Wednesday, December 15, 2021

புறத்தைச் சொல்லி அகத்தை அடையாளம் காட்டும் எழுத்து - ஆஸ்டின் சௌந்தர்

 என்னுடைய முதல் சிறுகதை வெளியாக சொல்வனம் இதழின் பொறுப்பாசிரியர்களில் ஒருவரான எழுத்தாளர் சிவாகிருஷ்ணமூர்த்தி அவர்கள்தான் காரணம். தொகுப்பின் நான்கு கதைகள் சொல்வனத்தில் வெளியானவை. அதில் எனது இரண்டாவது கதையான பழனி குறித்த விமர்சனக் கட்டுரையும் வெளியாகியிருந்தது.




இப்போது சொல்வனம் இதழில் 'ஆள்தலும் அளத்தலும்' குறித்து மதிப்புரை வெளியாகியுள்ளது. ஆஸ்டின் செளந்தர் அவர்கள் அதை எழுதியுள்ளார். கதைகள் வெளியான நேரங்களில் அதை வாசித்து உரையாடினார். அவர் சொற்கள் ஊக்கம் அளிப்பவை. அவரது பணிச்சூழலுக்கு இடையே கூட மொழியாக்கம், விமர்சனம், இலக்கிய கூட்டங்கள் என எப்போதும் மும்முரமாக இருப்பார். அவருக்கு மட்டும் கடிகாரம் ஒரு நாளைக்கு முப்பது மணிநேரம் காட்டுகிறதா என்ற ஐயம் எனக்கு உண்டு.
சொல்வனம் குழுவினருக்கும் செளந்தர் அவர்களுக்கும் நன்றி


புறத்தைச் சொல்லி அகத்தை அடையாளம் காட்டும் எழுத்து

இருபத்தொரு வருடங்களுக்கு முன், நவம்பர் மாதத்தில் ஒரு நாள், தொலைபேசியில் என்னை அழைத்த  நண்பர்,  பெரும் பதட்டத்தில் இருந்தார். “இன்னும் இரு நாட்களில் ஒரு வேலை கிடைக்கவில்லையெனில், H1b-விதிப்படி தான் அமெரிக்காவைவிட்டு ஊருக்குத் திரும்ப வேண்டும்.” என்றார். , “எங்கள் அலுவலகத்தில் Build engineer வேலை. இருக்கிறது. செய்ததையே திரும்ப திரும்பச் செய்யும் வேலை. ஆனால், கணினிக் கட்டளைகள் எழுதுவதுதான் உன் ஆதர்சம், இலட்சியம் என்று எல்லாம் சொல்வாயே?” என்றேன். “வேலை எதுவும் இல்லாமல் ஊருக்குத் திரும்புவதைவிட, இது எவ்வளவோ மேல்” என்றார். எழுத்தாளர் ஆர். காளிபிரஸாத் எழுதி வெளிவந்துள்ள, ‘ஆள்தலும் அளத்தலும்’ பத்துக் கதைகள் உள்ள தொகுப்பில் தலைப்பை ஏந்திய கதையின் கதைசொல்லியின் நிலைமையும் இதுவேதான். அவன் வேலை செய்து வந்த கேபிள் வேலை முடிந்துவிட்டது. இருப்பதற்கு ஒரு அறைகூட இல்லை. ஊருக்குத் திரும்பவேண்டியதுதான்  என்கின்ற  நிலையில், தன் கிராமத்திற்கு வந்தபொழுது சந்தித்த ஒருவரை தேடி ஒரு நப்பாசையுடன் செல்கிறான்.  அவரைப் பார்ப்பதற்குச் செல்வதற்கான பஸ் பயணத்தில் ஆரம்பித்து, அவர் கொடுத்த  நினைவுப்பரிசு மூன்றாமவர் கைக்கு மாறுவது வரை நடக்கும் நிகழ்வுகளின் தொகுப்புதான் இந்தக் கதை என்று சாதாரணமாக சொல்லிவிடமுடியாது. அந்த நிகழ்வுகள், இடம் பொருள் காலம் அற்று கழிவிரக்க நிலைக்கு ஆட்பட்ட எந்த ஒரு புலம்பெயர்ந்த தனிமனிதன் வாழ்வியல் நிகழ்வுகளோடு ஒப்பிடும்படி இருக்கிறது. கதைசொல்லி, கண்முன் நடந்த ஒரு இழிவான செயலை மறந்து, அதைச் செய்தவன் கொடுத்த வேலையை ஒப்புக்கொள்கிறான். என் நண்பரோ, தனக்குப் பிடிக்காத வேலையை வாழ்வின் நிமித்தம் ஏற்றுக்கொள்கிறார். 




கதைசொல்லியைத் தொந்தரவு செய்யும் அந்தக் கரிய சிலையின் வடிவத்தில் கண்ணை மூடிக்கொண்டால்தான், ஆளவும் அளக்கவும் முடிகிறது என்று யதார்த்தத்தை, ‘ஆள்தலும் அளத்தலும்’ கதை தொட்டுச் செல்கிறது. வாசிப்பவனையும் அவன் வாழ்வில் கண்ணை மூடிக்கொண்ட தருணங்களை  நினைவு படுத்தி தொந்தரவு செய்கிறது. டெல்லியில் மத்திய அரசாங்கத்து வேலையில் சேர்ந்த முதல் வாரத்தின் கடைசி வெள்ளிக்கிழமை. எனது சக அலுவலகர்கள் மாலை ஐந்து ஆறு ஆகியும் கிளம்பவில்லை. என்னையும் இருக்கச் சொல்லி வற்புறுத்தினார்கள். அலுவலக கதவைச் சாத்தினார்கள். இருந்த நான்கு பேரில் ஒருவர், அவரது மேசையின் ட்ராயிரிலிருந்து விஸ்கி பாட்டிலை எடுத்து வைத்தார். இன்னொருவர், டம்ளர்களை எடுத்து வைத்தார்.  ‘லட்சுமி சரஸ்வதி உறைகின்ற இடத்தில் .தண்ணி அடிக்கிறான்களே’ என்று நான் உறைந்துபோய்விட்டேன். எனக்கு இது ஆகாதுடா சாமி என்று வீட்டுக்கு கிளம்பி வந்ததைவிட வேறு ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தொகுப்பில், ஹோட்டல் ஒன்றில் ஏ.சி. ஜெனரேட்டர் ரிப்பேர் பார்ப்பவர்களை வைத்துப் பின்னப்பட்ட கதையாக வருகிறது பழனி எனும் கதை..  சின்ன சின்னத் திருட்டுக்கள் பித்தலாட்டங்கள் செய்பவன் பழனி. படிப்பறிவில்லாதவன். அவன் செய்த திருட்டு ஒன்றுக்கு கதை சொல்லி போலிஸில் பிடித்துக் கொடுக்கப்படுகிறான். அந்த எரிச்சலில் , பழனியை பழி வாங்க அவனுக்கு வந்த கடிதத்தின் சாரத்தை தனக்கு சாதகமாக வாசிக்கிறான். மேற்போக்கான வாசிப்பில், இப்படி ஒரு சாதாரண புரிதலைக் கொடுத்துவிடும் கதை.. ஆழ்ந்த வாசிப்பினால் அடையும் இடம் வேறு. தூரத்தில் செல்லும் இரயிலின் சத்தமும், கூடடையும் பறவைகளின் கீச்கீச் ஒலியும் கதைசொல்லிக்கு இனிமையாக இருக்கிறது என்ற வரிகளில் முடியும்பொழுது பிரதிபலிக்கும் திருடனின் அகத்தை அந்த வாசிப்பு அறியும். புறத்தைச் சொல்லி அகத்தை அடையாளம் காட்டும் எழுத்தாளராக காளிபிரஸாத் சுட்டிக்காட்டும் கதை, பழனி..

அசோகமித்திரனின் ‘புண் உமிழ் குருதி’ கதையில் தாத்தா ஒருவர் வருவார். ஊரே கூடி திருடன் என்று அவரை அடிக்கும். அவர் நான் திருடலப்பா என்று பொருமையாக இருப்பார். ‘பூதம்’ கதையில் வரும் நீலகண்டன் எனக்கு அவரை நினைவு படுத்தினார்.. தானுண்டு தான் கும்பிடும் தெய்வங்கள் என்று இருப்பவர் நீலகண்டன்., அப்பாவின் சொத்திலிருந்து தனக்கு பங்காக வந்த  நாற்பது பவுன் தங்கத்தை வாதம் எதுவும் இல்லாமல் வாங்கிக்கொள்கிறார். அதை மகளுக்கு சீதனமாக போட்டும் ஆகிவிட்டது. அவர் தம்பிக்கு பங்காக கிடைத்த வீட்டின் விலை ஏறியதும், அதில் மீண்டும் பங்கு கேட்கவேண்டும் என்று மனைவியும் மற்றவர்களும் சொன்னபோதுதான். ‘பூதம்’ கிளம்புகிறது, அவருக்கு அப்படியெல்லாம் எதிர்த்துக்கேட்டுப் பழக்கமில்லை. தொண்டைவரை வந்ததை வெளியில் சொல்லாமல் இருக்கும் நீலகண்டன் வாசித்து முடித்தும் மனதில் நின்று விடுகிறார்.. .

சிலரின் பார்வை எதைப் பார்த்தாலும் செய்தாலும், தன் தொழில் சார்ந்தே இருக்கும். நான் வாங்கியிருந்த புதிய வீட்டை காண்பிப்பதற்காக என் தந்தையை ஆவலாக அழைத்து வந்திருந்தேன். எனது வீட்டின் தளம் , மரப்பலகையால் ஆனது. வீட்டிற்குள் நுழைந்தும் நுழையாமலும், விவசாயியான என் தந்தை, எத்தனை மரங்கள் இதனால் வெட்டப்பட்டிருக்கும் என்றார். காளிபிரஸாத்தின் கதையான, ‘மதிப்பு’ கதையில், தான் கான்ட்ராக் எடுத்து, அதற்கு வராத காசை வசூலிக்க கதைசொல்லியும் , அவனது முதலாளி இருதயமும் காஃபி கடையில் அமர்ந்துள்ளார்கள். இருதயம் அண்ணன் தொங்கும் சான்ட்லியர் விளக்கைப் பார்த்து சொல்கிறார். “அதுல ஒரு விளக்கு எரியல பாத்தியா? மாட்டும்போது தனியா டிரில் பண்ணி ஹூக்கில் மாட்டினாங்கலா இல்லாட்டி ஃபால்சீலிங்க் தகடோட சேர்த்துக் கட்டிட்டாங்களான்னும் தெரியல. சுத்தி குஞ்சலம் போல அங்கங்க தொங்குது. அதுல நாலஞ்சு காணும். அதைக்கூடவா சரியா பார்த்து வாங்க மாட்டாங்க?”. பணத்தை விட செய்யும் தொழிலுக்கே மதிப்பு என நினைக்கும் இருதய ராஜை வைத்து முடியப்படும் இந்தக் கதை ஒரே இரவில் இருந்த பணம் செல்லாக் காசாகியதை ஆவணப்படுத்துகிறது. 

ஆசிரியரின் முதல் கதையும் அவரது சொந்த அனுபவத்தை வைத்து எழுதியதும் என்று சொல்லப்பட்ட ‘விடிவு’,  தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.   நண்பர்கள் பைக்கில் செல்லும்பொழுது, ராஜா என்பவன் லாரியில் அடிபட்டு இறந்துவிடுகிறான்.  அவன் சடலத்தை இறந்தவன் வீட்டில் ஒப்படைக்கும்பொழுது எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்பதை சஸ்பென்சாக வைத்து , கதை நகர்கிறது. ஏமாற்றுபவன், திருடன், காமக்கண்ணோடு பார்ப்பவன், சொல்வதொன்று செய்வதொன்று என்று நடமாடுபவர்கள், அப்பாவிகள் இருக்கும் கதைகள் உள்ள தொகுப்பில், மானுடத்தில் அன்பு மிச்சமிருக்கிறது என சொல்ல ஒரு எளிமையான கதை.

பன்றிகள் இல்லாமல் இப்பொழுதெல்லாம் கதைகளே இல்லை என்று ஒரு விமர்சனம் வாசித்திருந்தேன். ‘ஆர்வலர்’ கதை வாசிக்கும்பொழுது அது என் பின்மண்டையில் ஒலிப்பதை தவிர்க்கமுடியவில்லை. சுகாதாரம் முக்கியம். பன்றிகளை அகற்றவேண்டும். அதைச் சாடும் சமூக ஆர்வலனாக காளிபிரஸாத்.

“குப்பைகளைவிட பன்றிகள் பெரிய பிரச்சனையாக இருந்தன”

“எல்லாப் பன்னியையும் தூக்கிட்டுப்போய் கட்டுப் போடுங்க”

“குப்பையை எடுத்துட்டுப் போங்க.. பன்னிங்க தானா போயிரும்”

குழந்தைகளுக்கு எல்லா உயிர்களும் ஒன்றுதான். பூனையையும் கொஞ்சுவார்கள் பன்றியையும் கொஞ்சுவார்கள். குழந்தையின் பார்வையில் காளிபிரஸாத் எழுதுகிறார்.

தாத்தா! இது முயல் மாதிரி இருக்கு. ,,அணில் மாதிரி இருக்கு..”

அவன் சிறுதட்டை முறுக்கு போல வட்டமாக இருந்த அதன் வாயின் முன் தன் வாயைக் குவித்து அதேபோல வைத்துக்கொண்டு ‘வும் வும்’ எனப் பார்த்து பார்த்து டோர டோரா என தலையாட்டிக் கூவி விளையாடினான்

சமூக ஆர்வலனாகவும், குழந்தையாகவும் காளிபிரஸாத் ஊசலாடுகையில் நமக்கு சுவராஸ்யமான கதை கிடைக்கிறது. மற்ற கதைகளில் இல்லாத ஒரு அபார்ட்மென்ட் வாழ்க்கை சித்தரிக்கப்பட்டிருக்கிறது. 

பேசுபொருள், எடுத்துக்கொள்ளும் கதைக்களம், அங்கதம் கலந்த நடை, நிஜவாழ்க்கையை நினைவுறுத்தும் பாத்திரங்கள், நிகழ்வுகள், என தொகுப்பில் உள்ள பத்துக் கதைகளும் வாசகனை ஈர்ப்புடன் வாசிக்க வைக்கின்றன. மானுடனுக்குள் மறைந்திருக்கும் வக்ரம், குரூரம், காமம் குணங்களை எழுத்தில் கொண்டுவருவதில் எழுத்தாளனாக காளிபிரஸாத்திற்கு தயக்கமில்லை.  நடுத்தர மக்களின் வாழ்க்கை, சென்னை என அசோகமித்தரனின் கதைகளை நினைவுறுத்தும் கதைகள். அசோகமித்திரன் எழுதிய காலத்திற்கும், காளிபிரஸாத் எழுதும் காலத்திற்கும் வாழ்க்கை மாறிவிட்டது. சென்னை மாறிவிட்டது. குறிப்பாக நடுத்தரவர்க்கத்தின் வாழ்க்கை மாறிவிட்டது. சொந்த தொழில் செய்பவர்கள் அதிகரித்திருக்கிறார்கள்,. வேலைக்கோ, கோவிலுக்கோ பைக்கிலும் காரிலும் செல்கிறார்கள்.. குடும்பத்தோடு கோவிலுக்கு சென்றவர்கள், நண்பர்களுடன் கோவிலுக்கு செல்கிறார்கள். ஜெயித்தாலும் பாருக்குச் செல்கிறார்கள். தோற்றாலும் பாருக்குச் செல்கிறார்கள். இந்த தற்காலிக யதார்த்தத்தை சொல்லும் கதைகளாக, நிகழ்காலத்தை காட்டும் நிலைக்கண்ணாடியாக ஆள்தலும் அளத்தலும் தொகுப்பை பார்க்கிறேன்.

ஒரு பார்வையில் பார்த்தால் வெவ்வேறு கதைக்களங்கள் என்று தோன்றுகிறது. பிரிதொரு பார்வையில் பெரும்பாலான கதைகளில் எலிக்ட்ரிக் / மெக்கானிக் பழுதுபார்ப்பவர்களே வருகிறார்கள். பழனி செய்யும் தொழிலுக்கும், ‘மதிப்பு’ ‘பராசக்தி கதைகளின் பாத்திரங்களில் உரையாடலில் புரியவரும் அன்றாட வேலைக்கும் அவ்வளவாக வேறுபாடு இல்லை.. ஒரு தரப்பட்ட வாழ்க்கையை, பாத்திரங்களை சித்தரிப்பதுபோல் ஒரு பிரேமை ஏற்படுகிறது.. ஆனந்தவிகடனில் வந்த இந்த தொகுப்பை பற்றிய மதிப்புரையில், கதைகளில் பெண்கள் இல்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதையே நான் இப்படி சொல்கிறேன். பெண்களின் பார்வையில்கூட ஒரு கதையும் இல்லை. பெண்களை ஆண்கள் காமக்கண்ணுடன் பார்க்கிறார்கள் என்னும் நிஜம் நிலைக்கண்ணாடியில் அதிகமாகத் தெரிகிறது. ‘கரி’ கதையின் மொத்த மையமும் இதுதான் என்றாலும், மற்ற கதைகளில் வரும் சில காட்சியமைப்புகள் அதையே சுட்டிக்காட்டுகின்றன. ‘விடிவு’ கதையில் ஒதுங்கும் காதலர்களில் காதலன் காதலி வாயை முத்தம் கொடுக்கமுடியாமல் வாயை அனுமாரு மாதிரி வைத்துக்கொள்வதற்கு கவலைப்படுகிறான். ‘பராசக்தி’ கதையில் ‘சந்துல லைட் போடுறான், அங்கென்ன நல்லவேலையா நடக்கிறது? என்ற கேள்வி கேட்கப்படுகிறது.  . 

தமிழில் இணைய இதழ்கள் , வாசகனிடம் இருக்கும் நேரத்திற்கும், தேவைக்கும் அதிகமாக இருக்கின்றன. ஆசிரியரின் , ஆள்தலும் அளத்தலும் கதையை பதாகையில் வந்தபொழுதே வாசித்திருந்த ஈர்ப்பால்தான் புத்தகமாக வந்ததும் வாங்கினேன். முதல் புத்தகம் என்ற வகையில் சுவாராஸ்யம், யதார்த்தம் என்ற வகையில் வெற்றி பெறுகிறது. மேலும் அவரைத் தேடி வாசிக்க, வெவ்வேறு கதைக்களங்களுடன், தத்துவ விசாரங்களுடன்,  பன்முகப் பார்வையில் புனைவுகள் எழுந்து வரட்டும். வாழ்த்துக்கள் !


No comments: