பதில் பொதுவாக நிகழ்வதால் அந்த உரையாடல் தனக்கான தரப்பை முன் வைத்திருத்தல் நலம். இங்கு கேள்விகள் பொதுவாக அத்தகைய நிலைத்தன்மை இல்லாது சில இடங்களில் தர்க்கமும் சில இடங்களில் தனிநபர் சீண்டலும் கொண்டுள்ளன.  ஆனால் பதில்கள் அத்தகைய பொது நோக்கைக் கொண்டுள்ளன.


இரண்டாவதாக, இருவருக்கிடையேயான உரையாடல் நூலாகத் தொகுக்கப்படுவதன் நோக்கம் அந்தக் குழப்பம் கொண்ட வாசகர்களின் தெளிவிற்காகவும் எனக்கொள்ளலாம். அந்த வகையில் இதன் வாசகர்கள் யார் என முடிவு செய்ய வேண்டியது அவசியமாகிறது. கேள்வி கேட்பவரும் பதில் உரைப்பவரும்  உறுதியாக வலதுசாரி சிந்தனையாளர்கள் அல்லர். ஆகவே தற்போதைய அரசின் செயல் திட்டங்களில் ஏற்பு உடையவர்களுக்கு இந்தக் கேள்வி கேட்பவருமே அந்நியர்தான் என்பதால் இதனுடைய வாசகர்கள் தமிழ்த்தேசியர்களும் குறிப்பிட்ட சில இடதுசாரித் தரப்பினரும் என சுருங்கி விடுகிறது. அது இந்த நூலின் பரப்பைக் குறுக்கி விடுகிறது. இன்று இந்துத்துவர் அல்லாத, பாஜகவினர் அல்லாத,  அதேநேரம் மீண்டும் பாஜக அரசு அமைந்தால் என்னவாகிவிடும் என்று கேட்கிற, சாமானிய மக்கள் உள்ளனர்.  அந்த மக்களின் சார்பாக கேள்விகளை  எழுப்பவில்லை. அடிப்படை வசதிகள் அதைத் தாண்டிய மின்னணு வர்த்தகம் உள்ளிட்ட பிற வசதிகள், தேசத்தின் வளர்ச்சி, பாதுகாப்பு உள்ளிட்ட காரணிகள் பாஜகவால் முன்வைக்கப் படுகின்றன. வளர்ச்சி, குஜராத் மாடல், ஊழலுக்கெதிரான அரசு  என பாஜக முன்வைக்கும் பிற  காரணிகள் தான் பொதுமக்கள் முன் பாஜக அரசு வைக்கும் கருத்துக்களாக உள்ளன. அவற்றை வைத்து எழும் கேள்விகளை கேட்பதும் அதற்கு தியாகு போன்று  அரசியல் அறிவும் கள அனுபவமும் மொழித் தேர்ச்சியும் கொண்ட ஒருவரின் பதிலும் பதிவு செய்யப் படுவது நன்றாக இருக்கும். வருகின்ற தேர்தல் என்கிற குறுகிய கால இலக்கை மனதில் வைக்காமல் மீது  நீண்டகால இலக்காக  மக்களின் அடிப்படை விழுமியங்கள் மீதான உரையாடலாக அவை இருத்தல் நலம் பயக்கும். இந்த நூலில் அதற்கான புள்ளிகள் உள்ளன. ஆனால் உரையாடலின் மையம் வேறு ஒன்று என்பதாலும் தற்போதைய தேர்தல் சூழல்களாலும் அவை விவாத நோக்கில் விலகியுள்ளன.

உடைத்தெறியும் கலைஞி

கீரனூர் ஜாகீர் ராஜாவின் வடக்கேமுறி அலிமா குறித்த கட்டுரை ( மயிர் இதழில் வெளியானது. )





(1)



நவீன இலக்கியத்தின் வருகை என்பதே ஒரு கலகச் செயல்பாடுதான் என்று கூறலாம். அதுவரை நடைமுறையில் உள்ள விதிகளை மாற்ற அறைகூவல் விடுகிறது. இனி ஒரு விதி செய்வோம் என்று அழைக்கிறது. ஆனால் அந்த லட்சியவாதத்தில் போகப் போக ஒரு தேக்கம் வந்துவிட்டதையும் காண்கிறோம். அல்லது அதன் மீது ஐயம் வருகிறது. கலை இலக்கியத்தில் அடுத்தகட்ட நகர்வு என்பது முந்தையதன் மீதான ஒரு நம்பிக்கையின்மையின் வழியாக எழுந்து வருகிறது. முந்தையது காலப்போக்கில் நீர்த்துப் போயிருக்கலாம் அல்லது நிகழ்காலம் அதைக் கடந்து வந்திருக்கலாம். உதாரணமாக நதிக்கரையில் தினசரி அனுஷ்டானங்களை மேற்கொண்ட சமூகம் மெல்ல அலுவலகப் பணிகளுக்கும் காலமாற்றங்களினால் பெரு நகரங்களுக்கும் நதியில்லாப் பகுதிகளுக்கும் புலம் பெயர்ந்து செல்ல  நேரும்போது அங்கு சித்தாந்த ரீதியானதும்  சடங்கு சார்ந்ததுமான சிக்கல்கள் உருவாகின்றன. நவீன உலகில் இரவுப் பணிக்கு அல்லது அதிகாலைப் பணிக்கு செல்ல வேண்டியவர் அதன் பொருட்டு இதுவரையிலான தனது அன்றாடத்தை மாற்றியமைக்க வேண்டியிருக்கிறது.  பாரம்பரியத்தை போற்றி வரும் அனைத்து சமூகத்திற்கும் இது ஒரு குழப்பத்தை வரவழைக்கிறது. அதிலிருந்து மேலெழ தன்னை மீளுருவாக்கம் செய்து கொள்கிறது. அதுவரைக்குமான தனது விழுமியங்கள் அறம் ஆகியவற்றை மீளுருவாக்கம் செய்து கொள்கிறது. இவ்வாறாக, இலக்கியத்தின் பேசுபொருளுக்கு புறக்காரணிகள் பெரிய பங்கு வகிக்கின்றன.


இந்த மாற்றம் என்பது இலக்கியக் கர்த்தாவிற்கு முக்கியமான கச்சாப்பொருள் என்று சொல்லலாம். அதை வைத்தே தனது தர்க்கங்களைக் கட்டியெழுப்புகிறார். அந்த விவாதம் மெய்யான கேள்வியை எழுப்பி ஆராய்கிறதா என்பதன் வழியகத்தான் அடுத்தகட்ட நகர்வு சாத்தியப்படுகிறது. தனித்தனி குழுவாக இருந்த மக்களை  தொழிற் புரட்சி மூலம் தொலைதூரப் பயணச் சாத்தியங்கள் மூலம் ஒன்றிணைத்த அறிவியல் அவர்களுக்கு மனதளவில் ஒரு தயக்கத்தையும் உருவாக்கி வைக்கிறது என்பதும் மறுப்பதற்கில்லை. ஆகவேதான் இதையொட்டி பழமை / சாஸ்திரத்திற்கும் புதுமை/யதார்த்தத்திற்கும் இடையில் ஒரு முரணியக்கம் உருவாகிறது. அதன் தாக்கம் சுற்றிவரப் பரவுகிறது. ஒருவகையில் தனித்து இருக்கும் உலகிலும் இது ஊடுருவ முயல்கிறது. இதனுடைய பிரதிபலிப்பைத் தான் இலக்கியமும் தத்துவமும் முன்னெடுக்கின்றன. ஓவியக்கலை என்பது நேரடி ஓவியமாக இருந்து பிறகு புகைப்படக் கலையின் வருகைக்குப் பிறகு நவீன ஓவியமாக புதிய பரிணாமம் எடுக்கின்றன. அதுவரை கண்ணுக்கு விருந்தளித்த ஓவியத்தை அதன்பின் வாசகர் யோசித்து உள்வாங்க வேண்டியிருக்கிறது. ஓவியம் இசை போலவே அதை இலக்கியத்திலும் காண முடிகிறது. புளியமரத்தின் கதை நாவலை நேரடியாக வாசிப்பதற்கும் தன் குறியீடை உணர்ந்து வாசிப்பதற்குமான வேறுபாட்டை வாசகர் உணர்கிறார். 


மரபிலக்கியம் வீரர்களை தெய்வங்களைப் பேசுகிறது என்றால் நவீன இலக்கியம் சாதாரண மனிதர்களைப் பேசுகிறது. மதங்கள் கொண்டிருக்கும் அதிகாரத்தை சாதாரண மனிதர்களின் விழுமியங்களோடு பொருத்துகிறது. எதையும் அறிவுகொண்டு ஆராய்ந்து விளங்குதலும் கூடவே பகுத்தறிவின் எல்லை மற்றும் தர்க்கத்தின் எல்லை என அதையும் கேள்விக்கு உள்ளாக்கி அதற்கு அப்பாலாக உள்ள உள்ளுணர்வுகளைக் கொண்டும் அறிதல் என்று நவீன இலக்கயம் முன்னெடுத்துச் செல்கிறது. நவீனத்துவம் அறிவியல் மூலம் மக்களை இணைத்தலும் நேர்மாறாக ஒவ்வொரு தனிமனிதனையும் தனியனாகவும் ஆக்கியிருக்கிறது என்பதும் அதன் மற்றொரு கூறாக உள்ளது. குலம், குழு, கூட்டம், குடும்பம் போன்ற விழுமியங்கள் தகர்ந்து தான், தனது தர்மம், தன்னுடைய பிறவியின் நோக்கம் என்று தனிமனித மையமும் நவீனத்துவத்தின் விளைவாகவே சாதாரண மக்களிடமும் வந்து சேருகிறது. அதன் இறுதி எல்லையாக இருத்தலிய சிக்கல் எழுந்து வருகிறது. குழுவாக இருத்தல் அல்லது தனியனாக தன்னறத்தை முன்னெடுத்தல் என்கிற குழப்பம் அதைத் தாண்டி தன்னிரக்கம் மனச்சிதைவு போன்ற உளவியல் பாடுகளும் வந்து சேர்ந்ததையும் கொண்டு நவீனத்துவத்தின் காலகட்டத்தை மதிப்பிடலாம். அதனுடைய தொடர்ச்சியாக வந்த பின்நவீனத்துவ காலகட்டம் அதன் முந்தைய வடிவமான நவீனத்துவம் எழுப்பிய சில விழுமியங்களை விடாமல் முன்னெடுத்தும் அதன் சில அடிப்படைகளை நிராகரித்தும் செல்வதைக் காண்கிறோம். அதன் இலக்கிய வடிவத்தில் தனித்தலையும் மனிதன், அதிகாரத்தின் முன் செயலற்று நிற்கும் மனிதன், தனக்கென அடையாளமற்று இருக்கும் பெண்கள், சிறுபான்மை மக்கள், ஒதுக்கப்பட்டோர் என அனைவரையும் தனக்குள் அடக்கிக் கொள்கிறது. அதற்கு அது தனது கூறுமுறையை முக்கிய ஆயுதமாகக் கையில் எடுத்துக் கொள்கிறது. முன்பின்னான மாறுபட்ட கூறுமுறை,  நவீனத்துவம் கொண்டுவந்த இலக்கணங்களை மீறுதல், தடுக்கப்பட்ட வரிகளை புறக்கணிக்கப்பட்ட சொல்லாட்சிகளைக் கையாளுதல் அதிகாரத்தை நிராகரித்தல் உன்னதங்களைப் பகடிசெய்தல் என்று அது எந்த வரைமுறைகளுக்குள்ளும் அடங்காது வெளிப்படுகிறது. 


கீரனூர் ஜாகீர் ராஜாவின் எழுத்துக்கள் இதன் கூறுகளுக்கு பொருத்திப் போகின்ற படைப்புகளாக இருக்கின்றன.  விளிம்புநிலை கலைஞர்களின் வாழ்க்கையைக் கூறும் கதைகள், உலகமயமாக்கலால் கைவிடப்பட்டவனின் கதைகள், தன்னகங்காரம் கொண்டு எழுவதால் கட்டுப்படுத்தப் பட்டவனின் கதைகள் என இவரது பாத்திரங்களை வரையறுத்து விடலாம். ஆங்காங்கு தெறித்து விழும் அங்கதமும் உண்டு.  உதவி இயக்குநர்கள் ஆங்காங்கு 'சீன் சொல்லி' இரவுணவை மதுவை ஏற்பாடு செய்துகொண்டு ஜீவிக்கும் கதையில் கதவைத் திறந்த நண்பனின் மூச்சுக் காற்றில் மதுவீச்சம் அடிப்பதை உணர்ந்து, 'சமூகம் தனக்கு முன்பாகவே சென்று விட்டது' என்று கதைசொல்லி நினைத்துக் கொள்கிறான். ( தேய்பிறை இரவுகளின் கதைகள்). நட்பு காதல் பரிவு அனைத்தையும் கேள்விக்குள்ளாக்கும் கதைகளும் அவரது பிற்காலத் தொகுப்புகளில் உள்ளன ( ஹலால் சிறுகதை தொகுப்பு ). இந்தச் சிறுகதை தொகுப்புகளின் நீட்சியாகவே அவரது அலிமாவும் வருகிறாள்.






(2)


இந்த நாவலையும் உள்ளடக்கி, கீரனூர் ஜாகீர் ராஜவின் பிற்காலக் கதைகளில் பொதுவான அம்சமாக நான்கு கூறுகளைக் காணமுடிகிறது. 1) மதங்களும் அமைப்புளும் கொண்டிருக்கும் அதிகாரத்தைக் கேள்விகேட்டல் 2) கலையுலகிலும் இலக்கிய உலகிலும் உள்ள காழ்ப்புகளை வெளிக்காட்டுதல் 3) உதிரிகளையும் முக்கியப் பாத்திரமாக சித்தரித்தல் 4) படைப்புக்குள்ளாகவே பிரதியையும் எழுத்தாளரையும் ஐயப்படுதல். இந்தப் பண்புகளை முழுதும் பின்நவீனத்துவ குணங்கள் என்று சொல்லலாம். அவர் செய்வது ஒருவகையில் சிதறடித்தலும் மீள்கட்டுமானமும்தான் என்றாலும்  அதன் வழியாக வாசகர் பெறுவது உணர்ச்சி வேகமோ அல்லது கலைத்துப் போட்டப் பெருமிதமோ அல்ல. அதனூடாக அவரது பாத்திரங்கள் வாசகருக்கு இன்னும் அண்மையாகிறார்கள். அவரது பெரும்பான்மையான கதைகளில் இஸ்லாமிய மக்களின் வாழ்க்கைப்பாடு பேசுபொருளாக இருக்கிறது. அதன் ஊடாக அவருக்கு "கட்டுடைக்கக்" கிடைப்பது என்னவாக இருக்கும் என்பது ஆராயத் தக்கது. தமிழிலக்கியத்தில் மிகவும் குறைவாகப் பதிவுசெய்யப் பட்டவைகளில் இஸ்லாமிய வாழ்க்கையும் ஒன்று. துவக்கத்தில் சொன்ன உதாரணத்தைப் பொருத்திப் பார்க்கும் பொழுது கும்பகோணத்திலிருந்து பிராமணர்கள் மும்பை சென்னை டெல்லி என புலம் பெயர்ந்து சென்றபோது தங்களது தினசரி அனுஷ்டானங்கள் குறித்த சிக்கலை  அவர்கள் எதிர்கொண்ட விதங்களை திஜா, இ.பா முதல் சுஜாதா பாலகுமாரன் வரை அனைவரும் எழுதியிருக்கிறார்கள். இதைச் சார்ந்த ஒரு படைப்பைக் கட்டுடைப்பது என்று வரும்பொழுது அதன் பல்வேறு கோணங்கள் குறித்த பார்வை வாசகருக்கு உருவாகியிருக்கிறது. ஆனால் அதுபோல் இஸ்லாமிய வாழ்வியல் பிரதியை அணுகும் பொழுது அதன் பிற கோணங்கள் பெரிதளவில் பதிவு செய்யப் படவில்லை. இங்கு இருக்கும் பார்வையில்  உலகலாவிய அளவில் ஊடகங்கள் வழி  உருவாகிய பார்வையும் இருக்கிறது. பொது ஊடகங்கள் எதிர்மறையாக சித்தரித்து வைத்துள்ள ஒற்றை மதவாத / தீவிரவாத அட்டையை எப்பொழுதும் கழுத்தில் மாட்டி நிற்கும் ஒரு சூழலை ஒவ்வொரு இஸ்லாமிய தனி மனிதனுக்குள்ளும் ஊடகங்கள் நுழைத்துவிட்டன. இனி சராசரி விருப்பு வெறுப்பு கலந்த மனிதர்களாக சித்தரிக்கவும்  இயலாத நிலையும் இருக்கிறது. இத்தகைய புறக்காரணிகள் சம்பந்தமின்றி கதைக்குள் நுழைந்து தரும் பார்வைக் கோணம் என்பது தற்காலச் சூழலில் தவிர்க்கவியலாதவையாகவும் இருக்கிறது. கீரனுர் ஜாகீர் ராஜாவின் எழுத்துக்கள் (அவை இருத்தலியலைப் பேசினாலும்) கலகக் கதைகள் என்று பிரசங்கம் செய்யப்படுவதற்கும் அவை காரணமாக அமைந்து விடுகின்றன


வடக்கேமுறி அலிமா ஒரு தேவதை அல்லது பைத்தியக்காரி அல்லது நடிகை அல்லது எழுத்தாளர். அவள் குறித்த பிறரின் மதிப்பீடுகள் என்று நாவலில் வருவது பைத்தியக்காரி, திருடி, கஞ்சா விற்பவள், கொலைகாரி  உள்ளிட்ட மொத்தம் பதிமூன்று குணங்கள். (ஒரு காட்சியாகப் பார்த்தால் அவர்  அவ்வாறு பட்டியலிட்டுக் கொண்டிருக்கும் போது அலிமா, பிண்ணனியில் அவள் தன் பையிலிருந்து  வாழைக்காய்  அப்பமும் நேந்திரங்காய் வற்றலும் எடுத்து தெருநாய்களுக்கு வீசிக் கொண்டிருக்கிறாள்).  விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்டவர்கள், சிறுபான்மை இன மக்கள், புறக்கணிக்கப் பட்டவர்கள் என மையத்தினால் ஒதுக்கப் பட்டவர்களின் குணநலன்களை இங்கு சுட்டியிருக்கிறார். இயல்பு நிலையில் இல்லாத மனிதர்களின் இயல்புகள். பொதுப் பார்வையில் உதிரிகள். ஒருபுறம் பிற பாத்திரங்கள் அவளை இழித்துரைத்துக் கொண்டே இருக்க ஆனால் கதைசொல்லி அவரை மீண்டும் மீண்டும் வேறு ஒன்றாக காண்பிக்க முயற்சித்துக் கொண்டே இருக்கிறார். அலீமா தனது விளையாட்டுகளில் ஒன்றாக  கபர்ஸ்தானில் ( பிணங்கள் அடக்கம் செய்யப்படும் இடம்) புதிய மய்யத்துகள் ( பிணங்கள்) அருகே நின்று கொண்டு அவள் கேள்விகள் எழுப்புகிறாள். அந்தக் கேள்விகள் மரித்தவரை சுவர்க்கத்திற்கு இட்டுச் செல்லும் தேவதை கேட்டும் கேள்விகளாக இருக்கின்றன. தலைதெறிக்க ஓடாதடி என்று பிறர் கூச்சலிட, அலீமா பட்டாம்பூச்சியாக பறந்தாள் என்கிறார். அவள் அழிக்கோடு முஸ்லியாருடன் ஓடிப்போகிறாள். பின்னர் எழுத்தாளர், நடிகை என பிற பரிணாமங்களைப் பெறுகிறாள். அதன் ஒவ்வொரு வெளிப்பாடுகளிலும் அவளது இளமைக்கால அனுபவங்களும் வீட்டின் சுற்றுப்புறமும் துணை நிற்கின்றன






(3)


இந்தக் கதையை அலிமாவின் கதை என்று மட்டும் கவனித்தால் அவளைச் சுற்றிவர இருக்கும் மம்மது, அம்மா, அஸ்லியார், ஷேக், பாப்பம்மா என பிற பாத்திரங்களும் உருவம் கொண்டு எழுகின்றனர். ஒவ்வொருவரின் நிலைப்பாடும் கோடிட்டுக் காட்டப்படுகிறது. அஸ்லியார் இறுதியில் தனக்கும் சித்துவேலையைக் கற்றுத் தரும்படி கேட்கும் சிஷ்யனிடம், ' முட்டாள் என் மக்களை நான் ஏமாத்தறேன். நீ வேணா சர்ச்சுக்குப் போ பாதிரியாகு கொள்ளயடி ' என்கிறார். அவரிடமிருந்து அலீமாவை அழைத்துக் கொண்டு ஓடும் மம்மது தனது உடல் வலிமையைக் காட்டி மகிழ்ந்திருந்து பணம்பெறும் விபச்சாரனாக இருக்கிறான். எது நடந்தாலும் எதுவும் கடவுளின் ஆணைப்படியே நடக்கிறது என்ற அவள் தந்தை இருக்கிறார். விளையாட்டுத்தனமான அலிமாவை இழுத்து வரும் வீட்டினர், அவ்வாறு இழுத்து வரும்  போதெல்லாம் அவளது அங்கங்களை தீத்தீண்டலிடும் காசிம் என அலீமாவைச் சுற்றிலும் மதம், காதல், கட்டுப்பாடு, காமம் என்ற சிறையிலிருந்து விடுபட்டு ஓடும் அலிமா பித்தம் பிடித்துக் கரைந்து வேறொரு அவதாரம் எடுக்கிறாள். 


நேரியல்பற்ற நடையில் சொல்லிச் சொல்லப்படுகிறது அலீமாவின் கதை. அவளது பிறப்பு, இளமைப் பருவம் தவிர, எதிர்பார்ப்புடன் அவள் இணங்கிச் செல்லும் முஸ்லியாருக்கு பொருளாசை தவிர தன்மீது அன்பில்லை என்பதை உணர்ந்து அங்கிருந்து மம்மதுவுடன் வெளியேறி அவன் அவளிடமிருந்த பொருள்களைப் பறித்துக்கொண்டு ஓடியபின்னர் மனநோய் காப்பகம் சென்று தப்பி வந்து எழுத்தாளராவது என நான்கு பருவங்களின் தொகுப்பு இந்த நாவல். அவளுடைய மாற்றங்கள் பகடியாக சொல்லப்படுகின்றது. அவள் தன்னுடைய ஆக்கங்களை கழிப்பறை சுவற்றில் கிறுக்க பதிப்பாளர் அனைத்துக் கழிப்பறைகளாக சென்று அதைப்படியெடுத்துப் பதிப்பிக்கிறார். அதன் வழியாக அவளது படைப்பிற்கு 'முட்டைச்சிம்னி' விருது கிடைக்கிறது. ஆங்காங்கே சிதறுண்டு இந்த சித்திரங்கள் வெளிப்பட்டாலும் தனித்து  வரும் மூன்று அத்தியாயங்கள் சேர்கையில் அது முழு வடிவத்தை எட்டுகிறது. அவை அதில் வரும் எழுத்தாளரின் அத்தியாயங்கள். எழுத்தாளராய் அலிமா வரும் அத்தியாயம், அலீமாவின் பெரியப்பா அவளுடைய கதையை எழுதும் அத்தியாயம், இந்நாவலாசிரியர் இடையில் வந்து தரும் தன்விளக்க அத்தியாயம். அவற்றில் தமிழ்த் திரைப்படக் கதாநாயக, நாயகியின் லட்சணம் முதல் எழுத்தாளரின், இயக்குநரின், பதிப்பாளரின் லட்சணங்கள் வரை பகடிக்குள்ளாக்கப் படுகின்றன. ( முத்துப் போன்ற பல்வரிசையுடன் சிரித்து வெட்கப்பட வேண்டும். பசுமை நிறைந்த சோலைகளிலே ஆடிப்பாட வேண்டும் ). அதிகாரம் எங்கெல்லாம் உருவாகிறதோ அங்கு முதலில் சென்று நிற்க வேண்டியது எழுத்தாளரின் விமர்சனம் என்பது. அது இந்நாவல் வழியாக கலை இலக்கிய உலகின் போலித்தனங்கள் மீதும், பொறாமை, ஆதிக்கம் அல்லது வாய்ப்பு வந்தவுடன் மாறிவிடும் சுபாவம் மீதும் விமர்சனமாக வெளிப்படுகின்றன. புத்திபேகம் தெருவைக் கண்டு கனவில் அதை மயக்க நிலையில் உள்வாங்கித் திரியும் எழுத்தாளனின் பாத்திரம் ஒரு கணத்தில் அச்சமும், பித்தும் கலந்த நிலையில் ஒரு நொடி பார்க்கும் அந்த ஒரு உருவம் அலிமாவாக இருக்கலாம். அவனது இல்லச் சூழலின் காரணமாக அவன் கரிசனத்துடன் நடத்தப்படுவதும் அந்த அத்தியாயத்தில் வருகிறது. கூடவே சில குமாஸ்தாக்களின் கதைகளும் உதிரியாக  வருகின்றன. குமாஸ்தாக்கள் போல கற்பனைவளம் சற்றும் அனுமதிக்கப் படாத எப்போதும் குறைகண்டுபிடிக்கப்படும் வேலையையே செய்துகொண்டிருக்கிற ஒருவன் கணப் பொழுதில் கண்ட காட்சியாகவும் அந்த அலீமா இருந்திருக்கலாம். குமாஸ்தாக்கள் வேலை பார்ப்பதும் கயிறு திரிக்கும் நிறுவனத்தில்தான். அவன் அலிமாவின் கதையையே திரித்துக் கொண்டும் இருக்கலாம். 


அலிமாவின் கதை அவள் புகைக்கும் கஞ்சாவைப் போலவே நாற்றமெடுக்கக் கூடியது. மணக்கக் கூடியது. அப்போது அவளைக் கடந்து செல்லும் பல்வேறு மனிதர்களுடன் இந்நாவலில் வாசகரை பொருத்திக் கொள்ளலாம் கூட. அவள் ஏழு பருவங்களிலும் ஏழு குதிரைகளில் ஒரே நேரத்தில் பயணம் போகிறவள். அவளே சொல்வது போல ஒரு குதிரையில் கூட போக வக்கில்லாதவர்களும் இருக்கிறார்கள் தானே.  அலிமாவைப் பற்றி அவளது  இயக்குநர் அகரன் கூறுவதாக ஒரு வரி நாவலில் வருகிறது. "அவளுக்குப் பிம்பம் கிடையாது. இனி அதைக் கட்டமைக்கவும் முடியாது. அதற்கு மிகவும் பிரயாசைப் படவேண்டும். ஏற்கனவே எல்லாவற்றையும் அலிமா சுக்குநூறாக உடைத்தெறிபவள்" அத்தனைக்கும் மேல், இந்தக் கேள்வியை இந்நாவல் விட்டுவைக்கிறது. அவளுடைய வாழ்க்கையை பிறப்பு முதல் அனைத்து விஷயங்களையும் ஏற்கனவே அவளது பெரிய தகப்பன் எழுதி வைத்திருக்கிறான். அலிமாவின் அத்தனை மீறல்களும் ஏற்கனவே எழுதப் பட்டவைதானா அல்லது அது பிரமையா.. எழுதப் பட்டவை என்றால் அவளது மீறல்களுக்கு என்னதான் பொருள். கேள்வியை முன்வைத்து விட்டு  அலிமா சிட்டாகப் பறந்து விடுகிறாள். வாசகர்கள் அதை கேள்வியாகவோ பகடியாகவோ சுமந்து திரியலாம்


***



ஒரு துளியில் அடங்கும் சுற்றுவட்டம்







1



சிறுகதைகளில் எழுத்தாளர் வெளிப்படுகிறாரா அல்லது தன்னை முழுதும் வெளியே நிறுத்திக் கொள்கிறாரா என்பதைக் கண்டறிவது ஒரு சுவாரசியமான விளையாட்டு. அதற்கடுத்து தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் எழுத்துக்களில் முழுமையாக அவருடைய இயல்பு வெளியாகிறதா அல்லது கதைக்கு மட்டும் நேர்மையாக இருக்கிறாரா என்பதும் நோக்கப்படும். எமக்குத் தொழில் கவிதை நாட்டுக்கு உழைத்தல் என்பது ஒரு பி்ரகடனம் ( பாரதி). மானுட இனத்தை ஆட்டிவைப்பேன்; அவர் மாண்டு வைத்தால் அதைப் பாடி வைப்பேன் என்பது ஒரு கலகம்( கண்ணதாசன்) . என் எழுத்துக்கள் என்னை நான் அறியும் முயற்சி என்பது ஒரு ஒப்புதல் ( நாஞ்சில் நாடன்). பொதுவாக சொல்லப்படுவது என்பது ‘இலக்கியம் ஒரு காலத்தின் கண்ணாடி’ என்பது. தன்னை விலக்கிக் கொண்டு சமூகத்தைப் பிரதிபலிப்பது எழுத்தாளனின் பணி என்பது பொதுக்கூற்று. என்.ஸ்ரீராமின் கதைகளை அணுகும் போது முதற்பார்வையில் அவர் இந்தவகை எழுத்தாளராக உணர வைக்கிறார். தர்க்கங்களுக்கு ஆட்படாத மனிதர்களையே எழுதிவருபவர். சென்றகணம், வரும் கணம் ஆகியவை பொருட்டு இல்லாத நிகழ்காலத்தை வாழும் எளிய மனிதர்களின் கதைகள். ஆகவே வாழ்தலுக்காக எதையும் உதிர்ப்பதையும் மறுப்பதையும் இயல்பாக செய்துவிட்டுப் பின் அதற்கான குற்றவுணர்ச்சியை வேறெங்கோ வடிகாலாக்கிச் செல்லும் நாட்டுப்புற குணம். தாமரைநாச்சி ஆறுமுகக்காவடி ஆகிய கதைகளை உதாரணமாகக் கூறலாம். மேற்கொண்டு நகர தாமரைநாச்சியைப் பலிகொடுக்கும் குடும்பம், தன்னுயிரைக் காப்பாற்றியிருந்தாலும் சாதியில் கீழானவனின் காவடியை எடுக்க சீறும் மனம். சென்னையில் உதவி இயக்குநராக இருப்பவரின் வாழ்க்கையைக் காட்டும் வண்ணக கனவுகளும் அப்பாவும், தனது குடும்பத்தை விட்டு தனது எஜமானர் வீட்டிற்கு சமையற்காரனாக இருக்கும் தந்வர்கள் நூதனமாக வெளியேற்றும் விசுவாசம் ஆகிய கதைகள் அவர் நடையில் சிறந்து வெளிப்பட்டாலும் அவரது கதை உலகிற்கு வெளியே நிற்பவை என்றும் சொல்லலாம்.




என்.ஸ்ரீராம் கதைகளை வாசித்தபிறகு அவரை, நாட்டுப்புறப் பாடகன் என்பதைப் போல நாட்டுப்புறக் கதை சொல்லி என்றுதான் அடையாளப்படுத்த முடிகிறது. அவர் சொற்களில் வர்ணனைகளில் வெளிப்படுவது கச்சிதமான வாக்கிய அமைப்பு என்றாலும் அது ஒரு கிராமத்தானின் வட்டாரப் பேச்சுமொழியாகவே இருக்கிறது. அவர்கள் பாடும் ஏலோலோவாக அந்த நடை இருக்கிறது. சித்தார்த்தி வருஷ வெய்யிலும் ஆவணி்மாத மழையும் என வருகின்றன நாள்குறிப்புகள். நெட்டுக்கட்டு வீட்டைப் பற்றிய வர்ணனையை துவக்கும் போது ஊர்ப்பொது கிணற்றில் தண்ணிசேந்த வரும் பெண்கள் கயிற்றை அந்த வீட்டின் திண்ணையில் போட்டுச் செல்வார்கள். இரவும் பகலும் கிணற்றில் கப்பிகள் உருளும் சப்தம் வீட்டுக்குள் கேட்படியே இருக்கும் என்று துவங்குகிறது. ஊர்க்கதைகள் மொத்தமும் அந்த வீட்டிற்கும் அந்த வீட்டுக் கதைகள் ஊருக்கும் தெரிந்தபடியே இருக்கும் என்கிற சித்திரம் உருவாகிவிடுகிறது (நெட்டுக்கட்டு வீடு). தத்தமது தந்தைகளின் தொடுப்புகளை அறிய ஒரு தலைமுறையை ஆண்ட தாசிக்குறத்தியை அணுகி பணம் கொடுத்து ரகசியங்களைக் கேட்கும் கதை (வெளிவாங்கும் காலம்). ஒரு சொல் பொறுக்காமல் பல வீர சாகசங்கள் வழி அதைக் கடக்க முயலும் ஓடக்காரன் கதை (நதிப்பிரவாகம்) ஆகியவையே மேற்சொன்ன கதைகளைவிடவும் அவரது கதைஉலகிற்குள் நுழைய ஏற்றவை. தற்போதைய மூத்த எழுத்தாளர்களான ஜெயமோகன் எஸ்.ராமகிருஷ்ணன் தலைமுறையை தொட்டு வந்த எழுத்தாளர்களில் என்.ஸ்ரீராமின் கதைகள் முக்கியமானவை. நீ்ண்ட கதைகளானாலும் குழப்பமில்லாமல் தொகுத்துக்கொள்ளும் வகையில் சொல்வதி்ல் அவரது தனித்துவமான நடைக்கும் முக்கிய பங்கு உண்டு. ஆங்காங்கு இடைபடும் சடைவு திடுமுட்டி போன்ற கொங்கு நிலப்பகுதியின் சொற்பிரயோகங்களை துருத்தல் இல்லாமல் இலகுவாக கையாளுவதையும் குறிப்பிட வேண்டும். அவ்வாறு அவரது புனைவுலகில் நுழைகையில் அவரது கதைகளின் இரு வேறு வகைமைகளை உணரமுடிகிறது. அவற்றை பொது சிறுகதை வகைகளோடு ஒப்பிடுகையில் ஒருவித மீறல் என்றும் சொல்லலாம். முதலாவது தொன்மமும் யதார்த்தமும் கலக்கும் விதம். மற்றது சிறுகதையின் வடிவமும் உள்ளடக்கமும் கலக்கும் விதம்.










2







நாட்டுப்புறக் கதைகள் குலசாமிக்கதைகள் இரண்டும் ஒரு களத்தில் நிகழ்பவை என்றாலும் வேறுபாடுகளில் முக்கியமானது அறமீறலை அவை எதிர்கொள்ளும் விதம். சொல்வழக்கில் திகழும் நாட்டுப்புறக் கதைகளில் குற்றவுணர்ச்சி பாவனை குறைவு. ஆகவே அதன் எல்லைகள் விரிகின்றன. அதன் உள்ளடக்கம் மிகவும் கற்பனைத் திறன் கொண்டதாகவும் நிகழ்வுகள் அற்புதங்கள் நிறைந்ததாகவும் இருக்கின்றன. விராடபர்வம் வாசித்தால் மழை வரும் என்பது ஐதீகம். அதன் நீட்சியை நாம் கண்டுகொண்டே இருக்கலாம். சமீபத்தில் மகாபாரத கதையை ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்த்த திரு.அருட்செல்வ பேரரசன் தான் விராட பர்வம் மொழிபெயர்த்த போது மழைபொழிந்ததை தனது பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதை மனம் நினைவுபடுத்திப் பார்த்தபடியே இருப்பதைக் காணலாம். அதன்படி நிகழ்ந்தால் அல்லது நிகழாமல் போனால் அதை ஒட்டிய காரணங்களை காரணிகளுடன் ஒப்பிட்டுப்பார்க்கத் தேடுகிறோம். நமது தர்க்கத்தோடு பொருத்தப் பார்க்கிறோம். யதார்த்தத்தில் என்னவானாலும் கதையை அதற்கேற்ப மாற்றுவது இல்லை. ஆகவே, கதைகள் தர்க்கத்தைத் தாண்டி நிற்பவையாக உள்ளன. ஆனால் நமது புரிதலுக்கு ஏற்ப அதை வளைத்து நாம் உள்வாங்கிக் கொள்கிறோம். ஆண்டாள் ஸ்ரீரங்கத்து பெருமாளுடன் ஐக்கியமாகிறார் இராமலிங்க வள்ளலார் அருட்பெரும் ஜோதியாக ஆகிறார். இவற்றை தர்க்கமனம் கொண்டு விளங்கிக் கொள்ள நினைத்தால் எவ்வளவு முயன்றாலும் நாம் வாசித்த சொல்லப்பட்ட கதைகளை வைத்து விளக்கும் போது மூலத்தில் உள்ள மாயம் குறைகிறது. மாயம் இருக்கும் போதே அவை கதைகளாகின்றன. கதைகளாக இருக்கும் போதே அவற்றிற்கான முழுநியாயமும் கிடைக்கிறது. கதைகள் சொல்லும் குறியீடுகளை வைத்து பார்க்கும் போது சாமானியனுக்கு உருவாகும் அகத்திறப்பு முக்கியமானது. வள்ளலாரின் ஜோதி வடவைத்தீயை அணைக்க ஏற்றப்பட்ட நெருப்பாக அதே வடலூரில் திகழ்வதை உணரும் கணத்தில் அடையும் ஒருவித பரவசத்தை கதைகள்தான் அளிக்க இயலும்.




இரண்டாவதாக, ஒரு புராணத்தை அல்லது பழங்கதையை சம்பந்தப்பட்ட நபர்களை மட்டும் வைத்து சமகால புரிதல்கொண்டு ஒப்பிட்டுப் பார்க்கையில் உருவாகும் புரிதல் குறுகிய ஒன்றாக ஆகிவிடுகிறது. ஒரு சதுரங்க களத்தை மீட்டுறுத்திப் பார்க்கும் போது ஒட்டுமொத்த பலகையும் காட்சிக்கு வர வேண்டும். வீழ்ந்த காய்கள் எவை? அவை எப்படி வீழ்த்தப் பட்டன? இருக்கும் காய்கள் எவை? ஒரு நகர்வு யார் யாருக்கு வழியளிக்கும் ஆகியவை முக்கியம். ஆகவே நாம் அவற்றைப் புரிந்து கொள்ள அங்கு பயணிக்க வேண்டும். அவ்வாறில்லாமல் அவர்களை நமது நிகழ்காலத்திற்கு இழுத்தால் அதுவும் குறைவான புரிதலாக ஆகிறது.




நாட்டுப்புறக் கதைகளை இலக்கியத்தில் அவ்வாறாகவே எழுதியவர்களில் கி.ரா முதன்மையானவர். துவக்கத்தில் அதை தன் தர்க்கத்திற்கு ஏற்ப சற்று மாற்றினாலும் பிற்காலத்தில் அந்தக் கதைகளை மாற்றக் கூடாது என்கிற புரிதலை அடைந்ததாக தனது உரையாடல்களில் கூறுகிறார். புராணக் கதைகளின் சாயலோடு நவீன இலக்கியத்தில் எழுதுவது (ஜடாயு), நாட்டுப்புறக் கதைகளை நவீன சிறுகதையாக எழுதுவது என்று அவரது கதைகளில் கண்கிறோம். சமகால எழுத்தாளர்களில் மூத்தவர்களில் நாஞ்சில்நாடன் தொன்மங்களை கையாளும் விதம் குறிப்பிடத்தக்கது. அவரது கதைகளில் மாடனும் முனியும் நமது மரபின் சாட்சிகளாக உள்ளனர். முதியோர்களைக் கைவிடும் மைந்தர்கள், அறம்மீறும் அதிகாரிகள், மக்களைப் பொருட்படுத்தாத தலைவர்களை காணும்போது அறம் பாடுபவர்களாக அவர்கள் எழுந்து வருகிறார்கள். ஜெயமோகன் கதைகளில் தொன்மங்களை தர்க்கத்தோடு அணுகுவதை காணலாம். புரிந்து கொள்ளும் யத்தனிப்பு அல்லது அதில் உள்ள பூடகத்தன்மையை இன்னும் பூடமாக்குவது ஆகியவை அவரது கதைகளில் நிகழ்கின்றன. மற்றொரு புறம் நாட்டார் தெய்வங்கள் பெருமதங்களோடு இணைவதில் உள்ள அபத்தங்களையும் சுட்டுகிறார் ( மாடன் மோட்சம்). ஆசிரியர்களின் குரல் வெளிப்படும் கதைகள் என்று இவ்விருவரின் கதைகளை வகைப்படுத்தலாம்.




அந்த வகையில் என் ஸ்ரீராம் கதைகளை தனித்துவமாக்குவது அவற்றில் உள்ள ஆசிரியரற்றதன்மை. ஆசிரியரின் தர்க்க அறிவு இடராத காரணத்தால் அவை கேள்விகளாக புரிதலாக மாறாமல் கதைகளாக அப்படியே நீடிக்கின்றன. அதில் உள்ள மாயத்தன்மை அப்படியே தொடர்கிறது. நிகழ்காலத்தில் அவை எவ்வாறு முரண்படுகின்றன தேய்கின்றன என்கிற பார்வையை சொல்லிவிட்டு ஒதுங்கிவிடுகிறது. ஆகவே அவர் கதைகளில் உடுக்கு அடித்தால் மழை வருகிறது. கருட மந்திரம் பாடி அதனால் கருடன் வந்து அடித்து சித்தப்பாவிற்கு பாம்பு கடித்த விஷம் இறங்குகிறது. அம்மன் சக்தியால் அநியாயம் செய்தவனின் பார்வை பறிபோகிறது. அவற்றை மாய யதார்த்தமாக அவர் வழங்கவில்லை. தொன்மங்கள் கதைகளில் அவ்வாறே நிகழ்கின்றன. அவ்வாறு கதைகள் அற்புதங்களையும் பேசவில்லை; அவற்றை தர்க்கத்தோடும் அணுகவில்லை. அதாவது அற்புதம் நிகழ்ந்து வரம் பெற்று யாரும் வாழ்ந்துவிடுவதில்லை. அவர் இரு சர்ப்பங்கள் பிணைவது போல அவற்றைப் பிணைக்கிறார். நாகமும் சாரையும் தனித்தனி. ஆனால் பிணையும் போது அதை நாம் நாகம் என்றும் சொல்வதில்லை. சாரை என்றும் சொல்வதில்லை. அவை பிணைசர்ப்பங்களாகத்தான் நிற்கின்றன. நெட்டுக்கட்டு வீடு கதையில் மண்ணில் புதைவுண்டு கிடக்கும் மாந்திரீகம் வெளியே வருவதற்கும் பழனாத்தாள் வாழ்க்கை புதைவுண்டு போவதற்கும் ஒரு இணைப்பை வாசகரால் கொடுக்கவே முடியாது. இரண்டும் வெவ்வேறு. ஆனால் ஒரே கதைக்குள் வருவதால் அவ்விரண்டையும் கவனிக்க வேண்டியிருக்கிறது. செல்லியக் கவுண்டரின் மனதில் புதைந்திருக்கும் பழமை வெளியே வரும்போது பழனாத்தாள் உயிரைவிட வேண்டியிருக்கிறது. அவரது கதைகளில் வரும் தொன்மமும் யதார்த்தமும் அவ்வாறே நிலைகொண்டு எழுகின்றன. இதில் எது சாரை எது நாகம்?




உடுக்கடிக்கும் கலைஞன் தனக்கான வாழ்வை இழந்து பழனி படிக்கட்டில் பிச்சை எடுக்க அமர்வது ஒரு கதை (உடுக்கை விரல்) . ஆனால் அது துவங்குவது மூன்று தலைமுறைக்கு முன் உடுக்கடித்து மழை கொண்டு வந்ததும் இறந்தவர்களை எழுப்பியதுமான காலகட்டத்தில். முதலில் உடுக்கு அடிக்கையில் பத்தாயிரம் பேர் பார்ப்பதாக நினைத்துக்கொள் என்று அவனிடம் அப்பா சொல்கிறார். இறுதி உடுக்கு அடிக்கையில் அவன் வெள்ளத்தையும் நினைத்துக்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது. சாரையிடம் நாகம் வீழந்து விடுகிறது.








3




சிறுகதைகளுக்கான வடிவம் எவ்வாறு இருக்கவேண்டும் என்று பலரும் எழுதியிருக்கின்றனர். சிறுகதையை தீர்மானிப்பது பக்க அளவா உள்ளடக்கமா? சிறுகதை எழுதும் போது வாசகர்களை மனதில் வைத்து எழுதுவதா அல்லது தன்னை நிறுத்தி எழுதுவதா என்கிற விவாதமும் தொடர்ந்தபடியே உள்ளன. தற்போது கிட்டத்தட்ட ஒரு திரைமொழிக்கான எதிர்பார்ப்பை கட்டாயத்தையும் சிறுகதையில் வைப்பது நிகழ்கிறது. (முதல் ஃப்ரேமில் துப்பாக்கி வந்தால் படம் முடிவதற்குள் அது வெடித்தாக வேண்டும்). ஒரு சிறுகதை ஒரு காலகட்டத்தை சொல்லவேண்டும். நீண்ட காலத்தை சொன்னால் அது ஒரு மனிதனின் வாழ்க்கை திருப்பங்களை சொல்லவேண்டும் ஆகிய நிர்பந்தங்கள் சிறுகதைக்கு உண்டு. சிறுகதை நாவல் என்கிற வடிவம் இன்னும் மாறி குறுங்கதை சிறுகதை குறுநாவல் நாவல் என்று விரிந்த போது குறுங்கதைக்கும் குறுநாவலுக்கும் இடையே சிறுகதை என்கிற வடிவத்தின் நோக்கம் என்ன என்பதும் கேள்வியாகிறது.




தி.ஜாவின் முக்கியமான சிறுகதைகளில் ஒன்று தவம். விலைமாது மீது ஏக்கம் கொண்ட கதையின் நாயகன் சிங்கப்பூர் சென்று அவளுக்கான பொருளை ஈட்டிக் கொண்டு வரும்போது முதியவளான அவள் அவனுக்கு ஒரு முத்தம் கொடுக்கிறாள். கதையோட்டம் பத்து இருபது வருடங்களானாலும் அது நாயகனின் விழைவு என்கிற ஒற்றைப் புள்ளியை நோக்கி குவிவதால் அது இடையூறாக இருப்பதில்லை. ஜெயமோகனின் ஈறாருகால்கொண்டெழும் புரவி என்கிற சிறுகதையும் இத்தகைய ஒரு புள்ளியை மையமாக கொண்டு எழும் படைப்பு. ஒரு மனிதரின் ஆயுட்காலத்தை வர்ணிக்கிறது. பக்க அளவிலும் பெரியது. யுவன் சந்திர சேகரின் சிறுகதையான ‘இருபத்துமூன்று காதல் கதைகள்’ உள்ளிட்ட ஏனைய கதைகளும் சுமார் ஐம்பது பக்கங்கள் வரை நீள்கின்றன. ஆனால் கால ஒட்டத்தில் ஓரிரு வருடங்களுக்குள் நிகழும் சம்பவங்கள். அவையும் சிறுகதை என்றே தொகுக்கப் படுகின்றன. அதன் உள்ளடக்கம் என்பது சிறுகதைக்கானது என்றே அவற்றின் ஆசிரியர்கள் கருதுகிறார்கள்.




என்.ஸ்ரீராம் கதைகளில் பெரும்பாலானவை அறுபது வருட வாழ்வை சொல்கின்றன. அதில் சில நூறு வருட வாழ்க்கையையும் சொல்பவை . அதற்குள் யதார்த்த வாழ்வு, தொன்மம், பருவநிலை மாற்றம் , சமூகம் நகர்ந்து செல்லும் நிர்பந்தம் என அனைத்தும் பிணைந்து வருகின்றன. அவர் சொல்ல வருவது ஒரு மையத்தை அல்ல என்பதும் கதையின் மையம் ஒரு கதாபாத்திரத்தை விட்டு மற்றொரு கதாபாத்தி்த்துக்கு கதைக்குள்ளாகவே தாவுவதையும் காணமுடிகிறது. அந்தவகையில் அவருடைய நடை மேற்சொன்ன வடிவங்களுக்குள் ஆட்படாத ஒரு தனித்துவ பாணியாக உள்ளது. ஒருவகையில் சிறுகதைகள் அனைத்தும் நாவலுக்கான கனம் கொண்டவையாக உள்ளன. மீசை வரைந்த புகைப்படம் அதற்கு ஒரு சிறந்த உதாரணம். கதை மாமாவிடம் துவங்கி சுகுணாவிடம் சென்று கதைசொல்லியின் மனைவியிடம் வந்து முடிகிறது.




ஆண்டு கணக்குகளின் படி அறுபது வருடம் என்பது ஒரு சுற்றுவட்டம் எனப்படுகிறது. அந்த அறுபது வருடங்களில் ஒருவரது வாழ்க்கையை ஒற்றைப் பார்வையில் சொல்லிவிட முடியாது. அதைச் சொல்லும் போதே அவரைப் பாதித்த பிற காரணிகள் யாவை அதனால் அவனது வாழ்க்கை மாறுவது எப்படி என்பதையும் காணவேண்டும். அதிலும் இருபதாம் – இருபத்தொன்றாம் நூற்றாண்டுகளில் எழுத வருகிறவர்களை ஒரு யுகசந்தியை கண்டவர்களாக கூறலாம். விழுமியங்களும், நம்பிக்கைகளும் கண்முன்னலே வேறொன்றாக உருமாறுவதைக் காண்கிறார்கள். அதன் தாக்கம் அவர்களின் கதைகளில் வெளிப்படுகிறது. என்.ஸ்ரீராம் கதைகளிலும் அது வெளிப்படுகிறது. ஆனால் அவர் வாதியும் அல்ல பிரதிவாதியும் அல்ல நீதிபதியும் அல்ல. அவர்களில் தன்னை ஒரு சாட்சியாகவே நிறுத்திக்கொள்கிறார். கொடுமுடி ஆறும் அமராவதி ஆறும் சண்முக நதியும் பொங்கியும் வறண்டும் நிற்கும் காலத்தைக் கடந்தபடி ஓடிக்கொண்டிருக்கிறது கதைகள். இருபதடியில் தண்ணீர் வந்த காலமும் ஐநூறு அடிக்கும் போர் போட்டு தண்ணீர் வராத காலமும் வருகிறது. புரட்டாசி பெருமழையும் வருகிறது. வெகுதான்ய வருட பஞ்சமும் வருகிறது. அனைத்தும் ஒரு சிறுகதை வடிவத்தில் சுருங்கி இருக்கிறது. ஒருவித சங்குசக்கரம் பட்டாசு போன்று உள்ளங்கை அகலத்தில் சுருண்டு கிடக்கின்றன கதைகள். அதைப் பற்றவைத்து சுழல வைப்பது என்பது வாசகர் கையில் உள்ளது. அவ்வாறு கதைகளை விரித்தெடுக்கும் வாசகர் அதன் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் பின்னாலும் ஒரு நாவலுக்கான களம் இருப்பதை உணரமுடியும்.