Friday, November 14, 2025

தெய்வநல்லூர் கதைகள்

 விதிகளுக்கு ஆட்படாத ஆட்டம்

ஜாஜா என்று நெருங்கிய  நண்பர்களால் அழைக்கப்படும் எழுத்தாளர் ஜா.ராஜகோபாலன் அவர்களின் முதல் சிறுகதையான வாயுக்கோளாறு வெளிவந்து பன்னிரெண்டு வருடங்கள் கழித்து இந்த தெய்வநல்லூர் கதைகள் நாவல் வெளியாகிறது. அவரது கதைகளில் வாயுக்கோளாறு கதையை முதலில் அச்சில் வந்த கதை என்று சொல்லலாமே தவிர அவர் எழுதிய முதல் கதை அதுவல்ல. அவர் தனது வாக்காளர் அங்கீகாரத்தை  எட்டும்முன்னரே எழுத்தாளராகி விட்டிருந்தார் என்பதை பிறகு ஒருநாள் அவரது இல்லத்தில் உணவருந்திவிட்டு அவரது கையெழுத்துப் பிரதிகளை வாசித்தபோது அறிந்து கொண்டேன். அவற்றில் நான் வாசித்த ஒரு கதை எழுத்தாளர் நாஞ்சில்நாடனின் இடலாக்குடி ராசா கதையை எனக்கு நினைவூட்டியது. எழுத்தாளர் நாஞ்சில் நாடனின் கதையை ஒத்த ஒன்றை தனது பள்ளிக் காலத்தில் எழுதியவர் தனது ஐம்பதாவது வயதில் இந்தப் புத்தகத்தைக் கொண்டு வருகிறார் என்பது கவனிக்கத் தக்கது.  இந்த இடைப்பட்ட காலத்தில், இன்று எழுத்தாளராக உருவாகி பரிமளித்துக் கொண்டிருக்கும் பலர் தங்கள் கதைகளை முதலில் ஜாஜாவுக்கு அனுப்பி அவரது மதிப்புரையின் ஊடாக நம்பிக்கை பெற்றவர்கள்;  தன்னை காவிய வாசிப்பில் ஆழ்த்திக் கொண்ட ஜாஜாவிடம் கேட்டுப் பயின்றவர்கள்; சங்கத் தமிழ் இலக்கியங்களில் ஆர்வம் கொண்டு அதில்  ஐயம் கேட்டுத் தெளிவுற்றவர்கள் என அவருக்குப் பல நண்பர்கள் உண்டு. இன்று பரவலாக வாசிக்கப்படுகின்ற பல இலக்கியப் பிரதிகளை அவை அச்சிலேற்றப்படும் முன்னர் வாசித்துப் பார்த்து திருத்தங்களைச் சொல்லியிருக்கிறார். திருத்தர் என்பதை விட  செம்மைபடுத்துநர் என்று சொல்லலாம்.  பெரும் இலக்கிய விழாக்களை ஒருங்கிணைத்துள்ளார்.  முன்னோடி எழுத்தாளர்களின் தொகுப்புகளுக்கு தொகுப்பாசிரியராக விளங்கியிருக்கிறார்.  இன்னும் தொகுக்கப்படாத அவரது கட்டுரைகள் பல  இணைய இதழ்களிலும்  இன்னும் தட்டச்சு செய்யப்படாத உரைகள் காணொலிகளாகவும் இருக்கின்றன.  ஆகவே தெய்வநல்லூர் கதைகள் அவரது முதல் நாவல் என்று இருக்கலாமே தவிர அவரது படைப்புலகிற்கான முதல் வரவு என்றில்லை.




 

தெய்வநல்லூர் கதைகள் ஒரு நினைவேக்க பாணியைக் கைகொண்டிருக்கிறது. இந்த வகை எழுத்துக்கள் தமிழ் இலக்கிய உலகுக்குப் புதிதில்லை தான். அசோகமித்திரன், சுஜாதா,  நாஞ்சில்நாடன்,  இரா.முருகன், அ.முத்துலிங்கம், ராஜ் கெளதமன், சாரு நிவேதிதா, பி.ஏ. கிருஷ்ணன், ஜெயமோகன், யுவன் சந்திரசேகர் உள்ளிட்ட பலரும் இதை எழுதியிருக்கிறார்கள். அதில்  சுஜாதாவின் கதைகளும் இரா.முருகனின் கதைகளும் ஹாஸ்ய பாவத்தை முன்னிறுத்துபவையாக உள்ளன. ஜெயமோகன் மற்றும் யுவன் சந்திரசேகரின் கதைகள் தன்னை வைத்து பிரபஞ்சத்தையும் பிரபஞ்சத்தை வைத்து தன்னையும் உணரும் முயற்சிகளாக உள்ளன. அசோகமித்திரன் மற்றும் அ.முத்துலிங்கத்தின் கதைகள் இவற்றுடன் ஒப்புநோக்க யதார்த்தம் கூடி நிற்பவை. நாஞ்சில்நாடன் மற்றும் சாரு நிவேதிதாவின் எழுத்துக்கள் நேரடியாகவே அரசியல் வயப்பட்டவை.  குடும்ப, சமூக, அலுவலக சூழலின் அன்றாட அரசியலை எதிர் கொள்பவையாக உள்ளன.  தெய்வநல்லூர் கதைகள் தனது நடையில்  சுஜாதா மற்றும் இரா.முருகனின் பாணியையும் உள்ளடக்கத்தில் நாஞ்சில்நாடனின் பாணியையும் கொண்டிருக்கிறது. கதைசொல்லி் தனது பால்யத்தை தனது இன்றைய அறிவுடன் சொல்லிச் செல்கிறார். ஆகவே அதில்  அனைத்திற்கும் ஒரு உவமை  சுட்டப் படுகிறது. “தலைவனோடு கூடி வந்த தலைவியின் கன்னங்களில் ஓடும் செவ்வரிகளை ஒத்த வரிகளை பிரம்பின் துணை கொண்டு சுனா கானாவின் பின்புற அமருமிடத்தில் வரி விதிக்க பரணிக்கு வாய்ப்பளிக்கப்பட்டது” மேலும் ஜாஜா நிதித்துறை தொடர்பான பணியில் இருந்தவர். அவரது ஆட்டத்தின் ஐந்து விதிகள் புத்தகம் துறைசார் நூல்களில் முக்கியமானதாக விளங்குகிறது. ஆகவே, மேற்சொன்ன வரிகளின் தொடர்ச்சி இவ்வாறு இருக்கிறது. “12 முறைகள் என்பதை சுனா கானா வே பிறகு சொன்னார், எங்களிடம் காட்டாததால் நாங்கள் இன்னும் அந்த எண்ணிக்கையை ஐயப்பட்டியலில்தான் வைத்திருக்கிறோம்.”  தவறு செய்து ஆசிரியரிடம் அடிவாங்குவதில் ஆளுக்குப் பல அனுபவங்கள் உள்ளன. பிரதேசங்கள் மாறினாலும் அடிமுறைகளில் மாறுதல் இருப்பதில்லை. அத்தகைய சூழலில் நாவலின் இந்த உவமைகளும் வர்ணனைகளும் அதை சுவாரஸ்யமாக்குகின்றன. ஒரு கதை கேட்கும் மனநிலைக்கு நம்மை இட்டுச் செல்கின்றன.

 

ஒரு குப்பையும் விடாம கிளறிக்கிட்டு வந்து நிக்கிறீங்க என்று நாங்கள் பெற்றோரிடம் திட்டு வாங்கியதுண்டு. குப்பையைக் கிளறி ஊர்சுற்றி விளையாடி வருவதில் கிடைப்பது ஒரு அனுபவப் பாடம். இன்றைக்கு கூண்டுக்கோழியாக வளர்வதால் அது ஒரு மாற்று குறைகிறது. எந்த வித தகவல் தொடர்பு சாதனங்களும் போக்குவரத்து வசதிகளும் பெருகாத காலத்தில் பள்ளிச் சிறுவர் சிறுமியர்களுக்கு ஒரு சுதந்திரம் இருந்தது. இதில் ஏழாம் வகுப்பு மாணவர்கள் தினமும் தெருவில் சந்திக்கிறார்கள். பெரியகோயிலுக்குப் போகிறார்கள். கட்டுசாதம் கட்டிக்கொண்டு எலுமிச்சை தோட்டத்துக்குப் பயணிக்கிறார்கள். இதில் எதுவும் மிகைப்படுத்தல் இல்லை. நானும் எனது இரண்டாம் வகுப்பிலிருந்து ஏழாம் வகுப்பு வரை திருத்துறைப்பூண்டி மன்னார்குடி வழித்தடத்தில் இருக்கும் சேரி என்னும் ஊரிலிருந்து மன்னார்குடிக்கு பேருந்துகளில் பயணம் சென்று திரும்புவேன். இன்று இத்தனை தகவல் தொழில்நுட்ப வசதிகள் இருந்தும் மாணாக்கர்களை பாதுகாப்பாக பள்ளி வரை வி்ட்டுவிட்டு வகுப்புக்கு பத்திரமாக போகிறார்களா என்று மதிலைப் பிடித்து எட்டிப்பார்க்கிறார்கள் பெற்றோர்கள். இந்த காலமாற்றத்தை உணர்ந்தோ என்னவோ நாவலில் ஆங்காங்கு இதெல்லலாம் ஈராயிரக் குழவிகளுக்கு புரியுமா என்கிற ஐயத்தை ஆசிரியரே எழுப்பி அவரே அதை விளக்கவும் செய்கிறார். கதை சொல்லியும், கதை நாயகன் பிரேமும், எழுத்தாளர் ஜா.ராஜகோபாலனும் வெவ்வேறு ஆட்கள் என்கிற புரிதல் இலக்கிய வாசகனுக்கு இருக்கிறது. எனவே கதையில் வரும் "நானை" எழுத்தாளர் மீது ஏற்றுவது இல்லை. இத்தனை நான்களில் எந்த 'நான்' எழுத்தாளர் என்று வாசகர் உய்த்தறிந்தும் விடுவார். ஏனெனில் ஜாஜாவை நன்கு அறிந்த வாசகருக்கும் நண்பருக்கும் இந்நாவலில் அவர் யாரென்ற ஐயமே எழாது. எல்லாப் பள்ளிகளிலும் தெண்டிலும் சுனாகானாவும்  மெஜூராவும் உள்ளனர்.  அங்கு பிரேமுக்கான தேவையும் உள்ளது. 


 

சென்ற தலைமுறை மாணாக்கர்கள் அரசியல் அறிவை தனது தொடக்கப்பள்ளி காலத்திலேயே பெற்றார்கள் என்பது ஒரு மறுக்கவியலா உண்மை.  இந்நாவலில் கதைநாயகன் அரசியல் வயப்படும் இடம் அவ்வகையில் முக்கிய தருணம். காரணமின்றி  வெறுப்புணர்வு எழுந்து வருவதற்கு சாதி ஒரு முக்கிய பங்கு வகிப்பதை நாவல் சுட்டுகிறது. சாதி  மீதான வெறுப்பு தனிநபர்  வெறுப்பாக ஆவது போலவே தனி நபரின் தவறு சித்தாந்தத்தின் மீது வெறுப்பாக ஆவதும் சிறார்கள் மனதில் அது உருவாக்கும் விதையும் நுட்பமாக கடத்தப் படுகிறது. இடதுசாரி இயக்கத்தின் மீது உருவாகும் ஆதரவு மனநிலைக்கும் பிற  இயக்கங்களின் மீது உருவாகும் விலகல் மனநிலைக்கும் தனிநபர்களின் செயலும் சொற்பிரயோகங்களுமே காரணமாக அமைகின்றன.  இதை வாசிக்கும் போது ஜா.ராஜகோபாலன் தனது அடுத்த படைப்புகளில் இந்தப் புள்ளியை இன்னமும் விஸ்தரித்து எழுதக்கூடும் என்று தோன்றுகிறது. 

 

பிற நினைவேக்க படைப்புகளிலிருந்து இதை வேறு படுத்துவது  என்று இதில் உள்ள ஒருவித ரகசியகாப்புத் தன்மையை அல்லது கிசுகிசுத்தன்மையைக் கூறலாம். ஒரு விஷயத்தை நேரடியாகச் சொல்வதை விட இவ்வாறு சொல்லும் போது அது நம்பகத்தன்மையை  இன்னமும் அதிகமாகிவிடுவது இந்த நடையின் பலம். அப்படிச் சொல்லும்போது இது ஒரு தரப்பின் நியாயங்களை முழுமையாக வலியுறுத்துகிறது. ஆகவே இதில் பிரேமின் தரப்பு முழுமையாக பிடிபடுகிறது. தோழமைகள் பிரேமின் எதிர்பார்ப்புக்கு ஏற்றவர்களாக இருக்கிறார்கள். அதையும் மீறி பிரேம் தனக்கிணையான ஆளுமைகளை எதிர்கொள்வதும் அப்படிக் கண்டவுடன் பிரேமின்  உள்ளுணர்வு எச்சரிக்கையடைவதும் தன் வழிக்கு பிறரைக் கொண்டுவருவதும் மிக சகஜமான நடையில் வாசக இடைவெளியுடன் சொல்லப்படுகிறது. நாவலில் எதிர் நாயகனாக அதிகாரத்துடன் வரும் ஆளுமையை எதிர்கொண்டு அதை யாரென உணர்ந்துகொள்ளும் இறுதிக் கணம் நாவலின் உச்சகட்ட தருணம் என்று கூறுவேன். அதுவரையில் எழுப்பப்பட்டு வரும்  அனைத்தும் அந்த இடத்தில் பிரட்டிப் போடப் படுவதும் பிரேம் தன்னை உணருவதும் இந்த நாவலை மேலெழுப்பிவிடுகிறது.





கதை சொல்லியாக வருபவர் ஒரு அருவநிலையில் உள்ளார். அவரது குடும்பம் குறித்தோ அகம்-புறம் குறித்தோ அதிகம் பகிரப்படவில்லை. ஒருவகையில் அவர் காலத்தின் குரல். சற்றே பிந்திய காலம்தான் என்றாலும் அதன் குரல் தற்போது தேவையான ஒன்று. ஏனென்றால் அந்த காலம் ஒரு யுகசந்தி. ஒவ்வொரு யுகசந்தியை சொல்லவும் ஒரு காவிய கர்த்தா எழுந்து வருகிறான். ஒரு தனிப்பட்ட குடும்பத்தின் அல்லது குழுவின் கதையைச் சொல்லத் துவங்குகிறான். ஒட்டுமொத்தமாக ஒரு சமூகம் அடைந்த மாற்றமும், அதன் வழியாக அறியக் கிடைக்கிறது. பிரேமுக்கு உயர்நிலைப்பள்ளியில் கிடைத்த அனுபவங்களுக்கு நேராகவோ மாறாகவோ ஒன்று மேனிலையில் கிடைத்திருக்கலாம். தெய்வநல்லூர் கதைகள் வாயிலாக அதன் துவக்கத்தை ஜா.ராஜகோபாலன் சொல்கிறார். அந்த அடிப்படையில் இந்நாவலை ஒரு தொடர்நாவலின் துவக்கப்புள்ளி என்றும் கருதிக் கொள்ளலாம்