இலக்கியத்தின் முக்கிய பயன் என்பது அதன் வாயிலாக ஒத்த கருத்து உடைய ஒரு நண்பர் குழுவைப் பெறுதலும் அங்கு நடக்கும் விவாதங்களும்தான். இலக்கியம் என்கிற மட்டில் ஒத்த கருத்து என்றாலும் அதற்குள்ளும் சிந்தனையளவில் பெரும் வேறுபாடுகள் இருக்கும். ஒரே கருத்துக்குள் இருந்தாலும் அதில் உருவாகும் நுண்ணிய சிந்தனை வேறுபாடுகளே பெரும் பூசலில் சென்று முடியும். வைணவர்கள் ஒரே கடவுள் வழிபாட்டுக் கொள்கை கொண்டிருந்தாலும் கடவுள் நம்மைக் நினைத்துக் கொண்டிருப்பாரா கடவுளை நாம் நினைத்துக்கொண்டிருக்க வேண்டுமா என்ற கேள்வியாலேயே பெரும் பிரிவாகிப் போன வடகலை தென்கலை பேதத்தை சொல்லலாம். உலக அளவில் புராட்டஸ்டண்ட் கத்தோலிக்கத்தை சொல்லலாம். இலக்கியத்திலும் கூட இவ்வாறு நிகழும். விவாதங்களில் அவை பூசலைக் கொண்டு வந்து ஒரு கட்டத்தில் நட்பைப் பேண வேண்டி விவாதமே செய்யாமல் இருக்கலாம் என்று தோன்றிவிடும். அதுபோன்ற தருணங்களைக் கடக்க நண்பர்குழுவினைத் தாண்டி, எந்தளவு முரண்பட்டாலும் புண்பட்டாலும் மீண்டும் பேசலாம் என்கிற அளவில் நெருங்கிய தோழமைகள் ஒன்றிரண்டு அவசியம். நாமே காயப்பட்டுக்கொண்டு நாமே பெட்டாடைனும் தடவிக்கொள்ளலாம். சிலநேரங்களில் நாம் முன்பு கூறியது நிரூபணமாகலாம் அல்லது நம் கணிப்பு தவறாகப் போகலாம். அனைத்து தயக்கங்களைத் தாண்டி அதை விவாதிக்க இத்தகைய நெருங்கிய தோழமைகள் அவசியம். வெண்முரசு வாயிலாக இத்தகைய வாசிப்புக் குழுவின் நட்பு கிடைத்தது போல, மேற்கண்ட நெருங்கிய தோழமைகளும் எனக்குக் கிடைத்தன. அபுனைவு சார்ந்து என் கருத்துக்களில் பெரும் பாதிப்பு செலுத்தியவன் சுரேஷ்பாபு. அதுபோல என் வெண்முரசு வாசிப்பில் அருணாசலத்தின் பங்கு மிக முக்கியமானது. வெண்முரசு குறித்து உரையாடாமல் எங்களுக்கு ஒருநாள்கூட கழிந்ததில்லை. இது ஒரு மிகை கூற்றும் அல்ல.
என்னுடைய வெண்முரசு சார்ந்த பதிவுகளில் வெண்முரசு வாசிப்பு மற்றும் கலந்துரையாடல்களுக்கு இணையான பங்கு எங்களுக்குள்ளான தனிப்பட்ட உரையாடலுக்கும் உண்டு. ஆகவே நண்பர்களே! நான் இங்கு சொல்ல வருவது, என் பதிவில் எழுத்துப் பிழை தவிர வேறு பிழை கண்டால் அதில் அவனுக்கும் மறைமுகப் பங்கு உண்டு என்பதே.
இ) மரணமில்லாதவனின் மழு
வெண்முரசில் இளையயாதவனுக்கு முன் பரசுராமர் இப்படி சத்ரிய அந்தஸ்து கொடுப்பதை நெறியாகக் கொண்டிருந்தார் என்றும் அவர் குறித்து அடுத்த பதிவு எழுதலாம் என்றும் சென்ற பதிவு எழுதுகையில் தோன்றியது. பரசுராமர் பெயர் எனக்கு சொல் பழகும் முன்பே என் மனதில் குடியேறிய ஒன்று. எங்கள் வீட்டில் வழக்கமாக,
குழந்தைகளுக்கு வாராவாராம் எண்ணைய் தேய்த்து குளிப்பாட்டுகையில் தலையில் முதல்கை எண்ணெய் வைப்பத்ற்கு முன், அந்த எண்ணையை சுட்டு விரலால் தொட்டு இடது தொடையில் ஏழு புள்ளிகளாக வைப்பார்கள். ஒவ்வொரு புள்ளி வைக்கும்போதும் ஒவ்வொரு பெயர் சொல்லப்படும். அஸ்வத்தாம ஆஞ்சநேய மகாபலி விபீஷண பரசுராம வியாச கிருபர் என்று ஏழு பெயர்கள். ஆகவே இது ’அம்மா இங்கே வா வா’ போல நாவில் சொல்லெழும் முன்பே மனதில் பதிந்த வரிதான். இதில் கிருபருக்கு பதிலாக மார்க்கண்டேயன்,
துருவன் என்று ஆளாளுக்கு மாறிச் சொல்வதுண்டு. என் மகன் மகாபலிக்குப் பதிலாக பாகுபலியை சொல்வதுண்டு. பெண்
குழந்தைகளுக்கு தாரை மண்டோதரி உள்ளிட்ட வரிசை சொல்லப்படும். இதில் வரும் ஆண்கள் புராணத்தில் வரும் சிரஞ்சீவிகள் வரிசை, பெண்கள் புராணத்தால் போற்றப்படும் பத்தினிகள் வரிசை.
வெண்முசு இந்த ஏழு சிரஞ்சீவிகளுக்கும் எழு குணங்களை துவக்கத்திலேயே சொல்கிறது. முறையே பாவம், பக்தி, கொடை, நம்பிக்கை, வீரம், கற்பனை, குரோதம் ஆகிய ஏழு குணங்கள். முதல் அத்தியாயத்திலேயே வீரத்துக்காக பரசுராமர் சிரஞ்சீவியாக இருக்கிறார் என்கிற தகவல் வந்துவிடுகிறது. கடவுளின் அவதாரங்களில் சிரஞ்சீவியாக இருப்பவர் அவர்தான். பரசுராமரின் வீரம் நாம் அறியாததல்ல. கோடரியால் அத்தனை சத்ரியர்களையும் கொன்றொழித்தவர். இருபத்தியோரு முறை சுற்றிவந்து ஆயிரக் கணக்கில் இருந்த சத்ரியர்களை தேடித்தேடி அழித்தவர். அவர் அழித்தவர்களில் எஞ்சிய ஒரு துளி மீண்டும் திரண்டு உருவானதுதான் மஹாபாரத கால ஐம்பத்தியாறு சத்ரிய குடிகள். சத்ரியர்களை கொன்று அழிக்க வேண்டிய நோக்கம் என்ன என்பது முக்கிய கேள்வி. ஆயிரக்கணக்கில் இருக்கும் குழுவினர் ஒருவரோடு ஒருவர் மோதிக்கொள்வது என்பது நிரந்தர அமைதியின்மையை உருவாக்கும். அந்த குறுங்குழுக்கள் அழிந்தால், அவர்கள் மீண்டும் தோன்றும் போது ஒன்றிணைந்து பெருங்குழுவாக உருவாகும். பின் அவை பேரரசாக ஆகும்.
அதன் பின் போர்கள் இராது. அமைதி நிலவும் என்பது இதன் பொருள். ஒரு உரையில் ஜெ கூறிய உதாரணத்தை உங்கு குறிப்பிடலாம். திருச்சியும் முசிறியும் தனித்தனி அரசுகளாக இருந்து போர் செய்த காலத்தை விட பிற்காலத்தில் அவை இணைந்து உருவான சோழராஜ்ஜியத்தில் நிலவிய அமைதி என்பது பெரியது. பேரரசுகள் சேர சோழ பாண்டியர்களாக மோதிக் கொண்ட காலத்தை விட இன்றைய
ஒன்றிணைந்த தமிழ்நாடு அமைதியானதுதான்.
