ஏடு தேடி யலைந்தவூ ரெத்தனை !
எழுதி யாய்ந்த குறிப்புரை யெத்தனை !
பாடுபட்ட பதத்தெளி வெத்தனை !
பன்னெ றிக்கட் பொருட்டுணி வெத்தனை !
நாடு மச்சிற் பதிப்பிக்குங் கூலிக்கு
நாளும் விற்றபல் பண்டங்க ளெத்தனை!
கூட நோக்கினா்க் காற்றின வெத்தனை !
கோதி லாச்சாமி நாதன் றமிழ்க் கென்றே!.
-இரா.இராகவையங்கார்
பழைய தஞ்சாவூர் மாவட்டம் இன்றைய தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மாவட்டங்களை உள்ளடக்கியது. பல வைணவ திவ்ய சேத்திரங்களும் பல பாடல்பெற்ற சிவதலங்களும் நிறைந்த்து. இங்கிருக்கும் திருவாவாடுதுறை ஆதீனம் என்னும் பெயரை அங்கு ஆதீனத்தை கொலை செய்ய முயற்சித்த வழக்கில்தான் முதன்முதலில் கேள்வியுறுகிறேன். அப்போது எனக்குத் தெரிந்திருந்த ஆசிரமங்கள் எல்லாம் பத்திரிக்கையில் வந்தவைகளே. பிரேமானந்தா ஆரம்பித்து வைத்த சீசன் இது. 2002 ல் ஆடுதுறை ஆதீனம் பற்றி படித்து சாமியார்களே இப்படித்தான் என்று எவ்வளவு எளிதாக நினைத்திருகிறேன். திருவாவாடுதுறையின் ஆதீனமாக விளங்கி மாபெரும் தமிழ்த்தொண்டிற்கு உறுதுணையாக விளங்கியிருக்கும் பதிநான்காவது பட்டம் சுப்ரமணிய தேசிகரையும் பதினைந்தாவது பட்டம் அம்பலவாண தேசிகரையும் இக்கணம் மனதால் வணங்குகிறேன்.
மகாமகோபாத்யாயர் வாழ்த்து - சுப்பிரமணிய பாரதியார்
செம்பரிதி ஒளிபெற்றான் பைந்நறவு
சுவைபெற்றுத் திகழ்ந்தது ஆங்கண்
உம்பரெலாம் இறவாமை பெற்றனரென்று
எவரேகொல் உவத்தல் செய்வார்?
கும்பமுனி யெனத்தோன்றும் சாமிநா
தப்புலவன் குறைவில் சீர்த்தி
பம்பலுறப் பெற்றனனேல், இதற்கென்கொல்
பேருவகை படைக்கின்றீரே? 1
அன்னியர்கள் தமிழ்ச்செவ்வி யறியாதார்
இன்றெம்மை ஆள்வோ ரேனும்
பன்னியர்சீர் மகாமகோ பாத்தியா
யப்பதவி பரிவின் ஈந்து
பொன்னிலவு குடந்தைநகர்ச் சாமிநா
தன்றனக்குப் புகழ்செய் வாரேல்,
முன்னிவனப் பாண்டியர்நாள் இருந்திருப்பின்
இவன்பெருமை மொழிய லாமோ? 2
நிதியறியோம் இவ்வுலகத் தொருகோடி
இன்பவகை நித்தம் துய்க்கும்
கதியறியோம் என்றுமனம் வருந்தற்க;
குடந்தைநகர்க் கலைஞர் கோவே!
பொதியமலைப், பிறந்தமொழி வாழ்வறியும்
காலமெலாம் புலவோர் வாயில்
துதியறிவாய், அவர்நெஞ்சின் வாழ்த்தறிவாய்,
இறப்பின்றித் துலங்கு வாயே. 3
பிள்ளையவர்களின் முதற்காட்சியை உவேசா வர்ணிக்கும்போது, அவர் ஒரு யானையைப்போல நடந்து வந்தார் என்கிறார். எவ்வளவு ஒயாரமான நடை என்று தோன்றியது! யானை நடக்கையில் நாம் அதை பார்க்கிறமாதிரி யானை யாரையாவது கவனிக்குமா.. அது தன்னியல்பிலேயே அச்செருக்கு உடையதா..சின்னயானை நடையைத் தந்தது என்கிற கண்ணதாசன் வரி உடன் நினைவுக்கு வருகிறது. தன் குருவின் நடையழகை இதுபோல வேறு யாராவது வர்ணித்தார்களா என்று தெரியவில்லை. இத்துணைக்கும் பிள்ளையவர்கள் வறுமையில்தான் இருந்திருக்கிறார். மடத்தில் உணவுண்டபின் நெடுநாட்கள் கழித்து இன்று நெய் சேர்த்து உண்ணும் வாய்ப்பு கிட்டியது என்று ஓரிடத்தில் சொல்கிறார். பட்டீஸ்வரம் சென்று கவிபாடி மகன் திருமணத்திற்கு பணம் சேர்க்கிறார். கடன் வாங்குகிறார். திருமகள் ஏறிட்டும் பார்க்காதவரை கலைமகள் ஸ்வீகரித்திருக்கிறாள். விரல் சொடுக்குகையில் பாட்டு எழுதுகிறார். சீர் பிரிக்கிறார். ” திரிசிபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம் “ என்னும் புத்தகம் இரு பாகங்களாக உவேசாவால் எழுதப்பட்டு வந்திருக்கிறது. அதைப்படிக்கும் நேரம் அமையவேண்டும்.
என்சரித்திரம் ஆனந்தவிகடனில் தொடராக வந்திருக்கிறது. அத்தொடரில் உவேசா மணிமேகலையை பிரசுரித்தவரை கூறியுள்ளார். அதை முடிக்கும் முன்பே காலமாகிவிடுகிறார். அவர் இறந்தபின் ஒரு வாரம் வந்திருக்கிறது. இப்போது 576 பக்கங்கள் கொண்ட புத்தகமாகக் கிடைக்கிறது . முதல் நானூறு பக்கங்கள் வரை, தான் சந்தித்த ஒவ்வொரு நபராக கூறுகிறார். அது உவேசா மாணாக்கராய் இருந்து ஆதீனத்தில் கவியாக தொடர்ந்து பின் கும்பகோணம் கல்லூரியில் ஆசிரியராக சேரும் வரைக்குமானது. அவர்களின் பழக்கவழக்கங்கள், முகபாவம் குணநலன் என. தன் ஆசிரியர்கள், தன்பால் அன்பு கொண்டு உதவியவர்கள், ஆதீனம் மற்றும் தம்புரான்கள் என நீண்டவிவரிப்புகள். தஞ்சை பூமியின் ஒவ்வொரு கிராமங்களையும் கடந்து செல்கையில் அதுபற்றி ஒரு வரி கூறுகிறார். காவிரி, வயல்வெளி, ஜமீந்தார்கள் ( பிள்ளைமார்கள், மூப்பனார்கள் மற்றும் உடையார்கள்) என அக்காலத்தை அறிய விரும்புபவர்கள் தவறவிடக்கூடாத புத்தகம் இது. தன் ஆசிரியர் மற்றும் ஆதீனத்தை அடுத்து மாயூரம் வேதநாயகம் பிள்ளை, கோபாலகிருஷ்ணன் பாரதியார், சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் என பிரபலங்களும், தியாகராஜ செட்டியார், முத்துராமலிங்கத்தேவர் என பிரபல பெயர் கொண்ட சாமானியர்களும், ஏனைய சாதாரண பெயர்கொண்ட சாமானியர்களும் நிரம்பியிருக்கிறார்கள்.
தாதுவருஷப் பஞ்சத்தில் ஆதீனம் சுப்ரமணியதேசிகர் ஆங்காங்கு கஞ்சித்தொட்டிகள் திறந்திருக்கிறார். சுப்ரமணியதேசிகர் பற்றி சொல்லாமல் இதை எழுத இயலாது. இன்னார்க்கு இது தேவை என்பதை குறிப்பால் உணர்ந்து கொள்ளும் திறனும், அதை செய்வித்து அழகுபார்த்து ஆனந்திக்கும் மனமும் அதனோடிணைந்த துறவும் என திகழ்கிறார் ஆதீனம். வித்துவான்களை அரவணைப்பதும், தன்னை வந்து பார்க்கச் சொல்லி கடிதம் எழுதுவதும் அனைத்தையும் தாண்டி சமண நூலான சீவக சிந்தாமணியை பதிப்பிக்க உதவுவதும் என ஆதீனத்தின் தமிழ்தொண்டு அளப்பரியது. அதுபோல பிள்ளையவர்களும். திருமலையில் முருகன் இருந்தான் என்ற மரபிற்கு இப்போது வரை வேங்கிட சுப்ரமணியன், வேங்கிட சாமிநாதன் என்கிற பெயர்களே சான்று என்று கூறுகிறார். ஒரு பெயரைக்கொண்டு அதன் மரபை கூறுவது பற்றியும் சங்கிலியாக தொடரும் மரபு பற்றியும் வியப்பு மேலிட்டது. இன்றும் தொடரும் இன்னொரு மரபும் உண்டு. ஆதீனத்தின் சபையில் ஆறுமுக நாவலர் பற்றி ஒருவர் கூறினால், அடுத்து ஒருவர் வள்ளலார் பற்றி பதிகம் பாடுகிறார். இதுபோல ஒரு வரிக்குறிப்புகள்தான். அந்த அரசியல் பற்றி உவேசா மேலே ஏதும் சொல்வதில்லை. பிற்காலத்தில் உவெசா புத்தகங்களைப் பதிப்பிக்கையில் காரணமில்லா காழ்ப்புடன் அவர்மீது வசையாக சிலர் எழுதுகிறார்கள். நாம் ஒரு லட்சியத்துடன் செல்கையில் அவர்களுக்கு மறுமொழி சொல்லிக்கொண்டிருந்தால் நேரம்தான் வீணாகும் நாம் முன்னே செல்ல முடியாது என்கிறார். இதை அவர் தன் எழுத்துகளிலும் கடைபிடித்திருப்பது தெரிகிறது.
தமிழ்மக்களைப்போல மொழிப்பற்று வேறு யாருக்கும் இல்லை என நான் நினைத்துக்கொள்வதுண்டு. அது எனக்குத் தோன்றியதற்குக் காரணம் தமிழ்ச்செல்வன், தமிழரசி, தமிழ்நேசன் என நாம் பெயர் வைப்பதுபோல ஒரு ஹிந்திகுமாரோ, தெலுகுபாபுவோ கேள்விப்பட்டதில்லை. ஒருமுறை அலுவலக நிமித்த்மாக பாரீஸ் மக்களைப் பார்க்கும் போது அவர்களும் இதுபோல மொழியை தன் பெயருடன் இணைத்துக்கொண்டிருப்பதை கண்டிருக்கிறேன். ப்ரெஞ்ச் மக்களும் மொழிப்பற்று அதிகம் உள்ளவர்கள் என நினைத்திருக்கிறேன். உவெசா வும் இதை தெரிவிக்கிறார். எனக்கு அந்த எண்ணம் இன்னும் வலுப்பட்டது. ஓலைச்சுவடிகளை பாரீஸில் சேகரித்து வைத்திருக்கிறார்கள் என்று எழுதியதைப் படித்தபோது ஆயுர்வேத மருத்துவரும் எனது நண்பருமான சுநீல்கிருஷ்ணனின் மூதாதையர்கள் எழுதி அவர் சேகரித்து வைத்திருந்த ஓலைச்சுவடிகளை ஒரு ப்ரெஞ்ச் பெண்மணி வாங்கிச்சென்றது நினைவுக்கு வந்தது.
முதல் நானூறு பக்கங்கள் சொல்லும் தகவல்களும் குடும்பத்தினரின், பிள்ளையவர்களின் வறுமையும் மிக கடினமாக இருப்பவை. நானே இரண்டுமுறை புத்தகத்தின் அட்டையைப் பார்த்து அது என் தரித்திரம் அல்ல என உறுதிசெய்துகொண்டேன். மனிதர்கள் கையலம்புவது வாய்கொப்பளிப்பதெல்லாம் ஒன்றுவிடாமல் எழுதி வைக்கிறார். சுவாரசியம் இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் ஏன் இவ்வளவு பீடிகை எனத்தோன்றவைக்கிறது. ஆனால், இப்புத்தகத்தின் கடைசி இருநூறு பக்கங்களையும் பரவசமடையாமல் கடக்க முடியாது. அவர் சீவகசிந்தாமணியை பதிப்பிக்க துவங்கும் முயற்சியிலிருந்து மணிமேகலை வரும்வரை எழுதியிருக்கிறார். அதிவேக பக்கங்கள். அலைதலும், ஏமாற்ற்ங்களும், வேதனைகளும், துவேஷங்களும், ஆதரவும், வெற்றியும் கொண்ட பக்கங்கள். அவைகளை நீங்களே படிக்கவேண்டும் என விரும்புகிறேன்.
முதல் நானூறு பக்கங்கள் சொல்லும் தகவல்களும் குடும்பத்தினரின், பிள்ளையவர்களின் வறுமையும் மிக கடினமாக இருப்பவை. நானே இரண்டுமுறை புத்தகத்தின் அட்டையைப் பார்த்து அது என் தரித்திரம் அல்ல என உறுதிசெய்துகொண்டேன். மனிதர்கள் கையலம்புவது வாய்கொப்பளிப்பதெல்லாம் ஒன்றுவிடாமல் எழுதி வைக்கிறார். சுவாரசியம் இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் ஏன் இவ்வளவு பீடிகை எனத்தோன்றவைக்கிறது. ஆனால், இப்புத்தகத்தின் கடைசி இருநூறு பக்கங்களையும் பரவசமடையாமல் கடக்க முடியாது. அவர் சீவகசிந்தாமணியை பதிப்பிக்க துவங்கும் முயற்சியிலிருந்து மணிமேகலை வரும்வரை எழுதியிருக்கிறார். அதிவேக பக்கங்கள். அலைதலும், ஏமாற்ற்ங்களும், வேதனைகளும், துவேஷங்களும், ஆதரவும், வெற்றியும் கொண்ட பக்கங்கள். அவைகளை நீங்களே படிக்கவேண்டும் என விரும்புகிறேன்.
அவர் எழுதியிருக்கும் புத்தகங்களும், பதிப்பித்திருக்கும் புத்தகங்களும் அத்துணைப் பெரிய முயற்சிகள் கொண்டவைகள். மாபெரும் செயலூக்கம் / லட்சியம் இல்லதவர்க்கு அதை செய்ய இயலாது. தான் சைவ மடம் சார்ந்து இருந்தாலும் வைணவத்தையும், சீவக சிந்தாமணிக்காக சமணத்தையும், மணிமேகலைக்காக பெளத்தத்தையும் கற்கிறார். பைபிளின் அமைப்பு படியே புறநானூறு அகராதியை தொகுக்கிறார். அவர் பதிப்பித்த பழந்தமிழ் புத்தங்களுக்கு உரைஎழுதியதோடு, தன் ஆசிரியர்களான மீனாட்சிசுந்தரம் பிள்ளை மற்றும் கோபாலகிருஷ்ண பாரதியார் பற்றிய புத்தகங்களும், தன் அனுபவங்கள் பற்றி ”நான் கண்டதும் கேட்டதும்” போன்ற புத்தகங்களும் எழுதியுள்ளார். அவைகளை படிக்கையில் மட்டுமே முழுதாக அவரின் வரலாற்றினை அறியமுடியும். என்சரித்திரம் அவைகளின் சிறுதுளிமட்டுமே எனத் தோன்றுகிறது