Friday, February 27, 2026

காவியங்களில் விழுதலும் காவியங்களிலிருந்து எழுதலும்

காவியம் நாவல் - ஒரு வாசிப்பு அல்லது ஒரு வெண்முரசு வாசகனுக்கு காவியம் அளித்த குழப்பங்களும் பிரதியிலிருந்து அவன் பெற்ற பதில்களும் அல்லது ஒரு மரபிலக்கியவாசகன் ஏன் காவியம் நாவலை வாசிக்க வேண்டும் அல்லது நாம் வாசிக்கும் காவியம் என்பது யாது?

 


 

”நண்பனே, கதைகளை மூன்றுவகை மனிதர்களிடம் சொல்லக் கூடாது. கதைகளை வெறும் பொழுதுபோக்காக எடுத்துக் கொள்பவர்கள். கதைகளின் மேல் எளிய தர்க்கத்தைப் போட்டுப் பார்ப்பவர்கள். மூன்றாவதாக கதைகள் வெறும் கதைகளே என எண்ணுபவர்கள்

 

இங்கே நாம் கதைகளைச் சொல்லும் போது மானுட வாழ்க்கைகளை கட்டமைக்கிறோம். திருத்தியமைக்கிறோம். சிதறடிக்கவும் திரட்டவும் செய்கிறோம். வரலாற்றை உருவாக்கியும் மாற்றியும் முன் செல்கிறோம். துயரங்களையும் அச்சங்களையும் பதற்றங்களையும் நம்மால் உண்டுபண்ண முடியும். இன்பத்திளைப்பையும் பரவசத்தின் அமைதியையும் உருவாக்க முடியும்” – கானபூதி

 

 (1)

காவியம் நாவல் வாசிப்பு நிறைவடைந்தது.  எனது தனிப்பட்ட அலைச்சல்களினால் காவியம் நாவலை அது  ஒரு தொடராக ஜெயமோகன் வலைதளத்தில் வெளிவந்தபோது வாசிக்க இயலவில்லை. விஷ்ணுபுரம் விழாவில் அது வெளியானதை அறிந்து நண்பர் சிவா வழியாகப் பெற்றுக் கொண்டேன். சென்ற வாரத்தில் வாசிக்கத் துவங்கினேன். எண்ணூற்றுயிருபது பக்கங்களை மூன்று நாட்களில் வாசித்து முடித்தேன். அவ்வளவு ஸ்வாரஸ்யம். கதைகளைச் செல்லும் பிசாசு உடனிருப்பது என்பதே நாம் ஒரு கதைத் தொகுதியை வாசிக்கப் போகிறோம் என்கிற எண்ணத்தை விதைக்கிறது.

காவியம் நாவல் எனக்கு வெண்முரசை நினைவூட்டியது.

அதில் வெண்முகில் நகரத்துக்கு அடுத்து ‘காண்டவம்’ என்று ஒரு நாவல் துவங்கப்பட்டு சில அத்தியாயங்களோடு நின்றது. அதன் துவக்க அத்தியாயங்களில் குழப்பம் ஏதும் இல்லை என்றபோதும் அதைத் தொடராது நிறுத்திக் கொண்டது வியப்பாக இருந்தது. ஆனால் பிற்பாடு அது ஒருவாறு விளங்கியது. காண்டவம் நாவல் அவ்வாறே தொடர்ந்திருந்தால் அது வெண்முரசின் ஒருமைக்குள் நின்றிருக்க தகுந்த வாய்ப்பாக இருந்திருக்காது. நவீன இலக்கியத்துக்கு காண்டவ வன எரிப்பு என்பது ஒரு எதிர்க் கதையாடல்.  வெண்முரசு நாவல் என்பது சத்ரிய அந்தஸ்தை வென்றெடுத்த 'சத்ரிய அந்தஸ்தை அடையாத' பிற குடிகளின் கதை. ஐம்பத்தாறு சத்ரிய ஐனபதங்களளை வென்று புதிய சத்ரிய அரசு எழுந்து வருவதைக் கூறும் கதை. அது காவிய நாயகர்களுக்கு உரித்தான காதல் வீரம் தடுமாற்றம் அறக்குழப்பம் சோகம் ஆகியவற்றைச் சொல்லி வந்தது. குறிப்பாக  வெண்முகில் நகரத்துக்குப் பின் அர்ஜுனன் மற்றும் கிருஷ்ணனின் வீரக்கதைகளும்  திருமணங்களும் மையமாகக் கொண்டு வந்த இரு நாவல்களோடு அங்கு எழுதி நிறுத்தப்பட்ட காண்டவம் நாவலின் அத்தியாயங்களைப் பொருத்திப் பார்க்க இயலவில்லை. வெண்முகில் நகரத்துக்குப் பின் வெய்யோன் நாவலில்தான் 'மகாபாரதக் கதை' நிகழும். இடையில் வந்த இந்திரநீலம் மற்றும் காண்டீபம் நாவல்களும் அல்லது அதற்கு முன்பு தனித்து வந்த நீலம் நாவலும் அதன் கதையோட்டத்தில் தனித்து நிற்பவை. ஆனாலும் அவற்றை வாசகரால் இயல்பாக  வாசிக்க இயன்றதற்கானக்  காரணம் இந்த மூன்று நாவல்களும் ஒட்டுமொத்தக் கதையோட்டத்துடன் கொண்டிருந்த ஒரு ஒழுங்கு. அரக்கு மாளிகையிலிருந்து பாண்டவர்கள் தப்பிக்க ஐந்து காட்டுவாசி மக்களையும் அவர்களின் தாயையும் அந்த நெருப்பில் விட்டு விடுகிறார்கள். அங்கிருந்து துவங்கி காண்டவ வன எரிப்பு வரை ஒரு நகரத்தை நிர்மாணிப்பதற்காகக் காட்டையும் காட்டுவாசிகளையும் எரிப்பதை சொல்வது வரை அது நீள்கிறது. ஆகவே மக்களைப் பறிகொடுக்கும் ஒரு காட்டுவாசிப் பெண்ணின் பார்வையில் நாவல் துவங்கும் போது அது அந்த அரசியலுக்கு  எதிர்க் கதையாடலாகி விடுகிறது. அது தனிக்காவியமாகவே எழுதப்படத் தக்கது. 

 

காவியம் நாவல் வாசிக்கும்போது காண்டவம் நினைவுக்கு வந்ததைத் தவிர்க்க இயலவில்லை.  வெண்முரசு நாவலின் ஒரு தொடர்ச்சியாக காவியத்தைக் குறித்து யோசிக்க வைக்கும் மற்றொரு தொடர்பு இவ்விரண்டுக்கும் உக்கிரசிரவஸின் வழி வருகிற தொடர்ச்சி. முதலாவிண் நாவலி்ல் வருகிற உக்கிரசிரவஸ் வியாசரின் முதன்மைச் சீடர்களில் ஒருவரான சூததேவரின் வழி வந்தவராக சொல்லப் படுகிறார். சூததேவரிடத்தில் தான் வியாசர் உரைத்த மகாபாரதம், அவர் உரைத்த படியே எந்த உப கதைகளும் சேர்க்கப்படாமல் கற்பிக்கப் படுகின்றன. காவியம் நாவலில் அதற்கான முன்னிணைப்புகள் வருகின்றன.

 

காவியம் நாவல் ஒரு இதிகாசப் புராண நாவல் அல்ல. இது இருபதாம் நூற்றாண்டில் நிகழ்கிறது. இதில் இரு குடும்பங்கள் வருகின்றன. ஒன்று துக்காராமின் குடும்பம். அது சமர்கள் எனப்படுகின்ற தூய்மைப் பணியாளர்கள் சமூகம். மற்றது ராதிகாவின் தேஷ்பாண்டேவின் குடும்பம். பிராமண சமூகம். புரோகித பிராமணர்களல்லாது அமைச்சுப் பணியில் அதிகாரத்துடன் அரசுக்குத் துணையாகத் திகழ்ந்த பிராமணர்களாக இருக்கிறார்கள். 

 

நேர்போக்கற்ற இந்த கதைசொல்லல் முறையை ஒரு புரிதலுக்காகக் முதலில் தொகுத்துக் கொள்ளலாம். பிரதிஷ்டானபுரி நகரில் சதகர்ணி அரசரின் விஜயஸ்தம்பம் நிலை நிறுத்தப்பட  தூய குருதியினராக நூற்றியெட்டு மக்களை பலி கொடுக்க  வேண்டியதாக ஒரு சோதிடர் - பிராமணர் உரைக்கிறார். அதை ஆற்றுவதற்கு அந்தச் சதகர்ணிக்கு ஒரு குழப்பம் உண்டாகிறது. குடிமக்களையோ அல்லது போர்வீரர்களையோ அவ்வாறு பலிகொடுக்க இயலாது எனக் குழும்புகிறான். அப்போது  அமைச்சராக இருக்கும் பிராமணர் ஒருவரின் யோசனைப்படி  அங்கு நூற்றியெட்டு தூய்மைப் பணியாளர்கள் (- சமர்கள்) இழுத்து வரப்படுகிறார்கள். வர்ணமில்லாத அவர்கள்  நெருப்பு முன்னிலையில் புனிதர்களாக ஆக்கப்பட்டு பலி கொடுக்கப் படுகிறார்கள். சதகர்ணிகளின் அரசாங்கம் கடந்து பிற அரசுகள் வந்த பின்னரும் அந்த ஸ்தம்பம் நிலைகொண்டு  நிற்கிறது.

 

பல தலைமுறைகள் செல்கின்றன. ஆங்கிலேயர்களின் ஆட்சியில் இருக்கிறார்கள். அப்போது  அந்த பிராமணரின் வழி வந்த அல்லது அந்தப் பிராமணர் மீண்டும் பிறந்த குடும்பத்தைச் சேர்ந்த  ஃபணீந்திரநாத்  அந்த சமஸ்தானத்தின் அரசவைக் கவிஞராக இருக்கிறார். அவர் அரசரால் அவமானப்படுத்தப் பட அந்த சமயத்தில் அவர் ஊரைவிட்டு ஓடுகிறார். மனைவியையும் குழந்தைகளையும் கைவிட்டுப் போகிறார்.  அவர் சேமித்துப் பாதுகாத்து வைத்த பொன்னும் வெள்ளியும் வீட்டில் இருக்கின்றன. அவற்றை எடுத்துப் போகிறார். அவரது மனைவியும் மகளும் மகனும் முறை தவறிப் போய் இறக்கிறார்கள். (இந்தக் கதை பிறகு கானபூதியால் சொல்லப்படுகிறது). ஃபணீந்திரநாத் பாட்னா வந்து சேர்கிறார். அங்கு வட்டிக்குப் பணம் தரும் ஆளாக ஆகிறார். தனது சாதி ஆசாரங்களைப் பேணியும் மறுபுறம் அரசுக்கு அடிபணிந்தும் உறவாடியும் தனக்கான தொடர்பை வலுப்படுத்திக் கொள்கிறார். அங்கு ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறார். அடுத்த தலைமுறையில் அவர் மகன் ஹரீந்திரநாத் வியாபார ரீதியாக தனது தொழிலை இன்னமும் விஸ்தரிக்கிறார். அவரது மகன் அஸ்வத், காவலதிகாரியாக இருக்கிறான். அவருடைய மகள் ராதிகா இதிலிருந்து மாறுபட்டவளாக வாரணாசியில் சமஸ்கிருதம் பயில்கிறாள்.

 

முன்பு கூறிய விஜயஸ்தம்பம் நிலை நிறுத்தப் படும் நிகழ்வில் பலி கொடுக்கப்பட்ட சமர்களின் குடும்பத்தின் சமர்களின் வழி வருபவன் துக்காராம். அவர்கள் தூய்மைப் பணியாளர்கள் இனத்தைச் சார்ந்தவர்கள். துக்காராம் -ன் தாய்க்கும் அவரது தாய்க்கும் சிசோபோனியா எனும் உளப்பிளவு நோய் இருக்கிறது. என்றாலும் அவர்களோடு கூட கதைகளைச் சொல்லும் பிசாசு ஒன்று உடனருப்பதாகவே நாவலில் சொல்லப் படுகிறது. அந்தப் பகுதியில்தான் நாவல் துவங்குகிறது. துக்காராமின் தந்தை தனது சாதிய இழுக்கைக் களைய இராணுவத்தில் சேர்கிறார். அங்கும் அவர் சாதி் நண்பர்களுடனே இருக்கவியல்கிறது. ஆனாலும் சுதந்திரமாக உணர்கிறார். அவரது இராணுவ பணிக்காலம் முடிந்து ஊருக்கு வருபவர் தனது சமூகத்தின் சார்பான ஒரு கிளர்ச்சியாளராக ஆகிறார். அம்பேத்கரின் கருத்தியலோடு இணைகிறார். ஊரில் ஏக்நாத் கோயிலில் வாசலில் வைக்கப்பட்டிருக்கும் வால்மீகி சிலை குறித்த ஒரு பிரச்சனையில் உயர்சாதியினரால் கொல்லப்பட்டு சாக்கடையில் வீசப்படுகிறார். அவரது மகன் துக்காராம் அதன் பின் வாரணாசிக்கு சமஸ்கிருதம் வாசிக்கச் செல்கிறான்.

 

சமர்களின் வாரிசான துக்காராம் மற்றும் பிராமணரின் வழி வந்த ராதிகா இருவரும்  காசியில் இருபதாம் நூற்றாண்டில் சமஸ்கிருத பாடம் வாசிக்கையில் காதல் வயப்படுகிறார்கள்.  அதைத் தெரிந்து கொண்ட ராதிகா குடும்பத்தார் கூலிப்படை ஆளான ராம்சரணை வைத்து அவனைத் தாக்குகிறார்கள். துக்காராமும் ராதிகாவும் அங்கிருந்து தப்பி சென்னை வந்து  மணம் புரிந்து கொண்டு வாழ்கிறார்கள். இருவரும் மீண்டும்  ராதிகாவின் அண்ணனால் கண்டுபிடிக்கப்பட்டு அதே அடியாளால் பலமாக தாக்கப் படுகிறார்கள். அதில்  ராதிகா கொல்லப்படுகிறாள். துக்காராம்  அவ்வாறு வீசப்பட்ட போது குற்றுயிராய் மீட்கப் பட்டு சொந்த ஊருக்கே வருகிறான். அங்கு தாயின் பராமரிப்பில் இருக்கும் அவன், தனது தாயின் மரணத்துக்குப் பிறகு வீடும் இல்லாமல் ஆகி பித்தனாகி இரந்து உண்ணும் நிலைக்கு வருகிறான். அவன் ராதிகாவின் மரணத்துக்குப் பழிவாங்கும் வஞ்சத்துடனும் அதற்கு ஏதும் ஆற்ற இயலாதவனாகவும் இருக்கிறான். அந்த தருணத்தின் கானபூதியை அவன் காண்கிறான்.  அது அவனிடம் கதைகளைக் கூறத் துவங்குகிறது.

 

கானபூதி என்பது ஆதிகவிகளில் ஒருவரான குணாட்யரால் தனது ‘பிருகத் கதா’ காவியத்தில் சொல்லப்பட்ட ஒரு பாத்திரம். அந்தப் பிரதிஷ்டானபுரிதான் இன்றைக்கான பைத்தான் நகரமாகும். குணாட்யரை அலைக்கழித்த அந்த மண்ணின் கதைகள் அங்கேயே தலைமுறைகளாக சுற்றுகின்றன அவையே கதைகளைச் சொல்லும் பூதமாகவும் அதைச் சுற்றி இருக்கும் நிழல்களாகவும் அந்த மக்களின் முன் அவ்வப்போது தோன்றி கதைகளைக் கூறத் துவங்குகின்றன என நாவல் நம்மை ஒரு மாயயதார்த்த வாசிப்புக்கு நம்மை இட்டுச் செல்கிறது. இன்னொரு கோணத்தில் அவனை அவனது தாயார் வழியாக வந்த உளப்பிளவு தாக்குகிறது. அவன் கையில் இருந்த ஒரே கருவி என்பது அவன் வாசித்த காவியங்கள். அவன் அதைக் கொண்டு ராதிகாவின் மரணத்துக்கான மூலகாரணத்தைத் துழாவுகிறான் என்கிற மனோதத்துவ அடிப்படையிலும் கானபூதியை அணுகவியத் தக்க ஒரு தர்க்கரீதியான சாத்தியத்தையும் இது வைக்கறது. ஏனெனில் கதையோட்டத்திலேயே அவன் சமஸ்கிருத மாணவன் என்னும் குறிப்பு வருகிறது. இந்த அளவிற்கு அனைத்து தளங்களிலும் இதை வாசிக்க ஏதுவான ஒரு கதை சொல்லல் முறை என்பது நாவலின் பலம். ராதிகாவின் மரணத்துக்கான ஊற்று முகம் யாது என பிதற்றும் அவனுக்குத் தன் கதைகளின் வழி கானபூதி கேட்கும் கேள்விகளும் அவன் கண்டறியும் பதில்களும் இந்நாவலாக விரிகின்றன. விக்ரமாதித்யனிடம் வேதாளம் கதை சொல்லிக் கேள்வி கேட்கும் பாணியை இது கைகொள்கிறது. 

 

எத்தனை நாவல்கள் வாசித்தாலும் மீண்டும் கிளி எழுபதும், விக்ரமாதித்யன் கதைகளும், அரேபிய இரவுக் கதைகளும் வாசிக்க வாசிக்கச் சலிப்பதேயில்லை. அதுபோன்ற ஒரு வாசிப்பின்பத்தை காவியம் நாவலும்  அளிக்கிறது. அதன் முதல் அத்தியாயங்களில் துக்காராமுக்கும் ராதிகாவுக்குமான காதல் அரும்பும் தருணங்கள் விவரிக்கப் படுகின்றன. கல்லூரி பயிலும் மாணவர்களுக்கிடையேயான காதலுக்குள் சொல்லப்படுகின்ற பிற விஷயங்கள் எவ்வாறு அழகாகவும் ஆர்வமூட்டுவதாகவும் உள்ளன என்பதைப் பார்ப்பது ஒரு சோறு பதம். காவிய வர்ணனைகள், சமஸ்கிருத ஆய்வு மதிப்பிடப் படுவது பற்றிய நுண் தகவல்கள், அவர்களின் ஆசிரியர்கள் குறித்த குறிப்புகள் கூடவே அங்கிருக்கும் தனித்துவ குணம் கொண்ட ஸ்ரீகர் மிஸ்ரா என்கிற ஆசிரியர் குறித்த விவரங்கள் என புறக் காரணிகளைச் சொல்லியபடி வந்து ராதிகாவுக்கும் துக்காராமுக்குமான முதல் உரையாடல் துவங்கும் இடத்தைக் கவனித்தால் அது எவ்வளவு நுட்பமாக ‘காவியம் என்பது என்ன’ என்பதையும் அவர்களுக்கிடையே காதல் அரும்பும் தருணம் என்ன என்பதையும் அழகாகச் சொல்லி விடுகிறது. சமஸ்கிருதக் காவியங்களும் அவர்களின் காதலும் தான் நாவலில் ஒன்றையொன்று நிரப்பும் விஷயங்கள். அது எவ்வாறு சொல்லப் படுகிறது என்பதைக் கவனிக்கும் போது  ஜெயமோகன் என்னும் கதைசொல்லியின் திறனை வியக்காமலிருக்க முடியவில்லை. அதற்கிணையாகவே அடுத்து வரும் கானபூதியுடனான உரையாடலும் கேள்விகளை வீசியும் பதிலுக்கு கதைகளைக் கூறியும் என அது ஒரு பந்தாட்டம் போல நிகழ்கிறது.

 


(2)

 

கானபூதி சொல்லும் இந்தக் கதைகளில் வால்மீகி வியாசர் உக்கிரசிரவஸ் மற்றும் குணாட்யர் ஆகியோர் வருகின்றனர். அவர்கள் வழி நமது இதிகாசங்கள் எவ்வாறு அவற்றை எழுதியவரின் சொற்களை மீறி பிராமண- சத்ரியப் பி்ரதியாக மாறுகின்றன என்கிற கேள்வி எழுகிறது. பிரதிஷ்டானபுரி நகரில் விஜயஸ்தம்பம் நிலை நிறுத்தப்பட்டு அது இன்றும் அங்கு இருக்கிறது என்பது கதையின் ஊடாகச் சொல்லப் படுவது. பிரதிஷ்டினாபுரி என்றால் ’இங்கே பிரதிஷ்டை செய்யப்பட்டது’ என்பது பொருள். அவ்வாறு இந்த மண்ணில் என்ன பிரதிஷ்டை செய்யப்பட்டது என்றால் அதை நாம் ‘வர்ணாசிரம தர்மம்’ என்று சொல்லலாம். அதுவே நாவலின் மையம் என்பதால் அந்த ஸ்தம்பம் இன்னமும் குறியீட்டு முக்கியத்துவம் கொள்கிறது. அது சார்ந்தே நெறி நூல்கள் உருவாகின்றன. அந்த நெறிநூல்களுடன் காவியங்கள் போராடுகின்றன. காவியங்கள் அறநூலாக அதன் ஆசிரியர்களால் முன்வைக்கப் படுகின்றன. ஆனால் அவை நெறிநூலாக ஏற்கப் படுவதில்லை.  அவற்றில் சொல்லப்படும் ‘அடிப்படை உண்மைகள்’ மறுக்கப்படுகின்றன. அவற்றிற்கு காவிய அந்தஸ்து மட்டுமே கிடைக்கிறது. காவிய அந்தஸ்து மட்டும் கிடைத்ததால் அவை புலவர்களால் மேலும் மெருகேற்றப் படுகின்றன. மேலும் நாடகீயமாக்கப் பட்டு பாணர்களால் பாடப் படுகின்றன. விறலியர்களால் நடிக்கப் படுகின்றன. எவ்வாறெல்லாம் தான் முன்வைத்தப் பிரதிகள் மேலும் உப கதைகள் சேர்க்கப்பட்டும் சில சர்க்கங்கள் விலக்கப் பட்டும் தான் சொல்ல வந்த மையத்தை விட்டு விலகிப் போகின்றன என்பது குறித்த ஐயங்களும் குழப்பங்களும் அந்தக் காவிய கர்த்தாக்களுக்கு இருக்கின்றன. அந்தக் கேள்விகளும் அதற்கான பதில்களும் அவர்களாலும் துக்காராமாலும் சொல்லப் படுகின்றன.

 

நான் நவீன இலக்கியங்களின் அறிமுகம் பெற்ற பிறகு கம்பராமாயணத்தை கிட்கிந்தா காண்டம் வரை தொடர்ச்சியாக வாசித்து வந்தேன். நவீன இலக்கியங்களை வாசித்த பின்னர் கம்பராமாயணத்தை வாசித்தபோது அது ஒரு அரசு-சார்பு பிரதியாக இருக்கிறது என்பதில் எனக்கு முதல் கேள்வி உருவானது. வேள்விகளை அளிக்கும் அசுரர்களை இராமன் வீழ்த்திச் செல்கிறான். இராமனுக்கு அவனது பட்டாபிஷேகத்துக்கு முதல்நாள் அவன் எவ்வாறு அரசாள வேண்டும் என அறிவுறுத்தப் படுகிறது. நிஷாதர்களை எவ்வாறு அடக்கி ஆள வேண்டும் என சொல்லப் படுகிறது. ஒருவகையில் ராமாவதாரத்துக்கு முந்தைய அவதாரமான பரசுராமன் அவதாரம் ஆற்றியதற்கான எதிர்வினை அது. சத்ரியர்களைக் கொன்று குவித்த பரசுராமனை வீழ்த்தி  அவனது வில்லையும் ராமன் ஒடிப்பது பாலகாண்டத்தில் வருகிறது.  ராமாவதாரம் என்பது சத்ரிய நெறியை நிலைகொள்ளச் செய்ய நிகழ்கிறது. மறுபுறம் கம்பராமாயணம் ஒரு பிரதியாகவே தசரதன் ஆண்ட அயோத்தியைச் சொல்வது போலவே அன்றைக்கு அரசாண்டு வந்த சோழ மன்னனின் அரசைப் புகழ்கிறது. அதனால் அது தன் சமகாலத்திலும் நிலை கொள்கிறது. அரசு அங்கீகாரம் பெறுகிறது. அதன் நெறிமுறைகள் இந்த நூற்றாண்டு வரை நாம் நேரில் காணும் ஒன்றுதான். மக்களாட்சி காலத்திலும் நீண்டு வரும் நிலப்பிரபுத்துவக் கால யதார்த்தங்கள் அத்தகைய பிரதிகளையே ஆதாரமாகக் கொண்டுள்ளன. அறிவியல் கண்டு பிடிப்புகள் எழுந்து வரும்வரையிலும், மக்களாட்சிக் காலம் வரும் வரையிலும் ஒரு சமூகமாக இருப்பது என்பதற்கான தேவை மக்களுக்கும் இருந்தன. அவைதான் மனித சமுதாயம் பல்கிப் பெருகவும் வகை செய்கின்றன. ஆகவே பெரும்பான்மை மக்களால் அது ஆதரிக்கப் பட்டிருக்க வாய்ப்பு உள்ளது. அவர்களின் மத்தியிலும் இந்த நெறி நூல்கள் நிலை கொள்கின்றன. அவர்களிடையே ஊடுருவும் காவியகர்த்தாக்கள் மட்டும் ‘அவ்வாறு இல்லை ஆதி விசை என்று ஒன்று உள்ளது’ என்று காட்டியபடியே இருக்கின்றனர். அவை தன் கைமீறிப் போகும் போது அவர்கள் பரிதவிக்கின்றனர்.

தான், சீதையின் கதையை எழுதினாலும் அது இராமனின் விஜயத்தைச் சொல்லும் காவியமாக ஏற்றுக் கொள்ளப்பட்டதன் குழப்பம் வால்மீகிக்கு வருகிறது.  அன்னையின் துயரத்தை எழுதிய காவியமான சீதாயணத்தை சீதையும் ஏற்கிறாள். அதில் முதல் காண்டம் மண்ணைப் பற்றியும் இறுதிக் காண்டம் மண்ணையும் பெண்ணையும் வைத்து மானுடர்கள் ஆடும் சூதாட்டத்தை இழித்தும் எழுதுகிறார். சீதை, இலவ-குசர்களை இராமனிடம் அனுப்பும் போது, அவர்களிடம் ஆதாரமாக அதை அளித்து விட்டு அதன் முதல் காண்டத்தையும் நிறைவுக் காண்டத்தையும் தன்னுடன் எடுத்துக் கொண்டு அவள் இவ்வுலகு நீங்குகிறாள். காவிய ஆதாரத்துடன் அவர்கள் பட்டத்து இளவரசர்கள் ஆகிறார்கள். அது இராமனின் வெற்றியாக நிலை கொள்ளும் போதும் சம்பூகன் வதம் அதில் சேர்க்கப் பட்டதைக் கண்டும் வால்மீகிக்கு கோபம் எழுகிறது. அதற்குக் காரணம் தன்னுடைய ஒரு காண்டங்கள் அதில் சேர்க்கப் படாமல் போனது எனக் கருதுகிறார். சீதை தன் மகன்கள் அரசாள வேண்டும் என்பதற்கு ஒரு முழுமையான காவியத்தின் சில சர்க்கங்களை நீக்குவதன் மூலம் வழிவகை செய்கிறாள் அதனாலேயே அந்தக் காவியத்தின் முழுமை குறைபட்டு அதில் ஏகப்பட்ட உப கதைகளைக் சேர்க்கவும் வழி செய்து விடுகிறாள். இந்தக் குழப்பம் வால்மீகிக்கு உண்டாகிறது. அவர் கானபூதியின் மரத்தடிக்கு வருகிறார். ’மனிதர்கள் முடிவெடுப்பதில்லை’ என்கிற பதிலை ராதிகாவின் அம்மாவான ருக்மிணியின் கதைக்கான பதிலாகச் சொல்கிறார்.




(3)

வர்ணத்திற்கு வெளியே சில குழுக்கள் இருக்கின்றன. உதாரணமாக முனிவர்கள் யோகிகள் ஆகியோர் நால் வர்ணத்தில் இல்லை. அது போலவே பிச்சைக்காரர்களுக்கு வர்ணம் இல்லை. முன்னவர் வர்ண அடுக்குகளுக்கு மேலே இருப்பவர்கள். பின்னவர் அதற்குக் கீழே இருப்பவர்கள். தீண்டாமை குறித்த அம்பேத்கரின் குறிப்பு ஒன்றில், நால்வர்ணத்துக்கு அப்பாற்பட்ட ஒரு குழுவினருடன் ஏற்பட்ட மோதல் குறித்த மனுதர்ம செய்யுள் ஒன்றை ஆராய்கிறார். அந்த அப்பாற்பட்ட குழு என்பது பிற்காலத்தில் தீண்டத் தகாதவர் என கருதப் பட்டவர்களோ என ஆராய்கிறார். ஆனால் அந்த இனக்குழுவை ஐந்தாம் வர்ணம் என்று சொல்ல முடியாது என்றும் ஒரு விவாதம் இருந்ததைக் குறிப்பிடுகிறார். அவர்கள் அப்போது காட்டுவாசிகளாக இருந்திருக்கலாம். பேரரசுகள் உருவாக காடுகள் அழிக்கப்பட்ட போது அவர்கள் நிஷாதர்களாக கருதப்பட்டு அடக்கி ஆளப்பட்டிருக்கலாம் என்றும் கருதுகிறார். மாநகரங்கள் உருவாகின்ற போது அங்கு தூய்மைப் பணியாளர்களுக்கானத் தேவை ஏற்படுகிறது. சத்ரிய அரசுகள் நிஷாதர்களை அப்பணிக்கு அமர்த்துகிறார்கள். அவர்களுக்கு உயிர் பிழைத்தல் முக்கியமாக இருக்கிறபொழுது அதை அவர்கள் ஏற்கிறார்கள். முன்பு வால்மீகி சொல்லும் ‘மனிதர்கள் முடிவெடுப்பதில்லை’ என்கிற பதில் இங்கு நினைவுகூறத் தக்கது.

தன் செயலை யோகம் எனக் கருதி நிறைவடையும் வழி அனைத்து வர்ணத்தாருக்கும் இருக்கிறது. சூதராகக் கருதப் பட்டாலும் கூட குதிரையோட்டி, சமையற்காரர், அழகு கலைஞர்கள் மற்றும் பாடகர்கள் தனது செயல்களால் நிறைவுற முடிகிறது. இல்லத்தையோ கோயிலையோ சுத்தம் செய்து நிறைவுறுவதும் உண்டு. ஆனால் அரண்மனையின் கழிவுகளைத் துப்புறவு செய்பவர்களின், மலம் அள்ளுபவர்கள் அடையும் செயல் வழி யோகம் என்பது என்ன என்கிற கேள்வியை சமூகம் எழுப்பிக் கொள்ள வேண்டியிருக்கிறது.

நிஷாதர்கள் அசுரர்களின் வழி வந்தவர்கள். அவர்கள் அணிதிரட்டி பேரரசைக் கட்டமைக்கவும் செய்கிறார்கள். சத்ரிய அந்தஸ்தைப் பெறுகிறார்கள்.  ஆனால் அங்கும் மாநகரங்கள் எழுப்பப் படும்போது அதைத் தூய்மை செய்பவர்களாக அங்கு மற்றொரு நிஷாதக் குழுவை அமர்த்துகிறார்கள். ஆகவே சதகர்ணியாக உயர்ந்த நிஷாத அரசு தனது வெற்றித் தூணை நிறுவ நிஷாதக் குழுவையே பலியாக்கியது என்பதைக் காவியம் சொல்கிறது.

வேள்விகளைத் தடுக்கும் அசுரர்களைத் தொடர்ச்சியாக இராமன் வதம் செய்வதும் வெற்றி கொள்வதும் பாடலாக வருகிறது. ஒரு நவீன வாசகருக்கு கம்ப ராமாயணம் அளிக்கும் முதல் ஆச்சரியம் என்பது, நிஷாதர்களை வெல்லும் படைப்பை ஒரு நிஷாதரே எழுதுவதும் அது முழுக்கவும் அரசு சார்பு படைப்பாக நிலை கொள்வதுமேயாகும். நிஷாத இனத்தைக் சேர்ந்த வால்மீகி முதற்காவியத்தை எழுதினாலும் அவருக்கு எந்த ஆலயத்திலும் இடம் அமைக்கப்படவில்லை. வால்மீகிக்கு ஏன் கோயிலுள் இடம் தரலாகாது என்பதை நியாயப்படுத்த ஏதுவான பிரதியாக அவரது காவியமே விளங்குவதும் இதன் நகைமுரண்.

வால்மீகியின் சீடரான லோமஹர்ஷணனின் மைந்தன் ரோமஹர்ஷணன் இந்தக் கதையால் சலிப்புற்று தந்தையை விட்டுப் பிரிந்து வியாசரைச் சரணடைகிறார். அவர் ஜெயமோகன் எழுதிய வெண்முரசில் வரும் சூததேவர். ஜனமேஜயன் சபையில் மகாபாரதக் கதை ஜய என்னும் பெயரில் அரங்கேற்றப் பட்ட போது மண்ணையும் பெண்ணையும் உரிமை கொள்பவர்கள் அழிவார்கள் என்கிற இறுதி வரியை மறுத்து விவாதம் எழுகிறது.  குந்தி மற்றும் திரெளபதியின் கணவர்களை குறிப்பிட்டு அது மறுக்கப் படுகிறது. பெண்ணின் விழைவு கட்டுக்குள் வைக்கப்பட வேண்டும் என்று அக்னிவேசர் எடுத்துரைக்கிறார்.  நெறி நூல்களை நிராகரிக்க வேண்டும் என்கிற சொல்லும் எதிர்க்கப் படுகிறது.  நெறிநூலாக அன்றி காவியமாக ’ஜய’ ஏற்கப் படுகிறது. வியாசரின் பிற மாணவர்கள் ஜய காவியத்தை தன்னுடைய உப கதைகளைச் சேர்த்து கற்பிக்கிறார்கள். ரோமஹர்ஷணன் வியாசரின் காவியத்தை வியாசரின் சொல் மாறாமல் தலைமுறைகளுக்கும் கற்பித்து வருகிறார். ஆனால் பிற வர்ண மாணவர்கள் அவரது காவியத்தை ஏற்பதில்லை என்பதை அறிந்து வியாசரிடம் செல்கிறார். வியாசர் அவரிடம் ‘மிதக்க விடு - ஒழுகட்டும்’ என்கிறார்.

ரோமஹர்ஷணரின் மைந்தன் உக்ரசிரவஸ் வியாச பாரதத்தை அதனுடைய அனைத்து உபகதைகளையும் சேர்த்து சொல்லி வரத்துவங்குகிறார். அப்போதைய அரச சபை அவ்வாறு பெருகிய உபகதைகளிலிருந்து தனக்கு ஒவ்வாத கதைகளை தடை செய்யுமளவு அது செல்கிறது. அந்த நிஷாத கதைகளில் இருந்து உத்வேகம் பெற்று வென்று அமர்ந்த நிஷாத அரசுகள் அதன்பின் சத்ரிய நெறியை மட்டுமே அதிலிருந்து எடுத்துகொண்டு தன்னை சத்ரியனாக அறிவித்து நிஷாதர்களைக் கட்டுப் படுத்துகின்றன.  உக்கிரசிரவஸின் கதைகளை சமண பெளத்த காவியங்கள் எடுத்தாளுகின்றன. கானபூதி வாயிலாக அவரிடம் தான் குணாட்யரின் கதை முதலில் சொல்லப் படுகிறது


தொடர்ச்சி

No comments: