Tuesday, February 24, 2009

எற்றோமற் றெற்றோ மற்றற்று..

காணி நிலம் வேண்டும் - பராசக்தி 
காணி நிலம் வேண்டும், - அங்கு 
தூணில் அழகியதாய் - நன்மாடங்கள் 
துய்ய நிறத்தினதாய் - அந்தக் 
காணி நிலத்தினிடையே - ஓர்மாளிகை 
கட்டித் தரவேண்டும் - அங்கு 
கேணியருகினிலே - தென்னைமரம் 
கீற்று மிளநீரும். 

பத்துப் பன்னிரண்டு - தென்னைமரம் 
பக்கத்திலே வேணும் - நல்ல 
முத்துச் சுடர்போலே - நிலாவொளி 
முன்பு வரவேணும், அங்கு 
கத்துங் குயிலோசை - சற்றே வந்து 
காதிற் படவேணும், - என்றன் 
சித்தம் மகிழ்ந்திடவே - நன்றாயிளந் 
தென்றல் வரவேணும்.
 


பாரதி இன்னைக்குஇந்த பாடலை பாடினால் அவனை ஒரு பேராசைக்காரன் என்று முத்திரை குத்திடுவேன். பரவாயில்லை....அவன் பகல் கனவு காண்றவன் தானே என்று மன்னிச்சும் விடுவேன்...அது என் அப்போதைய மனநிலையை பொருத்து இருக்கும்.

இன்றைக்கு பாரதியின் ஆசையை நான் நிறைவேற்றிக்கொள்ள நினைச்சா 1 கோடி தேவைப்படும். இந்த கோடி,  நிலத்தை வாங்கி தென்னை நட்டாலே சரியாப்பூடுமே......மாளிகை கட்டணும்னா இன்னொரு கோடி அட்லீஸ்ட் 70 லட்சம் ( டபுள் பெட்ரூம் ட்யூப்லெக்ஸ் போதும்).

இந்த 2 கோடியும் நான் யாருக்கு த்ரணும்? நா...ப்பது பர்செண்ட் நாட்டுக்கு...வெறும் அறுவது புரோக்கருக்காம்...அதுவும் காசா தரணும்...காசோலை நாட் அக்செப்டெட். அந்த காசை அவர் என்ன பண்ணுவாரு? அவரும் காசாத்தானே செலவழிக்கணும்..யானைக்கு அல்வா வாங்கியது பூனைக்கு ஹக்கீஸ் வாங்கியது என செலவாகும். புரியலையா? பணப்புழக்கம்பா...இப்படியே சென்னையில் மட்டும் புழங்கிய பணம் எவ்வளவு இருக்கும் என சென்னையில் இருக்கும் வீடுகளை பார்த்து கணக்கு போட்டால்...ஆஹா.....கோடானு கோடி அதில் குளிப்போம் விளையாடி....

குழந்தை வளர்ந்து பெரிசானதும் வெளிநாட்டிற்கு அனுப்பி படிக்க வைக்கணும்...நல்லா கல்யானம் பண்ணணும்...கவலையே இல்லை...ஒரு ப்ளாட்டை வாங்கி போட்டாச்சு...இப்போ 3 லட்சம் 20 வருஷம் கழிச்சு...அப்படியே 20 இல்லை 30 டைம்ஸ்...

அரசாங்கத்துக் இது தெரியாதா? 

அது எப்படி தெரியும்...??கண் முன்னாடியே கண்ணுல மண்னை தூவிட்டே பக்கத்து மாநிலங்களுக்கெல்லாம் லாரியிலே அள்ளிட்ட்டு போறாங்க...அதுவே தெரியல . இது எப்படி தெரியும்...

அட...அந்த மக்களோட கஷ்டம் தெரியாம பேசறீயே கோவாலு...அவிங்க் ஊர்ல ஆறு வத்தவே வத்தாது அப்புறம் எப்படி மண்ணு அள்ளறது? இங்கேதான் ஆத்துல தண்ணி ஓடலையே ..லாரியும் டிராக்டரும் மாட்டு வண்டியும் ஓடுது... 

அது சரி... அப்புறம் மண்னு இல்லாம எப்படி வூடு கட்டறது ....சாப்ட் பார்க்கும்...மல்டிப்லெக்ஸும் கட்டுறது...? 
 
எற்றோமற் றெற்றோ மற்றற்று...

என்னப்பா சொல்றே...

என்ன செய்வது...என்ன செய்வது...என்ன செய்வது -ன்னு அர்த்தம்...

யாரு சொன்னா...சும்மா உளறாதப்பா...

வெண்பாவிரு காலிற் கல்லானை வெள்ளோலை
காண்பார்க்க கையா லெழுதானை பெண்பாவி
பெற்றாளே பெற்றாள் பிறர் நகைக்க பெற்றாளே
எற்றோமற் றெற்றொ மற்றெற்று..

இது ஓளவையார் பாட்டுன்னு காத்துவழி சேதி ஒண்ணு ....

பாட்டுல இருக்குற சப்ஜெக்ட் வேற...கடைசி வரி மட்டும் எல்லாத்துக்கும் பொருந்தும்...




Wednesday, February 11, 2009

நான் கடவுள்

நான் கடவுள் படத்திற்கு சில விமர்சனமும் அந்த விமர்சனங்களுக்கு பல விமர்சனங்களும் வலையுலகில் இன்னும் வந்து கொண்டே இருக்கின்றன. படத்தை பற்றி நான் எதுவும் சொல்லப்போவதில்லை என்று சொல்லியே மூன்று பதிவுகளை ஜெயமோகனும் அவரது வலை தளத்தில் இட்டிருக்கிறார்.

என் பங்கிற்கு நானும்...

எப்பொழுதும் சராசரிக்கும் கீழான விளிம்புநிலை மக்களையே சுற்றி படம் எடுக்கும் பாலா, இந்தமுறையும் அதே.... உடல் ஊனமுற்றவர்கள், பிச்சைக்காரர்கள் அவர்களை வைத்து பணம் சம்பாதிக்கும் வில்லன் மற்றும் வில்லனைக்கொல்லும் அகோரி சாமியார் ஆகியவர்களை சேர்க்கும் திரைக்கதையில் நான் கடவுள். மக்களிடம் பரிதாப உணர்ச்சியை ஏற்படுத்த பிச்சைக்க்காரர்களை ஊனமாக்கும் அந்த வில்லன் பாத்திரம் உக்கிரம் என்றால் அவரது அசிஸ்டெண்ட் முருகன் ( சார்..இந்த அட்ரஸ் எங்க இருக்குன்னு கொஞ்சம் சொல்றீங்களான்னு வடிவேலுவை கலாய்ப்பாரே அவர்தான்), முருகனின் அசிஸ்டெண்ட்டாக வரும் திருநங்கை ஆகியோர் மனதை நெகிழ வைக்கும் பாத்திரங்கள். ஊனமுற்றவர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்குள் எவ்வளவு அந்நியோன்னியமாக இருக்கிறார்கள் என்பதும் இந்த படத்தை பார்த்தால் புரிகிறது. அதிலும் நண்டு சிண்டுவும் ஆசானாக வரும் கவிஞர் விக்கிரமாத்தித்தனும் அவரது கையிலிருக்கும் குருவி என்கிற குழந்தையும் கீச்சு குரலில் பேசுபவரும் மனதில் நிற்கிறார்கள் ( ஆஹா...எல்லோரையும் சொல்லிடுவேன் போலிருக்கே...). பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் அய்யனே பாடலும் ( மது பாலகிருஷ்ணாவிற்கு சிந்து பைரவி ஜேசுதாஸ் குரல்), தன் தாயிடம் ஆர்யா சொல்லும் நாலு வரி பாட்டும் ( ஐந்திரண்டு திங்களாய் நின்று போன தூமையே கையிரண்டு காலிரண்டு கண்ணிரண்டு ஆனதே...) இசையை மீறீ மனதில் பதிந்தன. ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் பாலா எப்படி கண்டு பிடிக்கிறார் என்பது ஆச்சரியம். அதிலும் ஆர்யாவின் அப்பாவ்வாக வருபவர் தன் கண்களிலேயே சொல்லிவிடுகிறார். ஆர்யா நரமாமிசம் சாப்பிடுபவர் என்பதை காட்சியாகவோ வசனமாகவோ காட்டவேயில்லை. அகோரி சாமியார் என்று சொல்கிறார் மற்றதை நாமே புரிந்து கொள்ளவேண்டும் போலிருக்கிறது. ஆர்யாவின் அறிமுக காட்சியிலிருந்து கிளைமாக்ஸ் வரை அவர் பேசும் வசனம் பத்து வரிதான் இருக்கும். ஆனால் அவர் உடலும் கண்களும் நன்றாக பேசுகின்றன. அலட்சியமும், உக்கிரமும் துள்ளலும் அவருக்கு நன்றாகவே வருகின்றது. பூஜாவும் பட்டையை கிளப்பியிருக்கிரார். ( இவருக்கு விருது கிடைக்கலாம் என பத்திரிக்கைகளில் செய்திகள் வர ஆரம்பித்திருக்கின்றன).  
வசனம் ஜெயமோகன். அவரின் ஏழாம் உலகம் நாவலே அவருக்கு கை கொடுத்திருக்கிறது. நீiதி மன்ற காட்சியில் உள்ள ஏளனம் அவரது நகைச்சுவைக்கு ஒரு உதாரணம். ஏழாம் உலகம் நாவலில் வரும் முதலாளி பாத்திரம் இந்த படத்தில் வரும் முதலாளி தாண்டவனை விட மிகவும் வக்கிரமானதாக இருக்கும். இந்த பட வில்லன் நார்மல் தமிழ் பட வில்லன் தான். இவரை ஆர்யா அடித்து கொல்லும் காட்சி சடாரென ஆரம்பிக்கிறது. கொஞ்சம் நந்தாவில் வரும் முதல் சண்டைகாட்சி போல  ஒரு பில்டப்புடன் ஆரம்பித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் நம் எதிர்பார்ப்பே அவர் எதிர்பாராத முறையில் படமெடுப்பார் என்பதுதான்.

படம் பிடித்திருக்கிறதா இல்லையா என்று கேட்டால் பிடித்திருக்கிறது என்று சொல்வேன். நன்றாக இருக்குமா ஓடுமா என்பவை எனக்கு தேவையில்லாதவை.

Monday, January 19, 2009

புத்தக கண்காட்சியில் சில மணி நேரங்கள்..


சென்ற ஞாயிறு புத்தக கண்காட்சிக்கு சென்றிருந்தேன். அதற்குமுன் அதன் தொடக்க நாளின் கடைசி கால் மணி நேரத்திற்கு முன் சென்று கடை மூடப்போன உயிர்மையிடம் கெஞ்சி சுஜாதாவின் சிறுகதைகள் தொகுப்பு இரணடை காசு கொடுத்து வான்ங்கினேன்...( பணக்கஷ்டம்பா...நேரமாகிவிட்டதால் கிரெடிட கார்டை அப்போ ஏற்றுக்கொள்ளவில்லை..) வீட்டில் உள்ளவர்கள் சுஜாதா ரசிகர்கள் என்பதால் ஊருக்கு போகும் முன் அவசர அவசரமாக வாங்க நேர்ந்தது.
மீண்டும் முந்தாநாள் சென்றபோது மாலை 4 மணி. முகப்பில் தமிழக முற்போக்கு எழுதாளர்கள் சங்கம் சார்பாக குறுபடங்கள் திரையிடல் நடைபெற்றது. கோபாலய்யங்காரின் மணைவி ( புதுமைப்பித்தன் கதை...), அரவாணிகள் பற்றிய படம், மிஸ்டர் பர்பெக்ட், என் பெயர் பாலாறு ஆகிய படங்களை பார்த்தேன். சென்ற ஆண்டு கலைஞரின் புகைப்படங்கள் மட்டும் அங்கு இருந்தன. இந்த ஆண்டு தமுஎச விற்கு ஒதுக்கியது பாராட்டத்தக்கது. 
வெளிப்புற மேடையில் மணிமேகலை பிரசுரம் சார்பாக 31 புத்தகங்கள் வெளியிட்டுக்கொண்டிருந்தனர். 31 புது எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தினார் லேனா. நல்ல செய்தி. மேடையில் அறிந்த முகங்களென்றால் லேனாவைத்தவிர்த்து கவிஞர்.தமிழச்சி ( இந்த பேர்தான் பிடிக்கலை...மற்றபடி இவர் கவிதைகள் பிடிக்கும் என்று சாரு சொன்னார் ஒரு மேடையில்), விஜிபி சந்தோஷம் ( இவரும் 31-ல் ஒருவர் என பிறகு தெரிந்தது.), இயக்குநர் சேரன். தவிர நடிகை சினேகா மேடையில் பேசிக்கொண்டுந்தார். ( நன்றாகவே தமிழ் பேசுகிறார்.நடுவில் ஆங்கிலம் அவ்வ்வளவாக இல்லை..) . மற்ற விருந்தினரெல்லாம் பேசி தமிழச்சியும் சேரனும் பேச ஆரம்பிக்க ஒரு மணிநேரமாகும் என புரிந்ததால்...புத்தக கண்காட்சிக்கு உள்ளே சென்றேன். இந்தமுறை எனது இலக்கு யாமம்( எஸ்.ராமக்ருஷ்னன்)மற்றும் 0டிகிரி ( சாரு நிவேதிதா) கணையாழி கடைசி பக்கங்கள் ( சுஜாதா---ரெக்கமெண்டெட் பை சாரு நிவேதிதா). 
