Wednesday, November 4, 2020

உபாதைகள் மொய்க்கும் தீம்புனல் உலகம்

நவம்பர் 2020 வல்லினம் இணைய இதழில் வெளியான கட்டுரை. கட்டுரை இணைப்பு இங்கே

(1)

சுதந்திரத்திற்குப் பிறகு மிகக் குறுகிய காலத்தில்  சமூகம், அரசியல்  மற்றும் சித்தாந்தம் என பலதரப்பட்ட வகையில் மாறுதல்களைக் கண்டவற்றில் தமிழகம் மிகவும் முக்கியமான மாநிலம்தான். மாறி  மாறி வரும் தமிழ் சமூக சூழலில் இன்னும் ஒரு யதார்த்த நாவலுக்கான களம் இருந்துகொண்டுதான் இருக்கிறது.  தான் பாடுபட்டு ஒன்றை உருவாக்கி தன் தலைமுறைக்கு வைத்துச் செல்வோம், ஏழு தலைமுறைக்கான வாழ்வாதாரத்தை அளித்துச் செல்வோம் என்று தீர்க்கமாக ஒருவரால் எதையும் சொல்லிவிட முடியாத நிலைதான் இன்றும். அடுத்த தலைமுறைக்குள் காட்சிகள் மாறிவிடுகின்றன. யதார்த்த நாவல்கள் இன்னும் எழுதப்பட இந்த குறுகிய கால மாறுதல்களும் மோதல்களும் ஒரு காரணமோ என்று எண்ண வைக்கிறது. விவசாய பின்னணி, தொழிற் பின்னணி என பல பின்புலங்களில் யதார்த்த நாவல்கள் பலவும் எழுதப்பட்டு இருக்கின்றன. அந்தத் தளத்தில் பலநாள் விவாதிக்கப்பட்டு வரும் மண் தஞ்சைக்கானது.

இன்று தமிழகத்தின் அந்த நெற்களஞ்சியம் மெல்ல மெல்ல தன் அந்தஸ்தை இழந்து வருகிறது. ‘நடந்தாய் வாழி காவேரி’ என காவிரி பாய்ந்து செழிப்பாக்கிய நெற்களஞ்சியத்தின் ஒவ்வொரு துளி உமியிலும் இன்று அரசியல் ஏற்றப்பட்டு விட்டது.  அது செய்தித்தாள்களிலும் தொலைக்காட்சி விவாத மேடைகளிலும் புள்ளி விவரங்களோடு அலசப் படுகிறது. இதனாலேயே இது குறித்துப் பேச ஒவ்வொரு தனி நபருக்கும் ஒரு கருத்து உருவாகியுள்ளது. விவசாயம் பொய்த்ததா? ஏரிகளும் விளை நிலங்களும் குடியிருப்பு மனைகளாவதா? காவிரியின் மண் சுரண்டலா? என பல விதங்களில் கிட்டத்தட்ட அனைவருக்கும் அது தன் சார்ந்த ஒரு கருத்தைப் பேச விட்டு வைத்திருக்கிறது. ஆனால் இலக்கியத்துக்குள் இது பெருமளவு எழுதப்பட்டதில்லை. இதற்குள் உடனடியாக மொழி / மாநில கட்சிகளின் அரசியலும் புகுந்துகொண்டதால் அரசியல் மேடைகளிலும்  இதழியல்களிலும், வணிக படைப்புகளிலும் அதிகம்  பேசப்பட்டு விட்டது. அவ்விடங்களில் புனைவுக்கும் பஞ்சமில்லாமல் இது அலசப்படுவதால்   இலக்கியத்தில் இருந்து விலகியும் இருந்ததோ என்றும் எண்ண வைக்கிறது

நெற்களஞ்சியத்துக்கு இணையாகவே, தஞ்சை ஒரு காலத்தில் தமிழிலக்கியத்தின் மையம் என்று சொல்லும் அளவிற்கு ஆளுமை கொண்ட இலக்கிய கர்த்தாக்களையும் கொண்டிருந்தது. அவர்களின் படைப்பில் காவிரி ஒரு வற்றாத சுரபியாகவே வருகிறது. பிற்காலத்தில்  காவிரி சார்ந்த அரசியல் எழுந்து வந்து தஞ்சையின் விவசாய வாழ்க்கை பாதிக்கப் பட்டு வறட்சி, டிஎம்சி ஆகிய சொற்கள் விவாதிக்கப்படத் துவங்கிய சம காலத்தில் தஞ்சையும் தன் இலக்கிய மையத்தைக் கைவிட்டிருந்தது. ஆகவே இன்றும் தஞ்சை எழுத்தாளர்கள் படைப்புகளில் தனிமனிதர்கள் மையம் கொண்ட அளவு நிலம் சார்ந்த படைப்புகள் எழவில்லை.




சில வருடங்கள் இடைவெளிக்குப் பின் வந்த யூமா வாசுகியின் ‘ரத்த உறவு’ நாவல் மனித உறவும் அன்பும் குறித்துப் பேசியது. அது அறிமுகப் படுத்திய நபர்கள் அதுவரைக்குமான மனிதர்களைவிடவும்  சற்று உக்கிரமானவர்களாக இருந்தனர். இருப்பினும் அதுவும் நிலம் சார்ந்த அடிப்படைகளுக்குள் செல்லாத நாவல்.  விவசாயம் / அதன் தோல்விகள் சார்ந்த படைப்புகள் தமிழில் மற்ற பிரதேசங்களில் எழுதப்பட்டன. விவசாயம் பொய்த்தபின் மனிதர்கள் வேறு சில பகுதிகளுக்குப் பிழைப்புத் தேடிச் செல்வதும் தமிழிலக்கியங்களில் பதிவு செய்யப்பட்டன. சோ.தர்மன், சு.வேணுகோபால், கண்மணி குணசேகரன், இமையம் போன்றோர்கள் விவசாயம் பற்றியும், இயற்கை / அரசுத் திட்டங்கள் மூலமாக விவசாய வாழ்வை இழந்து இடம் பெயரும் பாத்திரங்களையும் சித்தரித்துள்ளனர்.  ஆனால்தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சையிருந்து அதை மையப்படுத்தி ஒரு நாவல் வருவதற்கு இத்தனை வருடங்கள் ஆகி விட்டிருக்கிறது.  அதே, சமயம் அங்கும் இங்குமாக எழுந்து வந்த குழப்பங்கள் அரசியல் ஆட்டங்கள் மண் சுரண்டல்கள் என அனைத்தையும் தொகுத்துப் பார்க்க இத்தனை காலம் தேவை என்பதும் மறுக்கமுடியாததுதான்.

அரசியல் என்று எடுத்துக் கொண்டாலும் தமிழகத்தின் முக்கிய சித்தாந்தமான திராவிட சித்தாந்தம் மையம் கொண்ட பூமி தஞ்சைப் பகுதிதான். கோயில் நகரம் என்றழைக்கப்படும் கும்பகோணம் நகர்பக்திக்கு முக்கியத்துவம் பெற்ற அளவே நாத்திகத்துக்கும் முக்கியத்துவம் பெற்ற ஊர்தான். அண்ணா, கலைஞர், எம்ஜிஆர் ஆகியோரின் திராவிட அரசியலுக்குப் பின் பெரும் எழுச்சி கொண்டதாக சாதிக்கட்சிகள் வந்தன. சித்தாந்த ரீதியாக அவற்றின் தாக்கமும் அதிகம் இருந்தது. ஒவ்வொரு பத்தாண்டிற்கும் ஒரு பெரும் குழப்பத்தை சித்தாந்த ரீதியிலும் வாழ்வாதார ரீதியிலும் சாதீய ரீதியிலும் அந்தச் சுற்று வட்டார மக்கள் எதிர்கொண்டுதான் வந்தனர். கார்ல்மார்க்ஸ் அந்த துவக்க காலத்தைத்தான் தன் நாவலின் பின்புலமாக வைத்திருக்கிறார். சிறுவனான மூர்த்தி, இளைஞனாய் ஆகும்வரை நிகழ்ந்த புறச்சூழலும் அதனால் அவன் பெற்ற ஒருவித சிந்தனை தெளிவும்தான் இந்த நாவல் என்று சொல்லிவிடலாம்.

(2)

மூன்று தலைமுறைக் கதையான தீம்புனல் நாவல், ஒரு குடும்பம் எவ்வாறு புறச்சூழல்களால் அலைக்கழிக்கப் படுகிறது என்பதை விளக்கமாகச் சொல்கிறது. குத்தகை நிலத்தில் விவசாயம் பார்த்து வரும் சோமுவின் நிலம் ஒரு செட்டியாருக்குச் சொந்தமானது. அந்த நிலத்தைச் செட்டியார் தன் பெயரில் மீண்டும் மீட்டெடுக்க வழக்குத் தொடுத்திருப்பதில் இருந்து சோமு வீட்டு சித்திரம் துவங்குகிறது. சோமுவின் பார்வையிலும் அவரது பேரன் மூர்த்தியின் பார்வையிலும் நகர்கிறது. இந்தப் பின்னணியில் மேலும் பல இடர்களைச் சந்தி்த்து நகர்கிறது அந்தக் குடும்பம். சோமுவின் பட்டறிவும் மூர்த்தியின் தர்க்க அறிவும் சந்திக்கும் இடத்தில் நாவல் முடிகிறது. இந்த நாவலின் பெரும் சவால் என்பது வாழ்ந்து கெட்ட ஒரு விவசாய குடும்ப பின்னணி கொண்ட ஒரு கதையை எப்படி ரசமாகச் சொல்வது என்பது தான்.  காரணம் இது பல தளங்களில் ஏற்கனவே அலசப்பட்டுவிட்ட ஒன்று. ஆசிரியரின் சவால் என்பது வாசகருக்கு இதை புதிதாக விவரிக்க வேண்டும்அந்த நிலப்பகுதியை புதிதாக சுற்றிக் காண்பிக்க வேண்டும் என்பதுதான். கார்ல்மார்க்ஸ் அதில் வெற்றி பெற்றிருக்கிறார். விவசாய குடும்பம் என்பதை வார்த்தைகளாக இல்லாமல் வர்ணனைகள் மூலமாக விளக்கியிருக்கிறார். இன்னொருவருக்குச் சொந்தமான குத்தகை நிலத்தில் உழவு செய்யும் ஒரு விவசாய குடும்பத்திற்கு அந்த நிலத்தின் மீது உள்ள உரிமை எந்தளவு என்பது ஒருவரால் உடைத்துச் சொல்ல முடியாத ஒன்று. சட்டரீதியாக அதை அணுக முடியாது. சாதீய / பொருளாதார பின்புலம் கொண்ட அது எவ்வாறு சமூகத்தில் இன்றும் கையாளப்பட்டு வருகிறது என்பது வியக்கத் தக்க ஒன்று. இந்நாவல் அதை லாவகமாகக் கையாளுகிறது. ஒரே ஊரின் வறண்ட காலமும் நீர் நிரம்பி கதிர்கள் மூழ்கி நிற்கும் காலமும் வர்ணிக்கையில் அது சார்ந்த  அனைத்து விஷயங்களையும் கொண்டுவந்து அதை ஒரு காட்சி போல சித்தரிக்கிறார். முட்டிக்கால் தண்ணீரில் நிற்கும் சோமுவின் கால் ஈரமும் நீர் நிரம்பி ஓடும் பாலத்தைக் கடக்கும் மூர்த்தியின் பதட்டமும் சிலிர்ப்பும் அப்படியே வாசகருக்கும் தொற்றிக் கொள்கிறது. அதேபோல மனிதர்களுக்குள் எழும் கசப்பு எள்ளல் போன்றவையும் எளிதாகக் கடத்தப் படுகின்றன.

அறியாச் சிறுவனிலிருந்து, விடலைப் பருவம் தாண்டி, சமூகப் பிரக்ஞை கொண்ட  இளைஞனாக நாவலில் நாயகன் மூர்த்தி எழுந்து வருகிறான்.  நாவலின் மற்ற பாத்திரங்கள் கோபால், விசாலாட்சி, பொன்னம்மாள், பெரியசாமி, புலவர், கிருஷ்ணன் ஆகியோரின் கதைகள் வழியாகத்தான் மூலக்கதையின் போக்கைத் தீர்மானிக்கும் புறக்காரணிகள் வெளியாகின்றன. அரசியல், காமம், களவு என அனைத்து அறிதல்களும் திசைக்கொன்றாக வந்து அவனை ஆட்கொள்கின்றன. திராவிட கட்சிகளிலிருந்து தங்களுக்கான மக்களை பாமக பிரித்தெடுப்பதும் அதற்கான எதிர்வினையாக விடுதலைச் சிறுத்தைகளும் களமாடுவதும் அதன் ஊடாக எழுந்து வந்த சாதிய மோதல்களும், அவற்றின் துவக்க காலத்தில் மக்களை எவ்வாறு  எல்லாம் அலைக்கழித்தன என்கிற தோற்றமும் இதில் உள்ளது. இவை தவிர மூர்த்தி இலக்கிய வாசகனாகவும் இருக்கிறான். சமூக, சித்தாந்த ரீதியிலான அனைத்தையும் தால்ஸ்தோய் தஸ்தாவேஸ்கியில் கண்டடைந்து அவன் ஒரு புரிதலை அடைகிறான்.

ஏற்கனவே இவ்வகை நாவல்களை வாசித்துள்ள, சமூக பிரக்ஞையுள்ள வாசகருக்கு இதன் கதைப் பின்புலம் புதிதாக இராது. இன்று திரைப்படங்கள், சின்னத்திரை வரை இந்தக் கருவை அலசத் துவங்கி பலகாலங்கள் ஆகிவிட்டன. ஒரு குடும்பக் கதையாக அணுக அவர்களின் முன்னோர்களின் பின்னணி தேவைப்படவும் இல்லை. அவர்கள் அந்த மண்ணின் மைந்தர்கள் என்பது அதற்கு முக்கிய காரணம்.  ஆகவே அதுவும் ஒரு சாதாரண குடும்ப வரலாறாகத்தான் உள்ளது. அதற்குள் எந்தளவு நுட்பமாக விஷயத்தை உரைக்க முடியுமோ அதை சொல்லிவிடுகிறார்.  உதாரணமாக சோமு சுந்தரவள்ளி திருமண நிகழ்வு வரும் அத்தியாயம். அன்றைய யுவதிகளின் சுதந்திர ஆற்றுக் குளியல், கணவனைப் பார்க்காமலேயே மணம் புரிதல்  என சொல்லி வரும்போதே சோமுவுடன் இலுப்பை மரக் காடு வரை சென்று ஓநாய்களின் ஊளை வரை சொல்லிவிடுகிறார். பின்வரும் அத்தியாயங்களில் அவை மெல்ல மெல்ல அழிவை நோக்கி வந்து சேரும் சித்தரிப்பை ஆற அமர விளக்குகிறார். தலைமுறைகளாக அங்கேயே இருந்த ஒன்று ஒரு ஐம்பது ஆண்டுக்குள் எங்கிருந்து எங்கு வந்து சேர்ந்திருக்கிறது என்பதை விளக்கும் நல்ல உத்தியாக அது உள்ளது.  அதேபோல மேலதிக கவனம் தேவைப்படும் சில இடங்கள் நாவலில் பூடகமாக இருக்கின்றன.  சாதி விட்டுத் திருமணம் செய்த ரஞ்சிதாவை அழைத்து வரும் கோபால் ஏன் அதே ஒதுக்குப்புற வீட்டில் அடைத்து வைக்கிறான். அல்லது அங்கு மூர்த்தியால் வரவழைக்கப் பட்டானா? அந்த வீட்டில்   கலியபெருமாள் எப்படி இறந்து கிடக்கிறார். கலியபெருமாள் மரணத்தில் இந்திராணி அல்லது மூர்த்தியின் பங்கு என்ன? இதெல்லாம் வாசகர் ஊகித்துக் கொள்ள விட்டிருக்கிறார்.  மூர்த்தி தனி ஒருவனாக கோபால் கோஷ்டியினருடன் சண்டையிட்டு அவர்களை விரட்டியதாகப் புலவர் சொல்கிறார்? ஒதுக்குப்புறமான தனித்த வீடு. அதை இளைஞர்கள் விலை மாதர்களை அழைத்து வந்து தனித்திருக்கப் பயன்படுத்துவது தவிர நாவலின் இறுதிக் காட்சியும் ஒரு சண்டையோடு முடிகிறது. இதை வாசிக்கும்போது ரஷ்ய இலக்கியத்திற்கு இணையாகத் தமிழ்த் திரைப் படங்கள்கூட மூர்த்திக்குள் பல சிந்தனை மாற்றங்களை ஏற்படுத்தியதா என்றுகூட யோசிக்க வைக்கிறது.

ஆசிரியரான ரத்தினம், தான் பிறந்து வளர்ந்த காலனிப் பகுதியை விட்டுவிட்டு வெளிப்புறத்தில் உருவான நகர் ஒன்றுக்குக் குடிபெயர்கிறார். ஆனால் சில நாட்களில் அவர் தன் பழைய வீட்டிற்கே வந்து விடுகிறார்.  அவர் சென்ற புதிய நகரில் அவருக்கு நேர்ந்திருக்கக் கூடிய நுட்பமான சாதீய அவமதிப்பை ஊகிக்க முடிகிறது. மேலும் அதை ரமணியும் உய்த்தறிந்து முந்தைய  அத்தியாயத்தில் வரும் உரையாடலிலேயே சொல்லவும் செய்கிறார்.  அதன் பின் ஒரு அத்தியாயத்தில் ரத்தினத்துக்குத் திருமண பத்திரிகை தரும் தமிழாசிரியர் அவர்கள் வீட்டில் ஏதும் அருந்தாமல் இருப்பது விவரிக்கப் படுகிறது. சோமுவும் மைந்தர்களும் கொண்ட அந்த  விவசாய குடும்பம் நொடித்துப் போய் விரிசல் கொள்ளும் போது மழையில் அந்த வீட்டின்  சுவர் இடிந்து விழுவது இயல்பாகவே நாவலில்  ஒரு குறியீட்டு முக்கியத்துவம் பெற்றுவிடுகிறது.  இருந்தாலும் பின்னொரு அத்தியாயத்தில் சுவர் விழுந்தது ஒரு குறியீடு என்று நாவலாசிரியர் கூற்றாக அது விளக்கப் படுகிறது. முந்தைய அத்தியாயத்திலேயே  சொன்ன பின்பும் அதையே மீண்டும் ஒரு அத்தியாயமாக வைப்பது / நாவலாசிரியர் வந்து விளக்குவது ஆகியவை ஒருவித திகட்டலாகத் தோன்றிவிடுகிறது.  ஆனால் ஒருபொழுதும் நாவலின் மையக் கதையையோ அதன் நடையையோ இவை மட்டுப்படுத்தவில்லை என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.

 

(3)

பெரிதும் மாற்றிவிடமுடியாத யதார்த்தக் கதைப் பின்புலம் என்றாலும் நாவலை வாசிக்கத் தூண்டுவது  அதன் பலதரப்பட்ட தருணங்களும் உபகதைகளும்தான். மணல் சுரண்டுவது தெரிந்த ஒன்றுதான் என்றாலும் அதற்கான முஸ்தீபுகள் எவ்வெவ்வாறெல்லாம் நிகழும் என்று சுட்டிக் காட்டுகிறார். ஒரு கள்வனின் களவு முறைகள் அவன் குடும்பம் என ஒன்றும் இந்தக் குடும்பத்தை ஆட்டுவித்துச் செல்கிறது. மூர்த்தி தான் வேலைகேட்டு சென்ற ஒருவரின் வீட்டுப் பெண்ணுடன் உருவாகும் ஒரு நிமிட விடலைப் பரிதவிப்பும் அவள் உறவு முறையில் தங்கை என்று தெரிந்ததும் உண்டாகும் ஏமாற்றமும் என சிலவற்றைக் குறிப்பிடலாம். தேசியவாத காங்கிரஸ், இனவாத திராவிட கட்சிகள், சாதிய ரீதியிலான கட்சிகள்  என மக்கள் படிப்படியாக ஒவ்வொரு தலைமுறைக்கும் பிரிந்தபடியும் குறுகியபடியும் செல்வதைக் குறிப்பிட்டுச் சொல்லாமல் வாசகரை உணரவைப்பது சிறப்பான ஒன்று.

சோமுவின் கம்பீரம் குறைவது, அவரைக் கண்டால் எழுந்து நிற்கும் பெண்கள் பின் அசட்டையாக அமர்ந்திருப்பதைச் சொல்லி விளக்குவது போல நாவலின் பல குணாதிசயங்களும் முரண்களும் வாசகருக்குக் காட்சிப்படுத்தப் பட்டிருக்கின்றன. சமூகத்தில் கிடைக்கும் மதிப்பு பொருளாதாரம் சார்ந்ததா அல்லது சாதீய அடுக்கு சார்ந்ததா என்கிற கேள்வி உள்ளார்ந்து எழுந்தபடியே இருக்கிறது. ரத்தினம் பொருளாதாரத்தில் உயர்ந்தாலும் அவர் சாதீய பார்வையில் குறைத்து மதிப்பிடப்படுகிறார். சாதீய நோக்கில் உயர்ந்த இடத்தில் இருந்தாலும் பொருளாதார ரீதியாக வீழ்ந்ததில் சோமுவும் குறைத்துத்தான் மதிப்பிடப் படுகிறார். அவரது முந்தையை கம்பீரம் குறைந்து விடுகிறது. கோபால் போல சாதீய அடிப்படையிலும் பொருளாதார அடிப்படையிலும் தன்னைத் தக்கவைத்துக் கொள்வோரே அங்கு கோலோச்ச முடிகிறது. அவ்வாறாக, சமூகம் எதை நோக்கிச் செல்கிறது என்பதன் துவக்கப்புள்ளியைத் தீம்புனல் விளக்கிவிடுகிறது. இப்பொழுது பார்த்தால் அங்கு அதற்குப் பின் நிலைகொண்ட நிலை அதுவே. புலவரும் ரத்தினமும் பேசும்போது மூர்த்தி நகர்ந்து செல்வதும் அங்கு நிகழும் உரையாடலும் அதில் எழும் ஒருவித வெறுமையும் தான் நாவலின் மையமாக நிற்கிறது. நாவலாசிரியர் சொல்ல வந்த ஒன்று இதுதான் என்றும் தோன்றுகிறது. பெரும் வார்த்தை ஜாலங்கள் இல்லாத அந்த எளிய உரையாடலை விளங்கிக் கொள்ள இந்தக் கதையைச் சொல்லியாகத்தான் வேண்டும்.




ஆனால் அதன்பின் நிகழும் ’ஆக்ஷன் பிளாக்’ ஒருவிதத்தில் கதையை முடிக்கும் அவசரமாகவே  இருக்கிறது. அல்லது நவலாசிரியரின் ஒருவித ஆத்ம திருப்தி என்று கொள்வதா எனத் தெரியவில்லை. நாவல் நிகழும் தருணம் என்பது திராவிடக் கட்சிகள் மக்களிடம் ஒன்றே குலம் ஒருவனே தேவன் போன்ற சிந்தனைகளை உருவாக்கி லட்சிய நோக்கில் ஒருவனின் சிந்தனையைக் கட்டமைத்த காலம். இறுதிக் கட்டத்தில் மூர்த்தி எடுக்கும் முடிவும் அது சார்ந்துதான் நிகழ்கிறது. ஆனால் சரியும் ஒரு ஸ்தம்பத்தினை சரியவிடாமல் கயிற்றை இழுத்துப் பிடிக்கும் முயற்சி போலத்தான் அது. நாவலாசிரியர் சுட்டிக் காட்ட விரும்புவதும் அந்தக் காலத்தைத்தான் என்று கருதுகிறேன். 1980களில் நிகழ்கிறது இந்த நாவல்.  2020ல் இன்று நாவல் வெளிவந்த தருணத்தில் வைத்துப் பார்க்கும்போது இன்றும் நிகழும் சாதியக் கொலைகளும் புறக்கணிப்புகளும் அதைத்தான் பறை சாற்றுகின்றன. இன்று அந்த மூர்த்திக்கு அடுத்த தலைமுறை எழுந்துவந்து களமாடுவைதைக் காணும்போது அந்த  வெறுமையையே உணரமுடிகிறது.

இந்நாவலுக்கு முன்பு புனைவுத்தளத்தில் கார்ல் மார்க்ஸ்ன்  இரு சிறுகதை தொகுப்புகள் வெளியாகி இருக்கின்றன. ’வருவதற்கு முன்பிருந்த வெயில்’ மற்றூம் ’ராக்கெட் தாதா’  ஆகிய தொகுப்புகளாக வந்திருகின்றன. அவற்றை வெளிவந்த காலத்தில் வாசித்திருக்கிறேன்.  இவற்றில் ’வருவதற்கு முன்பிருந்த வெயில்’ தொகுப்பின் ’காட்டாமணக்கு’ உள்ளிட்ட ஓரிரு கதைகளைத் தவிர்த்து, பொதுவாகவே அது பொருந்தாக் காமம், அழிந்து வரும் நாட்டுப்புறக் கலைஞர் வாழ்வு  என சிற்றிதழில் செல்லுபடியாகக் கூடியவைகளையே மீண்டும் சொல்லும் கதைகளாகவே இருந்தன. ஆனால் ராக்கெட் தாதா அதிலிருந்து வேறுபட்ட ஒன்று. அது மிகவும் சுவாரசியமான ஒன்று.  அதன் ஒவ்வொரு கதையும்  சில அழகான அல்லது திகைக்க வைக்கும் சிறுகதை தருணங்களைத் தன்னுள் வைத்துக் காட்டியது.  ஒரு வாசகனாக அவரது புனைவுகளில் எழுந்து வரும்  இத்தகைய தருணங்களை நான் ரசித்து வாசிப்பதுண்டு.  இந்தத் தீம்புனல் நாவலையும் அவ்வாறே அவ்விரண்டின் கலவை என்று சொல்லலாம். நாவலின் கதை எளிதாக ஊகிக்கக் கூடிய ஒன்று.   ஆனால் அதில் எழுந்து வரும் தருணங்கள், நிலம் சார்ந்த வர்ணனைகள், அவர் மனிதர்களை கவனித்து காட்சிப் படுத்தியிருக்கும் விதம் ஆகியவை நாவலை மிகவும் எளிதாக்குகின்றன. அவரது அடுத்த நாவலுக்கான எதிர்பார்ப்பையும் அவையே தூண்டுகின்றன.

 


No comments: