Wednesday, July 22, 2020

முரசும் சொல்லும் - எ) தன்னறத்தின் தடத்தில்



தனித்தலைந்து அடைதல் என்பது தருமன், பீமன் அர்ஜுணன் போன்ற நாயகர்களுக்கு மட்டும்தான் என்றில்லை. பல உப கதாபாத்திரங்களுக்கும் இது நிகழத்தான் செய்கிறது. அவர்களின் உணர்வுகளும் தனித்திறமைகளும் கலந்து அவர்களின் தவிப்பும் அடைதலும் நிகழ்கிறது.

தமிழ் இலக்கியத்தின் சிறந்த காதல் அத்தியாயங்கள் வெண்முரசில் உண்டு. இந்திர நீலத்தில் இளைய யாதவன், கிராதத்தில் உமையொருபாகனாக ஈசன் என இறைவடிவங்கள் ஆடும் அத்தியாங்களும் உண்டு. ஆனால் அவை தத்துவார்த்த பிண்ணனி கொண்டவை.   நாம் இங்கு மானுடர்களின் அலைக்கழிப்பைப் பற்றி மட்டும் குறிப்பிடுவதால்,  நளன், அனிருத்தன் பூரிசிரவஸ் என மானுடர்களை வைத்தும் அது நிகழ்வதை தொகுத்துக் கொள்ளலாம். தருமனின் சூது, பீமனின் சமையற்  கலை, அர்ஜுனனின் மாறுவேடத் திறன்,  நகுலனின் புரவி சாஸ்திரம், சகதேவனின் எண் கணிதம் என,  பஞ்ச பாண்டவர்களின் அனைத்து தனிப்பண்புகளையும் ஒருங்கே பெற்றவனான நளன், தனக்கான காதலை கண்டடைய இந்திர வேதத்தை எடுக்கிறான். அங்கு ஒரு இந்திர சிலையை நிறுவுகிறான். அவனிடம் காதல் வயப்படும் தமயந்தி சக்கரவர்த்தினியாகும் விழைவு கொண்டவள். அவளை மணம் கொண்டதாலேயே, அவளின் விழைவினை நளன் ஆற்றுகிறான்.



அனிருத்தன் பாணாசுரனின் மகளின் மீதான காதலில் ஆசுர தேசத்துக்குள் செல்கிறான்.  பூரிசிரவஸ் தன் தயக்கத்த்தின் காரணமாக தன் காதல்களை இழக்கிறான். இவ்வாறு  பல ரசமான தருணங்கள் உண்டு.  ஒரு மனிதனின் சிந்தனையை வடிவமைப்பது நாம் முன்பு விவாதித்த வேதங்களும் உபநிடதங்களும் தத்துவங்களும் மட்டும்தான் என்று இல்லை. இது போன்ற உணர்வு ரீதியானவை கூட வடிவமைக்கின்றன.  மேலும் இது தவிர, மனிதர்கள் தங்களின் அன்றாடம் வழியாக சமைத்துக் கொள்ளும் விதிகளும் வடிவமைக்கின்றன. அவற்றில் சில வேதங்களாகவும் சாஸ்திரங்களாகவும் நிலை கொண்டவை.
         
துரோணர்  காலையில் எழுவது முதல், இரவு அவருக்கு தலைமாட்டில் அமர்ந்து அவர் உறங்கும் வரை தினசரி பணிவிடை செய்யும் அர்ஜுணன் அவரிடமிருந்து தனுர் வேதத்தைக் கற்றுக் கொள்கிறான். துரோணர் அதை தன் ஆசிரியரான அக்னிவேசரிடம் அறிகிறார். இதுவும் குருபரம்பரையாக அருளப்பட்டு வருகிறது.  அக்னிவேசர், பீஷ்மர், பரசுராமர், துரோணர் என நிலைத்த வீரர்கள். அவர்களிடமிருந்து கற்று  எழுந்த அர்ஜுணன், அஸ்வதாமன், சிகண்டி,  கர்ணன் என அடுத்த தலைமுறையினரும் வருகிறார்கள்.  செயல்மூலம் தன்னை வென்றவன் யோகி.  அவன் உலகையும் வெல்வான். யோகியின் கையில் இருப்பது எதுவோ அதுவே இறுதியான ஆயுதம். அதுவே அவன் மந்திரம், அதை ஆள்வதே அவன் சாதகம். சொல் மூலம் அடையப்பெறும் எதையும் வில்மூலமும் அடையலாமென்றுணர்க  இது தனுர்வேதத்தின் சாரமாக அக்னிவேசர் உரைப்பது

மற்றொரு புறம், பீமன் அடுமனைக்குச் சென்று, அங்கு இருக்கும் அடுமனை முது சூதரான மந்தரரிடம் அன்னம் எழுவதை அருகமர்ந்து அறிகிறான். அவரது கால்களின் கீழ் அமர்ந்துகொண்டு அவரது பாதங்களைப்பிடித்து தன் மடிமேல் வைத்துக்கொண்டு விரல்களை மெல்ல இழுத்து நீவியபடி, “சமையல் என்பது ஒரு ஞானமார்க்கம்” என்று அர்ஜுணனிடம் உரைக்கிறான். பிற்காலத்தில், அவர்களின் அஞ்ஞாதவாசத்தின் போது விராடத்தில் அவன் அடுமனை சூதனாகவே பணிபுரிகிறான்.  அங்கு அவனிடம் பாடம் கற்கும் சம்பவன் வந்து சேர்கிறான். மைத்ரேயக் காட்டில் அன்னம் உண்ணப்படுவதைக் காணும் தருமர் பந்தி பரிமாறுதலின் ஊடாகவே அந்த ஞானத்தை அடைகிறார்

மற்றொரு இடத்தில் கர்ணனிடம் அவர் தந்தையும் குதிரைச் சூதருமான அதிரதர் புரவி வளர்ப்புக் கலையை சொல்லி வருகிறார். அஸ்வசாஸ்திரம் எனப்படுகிறது அது.  குதிரைகளின் காலோசையிலேயே அவற்றை உணரத்தெரிந்தவனே அஸ்வசாஸ்திரம் தெரிந்தவன். இப்போது வரும் குதிரைகளை என் அகக்கண்ணாலேயே என்னால் காணமுடியும்” என்கிறார் அவர். பாண்டவர்களில் புரவிக் கலை அறிந்தவன் நகுலன். நீர்க்கோலத்தில் நகுலன் புரவி சூதனாகவே இருக்கிறான்.




அமைச்சுப் பணியில் யாகசாலை அமைப்பது முதல் அரியணையில் அரசர்களை அமரச் செய்தல் வரை செயல்களை விதுரர் முதல் செளனகர் வரை உரைத்துக் கொண்டே இருக்கிறார்கள். இவை தவிற சூது மற்றும் சதுரங்கத்தின் வழியாகவும் உரைக்கப் படுகிறது. அவை  வெளிப்படையான நீதி உரையாடல்களாக வருகின்றன. அதை எளிதாக கவனித்தும் விடலாம். ஆனால் இத்தகைய தனித்தொழில் ஆளுமை கொண்டவர்கள் உரைப்பது கதையின் போக்கில் வருகிறது. காந்தாரத்தில் சகுனியிடம் ஒரு நாகசூதர் உரைக்கும் கதை அரசூழ்தல் குறித்த சித்திரத்தை அளிக்கிறது. ஒரு குழிக்குள் மாட்டிக்கொண்ட மன்னனும்  அமைச்சரும் வீரர்களை வெட்டி உண்டு உயிர் பிழைத்ததை நாகசூதர் உரைக்கிறார். இந்த சூதர்கதை சகுனியின் அரசூழ்தலுக்கு சான்றாக வருகின்றன. அதை தொகுத்துக் கொள்கையில்தான் உய்த்துணர முடிகிறது.

இவ்வாறே, ஒப்பனைக் கலை குறித்து ஒரு உரையாடல் நிகழ்கிறது. வெண்முகில் நகரத்தில் பாண்டவர் ஐவருடலும்,  ஒப்பனைக்கலை அறிவையாகிய மிருஷை மற்றும்  அவரது மாணவிகளான காருஷை, கலுஷை ஆகியோரின் உரையாடல் நிகழ்கிறது. அந்தக் கணத்தில் அவர்கள் ஐவரின் மனநிலையை வாசகருக்கு கடத்தும் உரையாடல் அது. அதில் வெளிப்படும் சமைஞருக்கான ஒரு அறிதல் வாசிக்கயில் எனக்கு மிகவும் வியப்பளித்தது.  ஆடையின்றி ஒரு மனிதனால் நிற்க முடியும். குறைந்தபட்சம் தன்னுடலை தான் காண்பதாவது நிகழும். ஆனால் தான் யார் தன் உள்ளம் என்ன என்று தன்னையறிந்தவர் எத்தனை பேர்?. நாம் நம் உள்ளத்தை மறைத்தே பிறரிடம் காட்டுகிறோம். ஆம். உடல் ஆடையின்றி இருக்கலாம் ஆனால்  உள்ளம் ஒருபோதும் ஆடையின்றி நிற்கமுடியாது. ஒவ்வொரு சமயத்திலும் நம் உள்ளத்தில் உள்ளதை மறைத்துக் கொண்டு தன் தேவைக்கு ஏற்றதை காட்டுகிறோம். அரசியல் விழைவை அறத்துடன் ஒப்பிட்டு உன்னதமாக்குகிறோம். காம உணர்வை ஆதி இச்சை என்று உன்னதமாக்குகிறோம். வெளியுலகிற்கு,  தன்னை கொடுங்கோலனாக, அறவானாக, ரசிகனாக, பெரும் ஞானம் அடைந்தவனாக என பலதரப்பட்ட வகையில் புனைந்தே காட்டுகிறோம். அந்த தருணத்திற்கு என்ன தேவையோ அதைச் சொல்கிறோம். அதை நாம் நமக்காக செய்வதில்லை அதை பெறுபவர்க்காக செய்கிறோம். அழகுக் கலைஞரின் உரையாடலிலல் மிருஷை அதையே உடலுக்காக செய்வதாக கூறுகிறார். வாசகனாக, சொல்வளர்காட்டில் தருமன் ஜனகர் சலஃபை கார்த்யாயணி என அனைவரின் உரையாடலின் போதும் நான் மிருஷையை நினைத்துக் கொண்டேன். எவ்வளவு எளிதாக உரைத்துவிட்டார் என்று

இவ்வாறூ நீராட்டறை சூதர்கள், சேடிகள்  என்று பலர் பெரும் உரையாடலை நிகழ்த்துகிறார்கள். னால், எளிய மானுடர்கள் அல்ல அவர்கள். அவர்கள் அந்த தருணத்தின் மனவோட்டத்தைக் கடத்த உரையாடுகிறார்கள் அல்லது அவர்கள் ஊடாக ஒரு அறிதலை வாசகருக்குக் கடத்துகிறார்கள். முதன்மை கதாபாத்திரங்களின் உரையாடல்கள் தவிர இத்தகைய கதாபாத்திரங்களும் உரையாடலின் வழியே நாம்  கண்டடைய சிலவற்றை  வெண்முரசு பூடகமாக விட்டு வைக்கிறது. அந்த வகையில்,  நீர்க்கோலத்தில் சுபாஷிணி என்ற சேடி தன் உளம் கவர்ந்தவனாக  அடுமனையாளன் சம்பவனை தேர்ந்தெடுப்பதும் திரெளபதிக்காக இறுதியில் முதலாவிண் நாவலில் விண்ணேகாமல் பீமன் அவளுடன் தங்குவதும் தொடர்புடையது.

இதில் ஒரு தொடர்ச்சியை வெண்முரசு கையாள்கிறது. அது கதா பாத்திரங்களின் உள்ளம் அதை எப்படி உள்வாங்குகிறது என்றும் அவர்கள் ஊடாக ஜெயமோகன் விளக்குகிறார். உதாரணமாக, வண்ணக்கடல் அத்தியாயத்தில் அக்னிவேசர் துரோணரிடம் அம்பு என்றால் என்ன எனக்கேட்க துரோணர் அம்பு என்பது புல் என்று சொல்வார். தான் பிராமணரா என்ற குழப்பத்தில் இருக்கும் துரோணரின் குழப்பம் அது.  ஆனால் அதை அக்னிவேசர்  தன் மரணத்  தருவாயில் தனக்காகதாகவே புரிந்து கொள்வார்.  அதை நான் இப்போதுதான் முற்றிலும் புரிந்து கொண்டேன். வில் என்பது ஒரு புல் மட்டுமே என்றும் தனுர்வேதமென்பது புல்லை அறிந்து கொள்ளும் ஞானம் என்றும்…” என்கிறார்.

அதன்பின் துரோணர் அர்ஜுனனுக்கு ஆசிரியர் ஆகும்போது அவனிடம் அதே கேள்வியை கேட்பார். அப்பொழுது அவன் அதை "சொல்" என்று சொல்வான். அதன்பிறகான உரையாடலில்  அவரும் அதை ஏற்று மறுசொல் உரைக்கிறார். “வில் என்பது ஒரு சொல். அம்பு என்பதும் சொல்லே. மிகச்சரியான முழுமையான சொல்லை அடைந்துவிட்டால் நம் கல்வி முடிந்தது. சொல்லை கையில் இருக்கும் மூங்கிலிலோ தர்ப்பையிலோ நிகழ்த்துவது என்பது மிகமிக எளிய செயல். அந்தத் திறனை ஒரே வருடத்தில் அடைந்துவிடலாம். ஆனால் வாழ்நாளெல்லாம் தவம்செய்தே சொல்லில் முழுமையை அடையமுடியும்” என்கிறார். ஆனால் நாம் யதார்த்தத்தில் நோக்கும் போது,  இறந்தது அஸ்வதாமன் என்ற சொல்லுக்கு வில் நழுவி நின்று இறக்கிறார். இந்த மூன்று நிகழ்வுகளும் வெவ்வேறு தருணங்களில் நிகழ்பவை. ஆனால் அதை வெண்முரசு எப்படி கோர்க்கிறது என்று அதை தொகுக்கையில் உணர்ந்து வியக்காமல் இருக்க முடியாது

எல்லா செயலும் ஞானமார்க்கமே! என்று மந்திரர் பீமனுக்கு அடுமனையில் சொல்வது ஒருவகையில் இளைய யாதவன் உரைக்கும் கர்ம ஞானமே.



வேதங்கள் அருளுபவனவற்றின் தொடர்ச்சியாக அதிலிருந்து கிளைகொண்டு விரிபவை இவை. வேதங்கள் உபநிடதங்கள், இவ்வித சாஸ்திரங்கள் மற்றும் உணர்வெழுச்சித் தருணங்களும் கலந்த ஒரு புரிதலை அடைந்தால் இவை  மனிதர்களுக்குள் ஏற்படுத்தும் விழைவையும் சிக்கலை உணரலாம். இவர்கள் தவிர வியாசர் போல கதாபாத்திரங்களைக் கண்டு ஆனால் ஏதும் ஆற்ற முடியாமல் அமர்ந்திருப்பவர்களின் பதட்டமும் தெளிவும் வெண்முரசுக்குள் ஊடாடுகின்றன.

உத்தாலகரின் பெண்ணுக்கான இல்லற நெறிகள் முதல் தசரத ராமன் தனக்காக வகுக்கும் தன்னொழுக்க நெறி வரை வந்த அறம் அடுத்த கட்ட நகர்வை இளையாதவனிடம் அடைகிறது.  ஒவ்வொரு கதாபாத்திரங்களும் குலங்களுக்கான அறம், அரசுக்கான அறம், இல்லற அறம், தான் ஆற்றூவதற்கான அறம் என அனைத்தையும் ஒவ்வொன்றாக கடந்து இறுதியாக தன்னறத்தில் வந்து நிற்கின்றன

வேதத்தால், தன் செயலால், உணர்ச்சியால், விழைவால், பக்தியால் அலைக்கழிக்கப் படும் அவர்கள் இளைய யாதவன் முன்பு வந்து நிற்கிறார்கள். அவன் அதிலிருந்து ஒவ்வொருக்குமான சொல்லை அளிக்கிறான். அவரவருக்கான தன்னறத்தை அவனுடன் உரையாடி ஒவ்வொருவரும் அறிகின்றனர். அவர்களின் நீதி, வேதம், விழைவு, பற்று எல்லாம் கலந்த சொல். இமைக்கண காட்டுக்குள் செல்ல இவையனைத்தையும் இவற்றுக்கு மேல் உள்ள ஊழையும் அறிய வேண்டித்தான் இருக்கிறது

தொடர்ச்சி :- முரசும் சொல்லும் - ஏ) கதிரெழுகை

2 comments:

Gopinath Gnanasekaran said...

All the articles are good and gave much more perspectivesin reading and to understand the depth of Venmurasu. Thank you.

காளி said...

மிக்க நன்றி திரு.கோபி