மீண்டும் உயிர்மைக்கு சென்றேன்..அங்கு மனுஷ்யபுத்திரன் இருந்தார். அவருடன் அறிமுகப்படுத்திக்கொண்டபின் யாமம்,கணையாழியை கண்டெடுத்தேன்...ஸீரோடிகிரி கிடைக்கவில்லை...ஒருவேளை வேறு பதிப்பகமோ என நினைத்த போது சாரு நிவேதிதா அங்கு வந்தார். அவரை கண்டவுடன் ஒரு படபடப்பு...அவர் கதைகளை படித்ததாலோ அல்லது அவரைப்பற்றி கேள்விப்பட்டதாலோ இருக்கலாம். தயக்கத்துடன் சென்று அறிமுகப்படுத்திக்கொண்டேன்.
சார்...நான் உங்க நீண்டநாள் வாசகன்...( கடந்த ஒரு வருஷம்தான்...)
அப்படியா சந்தோஷம்...என்ன புக் வாங்கறீங்க...
”ஸீரோ டிகிரி ...”
அவர் கிட்டத்தட்ட முறைப்பது போல தொன்றியது. ஸீரோ டிகிரி படிக்காமல் எப்படி வாச்கனானேன் என் யோசித்திருப்பார் போல...
அப்புறம் அவ்ரே அங்கிருந்த் இரண்டே இரண்டு ஸீரோ டிகிரியை காண்பித்து ஒன்றை எடுத்துக்கொடுத்தார். 
அவர் இணையத்ளத்தை படிப்பதையும்., மற்ற புத்தகங்களை படித்ததையும் சொன்னேன். ராசலீலா படித்துவிட்டு அதன்பின் ஸீரோடிகிரி படிக்க சொல்லி என் நண்பர்கள் சொன்னதை அவரிடம் சொன்னபோது சற்றே ஹெஹ்ஹே என சிரித்தார்.
ராஸலீலா ஓசியில் வாங்கி படித்ததை சொல்லாமல் அவரிடம் ஸிரோடிகிரியில் ஒரு ஆட்டொகிராப் (தமிழனின் பண்பாடுங்க)வாங்கிக்கொண்டு மற்ற ஸ்டால்களை நோக்கி நகர்ந்தேன். சும்மா சுற்றிபார்த்துவிட்டு வெளியே வந்தபோது விஜிபி சந்தோஷம் பேசிக்கொண்டிருந்தார். அருகிலிருப்பவரிடம் விசாரித்தபோது தமிழச்சி பேசி முடித்துவிட்டாரென்றார். ( ஆஹா...நல்ல ஸ்பீச் மிஸ் ஆயிடுச்சே என வருத்தம்)
விஜிபி சந்தோஷம் தான் எழுதிய புத்தகத்திலிருந்து ஒரு கவிதையை வாசித்தார். 
( அதாவது உரைநடையின் ஒரு வரியை இரண்டுதடவை வாசித்தார்). அதற்குப்பின் நன்றியுரையும் முடிந்து கடைசியில் ஏகப்பட்ட பிலடப்பில் சேரன் பேச அழைக்கப்பட்டார். அவர் பேசும்போது தனது பள்ளி நாட்களில் இலக்கியம் படிக்க முடியாமல் போனதற்கு இந்த கல்வி முறைதான் காரணம் என சாடினார். அவரது திரைப்படங்களைப்போலவே அவரது உரையும் உணர்ச்சிமயமாக இருந்தது. அவர் ஒரு நல்ல கலைஞன் நல்ல இயக்குநர் மற்றும் பேச்சாளர் என புரிந்தது.

அதன் பின் மீண்டும் தமுஎச அரங்கிற்கு சென்றேன். அங்கு தமுஎச செயலாளர் உரையாற்றிக்கொண்டிருந்தார் அதுவும் நன்றியுரைதான் என புரிந்து அங்கிருந்து கிளம்பினேன். குறும்பட திரையிடலை தவர விட்டது வருத்தமளித்தது. தினமும் வந்திருக்கலாம் என தோன்றியது.

Friday, January 16, 2009

பத்திரிக்கைகள் படித்து.... மனசு கெட்டுப்போய்...

பல நாட்களுக்குப்பிறகு நேற்று குமுதம் வெப்சைட் பார்த்தேன். ஓ பக்கங்களுக்காகவும் தீராநதிக்காகவுமே குமுதம் வலைதளம் சென்று வந்திருந்தேன்.  அதன் தனிச்சிறப்பான  ஒரு பக்க கதைகளும் மிகவும் பிடிக்கும். ஆனால் நேற்று அது எதுவுமே படிக்கவில்லை. இரு நடிகனின் கதை மட்டுமே படித்தேன். கல்லூரி நாட்களில் விடுதியில் படித்த சரோஜாதேவி மற்றும் வாலிப விருந்து கதைகளை மீண்டும் படிப்பது போல ஒரு எண்ணம். விற்பனையை அதிகரிக்க இது மாதிரியான காரியங்களில் இறங்குகிறார்கள். அதை படித்ததும் ஆரம்பத்தில் ஒரு நடிகையை பற்றி கற்பனை வந்தாலும் பிறகு வருத்தமே மிஞ்சியது...இந்த இழவிற்கு பதிலாக அறிந்தும் அறியாமலுமே ஞாநியை எழுத வைத்தால் நன்றாக இருக்கும்

பாவம் நம் நடிகர்கள்...காவிரியானாலும் நெய்வேலியானாலும் ஈழமானாலும் முதலில் அவர்கள் தலையை உருட்டுவதே பத்திரிக்கைகள் வேலையாகிவிட்டது. இப்பொழுது அவர்களின் அந்தரங்க வாழ்க்கையையும் போட்டு ( கற்பனை என்றாலும்) விற்பனையாக போகிறது. என்னத்தான் நடிகனின் கதை என்கிற தலைப்பு  இருந்தாலும் அது நடிகைகளை பற்றி மட்டுமே படம் வரைந்து பாகங்களை குறிக்கப்போகிறது என்பது முதல் பத்தியை பார்த்தபோதே புரிந்தது. பின்னே நடிகனின் திறந்த மேனியை பார்க்கவா தமிழ் கூறும் நல்லுலகம் காத்திருக்கிறது??

அலுவலகத்தில் தெரியாத்தன்மாக இதை படிக்கப்போய் கூட இருந்த மேனேஜர் நான் வேலை நேரத்தில் சீன் கதை படிப்பதாக நினைத்து என் நெட் கனெக்‌ஷனை கட் செய்து விட்டார். 

உள்ளதும் போச்சுடா நொல்லைக்கண்ணா....

Thursday, January 15, 2009

எனது முதல் பதிவு

முதல் பதிவு இன்றைக்கு போட்டுள்ளேன்...
ஒருவழியாக ப்ளாக் ஆரம்பித்துவிட்ட மனநிறைவோடு.