Friday, February 27, 2026

காவியங்களில் விழுதலும் காவியங்களிலிருந்து எழுதலும் - 2







 முந்தையதன் தொடர்ச்சி..


காவியம் நாவலின் மையப் பாத்திரமான குணாட்யர் சாதவாகனப் பேரரசின் அரசவைக் கவிஞராக விளங்கியவர். அவர் வாழ்ந்த நகரம் என்பதாலேயே இந்தக் கதை பிரதிஷ்டானபுரியில் நிகழ்கிறது. அவருக்கு இயல்பிலேயே சமஸ்கிருதம் மீதும், அந்த சமஸ்கிருதத்தின் பேச்சு வழக்கு மொழியாகவும் பின்னர் சமண பெளத்த நூல்களின் மொழியாகவும் விளங்கிய பிராகிருதத்தின் மீதும் எதிர்ப்பு மனநிலை இருக்கிறது. ஆகவே அவர் ஆதிமொழியான பைசாசிக மொழியில் தனது காவியத்தை எழுதினார்.

காவியம் நாவலின் நாயகனும் நாயகியும் சமஸ்கிருத மாணவர்கள். சமஸ்கிருதம் அப்போதைய அரசு மொழி. மேலும் அது தொடர்பு மொழி என்பதால் யாருக்கும் தாய்மொழியும் அல்ல.  ஒரு விதத்தில் காவியங்கள் சமஸ்கிருதத்தில் இயற்றப்படும் போது அவை நிலைபெற, சபையின் அங்கீகாரம்தான் முக்கியத் தேவையாகிறது. ஆகவே அது ஒரு போதும் அரசுக்கு எதிரான பிரதியை எழுதிவிட முடியாது. அதன் பொருட்டு அது சில இடைவெளிகளை விட்டு வைக்கிறது. ஆனால் நாட்டுப்புற மொழி என்பது மக்கள் மொழி. அவை அரசுக்கு எதிரான சொற்களைக் கொண்டிருக்கும் வாய்ப்பு அதிகம். காளிதாசன் வாசக இடைவெளிவிட்டு, துஷ்யந்தன் சாபத்தால் சாகுந்தலையை மறந்தான் என்று காவியம் சொல்லும்போது அதன் எதிர்க் கதையாடலை ஏதாவது மக்கள் மொழிப் பாடல் சொல்லிக் கொண்டிருந்திருக்கக் கூடும். 

குணாட்யரின் காவியமான ’பிருஹத் கதா’ பைசாசிக மொழியில் எழுதப் பட்டதனால் சபையோரால் விலக்கப் படுகிறது. அது ஏன் சமஸ்கிருதத்தைப் புறக்கணித்தது என்பதில் துவங்கி எதனால் அது அரசின் அங்கீகாரத்தைப் பெறவில்லை என்பது வரை அதற்குள் தனக்கான ஒரு கதையை உருவாக்குமளவு ஒரு இடம் அதற்குள் இருக்கிறது. ஜெயமோகன் இந்த சுதந்திரத்தை எடுத்துக் கொள்கிறார்.  கானபூதியின் கதைப்படி குணாட்யர் சமர்களின் குடிகளில் பிறந்து தாயால் ஆற்றில் தவறவிடப்பட்டு சோமசர்மன் என்னும் ஒரு ‘புறக்கணிக்கப்பட்ட’ கவிஞரால் குணாட்யராக வளர்க்கப் படுகிறார். நாக பிராமணராக அவர் வளர்கிறார். பைசாசிக மொழியில் அவர் எழுதிய காவியமானது அரசசபையால் புறக்கணிக்கப் படுகிறது. ஏளனமும் செய்யப் படுகிறது. அவர் தனது காவியத்தை தீயில் இட்டுத் தானும் எரி புகுகிறார். அதன் ஒரு வரி எழுதப்பட்ட ஒரு இலை மட்டும் மன்னனிடம் கிடைக்கிறது. அவர் காவியம் மறக்கப் பட்டாலும் அவர் வழிபாட்டுதலுக்குரிய அரசவைக் கவிஞராக கோயில் கட்டப்பட்டு வழிபடப் படுகிறார்.

அவ்வகையில், வால்மீகி எழுதிய சீதாயணம் மக்களால் ராமாயணமாக வாசிக்கப் படுகிறது.  நெறி நூல்கள் அழியட்டும் என வியாசர் சொல்வதை மறுத்து காவியமாக அவரது நூல் ஏற்கப் படுகிறது. குணாட்யரின்  காவியம் ஒரு நூலாகவே மறுக்கப் படுகிறது. இம்மூன்றுக்கும் ஒற்றுமை என்பது தன் காவிய கர்த்தாக்களால் ஒட்டு மொத்த மானுட இனத்திற்காக எழுதப்பட்டவை என்பதும் அரசாலும் பிற அதிகாரங்களாலும் மாற்றியமைக்கப் பட்டவை என்பது. அவ்வாறு மாற்றியமைக்கப் பட்டதாலேயே அவை ஒரு புள்ளியை மனதில் விதைக்கின்றன. அதன் வழியாக அந்தக் கதைகள் மீண்டும் மீண்டும் எழுந்து வருகின்றன. கானபூதியின் சொற்படி தனிமையால் வால்மீகியும், விரிவடைவதால் வியாசரும், பகிரப் படுவதால் உக்ரசிரவஸும் தேடப்படுவதால் குணாட்யரும் அழிவற்றத் தன்மையை அடைகிறார்கள்.

கானபூதி என்பது குணாட்யர் இயற்றிய காவியத்தில் வரும் பாத்திரம். நாவலில் உள்ள மாயயதார்த்தத்தை விட்டு விட்டு அதை தர்க்கரீதியாக அணுகினாலுமே தலைமுறையாக வரும் சாதீய இழிவும் துக்காராமின் குடும்பத்தில் உள்ள உளப்பிளவு நோயின் பிண்ணனியும் ராதிகாவை இழந்த பின்னர் அவனைச் சூழ்ந்திருக்கும் வெறுமையும் வஞ்சமும் அவனை இத்தகைய கேள்விகளுக்குள் ஆழ்த்துகிறது என்று சொல்ல முடிகிறது

(4)

 

நாவலின் பின்னட்டைக் குறிப்பில் உள்ள ‘தலித்திய அம்சம்’ என்பது இந்நாவலின் ஒரு மைய இழை. துக்காராமின் தந்தை இராணுவ பணிக்காலத்துக்குப் பிறகு தன்னை ‘அம்பேத்கரிய இயக்கங்களுடன்’ இணைத்துக் கொண்டு ஒரு தலைவராகவே திகழ்கிறார். வால்மீகியின் சிலையை ஏக்நாத் கோயிலின் உள்ளே வைக்க அவர் முயலும்போதுதான் கொல்லப் படுகிறார். அரசியலில் ஆர்வமில்லாத துக்காராம் சமஸ்கிருதம் பயில வருகிறான். ஒருவகையில் அவன் தன் சமூகத்தோடு இணைந்திருந்தால் அவனும் ராதிகாவும் பிழைத்திருக்க எளிய வழி கிடைத்திருக்கும். அவ்வாறு துக்காராமுக்கு தன் காதல் வாழ்வை வென்றெடுக்கத் தன் தந்தையின் நண்பர்கள் வழி அவனுக்கு எளிதில் கிடைத்திருக்கக் கூடிய உதவியை அவன் புறந்தள்ளி ராதிகாவுடன் சென்னை வருகிறான். ராதிகா கொல்லப்படும் தினத்தன்றும் அவள் அவனது அலுவலகத்தில் உள்ள தொழிற்சங்கவாதியும் அவனது தோழருமான தமிழரசனை உடன் அழைத்துச் செல்லலாம் என்பதை அவன் மறுப்பதும் மிக நுட்பமாக சொல்லப் படுகிறது. துக்காராம் தன் மீது உள்ள சாதீய இழிவை எப்போதும் எண்ணுவதும் ராதிகாவின் அக்கறையை அவன் அந்த அகங்காரத்தால் புறந்தள்ளுவதும் என அந்த உளவியல் நாடகத் தருணங்களை ஜெ. அநாயாசமாக கையாளும் தருணங்கள் இயல்பாக எழுந்து வருகின்றன. ராதிகாவைக் சாகவிடாமலிருந்திருக்கக் கூடிய வாய்ப்பை இவ்வாறு தவறவிட்டதும் அவனுக்குள் அது ஒரு எரியாகக் கிளம்பி வருகிறது. அதனாலும் அவன் கானபூதியிடம் ராதிகா கொலைக்கான ஒரு பழிவாங்கலை ஆவேசமாகக் கோருகிறான்.

 


ஜெ. இதற்கும் முன்பு எழுதிய தலித்திய நாவலான வெள்ளையானை, குறுநாவலான நூறு நாற்காலிகள் போன்றவற்றில் இல்லாத ஒன்றாக இதில் காணும் கருப்பு வெள்ளை அணுகுமுறையைச் சொல்லலாம்.  வெள்ளையானையில் ராயபுரம் பெண் சொல்வாள். ’அவன் ( ஆங்கிலேயர்கள்) பஞ்சத்துல எங்க குழந்தைகளை கொன்னான். பொழச்ச ஒண்ணு ரெண்டு குழந்தைகளுக்கு படிப்பு கொடுத்தான். இனிம எங்க தலைமுறை நிமிர்ந்திடும்.  அதுக்காக நாங்க தலையை கொடுக்க கூட தயார்’  என்பது போல. அத்தகைய ஒரு வரியை காவியம் நாவல் சொல்லவில்லை என்று தோன்றியது. ஏழாம் உலகம் நாவலின் போத்தியின் இடம் மற்றொரு உதாரணம். காவியம் நாவலில் வரும் சமர்களின் குடும்பம் / தேஷ்பாண்டே குடும்பம் ஆகிய இரண்டையும் பார்க்கும் பொழுது, தலைமுறைகளாகவே தேஷ்பாண்டே குடும்பம் ஒழுக்கமின்மை கொண்டவர்களாகவும் பேராசை கொண்டவர்களாகவும் கட்டற்ற பாலியில் வேட்கை உள்ளவர்களாகவும் சித்தரிக்கப் படுகின்றனர். அந்தக் குடும்பத்துக்கு மருமகளாய் வரும் ஊர்வசி கல்கத்தா பகுதியைச் சேர்ந்த பிராமண குடும்பம் ஆனால் அவர்களும் அந்த பிரதேச மன்னனுக்கு ஆசை நாயகியாக இருந்தவர்கள் என்கிற சித்திரம் சொல்லப் படுகிறது. ராதிகாவை கூலிப்படை வைத்து ஆணவக்கொலை செய்கிறார்கள். நடைமுறையில் இத்தகைய நேரடி வன்முறையில் பிராமணர்கள் ஈடுபடுகிறார்களா என்பது முதல் வாசிப்பில் கேள்வியாக எழுந்து வந்தது. கூலிப்படையை ஏவி அதிகார துஷ்பிரயோகம் வழியாக கொலை செய்வதாக வருவதும் வட மாநிலங்களில் இதை நிகழ்வதால் அங்கு உள்ள அதிகார முக்கியத்துவத்தைப் பொருட்டில் கொண்டும் அதை விளங்கிக் கொள்ள வேண்டும். தலைமுறையாகவே அந்த குடும்பத்தில் தனது குல அறத்தைப் பேணும் ஒருவர் வரவில்லை என்பதும் கவனிக்க வைத்தது. நடைமுறையில் ஒரு தந்தை குடிகாரனாக இருந்தால் மகன் குடியை வெறுப்பவராக இருப்பதைக் காண்பது இயல்பானது. ஒரு வகையில் வணிகத்தை முன்னெடுத்த குடும்பங்கள் அடுத்த தலைமுறையில் தீவிர பக்திக்குள் ஆழ்வதும் ஏதோ ஒரு வகையில் அதை நேர் செய்ய முயல்வதும் உண்டு. இந்தக் கேள்விகள் நமக்குள் எழுந்தாலும் அவை பிரதிக்கு வெளியே நிற்பவை. ஏனெனில் அந்த முரணியக்கத்தை முழுமையாக சொல்பவையாக ஜெ. நாவல்கள் விளங்கும். ஆனால் இங்கு வெகுஜன படைப்புகளில் காணப்படும் பாட்டாளி நாயகன் அதிகார பலத்தில் இருக்கும் எதிர் நாயகன், அவன் குடும்பத்திலிருந்தே நாயகனைக் காதலிக்கும் நாயகி என நாம் பழகிய கதைக்குள் இது நிகழ்ந்து விடுகிறது.

 

துக்காரமுக்கு தன்முன் இருந்த இரு வாய்ப்புகள் வெவ்வேறு பாத்திரங்கள் வழி சொல்லப் படுகின்றன. ஒன்று தன்னுடைய தந்தை வழி. அது துவக்கத்தில் வருகிறது. மற்றது பழி வாங்குவது. ராம் சரண் பாத்திரத்தின் வாயிலாக இது வருகிறது.  இலக்கியம் படித்த, கூலிப்படைக்காரனான ராம்சரணை துக்காராமுடன் எளிதில் பொருத்திக் கொள்ள முடியும். ராம்சரண் தனது தந்தையை வெட்டிய தாகூர் குடும்பம் முன் நின்று மன்றாடுவதும் பின் வீறு கொண்டு எழுவதும் நிகழ்கிறது. மேற்கண்ட இரு சித்தரிப்புகளிலும் நாவல் அதன் பிற பகுதிகளிலிருந்து விலகி ஒரு வெகுஜன நாவலுக்காக நடையையும் கைகொள்கிறது. பிறகு ராம்சரண் முதல் கொலையைச் செய்து பின் உள்ளூர் தாதாவுக்கு அடியாளாக மாறி வரும் பக்கங்களும்  அத்தகைய வெகுஜன நாவலுக்கான நடையையே கொண்டிருக்கின்றன.

 

நாவல் ஒரு காரணமாகவே இத்தகைய நடையைக் கொண்டிருக்கிறதா என்றும் ஆராய வேண்டியிருக்கிறது. கானபூதியின் அடர்த்தியான கதைகளுக்கும் காவியகர்த்தாக்களின் கேள்விகளுக்கும் ஊடாக ஒரு சாதாரண பழிவாங்கும் கதையையும் நாமறிந்த காதல் கதைகளையும் வைத்துப் பார்க்கும் ஒரு முயற்சியா என. ஏனெனில் சங்கரர் போன்ற ஒரு தத்துவவாதியோ நம்மாழ்வார் போன்ற ஒரு ஆழ்வாரோ கானபூதியிடம் வருவதில்லை. அவர்கள் வந்தாலும் அது ஒரு தனி மனித விடுதலையாக இருந்திருக்குமேயன்றி, அதன் வழியாகப் பிரதி கோருகின்ற ஒரு மெய்யியலும் அரசியலும் கலந்த பொது விடுதலையைப் பற்றியதாக இருந்திருக்காது. மேலும் இது குணாட்யரின் கதையையும் அவர் உருவாக்கிய கானபூதி பாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டது. அந்தச் சட்டகமும் இதற்குள் உள்ளது. நிலமும் குணாட்யரின் கதை நிகழ்ந்த நிலத்தையே அடிப்படையாகக் கொண்டிருக்கிறது என்றாலும் இங்கு ஒன்றை மறுக்கவியலாது. அங்கு துக்காராம் கொண்டிருந்த இழிவு என்பது கோயிலுக்குள் அனுமதிக்கப் படாத வால்மீகி முதல் அவன் வரை கொண்டிருக்கும் ஒரு சமூக விலக்கம். 

 

 

இங்கு கானபூதி என்பது துக்காராம் கொள்ளும் உளப்பிளவுதான் எனக் கொண்டால் ராதிகாவைத் தவிர பிற அனைவரையும் அவன் எதிர்மறையாகக் கொள்ள ஒரு நியாயம் இருக்கிறது. பிரதிஷ்டானபுரி என்று சொல்லும் போது இங்கு நிலை நிறுத்தப்பட்ட ஒன்று என்பது வருகிறது. அப்படி நிலை நிறுத்தப் பட்ட அறம் தலைமுறை தலைமுறைகளாக சமர்களுக்கு எதிரான அறத்தையேப் பேணியே வந்திருக்கின்றன. அனால் இதில் கவனிக்க வேண்டியத் திரி என்பது, வர்ண அடுக்கில் உச்சத்தில் இருக்கும் ஃபர்ணீந்திரநாத் அரசை நம்பி வாழ்ந்து வந்தவர். ஆனால், அரசு அவரைக் கைவிட்ட பொழுது அவரால் வேறொரு நிலத்திற்குப் புலம் பெயர்ந்து அங்கும் தன்னுடைய அதிகாரத்தை நிலை நிறுத்திக் கொள்ள முடிகிறது. ஆயிரம் ஆண்டு காலத்தைத் துரிதமாக ஓட்டிப் பார்த்தால் துக்காராமுக்கும் அவன் சுற்றத்திற்கும் அந்த இழிவு மாறிவிடவில்லை. நேரடியாக எந்த எதிர்வினையும் ஆற்றவியலாத துக்காராம் தன் மனதில் ஆராய்வது இது என்று கொள்ளும்போதும் அந்த வஞ்சம் அந்தக் குடும்பத்தின் வீழ்ச்சியை கான்பூதி உரைத்த பின்னரும் மாறாமல் இருப்பதே யதார்த்தமாக இருக்க முடியும். அப்போது நாவல் அடுத்த கட்டமான நிறைவுப் பகுதிக்குச் செல்கிறது.

 


அறம் அறமீறலாகவும் அறமீறல் அறமாகவும் உருமாறிக் கொண்டிருக்கும் இந்த வாழ்வின் விந்தையைக் காட்ட கதைகளால் மட்டுமே முடியும் என்று கான்பூதி சொல்கிறது. வால்மீகி வந்தார் வியாசர் வந்தார் குணாட்யர் வந்தார் ஆனால் நால்வர்ண அமைப்பை சீர்திருத்துவதும் அதன் ஊடாக வெளிப்படும் சாதி முறையையும் தீண்டாமையையும் பெண்ணடிமைத்தனத்தையும் பெண்ணைக் குடும்ப கெளரவமாக வைத்துப் பார்க்கும் நிலையையும் நிறுத்த இயலாது என்பதை அந்தக் கதைகள் அவனுக்குச் சொல்கின்றன. அதை மாற்றியமைக்க முற்பட்ட முதன்மை காவிய கர்த்தாக்களின் சொற்கள் திரிக்கப்பட்டும் அவர்களை மட்டும் மேலிருத்திக் கொண்டபடி தனது சமூக அமைப்பைத் தொடரும் தந்திரமும் இங்கு தொடர்ச்சியாக நிகழ்ந்தபடியே இருக்கின்றன.

 

அதன் இறுதியாக கானபூதி உரைக்கும் ஆனந்தர் குறித்த கதையை நாம் கவனிக்கையில் அங்கு எழுந்து வரும் அனைத்துயிருக்குமான அறம் அவனை ஆற்றுப் படுத்துகிறது. புத்தரின் நேரடிச் சீடரான ஆனந்தரின் கதையின் ஊடாக பெளத்தத்தில் ஒரு பெண்ணுக்குத் துறவு நிலை மறுக்கப் படுவதும் பின் உரையாடல் மற்றும் அனுபவத்தின் படி மாற்றங்கள் ஏற்றுக் கொள்ளப் படுவதும் அறிந்து ஒரு தெளிவை அடைகிறான். இது தத்துவார்த்தமாக அம்பேத்கர் பெளத்தத்தைத் தழுவிய தருணத்தை நினைவூட்டுகிறது. எனக்கும் என் சமூகத்திற்கும் மிகவும் கண்ணியத்தையும் மனிதநேயத்தையும் வழங்கும் மதங்களில் எது என்பதை நான் கண்டுபிடிக்கப் போகிறேன் என்று அவர் கூறியதை இங்கு பொருத்திப் பார்க்கலாம்.

 

நிறைவில் ராம்சரணை மன்னிக்கும் துக்காராம், அவனை கொலைக்கான கருவி என்று கருதியோ அல்லது தன்னை போன்ற ஒருவனாகவோ கருதி அவ்வாறு மன்னிக்கவில்லை. அவன் கதைகளின் ஊடாகப் பெற்ற ஞானத்தின் வழியாக அவனைக் கடக்கிறான்.

 

(5)

 

காவியங்களின் ஏற்பு என்பது, அரச சபைகளிலும் அறிவார்ந்த கூட்டங்களிலும் இருக்கும் போது அது கைவிடப்பட்டவர்களை நோக்கிப் பேசுவதில்லை. ஒட்டுமொத்த அறத்தைக் கூறுவதாக அமைகிறது. அல்லது வானத்தை நோக்கிப் பேசுகிறது. அது அடித்தள மக்களைப் பொருட்படுத்துவதில்லை. குணாட்யர் அதனாலேயே மக்களின் மொழியில் அதைப் பேசத் துவக்கியிருக்க வேண்டும்.  ப்ருத்வீ ஏவ மாதாஎன்று அவர் தன் முதல் வரியை எழுதியதாகக் கூறப் படுகிறது.  புவியே முதலன்னை. பஞ்ச பூதங்களில் புவியே நிலை பெற்றதாகிறது. அதில் நின்றுதான் நாம் பிற பூதங்களை அறிய இயலும். நாம் அதை வெறுத்தாலும் அது நமக்கு உணவிட்டபடிதான் இருக்கிறது.

 

அனைத்து வேதங்களுக்கும் அடிப்படையான அதர்வண வேதம் எழுதிய அதர்வர் கானபூதியிடம் வரும்போது ‘இத்தனை உயிர்கள் உள்ள உலகில் நாகம் மட்டும் ஏன் பொன் கொண்டது’ என்கிற கேள்வியை எதிர்கொள்கிறார். அதற்கு அது தன்னைத் தானே முத்தமிட முடிந்தது என்கிற பதிலை அளிக்கிறார் அதர்வர். தன்னுடைய ஆழத்தில் உள்ள விழைவை / நஞ்சை அறிவது நாகம் என்று இதற்குப் பொருள் கொள்ளலாம். அதர்வண வேதத்தில் வரும் ‘மாதா பூமி: புத்ரோஹம் ப்ருதிவ்யா:’ என்கிற அதர்வண வேத துவக்கம் இதன் துவக்கத்தில் வரும் வரிகள். பூமி தாய், நாம் அவளுடைய பிள்ளை என்பதாக பொருள் கொள்ளலாம். பூமிக்குள் வேர்களாகச் சென்று அதை கனிகளாக அளிப்பவர்கள் காவிய கர்த்தாக்கள். துக்காராமும் தனது காவியத்தை எழுதிவிட்டுப் பின் அந்த மண்ணிலிருந்து அகழ்ந்தெடுத்த புத்தரின் சிலையில் அவரது காலடிக்குள் சென்று அமர்கிறான். அவன் வழியாக மறுபிறவி எடுத்த குணாட்யர் பரிநிர்வாணத்தை அடைகிறார். அதற்கடுத்த நிறைவுப் பகுதியில் இந்நாவலாசிரியரே வருகிறார்.  கானபூதியுடனான அவரது உரையாடல் மிகவும் உணர்ச்சிவயப்பட வைக்கிறது.

வெண்முரசுக்குப் பிறகான நாவல்களில் காவியம் நாவலில் வெண்முரசின் விடுபட்ட கேள்விகளை நோக்கிய ஒரு பயணத்தை வாசகரால் காண முடிகிறது. நமது ஆதிகவிகளாக வால்மீகி, வியாசர் மற்றும் குணாட்யர் ஆகியோர் விளங்குகின்றனர். அவர்களின் படைப்புகளிலிருந்தே பிற்காலக் காவியங்கள் எல்லாம் உருவாகின்றன. முதன்மைக் கவிகளான மூவரின் படைப்புகளில் வியாசரின் பாரதத்தை வெண்முரசாக ஜெயமோகன் ஏற்கனவே எழுதிவிட்டார். குணாட்யரின்   படைப்பாக  இப்போது காவியமும் வந்துவிட்டது. அம்மூவரில் வால்மீகி எஞ்சியருக்கிறார். அவர் அசலாக எழுதிய சீதாயணம் எஞ்சியிருக்கறது. ஒருவேளை அசோகவனம் சீதாயணமாக வெளிப்படக் கூடும். ஆவலுடன் காத்திருக்கிறேன்.






No comments: