போலந்தில் வாழும் யூத சமூகத்தின் பின்னணியில் எழுதப்பட்ட நாவல். ஹிட்லர்
ஒருபுறம் ஸ்டாலின் ஒருபுறம் என இரண்டுக்கும் நடுவில் வாழும் மக்கள். தான்
வசிக்கும் தேசத்து மக்கள் ஒருநாளும் தன்னை துன்புறுத்தவோ அடிக்கவோ கொள்ளவோ மாட்டார்கள் ஆனால் ஹிட்லர் படையெடுத்து வந்து வென்று தன்னை
சித்ரவதை கூடத்திற்கு அனுப்பினால் அதற்காக பொங்கியெழவும் மாட்டார்கள் என்கிற
புரிதலும் கொண்ட யூதர்கள். சமூக, அரசியல், வாழ்க்கை, வலைப்பின்னல்களுடன்
செல்லும் சுவாரசியமான நாவலான ஷோஷா தமிழில்
வெளியாகியுள்ளது.
முதற்வாசிப்பில் எளிமையான நேர்கோட்டுக் கதையாகத் தோன்றும் நாவலுக்குள் எத்தனை
தளங்கள் இயங்குகின்றன என்று ஆச்சரியமும் உண்டாகிறது. எழுத்தாளனாக விளங்கும் யூத இளைஞனின் வாழ்க்கைப் பின்னணியில் ஒரு
பன்முக சமூகத்தின் வரலாறும் மனித மனங்களின் மாறுதல்களையும்
மேன்மைகளையும் சொல்லிச் செல்கிறார் ஐசக்
பாஷவிஸ் சிங்கர்
(இங்கு ஒரு
டிஸ்கி: - ஆயுர்வேத மருந்துகளின் பெயர்களுக்கே உள்நாக்கு சுருட்டிக் கொள்ளும்
அபாயம் கொண்ட நான்.
ரஷ்ய பெயர்களையும் யூத
பெயர்களையும் முழுமையாக குறிப்பிட விரும்பவில்லை. அ.முத்துலிங்கம் தன் 'புளிக்கவைத்த
அப்பம்' சிறுகதையில்
சாரா என்கிற ஒரு யூதரை சந்திக்கிறார்.
அவர் பெயரை இப்படியாக சொல்கிறார். " வாய்க்குள் கூழாங்கல்லை அடக்கிக் கொண்டு
குலேபகாவலி என்று சொன்னால் ஒரு சப்தம் வருமே அதுதான் அவருடைய முழுப்பெயர். நான்
ஒரு வசதிக்காக சாரா என்று வைத்துக் கொள்கிறேன்" என்று. வேறு வழியின்றி
அவ்வாறே நானும் அதை வழிமொழிகிறேன்.)
நெருங்கிய நண்பர்களால் சுட்சிக் என்று
செல்லமாகவும் பொதுவாக அரோலி என்றும் அழைக்கப்படும் நாயகன். எழுத்தாளனாக வாழ்பவன்.
அரொலி காதல் கொள்ளும் வெவ்வேறு பெண்களில்
ஒருவர் மக்களைப் புரட்சிகரமாக சீர்திருத்த
எண்ணும் ரஷியாவை நேசிப்பவர். ஒருவர்
வளமும் கவர்ச்சியும் அமெரிக்க நடிகை.
மற்றவர் அன்பான உள்ளூர் செல்வந்தர். உள்ளூர் பணிப்பெண் ஒருவர். இவர்களை விட,
தன் ஆழ்மனத்திற்கு அணுக்கமாக இருக்கும் இளம் பருவத்தோழி
ஷோஷாவையே அரோலி மணம் புரிகிறான். நாவலுக்கு ஷோஷா என்று பெயர் வைத்தது
முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகவே தோன்றுகிறது.
நாவலை வாசித்ததும் அந்த தேசத்தில் இத்தியம் பேசி வாழ்ந்து வந்த யூத மரபுக்கான
ஒரு குறியீடாகவே ஷோஷாவை சிங்கர்
சித்தரிக்கிறார் என்பது புரிகிறது. மென்மையான மனம் கொண்ட, எப்பொழுதும்
அச்சத்தில் இருக்கிற வளர்ச்சி அடையாமல் குழந்தைத் தன்மையுடன்தான் இருக்கிறாள்
ஷோஷா. அவள் தோற்றம் இருப்பு இரண்டுமே மற்றவர்களை இம்சிக்கிறது. வெகுஜனங்களுக்கு அவள்
மீது பரிதாபமும் இருக்கிறது. அது அன்றைக்கிருந்த யூத இனத்தின் நிலைமைக்கே பொருத்தி
வருகிறது. அவளுடைய தூய மனத்தைத்தான் அராலி
விரும்புகிறான். இதில் அவளை மணப்பதற்கு முன் அவனுடைய தந்தையின் சொற்களை அவன்
மானசீகமாக கேட்பது முக்கியமான ஒன்று. அவனுடைய ஆழ்மனம் இத்தனை கால மரபு கொண்ட தன்
இனத்தையே நேசிக்கிறது. தன் தந்தையின் குரலாக அதைக் கொள்கிறது. இந்த நாவலுக்கு ஷோஷா என்கிற பெயர் தவிர வேறு
எதை வைக்க முடியும்.
நம்பிக்கையுடன் கம்யூனிச தேசம் செல்லும் அவன் காதலி டோராவின் நண்பர் ஒருவர், உளவாளி என முத்திரை குத்தப்பட்டு
சித்ரவதை அனுபவிப்பதன் சாரம் நாவல் இடையில் வருகிறது. அத்தனை சித்ரவதைகளைக் கண்ட
பின்பும் அவள் அதன் மீது நம்பிக்கையுடன் இருக்கிறாள். மாறாக நல்ல வளத்துடன் நடிகையாகும் எண்ணத்தில் அமெரிக்காவிலிருந்து வரும் பெட்டி மிகவும் அவநம்பிக்கை கொண்டவளாகவே இருக்கிறாள். வெறும்
நம்பிக்கை மட்டுமே இருந்த ரஷ்யா, செல்வம் இருந்தாலும் அவநம்பிக்கை கொண்ட
அமெரிக்க தேசம் இவற்றுக்கிடையே ஷோஷாவை சுமந்துகொண்டு ஊசலாடும் அரோலி. இந்த நுட்பமான சித்தரிப்பு
நாவல் முழுவதும் உண்டு. இறுதியாக நாட்டை விட்டு வெளியேறும்போது அவனுக்கு
பெட்டிதான் உதவுகிறாள்.
அவர்கள் அகதியாக கிளம்பி அந்த நகரை நீங்கும் போதே ஷோஷா இறந்து விட்டாள் என்பதை பிற்காலத்தில் ஒரு உரையாடலில் அராலி
உரைக்கிறான். பெரும் வர்ணனை இல்லாமல் அவள் முடிவு சொல்லப் படுகிறது. போர்க்கால நாவல்கள்
நேரடியாக அதன் பாதிப்பை, போரின் வர்ணனையை சொல்வதை விடவும்
அதற்கிடையே ஊடுருவி செல்லும் மக்களின் வாழ்க்கையையயும் துயரத்தையும் மீட்சியையும்
சொல்வதுதான் மனதை இன்னும் கனக்க வைக்கிறது.
இறுதியில்,
யூதர்களை துரத்தியடித்து விட்டு யூதர்களுக்கான தனி நாடு உருவாக்க அனைத்து
நாடுகளும் ஒற்றுமையாக வாக்களித்த அபத்தத்தின் மீது நகைப்பு செய்து நாவல்
முடிகிறது.
இந்த நாவலை மிகவும் எளிய வகையிலும் செறிவாகவும் நம் நணபர் கோ.கமலக்கண்ணன் மொழி
பெயர்த்துள்ளார். அவர் கடந்த ஊட்டி காவிய முகாமில் அறிவியல் புனைவு குறித்து உரையாடியிருந்தார். உலக இலக்கியங்கள் மீது
நல்ல வாசிப்பு கொண்டவர் என்பது புரிந்தது. ஷோஷா நாவல் மீதான அவரது புரிதலும் மொழிபெயர்ப்பின் லாவகமும் நாவலை இயல்பாக
வாசிக்க வைக்கின்றன. எங்கு அந்த
தேசத்து வார்த்தைகளை அப்படியே
உபயோகிக்கலாம், எங்கு தமிழ் மண்ணில் புழங்கும் வார்த்தைகளை இடலாம் என்கிற கவனம் இருப்பதால் எங்கும் நாவலின் இயல்புத்தன்மை
கெடவில்லை. நெடுங்காலமாக டால்ஸ்தோய்,
தாஸ்தாவ்யேஸ்கி ஆகியோர் மொழிபெயர்ப்புகள் வாயிலாக தமிழக மக்களுக்கு அறிமுகமாகி
மனதிற்கு அண்மையானவராகவும் விளங்குகிறார்கள். இவ்வருடம் தமிழில் அறிமுகமாகியுள்ள சிங்கரும் இங்கு
நீண்டகாலம் மனித இனத்தின் அன்பையும் உன்னதங்களை பேசியவராக ஷோஷா மூலம்
நிலைத்து நிற்பார் என்றே நாவலைப்
படித்ததும் தோன்றியது. அதற்கு முதற்படி அமைத்திருக்கும் நண்பர் கமலக்கண்ணனுக்கு
வாழ்த்துகள்