Sunday, August 30, 2020

இரையென்ன இரை இன்னும் - இரா.மீனாட்சி கவிதைகள்

நம் உபநிஷதங்களில் ஞானசபை விவாதங்களில் ஈடுபட்டவர்கள் உரைத்த சொற்கள் தொகுக்கப் பட்டுள்ளன. கார்கி, மைத்ரேயி, காத்யாயணி உள்ளிட்டவர்கள்  அவர்களில் பெண்கள். குருதேவரான யக்ஞவல்கிகர் தான் சந்நியாசம் மேற்கொள்கையில் அழியாத செல்வம் தருகிறேன் என்று  மனைவிக்கு வரம் அளிக்கிறார்.  அவர் மனைவியான மைத்ரேயி அழியாதவை என்னென்ன என்று அவருடன் தர்க்கத்தில் அமர்கிறார். அவள் ஒவ்வொன்றாகக் கேட்டு அழியாத செல்வமான ஞானம் தான் வேண்டும் என்று கேட்டு அவரும் அவ்வாறே அமர்கிறாள் என்பது புராணம். பெண்கள் ஞானத்தேடல் இல்லாமாலேயே தன் அன்பினாலேயே மோக்‌ஷம் அடைகிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது. பொதுவாக ஆண் தனிமையானவன். அவன் தனிமையிருந்து தியானம் ( ஞானம் ) வழியாக அன்பிற்கு வரவேண்டும். ஆனால் அன்பு அல்லது பக்திக்கு, தான் அல்லாமல் இன்னொன்று தேவைப் படுகிறது. ஞானம் பக்தி என்பதை அறிவுத்தளம் உணர்வுத்தளம் என்று வைத்துக் கொள்ளலாம்.  ஓஷோவிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு பதிலாக,  அன்பும் தியானமும் முக்கிய வழிகள். நீ ஆணென்றால் உன் வழி தியானம் அதன் வழியாக அன்பு. அதுவே நீ பெண் என்றால் அன்பின் வழியாக தியானம். இவ்விரண்டில நான் வலியுறுத்துவது அன்பும் தியானமும் என்கிறார். மரபுக் கவிஞர்களில் ஆண்டாள் காரைக்கால் அம்மையார் ஆகியோரை பக்தி மார்க்கத்திலும் ஒளவையாரை ஞான மார்க்கத்திலும் வைத்து காணலாம். 


நவீன கவிதைகளில் மேற்சொன்ன ஞானத்தளங்கள் / உணர்சித் தளங்களில்  தத்துவ நோக்கில் ( ஞானத்தளங்களில்)  எழுதும் கவிஞர்களில்  ஆண் கவிஞர்கள் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். பெண்கவிஞர்களின் கவிதைகள் என பெண்ணியம் சார்ந்தே அதிகம் வாசிக்கக் கிடைத்தன. பெரும்பாலும் உணர்வுகளுக்குள் ஆட்படும் விதமாகவே அந்தக் கவிதைகள் காணப்படுகின்றன. நம் பண்பாட்டின் நோக்கில் எழுந்துவரும் கவிதைகள் அரிதானவை. அதேநேரம் பண்பாட்டின் மீதான விமர்சனமாக கலகமாக வருபவை  ஒப்புநோக்க அதிகம்.  ஞானமும் உணர்வும் கலந்துதான் கலகமாக வெளிப்படுகிறது. அது நவீன காலத்தின் தேவை என்று புரிந்தாலும் அதில் கலகம் மற்றும் பகடி நோக்கு அதிகமாகவும் இருப்பது ஒருவித போக்காகவே ஆகியிருக்கிறது என்பதும் உண்மைதான்.  


இரா.மீனாட்சி அவர்களின் திசை மாறியது என்கிற கவிதை ந. பிச்சமூர்த்தி தி.சோ.வேணுகோபாலன் வகையிலான கவிதையாகவே தோன்றியது. அவருக்குப் பிறகான பெண் கவிஞர்களின் கவிதைகளை ஏற்கனவே வாசித்திருந்ததால், அவரது கவிதைகளை வாசிக்கையில் பெரும் வித்தியாசத்தை உணரமுடிந்தது. மீனாட்சி என்பது மீனாட்சி சுந்தரம் என்பதன் சுருக்கமா என்று ஒருகனம் மனம் என்ணியதும் நவீன கவிஞர்களில் ஆண்களின் வரிசையில் மட்டுமே கண்டிருந்த தத்துவ / மரபர்ந்த கூறுகள்தான் என்று தோன்றுகிறது.    அதன்பின்தான் அவரைப் பற்றி இணையத்தில் தேடி முழுமையாக கண்டறிந்தேன். 1940களில் திருவாரூரில் பிறந்த கவிஞர் இரா.மீனாட்சி 1970 முதல் கவிதை எழுதிவருபவர். தற்பொழுது பாண்டிச்சேரி ஆரோவில்லில் வசித்து வருகிறார். மரபை விட்டுத் தள்ளிவிட்டு புதுக்கவிதை எழாமல் மரபின் ஓட்டத்தையும் சேர்த்தே கொண்டுவரும் கவிதைகளாகவே இவரது கவிதைகள் இருக்கின்றன




திசை மாறியது ,  


தென்திசை நோக்கி முதியவர் நடந்தார்

இருளே கிளையாய்க் கிளைத்த மரங்கள்

அச்சமே உயிர்ச்சத்தாய் நிரம்பிய வேர்முடிச்சுகள்

பாசக்கயிறாய் ஊசலாடும் விழுதுகள்

முதியவர் நடை தொடர்ந்தார்..


...

...

..


கடவுளின் தோளில் குழந்தை.

விடியலை நோக்கி.

பயணம் ஆரம்பம்


யமனுக்கான தெற்கு திசைக்கு சென்ற முதியவர் குழந்தையாக திரும்பி வருகிறார். மரணத்தை நோக்கிச் செல்லும் முதியவரின் தொடர்ச்சியாக குழந்தையை கொண்டுவருகிறது. புனரபி மரணம் புனரபி ஜனனம் என்பது போல ஒரு பிறவிச் சுழற்சியை கண்முன் நிறுத்துகிறார்


கோட்டையும் கோவிலும் உடைந்து போனாலும் உள்ளே தனக்குத்தானாய் கோவில் கொண்ட சிவம் கவிதை மற்றொன்று ( கோட்டையும் கோவிலும்). கடவுளை உள்ளே தேடுவது என்பது பலரால் பல இடங்களில் சொல்லப்பட்டாலும் இதில் வரும் நாகலிங்க இதழ்க் குளுமை படிமமும் தனக்கு தானாக அது கோயில் கொண்டது என்கிற வரியும் அதை உயர்த்திவிடுகின்றன


அம்ருதம் என்னும் கவிதையும் குறிப்பிடத் தக்க ஒன்று

விதைத்த விதை ஊறு முன்னே

எறும்பிழுத்தது

முளைத்த முளை விரியுமுன்னே

புழு துளைத்தது


இலை படர்ந்து ஏறுமுன்னே

நத்தை ஊர்ந்தது

கதிர் எழுந்து குனியுமுன்னே

கிளி அழித்தது

விசித்த கையில் விரல்கள் தேங்க

பசித்த உழத்தி

பசுங்கிளையில்

முதுகு வைத்தேன்

வயிறு இல்லை


நாவல் மரத்தில் ஆவலுடன்

அணில் சுவைத்த ஊதா

வேலி வரிசை ஏறிவந்த

இலந்தை இளஞ்சிவப்பு

கணுக்கணுவாய்

வானம் பார்த்த

மூங்கிலிலும் அரிசி

புளியமரக் காய்கள்

மண்ணுக்குள்ளே கோரை.


இரையென்ன இரை இன்னும்?

உச்சியில் குரு உபதேசம்

ஞானசூரியன் தேஜமயம்


‘அஸதோமா சத் கமய

தமஸோமா ஜ்யோதிர் கமய

ம்ருத்யோர்மா அம்ருதம் கமய’



எழுத்து கால கவிஞர்களில் நகுலன்,சி.மணி, பசுவய்யா, பிரமிள். இரா மீனாட்சி, தி.சொ.வேணுகோபாலன் போன்றவர்கள் முக்கியமானவர்கள் என்று ஜெயமோகன் குறிப்பிட்டுள்ளார். இவர்களில்  பிரமிள் மற்றூம் இரா.மீனாட்சி ஆகியோரின் கவிதைகள் ஒரு திட்டவட்டமான கருத்துக்களாகவே வெளிப்படுகின்றன


‘ஒளியின் கதியை

ஒளியின் கதியால்

பெருக்கிய வேகம்

ஜடத்தைப் புணர்ந்தால்

ஜடமே சக்தி “E=m c^2 நீள் கவிதையின் ஒரு வரி)


பிரமிள் ஐன்ஸ்டீனின் ஆற்றல் கோட்பாட்டினை இவ்வாறு அத்வைத நோக்கில் கவிதையாக்குகிறார். 


”தெற்கு கோபுர வாசலில்

திகைத்து நிற்கிறது

நீயற்ற நானற்ற கல்” ( பிரமிளின் தெற்கு வாசல் கவிதையின் ஒரு வரி )


இரா.மீனாட்சி அவர்களின் கவிதையை வாசிக்கும்போது பிரமிளின் இந்த கவிதை வரிகள் நினைவுக்கு வந்தன. இவை, கவிஞர்களின் ஆதார குணங்களான தன்னிரக்கம், ஒரு அலைச்சல், ஆதங்கம், கையறுநிலை போன்ற தருணங்கள் இல்லாமல் அவை ‘சொற்களாக’ ஒலிக்கின்றன. தன் குழப்பத்தைக் கடத்தாமல் தன் புரிதலைக் கடத்துவது இவர்கள் இருவரின் கவிதைகளாக உள்ளன என்று தோன்றுகிறது. வாசகனாக தெற்கு வாசலில் இருந்து திசைமாறியதுக்கு எளிதாக வந்துவிட முடியும்


 பன்னாட்டு நகரத்திலொரு தமிழ்க் குயில் என்கிற அவருடனான இந்தப் பேட்டி மிகவும் அழகாக ஒரு எண்பதாண்டு காலத்தை சுட்டுகிறது.  அதன் கீழே அவரது மொத்த படைப்புகளின் பட்டியலும் உள்ளது. பன்னீர்ப்பூ பற்றிய இரு கவிதைகளும்,  ரயில்வே குவார்ட்டர்ஸில் வசித்ததால் பலவித சமூகங்களையும் அணுகி புரிந்து கொள்ள முடிந்தது என்ற அவதானிப்பும் அரவிந்தரின் வழியாக காணும் தத்துவ தரிசனங்களும் என விரிவாக அவரைப் பற்றி அறிய வகை செய்கிறது. இவரது கவிதைகள் இணையத்தில் கிடைப்பதில்லை. புத்தகங்கள் கிடைக்கின்றன. இரண்டு தொகுப்புகளையாவது முழுமையாக வாசித்து ஒரு கட்டுரை எழுதவேண்டும் என்று எண்ணிக் கொண்டேன்.




No comments: