Sunday, March 22, 2026

ஞானபீடம் விருது - கண்டனக் குரல்களின் நியாயங்கள்

 

வைரமுத்துவுக்கு ஞான பீடம் அளிக்கப்பட்டதை எதிர்த்து எழுந்த எழுத்தாளர்களின் குரல்களோடு என்னை இணைத்துக் கொண்டேன். சமூக வலைதளத்தில் எனது கண்டங்களைப் பதிவிட்ட போது, வந்த எதிர்வினைகளை வகைப்படுத்தினால், ஒன்று அவரது புலமை புரியாதவர்களின் ஓலம் இது என்றது. கல்லூரி ஆசிரியர்களாக உள்ள சில நண்பர்களே கூட இதை ஆதரிக்கிறார்கள். அவர்களுக்கு  இந்த எதிர்ப்பு ஏன் என்று புரியவில்லை. மற்றோன்று இதை ஆண்டாள் பிரச்சனையோடும் இணைத்து இது பழிவாங்கல் என்றது. ஆதரித்த குரல்களில் சில இவ்வாறு மீடுவில் சிக்கியவர்களுக்கு ஜனாதிபடி அதுவும் ஒரு பெண் குடியரசுத் தலைவர் பரிசு அளிக்கக் கூடாது என்றது.   எழுத்தாளர்களின் கண்டன அறிக்கையை வாசித்தாலே அது முதன்மையாக  இலக்கியப் பங்களிப்பின் அடிப்படையிலானது என்பதையும் அதற்கிணையாக மீடூ புகார்களையும் பரிசீலிக்கக் கோருகிறது என்பதையும் உணர முடியும். அந்த அறிக்கையை இங்கு காணலாம். எனது பதிவு அதை ஒட்டியே எழுதப்படுகிறது

 


தமிழ் மக்களின் சராசரியான கலை இலக்கிய அறிவு என்ன என்பதை  சமகாலத் திரையிசைப் பாடல்களை வைத்துச் சொல்லலாம். திரைப்படங்கள் என்பவை சராசரி தமிழ் மனத்திற்கு ஏற்ப எடுக்கப் படுகின்றன. மக்களிடம் இதுவே செல்லுபடியாகும் எனக் கருதி சில தீவிரங்கள் கூடக் குறைத்துக் கொள்ளப் படுகின்றன என்று திரைப்படம் சார்ந்த வலைதள உரையாடல்களின் வழி அறியக் கிடைக்கிறது. இந்த அடிப்படையில்தான் மக்கள் ரசிக்கிறார்கள் எனக் கண்டு,  கேட்டுக் கேட்டு சலித்துப் போன  கதைகளும் காட்சிகளும் மீண்டும் மீண்டும் வருகின்றன. ஆகவே அதைச் சுவாரஸ்யமாக்க திரைக்கதையாளர்கள் கவிஞர்கள் இசையமைப்பாளர்கள் ஒளிப்பதிவாளர்கள் உள்ளிட்ட  கலைஞர்கள் தன்னுடைய தனிப்பட்டத் திறனின் வழி மெருற்றுகிறார்கள். அங்கு ஒருவர் நிலைகொள்ள வேண்டுமென்றால் அடிப்படையாகவே ஒரு திறமை தேவையாகிறது. முன்னணி இடத்தில் நீண்டநாட்கள் நீடித்து இருக்க அந்த தனிப்பட்டத் திறமையும் ஆற்றலும் முக்கியம். அவ்வகையில் வைரமுத்து அவர்கள் இளையராஜாவுடனிருந்து பிரிந்த பின்னரும் தன்னைத் தக்க வைத்துக் கொண்டார். சரத்குமார் நடித்த கேப்ட்ன் உள்ளிட்ட சில டப்பிங் படங்களின் பாடல்களைக் கூட நாம் முணுமுணுக்க அதன் வரிகள் முக்கியக் காரணம். அந்தளவு ஆளுமையுடன் அவர் விளங்குகிறார்.

அவருக்கும் முன்பு வரையிலான திரைப்பாடல்களில் சங்க இலக்கியங்களை அவ்வாறே எடுத்தாளுதல் பரவலாக இருந்தது. ஆனால் வைரமுத்துவின் வருகைக்குப் பின்னர் அது மாறியது.  முன்னவர்களை விடவும் அதிகமாக அடித்தட்டு மக்களிடம் புழங்கியவர் என்பதாலும், திரைப்படங்கள் கி்ராமத்தை நோக்கி சென்றதாலும் அப்போது நிலை கொண்டிருந்த இடதுசாரி மற்றும் திராவிட அரசியல் கருத்தியலாலும்  அவரது பாடல்கள் ஒப்புநோக்க  பிறரைவிட அதிகம் கிராமிய யதார்த்தத்தைக் கூறின என்பதும் அதில் புதுப்புது உவமைகளை அவரால் உருவாக்க முடிந்தது என்பதும்கூட மறுக்கவியலாது. அதாவது சங்க இலக்கியத்திலிருந்து பெறப்படாத அவரது தனிப்பட்ட உவமைகள் பல எழுந்து வந்தன.  ’இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல’ ’பெய்யெனப் பெய்யும் மழை’ உள்ளிட்டத் தொகுப்புகள் நான் பள்ளிக்காலத்தில் வாசித்தவை. அதில் உள்ள பல வரிகள் பிற்காலத்தில் திரைப்பட பல்லவிகளாக சரணங்களாக வந்தன என்பதையும் உணர்ந்திருக்கிறேன். இதிலிருந்து, இயக்குநர்களும் இசையமைப்பாளர்களும் அவரது வரிகளால் ஈர்க்கப்பட்டு அவற்றைப் பாடலில் சேர்த்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.  ஆனந்த விகடனில் அவர் எழுதிய ஒரு கட்டுரையில் இருந்த நீ காற்று நான் மரம் என்கிற வரிகளை வாசித்த வித்யாசாகர், தான் அதற்கு இசையமைத்து தனது படத்தில் சேர்த்துக் கொண்டதாக அடுத்த இதழில் தெரிவித்திருந்தார். வணிக இலக்கியத்தை வாசித்து வந்த போது, எப்படி பாலகுமாரனும் சுஜாதாவும் ஸ்டெல்லா புரூஸ் ம் எப்படி நம்மை அடுத்த கட்ட ரசனைக்குக் கொண்டுவந்தார்களோ அப்படித்தான் வைரமுத்துவும் தனது கவிதைகளாலும் நாவல்களாலும் அடுத்த கட்ட வாசிப்புக்கு வாசகரை இட்டு வந்தார் என்பதை மறுக்கவியலாது.

இன்றைய இன்ஸ்டா பாவனையில் சொல்லவேண்டுமெனில், நான் சென்னை வந்த புதிதில் ’யதேச்சையாக’ சாலையில் போகும் போது.. மைலாப்பூரில் ஸ்கூட்டரில் பறக்கும் பாலகுமாரனை, அரும்பாக்கம் வசந்தபவனுக்குச் அடிக்கடி சாப்பிட வரும் வைரமுத்துவைக் காண்பதுண்டு. நானும் ’யதேச்சையாக’ எதிரில் சென்று வணக்கம் வைப்பேன். வைரமுத்துவின் மொழிநடை மீது இருந்த ஆர்வமும் அவரை நான் வாசித்திருக்கிறேன் என்று அவரிடம் சொல்லிக்கொள்ள ஒரு துடிப்பும் உந்தித் தள்ளும். கூடவே அவரது ’மன்னவன் வந்தானடி தோழி’ பாடல் சிவாஜி டைப் நடை என்னைத் தள்ளியும் நிற்க வைக்கும். அவர் நடந்து வரும்போது போது ராஜாதி ராஜமகா ராஜகுலதிலக ராஜாதி ராஜன் வந்தாரேஏஏஏ என்று மனதுக்குள்  பாட்டு ஒன்றும் பாடும். எது அத்தகையதொரு விலக்கத்தை அளித்தது எது என யோசிக்க வேண்டும்.

அந்த இடைவெளிக்குள் எனக்கு விகடனின் தீபாவளி மலர் வாயிலாக கிரா, நாஞ்சில் நாடன், துணையெழுத்து, கதாவிலாசம் ஆகிய தொடர்கள் வழியாக எஸ்ரா மற்றும் சங்க சித்திரங்கள் வழியாக ஜெயமோகன் உள்ளிட்ட தீவிர இலக்கிய உலகம் அறிமுகமாகியிருந்தது. அப்போது செம்புலப் பெயல் நீர் போல என்கிற குறுந்தொகை வரியை ஜெ. அதில் குறிப்பிட்டிருப்பார். அதற்கு முன் வந்த இருவர் படத்தில் நறுமுகையே பாடலில் இதே வரியை வைரமுத்துவும் கையாண்டிருப்பார். அப்போது வைரமுத்துவின் வாசகனாக இருந்த எனக்கு இவர் என்ன வைரமுத்துவின் வரி அவரது சொந்த வரி இல்லை என குத்திக் காட்டுகிறாரா என்று தோன்றியது என்பது இந்த வரியை எழுதும்போது நினைவுக்கு வந்து குறுநகையை அளிக்கிறது.

 

வைரமுத்துவின் சங்க இலக்கிய, உலக இலக்கியப் பரிச்சயமும் கண்டிப்பாகப் புறந்தள்ள முடியாதவை.  ஒரு உதாரணமாக, நான் ரஷ்ய கலாசார மையத்துடன் இணைந்து சில இலக்கிய கூட்டங்களை ஒருங்கிணைத்துச் செயல்பட்டபோது,  அங்கு ரஷ்ய இலக்கியங்கள் குறித்த  மாதந்தி்ர கூட்டங்களை, தான் திரையிசைக் கவிஞராக வெளிப்படுவதற்கு முன்பான காலத்தில் வைரமுத்து ஒருங்கிணைத்தார் என்பதை அறிந்தேன். அவர் இடதுசாரிக் கொள்கைகளால் ஈர்க்கப் பட்டார். ஆனால்  அவர் தன்னை ஒரு அரசவைக் கவிஞராகவே முன்வைத்துக் கொண்டார். திரைப்படப் பாடலாசிரியர்கள் கம்பனிலிருந்து கற்பனையைக் கடன் வாங்கியது போல கம்பனின் பிற குணங்களையும் கடன் வாங்கிக் கொண்டனர் என்று தோன்றுகிறது. அதில் ஒன்று அரசனுடன் நெருக்கமாக இருத்தல்.  அவருக்கு வாழ்த்துப் பாடுதல், அதிகாரத்துடன் இயைந்து கொள்ளுதல் புவியோ உனக்கடிமை நீரோ எனக்கடிமை என செல்லம் கொஞ்சுதல், யார் தருவார் இந்த அரியாசனம் என உச்சிக் குளிர்தல் என. எம்ஜிஆர் விஷயத்தில் கண்ணதாசனுக்கும் வாலிக்கும் போட்டியே நிகழ்ந்தது என அறிகிறோம். அதுவே கலைஞர் வைரமுத்து காலத்திலும் தொடர்ந்ததைக் காண்கிறோம். முன்பு தமிழ்ப் புத்தாண்டாகவும் பின்னர் சண்டிவி பிறந்தநாளாகவும் வரும் சிறப்பு நிகழ்ச்சிகளில் கலைஞர் தலைமையில் நிகழும் கவியரங்கில் மாறி மாறி வாலியும் வைரமுத்துவும் புகழ்வதைக் கேட்டிருக்கலாம்.

நவீன இலக்கியம் தனது அத்துணை அழகியலிலும் நுண்ணுர்விலும் இவற்றிலிருந்து பலபடிகள் தாண்டி முன்னே சென்றுவிட்டது. ஆனால் வைரமுத்துவின் எழுத்துக்கள் 1980 களின் திரையுலக அழகியலோடு நின்றுவிட்டன. அதுவும் பாரதிராஜா உருவாக்கியது.  யதார்த்தவியலும் நாடகீயமும் உன்னதப் படுத்தலும் கலந்த ஒரு கலவையாக அவர் படங்கள் இருக்கின்றன.  அதற்கான ஒரு துணையெழுத்தாக வைரமுத்துவின் நாவல்கள் விளங்குகின்றன என்று சொல்லலாம். கிழக்குச் சீமையிலே பசும்பொன் போன்ற படங்களை வைரமுத்துவின் நாவல்கள் நினைவூட்டுவதை வாசகர் உணரலாம். வைரமுத்துவின் திரைப்பாடல்கள் மீதான பெரும் மரியாதையுடனும் அவரை விலக்கிய பின்னர் அதே இசையமைப்பாளர் களின் பிந்தையப் பாடல்களில் அவரது இன்மையை உணரும் ரசிகனாவும் இதைச் சொல்லவேண்டும். அவரது பாடல்கள் ஒரு எல்லைக்கு உட்பட்டவையாகவே உள்ளன. அவை அழகியலின், உணர்ச்சியின், தர்க்க அறிவின் எல்லைக்கு உட்பட்டவை. மானுட எல்லைக்கு அப்பாற்பட்ட ஆன்மீக தளத்திற்கு செல்லாதவை.  குல்சாரின் ச்சைய ச்சையா வின் வரிகளைக் கேட்கையில் அவை நம்மை ஒரு சூஃபி அனுபவத்துக்கு இட்டுச் செல்வதைக் உணரலாம்.  அதுவே வைரமுத்துவின் தையா தையா பெண்ணழகின் எல்லையோடு நின்றுவிடும். அந்தப் பிண்ணனி கொண்டப் பாடல்களுக்கு இயக்குநர்கள் வைரமுத்துவை அணுகுவதில்லை என்பதையும் கவனிக்கலாம். அவரது சமகால கவிஞர்களான வாலி, முத்துலிங்கம் மற்றும் அவரது அடுத்த தலைமுறைக் கவிஞர்களான கார்த்திக் நேத்தா மதன் கார்க்கி ஆகியோர் அதைக் கடக்கிறார்கள். அவர் அரசியல் மற்றும் பகுத்தறிவின் எல்லைக்குள் நிற்கிறார். அதிலும் இன்குலாப் மற்றும் தெலுங்கானாவின் கத்தார் போன்று ஒரு எதிர் அரசியலைப் பேசியதும் இல்லை. அந்தப் பிண்ணனியில்தான் அவரது கவிதைகளையும் நாவல்களையும் அணுக வேண்டும்.

 

நாம் திரைப்படங்களில் சபாஷ்மீனாவை உள்ளத்தை  அள்ளித்தா என்றும் ஹிஸ் ஹைனஸ் அப்துல்லாவை மேட்டுக்குடி என்றும் எடுக்கும்போது பார்த்து ரசிப்போம். இலக்கியத்தில் வடுவூர் துரைசாமி ஐயங்கார் இதை செய்த போது அவரை விமர்சித்தோம். இங்கு நம்மிடம் சங்க கவிகள் முதல்  முதல்  இன்றைய இளம் எழுத்தாளர் வரை எழுதியவை உள்ளன.  அதில் தனக்கான  ஒரு பார்வையுடன் வரும் எழுத்தாளர் பொருட்படு்த்த தக்கவர். அவர் சொற்ப பங்களித்தாலும் சரி. பாலகுமாரன் ஜெயகாந்தன் இருவரும் நவீன வாழ்வில் தனிமனிதனின் தனிமனுஷியின் பிரச்சனையை எழுதினார்கள். அதில் ஜெயகாந்தன் ஒரு ஆளுமையாக நிலைகொண்டார். ஆனால் அவரது ஆய்வு ஒரு  அடிப்படை கேள்வியைக் கொண்டுள்ளது. அதை நம்மால் அவர் காலத்திய ஆண் /பெண் உறவு, நாகரீகங்களின் பண்பாடுகளின் மோதல் ஆகியவை காலம் கடந்து இன்றும் நிலை கொள்வதைக் காணலாம். நாஞ்சில்நாடனின் கதைகளில் அவர் ஒரு கைவிடப்பட்டவர்களின் பிரதிநிதியாக நிற்கிறார். ஜெயமோகன் எழுதிய வெண்முரசில் உள்ள ’அதிகாரத்துக்கான கேள்வி’ என்கிற இழையை அவர் தனது துவக்ககாலத்தில் எழுதிய பல்லக்கு சிறுகதையிலும் காணலாம். வைரமுத்துவின் படைப்புகள் இத்தகையதாக இல்லை. அவர் சந்தர்பத்திற்கேற்ப படைப்புகளை அளித்தார் என்றுதான் சொல்லமுடிகிறதே தவிர அவரது படைப்புகளின் அடிப்படைக் கேள்வி என்கிற ஒன்று இல்லை. நான் வாசித்த  இரண்டரை நாவல்களிலும் மூன்று கவிதைத்தொகுப்புகளிலும் சில நிகழ்வுகள் இன்றும் ஞாபகத்தில் உள்ளன. கவிதைகளை அப்படியே சொல்லவும்முடிகிறது. (இப்போது யோசித்துப் பார்த்தேன் தலைப்கோடு ஞாபகம் வருகின்றன). ஆனால் அவற்றை தமிழின் நவீன இலக்கிய அழகியலோடு பொருத்த முடியாது.  அதற்காக அவற்றை வாரமலர் கவிதைகள் என்றும் சொல்லவியலாது. அவை ஒரு இடைநிலை எழுத்தாக நிற்கத் தக்கவை.

பிறமொழிகளில் ஞானபீட விருது அளிக்கப் பட்ட எழுத்தாளர்களின் வரிசையோடு தமிழில் ஞானபீட எழுத்தாளர்களை ஒப்பிட்டடுப் பார்ப்பது என்பது  இலக்கிய சூழலில் தவிர்க்க முடியாத ஒன்று. அந்த விதத்தில் இந்த எதிர்ப்பை பதிவு செய்வது என்பது நவீன இலக்கியத்தில் ஈடுபட்டிருக்கும் ஒவ்வொருவரின் கடமையுமாகிறது.

Tuesday, March 17, 2026

சிபிஐ கதைகள் - நியாயங்களின் திரிசங்கு


ஒரு மத்திய அரசுத்துறை அதிகாரி தன்னிடம் லஞ்சம் கேட்கும் போது உதிர்த்த 'எடுத்தெறிந்த வார்த்தைகளால்' தனியார் நிறுவன கணக்காளரான வெங்கடேசன் வெகுவாகப் புண்படுகிறார். ஒரு வேகத்தில் சிபிஐ அலுவலகத்துக்குச் சென்று அந்த அதிகாரியின் மீது புகார் அளிக்கிறார். சிபிஐ -யும் அந்த அதிகாரியைக் கையும் களவுமாகப் பிடிக்கும் ஆயத்தத்தில் இறங்குகிறார்கள். அவர் லஞ்சப் பணத்தை பொது இடத்தில் வைத்து அளிக்கும் போது சுற்றிவளைத்துப் பிடிப்பது என முடிவு செய்கிறார்கள். இந்த இடைப்பட்டக் காலத்தில் புகார் அளித்த வெங்கடேசனுக்கு அந்த அதிகாரி மீது பரிதாபம் ருவாகிறது. அவர் மாட்டிக் கொண்டால் அந்தக் குடும்பம் என்னவாகுமோ என்கிற கவலை எழுகிறது. ஆகவே அந்த அதிகாரி வரச் சொன்ன உணவகத்துக்கு வந்து அமர்கிறார். அதிகாரியும் எதிரில் வந்து அமர்கிறார். பணத்தைக் கொடு என்கிறார். இவர் தண்ணீர் குடிப்பது போலக் குனிந்து சார் கிளம்பிப் போயிடுங்க என்கிறார். அதன் பின் நடப்பது ஒரு சிறந்த அவல நகைச்சுவை.     




விமலாதித்த மாமல்லனின் சிபிஐ கதைகள் தொகுப்பு, சிபிஐ  அலுவலகத்தின் கதை அல்ல. வேறு ஒரு மத்திய அரசுத் துறையின் அலுவலரான நரஹரி, சிபிஐ யின் 'திடீர்ச் சோதனை' தருணங்களில்  அவர்களின் பறக்கும் படையின் ஒருவராக செல்பவர். அந்த அனுபவங்களில் சிலவற்றினைப்  பதினைந்து கதைகளாகத் தொகுத்திருக்கிறார்.  அரசு அலுவலக நடைமுறைஅங்கு இருக்கும் ஏற்றத் தாழ்வு, காழ்ப்பு, போட்டி, பொறாமை என அனைத்தையும் அரசியல் சரிநிலை உருவக்கேலி என எதைப் பற்றியும் அலட்டிக் கொள்ளாமல் உள்ளது உள்ளபடி சொல்லும் நடையுடன் இது கூறப்படுகிறது. 

 

இந்தக் கட்டுரையின்  முதல் பத்தியில் சொல்லப்படும் நிகழ்வைக் கவனித்தால் அதில் வெங்கடேசனுக்கு ஏற்படும் குழப்பமும் பதட்டமும் மிக அழகானவை என்று தோன்றும். இதுபோன்ற மற்றொரு நிகழ்வில் அன்பளிப்பு வேண்டாமென மறுக்கும் ஒரு அதிகாரியைக் காரணம் ஏதுமின்றி வெறும் வழக்குத் தரவுக்காக ஆசை காட்டி சிக்கவைக்கும் தருணம் சொல்லப் படுகிறது. இது போன்று அரசு துறைகளுக்குள்ளாகவே வேறு வழக்குக்காக பலிகடாவாக்கப்படும் அதிகாரிகள், ஊழல் வழக்கில் தப்பித்தாலும் பாவ புண்ணியம் கணக்கு பார்த்து வேலையைத் தொடர வேண்டாம் என முடிவெடுக்கும் குடும்பத்தினரை அனுசரிக்கும் அதிகாரிகள் என பலதரப்பட்ட சூழல்கள் சொல்லப்படுகின்றன. 

 

ஒரு சிபிஐ டைரிக் குறிப்பு படம் போல பரபரப்பாக ஒன்றைக் கண்டறியப்போகிறோம் என்கிற சாகஸ உணர்வோடு வருகிற நரஹரிக்கு இது போன்று 'பொடி வைத்துப் பிடிக்கும்' நாடகங்கள் வெறுப்பேற்றுகின்றன.  ஏனெனில் வணிகப்படம் போல அங்கு நல்லவர்கள், நேர்மையானவர்கள் vs தீயவர்கள், எதற்கும் துணிந்தவர்கள் என்கிற கறுப்பு வெள்ளைப் பாத்திரங்கள் இல்லை. நேர்மைக்குள் இருக்கும் மனிதாபிமானமற்ற தன்மையும் கபடமானவர் எனக் கருதியிருப்பவரிடம் இருந்து வெளிப்படும் கருணையான அம்சமும் கேள்விகளை எழுப்புகின்றன. நரஹரிக்கு, லட்சக்கணக்கில் கொள்ளை அடிப்பவரையெல்லாம் விட்டுவிட்டு இப்படி ஐம்பது நூறுக்கு அடிப்பவரை பிடிப்பது சரியா என்கிற குழப்பம் வருகிறது.   அப்போது நிகழும் உரையாடல் குறிப்பிடத் தக்கது //சொசைட்டில் 30% என்ன ஆசை காட்டினாலும் தப்பான வழிக்குப் போகாது. 30% என்ன பண்ணினாலும் நல்ல வழிக்குத் திரும்பாது. இந்த இரண்டு இடைல இருக்கற 40%, மதில் மேல் பூனை மாதிரி. மாட்டிக்க மாட்டோம்னா தப்புப்பண்ண ரெடியா இருப்பாங்க. தப்பு பண்ணி மாட்டிக்கிட்டா லைஃபே போயிடும் அவனை மிரட்டி வெச்சிருந்தா பயந்துகிட்டு ஒழுங்கா இருப்பான். இந்த 40 நல்ல 30தோட சேர்ந்ததான்னா சொசைட்டி ஓரளவாவது ஒழுங்கா இருக்கும். அதுக்கு, எதுக்கும் துணிஞ்சு இந்த TTE மாதிரி ஆட்களை பிடிச்சு உள்ள போட்டோம்னா ஆகணும். முதல் தடவை பண்ணுறவன், எப்பயாவது தப்பு பண்ணுவான்னு சொல்ல முடியாது. கூட இருக்கறவங்களே இவன் போட வேணும்னு ஆள்தான்னு சொல்ற மாதிரி இருக்கற ஆட்களை மட்டும்னா இப்படி டிராப் பண்றோம். அதனால், ஒருத்தன் லைஃபே நம்மால போச்சுனு நீங்க கில்ட்டியா ஃபீல் பண்ண வேண்டியதில்லை. ஹி டிசர்வ்ஸ் இட்.//

 

நரஹரிக்கு நாளடைவில் இதில் உள்ள இத்தகைய கலவையான சூழல் பிடிபடுகிறது. அதன் பின்னர் அவர் இதற்குள் ஒரு கதை கேட்கும் சுவாரஸ்யமும் தள்ளி நிற்கும் மனோபாவமும் கொண்டுதான் ஈடுபடுகிறார். சூழலை நுட்பமாக கவனிப்பவராகவும் தன்னைத் தடாலடியாக வெளிக்காட்டிக் கொள்பவராகவும் இருக்கிறார்.  அலுவலகத்தில் ஒருவரின் சங்கேத வார்த்தைக்கு எல்லோரும் சிரிக்கும்போது, இவர் அது என்ன எனக் கேட்கிறார். பிறகு சொல்கிறேன் என்கிறார் அவர். எல்லோரும் சிரிக்கிறார்களே அப்போ எல்லாருக்கும் தெரிந்திருக்கு தானே.. என்கிட்ட மட்டும் ஏன் மறைக்கனும் எனக் கேட்பது ஒரு உதாரணம். இவர் ஒரு காலண்டர் கூட இனாம் வாங்க மாட்டார் என்பதைப் பார்த்த பிறகுதான் சிபிஐ அதிகாரிகள் இவரை சோதனைக்கு அழைக்கிறார்கள்.  ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக இந்த லஞ்ச உலகில் சிக்கிக் கொண்டு தனது நேர்மைப் பிடிப்பைத் தளர விடும் போதும் அவர் அதற்குள் தனக்கான ஒரு நியாயத்தை வைத்துக் கொள்கிறார். பிறகு  சிபிஐ ஒரு சோதனைக்கு உதவியாக அழைக்கும்போது, தான் இதற்கு வருவதற்கான தார்மீகமான பண்பை இழந்துவிட்டேன் என்று மறுக்கிறார். நீங்களுமா என்று வியக்கும் அந்த அதிகாரி, ‘பட், ஸ்டில் யூ ஆர் ப்ருட்டலி ஹானஸ்ட்’ என்கிறார். முன்பின் ஓடி மாறி வரும் இந்தக் கதையமைப்பில் இது முதல் அத்தியாயத்திலேயே வந்துவிடும். ஆனால் மொத்த புத்தகத்தையும் வாசித்த பிறகு இதைக் கவனித்தால் இது நரஹரி கோரும் பாவமன்னிப்பும் அல்ல ஒருவித ‘சொல்லி வைத்தலும்’ அல்ல என்பது புரிகிறது. நரஹரிக்கு உள்ளுர் பயம் இருக்கிறது ஆனாலும் அந்த சாகஸ உணர்வு இதை செலுத்துகிறது. அதன் போக்கில்தான் இவற்றைச் சொல்லிச் செல்வதும் நிகழ்கிறது.

 


நாம் நரஹரியின் ‘தெனாவட்டால்’ ஈர்க்கப் படுகிறோம். அவர் ஒரு நிமிர்வோடு இருக்கிறார். ஒரு காலண்டர் வைத்ததற்காக தனது அதிகாரியின் அறைக்குச் சென்று எச்சரித்து வருகிறார். அலுவலகங்களில் உள்ள அடிமைத்தனங்களை இலக்கியத்தில் பார்த்து வரும் தமிழ் வாசகருக்கு இந்த நிமிர்வு அதிசயத்தக்க ஒன்று. அப்படிப்பட்டவர் எந்த தருணத்தில் இப்படி லஞ்சம் வாங்குபவராக மாறுகிறார் என்பதை இது சொல்லாமல் கடக்கிறது. தனது அலுவலகத்தில் சோதனை என்றதும் அவர் படபடத்துப் போகும்போது, நரஹரியின் ஆளுமையில் ஒரு தடுமாற்றத்தைக் காண முடிகிறது. இந்தத் தொகுப்பில் அது ஆளுமை வீழ்ச்சி என்றே தோன்றும். ஒரு திடீர் மாற்றமாகவும் இருக்கிறது.  நான் ‘மெட்ராஸ் பேப்பரில்’ விமலாதித்த மாமல்லனின் ‘ஆபீஸ்’ நாவலை வாசிக்கத் துவங்கினேன். அப்போது சிபிஐ கதைகள் அச்சில் வந்தது. ஆபீஸ் நாவல் வாசித்திருந்ததால் நரஹரியின் ஆளுமை இன்னமும் தெளிவாகவே பிடிகிட்டியது. அவ்வாறின்றி, இதை மட்டும் வாசிப்பவருக்கு இதன் பாத்திரங்கள் மீது எழும் பச்சாதபமும் ஆர்வமும் இதன் கதைசொல்லியான நரஹரி மீது எழுவதற்கு வாய்ப்பு இல்லை. பிரதிக்கு அந்த நோக்கமும் இல்லை. ஆனால் அவரது சில ஆளுமைகள் வெளிப்படுகின்றன. ஒரு சோதனைக்குப் போகும் போது ரயில் ஜன்னலில் மழைத்துளி கோர்த்து சொட்டி விழுவதைச் சுண்டி விட்டபடி நரஹரி அமர்ந்திருப்பார். மற்றொரு தருணத்தில் இவர் சோதனை செய்த வீட்டு அம்மாள் இவரைப் பார்த்துக் கும்பிட, கோயிலுக்குப் போகாத நரஹரிக்குக் கும்பிடுவது எப்படி எனக் கைவரவில்லை. அரைகுறையாக கும்பிடுகிறார். சோதனைக்குப் போகும் இடத்தில் பழைய கதைகேட்பது ஏதேனும் தேறுமா என நூல் விட்டுப் பார்ப்பது, சுரத்தில்லாத நேரங்களில் வலிந்து ஒரு வியப்பைக் காட்டி சிபிஐ ஊழியர்களை சகஜமாக்குவது போன்ற குறிப்புகள் வழி ஒரு சித்திரம் கிடைக்கிறது. இந்தத் தொகுப்பின் மையப்புள்ளியானது, சிபிஐ  சோதனைகளை அடிப்படையாகக் கொண்டு அதைச் சுற்றி நிகழ்பவற்றைச் சொல்வதாக உள்ளதேயன்றி நரஹரியின் கதையாக இல்லை என்பதாலும் அந்தப் பாத்திரத்தின் மீது  கவனம் குவிவதில்லை.

பொதுஜனத்துக்கு காலங்காலமாக எழும் அடிப்படை சந்தேகம் என்பது  சட்டம் என எதைப் பார்ப்பது என்பதும் எதை விடுவது என்பதும். சாதாரண காலங்களில் இருக்கும் தலைக்கவச பிடித்தல்களும் அபராதங்களும் கூட தேர்தல் காலத்தில் இருப்பதில்லை. பொதுக் கூட்டங்கள் நடக்கும் போது வாகன ஓட்டிகள் மீது  மது அருந்தியதற்கான சோதனை செய்வதில்லை.  இவற்றை நாமே பார்க்கிறோம். யாரும் கண்டுகொள்வதில்லை என்பது சாலையில் சாகசம் செய்யும் விடலைகளுக்குத் தெரிய வரும் போது அவர்கள் உற்சாகமடைகிறார்கள். விபத்து மற்றும் உயிரிழப்பு ஏற்படுகிறது. இதில் யாரைக் குறைசொல்வது. வ்வாறு விதியைத் தளர்த்தும் உரிமையை யார் எடுத்துக் கொள்கிறார்கள். ஆகவே ஒரு சட்டம் என்பது அந்தந்த நேரத்திற்கேற்ப அமல்படுத்தப் படுகிறது. தீவிரப் படுத்தப்படுகிறது. தேவையெனில்  அதை நிறுத்திவைக்கவும் செய்கிறார்கள். 

 

அது போலவே இந்த லஞ்சம் அளிப்பது பெறுவது என்பதை நடைமுறையில் இந்தியன் தாத்தா போலக் கையாள முடிவதில்லை. ஒரு தொழில் முனைவோருக்குத் தனது வாடிக்கையாளரைப் பார்க்கும் நேரம் என்பது அவருடைய வருவாய்க்கான நேரம். அந்த நேரத்தில் அரசு அலுவலகத்தில் அலைக்கழிக்கப் படுவதை எந்தத் தொழிலதிபரும் விரும்புவதில்லை. அவர் பக்கம் அனைத்தும் சரியாக இருந்தாலும் அரசு அலுவலக நடைமுறை இரு நாட்களுக்கு இழுக்குமென்றால் அது அவருக்கு ஒரு  அவஸ்தை. அதைத் துரிதப்படுத்த அவர்  பணம் தர முன்வருகிறார். அவரைப் பொறுத்த மட்டில் ஒரு அரசு அலுவலர் தனது வேலையை நேரத்துக்குத் செய்வதே அவருக்குப் போதுமானது. அதற்கே அந்த அலுவலருக்குப் பணம் தருவது எஎன்பது அவருக்கு ஒப்புநோக்க இலாபகரமானது. இது இரு தரப்புக்கும் லாபகரமான ஒரு உடன்படிக்கை இது. ஆனால் தார்மீகப்படி தவறானது.  ஆகவே இந்த தருணத்தில் அந்த அரசு அலுவலரின் நிலை சற்றே குழப்பமானதாகிறது. அவர் நியாயப்படி அன்பளிப்பை மறுக்க வேண்டும் என்றாலும்  அதை ஏற்பதும் பிழையில்லை என்றும் தோன்றுகிறது. து போன்ற திரிசங்கு நிலையையும் கறுப்பு வெள்ளை நிலையையும் சரியாக வாசகருக்குக் கடத்துகின்றன இந்தக் கதைகள். கூடவே கொஞ்சம் கொஞ்சமாக  லஞ்சப் பணத்தை ஆதாரமில்லாமல் எப்படியெல்லாம் செலவழிக்கலாம் என்கிற ஒரு கையேட்டை இதிலிருந்து வாசகர் உருவாக்கிக் கொள்ளும் சாத்தியமும் உள்ளது என்று  வேடிக்கையாகக் குறிப்பிடலாம். அதை வங்கியில் இடுவது, நிலம் வாங்குவது என ஆதாரம் காட்டும் செலவுகளை செய்யாதே என்கிறது

 

விமலாதித்த மாமல்லன் கதைகள், அசோகமித்திரனின் சொற்சிக்கனமும் கோபிகிருஷ்ணனின் அபத்தமும் கலந்த ஒரு வாசிப்பை நல்குபவை. அன்றாட வாழ்க்கை மற்றும் சாதாரண சம்பவங்களின் வழியாக சொல்லப்படும் கதைகள். அதிகம் வர்ணனைகளும் அற்றவை. உதாரணமாக, திஜானகிராமனின் கதைகள், தான் உருவாக்க விரும்பும் உணர்வை வரிகளால் உரையாடல்களால் வாசகருக்குக் கடத்திவிடுபவை. ஆனால் இத்தகைய கதைகள் அதைச் செய்வதில்லை. அந்த அனுபவத்தோடு பொருந்திப் போகும் வாசகருக்கு அது ஒரு திறப்பாக அமையும். இந்த சிபிஐ கதைகள் தொகுப்பு, அவரது முந்தைய கதைகளை விட அதன் ‘பறக்கும் படை’ மற்றும் ‘ திடீர்ச் சோதனை ‘ போன்ற சாகஸ உள்ளடக்கத்தால் சுவாரஸ்யம் கூடிய ஒன்று. கூடவே அந்த அனுபவச் சரடின் உளவியல் நோக்கும் தொடர்கிறது.