Sunday, March 8, 2026

அவளும் நானும் - பக்தியின் முதலடி

அனுபவ அறிவு, மெய்ஞான அறிதல் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டது பக்தி. அங்கு விரதம் இருந்து வழிபடவேண்டும் என்கிற முறைமை கூட இல்லை. ராமனுக்கு எச்சிற்படுத்திய பழத்தைத் தரும் சபரியின் பக்தி அது போன்றது.



ரம்யா வாசுதேவன் அவர்கள் எழுதிய 'அவளும் நானும்' நூல் பால்ய காலத்து நினைவேக்கக் கதையோடு ஸ்ரீவில்லிபுத்தூர் கோதையின் கதையை சேர்த்த ஒரு புனைவு வடிவமாக உள்ளது.
//“நான் ஆண்டாளை சேவிச்சிட்டு சாப்பிடறேன் அக்கா!” அம்மம்மா எனக்கு அந்த பொங்கலை ஆற்றி கையில் கொடுத்துண்டே சொன்னாள்.
“நன்னா இருக்கு போ. வெறும் வயத்தோட ஆண்டாளை சேவிச்சா, அவளுக்கு மனசு கேக்குமா?
“இங்க பாரு. சாப்பிடாம கோவிலுக்கு போறது, சாப்பிடாம பாராயணம் பண்றது, இதெல்லாம் வழக்கம் இல்லை. ஆண்டாளுக்கு குறையும் இல்லாம இருக்கணும். வயிறு நிறைஞ்சு கோவிலுக்கு போ. அவளும் உன்னை நிறைப்பா.”//
இந்நூலில் அனைவரும் அறிந்த ஆண்டாள் கதையை சற்று மாற்றியதும் பெரியாழ்வாரின் பிள்ளைத்தமிழை ஆண்டாளின் குழந்தைப் பருவத்தோடு பொருத்தியதும் நன்கு பொருந்தி வந்துள்ளது.
இதன் கூடவே பத்து அவதாரக் கதைகளையும் திருப்பாவைக்கான உரையும் சேர்த்து சொல்கிறார். இந்த நூல் முதல் பாகம். இதன் இரண்டாம் பாகத்தில் மீதமுள்ள திருப்பாவையும் நாச்சியார் திருமொழியும் வருவதாக அறிகிறேன்.
இந்தப் புத்தகத்தின் இடையே வரும் வரிகள் குறிப்பாக தத்துவத்தைப் புறந்தள்ளி பக்தியை முன்வைக்கும் தருணங்கள் குறிப்பிடத் தக்கவை. பக்தி எளிமையானது என்பதுபோலவே புத்தகமும் எளிய வார்த்தைகளுடனே நகர்கிறது. மேலும் ஆசிரியர் பிறந்து வளர்ந்து கதைகள் கேட்ட சூழலோடு இயைந்திருப்பதால் அதிகம் மெனக்கிடாமலே இவரால் சில கதைகளை போகிற போக்கில் இணைக்க முடிகிறது. கோதையைக் கண்டெடுத்து வளர்க்கும் பெரியாழ்வார் அவளை வீதியில் அழைத்துச் செல்கிறார். அங்கு கோதை பன்றிகளைக் கண்டதும் ஆனந்தப் படுவது ஒரு உதாரணம். பூமாதேவி - வராஹ அவதாரம் என அவை பொருந்துகின்றன. கோதைக்கான பழத்தை குரங்கு பறித்துப் போகும் இடத்தில் அவள் காத்திருந்தாள் என்று வரும் வரி் சீதை காத்திருந்த தருணத்தை இணைத்து விட்டது. சீதையும் ஆண்டாளும் பூமாதேவியின் அவதாரமாக கருதப் படுகிறார்கள் என்பது இங்கு நினைவுகூறத்தக்கது.
நூலில், கர்மாவை செய்ய வேண்டுமா ஞானத்தைத் தேடிப் போகவேண்டுமா என்கிற கேள்வியை எழுப்பியது, பிரஹலதன் வரம் கேட்க மாட்டேன் எனக் கூறுவதும் அதற்கான காரணமும் அசல் பக்தியாக வெளிப்பட்ட தருணம், மோட்சம் நிச்சயம் என்று கருதி சாதகத்தைக் கைவிடுவதா என்ற கேள்வி வருவது என இவை அனைத்தும் வாசிக்கும் போது நிறுத்தி யோசிக்க வைத்தன
குருமார்கள் வேள்வி வளர்க்க குருபத்தினிகள் கண்ணனுக்குச் சோறூட்டுகிறார்கள். வேள்வியின் நாயகன் முன்னால் நிற்கிறான் எற்பதை வேதியர்களுக்கு மறைப்பது எது என்கிற கேள்வி அங்கு எழுகிறது. பிற்பாதியில் 'கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கிரங்கி'யில் இது நினைவுக்கும் வந்தது.



இவைதவிர நினைவேக்கமாய் வரும் குழந்தைப் பி்ராய அத்தியாயங்கள் கண்டக்டரின் சில்வர் விசில் போன்ற பல அரிதான பொருட்களை ஆங்காங்கே சொல்லியபடி நகர்கின்றன. அசலான குழந்தை மனம்வெளிப்படுகிறது . அவை புனைவு கலக்காமல் இருப்பதாக ஆசிரியரே சொல்கிறார். மாறாக புனைவுப் பகுதியாக கோதைக்கும் அவள் சகோதரனுக்குமான அன்பு பரிமாற்றம் நிகழும் அத்தியாயங்களில் ஒரு சுதந்திரம் இருக்கிறது. மலர் மாலையை அவள் சூடுவது
சங்கை அவன் காதில் வைப்பது முதுகில் ஏறிக்கொள்வது என அங்கு அவள் குழந்தையாக இருந்து தமையனுக்கு ஆசார்யராக மாறுகிறாள்
ஒரே சமயத்தில், குழந்தைகளுக்குச் சொல்லக்கூடிய அளவிற்கான எளிய வாசிப்புக்கு ஏற்ற நூலாகவும் அரிய கேள்விகளை எளிய நடையில் சொல்வதாகவும் இது அமைந்திருக்கிறது.