Sunday, November 4, 2018

ஆர்வலர் - சிறுகதை



குத்தூஸ் தன் தெருமுனைக்கு வந்து மறுமுனையில் தோரணங்களோடும் அலங்கார விளக்குகளோடும் இருந்த சமுதாய கூடத்தை நோக்கினார். அப்போது அவருக்கு எதிர் திசையிலிருந்து வந்த இருவர் “கம்மூனிட்டி ஹாலுக்கு எப்படி போகனும்” என வழி கேட்டனர். அவர்கள் வண்டியின் முன்புறம் தேநீர் நிரப்பிய பெரிய குடுவை அடியில் குழாயுடன் இருந்தது. பின்னால் இருந்தவர் கையில் பெரிய பிஸ்கெட் பொட்டலங்களும் இருந்தன. அவர்களுக்கு வழி சொல்லிவிட்டு, இன்று அங்கு நடக்கும் ஜான்சி நகர் நல சங்க கூட்டத்திற்கான ஆரம்பம் இந்தத் தெருமுனையில் அதுவும் இந்த இடத்தில்தானே நிகழ்ந்தது என எண்ணியபடி அதை நோக்கி நடந்தார் குத்தூஸ்.
அன்று காலை சுகாதார ஆய்வாளர் வந்தபோது எப்போதும் போல ராஜசேகருக்கும் சுந்தர்ராமுக்கும் பெரிய விவாதமே நடந்தது. அந்தப் பகுதியின் குப்பை தூர்வாரப்படாமல் பன்றிகள் கூட்டமாக அங்கு புழங்குவதுதான் முக்கிய காரணம். குப்பைகளைவிட பன்றிகள் பெரிய பிரச்சனையாக இருந்தன.
“எல்லாப்பன்னியையும் தூக்கிட்டுப்போய் சுட்டுப்போடுங்க” என்றார் ராஜசேகர்.
“குப்பையை எடுத்துட்டுப்போங்க… பன்னிங்க தானா போயிரும்” இது சுந்தர்ராம்.
“போட்க்ளப் ரோடுல அண்ணாநகர்ல ஒரு பன்னியாவது கண்ல படுமா…? எல்லாத்தையும் கொண்டுவந்து இங்கவுட்டுட்டாங்க…”
“அங்க இருக்கிறவங்க மாதிரி நீங்களும் குப்பையை தொட்டில போடுங்க. நீங்களே சோறுபோட்டா உங்களத்தான் சுத்தி சுத்திவரும்.”
அரைமணிநேரம் நீடித்துக்கொண்டு போனது அந்தப் பேச்சு. ராஜசேகர் மற்றும் சுந்தர்ராமின்  டாம் அண்ட் ஜெர்ரி பிரச்சனை ஒரு முடிவை எட்டி நகர்வாசிகள் கண்டதில்லை

ஜான்ஸி நகரில் குத்தூஸ் வீட்டின் காம்பவுண்டிற்குப் பக்கத்தில் சந்து என்றும் மனை என்றும் சொல்லமுடியாத ஒரு இடம் கேட்பாரற்று கிடக்கிறது. செடிகளும் புதர்களுமாக இருக்கும் அந்த இடம். கழிவு நீரும் அங்கு தேங்கும். குத்தூஸும் மீந்து போன உணவை அவ்வப்போது அங்கு கொட்டுவதுண்டு. சேறும் சகதியுமாகவே இருக்கும் எப்போதும். அந்த சேற்றுக்குதான் பன்றிகள் வருகின்றன.
 “சம்பத் சார்! பொது வேலைன்னா எடுத்து செய்யறீங்க. நாலு விஷயங்களும் தெரிஞ்சு வச்சிருக்கீங்க.. என்னை கூப்டுட்டு வந்துட்டு சும்மா நின்னா எப்படி சார்? எதாச்சும் சொல்லுங்க!” என்றார் ஆய்வாளர் சம்பத்தை நோக்கி.
சம்பத் காய்ந்த மாலையை இன்னும் தன் வண்டியிலிருந்து கழட்டியிருக்கவில்லை. வண்டி எண்ணும் இன்னும் வரவில்லை. பழையவண்டி ஓரளவு நல்ல விலைக்கு போனது. பன்னி இடிச்ச வண்டின்னு விற்கும்போது சொல்லக்கூடாது என அவர் அறிந்தே இருந்தார்.
“’சென்னைல மத்த ஏரியால தெருநாய்ங்க பிரச்சனைன்னா எங்களுக்கு பன்னிங்க பிரச்ச்னையும் கூட சேர்ந்து இருக்கு. மாநகராட்சிலேந்து வந்து மத்த இடங்களிலெல்லாம் பூங்காவே வச்சுத்தறீங்க. ஆனா எங்க நகர்ல மட்டும் இன்னும் பன்னிதான் மேயுது. பன்னிய தூக்கிட்டுப் போவீங்களோ இல்ல குப்பையை எட்டுத்துட்டுப் போய் பன்னிய விரட்டுவீங்களோ எல்லாம் உடனடியா பண்ணனும்.  அதான் உங்களை கூட்டு வந்தேன்.’ சம்பத் தொடர்ந்தார்.
“இப்ப நம்ம பாயை எடுத்துக்கங்க. அவங்க வீட்ல எல்லோரும் அஞ்சு வேளை தொழறவங்க. அப்ப பன்னி சத்தம் கேட்டா அவங்களுக்கும் அது ஹராம் இல்லையா…? நாமதான் சார் ஏதாவது செய்யனும்.”
குத்தூஸ் சம்பத்தை வெறுமனே பார்த்துக்கொண்டிருந்தார்.

சம்பத்திற்கு ஹராம் எல்லாம் தெரிந்திருக்கிறது. அவர் தன்னை வழியில் எங்கு பார்த்தாலும் தன் கையில் இருக்கும் காய்கறிபையை கண்டும் தொழுகைக்கு போயிட்டு வறீங்களா என்றுதான் கேட்பார். அப்படி பொதுவாகவும் கேட்கமாட்டார். நேரத்துக்குத் தகுந்தபடி ளுகரா, அஸரா என்றுதான் கேட்பார்.
குத்தூஸ் தாம் கடைசியாக ஐந்துவேளை தொழுதது எப்போது என யோசித்தார். மதியமும் மாலையும் முடிவதே இல்லை. மகனும் ஐந்து வேளைகள் தொழுவதில்லை. அலுவலகத்திற்கு ரெண்டுங்கெட்டானாக மதியம் மூன்று மணிக்கு கிளம்பிப்போய் காலை ஐந்து மணிக்கு வருகிறான்.
ஆனால் சம்பத் சொன்ன கருத்துக்கு மாற்று என யாரும் சொல்லவில்லை. அன்று மாலை இருவர் வந்து ஒரு கயிற்றை நீட்டிப்பிடிக்க மற்றொருவர் துரத்த, ஓடிவந்த பன்றிகளில் ஒன்றை கயிற்றில் தடுக்கிவிட்டு பிடித்துச்சென்றனர். ஆய்வாளர் வந்ததற்கும் இதற்கும் தொடர்பில்லை. வாரம் ஒரு பகுதியில் இது நடக்கும். பின் ஞாயிறு அன்று புளியமரத்தடியில் பாளம் பாளமாக காணக் கிடக்கும் இறைச்சியாக சென்றுவிடும்.
அந்தப்பன்றியின் கேவல் வெகுநேரத்திற்கு கேட்டுகொண்டுதான் இருந்தது.
‘பன்றியின் சத்தம்கூட ஹராமா என ஜமாத்தில் கேட்கவேண்டும்’ என நினைத்துக்கொண்டார் குத்தூஸ்.

ஓல்ட் மெக்டோனால்ட் என்று அவர் பேரன் அவரை அழைப்பான். அவனைப்பார்த்து பிற குழந்தைகளும் அதையே சொல்லத்துவங்கின. அவர் வீட்டு பக்கத்திலிருக்கும் அந்த இடத்தில் ஒவ்வொருமுறை மாட்டையோ நாயையோ பன்றியையோ பார்க்கையில்,
மூம்மூ ஹியர்…
ஒய்ங்க் ஒய்ங்க் ஹியர்…
பவ் பவ் ஹியர்…
என பாடுவான். கூட பேத்தியும் கையை அசைத்து ஆடுவாள். அவர் மகன் வேலைக்கு போய்வந்து காலையில் தூங்கும்போது அவர் பேரக்குழந்தைகளை சிலநேரம் வெளியே அழைத்து வந்து நிற்பார். அப்போதுதான் இந்த பாடல். சிலநேரங்களில், பன்றிகளை கல்லால் அடித்தும் கம்பை வீசியும் துரத்தியடிப்பார். அவர் ஹ்ஹேய் என கையை ஓங்கியதுமே அவைகள் ஓடத்துவங்கும்.
அன்று இரவு நல்ல மழையில்தான் அந்த சத்தம் கேட்டு விழித்துக்கொண்டார் குத்தூஸ். சில நாட்களாகவே சினைப்பன்றி வந்து செடியோரம் ஒதுங்கியிருப்பதை ஜைனம் சொல்லியிருந்தாள். மழைக்கு முன் ஈன்றிருக்கவேண்டும். நேரம் செல்லச்செல்ல சத்தம் வலுத்தது.. மழையும்தான். குத்தூஸ் தன் மகனை எழுப்பி இருவருமாக அவசரகால விளக்கை எடுத்துக்கொண்டு தன் வீட்டுக்கொல்லையில் சாய்த்து வைக்கப்பட்டு சும்மா கிடந்த ப்ளாஸ்டிக் கூரையை எடுத்துச்சென்று மதிலுக்கும் ஒரு தடித்த செடிக்கும் இடையே போட்டு பன்றிமீது மழை விழாமல் குடை போல வைத்துவிட்டு வந்தனர். சிறிது நேரத்தில் சத்தம் நின்றதோ அல்லது அவர் தூங்கினாரோ என அவருக்கு நினைவில்லை.

சூரியன் நன்றாக பல்லைக்காட்டிய காலையில் பன்றிக்குட்டிகள் தாய்ப்பன்றி மீது புரண்டு கிடந்தன. பேரன் மாடியிலிருந்து பொம்மை பைனாகுலரில் பார்த்தபடி ஒவ்வொரு குட்டிக்கும் டோரா, ஜூலி, சிங்சாங், ஹடோரி, பீம், சுக்கி என பெயர் வைத்தான். குத்தூஸ் தன் வீட்டில் இருந்து சமைத்தது போக எஞ்சிய காய்கறிக் கழிவுகளை மதில்வழியாக பன்றிக்கு விட்டெறிந்தார். அது எழுந்து வந்து உண்டுவிட்டு திரும்ப இவர் முகத்தைப் பார்ததது. மீண்டும் வீட்டிற்குள் போய் முழு கேரட்டுகளை எடுத்துவந்தார். ஒவ்வொன்றாக அதற்கு போட்டார்.
அன்று மதியம் மகன் வேலைக்கு கிளம்புகையில் அவரை அழைத்து முகநூலில் ”அன்புக்கு ஹராம் ஏதுமில்லை” என்ற வசனத்துடன் பன்றிக்கு கேரட் போடும் அவர் படம் வந்திருந்ததை காட்டினான். அவர் என நினைத்துப்பார்த்தால்தான் அவர் என புரியும் வண்ணம் நல்லதொரு நிபுணத்துவத்துடன் அந்த படம் எடுக்கப்பட்டிருந்தது. ஜான்ஸி நகரின் மக்கள் அதற்கு விருப்பக்குறி இட்டிருப்பதை சொன்னான். ராஜசேகர் தன் கண்டனத்தையும் சுந்தர்ராம் தன் அன்பையும் குறியீட்டிருப்பதாக அவன் மேலும் கூறிச் சென்றான். ராஜசேகர் நேரிலும் தன் எதிர்ப்பை தெரிவித்திருந்தார். சில முகநூல் குழுக்களில் இது ஏன் ஹராம் என் விவாதிக்கப்பட்டது.
“பன்றியை தின்பதுதான் ஹராம் என்றில்லை, வளர்ப்பதுகூட ஹராம்தான்” என ஒருவர் போட்டிருந்தார். அவருக்கு பலர் தன் கோபக்குறியையும் பலர் கட்டைவிரல் உயர்த்தி வெற்றிச்சின்னத்தையும் அளித்த்திருந்தனர்.
“இவர் வளர்க்கவில்லை. பொதுவாக திரியும் ஒன்றிற்கு உணவிடுகிறார். இதைத்தான் அன்பு மார்க்கம் போதிக்கிறது” என்று ஒருவர் அளித்த பதிலுக்கு முன்பு பதிவிட்டவரே வெற்றிச்சின்னத்தை காட்டியிருந்தார்.
பள்ளிவாசலிலும் இதைப்பற்றி பேசினார்கள்.
“எதுக்கு வாப்பா இந்த வேலை உனக்கு” என்று சலித்துக்கொண்டான் அவர் மகன். குட்டிகளை பார்க்கவேண்டும் என அடம்பிடித்த பேரனுக்கு ஒருமுறை அடிகூட விழுந்தது.
“தலைவரே! உங்களுக்கு ஒரு சேதி தெரியுமா? இதுதாண்டா இந்தியா குரூப்பில் மட்டுமே உங்கபடம் இன்னிய தேதிக்கு ஐம்பதுலட்சம் லைக் வாங்கிடுச்சு” என்றான் சுந்தர்ராம். அப்போது சமுதாய கூடத்தின் வாசலுக்கு வந்திருந்தார் அவர்.

பன்றிப் பிரச்சினையையும் துப்புறவுப் பிரச்சினையையும் தீர்த்ததற்காக குத்தூஸுக்கு இன்று பாராட்டும் மற்றும் ஜான்ஸி நகர் நல சங்கத்தின் தலைவராக ராஜசேகர் சுந்தர்ராம் என இருவராலுமே முன் மொழியப்பட்டு பொறுப்பேற்பதும் என ஒரு சேர நடக்கும் கூட்டம் இது. அதனால்தான் தலைவரே என்ற இந்த விளி.
துப்புறவுத்துறை ஆணையர் தலைமையில் நடந்த கூட்டத்தில் கவுன்சிலரும் காவல்துறை மற்றும் சுகாதரத்துறை ஆய்வாளர்களும் கலந்து கொண்டனர். சம்பத் உரையாற்றினார்.
“நாமளும் எவ்வளவோ முயற்சித்துப் பார்த்தோம். அடிச்சுப்பார்த்தோம். துரத்திப்பார்த்தோம். நம்ம ஹெல்த் இன்ஸ்பெக்டர்கூட பல தடவை மாநகராட்சியுடன் போராடிய ஒரு விஷயம் இது. ஆனால் பன்றிகள் செல்லவில்லை. ஆனால் நம்ம பாய் என்ன பண்ணினாரு? அவைகளிடம் அன்பால் பேசினார். மழைக்காலத்தில் அவைகளுக்கு ஒதுங்க இடம் அளித்தார். பசிக்கு உணவு போட்டார். பிறகு அவைகளிடம் எடுத்துரைத்தார். அவைகளால் தனக்கு எவ்வளவு பெரிய ஹராம் ஏற்படுதுன்னு சொன்னார். அவர் ஐந்து வேளை தொழுத அந்த எல்லாம் வல்ல பேரருளாளனின் கருணையால் பன்றிகளுக்கு அவர் நிலை புரிந்து தாமே நம் நகரைவிட்டு விலகின. இதைத்தான் வள்ளுவர் தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சிதன் மெய்வருத்தக்கூலி தரும்னு சொல்றார். குத்தூஸ் பாய் நம்ம தலைவரா பொறுப்பேற்று இனி நம்ம தண்ணீர், தெருவிளக்கு பிரச்சினையெல்லாம் தன் அன்பால் தீர்த்துவைப்பார்.”

குட்டிகள் சிலநாட்கள் ஆன நிலையிலும் குத்தூஸ் கவனமாக யாரும் போட்டோ எடுத்துவிடாவண்ணம் ஜன்னல் வழியே கேரட் பீட்ரூட் துண்டுகள் முட்டைகோஸ் என விசிறியெறிந்து பன்றிக்கு உணவிட்டு வந்தார். அன்று மகன் தூங்கிக்கொண்டிருந்தபோது பேரனைப்  பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு பேத்தியை தடுப்பூசிக்கு தூக்கிச்சென்றிருந்தனர். அவன் மாடிவழியே எக்கி எக்கி குட்டிகளை பார்த்துக்கொண்டிருந்தான். குட்டிகளில் டோரா மட்டும் தனியாக குதித்து விளையாடிக்கொண்டிருந்தது. மற்றவைகள் தூங்கிக்கொண்டிருந்தன.. தாய் அருகில் இல்லை எங்கோ இரைதேடிச்சென்றிருந்தது.
“தாத்தா! எனக்கு ஒரு ப்ராமிஸ் பண்ணுவியா?”
“சொல்லுப்பா!”
“இல்ல ப்ராமிஸ் பண்ணு!”
“ப்ராமிஸ். சொல்லு!”
“டோராவ எடுத்துத் தரியா? விளையாடிட்டுத் தரேன்.”
”அதெல்லாம் வேணாம்ப்பா, வேற ஏதாவது கேளு”
“முடியாதுபோ!!“ குதித்தான் பேரன்
பேசிக்கொண்டே எதார்த்தமாக பார்த்த போது, அந்த டோரா கொஞ்சம் கொஞ்சமாக மதில் ஓரத்தை எட்டி அடுத்து சாலைக்கு ஓடிவிடும்படி நின்றது. எதிர்பாராமல் வாகனங்கள் வரும் சாலை. தூரத்தில் லாரி ஒலிபோல ஏதோ கேட்டது. அதன் பின் அவர் தாமதிக்கவில்லை
குத்தூஸ் ஒரு ஸ்டூல் போட்டு மதில் மேல் வயிறு பதிய குனிந்து கைநீட்டி மெல்ல துழாவி அதை எடுத்தார். வெதுவெதுப்பாக இருந்த தண்ணீரை ஊற்றி துடைத்தார்.. துணியைச்சுற்றி தன் கையில் லாவகமாக வைத்தபடி பேரனிடம் காட்டினார். இத்தனை களேபரத்திலும் யாரும் போட்டோ எடுக்கிறார்களா என முன்னும் பின்னும் பார்க்கத் தவறவில்லை. ஒரு முன்னெச்சரிக்கையாக குல்லா போடவில்லை என்பதையும் உறுதிசெய்துகொண்டிருந்தார்
“தாத்தா! இது முயல் மாதிரி இருக்கு... அணில் மாதிரி இருக்கு…”
அவன் சிறு தட்டை முறுக்குபோல வட்டமாக இருந்த அதன் வாயின் முன் தன் வாயை குவித்து அதே போல வைத்துக்கொண்டு வும் வும் என பார்த்து பார்த்து டோரா டோரா என தலையாட்டிக் கூவி விளையாடினான்.
“டோராக்கு சாக்லேட் எடுத்துட்டு வறேன்” என்று உள்ளே ஓடினான்.
அணில்குஞ்சு போலத்தான் இருந்தது. மெல்ல வருடினார். அது கையில் துள்ளியபடி இருந்தது.

அப்போதுதான் தன் அடிவயிற்றைக் கலக்கிய அந்த உறுமலை கேட்டார். தன் உடலின் மொத்தத் துடிப்பும் அடங்க திரும்பிப் பார்த்தார். அன்னைப் பன்றி ஒருமுறை மதிலை முட்டியது. பின் பின்னே சென்று அவரைப்பார்த்து உர் என உறுமியது. பின் மீண்டும் அவரை நோக்கி பாய்ந்தது. சுவற்றை பெயர்த்துக்கொண்டு வந்து தன் மீது பாய்வதுபோல உணர்ந்தார். மதில் அதிர்ந்தது. உடல் நடுக்கம் குறையாமல் மதிலுக்கு அந்தப்பக்கம் டோராவை விட்டார். இறங்கி நின்ற பிறகும் உடல் அதிர்ந்தது. நெஞ்சு படபடவென அடித்துக்கொண்டது. வீட்டிற்குள் சென்று கை முகம் கழுவி சிறிது நேரம் நாற்காலியில் சாய்ந்தார். இன்னும் படபடத்துக்கொண்டிருந்தது.
கைதட்டல் ஓசை கேட்டு மீண்டார் குத்தூஸ். சம்பத் இன்னொரு குறள் சொல்லியிருக்கவேண்டும்
.
பன்றிகள் அவர் மதில்பக்கம் வருவதேயில்லை. அந்த இடத்தை சுத்தம் செய்து சில மரக்கன்றுகளை நட்டுவைத்தனர். ஒரு சிறு புல்வெளிபோல ஆக்கினர். அதன்பின்னும் அந்த இடம் இன்னும் வெறுமையாக இருப்பது போலவே தோன்றியது. அது அவருக்கு குற்றவுணர்ச்சியை தூண்டியது. தினமும் நடைபயிற்சிக்கு செல்லும்போது பன்றிகள் புதிதாக தேர்ந்தெடுத்துள்ள விளையாட்டுத்திடலையொட்டிய இடத்திற்குச் சென்று டோராவை பார்த்து வருவார். அதன் மென்மை இன்னும் அவர் கைகளில் ஒட்டியிருந்தது.
“அடுத்து தலைவரை பேச அழைத்து அமர்கிறேன்” கைத்தட்டலோடு அமர்ந்தார் சம்பத்.

குத்தூஸ் ஒலிபெருக்கி முன் நின்றார்.
”நண்பர்களே! ஒருவரை நாம் வெறுக்கும்போதும் விரும்பும்போதும் ஒரு எல்லைக்குள் நிற்கிறோம். ஆனால் அது கொஞ்சம் நீண்டு போகும்போது ஒரு உரிமை எடுத்துக்கொள்கிறோம். அதுவரையிலான நம் அன்பு, எல்லை தாண்டும்போது உரிமை என்றாகிறது என்பது நமக்குத் தெரிவதில்லை… அப்போது அனைத்தும் தலைகீழாக ஆகிவிடுகிறது... அது தெரிந்தபின் செய்வதற்கு ஒன்றும் இருப்பதில்லை.” குத்தூஸுக்கு சற்று தொண்டையடைத்துக்கொண்டது. தான் இங்கு ஏதாவது உளறப்போகிறோம் என உறைத்து தண்ணீர் குடிக்க மூடியை திறந்தார்.
“அதைத்தான அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் ங்கிறாரு வள்ளுவர்” என்றார் சம்பத் தன் இருக்கையில் அமர்ந்தபடி. ஆய்வாளர் அற்புதம் என தன் கட்டைவிரலை உயர்த்திக் காட்டினார்.
சற்று நேரம் அவர்களை வெறித்துப்பார்த்த குத்தூஸ், தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு இயல்பாக ஏற்புரையைத் துவங்கி நன்றி எனக்கூறி முடித்துக்கொண்டார்.

வீட்டிற்குத் திரும்பியபோது பேரன் தன் இடது உள்ளங்கையில் வலது முழங்கையை வைத்து உள்ளங்கையை மடக்கி புஸ் புஸ் ஹியர், புஸ் புஸ் தேர் எனப்பாடியபடி ஆடிவந்தான். மகனும் மருமகளும் மதிலுக்கு அந்தப்பக்கம் பார்த்துகொண்டிருந்தனர்.
“ஏக் படீ சாம்ப் ஹை ஜி” என்றாள் ஜைனம் தன் இரு கைகளையும் அகல விரித்தபடி,
அந்தக்கணம் பாம்பைவிட சம்பத்தை எண்ணி அவருக்கு கதி கலங்கியது.

( கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட ”சாமி ஊர்வலம் வராத தெருவில் வசித்தவர்கள்'  தொகுப்பில் இடம் பெற்ற சிறுகதை )





Saturday, November 3, 2018

மனத்துக்கண் மாசிலன் ஆதல்

ஏ ஆர் முருகதாஸ் எனக்குப்பிடித்த இயக்குநர்களில் ஒருவர். அவரது ரமணா படத்தில் சிம்ரன் குழந்தையோடு இறந்து உதிரும் காட்சியைக்கண்டுதான்  அவர் இயக்கம் மீது ஒரு ஈர்ப்பு உண்டானது. அவர் இயக்கம் என்றால் அந்தப்படத்தின்  மீது பெரும் எதிர்பார்ப்பும் உண்டாகிவிடும். ஆனால் ரமணா படம் இன்னொருவரின் கதை என ராணி குடும்ப வார இதழில் படித்தாலும் அதை நம்பியதில்லை. ( ராணியை குடும்ப இதழ் என்று நம்பாதது முதல் காரணம் ). அதன்பின் கஜினி. அதுவும் நொலன் படத்தின் காப்பி என்றார்கள். கூகுள் இமேஜில் படங்களை பார்த்தால் அப்படித்தான் இருந்தன. ஆனாலும் மொட்டை மாடி கல்பனா நொலனுக்கு தோன்றியிருக்க வாய்ப்பே இல்லை. அதற்குப்பிறகு அவர் இயக்கிய ஸ்டாலின் என்கிற தெலுங்கு படத்தைக் கண்ட பிறகுதான் அவர்மீது சலிப்பு துவங்கியது.  ஏழாம் அறிவு, ஸ்பைடர் போன்ற மரணமொக்கைகளைக் கண்டாலும் இடையில் வந்த துப்பாக்கியில் அந்த சலிப்பு நீங்கிவிட்டது. அதன் பின் மூவீஸ் நெள சேனலில் இண்டர்வியூ வித் வாம்பயர் திரைப்படக் காட்சியைக் கண்டதும் நான் முதலில் சிலாகித்த காட்சியே இங்கிருந்து உருவியதுதான் என அறிந்து பெரும் ஏமாற்றத்துக்குள்ளாகி யூ ட்டூ ப்ரூட்டஸ் என நினைத்துக்கொண்டேன்.

திரைப்படங்கள் மீது ஈடுபாடு குறைந்த பிறகு வாரமலர் நடுப்பக்கம் படிப்பதும் குறைந்துவிட்டதால் அதிகம் இந்த சங்கதிகள் பற்றி தெரியவில்லை. ஆனால்  அலுவலகத்திலோ அல்லது பள்ளி நண்பர்களுடனோ பேசுகையில் முருகதாஸ் காப்பி அடித்து படம் எடுப்பவர் என்றும் இன்னொருவர் கதையை திருடி எடுப்பவர் என்றும்  நம்புகிறார்கள் என உணர்ந்தேன். ஸ்பைடரை மைனாரிடி ரிப்போர்ட் என்று கூறும் விமர்சனங்களும் கத்தி படம் பற்றிய கோபிநயினாரின் பேட்டியும் இன்றைக்கு வந்திருக்கும் சர்கார் சர்ச்சையுமே அதைத்தான் நிலைநிறுத்தியிருக்கின்றன. உலக சினிமா ரசிகர்களுக்கும் தொடர்ச்சியாக வலையுலகில் புழங்கும் மக்களுக்கும் அதுவே அவர் குறித்த பிம்பமாக இருக்கிறது.அவர்கள் நம்ப விழையும் கருத்தும் அதுவே.

அடுத்து விஜய் மீதும் பொதுவாக ஒரு சலிப்பு சமீபகாலமாக அவர் ரசிகர்கள் அல்லாதவர்க்கு இருக்கிறது. நான் பூவே உனக்காக லவ்டுடே என அவர் படங்களை ரசிகனாக பார்க்கத்துவங்கினேன். அதற்கு முன் வந்த ரசிகன் உள்ளிட்ட கில்மா படங்களை ஒருமுறை பார்த்திருக்கிறேன் ஆனால் பூவே உனக்காக முதல் அவர் படங்களை பலமுறை பார்ப்பதுண்டு. பகவதி வரை. அந்தப்படத்திற்குப்பின் முதல்நாள் முதல் ஷோ எனப் போவதில்லை. மற்ற படங்களைப்போல நல்ல ரிவ்யூ வந்தால் மட்டும் செல்லும் வழக்கம்தான் இவருக்கும். காரணம் என்னவெனில், பகவதி படம் பார்த்த போதே அவர் அரசியலுக்கு வரப்போகிறார் என்பது தெரிந்துவிட்டது. நமக்குத்தான் தோன்றுகிறதா  என அமைதியாக இருந்துவிட்டேன். ஆனால், பிறகு பார்த்தால் அது உண்மைதான். எம்ஜிஆர் இமேஜை தூக்கிப்பிடிக்கத்துவங்கி அது போன்ற கதைகளையே நாடவும் ஆரம்பித்து தன் இலக்கை நோக்கி அடியெடுக்க வைக்கத்துவங்கியதும் கச்சிதமாக நூல்பிடித்து செல்வதும் இயல்பாகவே ஒருவரை சீண்டக்கூடும். காரணம் திரை நாயகர்கள் அரசியலுக்கு வரும் தமிழக பண்பாடு. அதிலும் பெரும் ரசிகபட்டாளம் கொண்ட ஒருவரை சும்மாவே இருந்தாலும் அவர் ஓட்டு போட்டாரா, மழை வெள்ளங்களில் வருத்தம் தெரிவித்தாரா என கவனிப்பது நமக்கு பிடித்தமானது. சென்ற படத்தில் மத்திய அரசையும் விமர்சித்ததாலும் ஒரு தரப்பின் எதிர்ப்பையும் கொண்டிருக்கிறார். ஆனாலும் தன் திரை வாழ்க்கையின் இறுதி காலங்களில் அரசியலுக்கு வராமல் தான் உச்சத்தில் இருக்கும்போதே வருவார் என்பதை நானும் எதிர்பார்க்கவில்லை.

மூன்றாவதாக சன் பிக்சர்ஸ். கேபிள்டிவி ஆபீசில் கரெண்டு போனாலும் இன்வெர்டர் வைத்தாவது சன்டீவி மட்டும் ஒளிபரப்புவார்கள். இல்லாவிட்டால் மாதம் கலெக்சனுக்கு போகும்போது இல்லத்தரசிகள் நொங்கெடுத்துவிடுவார்கள். அந்தளவிற்கு பார்வையாளர்கள் அளவில் ஒரு ஸ்டிராங் பேஸ்மெண்ட் உள்ள நிறுவனம். தான் ஒரு படமெமுடுத்தால் அதை அடிக்கொருதடவை விளம்பரப்படுத்தி மாசிலாமணியைக்கூட பார்க்கவைத்துவிடும் மார்க்கெட்டிங் திறமை கூடவே உண்டு. ஆனால் அலைக்கற்றை பிரச்சனை சமயத்தில் அவர்களுக்கும் நெகடிவ் இமேஜ் உருவானது. கட்சி பின்புலமும் உள்ளதால் தேர்தலில் சார்பு நிலை எடுப்பதாலும் இவர்களாலும் நடுநிலை ஊடகம் என்கிற இடத்தை முன்பு  ஆரம்ப காலத்தில் இருந்தது போல மீண்டும் அடையமுடியுமா என்று தெரியவில்லை..

இவைகளை நெகடிவ் இமேஜ் என்று சொல்லமுடியாவிட்டாலும் அவர்கள் எதிலாவது மாட்டிக்கொண்டால் சந்தோஷப்படும் அளவிற்கு கணிசமான அதிருப்தியாளர்க்ளை சம்பாதித்து வைத்திருப்பது மூவருக்கும் பொதுவானதாக இருக்கிறது. அம்மாதிரியான சமயத்தில், மூவரும் ஒன்றாக இணையும் போது திட்டுவதற்கு ஒரு காரணத்தை  பொதுமக்கள் அனைவரும் எதிர்பார்த்தே இருந்தனர் என நினைக்கிறேன். ஆனால் இன்று பிரச்சனை என வரும்போது முருகதாஸ் திருட்டுப்பழியை சுமக்க மற்றவர்கள் அமைதிகாத்தனர். என் நண்பர்களாக உள்ள விஜய் ரசிகர்களேகூட தன் தலைவர் முருகதாஸை நம்பி ஏமாந்துவிட்டதாக கருதினர். இவை அனைத்திற்கும் காரணமாக இருந்தது ஒரு வாட்சப் செய்தி. நீதிமன்றத்தில் தான் கதையை திருடியதாக முருகதாஸ் ஒப்புக்கொண்டார் என்று சொல்லி பரவியது அது.  செய்திகளை கொஞ்சம் தேடி படித்தாலே இது நீதி மன்றத்திற்கு வெளியே முடித்துக்கொள்ளப்பட்ட வழக்கு என்பது புரியும். ஆனால் முன்பே கூறியது போல நிதர்சனம் எல்லோருக்கும் இரண்டாம் பட்சம்தான். தான் நம்ப விரும்பும் செய்தியே அனைவருக்கும் தேவையோ என்கிற ஐயமே ஏற்பட்டுவிட்டது. அதற்கேறார்போல செய்திகளை படிப்பதும் சம்பந்தமில்லாத பின்னூட்டங்களை இடுவதும் என்றே இருக்கிறது நிலைமை

கெளரவம் என்ற படம். அதில் மேஜர் சுந்தர்ராஜன் ( Major Sundarrajan ) தன் முதல் மனைவியை கொன்று பெரிய சிவாஜி மூலம் சட்டத்திலிருந்து தப்பித்துவிடுவார். ஆனால் சின்னசிவாஜி உள்ளிட்ட நல்லவர்கள் குழுவிற்கு இது பிடிக்காது. மேஜரின் இரண்டாவது மனைவி யதார்த்தமாக இறக்க அதில் கொலையே செய்யாத மேஜர் மட்டிக்கொள்வார். இதுபோலத்தான் முருகதாஸின் நிலையும் என்று எனக்குத் தோன்றுகிறது. சர்கார் விஷயத்தை முழுக்க படிச்சீங்களா என்று கேட்டால், கத்தி படத்துல என்னாச்சுன்னா என்றுதான் ஆரம்பிக்கிறார்கள்.

மேற்கண்ட மூவருக்கும் இருக்கும் எதிர் மனநிலை என்பது ஒரு முன்னெச்சரிக்கைதான். ஆனால் திரையில் காணும்போது  விஜயின் நடனமும் நடிப்பும் சன்டிவியின் பிரும்மாண்டமும் எப்பொழுதும் சுண்டி இழுத்துவிடும். முருகதாஸின் திரைக்கதையும் துப்பாக்கி போன்ற கதைகளில் வெளிப்படுகையில் பாசிடிவ்வாக மாறிவிடும். அதுவே பொது மக்களின் உணர்வு. ஆகவே, அது நிலையானது அல்ல.



ஆனால் நான்காவதாக ஒருவர் இருக்கிறார். அவர் இலக்கிய உலகைச் சார்ந்தவர். அங்குள்ளவர்களிடம்  முன்முடிவுகள் மாறுவதில்லை. அதை மேன்மேலும் மேம்படுத்திக் கொள்ளவே காரணங்களை தேடுவார்கள். சான்றுகளை அடுக்குவார்கள். அவருக்கும் இது தெரியாததல்ல. அந்த ஒரு காரணத்துக்காகவே, அவர்தான் இந்த படத்துக்கு வசனம் என்று தெரிந்ததும்  லைட்டாக ஒரு அல்லு இருந்தது எனக்கு. அதற்கு எந்த முகாந்திரமும் அப்போது இல்லை. ஆனால் சென்றவாரம் கதை திருட்டு என்ற பிரச்சனை வந்ததும், மீண்டும் அந்த எண்ணம் வந்தது. அதேபோல், முதலில் அதை எதிர்த்து பதிவிட்டவரும் அவரே. ( அவராக சொல்லாவிட்டாலும் உள்ளொளி தரிசனத்துக்காக அந்த கேள்வியை ஒருவேளை இந்த பதிவருமே கேட்டிருப்பார்.). இவர் ஏன் தானாக முன்வந்து இதைச் சொல்கிறார்  இவருக்கு என்ன வந்தது என சும்மா இருக்க வேண்டியதுதானே என்று நலம் விரும்பிகளும் கூறினார்கள். எனக்கும் முதலில் அப்படித் தோன்றியது.

முந்தைய இரண்டு சம்பவங்கள் ஞாபகம் வந்தன. முன்பு தான் வசனம் எழுதிய பாய்ஸ் படத்தில் ஒரு பிரச்சனை சுஜாதாவிற்கு வருகிறது. அது திரைக்கதை விஷயம்.  தான் எழுதியதல்ல என்று சொல்ல வற்புறுத்துகின்றனர். இதைக்குறிப்பிட்டு அவர் அப்போது எழுதிவந்த கற்றதும் பெற்றதும் ல் அந்த வசனங்கள் அனைத்தும் நான் அங்கீகரித்த பின்னரே இடம்பெற்றன என்றார் சுஜாதா. இரண்டாவதாக, சிவாஜி படத்தில் வந்த பிரச்ச்னை. அதில், தான் எழுதாத   அங்கவை சங்கவை வசனத்திற்கும் தானே பொறுப்பேற்றார். அதன்மூலம் பல அர்ச்சனைகள் பெறப்பெற்றார்.  சிவாஜி படத்தில் இந்த  வசனம் அவரால் எழுதப்பட்டதல்ல அது அந்த சமயத்தில் ஸ்பாட்டில் வந்த வசனம் என்று அதில் சம்பந்தப்பட்ட வேறொருவர் சொல்லியே எனக்குத்தெரிய வந்தது. அதுவரை நானும் சுஜாதா ஜாலியா எழுதிட்டார் என்றே கருதினேன். இதுவரையுமே இது ஆஃப் தி ரெக்கர்டுதான்.

இந்த சர்கார் பிரச்சனை வந்தபோது இவரும் தான் வசனம் மட்டும்தான் எழுதனேன் எனக்குத்தெரியாது என்று தப்பித்திருந்திருக்கலாம்.   அவரை யாருமே கேட்கவில்லையே ஏன் வாண்ட்டடா  வண்டி ஏறறாறு என்று எழுதுவதுபோல அமைதியாக இருந்திருக்கலாம்.  மற்ற பங்களிப்பாளர்கள் போல தந்திரமாக அமைதி காத்து தப்பித்திருந்திருக்கலாம். ஆனால் ஒரு சங்கடமோ பிரச்சனையோ வரும் போது துணை நிற்காமலோ, அங்கு தான் அறிந்த ஒன்றைச் சொல்லாமல்  போனாலோ அவர்கள் சராசரி உத்யோகஸ்தர்களாக ஆகிறார்கள் . அந்த இயல்பு சாமானியர்களுக்கானது. வாத்தியாருக்கோ  ஆசானுக்கோ உரியது அல்ல என்று தோன்றுகிறது

Sunday, June 3, 2018

இரவுக்கு ஆயிரம் கண்கள்

இலக்கிய உலகில் தொண்ணூறுகளில் பிறந்தவர்கள் பற்றி சுநீல் கிருஷ்ணன் ஒரு கோட்பாடு சொல்வதுண்டு. இது தொண்ணூறுகளிலோ அதற்கு முன்னோ  பத்தாம் வகுப்பு முடித்த அதிர்ஷ்ட்டசாலிகள் பற்றியது.  விவேக்-ரூபலா, பரத்-சுசீலா, நரேந்திரன் - வைஜெயந்தி  ஆகிய நாயக நாயகிகளை அறியாதோர் அறியாதோரே...!!! என வாலி ஸ்டைலில் சொல்லலாம்

முறையே ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர் மற்றும் சுபா உருவாக்கிய இந்த நாயகர்களோடு இவர்களின் உப நாயகர்களும் கூட இருப்பார்கள். விஷ்ணு-கோகுல்நாத், ஜான் சுந்தர் அனிதா என. துப்பறிவாளன் பட பிரசன்னா போல, கடைசியில் முடிச்சவுக்கவும் செய்வார்கள். இவர்கள் தனியாக துப்பறியும் நாவல்களும் உண்டு

இதில் விவேக் விஷ்ணு கோகுல்நாத் போன்றவர்கள் க்ரைம் பிராஞ்ச். ஒரு சிபிஐ டைரிக் குறிப்பில் வரும் சிபிஐ மம்மூட்டி முகேஷ் ஆகியோரைப் பார்த்த போது இவர்கள் ஞாபகம் வரும். ராஜேஷ்குமாரின்  விவேக் சிங்கம் சூர்யா போல. ஸ்டிரிக்ட் ஆபீசர். ரூபலாவைத்தவிர மற்ற பெண்களுடன் அவர்கள் கனவில் மட்டுமே டூயட் பாடுவார். ரூபலாவிடம் கூட, எப்படி ஒரு தங்கப்பத்தம் சிவாஜி  கேஆர் விஜயாவை கொஞ்சுவரோ, ஊமைவிழிகள் விஜயகாந்த் சரிதாவைக் கொஞ்சுவாரோ அந்தளவு டிஸ்டன்ஸ்  வைத்துக்கொள்வார். அதற்கே பாரத் என்றொரு மகனும் பிறந்துவிட்டான்.

மற்ற இரு ஜோடிகளும் பிரைவேட் டிடெக்டிவ்ஸ்! அவர்களுக்குள் அனைத்து சில்மிஷங்களும் உண்டு. 


சுசீலாவின் டி ஷர்ட் வாசகங்கள் இப்போது திரைப்படத்தில் பெண்கள் அணிவதாக காட்டப்படும் வாசகங்களைவிட அதிகம் கற்பனை வளம் கொண்டவை. உதாரணமாக,  “words on the office doors".  சிலவருடங்கள் கழித்து நான் சென்னை வந்து office door களைக் கண்டு புரிந்துகொண்டேன்.

இன்னும் புத்திசாலித்தனமானவை சுபாவின் சம்பாஷணைகள். இதில் பல அவர்கள் வசனமெழுதிய படங்களில் உள்ளன.

ஒரு போலீஸ்காரருக்கு அம்பது ரூபாய் லஞ்சம் கொடுத்துவிட்டு சொல்லுவார், “ சார், அப்படியே பாக்கெட்டுல வச்சுகங்க! முகந்து பார்க்காதீங்க..”

சிறிது நேரம் கழித்து வைஜ்..” ஏன் முகந்து பாக்கக்கூடாதுன்னு சொன்ன..”

“ அப்படி சொன்னாத்தான் முகந்து பார்ப்பாரு.. இல்லைன்னா பாக்கெட்லதான் வச்சுப்பாரு”

“முகந்து பார்த்தா என்ன”

“ ஒண்ணுமில்ல...”

சுபாவின் உருவாக்கத்தில் செல்வா -முருகேசன் ஜோடிதான் டாப். செல்வா ஓய்வு பெற்ற ராணுவ வீரர். காலில் குண்டடி காயம் வேறு. அதனால் தாங்கித்தாங்கித்தான் நடக்க முடியும்.  முருகேசன் நம்ம லூஸ்மோகன் மாதிரி சென்னைத்தமிழ் பேசுவார் ஆனால் காரியத்தில் கில்லி. அவருக்கு மட்டும் ஒவ்வொரு நாவலுக்கும் ஒவ்வொரு அத்தை வீடு. மற்ற அனைவருக்கும் வேறு நாயகிகள் இல்லை.  சுபா முருகேசனைப் பற்றி அளிக்கும் ஒரு அறிமுக குறிப்பு,

“நம்ம நாய் மணி என்னா நேக்கா அவன புடிச்சிடுச்சிப்பா..” என்று முருகேசன் சொன்னபோது அவன் வலது கை மணியை தடவிக்கொண்டிருந்தது. இடதுகை கியர் போட்டுக்கொண்டிருந்தது.. 

 மேற்கண்ட அனைவருக்கும் உள்ள ஒரு ஒற்றுமை உண்டு. ஒரு கேஸிலும்  இவர்கள் தோற்றதில்லை.

இவர்கள் தவிர இன்னும் இருவர் உண்டு.. கணேஷ் வசந்த்

அனைவரையும் ஒருசேர பார்த்த படம் இரவுக்கு ஆயிரம் கண்கள்




 நாயகன் பெயர. பரத், வில்லன் கணேஷ், நாயகி சிசீலா, முக்கிய கதாபாத்திரங்களின் பெயர்கள் நரேன் வைஜெயந்தி, வசந்த், முருகேசன் என பாக்கெட் நாவல் காலம். ஆனால் கதாபாத்திரங்களின் இயல்புகளுக்கும் இந்த பெயர்களுக்கும் சம்பந்தமில்லை.  சுசீலா பயந்து அழுகிறார்.  கணேஷ் சிசிடிவி இருப்பது கூட தெரியாமல் இருக்கிறார். பென்-ட்ரைவில் முக்கியமான ஃபைலை வத்திருக்கிறார். சுஜாதா உயிரோடு இருந்தப்பவே மேகக் கணினியகம்” நு எழுதிவச்சும் கணேஷுக்கு இந்த நிலமை. வைஜெயந்தி என்ற பெயர் கொண்ட எழுத்தாளருக்கு ரமணி சந்திரன்னே பேர் வச்சு அவருக்கும் ஒரு நன்றி செலுத்திருக்கலாம். வைஜெயந்தியை இப்படி பார்க்கவேண்டிய துர்பாக்கியம் நேர்ந்திருக்காது. அத்தனையையும் மீறி கொஞ்சமும் போரடிக்காமல் படத்தை பார்க்க வைக்கிறது இதன் திரைக்கதையும் திருப்பங்களும்.


நேர்மையான காதல் நேர்மையான துரோகம் நேர்மையான பழிவாங்கல் நேர்மையான காமெடி என இது ஒரு ராஜேஷ்குமார் டைப் சீரியஸ் கதை. ஆனால் பெயர்கள் அனைத்தும் பழைய பாக்கெட்நாவல் சூப்பர் நாவல் காலங்களை ஞாபகப் படுத்திவிட்டன..













Friday, May 25, 2018

தமிழ்ச் சிறுகதையின் பெருவெளி

சமீபத்தில் வெளியான சு.வேணுகோபாலின் தமிழ்ச் சிறுகதையின் பெருவெளி புத்தகத்தைப் பற்றி எழுத்தாளர் கெ.என்.செந்திலின் உரையைக் கேட்டேன். யப்பாடி! எனத்தோன்றியது. அந்த புத்தகத்தை நானும் படித்திருந்தேன்.  சு.வேணுகோபாலின் படைப்புகளையும் இந்த புத்தகத்தையும் மேலும் சில விமர்சன புத்தகங்களையும் படித்திருந்த ஒருவர் கிட்டினால் இது பற்றி விவாதிக்க ஏதுவாக இருக்குமே என நினைத்திருந்தேன். தட்,  ”தமிழார்வமும் இருக்கனும் அதேநேரத்துல அறிவியலும் தெரிஞ்சிருக்கனும்” ரேஞ்சில். ஆனால், மாணவர்களுக்கு மே மாதம் பள்ளியில் விடுமுறை விடுவது போல ஜெயமோகனும் இமைக்கணத்தை முடித்து ஒரு விடுமுறை விட்டிருந்ததால்,  மாணவர்களும் குடும்பத்தினரை பரிவுடன் தாய் வீட்டிற்கு அனுப்பிவிட்டு தன்னை அனுதினமும் சோதித்த இரு விஷயங்களிலிருந்து விலகி  மிகத்தீவிரமாக அலுவலக வேலையை எப்போதும் இந்த அப்ரைசல் நேரத்தில்  செய்வது போல கண்ணும் கருத்துமாக  பார்த்து வந்தனர்.  இரு வெண்முரசு நாவல்களுக்கிடையே யாரோ ஒருவரை ஒரண்டையிழுக்கும் வேலையும் இல்லாததால் சுரேஷ் கூட சேப்பியன் படிக்காமல் டி20 பார்த்தான்.  நிர்மலாதேவியையே மறந்திருந்தனர் மக்கள்.  அந்த விதத்தில் மீண்டும் இலக்கியம் பற்றிப்பேச இந்த உரை நல்ல துவக்கமாக இருந்தது.   நான்கு நாட்களுக்கு வாட்சப் குழுமங்களில் இது பற்றிய ஒரு த்சோ.. த்சோ இருந்துகொண்டிருந்தது. தமிழர்களின் சமகால பிரச்சனைகளிலிருந்து இலக்கியம் பக்கம் திசை திருப்ப ஒரு இலுமினாட்டி கார்பொரேட் செய்யும்   சதி என பாரிசாலனின் பேட்டி வருமென நினைக்குமளவிற்கு போய்விட்டது.  அதற்குப் பிறகு தூத்துக்குடி பிரச்சனை வந்து திண்றடித்துவிட்டது.  இப்போது இது பற்றி எழுதலாம் என நினைக்கும்போது கூட ஸ்டெர்லைட் பிரச்சனை இருக்கறப்போ பிடில் வாசிக்கிறியா என ஷிமோகா ரவி அண்ணன் கண்ணாடியில் மங்கலான பிம்பமாக வந்து கேட்கிறார். ஆனால், சம்பந்தப்பட்டவர்களே பிடில் வாசிக்கும் போது அப்பாவி பொதுஜனமாகிய நான் சம்பந்தமில்லாமல்  கொஞ்சம் எழுதி வைக்கலாம் ! என்ன தவறு எனத் தோன்றுகிறது



சு.வேணுகோபால் கே.என். செந்தில் இருவரையும் ஆண்டிற்கொருமுறை விஷ்ணுபுரம் விருதுவிழாவில் சந்திக்கிறேன். இவர்களில் சு.வே யின் படைப்புகள் கிட்டத்தட்ட  அனைத்தையும் வாசித்திருக்கிறேன். கே.என். செந்திலின் மாறாட்டம் சிறுகதை மட்டும் வாசித்திருக்கிறேன். அரூபநெருப்பு தொகுதியைப்பற்றி எழுத்தாளர். சுரெஷ் ப்ரதீப் கூறியிருக்கிறார். விரைவில் படித்துவிடுவேன். விழாவில் பார்த்த வகையில் மிகத்தீவிரமாக , கறாராக இலக்கியத்தை அணுகுபவர்  என்று சொல்லுவேன். அமிதாப் பச்சன் போல ஒரு கோபக்கார இளைஞன் என்று தோன்றுமளவிற்கு இருப்பார். 

இனி புத்தகத்தைப்பற்றிப் பார்க்கலாம்.  ஒரு நாவலையோ கவிதை தொகுப்பையோ படித்துவிட்டு எழுதுவது போல ஒரு திறனாய்வு நூலைப்பற்றி எழுதிவிடமுடியாது. மனம் போன போக்கில் எல்லாவற்றையும்  எழுத  வேண்டியிருக்கும். ஒவ்வொரு எழுத்தாளர் குறித்தும் தன் மனதிற்குள் தான் கொண்டுள்ள பிம்பத்தை சார்ந்தோ மறுத்தோ எப்படி எழுதப்பட்டிருக்கும்... தனக்குப்பிடித்த கதை இவருக்கும் பிடித்திருக்கிறதா என்ற அளவில் சரி பார்த்துக்கொள்ளலாம். மூத்த எழுத்தாளர்கள் பற்றிய திறனாய்வு தொகுப்புகளில் இதுவரை வந்தவைகளிலிருந்து மாறுபட்டு  முற்றிலும் ஒரு புதிய அனுபவத்தை தரவல்லதாக இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறைவே. சாரு எழுதியிருக்கும் பழுப்புநிற பக்கங்கள் எஸ்ரா எழுதியிருக்கும் கதாவிலாசம் போன்றவை பெருமளவில் வாசகனுக்கு முக்கிய எழுத்தாளர்களை அறிமுகம் செய்கின்றன.  அவைகளை திறனாய்வு என சொல்ல இயலாது. அதிலும் தமிழ்ச் சிறுகதைகள் பற்றிய கதாவிலாசம் தொடர் ஒரு விகடன் வாசகரை  உள்ளிழுக்கும் என்றால், சு.வே. யின் இந்த புத்தகம் வாசகருக்கு விமர்சன ரீதியில் அடுத்த நிலைக்கு தன் வாசிப்பை தொகுத்துக்கொள்ள சரிபார்த்துக்கொள்ள உதவியாக இருக்கும் என்று சொல்லலாம். ஒரு விமர்சன நூல் பற்றி எழுத வேண்டுமெனில் முதலில் அதை எப்படி அணுகுகிறோம் என்பது அவசியமாகிறது. அதற்கு தன்னைக் கொஞ்சம் தொகுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. பற்றிக்கொள்ள ஒரு கொழுகொம்பு தேவைப்படுகிறது. கே.என். செந்திலின் உரையை நான் அப்படித்தான் எடுத்துக்கொண்டு அது சார்ந்த என் புரிதல்களை எழுதலாம் என நினைக்கிறேன்

முதலில் இந்த உரை  சு.வேணூகோபால் முன்பே நிகழ்ந்திருக்கிறது. ஒரு கட்டுரையாக வந்திருந்தால் மறுப்பு தெரிவித்திருக்கலாம்.  விவாதிக்கலாம். ஆனால் நேருக்கு நேராக குறைகளாக அடுக்கும்போது, நாம் செய்த தொண்ணூற்று எட்டு நல்ல விஷயங்கள் ஞாபகமே வராது.. இந்த ரெண்டு குறைகள் மட்டுமே அனைவருக்குமே பெரிதாக நிற்கும் என்பதை ஆண்டிற்கொருமுறை பர்ஃபார்மன்ஸ் ரிவ்யூ மீட்டிங்கில் இதையே  சந்திக்கிறவன் என்கிற வகையில் அடித்து சொல்லமுடியும். அந்த வகையில் சு.வேணுகோபாலின் உடனடி எதிர்வினை வந்திருக்கிறதா எனத் தெரியவில்லை.

கேஎன் செந்தில் இரு குற்றச்சாட்டுக்களை வைக்கிறார்.  அதில் முதலாவது, சுவேணுகோபால் தன் தகுதிக்கு மீறி நிலை நிறுத்தப்படுகிறார் என்பது. இரண்டாவது இந்த புத்தகம் குறித்து,

முதலாவது சற்று அதீதமாகப்போய்விட்டதோ எனத் தோன்றுகிறது. அவர் மகத்தான படைப்பாளி என்று தூக்கிநிறுத்தப்படுவதாக சொல்வது சற்று மிகையாகவே இருக்கிறது. தமிழகத்தில், ஒரு டபரா செட்டுக்குள் நடக்கும் பிரச்சனைதான் இலக்கியவாதிகளின் சச்சரவுகள் என ஆதிகாலந்தொட்டே ஒரு கருத்து நிலவுகிறது . சமீபத்தில், பாலகுமாரன் மறைந்த போது அங்கு டிவி சேனல் ஆட்கள் வந்திருந்தார்கள்.  இறந்த செய்தி வந்து ஒரு மணி நேரம் தாண்டியிருந்தது.  இப்ப வீட்டு ஆளுங்கதான் இருக்காங்க வெளி ஆளுங்க வரல..இனிமதான் சேதி தெரிஞ்சு விஐபிக்கள் வருவார்கள் பேட்டி எடுக்கலாம் வீட்டு ஆளுங்களை வேண்டாம் என்று நிருபர்கள்  சொல்லிக்கொண்டிருந்தனர்.  அங்கு அவர்கள் வீட்டு ஆளாக எண்ணிக்கொண்டிருந்தது அங்கு கூடமாட நின்று கொண்டிருந்த  ஜெயமோகனை. இந்த அளவில்தான் பெரும்பான்மை சமூகம் இருக்கிறது. இந்த நிலையில் இதுவரை சு. வேணுகோபால்,  தான் எழுதியிருக்கும் அளவு கவனிக்கப்படவில்லை என்றுதான் நான் நினைக்கிறேன். இதில் தகுதிக்கு மீறி அவர் கவனிக்கப்படுவதாக சொல்வதை மறு பரிசீலனை செய்யலாம். கே.என். செந்தில் தானும் அனைத்தையும் படித்திருப்பதாக சொல்லித்தான் கூந்தப்பனையை நிராகரிக்கிறார். ஆனால், இப்படி தடாலடி கருத்துக்களால் சில அறிமுக வாசகர்கள் அவரை வாசிக்காமல் போகலாம். ஆனால், ஒரு எழுத்து தனக்கான வாசகனை கண்டடைந்தே தீரும் என்று ஒரு தியரியும் இருப்பதால் அவர் புத்தகங்கள் இன்னும் வாசிக்கப்படக்கூடும் என்றே நம்புகிறேன்.

  அவர் படைப்புகளை வாசித்த வகையில்   சமூகம் வாழ்க்கை மற்றும் குடும்பம் சார்ந்த அலைக்கழிப்பு அவர்  படைப்புகளில் என்னை நெருக்கமாக உள்ளிழுக்கிறது. தொடர்ச்சியான தலைமுறையிலிருந்து மாறி  ஒரு நாட்டிலேயே இடம்மாறி அந்நியமாக வாழும் ஆணின் தடுமாற்றமும் தவளை வாழ்க்கையும்  அதிகம் மெனக்கடாமல் அதன் இயல்பிலேயே இடம்பெறுவதாக அவரின் படைப்புகள் உள்ளன. இதில் இயல்பாகவே  பிறந்தவீடு புகுந்தவீடு என மரபணுக்களில் பழகிவிட்டதால் பெண்களால்  விரைவில் விட்டு விலக முடிகிறது. தீர்க்கமாக முடிவெடுக்கவும் முயல்கிறார்கள். ஆனால் இப்போது இரு தலைமுறைகளாகவே பெரும்பான்மை ஆண்கள் அதற்கு பழகுகிறார்கள். அதனால் அவர்கள் கிருஷ்ணன் போன்ற நபும்சகனாகவோ, பழனி போல குழம்பியவனாகவோ,  இளமையில் தொலைத்ததை 36 வயதில் தேடுபவனாகவோ இருப்பது ஒட்டுமொத்த தற்கால ஆண்களின் குறியீடாகக்கூட புரிந்துகொள்ள முடிகிறது. அது உணரும்போது எனக்கு   பெரும் சோர்வைக்கூட அளித்திருக்கிறது. Ignorance is bliss என்று சொன்னவனை  நானும் அடிக்கடி நினைத்துக்கொள்கிறேன்.  உணர்ச்சிகரமாக இல்லாமல்  யதார்த்தமும் பரிவும் நம்பிக்கையுமாக அவரின் பெரும்பான்மை நாவல்கள் முடிவது  எனக்கும் ஆறுதலாக இருந்த்து. ஆனால், அவர் காமத்தை நன்றாக கையாள்கிறார் என்றும்  விவசாயத்தை எழுதும் எழுத்தாளர் என்றும் முதன்மையாக அடையாளப்படுத்துகிறார்கள். அதை மறுக்கவியலாது என்றபோதும் அவரை வாசிக்கையில் நான் உணர்ந்தது இது.  நானே அவரிடம் என் கருத்தை சொன்னபோது, அவர் பதறி அப்படியெல்லம் இல்லீங்க நான் பெண்களை எழுதிய அளவு ஆண்களை எழுதியதில்லை. வேணும்னா வெளியில விசாரிச்சு பாத்துகங்க என்று சொல்லிவிட்டார்.






இரண்டாவதாக சொல்லிருப்பது இந்த புத்தகம் குறித்து. கேஎன் செந்தில் எழுதியிருக்கும் கட்டுரைகள் மற்றும் உரைகளை கேட்கையில் அவர் கோட்பாடு ரீதியாக நிறைய அறிந்திருக்கிறார் என்பதும் தெளிவாகிறது. நவீனத்துவம் பற்றி இந்த புத்தகத்தில் அவர் குறிப்பிட்டிருப்பதை முதலில் மறுதலிக்கிறார். அந்த சுழலுக்குள் சிக்கி  நவீனத்துவம் என்றால் என்ன என்று ஒரு விளக்கத்தை கூறுவது என்பது மீண்டும் ஒரு கட்டுரையளவு படிக்க வேண்டியிருக்கும். நவீனத்துவத்திலிருந்து நவீனத்துவத்தை எடுத்துவிட்டால் நவீனத்துவமே மிஞ்சும் என்ற உபநிஷத் வரிகளுக்கேற்ப நான் இந்த விஷயத்தை சாய்சில் விடுகிறேன். அதன்பின், அவர் குறிப்பிடும் சில விஷயங்களில் முதன்மையானவை, கூறியது கூறல் கட்டற்ற மொழி நடை இல்லாதவர்களை நிராகரித்தல் மற்றும் தவறான கருத்துக்களைக் கூறல் போன்றவை.  புதுமைப்பித்த்னைப்பற்றி இதுவரை தமிழ் இலக்கியத்தில் கூறப்பட்டவைகளையே இதுவும் கூறுகிறது என்பது உண்மைதான் என நினைக்கிறேன்.  செல்லம்மாள் கதை பற்றி வேதசகாயகுமாரின் விமர்சனம் புதிய வாசிப்புக்கோணத்தை அளித்தது. அதுபோல இதில் ஒரு புதிய அனுபவம் இல்லை. திஜா கட்டுரை பற்றியும் அங்ங்னமே எண்ணத் தோன்றுகிறது. திஜா நாவலில் சாதிக்கவில்லை சிறுகதையில் சாதித்தார் என்பது போல இதிலும் வருகிறது.  கட்டற்ற மொழிநடை இல்லாததால் சுவே அதிகம் விமர்சிப்பது சுந்தரராமசாமி படைப்புக்களைத்தான். கேஎன் செந்திலின் சுந்தரராமசாமி சிறுகதைகள் பற்றிய உரை ஒன்று கேட்டேன். அதைவைத்து பார்க்கையில் இது அவரவர் சுதந்திரம் என்கிற அளவில் விட்டுவிடத்தோன்றுகிறது. சுந்தர ராமசாமியை விமர்சிக்க இருக்கும் நியாயங்கள் போல சுவேயை நிராகரிக்க இவருக்கான காரணங்களும் இருக்கின்றன. அது அவரவர் வழியைப்பொறுத்தது என்றுதான் சொல்லமுடியும். 

சுவேயின் புத்தகத்தில் உள்ள கட்டுரைகள் 2001லிருந்து 2018 வரை எழுதியதன் தொகுப்புகள். இதனால் சில குழப்பங்கள் உள்ளன. உதாரணமாக, அசோகமித்ரனின் சதாபிஷேகத்தை இலக்கிய உலகம் சரியாக கொண்டாடவில்லை என்கிற இடம். இந்த தகவல் பிழையானது என்று சில உதாரணங்களை செந்தில் சொல்கிறார். ஆனால், அந்த கட்டுரை அந்த நிகழ்வுகள் நடப்பதற்கு முன்பு எழுதப்பட்டவை. இப்போது வெளியாகிருக்கின்றன. அசோகமித்திரன் உத்திகளைக் கையாளவில்லை நுட்பங்களைக்கையாளுகிறார் என்று சொல்வதும் அத்தகைய குழப்பத்தை ஏற்படுத்தக்கூடிய வரிகளே. அவர் சொல்லியிருப்பது சிறுகதைகளின் வெவ்வேறு வடிவங்களை என்று நான் புரிந்துகொண்டேன். பிராமண எழுத்தாளர்கள் விலங்குகளைக் குறித்து எழுதுவது பற்றி இவர் சொல்லியிருப்பது 2016ல் ந.பிச்சமூர்த்தி கட்டுரையில்.. ஆனால் அதற்கு முன்னே சி.சு.செல்லப்பா கட்டுரையில் சிலாகித்து எழுதியது 2010ல். இவற்றையெல்லாம் ஆங்காங்கே tag செய்திருக்கலாம். அல்லது பக்கத்தின் கீழே * போட்டு குறிப்பிடலாம். அடுத்த பதிப்பில் திருத்திக்கொள்வார்கள் என நினைகிறேன்.   சுந்தரராமசாமிக்கு நிலத்தை சொல்லத் தெரியவில்லை என்று பொதுவாக சொல்லவில்லை. “மரியா தாமுக்கு எழுதிய கடிதம்” என்கிற கதையை பற்றிய வரி அது. அதற்கு மாற்றாக புளியமரத்தின் கதை நாவலை சொல்வது ஏற்புடையதாக இல்லை. ஜெயகாந்தன் ஒரு சுயம்பு என்று சொல்வது ஒரு flow வில் வந்துவிட்டதைப்போலத்தான் எனக்கும் தோன்றுகிறது. அவரே அந்த கட்டுரையில்  பல இடங்களில், பாரதி சித்த்ர் பாடல்கள் ரஷ்ய இலக்கியங்கள் ஆகியவற்றின் மீதான் ஜெயகாந்தனின் ஈடுபாட்டைச் சொல்லியிருக்கிறார். 

 இந்த இடங்களில்தான் இலக்கியமுன்னோடிகள் புத்தகத்தை ஒப்பிடுவதை தவிர்க்கமுடியவில்லை. இலக்கிய முன்னோடிகள் புத்த்கம் 2003ல் வெளியான தொகுப்பு. குறிப்பாக குபரா பற்றிய பிரம்ம சமாஜத்தின் ஈடுபாடு அதை அப்படிய தமிழுக்கு பொருந்தாமல் காப்பியடித்தது.. திஜா காமத்தை எழுதிய மற்றவர்கள் தொடாத இடங்களை ( காமத்தை எழுதுகிறேன் என்று கிளம்பிய சாருநிவேதிதாவும் நழுவிய இடம் என்று ) எவ்வளவு நேர்மையாக கையாண்டார் என்பதும் புதிய திறப்புக்களாக அமைந்தன. குறிப்பாக சொல்லவேண்டுமெனில், அசோகமித்திரனின் புலிக்கலைஞன் கதை. அதை அசோகமித்திரன் பாராட்டு விழாவில் ஒரு திரைக்கலைஞனனின் பரிதாப வாழ்க்கை என்கிறார் சுரா. அதற்கு பத்தாண்டுகள் கழித்து வந்த கதாவிலாசத்திலும் அதையே சொல்கிறார். ஆனால் அதில் அந்த காதர் ஒரு கணத்தில் புலியாக மாறுவதும் அவன் சொல்லும் தற்குறிப்பிலிருந்து அவன் யாரென அடையாளம் காட்டுவதும் ஒரு புதிய நோக்குதான். அதன்பின் அசோகமித்திரனின் பல கதைகளை வாசிக்க இன்னொரு கோணம் கிடைத்தது. அதுபோல புதிதாக ஒன்றை காண இதில் இடம் இல்லை. மேலும் இது சிறுகதைகளுக்குள் மட்டும் தன்னைக் குறுக்கிக்கொண்டதும் ஒரு காரணமாகலாம்.

கு அழகிரிசாமி மற்றும் கிரா ஆகியேரை இவர் தூக்கிப்பிடிப்பது சாதிப்பற்றால் என்று சொல்லி பின் அங்ஙனம் இல்லை என அறிந்து கேஎன் செந்தில் வருந்தியதாக முகநூலில் நண்பர் எழுதியிருந்தார். ஆனால், ஆதவனை அழகிரிசாமியை அசோகமித்திரனை ஜெயகாந்தனை சுவே ஒரு விமர்சகனாக அணுகவில்லை எனத்தோன்றியது. ஒரு வாசகனாகத்தான் அணுகியிருக்கிறார். அதிலும், கிரா பற்றிய பதிவு,முழுக்க முழுக்க அவரின் அன்பே வெளிப்படுகிறது. அவரின் கோமதிதானே இவரின் பால்கனிகள் கிருஷ்ணனாக வேறு பரிணாமத்தில் வருகிறான்.., அவரின் ”சாவு” கதையில் இறந்தவனின் மனைவி கர்ப்பமாக இருப்பதை வெண்கலதாம்பாளத்தை மூன்று முறை தட்டி அறிவிப்பதைத் தானே ”நிலம் என்னும் நல்லாளில்” குமரனின் மனைவிக்கும் நடக்கிறது என்று நினைத்துக்கொண்டேன்.

இறுதியாக ( அப்பாடா !! ) , இதில்சொல்லியிருக்கும்  சி சு செல்லப்பா, மெளனி ந.பிச்சமூர்த்தி குபரா போன்ற எழுத்தாளர்களை நான் இன்னும் முழுமையாக படிக்கவில்லை. இங்கோ இலக்கிய முன்னோடிகளிலோ உயர்த்தி சொன்னதாலோ தாழ்த்திச் சொன்னதாலோ ஒருவரை நிராகரிக்க முடியாது. முதன்மை எழுத்தாளர்கள் என்பதாலேயே அவர்கள் இந்த புத்தகங்களில் இடம் பெற்றிருக்கிறார்கள்  அவர்களின் பங்களிப்பு ஒருவகையில் மிகவும் முக்கியமானது என்பதை உணர்ந்து தான் ஒருவர் இந்த புத்தகத்தை வாசிக்கத் துவங்குகிறார். அல்லது விமர்சனங்கள் இல்லாவிடில் அவர்களை விட்டுவிடவும் போவதில்லை. திறனாய்வு புத்தகங்கள் தத்தமது வாசிப்பின் எல்லையை சரிபார்க்க ஒரு வாசகருக்கு உதவுகின்றன. ஒட்டு மொத்த பார்வை என்று அனைத்து படைப்புக்களையும் உள்ளடக்கியதாக  ஒரு மேல்நிலை மதிப்பீடாக ( high level ) இல்லாமல் சிறுகதை என்கிற அள்வில் வைத்து ஒவ்வொரு எழுத்தாளரின்  இருபது சிறுகதைகளையாவது குறைந்த பட்சம் பட்டியலிட்டு ஒரு உள்நோக்கிய பார்வையில் மதிப்பிட்டிருகிறார். அந்த வகையில் இது மிக முக்கியமானது எனக் கருதுகிறேன்.  இந்த புத்தகத்தை வெளியிட்டிருக்கும் எழுத்தாளருக்கும் தியாகு நூலகத்தும் நன்றிகள். கேட்டுக்கொண்டதற்கு இணங்க ஊட்டி கூட்ட்த்தின் போது புத்தகத்தை கொண்டுவந்து அளித்த க்விஸ் செந்தில் க்கு ஸ்பெஷல் நன்றிகள்




















x

Monday, May 21, 2018

காவியமுகாம் (அல்லது) ஊரான் பிள்ளைய ஊட்டியில் வளர்த்தல் - 3

தொடர்ச்சி..

ஊட்டி காவிய முகாம் எப்பொழுதும் கம்பராமாயண அரங்கோடு துவங்கும். நாஞ்சில் நாடன் துவக்கிவைப்பார். நான் சென்ற முதல் வருடம் நாஞ்சில் நாடன் வாசிக்க அதை ஜடாயு பாட திருமூலநாதன் ஓத என ரகளையாக இருந்தது. அங்கு சென்றபோதுதான் பெங்களூருவில் ஜடாயு பல வாரங்களாக நடத்திக்கொண்டு வருகிறார் என்பதும் அறிந்தேன். அந்த பாடல்களை கண்ணதாசன் எங்ஙனம் திரைப்பாடல்களாக வைத்தார் என சுரேஷ் வெங்கடாத்ரி பாடுவார். ( அரங்கில் பாடமுடியாது. இரவு தூங்கும் முன் திரையிசைக்கச்சேரி நடக்கும். இறுதியாக ரகு மற்றும் யோகேஸ்வரன் என்னும் ஜெய விஜயர்களால் அது ஒரு முடிவுக்கு வந்தது)

நிற்க! சொல்ல வந்தது அதுவல்ல..


ராமனும் லெட்சுமணனும் கிட்கிந்தையை அடைகிறார்கள், சீதையைக்காணவில்லை, அவளை ராவணன் தூக்கிச்சென்றான் என்று ஜடாயு வழியாக அறிந்திருக்கிறார்கள். ராமன் மிகவும் மனம் பேதலித்து இருக்கும் தருணம். அங்கே லெட்சுமணன் அந்த வனத்தின் அழகு பற்றிக்கூறுகிறான். அந்த வர்ணனை மிக அழகாக முடிந்து அதையெல்லாம் காணுங்கள் என்கிறான். அதற்கு ராமனின் மறுமொழி

“யாழிசை மொழியோடன்றி யான் உறும் இன்பம் என்னோ!!”

எனத் துவங்குகிறது! யாழின் இசையத்தவிர நான் அடையும் இன்பம் வேறு உண்டோ என்கிறான் ராமன்.

“ சீதையின் குரலை சொல்றான் ராமன்” என்றார் நாஞ்சில். என காவிய வாசிப்பின் அடுத்த நிலை இந்த வரியோடுதான் துவங்கியது. அந்த படலம் முழுவதுமே அப்படி ராமனின் பித்துநிலையைத்தான் படிக்க முடியும். சதா அவள் நினைவாகவே இருக்கும் ராமனிடம் சீதையைத்தேடிச்செல்லும் அனுமன் அவளின் அங்க அடையாளங்களைக் கேட்கிறான்.

அதற்கு பித்து பிடித்தார்ப்போல் இருக்கும் ராமனின் பதில்களில் ஒன்று..

வார் ஆழிக் கலசக் கொங்கை வஞ்சிபோல் மருங்குலாள்தன்
தார் ஆழிக் கலை சார் அல்குல் தடங் கடற்கு உவமை-தக்கோய்!-
பார் ஆழி பிடரில் தாங்கும் பாந்தளும், பனி வென்று ஓங்கும்
ஓர் ஆழித் தேரும் ஒவ்வார், உனக்கு நான் உரைப்பது என்னோ?

மேற்கண்ட பாடல் ஆபாசம் என்று சொல்லப்பட்டு கம்பரசம் வந்து கம்பராமாயணத்தை எரிப்பதுவரை போய் நிற்கிறது. ஆனாலும் ஒருத்தன் இதை மீண்டும் பரப்ப வந்தானே என்றார் ஜெயமோகன் இடைவேளையின் போது. அன்றும் அதன் பின்னும் உரையாடியும் கேட்டும் படித்தும் புரிந்துகொண்டதன் சுருக்கம் இது,

பக்தியை எதிர்க்கவும் பகுத்தறிவு வளர்க்கவும் தனக்கு சாதி ரீதியாக  பிரச்சனை பெரிதாக வாராமல் இருக்கவும் ஒரு ஆரிய திராவிட கதைக்கு ஏதுவாக இருப்பதாலும்  ஒரு கல்லில் நாலஞ்சு மாங்காய்கள் அடிக்க கம்பராமாயண எதிர்ப்பை கையிலெடுக்கின்றனர் திராவிட ( முன்னேற்ற ? ) இயக்கத்தினர். மற்ற அனைத்தையும் விட அரசியல் ரீதியாக வேறு எதிலும் கை வைக்கவும் முடியாமல் போக இளைத்தவனாக சிக்கியது கம்பராமாயணம் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. அதில் ஒரு மேடையில் ஆற்றிய உரையில்தான் மேற்கண்ட பாடல் கிண்டலாக சொல்லப்படுகிறது. ( அந்த பேச்சின் பாவனைகளை உங்களிமே விட்டுவிடுகிறேன்..நான் மிமிக்ரி செய்ய விரும்பவில்லை :-) )

அதைக்கேட்டு அதிர்ந்து கம்பனை இழிந்து பேசுவதைக் கேட்கவா நான் இன்னுமுயிரோடு இருக்கிறேன் என தற்கொலை செய்ய முடிவு செய்து பின் அதிலிருந்து மீண்டு காரைக்குடி கம்பன் கழகத்தை அமைத்தவர் சாமிநாத கனேசன் அவர்கள்.  தன்னை கம்பனுக்கு அடியவன் என அறிவித்துக்கொண்டு தொண்டனுக்கு சட்டை இல்லை என சட்டை அணியாமல் இருந்தவர்.    கம்பனடிப்பொடி சா.கணேசன் என்று அழைக்கப்பட்ட கணேசன் அவர்களின் வாழ்க்கை வரலாறும் அதன் பின்னரே கேட்டும் வாசித்தும் அறிந்தேன். வலியது வாழும் என்கிற இயற்கையின் நெறி ஞாபகம் வந்தது.



இந்தளவு மற்ற காவியங்களோ காப்பியங்களோ நம்மை வந்தடையவில்லை என்பதும் உண்மை. சமீபத்தில் அளவை நெறியினர் என்று மீமாம்சகர்களை குறிப்பிடுவது மணிமேகலையிலிருந்து உள்ள பழக்கம் என்பதை வெண்முரசு உரையாடல்கள்களில் படித்தபோது ஆச்சரியமாக இருந்தது. இன்னும் அறியவேண்டிய தமிழ் காவியங்களே இன்னும் எவ்வளவு இருக்கின்றன!!

ஒருமுறை ஜெயமோகன் கூறினார்.. இன்று நாம் பேசும் இந்த தருணத்திலும் உலகில் எங்கோ ஒரிடத்தில் கம்பன் வாசிக்கப்பட்டுக்கொண்டிருப்பான் என்று. நானும் யோசித்துப்பார்க்கிறேன்.. ஊட்டி கம்பராமாயண அரங்கில்தான் அந்த புத்தகத்தை முதலில் கையில் தொட்டுப்பார்க்கிறேன்..எனக்கு இது பள்ளியில் மனப்பாடப்பகுதியாகவும் இருந்ததில்லை. ஆனால் அதற்கு முன்பாகவே  எனக்கு

“தோள் கண்டார் தோளே கண்டார் “

“ அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்”

“ ஆழிசூழ் உலகெலாம் பரதனே ஆள “

” குகனொடு ஐவரானோம்”

”கண்டேன் சீதையை”

“இன்று போய் நாளை வா”

” கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்”

என பாடல்கள் தெரியும். எங்கோ எப்படியோ இவை என் காதில் விழுந்து வைத்திருக்கின்றன.



ஈரோடு புத்தக கண்காட்சியில் நெல்லை கண்ணன், தனக்கு திருமணமான புதிதில் கம்பன் உரையாற்றியே அந்த காலத்திலேயே அஞ்சாயிரம் சம்பாதிப்பேன் என்று கூறினார். ஒரு பக்கம் அதன் நாடகீய தருணங்கள் சொல்லப்பட வாலியை கொன்றது தவறா, அக்கினிப்பிரவேசம் தவறா என விவாதங்கள் எழ பட்டிமன்றங்கள் என பேச  ஒரு வாசகனின் ஆரம்பம் அங்கே நிகழ்கிறது.

ஆனால் அதோடு நிற்கிறது.

இன்றும் யூட்யூபில் கம்பன் பற்றிய உரைகள் கிடைக்கின்றன. அதில், இலங்கை ஜெயராஜ், D.A ஜோசஃப், நெல்லை கண்ணன், அப்துல் ரகுமான், கவிஞர் வாலி , சாலமன் பாப்பையா உள்ளிட்ட பல நட்சத்திரப்பேச்சாளர்களின் உரைகள் கிடைக்கின்றன. ஆனால் அதிலிருந்து அடுத்த கட்டம் நகர நமக்கு நெருங்கி உரையாட அருகில் அமர்த்தி சொல்ல ஆசிரியர்களை தேடிச் செல்லவேண்டும். நண்பர்களாக இணைந்து அதை கொண்டு செல்ல வேண்டும். அதற்கு இன்னும் பெரிய அறிமுகம் மற்றும் கம்பன் பற்றிய  விளக்கம் தேவைப்படுகிறது. அதை நவீன வாசகர்களிடம் கொண்டு சொல்வதை நாஞ்சில் நாடன் அளவிற்கு வேறு ஒருவர் இன்னும் செய்யவில்லை என்று நினைக்கிறேன். ஒவ்வொரு மேடையிலும் கம்பன் புகழ் பாடுகிறார். பிரளயமே வந்து மொத்தம் அழிந்தாலும் தமிழின் மொத்த சொற்களையும் கம்பராமாயணத்தை வைத்து மீட்டுவிடலாம் என்றார் ஒருமுறை.

அவர் தன்னை ஒரு மாணவனாகவே கருதி அங்கே நிற்பது இன்னும் அழகாக இருக்கும். சில இடங்களில் ஜடாயுவிடம் சரியா எனக் கேட்பார். சில இடங்களில் ஜெயமோகன் அதை வேறொரு தளத்தில் வைத்து விளக்குவார். உதாரணமாக,
“எந்தை நீ  யாயும் நீ எம்முன் நீ  தவவந்தனைத் தெய்வம் நீ” என்று விபீஷணன் ராவணனிடம் சொல்லும் பாடல்,  அதை என் தந்தை தாய் முன்னவன் ( அண்ணன்) தெய்வம் நீ,  என உரையில் இருப்பதை நாஞ்சில் சொல்ல, ஜெ.  குறுக்கிட்டு “ முன்” ந்க்கிறது முன்னோரா இருக்க வாய்ப்பு இருக்கு.. என கூறினார். அதை ஒருமுறை படித்துப்பார்த்தவர் தலையாட்டியபடி, சுழித்து குறித்து வைத்துக்கொண்டார்


அங்கே ஒருவன் கற்க இன்னும் நிறையவே உள்ளன

தொடரும்..







Saturday, May 12, 2018

காவியமுகாம் (அல்லது) ஊரான் பிள்ளைய ஊட்டியில் வளர்த்தல் - 2

முந்தையதின் தொடர்ச்சியாகக்கூட வாசிக்கலாம்

கவிதைகள் பிடிபடாதவையாகவே இருக்கும் எப்பொழுதும். அதனால் கவிஞர்களுடன் நான் உரையாடுவதில்லை. ஆனால் யாராவது உரையாடினால் அருகில் நின்று கேட்டுக்கொண்டிருப்பது வழக்கம். அவ்வப்போது ஆமாம் என்று கூட சொல்லி தலையாட்டுவேன்.  நான் ஸ்வாஹா சொல்ல மட்டும்  வந்தவன் என்பது தெரியாமல் நண்பர்கள் கவிதை பற்றி என்னிடம் கருத்தும் கேட்டிருக்கிறார்கள். 


என் நண்பன் நன்றாக கவிதை எழுதுவான். கல்லூரி ( பாலிடெக்னிக்னாலும்)  நாட்களில்  ஆட்டோகிராபில் அனைவருக்கும் கவிதை எழுதித் தருவான். எனக்கு சிறந்த கவிதை எழுதித்தந்தான்..

"வாழ்க்கை ஒரு ஐஸ்கிரீம்..
உருகுவதற்குள் நக்கிவிடு

வாழ்க்கை ஒரு தேநீர்..
ஆறுவதற்குள் உறிந்து விடு..."

ஒவ்வொரு பதார்த்தமாக நான்லீனியராக  தொடர்ந்து அப்பளத்தில்  முடியும் அந்தக் கவிதை

அவன் இப்போது தன் மகளுக்கு பாரதி என்று பெயர்வைத்திருக்கிறான்..

கவிதை என்று நினைப்பவர்கள் மனதில் இப்படி ஒரு தாக்கத்தை முதலில் ஏற்படுத்தியவர் பாரதிதான். படித்தால்,  பெண்சுதந்திரமா, நாட்டுப்பற்றா கண்ணன் பாடல்களா என புரியுமளவு  எளிதான கவிதைகளாக எழுதியிருக்கிறார்.. அதை நம்பி நவீன கவிதைகளை படிக்கத்துவங்கும்போதுதான் உருவகம் குறியீடு படிமம் போன்ற சிக்கல்களில் மாட்டிக்கொள்கிறேன்

கவிஞர் தேவதேவன் அவர்களின் விஷ்ணுபுர விருது ஏற்புரை மிகப்பெரியது. அதைவைத்தே அவரும் ஜெயமோகன் போன்றதொரு உரையாடல்காரர் என எண்ணியிருந்தேன். ஆனால் அவர் மிக அமைதியானவர். அவரை 2015 ஊட்டி கூட்டத்தில் முதலில் சந்தித்தபோது, நண்பர்கள் மூலம் கேள்விப்பட்டிருந்த தம்பான் சுவாமிகள் இவர்தான் என நினைத்து வணங்கி சென்றுவிட்டேன். ஒரு மலரை செடியிலிருந்து பியக்காமல் அப்படியே உள்ளங்கையில் பிடித்து பார்த்துக்கொண்டிருந்தார். அவருடன் நடைபயணத்தில் உரையாடும்போது ( அரங்கில் அவர் உரையாடி பார்த்ததில்லை) கவிதை,கவிஞன் போன்ற நுண்ணுயிர்கள் பற்றி  சற்று உணரமுடியும்.



அவருக்கு ஒரு கவிதை அரங்கு இருக்கும். அவர் பொறுமையாக  இந்த குறியீட கவிதைல திடீர்னு மாத்த  முடியாதுங்கிறத நாம கவனத்தில் வைக்கனும் என்பார். ஜெ. உடனே, அவர் சொல்றது புரியுதா.. கவிதைல சில முக்கியமான விஷயங்களை புரிஞ்சிகனும், குறியீடு உருவகம் படிமம் னனு விஷயங்கள் இருக்கு. படிமம்ங்கிறது அதன் இமேஜ். அது அந்தந்த கவிதைக்குபொதுவானது. ஆனால் குறியீடுங்கிறது வேற. உதாரணமா பாம்புங்கிறது இப்பவரை விழைவைக்குறிக்குது.. அல்லது சாத்தான். அதைதிடீர்னு இந்த கவிதைல பாம்பு தென்னைமரத்துக்கான குறியீடு ன்னு சொல்லக்கூடாது. ஏன்னா அது இவ்வளவு நாள்  நிலைபெற்றுவிட்ட ஒன்று.. இப்படியாக அரைமணி நேரம் போனதும் அரங்கு முடிந்துவிடும். என்னை எங்க பேசவிடறாங்க என தேவதேவன் விரக்தியடைந்த நிலையில் ஒரு இளம் வாசகர் உங்க அரங்கு அருமைசார் என்று சொல்லிவிட்டுப் போவார்.

நாஞ்சிலுக்கு நேரெதிர் என்று இவரைக்குறிப்பிட்டது காரணமாகத்தான்..இங்கே பாரதியின் பேர் அடிபட்டதும் அப்படித்தான்..

இது விஷ்ணுபுரம்விழா சம்பவம், நாஞ்சில் பேசுகிறார்..

சொற்களை அருமையாக கையாளத்தெரிந்தவன்தான் கவிஞன். சொல் இல்லையென்றால் கவிதை இல்லை. பாரதி,

சூதர் மனைகளிலே -- அண்ணே!
தொண்டு மகளிருண்டு.
சூதிற் பணய மென்றே -- அங்கோர்
தொண்டச்சி போவதில்லை

என்கிறான். இதை நாஞ்சில்நாடன்  உணர்ச்சியோடு  உரைக்கக் கேட்க வேண்டும். நல்ல புல்லரிப்பு எழக்கூடும். இதில் எப்படி மலர்களைத்தொடுப்பது போல சொற்களை அமைக்கிறான் பாருங்க.  அவனுக்குப்பின் கவிஞன் யாரும் இல்லை என்று சொன்னபோது கிளர்ந்தெழுந்தார் தேவதேவன். சரி சாதாரணமாக எழுந்தார்.

கவிதை என்பது கவிஞன் உணரும்  தரிசனத்தை அடுத்தவருக்கு கடத்த செய்யும் முயற்சி. அதை அவன் தனக்குள் வைத்துக்கொள்கிறான். பிறகு அடுத்தவருக்கு உரைக்கும்போது அவன் அடைந்ததை முழுமையாக சொல்ல முடியாது. அந்தளவு சொற்கள் எந்த மொழியிலும் இல்லை. அதை அவன் குறிப்பிட்டு சொல்ல முயல்கையில் அந்த கவிஞன் மற்றும் அவன் சொல்லும் இடம் தருணம் போன்ற இடம் பொருள் ஏவல்களையும் கொண்டு அந்த கவிதையை வாசித்து அந்த கவிஞன் அடைந்த தரிசனத்தை வாசகனும் அடைய வேண்டும். ஆகவே அங்கு அதிகம் உழைப்பு தேவைப்படுகிறது.  சொற்களை கட்டும் கவிஞன் மகாகவிஞன் அல்ல. கவிதை என்பது நிகழ வேண்டும். சொல்லப்படக்கூடாது. அங்கே சொற்களைத்தாண்டி ஒன்று வேண்டும். ஆகவே கவிதை என்பது சொல்லில் அல்ல. சொல்லின்மையில் உள்ளது என்றார்.

ஆகவே கவிஞன் மெளனத்தில் சொல்லி அதைவாசகன் மெளனத்தில் உணர்ந்து ஒரு மெளனகுருவாக வாழலாம் நன்றி. என முடித்துக்கொண்டார் நாஞ்சில்.

விசு பட ரேஞ்சில் ஒரு விவாதம் நிகழுமென எதிர்பார்த்து ஏமாந்ததுதான் மிச்சம்

ஆனால் அந்த உரையாடலுக்குப் பின்,  ஒவ்வொரு கவிதை அரங்கிலும்  அந்தகரணவிருத்தி ததாகரணவிருத்தி சப்தகரணவிருத்தி என  வார்த்தைகளைக் கூறிவிட்டு, மாயக்கலை நிபுணர் போல கையை மட்டும் அசைத்துவிட்டு, வேணுவெட்றாயன்  உரை அல்லது  மோனோ ஆக்டிங்  நிகழ்த்திப்போகும் போது ஏவி மணிகண்டன் மட்டுமல்லாது இன்னும் சிலரும் கை   தட்டுகின்றனர்




Thursday, May 10, 2018

காவியமுகாம் (அல்லது) ஊரான் பிள்ளைய ஊட்டியில் வளர்த்தல்

ஊட்டிக்கு மலைகளின் அரசி என்று பெயர் அல்லது இளவரசி...! ஏதோ ஒன்றாக இருக்கட்டும். குருடன் தூங்கினால் என்ன முழித்திருந்தால் என்ன என்பது போலத்தான் நானும்  போகிறேன் வருகிறேன்.

'டால்பின் நோஸ் பாத்தியா?'

' இல்லீங்க நிறைய நோஸ்கட் தான் பார்த்தேன்..'

'சூசைட் பாயண்ட்? '

அது ஒவ்வொரு அமர்வுலயும் உண்டுங்க.. பின்னாலேந்து தள்ளிக்கூட வுடுவாங்க..

எனக்குப்பொதுவாக இருக்கும் பிரச்சனை ஒன்று உண்டு. ஒரு விஷயத்தை சொல்லிக்கொண்டிருக்கும்போதே அதில் உள்ள தவறு தெரிந்துவிடும். உடனே, அது அப்படி இல்ல.. ஆனான்னு சுத்தி நட்ட நடுவில் நிறுத்திவிடுவேன். பேசுவதற்கு முன்னால் அதை தனக்குள் ஒருமுறை பேசிப்பர்க்கவேண்டும் என்று நினைத்து  யோசித்து இருக்கும் அந்த கேப்பில் அதற்கான பதிலை சொல்லியிருப்பார். அது தெரியாமல் நாம் அதையே கேட்க.. வேறென்ன..? சூசைட் பாயிணட் தான். 

திருப்பதி போல ஊட்டிக்கு போக ஒரு வழி வர ஒரு வழி என இல்லை.   அதில் சமதளத்தில் ஓட்டிப்பழகிய இருவரில் ஒருவர் கீழிருந்து மேலாகவும் ஒருவர் மேலிருந்து கீழாகவும் வரும் சமயம் இருவரும் நேராக பார்த்து இது என்ன என அதிர்ச்சியாகி ஸ்தம்பிக்கும்  ஓர் இமைக்கணத்தில் இருவருக்கு பின்னாலும் அனுமார் வாலாக அனைவரும் நின்று ஓய்வடுப்பது ட்ராபிக் ஜாம் என அழைக்கப்படுகிறது. அத்தகைய ஒன்றில் நாஞ்சில் நாடன் மாட்டிக்கொண்டதால் இந்தவருடம் எனது சிறுகதை கலந்துரையாடலுடன் துவங்கியது. செல்வேந்திரன் ஸ்டைலில் சொன்னால் 'நாராயண பலி"

அதன்பின் யுத்தகாண்டம் துவங்கிற்று.
நாஞ்சில் நாடன் அவர்களுக்கு ஒரு குழப்பம் இருக்கிறது. கிராமவாரியாக சுற்றியாயிற்று. மிதவையாய் ஒரு நகரை அடைந்து இன்று பல நாடுகள் சென்று வந்துவிட்டார். பின் கம்பராமாயணம். ஒரு இல் ஒரு வில் ஒரு சொல் என பழகிவிட்டார் போலும்.. பிரச்சனை என்னவெனில் ஒரு சொல்,  அதனால் இவரது will ரொம்ப ill ஆகிவிட்டது. அது ஒரு 'பிள்ளை'த்தமிழ் என சிலேடையாக சொல்லலாம். கடந்த மூன்று வருடங்களாக ஒரே புலம்பல். கடமை முடிந்தது. கிளம்பிவிடுகிறேன் என. போட்டோ எடுக்கையில்,  இப்பவே எடுத்துகங்க..அஞ்சலி எழுத யூஸ் ஆவும்ல என்றார். எனக்கு ஒரே சிரிப்பு. இப்படித்தான் வேலையை விடுவதைப் பற்றி முப்பது வயதுமுதல் அறுபது வயதுவரை பேசிக்கொண்டு இருந்ததாக  ஜெ. தளத்தில் எழுதியிருக்கிறார். 



அவரது கதை ஒன்றில் வாத்தியார் வாலியை அம்போடு விட்டுவிட்டு வகுப்பில் "பலே சில்மிஷம்" செய்த ஒருவனை தலைமை ஆசிரியரிடம் அழைத்துச்சென்றுவிடுவார். வாலி அம்போடு அடுத்த நாள் வகுப்புவரை கிடப்பான். அதுபோல இங்கு இப்போதுதான் விபீஷசனோடு எழுவராகியிருக்காங்க. இன்னும் இன்று போய் நாளைவா.. அக்கினிபரிட்சைல்லாம் இருக்கு. இன்னுமார்  நூறாண்டு கூட  இருக்கவும் சார். 

நாஞ்சில் நாடனின் மோகித்தே பற்றி எப்பவும் மோகித்தே இருந்திருக்கிறேன்.மிதவையில், சதுரங்க குதிரையில் கூட , கூட இருப்பவர்களுடன் அவருக்கு  சில குறைகள் இருந்தன. ஆனால்,  மோகித்தே ஒரு தரிசனம். ஏற்கனவே நாஞ்சில் நாடன் பற்றி நாலு வருசம் முன்னாடி எழுதிய கடிதம் ஜெ. தளத்தில் உள்ளது. அதைப்படித்துவிட்டு வரவங்க வரலாம். பஸ் பத்துநிமிசம் நிக்கும்.

அவரது சில ஆப்த வாக்கியங்களை நான் எப்பவும் நினைப்பதுண்டு. அதில் ஒன்று  "கல்விக்கு மாற்று இல்லை"  என்று விகடன்மேடையில் எழுதிய வரி.  நாஞ்சில் சார் நல்ல உரையாடல்காரர். விஜயா பதிப்பகத்தில் ஷிமோகா ரவிஅண்ணனோடு நானும் உடனிருக்க  நின்றபடியே ஒரு மணி நேரம் அரசு அலுவலகங்கள்   சார்ந்த அனுபவங்கள் பற்றிபேசினார்.  அதன்பிறகு அவரைக்கண்ட  வேலாயுதம் அவர்கள் அவர் அறைக்கு அழைத்துச்சென்று எங்களை அமரவைத்தார். அவர் பணி வாழ்க்கை சுந்தர்ராமசாமி என  நீண்ட உரையாடல்.  நாம் கேட்டால் மட்டும் போதும். நமக்கும் சேர்த்து அவரே பேசிவிடுவார். மீன் வகைகளைப்பற்றி பேசினால், நான் மீன் சாப்படறதில்லீங்க  எனக்கு வகைல்லாம் தேவையில்லைன்னு சொல்லக்கூடாது.  வேங்கை,புலி,சிறுத்தை ன்னு நமக்கும் பல பேரு தெரியும். ஆனா நாம அதெல்லாம் சாப்பிடறதில்லை என்று நீட்டி சொல்லிவிட்டு அடுத்தவரிக்கு போவார். 


அன்றும் இன்றும் பேனாவில்  எழுதும் ஒரு எழுத்தாளர். அவர் நினைவாற்றலுக்கு நிகராக உடலும் ஒத்துழைத்தாலொழிய இது சாத்தியம் இல்லை. தமிழுக்கு புதிய வார்த்தைகளை அருளியுள்ளார். கள்ளமெளனம் என்று இன்று படாதபாடு படும் வார்த்தை அவர் முதலில் உபயோகப்படுத்தியது.  அதுபோல தமிழத்தில் உள்ள அனைத்து சாதியினருக்கும் ஒரு வார்த்தையை அவர் உண்டாக்கி சொல்லிவைக்கலாம். கடமை இருக்கு ஐயா..


இன்றிருக்கும் அரசியல்வாதிகளை எஃப் எம் ரேடியோவில் கூட ஓட்டுகிறார்கள். அதுவல்ல விசயம். முன்னர் ஐயாவும் அம்மாவும் மாறி மாறி ஆண்ட காலத்தில் கூட அதை இலக்கியத்தில் பதிவுசெய்த
 எழுத்தாளர் இவர்தான். சமகாலத்தை எழுதுவது எழுத்தாளர்களுக்கு தேவையில்லை. அது பத்திரிக்கைக்காரன் வேலை என கும்பமுனியால் போகமுடியாது. அவர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள்  என ஒரு அறம் பாடிவிட்டுத்தான் போவார். அது அகஸ்மார்த்தாக அந்த தொடரின் கடைசி கட்டுரையாகிவிட்டதா என்ற கேள்விக்கு இன்றுவரை கள்ளமெளனம்தான் பதில். (ஆனால், ஏவலோடு ஒப்பிட்டால் இதெல்லாம் சீவல்தான்)




ஒரு மொழி எப்படி துலங்கி வருகிறது என்பது பற்றி விளக்குவார். கம்பராமாயணத்தில் யானையை எத்தனை வகையா சொல்றான்.. அம்புக்கு எத்தனை வகை சொல்றான். தென்னை மரத்துக்கு என்ன பேரு என்று சொல்லும்போதே பீகாருக்கு போய்விடுவார். பீகார்ல தென்னை மரம் இல்லை அதனால் அங்க பன்னாடைன்னு திட்டறதும் இல்லை என்று ஒரு பொதுஅறிவு விடை சொல்லிவிட்டு கம்பனுக்கு மீள்வார்.
குறுந்தொகையில், சீவகனில், கம்பனில் உள்ள சொற்களில் அமிழ்ந்தவர். அனைத்தும் சொற்களில் அடக்கம் என்பது அவர் எண்ணம் என நினைக்கிறேன். சொற்களால் ஆனது உலகம் என நம்புபவர். அதானாலேயே சொல் பொறுக்காதவர்..

இவருக்கு நேரெதிராக ஒருவர் வருவார்.  சொல் ஏதும் தேவையில்லை. ஒரு மரத்தடி நிழல் போதும் அவருக்கு..