வைரமுத்துவுக்கு
ஞான பீடம் அளிக்கப்பட்டதை எதிர்த்து எழுந்த எழுத்தாளர்களின் குரல்களோடு என்னை
இணைத்துக் கொண்டேன். சமூக வலைதளத்தில் எனது கண்டங்களைப் பதிவிட்ட போது, வந்த எதிர்வினைகளை
வகைப்படுத்தினால், ஒன்று அவரது புலமை புரியாதவர்களின் ஓலம் இது என்றது. கல்லூரி ஆசிரியர்களாக
உள்ள சில நண்பர்களே கூட இதை ஆதரிக்கிறார்கள். அவர்களுக்கு இந்த எதிர்ப்பு ஏன் என்று புரியவில்லை. மற்றோன்று
இதை ஆண்டாள் பிரச்சனையோடும் இணைத்து இது பழிவாங்கல் என்றது. ஆதரித்த குரல்களில் சில
இவ்வாறு மீடுவில் சிக்கியவர்களுக்கு ஜனாதிபடி அதுவும் ஒரு பெண் குடியரசுத் தலைவர் பரிசு
அளிக்கக் கூடாது என்றது. எழுத்தாளர்களின் கண்டன அறிக்கையை வாசித்தாலே அது
முதன்மையாக இலக்கியப் பங்களிப்பின் அடிப்படையிலானது
என்பதையும் அதற்கிணையாக மீடூ புகார்களையும் பரிசீலிக்கக் கோருகிறது என்பதையும் உணர
முடியும். அந்த அறிக்கையை இங்கு காணலாம். எனது பதிவு அதை ஒட்டியே எழுதப்படுகிறது
தமிழ்
மக்களின் சராசரியான கலை இலக்கிய அறிவு என்ன என்பதை சமகாலத் திரையிசைப் பாடல்களை வைத்துச் சொல்லலாம்.
திரைப்படங்கள் என்பவை சராசரி தமிழ் மனத்திற்கு ஏற்ப எடுக்கப் படுகின்றன. மக்களிடம்
இதுவே செல்லுபடியாகும் எனக் கருதி சில தீவிரங்கள் கூடக் குறைத்துக் கொள்ளப் படுகின்றன
என்று திரைப்படம் சார்ந்த வலைதள உரையாடல்களின் வழி அறியக் கிடைக்கிறது. இந்த அடிப்படையில்தான்
மக்கள் ரசிக்கிறார்கள் எனக் கண்டு, கேட்டுக்
கேட்டு சலித்துப் போன கதைகளும் காட்சிகளும்
மீண்டும் மீண்டும் வருகின்றன. ஆகவே அதைச் சுவாரஸ்யமாக்க திரைக்கதையாளர்கள் கவிஞர்கள்
இசையமைப்பாளர்கள் ஒளிப்பதிவாளர்கள் உள்ளிட்ட
கலைஞர்கள் தன்னுடைய தனிப்பட்டத் திறனின் வழி மெருற்றுகிறார்கள். அங்கு ஒருவர்
நிலைகொள்ள வேண்டுமென்றால் அடிப்படையாகவே ஒரு திறமை தேவையாகிறது. முன்னணி இடத்தில் நீண்டநாட்கள்
நீடித்து இருக்க அந்த தனிப்பட்டத் திறமையும் ஆற்றலும் முக்கியம். அவ்வகையில் வைரமுத்து
அவர்கள் இளையராஜாவுடனிருந்து பிரிந்த பின்னரும் தன்னைத் தக்க வைத்துக் கொண்டார். சரத்குமார்
நடித்த கேப்ட்ன் உள்ளிட்ட சில டப்பிங் படங்களின் பாடல்களைக் கூட நாம் முணுமுணுக்க அதன்
வரிகள் முக்கியக் காரணம். அந்தளவு ஆளுமையுடன் அவர் விளங்குகிறார்.
அவருக்கும்
முன்பு வரையிலான திரைப்பாடல்களில் சங்க இலக்கியங்களை அவ்வாறே எடுத்தாளுதல் பரவலாக இருந்தது.
ஆனால் வைரமுத்துவின் வருகைக்குப் பின்னர் அது மாறியது. முன்னவர்களை விடவும் அதிகமாக அடித்தட்டு மக்களிடம்
புழங்கியவர் என்பதாலும், திரைப்படங்கள் கி்ராமத்தை நோக்கி சென்றதாலும் அப்போது நிலை
கொண்டிருந்த இடதுசாரி மற்றும் திராவிட அரசியல் கருத்தியலாலும் அவரது பாடல்கள் ஒப்புநோக்க பிறரைவிட அதிகம் கிராமிய யதார்த்தத்தைக் கூறின என்பதும்
அதில் புதுப்புது உவமைகளை அவரால் உருவாக்க முடிந்தது என்பதும்கூட மறுக்கவியலாது. அதாவது
சங்க இலக்கியத்திலிருந்து பெறப்படாத அவரது தனிப்பட்ட உவமைகள் பல எழுந்து வந்தன. ’இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல’ ’பெய்யெனப் பெய்யும்
மழை’ உள்ளிட்டத் தொகுப்புகள் நான் பள்ளிக்காலத்தில் வாசித்தவை. அதில் உள்ள பல வரிகள்
பிற்காலத்தில் திரைப்பட பல்லவிகளாக சரணங்களாக வந்தன என்பதையும் உணர்ந்திருக்கிறேன்.
இதிலிருந்து, இயக்குநர்களும் இசையமைப்பாளர்களும் அவரது வரிகளால் ஈர்க்கப்பட்டு அவற்றைப்
பாடலில் சேர்த்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளலாம். ஆனந்த விகடனில் அவர் எழுதிய ஒரு கட்டுரையில் இருந்த
நீ காற்று நான் மரம் என்கிற வரிகளை வாசித்த வித்யாசாகர், தான் அதற்கு இசையமைத்து தனது
படத்தில் சேர்த்துக் கொண்டதாக அடுத்த இதழில் தெரிவித்திருந்தார். வணிக இலக்கியத்தை
வாசித்து வந்த போது, எப்படி பாலகுமாரனும் சுஜாதாவும் ஸ்டெல்லா புரூஸ் ம் எப்படி நம்மை
அடுத்த கட்ட ரசனைக்குக் கொண்டுவந்தார்களோ அப்படித்தான் வைரமுத்துவும் தனது கவிதைகளாலும்
நாவல்களாலும் அடுத்த கட்ட வாசிப்புக்கு வாசகரை இட்டு வந்தார் என்பதை மறுக்கவியலாது.
இன்றைய
இன்ஸ்டா பாவனையில் சொல்லவேண்டுமெனில், நான் சென்னை வந்த புதிதில் ’யதேச்சையாக’ சாலையில்
போகும் போது.. மைலாப்பூரில் ஸ்கூட்டரில் பறக்கும் பாலகுமாரனை, அரும்பாக்கம் வசந்தபவனுக்குச்
அடிக்கடி சாப்பிட வரும் வைரமுத்துவைக் காண்பதுண்டு. நானும் ’யதேச்சையாக’ எதிரில் சென்று
வணக்கம் வைப்பேன். வைரமுத்துவின் மொழிநடை மீது இருந்த ஆர்வமும் அவரை நான் வாசித்திருக்கிறேன்
என்று அவரிடம் சொல்லிக்கொள்ள ஒரு துடிப்பும் உந்தித் தள்ளும். கூடவே அவரது ’மன்னவன்
வந்தானடி தோழி’ பாடல் சிவாஜி டைப் நடை என்னைத் தள்ளியும் நிற்க வைக்கும். அவர் நடந்து
வரும்போது போது ராஜாதி ராஜமகா ராஜகுலதிலக ராஜாதி ராஜன் வந்தாரேஏஏஏ என்று மனதுக்குள் பாட்டு ஒன்றும் பாடும். எது அத்தகையதொரு விலக்கத்தை
அளித்தது எது என யோசிக்க வேண்டும்.
அந்த
இடைவெளிக்குள் எனக்கு விகடனின் தீபாவளி மலர் வாயிலாக கிரா, நாஞ்சில் நாடன், துணையெழுத்து,
கதாவிலாசம் ஆகிய தொடர்கள் வழியாக எஸ்ரா மற்றும் சங்க சித்திரங்கள் வழியாக ஜெயமோகன்
உள்ளிட்ட தீவிர இலக்கிய உலகம் அறிமுகமாகியிருந்தது. அப்போது செம்புலப் பெயல் நீர் போல
என்கிற குறுந்தொகை வரியை ஜெ. அதில் குறிப்பிட்டிருப்பார். அதற்கு முன் வந்த இருவர்
படத்தில் நறுமுகையே பாடலில் இதே வரியை வைரமுத்துவும் கையாண்டிருப்பார். அப்போது வைரமுத்துவின்
வாசகனாக இருந்த எனக்கு இவர் என்ன வைரமுத்துவின் வரி அவரது சொந்த வரி இல்லை என குத்திக்
காட்டுகிறாரா என்று தோன்றியது என்பது இந்த வரியை எழுதும்போது நினைவுக்கு வந்து குறுநகையை
அளிக்கிறது.
வைரமுத்துவின்
சங்க இலக்கிய, உலக இலக்கியப் பரிச்சயமும் கண்டிப்பாகப் புறந்தள்ள முடியாதவை. ஒரு உதாரணமாக, நான் ரஷ்ய கலாசார மையத்துடன் இணைந்து
சில இலக்கிய கூட்டங்களை ஒருங்கிணைத்துச் செயல்பட்டபோது, அங்கு ரஷ்ய இலக்கியங்கள் குறித்த மாதந்தி்ர கூட்டங்களை, தான் திரையிசைக் கவிஞராக
வெளிப்படுவதற்கு முன்பான காலத்தில் வைரமுத்து ஒருங்கிணைத்தார் என்பதை அறிந்தேன். அவர்
இடதுசாரிக் கொள்கைகளால் ஈர்க்கப் பட்டார். ஆனால்
அவர் தன்னை ஒரு அரசவைக் கவிஞராகவே முன்வைத்துக் கொண்டார். திரைப்படப் பாடலாசிரியர்கள்
கம்பனிலிருந்து கற்பனையைக் கடன் வாங்கியது போல கம்பனின் பிற குணங்களையும் கடன் வாங்கிக்
கொண்டனர் என்று தோன்றுகிறது. அதில் ஒன்று அரசனுடன் நெருக்கமாக இருத்தல். அவருக்கு வாழ்த்துப் பாடுதல், அதிகாரத்துடன் இயைந்து
கொள்ளுதல் புவியோ உனக்கடிமை நீரோ எனக்கடிமை என செல்லம் கொஞ்சுதல், யார் தருவார் இந்த
அரியாசனம் என உச்சிக் குளிர்தல் என. எம்ஜிஆர் விஷயத்தில் கண்ணதாசனுக்கும் வாலிக்கும்
போட்டியே நிகழ்ந்தது என அறிகிறோம். அதுவே கலைஞர் வைரமுத்து காலத்திலும் தொடர்ந்ததைக்
காண்கிறோம். முன்பு தமிழ்ப் புத்தாண்டாகவும் பின்னர் சண்டிவி பிறந்தநாளாகவும் வரும்
சிறப்பு நிகழ்ச்சிகளில் கலைஞர் தலைமையில் நிகழும் கவியரங்கில் மாறி மாறி வாலியும் வைரமுத்துவும்
புகழ்வதைக் கேட்டிருக்கலாம்.
நவீன
இலக்கியம் தனது அத்துணை அழகியலிலும் நுண்ணுர்விலும் இவற்றிலிருந்து பலபடிகள் தாண்டி
முன்னே சென்றுவிட்டது. ஆனால் வைரமுத்துவின் எழுத்துக்கள் 1980 களின் திரையுலக அழகியலோடு
நின்றுவிட்டன. அதுவும் பாரதிராஜா உருவாக்கியது.
யதார்த்தவியலும் நாடகீயமும் உன்னதப் படுத்தலும் கலந்த ஒரு கலவையாக அவர் படங்கள்
இருக்கின்றன. அதற்கான ஒரு துணையெழுத்தாக வைரமுத்துவின்
நாவல்கள் விளங்குகின்றன என்று சொல்லலாம். கிழக்குச் சீமையிலே பசும்பொன் போன்ற படங்களை
வைரமுத்துவின் நாவல்கள் நினைவூட்டுவதை வாசகர் உணரலாம். வைரமுத்துவின் திரைப்பாடல்கள்
மீதான பெரும் மரியாதையுடனும் அவரை விலக்கிய பின்னர் அதே இசையமைப்பாளர் களின் பிந்தையப்
பாடல்களில் அவரது இன்மையை உணரும் ரசிகனாவும் இதைச் சொல்லவேண்டும். அவரது பாடல்கள் ஒரு
எல்லைக்கு உட்பட்டவையாகவே உள்ளன. அவை அழகியலின், உணர்ச்சியின், தர்க்க அறிவின் எல்லைக்கு
உட்பட்டவை. மானுட எல்லைக்கு அப்பாற்பட்ட ஆன்மீக தளத்திற்கு செல்லாதவை. குல்சாரின் ச்சைய ச்சையா வின் வரிகளைக் கேட்கையில்
அவை நம்மை ஒரு சூஃபி அனுபவத்துக்கு இட்டுச் செல்வதைக் உணரலாம். அதுவே வைரமுத்துவின் தையா தையா பெண்ணழகின் எல்லையோடு
நின்றுவிடும். அந்தப் பிண்ணனி கொண்டப் பாடல்களுக்கு இயக்குநர்கள் வைரமுத்துவை அணுகுவதில்லை
என்பதையும் கவனிக்கலாம். அவரது சமகால கவிஞர்களான வாலி, முத்துலிங்கம் மற்றும் அவரது
அடுத்த தலைமுறைக் கவிஞர்களான கார்த்திக் நேத்தா மதன் கார்க்கி ஆகியோர் அதைக் கடக்கிறார்கள்.
அவர் அரசியல் மற்றும் பகுத்தறிவின் எல்லைக்குள் நிற்கிறார். அதிலும் இன்குலாப் மற்றும்
தெலுங்கானாவின் கத்தார் போன்று ஒரு எதிர் அரசியலைப் பேசியதும் இல்லை. அந்தப் பிண்ணனியில்தான்
அவரது கவிதைகளையும் நாவல்களையும் அணுக வேண்டும்.
நாம்
திரைப்படங்களில் சபாஷ்மீனாவை உள்ளத்தை அள்ளித்தா
என்றும் ஹிஸ் ஹைனஸ் அப்துல்லாவை மேட்டுக்குடி என்றும் எடுக்கும்போது பார்த்து ரசிப்போம்.
இலக்கியத்தில் வடுவூர் துரைசாமி ஐயங்கார் இதை செய்த போது அவரை விமர்சித்தோம். இங்கு
நம்மிடம் சங்க கவிகள் முதல் முதல் இன்றைய இளம் எழுத்தாளர் வரை எழுதியவை உள்ளன. அதில் தனக்கான
ஒரு பார்வையுடன் வரும் எழுத்தாளர் பொருட்படு்த்த தக்கவர். அவர் சொற்ப பங்களித்தாலும்
சரி. பாலகுமாரன் ஜெயகாந்தன் இருவரும் நவீன வாழ்வில் தனிமனிதனின் தனிமனுஷியின் பிரச்சனையை
எழுதினார்கள். அதில் ஜெயகாந்தன் ஒரு ஆளுமையாக நிலைகொண்டார். ஆனால் அவரது ஆய்வு ஒரு அடிப்படை கேள்வியைக் கொண்டுள்ளது. அதை நம்மால் அவர்
காலத்திய ஆண் /பெண் உறவு, நாகரீகங்களின் பண்பாடுகளின் மோதல் ஆகியவை காலம் கடந்து இன்றும்
நிலை கொள்வதைக் காணலாம். நாஞ்சில்நாடனின் கதைகளில் அவர் ஒரு கைவிடப்பட்டவர்களின் பிரதிநிதியாக
நிற்கிறார். ஜெயமோகன் எழுதிய வெண்முரசில் உள்ள ’அதிகாரத்துக்கான கேள்வி’ என்கிற இழையை
அவர் தனது துவக்ககாலத்தில் எழுதிய பல்லக்கு சிறுகதையிலும் காணலாம். வைரமுத்துவின் படைப்புகள்
இத்தகையதாக இல்லை. அவர் சந்தர்பத்திற்கேற்ப படைப்புகளை அளித்தார் என்றுதான் சொல்லமுடிகிறதே
தவிர அவரது படைப்புகளின் அடிப்படைக் கேள்வி என்கிற ஒன்று இல்லை. நான் வாசித்த இரண்டரை நாவல்களிலும் மூன்று கவிதைத்தொகுப்புகளிலும்
சில நிகழ்வுகள் இன்றும் ஞாபகத்தில் உள்ளன. கவிதைகளை அப்படியே சொல்லவும்முடிகிறது.
(இப்போது யோசித்துப் பார்த்தேன் தலைப்கோடு ஞாபகம் வருகின்றன). ஆனால் அவற்றை தமிழின்
நவீன இலக்கிய அழகியலோடு பொருத்த முடியாது. அதற்காக அவற்றை வாரமலர் கவிதைகள் என்றும் சொல்லவியலாது.
அவை ஒரு இடைநிலை எழுத்தாக நிற்கத் தக்கவை.
பிறமொழிகளில்
ஞானபீட விருது அளிக்கப் பட்ட எழுத்தாளர்களின் வரிசையோடு தமிழில் ஞானபீட எழுத்தாளர்களை
ஒப்பிட்டடுப் பார்ப்பது என்பது இலக்கிய சூழலில்
தவிர்க்க முடியாத ஒன்று. அந்த விதத்தில் இந்த எதிர்ப்பை பதிவு செய்வது என்பது நவீன
இலக்கியத்தில் ஈடுபட்டிருக்கும் ஒவ்வொருவரின் கடமையுமாகிறது.

No comments:
Post a Comment