Wednesday, May 12, 2021

நீ சரி பண்ணி வாழ்ந்த




வங்கித் தபாலின் முகவரி பகுதி போல கரும் சுருளுக்குள் முகம் மட்டும் பளீரிடுகிறது

கரிய போர்வைக்குள்ளிருந்து முகம் மட்டும் காட்டி தூங்கும் ஒரு  பெரிய குழந்தையின் முகம் போலவும் 

ஸ்ட்ரெக்சரை நிதானமா இழுங்க என்கிறார் ஆம்ஸ்ட்ராங் உடையணிந்த தகனமேடை பணியாளர் 

'ஹ்க்கும்! நிதானம்' என மோவாயை தோள்பட்டையில் இடித்துக்கொள்கிறாய்

ஏன்? நிதானமாதான் இழுக்கறேன் என்கிறேன்

சும்மா கதைவுடாதடா
நான் பாத்துண்டுதான் இருந்தேன்
ஆத்தை வுட்டு வெளிய வந்தவுடனே சிகரெட் வாங்கலாமான்னு கடகாரன் கிட்ட வரைக்கும் போய்ட்டு  பைக்ல போனா போலீஸ் புடிக்குதான்னு ஒப்புக்கு கேட்ட

ரெண்டு பேரு போன் பண்ணிணா..
 அப்படியே ஹெல்மேட்ல போன வுட்டுண்டு பேசற
அப்பறந்தான் வண்டிய நிறுத்தற
திரும்ப வண்டிய எடுக்கறப்போ
சைட்ஸ்டாண்ட எடுக்கல
எவனோ திட்னப்போ அவன்கிட்ட சாரின்னு சொல்லிட்டு ஸ்டாண்ட் எடுக்குற

இருந்தாலும் அது மேனர்ஸ் இல்லையா என்கிறேன்


எப்பேலேந்து சொல்லிண்டிருக்கேன் பதறாம இருடான்னு...
ரெண்டு கொழந்தைங்க ஆயிடுத்து
இன்னும் ஆத்த விட்டு வெளீல வந்தா புக்காத்துக்கு வந்த புதுப்பொண்ணு  மாதிரியே மலங்க மலங்க முழிக்கிற

எல்லாம் சரியாகிடும் சித்தி என்கிறேன்

ஆமாம்..நீ சரி பண்ணி வாழ்ந்த.. என இருகைகளால் என் முகத்தை வழித்து திருஷ்டி கழிக்கிறாய்

சிமெண்ட் தரையில் கடகடவென ஏறுகிறது ஸ்ட்ரெக்சர்

என் கொழந்தைக்கு எவ்ளோ திருஷ்டி பாத்தேளா என்கிறாய் சுற்றிவரப் பெருமையாய் பார்த்து

Friday, May 7, 2021

இடைவெளிகளை நிரப்பும் எழுத்து

எழுத்தாளர் வாசு முருகவேல் அவர்களின் நாவல்கள் குறித்து எழுதிய கட்டுரை, அகழ் இணைய இதழில் வெளியானது 

 



வாசு முருகவேலின் நான்கு புத்தகங்கள் வெளியாகியுள்ளன. அதில் ஒன்று அவர் ‘ஈழத்தமிழில்’ எழுதிய ‘ஜெப்னா பேக்கரி’ நாவலின்  ‘தமிழகத் தமிழ்’ பதிப்பு. இரண்டாம் பதிப்பு இவ்வாறு திருத்தி வெளியிடப்பட்டிருக்கிறது. அதை மொழிபெயர்ப்பு என்று சொல்ல முடியாது. அந்த அளவு நமது மொழிப்புலமையின் நிலைமை இன்னும் மோசமாகிவிடவில்லை. அவ்விரண்டினையும் ஒரே நாவல் என்று கொண்டால் மொத்தம் மூன்று நாவல்கள் வெளியாகியுள்ளன.


 ஜெப்னா பேக்கரி 


நம் தலைமுறையில்  நேராகக் கண்ட, அதில் தனக்கான சார்பு நிலை கொண்ட போரில் ஒன்று தமிழீழ விடுதலைப்போர். இதில் விடுதலைப் புலிகள்ஆதரவு / எதிர்ப்பு என இரு மனநிலைகள் இங்கு உருவாயின. அவற்றில் புலிகளுக்கு ஆதரவான மனநிலையில் இருப்பவரிடம் எதிர்த்தரப்பினரால்  இரு கேள்விகள் தவறாது கேட்கப்படும். அதில் ஒன்று முன்னாள் இந்தியப் பிரதமர் படுகொலை செய்யப்பட நிகழ்வு. அதைச் சற்றே பெருமிதத்துடன் எதிர் கொள்பவர்கள்கூட அடுத்த கேள்வியான ‘யாழ் வெளியேற்றம்’ பற்றி கேள்வி வந்தால் சற்றுப் பெருமிதம் குலைந்துதான் போவார்கள். அந்த அளவிற்கு ஒரு கரும்புள்ளி அந்த நிகழ்வு.


கடற்கரை ஓரமாக வேறு வேலையாக நடந்துபோகிறவர்கள் சற்று நின்று, கடலில் கால் நனைத்துப் போகலாம் என்று அலையில் ஆடிச் செல்வதுண்டு. அதுபோல யுத்தத்தில் யாரும் தலையைக் கொடுத்துவிட்டு வருவோம் என்று தானாகப் போய் கொடுக்கப் போவதில்லை. அது இதிகாச யுத்தமானாலும் நிகழ்கால யுத்தமானாலும் அதில் ஈடுபட ஒரு  ‘மறுகேள்வி கேட்காத” அர்ப்பணிப்புத் தேவையாகிறது. முழு அர்ப்பணிப்பு இல்லாமல் வெறுமனே சென்று மடிய யாரும் விரும்புவதில்லை.


இந்த விஸ்வாசம் அனைத்துத் தரப்பிற்கும்தான் இருக்கிறது. சொல்லப்போனால் போர் அதனால்தான் எழுகிறது.  ஆனால்  முழுமுதற் விஸ்வாசம் என்பது மூர்க்கமான ஒன்று. அது எதிர்த் தரப்பின் நியாயங்களைக் கருத்தில் கொள்வதில்லை.   ‘ஸ்ரீலங்கா இஸ்லாமியர்கள் காங்கிரஸ்’ உருவானதும், அதைத் தொடர்ந்து ஒருவேளை தமிழீழ தனி அரசு அமைத்தால் அதில் இஸ்லாமியர்கள் சிறுபான்மையாக ஆவார்கள் என்று கருத்து உருவானதும், ஆகவே இருதரப்பிலும் பதற்றம் உண்டானதும், அதில் சிங்கள அரசு குளிர் காய்ந்ததும், இறுதியாக ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான இஸ்லாமிய மக்கள் சொந்த நாட்டிலேயே வீடு, நிலம், பொருள் ஆகியவற்றை இழந்து அகதியாக இடம் மாறியதும், இன்றுவரை அவர்களில் பெரும்பாலானோர் தங்கள் சொந்தமண்ணை மிதிக்காமல் உள்நாட்டிலேயே வேறு வேறு இடங்களில் வாழ்கிறார்கள் என்பதும்,  அவர்களில் 90% பேர் இன்னும் தன் ஊருக்கு வராமலே வெளியேதான் வாழ்க்கையை அமைத்துக்கொண்டிருக்கின்றனர் என்பதும் இந்த யாழ்  வெளியேற்றத்தின் விளைவு. இது குறித்த தகவல்கள் விக்கிபீடியா உள்ளிட்ட தளங்களில் கிடைக்கின்றன.  சிங்கள திரைப்பட இயக்குநர் பிரசன்ன விதானகேயின் ’august sun’ படம் இஸ்லாமிய வெளியேற்றம் குறித்துப் பதிவு செய்த முக்கியமான படைப்பு. மௌலானா முஹாஜித் எழுதிய ‘முஸ்லிம்கள் படுகொலை’ புத்தகமும் அச்சம்பவத்தின் ஒட்டுமொத்த அரசியல் பின்னணியைக் கூறுகிறது. இவை இரண்டிலும் யாழ் வெளியேற்றம் மையம் அல்ல. ஆனால் அன்றைய சூழ்நிலையை அறிய உதவக்கூடும்.


இந்தப் பின்னணியின் சூழலில்தான் வாசு முருகவேல் தனது  முதல் நாவலான ஜாப்னா பேக்கரியை  எழுதுகிறார். இதில்   அரசியல் ரீதியாக ஆளும் சிங்கள அரசு தவிர்த்து இரு தரப்புகள் உள்ளன. ஒன்று, ஈழத்தில் சிறுபான்மையினராகக் கருத்தப்பட்டு உரிமை மறுக்கப்பட்டுப் போராடும் தமிழர்கள். இரண்டாவது தமிழர்களில் தாம் சிறுபான்மையாகக் ஆகிவிடுவோமோ என அச்சத்தில் வாழும் சில இஸ்லாமியர்கள். இவர்களுக்கிடையே எந்த முடிவும் எடுக்கவியலாமல் கால ஓட்டத்தின்படி வாழும் இருதரப்பு அப்பாவியான மக்கள்.  இவர்கள்தான் பெரும்பான்மையினர்.


வாசுமுருகவேல் நடை இயல்பாகவே சுருங்கக் கூறும் வகையினைச் சார்ந்தது.  றஜீவன், அரைமண்டை போன்ற மனிதர்களை அறிமுகப்படுத்தவோ அவர்களின் சிந்தனைப் போக்கை உணர்த்தவோ பெரும்  வர்ணனைகளை எடுத்துக்கொள்வதில்லை. அஜ்மல் தனது தந்தைமீது வெறுப்புடன் வளர்ந்தவன்.  அன்று  தன் தந்தையின் மரணித்த உடல் கிடத்தப்பட்டிருப்பதைப் பார்க்கிறான். எப்பொழுதும் அதிரடியாகச் செயல்படும் நபர்  அடக்கமாக இருப்பதைப் பார்த்து “எப்பேர்ப்பட்ட ஒரு அனுபவத்தை இழக்கப் பார்த்திருக்கிறோம்’ என்று கருதி நிற்பதாகக் குறிப்பிடுகிறார். அந்த இடத்தை மெல்ல வர்ணிக்கத் துவங்குகிறார். மரண வீட்டில் சோகத்தை உண்டாக்குவதற்கே ஆட்கள் தேவைப்பட்டனர். அதுவே பெரிய சோகம் என்று சொல்லியபடி செல்கிறது நாவல். இந்தக் கச்சித  வர்ணனை சில சொற்களிலேயே அந்த இல்லத்தின் நிலை, அவர்களுக்குள் இருந்த உறவுச் சிக்கல் என எல்லாவற்றையும் காட்டிவிடுகிறது


ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன் நிகழ்ந்த இராமாயண மஹாபாரதப்  போர்களை உருவாக்கிய நிர்பந்தமும் அதில் பல உட்குழுவிற்கு இருந்த அறமின்மையும் தற்காலத்தில் உரைக்கப்பட்டால்கூட அது சார்ந்து சர்ச்சைகள் உருவாக்கி வருகின்றன. அந்தக் காலத்தில் நாம் வெற்றியாக / தோல்வியாக  கண்ட ஒன்றினை  விமர்சித்து தற்காலத்தில் எழுதினால் கூட சித்தாந்த ரீதியில் பல இடர்களைக் களைய வேண்டியிருக்கிறது. அடையாளங்களைச் சுமக்க வேண்டியிருக்கிறது. அப்படியிருக்கையில் நிகழ்கால யுத்தத்தின் கூறுகளை எழுதும் ஒருவர் இன்னும் கவனமாக இருக்க வேண்டியுள்ளது. கதையோட்டத்தில் புலிகளின் தரப்பா இஸ்லாமியர்களின் தரப்பா எது சரியானது என்கிற கேள்விக்கோ தீர்ப்பிற்கோ கதாசிரியர் சொல்லவில்லை. ஆனால் சின்னஞ்சிறுவர் முதல் அனைவருக்கும் அந்த பேக்கரிமீது ஒரு ஒவ்வாமை உருவானது, கசப்பாக மாறியது ஆகியவற்றை அரவிந்தன் என்ற சிறுவனின் உடல்மொழி வாயிலாகப் புரிந்துகொள்ள முடிகிறது.  அதேபோல நசீர் தன்னுடைய ரேடியோ உடைபடும் தருணத்தில் அழுகையை நிறுத்தி வெறித்துப் பார்ப்பது மற்றோர் உதாரணம். அதை நேர்த்தியாக் கையாண்டிருக்கிறார். எப்படியானாலும் நாம் யார் தரப்பில் நிற்கிறோம் என்பது கூர்ந்து கவனிக்கப்படும்.  நம் சாய்வு யார் தரப்பில் இருக்கிறது என்பது நாவலில் வெளிப்பட வேண்டும் என்கிற எதிர்பார்ப்பும் இருக்கும்.  அவ்விதத்தில்  உணர்ச்சிக்கு அப்பாற்பட்டு நின்று சுருங்கக் கூறும் இவரது நடை  அதைத் தவிர்த்துச் சம்பவங்களைத் தொகுத்துக்கொள்ள உதவுகிறது.  மகாபாரதத்தில் துரியோதனன் சார்பாகப் பேசலாம். அதற்காக வாரணாவத்தை  நியாயப்படுத்தக் கூடாது அதுதான் அடிப்படை அறம். அந்தப் புரிந்துணர்வு நாவலாசிரியருக்கும் இருக்கிறது. நாவல், அந்தச் சூழல் குறித்த ஊகங்களையும் கிசுகிசுப் பாணியில்  சொல்லிச் செல்கிறது. மேலும் ஆசிரியர் சொல்வதையெல்லாம் அப்படியே ஏற்றுக்கொள்ள  இலக்கிய வாசகர்  ஆறாம் வகுப்பு மாணவர் அல்லர். அந்த வகையில் சூழலை  எவ்வாறு உள்வாங்கிக் கொள்கிறோம் என்பதில் வாசகரின் பங்கும் உள்ளது. வாசகரின் மனச்சாய்வும்  உள்ளது.  


ஒருபுறம் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம், மறுபுறம் மதரீதியாக அதை அணுகிப் போராட்டத்தைக் குழப்பிவிடும் ஆளும் அரசின் சாணக்கியம். மறுபுறம் இதனால் அல்லாடும் சாமானியர்கள். இதைப் புரிந்துகொள்ள முடிந்தாலும், இதற்கிடையே, இதைப் பேசித் தீர்க்க நிகழ்ந்த முயற்சிகள் என்னென்ன என்பதை ஆசிரியர் விளக்கியிருக்கலாம். ஏன் வலுக்கட்டாயமாக இந்த உடனடி வெளியேற்றம் நிகழ்ந்தது என்பதை இன்னும் விளக்கமாகப் புனைவில் பொருத்திப் பார்த்திருக்கலாம்.    


ஒருசில இயக்கத்தினர் செய்த தவறுக்கு ஒட்டுமொத்தத் தமிழினத்தையும் அழிக்கத் துணியலாமா என்ற கேள்வி ஸ்ரீலங்கா அரசை நோக்கிக் கேட்கப்படும். அந்தக் கேள்வியையே இறுதியில் இயக்கத்தினரை நோக்கிக் கேட்கத் தூண்டுகிறது நாவலின் இறுதி அத்தியாயம்.. ஒருசிலரின் செயல்பாடுகள் மீதான ஐயத்திலா இத்தனை மக்களை வெளியேற்றினீர்? அவர்களிடம் வழிப்பறியும் செய்தீர்? பலரின் உள்ளே இருந்த குழந்தைமையைப் போட்டு உடைத்தீர்? என்ற கேள்வியை எழுப்பிய வண்ணம் நிறைவடைகிறது நாவல்.






கலாதீபம் லொட்ஜ்


முந்தைய நாவலான ’ஜப்னா பேக்கரி’யில் ஒரு வரி வரும், ” ’’சிநேகிதம்கூட பிரச்சனையாக மாறும் துயரம் யாருக்கும் நிகழக் கூடாது” என.. இந்த இரண்டாம் நாவல் ’கலாதீபம் லொட்ஜி’ன் மையமாக இருப்பது அந்தப் புள்ளிதான்.


ஒரு போராளிப் பெண்ணுடன் இருமுறை பேசிய இளைஞன், ஏதும் அறியாத  அப்பாவி மனநிலை கொண்டவன்.   போலீசின் சித்திரவதைக்   கூடங்களில் சிக்கிச் சிதறிப்போகும் அவனது  வாழ்க்கை. ஒருவர் ஈழத்திலிருந்து கிளம்பி அகதியாகவோ அல்லது உறவினரைச் சந்திக்கவோ அயல்நாட்டிற்குச் சென்றுசேர்வது என்பதிலுள்ள சிக்கல்களைக் களமாகக் கொண்ட நாவல், அதிகம் சொல்லப்படாத கொழும்பு நகர்ப்புற வாழ்வைச் சொல்லிப் போகிறது. மலையகம், ஈழம் சார்ந்த கதைகளைப் படித்திருந்தாலும் நகர்ப்புற வாழ்வின் அச்சங்களும்  நம்பிக்கைகளும் கொண்ட நாவல் இது. அயல்நாடு செல்லும் வழியில் கொழும்பில் லாட்ஜில் தங்க நேரிடும் குடும்பமும் அவர்களைச் சுற்றியுள்ள பாத்திரங்களின் அலைச்சலும் சொல்லப்படுகிறது.


அயல்நாடு செல்பவர்கள் தங்கியிருக்கும் லாட்ஜின் அறைக்கு எப்பொழுது  வேண்டுமானாலும் உறவினரிடமிருந்து  அழைப்பு வரலாம். அதை வந்து சொல்வதற்கென ஒருவர் இருக்கிறார். அவரிடம் நலம் விசாரிக்காமல் யாரும் செல்வதில்லை. அது ஒரு கிரக உறவுபோல.  கிரஹாம்பெல் உறவு என்றும் சொல்லலாம் என்று அறிமுகப்படுத்தும் சரளமான நடை இதிலும் உண்டு.


ஈழத்தில் அரசியல் கடசிகள், அரசாங்க அதிகாரிகளின் லஞ்ச  லாவண்யங்கள், சிறுநீர் சோதனையில் நோய் இல்லை எனக்காட்ட  நிகழும் தில்லுமுல்லு என அனைத்தையும் முந்தைய நாவல் போலவே சுருங்கச் சொல்லியே விளக்கிவிடுகிறார்.  தலைநகரம்,  எல்லா தலைநகரம்போல மொழி இனம் குறித்த பாகுபாடு ஏதும் இன்றித்தான் இருக்கிறது. சந்திரனிடம் பழக்கமாகும் அபயசேகர  ஒரு பரிமாணத்தைக் காட்டினால், சிங்களவர்களே பரவாயில்லை என்கிற அளவில் தமிழர்களிடம் கறாராக நடந்துகொள்ளும் தமிழர் மங்கையற்கரசி மற்றோரு பரிமாணம்.  வெளிநாடு போகும் வழியில்  லாட்ஜில் தங்கியிருக்கும் தாரிணி, கொழும்புஆன்ரீ ( ஆண்ட்டி) யின் மகனைக் கண்டதேயில்லை. அவன் சிறையில் இருக்கிறான். அவள் அறிந்ததெல்லாம் அவன் அம்மாவுடனான உரையாடல் வழிதான். இறுதியில் தன மகனைக் காணச்செல்லும் அம்மாவிடம் அவனுக்கான காதல் கடிதத்தைக் கொடுத்து அனுப்பிவிட்டுத் தன் தந்தை, தம்பியுடன் வெளிநாடு கிளம்புகிறாள் தாரிணி. மண்ணை விட்டு விலகிச் செல்லும் மனிதர்களுக்கு அந்த மண்ணின் மீதான பற்றும் அதற்காகப் போராடும் மனிதர்கள் மீதான அன்பும் நாவலில் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கவை.


புத்திரன்


மண்ணை விட்டு விலகிச் செல்லும் மனிதர்களுக்கு அந்த மண்ணின் மீதான பற்று முந்தைய நாவலில் சொல்லப்பட்டதுபோல தன் மக்களைப் பிரிந்த தாய்மண்ணின் ஏக்கம்தான் புத்திரன் நாவல். சுந்தரி என்பது அழகானவள் என்ற பொருள் கொண்டது. நாவலின் நாயகி பெயர் அது. அதை அந்த மண்ணிற்கான குறியீடாகவும் கொள்ளலாம். 


கொரோனா காலத்தில் அனைவரும் தன் சொந்த ஊருக்குத் திரும்ப, புலம்பெயர்  வாழ்வில் அங்கு செல்லமுடியாத   ஏக்கத்தை எழுத்து வழியாக ஆசிரியர் தீர்த்துக்கொண்ட நாவல் எனலாம். மூன்று நாவல்களில் அதிகம் உணர்ச்சிவசப்படும் தருணங்கள் கொண்ட  நாவலாகவும் இது உள்ளது. தன் சிறுபிராயத்தை அசைபோடும் நினைவுகள் நிறைந்த சில நாவல்கள் ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்தவர்களால் எழுதப்பட்டுள்ளது. இது அந்த வரிசையில் சென்று அமர்கிறது.


நயினாதீவு மக்களின் வாழ்க்கையும் இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் கிடந்து அல்லாடும் வாழ்க்கையும் உரைக்கப்படுகிறது. ஒருவிதத்தில் முந்தைய நாவல்களில் உள்ள ‘தள்ளி நின்று பார்க்கும்’ தன்மையை விட்டுவிட்டு நம்மையும் உணர்ச்சிக்குள் இழுத்துவிடுகிறது எழுத்து. அதனாலேயே கதாசிரியரின் மற்ற இரு நாவல்களிலிருந்து வேறுபட்டிருக்கிறது . வாசு முருகவேலின் படைப்புலகில் நுழைய விரும்புபவர்கள் இதிலிருந்து துவங்கலாம். 


மூன்று நாவல்களிலும் பொதுவாக இருப்பது எள்ளல் நிறைந்த நடையும் ஏனைய ஈழ நாவல்களில்  அதிகம் உரைக்கப்படாத இடங்களைத் தொட்டு் நிரப்பும் உள்ளடக்கமும் ஆகும். அல்லது அதிக முக்கியத்துவம் இல்லாதுபோன இடங்களை நோக்கி ஒளியைப் பாய்ச்சுதல் என்றும்  சொல்லலாம். புத்திரன் நாவலில் திருவெம்பாவை சொல்ல அந்த முழுக் கிராமமும்  தயாராவது ஒரு குறிப்பிடத்தக்க இளம்பிராய  நிகழ்வு. நாஸ்டால்ஜியா என்பது நல்ல வாழ்க்கை வாழ்ந்தவருக்கே சுகமான ஒன்று. அகதியாக அலைக்கழிக்கப்பட்டவருக்கு அல்ல என்பதும் உண்மை.  முதலில் மனுஷன் போனான். பின் மகன் போனான். கடைசியாக மண்ணும் போய்விட்டது என்று ஒருத்தி காரி உமிழ்வாள். அனைத்தையும் செரித்துக்கொண்ட மண் அதையும் செரித்துக்கொண்டது என்ற வரி முதல் நாவலில் ஒரு வர்ணனையில் வரும். அந்த வாழ்க்கை பாரத்தை எளிய விவரிப்பின் மூலம் கடத்துகின்றன இவரது நாவல்கள். பொதுவாக குழந்தைகளே முக்கிய கதாபாத்திரமாகவும், சம்பவங்கள் குழந்தைகளின் சிறார்களின் பார்வையிலும் உரைக்கப்படுவது இவர் நாவலின் முக்கிய அம்சம். ஈழ அரசியல், சமூக அவலங்களைப் பொறுத்தமட்டில் தமிழக மக்களின் புரிந்துணர்வு ஒரு குழந்தைக்கு இணையானதுதான். இந்த நாவல்களில் வரும் குழந்தைகளின் உள்ளம், அங்கு நிகழும் சம்பவங்களைக் கண்டு  மெல்ல முதிர்ச்சி அடைவதைப் போலவே சில புரிதல்களை நோக்கி வாசகர்களை இவை செலுத்துகின்றன.  எங்கோ பிறந்து உள்நாட்டிலோ அயல்நாட்டிலோ அலைக்கழிக்கப்படும் மக்களின் வாழ்வை அனைத்து ஈழ எழுத்தாளர்களும் உரைத்துள்ளனர். அவை எதையும் வாசிக்காதவர்கள் வாசு முருகவேலிடமிருந்து துவங்கலாம்.  அவை அனைத்தையும் வாசித்தோர் அந்தப் பெரும் பயணத்தில் சொல்லாமல் விட்டுப்போன  இடைவெளிகளை வாசு முருகவேலின் வழியாக அறிந்துகொள்ளலாம்.

ஆள்தலும் அளத்தலும்: செல்லும் தூரத்தை சுட்டும் சாதனை

ஆள்தலும் அளத்தலும் சிறுகதை தொகுப்பு குறித்து  அருணாசலம் மகாராஜன் வல்லினம் இதழில் எழுதிய மதிப்புரை:-




ஆள்தலும் அளத்தலும்: செல்லும் தூரத்தை சுட்டும் சாதனை 

    “அந்தக் கணம் என்றுமே என் நினைவில் இருந்து மறையாது… ஒரு கணத்திலேயே அது என்னவென்று புரிந்தது… ஆனால் அந்த ஒரு கணத்துக்குள் அது ஆயிரம் வடிவம் காட்டியது. முதலில் ஊரின் மச்சு வீட்டு வாசலில் இருந்த கரும் திண்ணையின் நினைவு வந்தது. பின் ஊர்க்காவல் பெரியாச்சி அம்மனின் விரித்த சடை ஞாபகம் வந்தது. ஒரு பெரும் அங்காளம்… அல்லது பெரும் பத்தாயம்… ஒருநாள் இரவில் கண்ட கோரை ஆறு… கார்மேகம்… அல்லது காரிருள்… அல்லது ஏதுமற்ற வெறுமை… அமாவாசை இரவு… சூனியம்பாங்களே அது இதுதானா… நட்சத்திரங்களாய் கண்கள்… எல்லாம் அறிந்தவன் போலப் புன்னகை.”


நண்பரும், தீவிர இலக்கிய வாசகருமான காளிபிரசாத் என்னுள் எழுத்தாளராக நுழைந்தது இவ்வரிகள் ஊடாகத்தான். ஒரு எழுத்தாளரின் மிகப் பெரிய சவால் என்பதே சொல்லாக மாற்ற இயலாத கணங்களை வாக்கியமாக்கி, அதன் பின்னும் அக்கணம் தந்த உணர்வுநிலையை வாசகனிடம் குன்றாமல், குறையாமல் கடத்துவதே. ஜெயமோகன் காவிய ஆசிரியராகவும், தல்ஸ்தோய், தஸ்தாவேஸ்கி துவங்கி நாஞ்சில்நாடன் போன்றோர் ஏன் பேரிலக்கியவாதிகளாகவும் (மாஸ்டர்ஸ்) கொண்டாடப் படுகிறார்கள் என்றால் அவர்கள் இச்சவாலை அநாயாசமாகக் கடந்தவர்கள் என்பதாலும் தான். ஒவ்வொரு எழுத்தாளரும் தனக்குத் தானே இலக்கிட்டு, எட்டி, கடந்து, புது இலக்கு உருவாக்கி, அதையும் கடந்து என ஆடும் ஆடலின் முக்கியமான சவால் இது. ஏனெனில் எழுத்தின் ஊர்தியான மொழியின் மேல் ஒரு எழுத்தாளனின் ஆளுமை இரண்டறக் கலக்கும் இடம் இது. ஒரு எழுத்தாளன் தன்னளவில் முழுமையாகும் முதல் படி என்பது அவனுக்கே உரித்தான ஒரு மொழிபை, தன் அகத்தில் ஓடும் மொழிக்கு மிக அருகில் இருக்கும்படியான ஒரு மொழிபைக் கண்டடைவதே. அகமொழிக்கும், வெளிப்பாட்டு மொழிபுக்குமான இடைவெளி குறையக் குறைய எழுத்தாளன் இலக்கியவாதியாகவும், பேரிலக்கியவாதியாகவும், காவிய ஆசிரியனாகவும் மலர முடியும்.


முதல் தொகுப்பிலேயே ஒரு எழுத்தாளரிடம் இதை எதிர்பார்ப்பது என்பது சற்று அதீதம் தான். ஆனால் அதை நோக்கிய பயணம் அந்த எழுத்தாளருக்குச் சாத்தியமா என்பதை முதல் தொகுப்பு காட்டிக் கொடுத்துவிடும். அவ்வகையில் காளிபிரசாத்தின் மேற்கண்ட வரிகள் அவர் அச்சவாலை ஏற்கக் கூடியவர்தான் என்பதற்கு கட்டியம் கூறுகின்றன. மிகச் சரியாகத் தொகுப்பின் தலைமைக் கதையாக அவர் தேர்ந்தெடுத்த ‘ஆள்தலும் அளத்தலும்’ கதையில் தான் இவ்வரிகள் வருகின்றன. சந்தேகமே இல்லாமல் இலக்கியமாகும் தகுதி கொண்ட கதை தான் அது.


பெரும்பாலும் மீண்டும் மீண்டும் கேட்கப்படும் ஒரு கேள்வி எதை வைத்து ஒரு கதை இலக்கியமென்றும், அல்லவென்றும் ஆகிறது என்பது. உண்மையில் இது ஒரு அடிப்படையான கேள்வி. பொதுவாக எந்தவொரு அடிப்படையான கேள்விக்கான பதிலைப் போல இதன் பதிலும் மிக எளிமையானதே. ஒரு படைப்பு, சிறுகதை, கவிதை, நாவல் என எந்த வடிவமாகக் இருந்தாலும், வாழ்க்கையைப் பேசும் என்றால் அது இலக்கியம். மிக நேரடியான, எளிமையான பதில். எப்படி ஒரு படைப்பில் வாழ்க்கை இருக்கிறது என்பதை அறியலாம்? அதற்கு நீங்கள் வாசகராக வேண்டும். வாசிக்கையில் அதில் எழுந்து வரும் தருணங்களில், அதன் உணர்வு நிலைகளில் உங்களால் ஈடுபடமுடிந்தால் அப்படைப்பில் வாழ்க்கை இருக்கிறது. அது நீங்கள் அறிந்த வாழ்க்கையாகத் தான் இருக்க வேண்டும் என்பதல்ல. முற்றிலும் புதிய நிலத்தின், புதிய வாழ்வாகக் கூட இருக்கலாம். ஆனால் அது மெய்யான சித்திரத்தைத் தருகிறதா அல்லது பொதுவில் சமைக்கப்பட்டிருக்கும் கருத்துநிலைகளில் இருந்து உருவாக்கி எடுக்கப்பட்ட ஒரு கற்பனையை முன்வைக்கிறதா என்பதில் இருக்கிறது இந்த வேறுபாடு. எப்படி இந்த வேறுபாட்டை அறிவது? அதற்கு வாசகராக நீங்கள் உங்கள் உள்ளுணர்வையும், நுண்ணுணர்வையும் தான் நம்ப வேண்டும். இலக்கிய விமர்சனங்கள், பரிந்துரைகள் ஓரெல்லை வரை உதவும். அதுவும் துவக்க நிலை வாசகர்களுக்கு மட்டுமே. அதன் பிறகு வாசகன் என்பவனும் தனியனே, எழுத்தாளனைப் போலவே!


வெறுமனே வாழ்வை மட்டுமே பேசுபவற்றை மெல்லிலக்கியம் என வரையறுக்கலாம். அவை பேசும் வாழ்வு மெய்யானதாக இருப்பதால் மட்டுமே அவை இத்தகுதியை அடைகின்றன. ஆனால் அது இலக்கியத்தின் வெளியில்தான் இருக்கிறது என்பதை வாசகர்கள் மறந்துவிடக் கூடாது. அப்படிப் பார்த்தால் இத்தொகுப்பின் அனைத்துக் கதைகளிலுமே வாழ்க்கை என்பது இருக்கிறது. பெரும்பாலான வாசகர்களுக்கு அறிமுகம் இல்லாத மின்னியல் தொழிலாளர்களின் வாழ்வு. பழனி, திருவண்ணாமலை, கரி, மதிப்பு, பராசக்தி போன்ற கதைகள். அப்படி ஒரு புதிய களத்தைத் தேர்ந்தெடுத்ததே இக்கதைகளுக்கு ஒரு வாசிக்கும் ஆர்வத்தைத் தந்துவிடுகின்றன. எனது வாசிப்பில் ‘மதிப்பு’ கதையே இவற்றில் சிறப்பானது. உண்மையில் தலைப்பால் மட்டுமே இக்கதை தன் உச்சத்தை வாசகருக்குக் கடத்துகிறது. அதை விட முக்கியம் இக்கதை யாருடைய தரப்பையும் எடுக்கவில்லை. நல்ல சிறுகதைக்கான படைப்பமைதி கூடிய கதை இது. மாறாக ‘கரி’, அதன் தலைப்பாலேயே அது சென்றடைய வேண்டிய உயரத்தை எட்டாமல் போன கதை ஆகிறது.


சிறுகதை என்பது முடிந்த அளவு ஒரு மையப்படிமத்தை முன்வைத்து நகர வேண்டியது. இக்கதையில் ஒரு நிகழ்வு இரு வேறு மனிதர்களிடம் என்ன வகை மாற்றங்களை நிகழ்த்துகிறது என்பதைப் பற்றி பேசுகிறது. அவ்விரு மனிதர்களும் வெவ்வேறு வகையில் அந்த நிகழ்வில் இருந்து ஓடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அந்நிகழ்வில் பங்கேற்ற அப்பெண் எந்த சலனமும், மாற்றமும் இன்றி அப்படியே தொடர்கிறாள். உண்மையில் மிகப் பெரிய தரிசனம் உள்ள கதை. ஆனால் கதையின் போக்கும், அதன் தலைப்பும் இந்த திசையில் இல்லை.


வாழ்வை நடந்தது நடந்த படியே கூறுவதுதான் இலக்கியம் என்றால் சிசிடிவிகளும், நேரலை தொலைக்காட்சிகளும்தான் மிகச் சிறந்த இலக்கிய ஆசிரியர்கள். என்றால் ஒரு படைப்பு இலக்கியத் தகுதியை அடைய வேறு என்ன வேண்டியிருக்கிறது. அது காட்டும் வாழ்வில் இருக்கும் உணர்வு உச்சங்கள். எனில் நம் உணர்வை, கண்ணீரை, அறச்சீற்றங்களைத் தட்டி எழுப்புபவை எல்லாம் இலக்கியமாகிவிடுமல்லவா? இது வாசகரின் முன்னிருக்கும் முக்கியமான இக்கட்டு. வாசகன் திறந்த மனதுடன், தன்னைத் தானே சுயபரிசோதனை செய்யும் வகையில் அந்த உணர்வுகளை பரிசீலிக்க வேண்டும். தனக்கு வந்த அந்த உணர்வு உச்சம், வலிந்து ஏற்படுத்திக் கொண்டதா (நான் புரட்சியாளன், ஏழைப் பங்காளன், தன்னைப் போல பிறரை நேசிப்பவன் என அதற்கு பல வேடங்கள் இருக்கின்றன) அல்லது அது தான் உண்மையிலேயே தன் இயல்பா என்ற கேள்வியைக் கேட்டுக் கொள்ள வேண்டும். அந்த உணர்வு உச்சம் இயல்பானதுதான் என அவன் உணர்ந்தால் அப்படைப்பு சந்தேகமே இல்லாமல் இலக்கியம்தான்.


இப்போது ஒன்று புரிந்திருக்கும், ஒரு படைப்பு வாசிக்கும் ஒருவரை வாசகராக்க வேண்டும். அச்சவாலை அப்படைப்பு சந்திக்கும் போது தான் அது இலக்கியமா அல்லவா என்ற வகைப்பாட்டிற்கே தகுதி உடையதாகிறது

இத்தொகுப்பின் ‘விடிவு’ கதையை எடுத்துக் கொள்வோம். ஒரு இரு சக்கரவாகன விபத்தில் நண்பனைப் பறிகொடுத்த ஒருவன். அந்த நண்பன் இறந்து அவனது உடல் வீட்டிற்குக் கொண்டுசெல்லப்படும் வரையிலான நிகழ்வுகள்தான் கதை. ஆனால் இக்கதை முழுக்க முழுக்க கதை சொல்லியை அவனது அக்கணத் தவிப்புகளாக நம்முள் கடத்துகிறது. அவன் அழவில்லை. ஆனால் யாருடையத் தோளிலாவது சாய்ந்து கொள்ள வேண்டுமென தேடுகிறான். ஆனால் ஒரு தோளும் அமையாத கணங்களில், சோர்ந்து போய், தளர்ந்து நிற்கும் தருணத்தில் முற்றிலும் எதிர்பாராத ஒருவரின் கைகளில் அடைக்கலமாகும் அந்த உச்சம், வாசகரிடமும் அந்த உணர்வு நிலையை எழுப்புகிறது. ஒருவகையில் மலையாளச் செவ்விலக்கியத் திரைப்படமான பரதம் படத்தின் உச்ச காட்சியை நினைவுபடுத்தியது. அனைத்தையும் விட முக்கியம், அந்த உச்சத்திற்குப் பிறகு வாசகரிடம் மானுடம் பற்றிய, இந்த வாழ்வைப் பற்றிய ஒரு நம்பிக்கையை விதைக்கிறது இக்கதை.



சரி, வாழ்க்கைத் தருணங்களை, அவை எழுப்பும் அதே உணர்வு உச்சங்களைப் பேசுவது மட்டுமே தான் இலக்கியமா? இது இலக்கியமாகும் முதல் தகுதி தான். உண்மையில் எந்த ஒரு படைப்புமே அது சொல்ல வரும் வாழ்க்கை இங்கே இதற்கு முன்பு எப்படி பேசப்பட்டிருக்கிறது என்பதைச் சந்திப்பதில்தான் அது இலக்கியத்தின் அடுத்த படிக்கு நகர்கிறது. உதாரணத்திற்கு இத்தொகுப்பில் இருக்கும் ‘பூதம்’ கதையை எடுத்துக் கொள்வோம். கதை முழுவதும் மிகச் சாதாரண நிகழ்வுகள். அந்த வாழ்வை இன்று பெரும்பாலான ‘இழந்த மனசுக்கார ஆண்கள்’ வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். அனைத்துத் தரப்பு நியாயங்களும் கண்முன் தெரிகையில் எந்த ஒரு தரப்பையும் எடுக்கமுடியாமல், தன் முன்னே உள்ள நியாய, அநியாயங்களை விழுங்கவும் முடியாமல், துப்பவும் முடியாமல் தத்தளித்துக் கொண்டிருப்பவர்களின் பிரதிநிதியான கதையின் நாயகன் இறுதியில் தன்னை விடமுண்ட நீலகண்ட சிவமாக உணர்வதில் முடிகிறது. அந்த புள்ளியில் இருந்து வாசகன் மிக நீண்ட தூரம் செல்ல முடியும். உண்மையில் தொகுப்பின் சிறந்த கதைகளில் ஒன்று இது. இக்கதை அன்றாடத்தை மரபின் ஒரு புள்ளியில் இணைத்ததாலேயே இலக்கியமாகிறது. அந்த கடைசி பாரா மட்டும் இல்லாவிட்டால் இது ஒரு மிகச் சுமாரான, சாதாரணமான கதை. இந்த பூதம் கதையில் காளியின் இயல்பான அங்கதம் நன்றாகக் கைகூடியும் வந்திருக்கிறது.


இதே வகைமையில் வரத் தக்க மற்றொரு கதை ‘ஶ்ரீஜி’. தன்னெஞ்சறிய பொய் சொன்ன ஒருவரின் கதை. ஒரு நல்ல சிறுகதை என்பது அது முடிந்த பின் வாசகரிடம் துவங்க வேண்டும் என்பார் ஜெயமோகன். இக்கதை அதற்கு மிகச் சிறந்த உதாரணம். இக்கதையில் காளியின் மொழிபு திருக்குறளைச் சந்தித்திருக்கிறது.


வாழ்வும், உணர்வும், தத்துவங்களும் இருந்தால் இலக்கியம் எனச் சொல்லிவிட்டோம். அப்படியெனில் பேரிலக்கியம் என்பது என்ன? இன்னொருவக்கையில் இவ்வினாவைக் கேட்டால், இலக்கியம் என்பதை மிக அகலமான அலைவரிசையாகக் கொண்டால், அதன் உச்சம் என்பது என்ன? ஒரு படைப்பில் வரும் வாழ்வை வாசகனை உணர வைப்பது, அவ்வாழ்வுடனே அவனைப் பிணைப்பது ஆரம்ப கட்ட இலக்கியம் எனில், அவ்வாழ்வை, அவ்வாழ்க்கைத் தருணத்திற்கான தத்துவங்களை விவாதிப்பது, சுட்டுவதன் மூலம் வாசகனை அறிய வைப்பது அடுத்த கட்ட இலக்கியமாகிறது. ஆனால் இவ்விரண்டு தளங்களையும் தாண்டி அந்த வாழ்க்கைத் தருணத்தை அதன் உள்ளும் புறமுமாகக் காணச்செய்யும், அதை முழுமையாகப் பார்க்கச் செய்யும், படைப்புகளே இலக்கியத்தின் உச்சமாகும் தகுதி பெற்றவை. இதையே படைப்பின் தரிசனம் என்கிறார்கள் விமர்சனக் கோட்பாட்டாளர்கள்.


காவியம் என்பது இன்னும் ஒருபடி மேலே சென்று வாழ்க்கையை இந்த புடவிப் பெருக்கில் வைத்து, இன்னும் ஒரு மாபெரும் முழுமைத் தரிசனத்தைச் சொல்வது. அது வெண்முரசு, கம்பராமாயணம், சாகுந்தலம் போன்றவற்றிற்கே சாத்தியம். எனவே தான் காவிய ஆசிரியன் மெய்ஞானிக்கு இணையாக நம் மரபில் வைக்கப்படுகிறான்.


சிறுகதை என்னும் வடிவம் தரிசனங்களுக்கான வடிவம் அன்று. ஆயினும் அதில் தரிசனம் அமையக்கூடாது என்பதல்ல இதன் பொருள். மிகச் சிறந்த கதைகள் என்பவை இத்தகைய தரிசனங்களைக் கொண்டவை தான். புதுமைப்பித்தன், அசோகமித்திரன் என அத்தனை பேரிலக்கியவாதிகளும் இத்தகைய சிறுகதைகளை எழுதியிருக்கிறார்கள்.


இத்தொகுப்பில் ‘ஆர்வலர்’ என ஒரு கதை இருக்கிறது. பிறவற்றைப் போலவே சாதாரண நிகழ்வுகள். ஒரு இஸ்லாமியர் தன் குடியிருப்புப் பகுதியில் வந்து அசிங்கம் செய்யும் பன்றி ஒன்றின் குட்டிகளுக்கு இரக்கம் காட்டுகிறார். அவரது பேரன் அந்த குட்டிகளில் ஒன்றை விளையாட விரும்பிக் கேட்க அதை எடுக்கச் சென்றுவிடுகிறார். தாய் பன்றியின் கோபத்திற்கு ஆளாகிறார். அடுத்தநாள் அந்த தாய்பன்றி குட்டிகளோடு வேறு இடத்திற்கு போய்விடுகிறது. இத்தனை நாள் எப்படி அந்த பன்றிகளை வெளியேற்றுவது என கையைப் பிசைந்து கொண்டிருந்த அந்த குடியிருப்பு வாசிகள் இதற்காக அவருக்கு நன்றி தெரிவித்து விழா எடுக்கிறார்கள். அனைவரும் அவரது அன்பான அணுகுமுறையால் தான் பன்றிகள் சென்றுவிட்டதாக அவரைப் புகழ்கிறார்கள். ஆனால் அவருக்கு மட்டுமே அதன் உண்மையான காரணம் தெரிகிறது. இந்த இடம் வரை இதுவும் ஒரு ‘ஶ்ரீஜி’ வகைக் கதை தான். ஆனால் அவ்விழாவில் அவரது ஏற்புரையாக வரும் இவ்வரிகள், ‘ஒருவரை நாம் வெறுக்கும் போதும், விரும்பும் போதும் ஒரு எல்லைக்குள் நிற்கிறோம். ஆனால் அது கொஞ்சம் நீண்டு போகும்போது ஒரு உரிமை எடுத்துக் கொள்கிறோம். அதுவரையிலான நம் அன்பு, எல்லை தாண்டும் போது உரிமை என்றாகிறது என்பது நமக்குத் தெரிவதில்லை. அப்போது அனைத்துமே தலைகீழாகிவிடுகிறது…. அது தெரிந்தபின் செய்வதற்கு ஒன்றும் இருப்பதில்லை.’


இவ்வரிகளே இக்கதையின் தரிசனம். அன்பு உரிமையாதல் என்பதே இன்று நம்முன் இருக்கும் மிகப் பெரிய சவால். அத்தனை உறவுகளின் கசப்படைதல்களின் ஆதார வேர் இது தான். ஆனால் இக்கதை மிக இயல்பாக இந்த புள்ளிக்கு வந்து நிற்கிறது. ஒரு எழுத்தாளராக காளியின் அடுத்த சவால் என்பது இவ்வரிகளை வாசகரைத் தாமே உணர்ந்து கொள்ள வைப்பதே.


அந்த சவாலிலும் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அவர் அடைந்ததே ‘ஆள்தலும், அளத்தலும்’ கதை. அனைத்து வகையிலும், காளியிடம் இருந்து நல்ல இலக்கியத்தரமான படைப்புகளை இனியும் எதிர்பார்க்கலாம் என வாசகருக்கு நம்பிக்கை தரும் படைப்பு.


காளிபிரசாத்திற்கு சிறுகதைத் தருணங்களைக் கண்டடையும் கண்கள் இருப்பதைப் போல அவற்றைக் கூறும் முறையும் நன்றாகக் கைவந்திருக்கிறது. அத்தருணங்களில் இருந்து பெற வேண்டியவற்றை அடையவும், அறிய வேண்டியவற்றை அறியவும் தேவையான வாசிப்பும், நுண்ணுணர்வும் இருக்கிறது. மீண்டும் மீண்டும் ஒரே வாழ்வியலை ஒரே போன்று எழுதுவதை அவர் சற்று கவனிக்கலாம். அந்தந்த கருக்களுக்கான மொழிகள் அமைய வேண்டும். இத்தொகுப்பின் அனைத்து கதைகளும் கிட்டத்தட்ட ஒரே மொழியில் தான் அமைந்திருக்கின்றன. மேலும் ஆடையற்ற பெண்ணுடல் என்பதும், ஒரு இருளான அறையில் நிகழும் உடலுறவு என்பதும் இந்த தொகுப்பில் இருகதைகளில் மைய நிகழ்வாகவும் (ஆள்தலும் அளத்தலும் மற்றும் கரி), பேச்சுவாக்கில் வருவதாக மேலும் இருகதைகளிலும் (பழனி மற்றும் பராசக்தி) வருகின்றன. அதையும் ஆசிரியர் ஏன் என சுயவிசாரணை செய்து கொள்ளலாம். உண்மையில் நிர்வாணம் என்பதும் ஒரு தரிசனம் தான். அதைத் தான் ஆசிரியர் முன்வைக்கிறார் எனில் அதை இன்னும் பல கோணங்களில் எழுதிப் பார்க்கலாம். மாறாக அவை அதிர்ச்சி மதிப்பீடு அல்லது கதையின் சுவாரசியம் என்ற புள்ளியில் அமைந்திருக்குமாயின், சரியான மாற்றைத் தேடலாம்.


ஒட்டுமொத்தமாக ஒரு தொகுப்பு எனப் பார்த்தால் இலக்கியத்தின் அனைத்து இடங்களிலும் சென்றமரத் தக்க ஐந்து சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றிருகின்றன. முதல் தொகுப்பு என்ற வகையில் இதுவே சாதனைதான். ஆனால் ஒரு எழுத்தாளராக அவர் செல்ல வேண்டிய தொலைவுகள் இன்னும் இருக்கின்றன. அதற்கான முதல் அடியாக இந்த ‘ஆள்தலும் அளத்தலும்’ இருக்கட்டும்.


எப்படி எழுதவேண்டும் எனச் சொல்வது விமர்சகனின் வேலை கிடையாது. அது விமர்சனத்தில் எல்லைக்குள்ளும் வராது. எழுத்து என்பது தடையின்றி எழுதப்படவேண்டியது தான். ஆனால் அந்த இடத்திற்குச் செல்ல எழுத்தாளர் தொடர்ந்து எழுதி எழுதி தன்னை மொழிக்கும், எழுத்திற்கும் நிரூபித்திருக்க வேண்டும். பின் ஒரு புள்ளியில் படைப்புக் கணங்களே அந்த எழுத்தாளனைத் தன் கையில் ஏந்தி தன்னைத் தானே நிகழ்த்திக் கொள்ளும். அத்தகைய கணங்கள் வாய்ப்பதாக நண்பருக்கு, எழுத்தாளர் காளிபிராசாத்திற்கு!



ஆள்தலும் அளத்தலும் - முன்னுரை

புத்தகம் வாங்க

Monday, April 19, 2021

ஷோஷா - ஐசக் பாஷவிஸ் சிங்கர் - (தமிழில்) கோ.கமலக்கண்ணன்

 

போலந்தில் வாழும் யூத சமூகத்தின் பின்னணியில் எழுதப்பட்ட நாவல். ஹிட்லர் ஒருபுறம் ஸ்டாலின் ஒருபுறம் என இரண்டுக்கும் நடுவில் வாழும் மக்கள். தான் வசிக்கும் தேசத்து மக்கள் ஒருநாளும் தன்னை துன்புறுத்தவோ   அடிக்கவோ கொள்ளவோ மாட்டார்கள் ஆனால்  ஹிட்லர் படையெடுத்து வந்து வென்று தன்னை சித்ரவதை கூடத்திற்கு அனுப்பினால் அதற்காக பொங்கியெழவும் மாட்டார்கள் என்கிற புரிதலும் கொண்ட யூதர்கள்.  சமூக, அரசியல், வாழ்க்கை, வலைப்பின்னல்களுடன் செல்லும் சுவாரசியமான நாவலான ஷோஷா  தமிழில் வெளியாகியுள்ளது.

 

முதற்வாசிப்பில் எளிமையான நேர்கோட்டுக் கதையாகத் தோன்றும் நாவலுக்குள் எத்தனை தளங்கள் இயங்குகின்றன என்று ஆச்சரியமும் உண்டாகிறது. எழுத்தாளனாக விளங்கும்  யூத இளைஞனின் வாழ்க்கைப் பின்னணியில் ஒரு பன்முக  சமூகத்தின்   வரலாறும் மனித மனங்களின் மாறுதல்களையும் மேன்மைகளையும் சொல்லிச் செல்கிறார்  ஐசக் பாஷவிஸ் சிங்கர்

 


(இங்கு ஒரு டிஸ்கி: - ஆயுர்வேத மருந்துகளின் பெயர்களுக்கே உள்நாக்கு சுருட்டிக் கொள்ளும் அபாயம் கொண்ட நான்.  ரஷ்ய பெயர்களையும் யூத  பெயர்களையும் முழுமையாக குறிப்பிட விரும்பவில்லை. அ.முத்துலிங்கம் தன் 'புளிக்கவைத்த அப்பம்' சிறுகதையில் சாரா என்கிற  ஒரு யூதரை சந்திக்கிறார். அவர் பெயரை இப்படியாக சொல்கிறார். " வாய்க்குள் கூழாங்கல்லை அடக்கிக் கொண்டு குலேபகாவலி என்று சொன்னால் ஒரு சப்தம் வருமே அதுதான் அவருடைய முழுப்பெயர். நான் ஒரு வசதிக்காக சாரா என்று வைத்துக் கொள்கிறேன்" என்று. வேறு வழியின்றி அவ்வாறே  நானும் அதை வழிமொழிகிறேன்.)

 

நெருங்கிய நண்பர்களால்  சுட்சிக் என்று செல்லமாகவும் பொதுவாக அரோலி என்றும் அழைக்கப்படும் நாயகன். எழுத்தாளனாக வாழ்பவன். அரொலி காதல் கொள்ளும்  வெவ்வேறு பெண்களில் ஒருவர் மக்களைப் புரட்சிகரமாக  சீர்திருத்த எண்ணும்  ரஷியாவை நேசிப்பவர். ஒருவர் வளமும் கவர்ச்சியும்  அமெரிக்க நடிகை. மற்றவர் அன்பான உள்ளூர் செல்வந்தர். உள்ளூர் பணிப்பெண் ஒருவர். இவர்களை விட,  தன் ஆழ்மனத்திற்கு அணுக்கமாக இருக்கும் இளம் பருவத்தோழி ஷோஷாவையே அரோலி மணம் புரிகிறான். நாவலுக்கு ஷோஷா என்று பெயர் வைத்தது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகவே தோன்றுகிறது.   நாவலை வாசித்ததும் அந்த தேசத்தில் இத்தியம் பேசி வாழ்ந்து வந்த யூத  மரபுக்கான  ஒரு  குறியீடாகவே ஷோஷாவை சிங்கர் சித்தரிக்கிறார் என்பது புரிகிறது. மென்மையான மனம் கொண்ட, எப்பொழுதும் அச்சத்தில் இருக்கிற வளர்ச்சி அடையாமல் குழந்தைத் தன்மையுடன்தான் இருக்கிறாள் ஷோஷா. அவள் தோற்றம் இருப்பு இரண்டுமே மற்றவர்களை இம்சிக்கிறது. வெகுஜனங்களுக்கு அவள் மீது பரிதாபமும் இருக்கிறது. அது அன்றைக்கிருந்த யூத இனத்தின் நிலைமைக்கே பொருத்தி வருகிறது. அவளுடைய தூய மனத்தைத்தான்  அராலி விரும்புகிறான். இதில் அவளை மணப்பதற்கு முன் அவனுடைய தந்தையின் சொற்களை அவன் மானசீகமாக கேட்பது முக்கியமான ஒன்று. அவனுடைய ஆழ்மனம் இத்தனை கால மரபு  கொண்ட தன்  இனத்தையே நேசிக்கிறது. தன் தந்தையின் குரலாக அதைக் கொள்கிறது.   இந்த நாவலுக்கு ஷோஷா என்கிற பெயர் தவிர வேறு எதை வைக்க முடியும்.




 

நம்பிக்கையுடன் கம்யூனிச தேசம் செல்லும் அவன் காதலி டோராவின் நண்பர் ஒருவர்,  உளவாளி என முத்திரை குத்தப்பட்டு சித்ரவதை அனுபவிப்பதன் சாரம் நாவல் இடையில் வருகிறது. அத்தனை சித்ரவதைகளைக் கண்ட பின்பும் அவள் அதன் மீது நம்பிக்கையுடன் இருக்கிறாள். மாறாக நல்ல வளத்துடன்  நடிகையாகும் எண்ணத்தில்  அமெரிக்காவிலிருந்து வரும் பெட்டி  மிகவும் அவநம்பிக்கை கொண்டவளாகவே இருக்கிறாள். வெறும் நம்பிக்கை மட்டுமே இருந்த ரஷ்யா,  செல்வம் இருந்தாலும் அவநம்பிக்கை கொண்ட அமெரிக்க தேசம் இவற்றுக்கிடையே ஷோஷாவை சுமந்துகொண்டு   ஊசலாடும் அரோலி. இந்த நுட்பமான சித்தரிப்பு நாவல் முழுவதும் உண்டு. இறுதியாக நாட்டை விட்டு வெளியேறும்போது அவனுக்கு பெட்டிதான் உதவுகிறாள்.

அவர்கள் அகதியாக கிளம்பி அந்த நகரை நீங்கும் போதே ஷோஷா இறந்து விட்டாள்  என்பதை பிற்காலத்தில் ஒரு உரையாடலில் அராலி உரைக்கிறான். பெரும் வர்ணனை இல்லாமல் அவள் முடிவு சொல்லப் படுகிறது. போர்க்கால நாவல்கள் நேரடியாக அதன் பாதிப்பை, போரின் வர்ணனையை சொல்வதை விடவும் அதற்கிடையே ஊடுருவி செல்லும் மக்களின் வாழ்க்கையையயும் துயரத்தையும் மீட்சியையும் சொல்வதுதான்  மனதை இன்னும் கனக்க  வைக்கிறது.  இறுதியில், யூதர்களை துரத்தியடித்து விட்டு யூதர்களுக்கான தனி நாடு உருவாக்க அனைத்து நாடுகளும் ஒற்றுமையாக வாக்களித்த அபத்தத்தின் மீது நகைப்பு செய்து நாவல் முடிகிறது.

 




இந்த நாவலை மிகவும் எளிய வகையிலும் செறிவாகவும் நம் நணபர் கோ.கமலக்கண்ணன் மொழி பெயர்த்துள்ளார். அவர் கடந்த  ஊட்டி காவிய முகாமில் அறிவியல் புனைவு குறித்து உரையாடியிருந்தார். உலக இலக்கியங்கள் மீது நல்ல வாசிப்பு கொண்டவர் என்பது புரிந்தது. ஷோஷா நாவல் மீதான அவரது புரிதலும்  மொழிபெயர்ப்பின் லாவகமும்  நாவலை இயல்பாக  வாசிக்க   வைக்கின்றன. எங்கு அந்த தேசத்து  வார்த்தைகளை அப்படியே உபயோகிக்கலாம், எங்கு தமிழ் மண்ணில் புழங்கும்  வார்த்தைகளை இடலாம் என்கிற  கவனம் இருப்பதால் எங்கும் நாவலின் இயல்புத்தன்மை கெடவில்லை. நெடுங்காலமாக டால்ஸ்தோய், தாஸ்தாவ்யேஸ்கி ஆகியோர் மொழிபெயர்ப்புகள் வாயிலாக தமிழக மக்களுக்கு அறிமுகமாகி மனதிற்கு அண்மையானவராகவும் விளங்குகிறார்கள். இவ்வருடம்   தமிழில் அறிமுகமாகியுள்ள சிங்கரும் இங்கு நீண்டகாலம் மனித இனத்தின் அன்பையும் உன்னதங்களை பேசியவராக ஷோஷா மூலம் நிலைத்து  நிற்பார் என்றே நாவலைப் படித்ததும் தோன்றியது. அதற்கு முதற்படி அமைத்திருக்கும் நண்பர் கமலக்கண்ணனுக்கு வாழ்த்துகள்

Saturday, April 3, 2021

பசித்த மானிடம் - எல்லையைக் கடந்த முன்னோடி

பசி வழி ஞானம்

நாவலில் ஒரு இடத்தில் 'காமோகாரிஷீத்: மன்யுரகாரீஷீத்:' என்று சொல்வதில் குறிப்பிடப்படும் ரிஷிகள் யாரு என்று ஐயம்  கேட்கிறார்கள் ஊரில் உள்ளவர்கள். வாத்தியார் அதற்கு பதில் சொல்கிறார். அது நான் செய்த அத்தனை தவறுகளும் தன் காமத்தால் செய்தேன் . கோபத்தால் செய்தேன் என்று உணர்ந்து சொல்வது என்று. 




எழுத்தாளர் கரிச்சான்குஞ்சு என்று அறியப்படும்   ஆர்.நாராயணசாமி அவர்கள் எழுதி, தமிழ் இலக்கிய உலகில் மிகவும்  புகழ்பெற்ற நாவல் பசித்த மானிடம். கணேசனும் கிட்டாவும் தன் வாழ்க்கையில் எதிர்கொண்ட இடர்களும் பெற்ற புரிதல்களும் நாவலின் கதை. கும்பகோணம் மன்னார்குடி நகரங்களும் அதைச்சுற்றியுள்ள கிராமங்களும் கதைக்களம். 

ஒருபுறம் காமத்தால் அல்லாடும் கணேசன் மற்றொரு புறம் கோபமும் சந்தேகமும் கொண்டவனாய் மாறியிருக்கும் கிட்டா. பணம் இல்லாததால் இளம் வயதில் டிரைவர் / மெக்கானிக் வேலைக்கு  போகும் கிட்டா சிறு வயதுமுதல் எதிர்பார்ப்பது தான் ஒரு முக்கியஸ்தன் என்று மற்றவர்கள் ஒப்புக் கொள்ள வேண்டும் என்பதுதான். சிறுவயதில் அவமானப்பட்டு ஊரை விட்டு கிளம்புவதிலிருந்து தொடர்ந்து வருவது அவனுடைய அணுக்கமான மக்கள் அவன் மீது  காட்டும் மரியாதையின்மை. பின் வேலைதேடி அலைவது, பின் மணம் கொள்ளப்போகும் காலங்களிலும்   செட்டியார் மகள் உதாசீனப்படுத்துவது தன் அக்காள் மகள் ஏற்க மறுப்பது இறுதியில்  தன் மகன் கூட தன்னை எதிர்ப்பது என இந்த உளைச்சலில் இருந்து   அவன் மனம் விடுபடவில்லை..

காமம் வேட்கை ஆகிய பசியின் வழி எழுந்து வந்து  அதற்கான உணவு உண்ட பின்னும் அடங்காத இருவரின் வாழ்க்கையையும் ஞானியாக மாறிய கணேசன் உணர்ந்து உரைக்கிறான், உடலின் பசி உள்ளதின் பசி இரண்டும் கடந்தபின்னும் அந்தப் பசித்த மானிடங்களை  நிறைவடையாமல் வைத்திருப்பது என்ன என்று ஆராய்கிறது நாவல். கணேசனை குருவாக உணரும் பசுபதியின் சொற்களை இறுதியில் நினைத்துப் பார்க்கிறான்.  ஒருவகையில் அவனுக்கு சீடனாக வந்த குருவாக பசுபதியே இருக்கிறான்.




நாவலில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது அந்த முன்னோடி  எழுத்தாளரான கரிச்சான்குஞ்சுவின் தெள்ளிய மொழிவளம்.  ஒரு  சிறிய நகரத்தில் ஓரினச்சேர்க்கையாளர்கள் எந்தளவு ஒரு குழுவாக இருக்கிறார்கள் என்பதை சொல்வது நாவலின்  குறிப்பிடத்தக்க ஒரு இடம். சிங்கத்தின் ஆள் மீது ஜவுளிக்கடைக்காரருக்கு ஈர்ப்பு. அவர் அவனை தன்னிடம் அனுப்ப கேட்கிறார். அப்போது சிங்கம் ஜவுளி கடைக்காரரிடம் சொல்கிறார்.." யோவ்.. இது அயர்ன் ராஜாபார்ட் சரக்கு.. இவ்ளோ செலவு பண்ணி இவனை தயார் பண்ணிருக்கேன்.. உனக்கு பைசா இருந்தா சொல்லு.. இதே போல இன்னொண்ணு தயார் பண்ணி தறேன்.. இவனை தர முடியது.. " 


குறிப்பிடத்தக்க மற்றொன்று. மனிதர்கள் மீதான நுட்பமான வர்ணனை.  தோப்பூர் எனும் கிராமத்தில் ஒரு கணக்கப்பிள்ளை இருக்கிறார். தோப்பூரின் அத்தனை  நில பத்திரபதிவுகளும்  கொடுக்கல் வாங்கலிலும் பஞ்சாயத்துகளிலும் அவர்தான் முக்கிய புள்ளி. தீர்ப்பு அல்லது முடிவு எட்டப்படும் முன் அவர் வார்த்தைக்கும் பெரிய மதிப்பு உண்டு. அவர் வைத்ததுதான் சட்டம். பட்டாமணியார் வாரிசு இல்லாதவர் என்பதால் ஊரில் உள்ள பாட்டிகள் விதவைகள் எல்லாருக்கும் இவர்தான் ராஜா மந்திரி எல்லாமே என்கிறார் கரிச்சான் குஞ்சு. விவசாயம்  சார்ந்த குத்தகை உழவுப்பணம் ஆகிய அனைத்திற்கும் இவரை நம்பித்தான் இருக்கிறார்கள். கிட்டா வேலைதேடி வெளியூர் போகும்போது கிட்டாவின் அம்மா  அவனிடம் சொல்வதே, எதானாலும் நேரில் வந்து சொல். கடிதம் எழுதினால் அவர் வழியாகத்தான் நமக்கு வந்து சேரும் என்று. 

கணேசனுக்கு பூணூல் போட்ட கல்யாணத்தில் கிடைத்த மொய்பணத்தை எண்ணி வாத்தியாரிடம் கொடுக்கையில், இதை வைத்து இன்னும் பலருக்கு சிறப்பாக நல்லது செய்யவேண்டும் என ஆசீர்வதிக கிறார் கணக்கப்பிள்ளை சீனி ஐயங்கார்.  அவருடைய மேன்மையான மனம் அப்போது எழுந்து வருகிறது. ஆனாலும் அவர் இதை எப்பொழுது  வேண்டுமானாலும்  இதை தனக்கு சாதகமாக ஆக்கிக் கொள்வார்; அப்போது அவரிடம் சொல்ல தனக்கு சரியான பதில் உள்ளதா என யோசித்து வாங்கிக் கொள்கிறார் வாத்தியார்.  அனாதையான கணேசனுக்கு ஒரு சுப காரியம் செய்த திருப்தியில் ஊரே இருக்கும் போது,  அந்த நேரத்தில் சீனியின் மேன்மை யதார்த்தமாக  வெளிப்படுகிறது என்பதும் அதை  அந்த ஊர் எவ்வளவு கவனமாக கையாள்கிறது  என்பதும் எளிமையாகவும் நேரடியாகவும் சொல்லிவிடுகிறார்.  




மன்னார்குடியை சேர்ந்தவனாக இருந்தாலும் மன்னார்குடியிலேயே நிகழும் இந்த  நாவலை இந்த வாரம்தான்  வாசித்தேன்.  கரிச்சான் குஞ்சு ஒரு தமிழாசிரியர்.  மன்னார்குடியில் நான் பயின்ற பள்ளியில்  தமிழாசிரியராக பணியாற்றியுள்ளார். ஊரின் இடங்களை குறிப்பிடுகிறார் ஆனால் நிலம் பற்றிய பெரிய வர்ணனைகள் இல்லை.  அதேநேரம் மனிதர்கள் மீதான அவதானிப்பும் வர்ணனையும் திகைக்கவே வைக்கின்றன. இது எழுதப்ப ட்ட காலத்துக்கும் முன்னால் நிகழும் கதை. காமம்  ஆசை எல்லாம் அப்பட்டமாக எழுதுகிறார். சில நேரங்களில் பக்கங்களைப் புரட்டவே தயக்கமாக இருக்கும் அளவு கதாபாத்திரம் மீது கருணை உண்டாகிறது.  அந்த 'அப்பட்டமான' என்பது காமத்தை வர்ணிப்பதில் இல்லை. கதையோட்டத்தில்தான் இருக்கிறது.  தொழுநோயாளிகளின்  பிச்சைக்காரர்களின் வாழ்க்கையை தகாஉறவுகளின்  போது எழும் மனவோட்டத்தை  வர்ணிக்கையில் அவர் கையாலும் இயல்புத்தன்மை குறிப்பிடத்தக்கது.  இலக்கியத்தின்  எல்லைகளை மீறும் எழுத்திற்கு பசித்த மானிடம் ஒரு முன்னோடி படைப்பாக என்றுமே இருக்கும்

Tuesday, March 30, 2021

'ஆள்தலும் அளத்தலும்' - எழுத்தாளர் எஸ்.ரா. அவர்களின் வாழ்த்து

எழுத்தாளர் எஸ்.ரா. அவர்களின் வாழ்த்து 

 எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின்  கதாவிலாசம் வாசித்து அதன் வழியாகவே எழுத்தாளர்களையும் படைப்புகளையும் தொகுத்துக் கொண்டேன். அன்று விகடன் போன்ற வணிக ஊடகத்தில் இலக்கியத்தையும் ஆளுமைகளையும் அறிமுகப் படுத்தினார். என் தொகுப்பின் முன்னுரையில் அவருக்கு இதை குறிப்பிட்டு நன்றியும் தெரிவித்திருந்தேன்.வெகுஜன எழுத்திற்கும் இலக்கிய எழுத்திற்குமான வேறுபாட்டை அது (கதாவிலாசம்) உணர்த்தியது.

 சமூக ஊடகங்களின் வாயிலாக வாய்க்கும் இணைய உறவிற்கு அடித்தளமாக அமைந்த ஆர்க்குட் உச்சத்தில் இருந்த காலத்தில், எனக்கு அதில் இலக்கியம் சார்ந்து ஆர்வம் இருந்தது.  அந்த திசை நோக்கி வாசிப்பில் மேலும் உந்திச்செலுத்தியது அன்றைக்கு எங்கள் ஆர்க்குட் கூடுகைக்கு நேரில் வந்து அவர்  ஆற்றிய உரைதான்.

என்னுடைய மொழிபெயர்ப்பு நாவலான தம்மம் தந்தவன் வந்த பொழுது அதை அந்த வருடத்தின் சிறந்த புத்தகங்களில் ஒன்றாக குறிப்பிட்டு அவர்  எழுதியருந்தது என்றும் எனக்கு பெரும் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்கும் ஒன்று.

வாசகர் எழுத்தாளரை அறியும் அளவு எழுத்தாளர் எங்கோ ஒரு நகரத்தில் வாழ்ந்திருக்கும் வாசகரை அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால்  இன்று தொகுத்துப் பார்க்கையில், அவரது  எழுத்துக்கள் வழியாக மறைமுகமாக என் வாசிப்பிலும்,   புனைவுகள் வெளியாகும் தருணங்களில் அதை அடையாளப்படுத்தி நேரடியாகவும்  அவர்  எப்பொழதும் என்னுடன் இருக்கிறார்   என்கிற உணர்வு உண்டாகிறது.




 ஆள்தலும் அளத்தலும் சிறுகதை தொகுப்பு வெளியான பொழுது அதை அவருக்கு   அளித்து ஆசிபெறவே எண்ணினேன். ஆனால் அதை இவ்வளவு விரைவாக வாசித்து இருநாட்களில் அவரது  தளத்தில் அது குறித்து எழுதுவார்  என்று எதிர்பார்க்கவில்லை. நேரில் சந்தித்த பொழுது  என் சிறுகதை தொகுப்பு  குறித்த பாராட்டுகளோடு அது சார்ந்த    மேலும் சில கருத்துக்களையும் ஆலோசனைகளையும் அளித்தார். அவற்றையும் மனதில்  குறித்துக் கொண்டேன்

இந்த நெருக்கடியான புத்தக கண்காட்சி காலத்தில் கிடைத்த சொற்ப ஓய்வு நேரத்தில் இதை வாசித்து  எழுதியதும் கதைகள் குறித்து உரையாடியதும்  என்னை மிகவும் உற்சாகமாக உணரச் செய்தன. 

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு நன்றிகள். 

’ஆள்தலும் அளத்தலும்’ எஞ்சுவதும்- அனங்கன்

 முதல் சிறுகதைத் தொகுப்பு மிகவும் முக்கியமான ஒன்று ஆசிரியருக்கும் வாசகருக்கும்.ஆசிரியன் தன்னை முதன்முதலாக வாசகன் முன் வைக்கும் தருணம் அவன் வாழ்வில் என்றும் இனிமையாக நினைவில் இருக்கும்.ஆசிரியன் தன் வாசகனையும்,வாசகன் ஒரு ஆசிரியனையும் கண்டுகொள்ளும் நிகழ்வு இதன்மூலம் நடக்கிறது.பின்னாளில் அவன் அடையும் உச்சங்களும்   கண்டடைதல்களும்   விதையாக இங்கே உறங்குகின்றன.தமிழில் மகத்தான படைப்பாளிகளின் முதல் தொகுப்புகளில்  அவர்களின் ஆளுமை திரண்டு வருவதை காணலாம். அசோகமித்திரனின் அவருக்கே உரிய கறாரான யதார்த்தவாதம் அவ்வெதார்த்ததிலிருந்து மெலெழும் அழகியல்,இனிமையும் கறிப்புமாக அவர் அளிக்கும் வாழ்க்கை அவரின் முதல் தொகுப்புகளில் நாம் அடையலாம். ஜெயமோகனின் “திசைகளின் நடுவே” என்னும் அவரது முதல் சிறுகதைத் தொகுப்பில்,அவர் பின்னால் விரிந்து பரவிய நாட்டாரியல், காவியவாதம்,மாயாவாதம்,கேரள கன்னியாகுமரி வரலாறு கதைகள் என   அனைத்திற்கும் தொடக்கத்தை அங்கே காணலாம். 

அவ்வகையில் ஆர்.காளிப்ரஸாத்தின் “ஆள்தலும் அளத்தலும்” முதல் சிறுகதைத் தொகுப்பு யதார்த்தவாதத்தில் ஆரம்பித்து கதைகளின் வழியே அதை மீறி மேலெழ முயற்சிக்கின்றன. இத்தொகுப்பை வாசிக்கும் பொழுது அசோகமித்திரன் இந்திரா பார்த்தசாரதி கதைகள்நினைவில் எழுவதை தவிர்க்க முடியவில்லை, பெரும் முன்னோடிகளின் கதைகளை நினைவூட்டுவது சாதகமே தவிர எதிர்மறை அம்சம் இல்லை. இம்முன்னோடிகள் போலநகர் சார் வாழ்க்கையை எழுதியதால் அல்ல நினைவிற்கு வருவது அகச்சித்தரிப்பினூடே புறச்சித்தரிப்பும் பின்னி அதன் வழியே கதைகள் செல்கின்றன. உதாரணமாக “விடிவு” “ஆர்வலர்” “ஆள்தலும் அளத்தலும்” கதைகளைக் கூறலாம். குத்தூஸ் தன் வீடு மதம் சார்ந்து கட்டுப்பட்டவராயின் பன்றிகளிடம் அன்புடன் இருக்கவே முயற்சி செய்கிறார்  தாய் பன்றி ஒரு சரடெனில் குத்தூஸ் இப்பக்கம் இன்னொரு சரடு, பேரனுக்காக பன்றிக் குட்டியை குத்தூஸ் தூக்கியதால் தாய் பன்றி குத்தூஸ் இருக்கும் இடத்தை விட்டு தன் வசிப்பிடத்தை மாற்றிக்கொள்கிறது, பன்றிக்கு, மனிதன் தீண்டத்தகாத சேர்ந்து வாழ தகுதியற்றவனாக ஆகும் இடம் கதை முடிகிறது.






ஆசிரியரின் பலம் கதாப்பாத்திரங்களை நம் மனதில் பதியவைப்பது தான்,கதைகளை விட ஆசிரியர் கதாப்பத்திரங்களை சொல்வதில் தான்  அதிக மகிழ்ச்சி அடைகிறார் போலும், அது மனதில் நிற்கவும் செய்கிறது.”பூதம்” கதையில் கதை என்று எதுவும் இல்லை நீலகண்டனின்  அகச்சித்தரிப்பின் மூலம் புறம் விவரிக்கப்படுகிறது.சென்ற தலைமுறையில் தந்தையின் நகையையும் வீட்டையும்  பங்கிட்டுக் கொள்கிறார்கள் சகோதரர்கள்,வீட்டின் மதிப்பு உயர்கிறது, நகை வீடு அளவிற்கு லாபம் தரக் கூடியதாக இல்லை, மனைவி மகளின் நச்சரிப்புக்கு ஆளாகும் நீலகண்டன்,யதார்த்தமாக கோயிலுக்குச் செல்கிறார். அர்ச்சகர் சிவ சந்நிதியில் அலங்காரம் செய்து கொண்டிருக்கிறார்,வேறொரு சந்நிதியில் வரும் மற்றொரு அர்ச்சகர் பிரசாதத்தையும் மாலைகளையும் எடுத்துக் கொண்டு சென்று விடுகிறார்,பார்வதி பரமேஸ்வரனை எள்ளி நகையாடும் இடத்தில் கதை தன்னை, பகடியின் மூலம் நிகழ்த்திக் கொள்கிறது.

இத்தொகுப்பின் ஆசிரியரை முழுமையாகக் அடையாளம்  காட்டும் கதை “ஆள்தலும் அளத்தலும்”.வேலைத் தேடி அலையும் “நான்” சமூக பெரியவர்களைக் கண்டு வெறும் பரிசுப் பொருளுடன் திரும்பும் பொழுது வேசியுடன் இருக்கும் தன் சக ஊழியர்களை கண்டு திடுக்கிடுகிறான், பின் சகஜமாக அதை எடுத்துக் கொள்கிறான் .நாஞ்சில் நாடன் முன்னுரையில் சொல்லியிருப்பது போல எதையோ ஒன்றை தேடி மற்றொன்றை கண்டுகொள்வதோடு கதை முடிவடைகிறது. அவன் கண்டடைந்த ஒன்று முழுமையாக வாசகனிடமே உள்ளது. அதே போல் “பழனி” கதையில் பழனியின் மீறல்கள் நன்றாக சித்தரிக்கப்பட்டிருந்தது.அவனின் மீறல்கள் மூலமாகவே கதை நம்மை வந்தடைகிறது.

“கரி” நம் அன்றாட தருணங்களில் ஒளிந்து கொண்டிருக்கும் காமத்தை நுட்பமாக வாசகனுக்கு உணர்த்துகிறது.

“ஶ்ரீஜீ” “விடிவு” போன்ற கதைகளில்  திருப்பத்தை ஆசிரியர் உண்டு பண்ணுவது போல் இருக்கிறது. வடிவ சிதறலும் அநேக கதைகளில் வாசகனின் கவனத்தை சிதைப்பதாக இருக்கிறது.

இக் கதைகளின் வழியே ஆசிரியரின் கண்டடைதல்களையும் பயணத்தையும்   நம்மால் அறிய முடிகிறது. இத்தொகுப்பில் கடைசி கதையான “பராசக்தி” யில் ஆசிரியர் தன்னுடையதான எழுத்தை வந்தடைகிறார் நம் கண்ணுக்கு தெரியாத மின்சாரத்தை, அச்சக்தியை , பெரும் பிரபஞ்சத்தியில் ஒன்றாக காணும் போது கதையும் இத்தொகுப்பும் நிறைவடைகிறது,  பின் நாட்களில் மகத்தான படைப்புகளை ஆசிரியர் தருவார் என்னும் நம்பிக்கையை தருகிறது.

நன்றி:-  அனங்கன்  (https://www.jeyamohan.in/144644/)

தொடர்புடைய பதிவுகள்:-

பண்ணைக்கு ஒருவன்


Sunday, March 28, 2021

வெறும் தானாய் நிலைநின்ற தற்பரம் - இருப்பை அர்த்தப்படுத்திக் கொள்ளல்

 

ஒரு புதினத்தின் ஆதாரம் என்பது பெரும்பாலும் அசாதாரண சம்பவங்களே. அதிலும் தன்வரலாறு புத்தகமாக எழுதப்படுக்கையில் அந்த அசாதாரண சம்பவங்களே கதையை முன்னெடுத்துச் செல்கின்றன. எழுத்தாளரும் கவிஞருமான யுமா வாசுகியின் ‘ரத்த உறவு’ நாவலில் வரும் அசாதாரண குடும்ப வன்முறை ஒரு உதாரணம். அதுபோல சில தன்வரலாற்றுப் புனைவு நாவல்களில்  ஆசிரியர் குறிப்பிட்டுச்   சொல்ல வருவது என்ன என்பதும்   துவக்கத்திலிருந்தே  வருகிறது.  சிலுவை ‘குவா குவா’ என்று அழுதுகொண்டு எல்லா குழந்தைகள் போலத்தான் பிறந்தான் என்ற வரியிலிருந்து சிலுவைராஜின் சரித்திரம் என்னும் தன்வரலாற்றுப்  புனைவை ராஜகெளதமன் எழுத துவங்குகிறார். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வரியை பகடி செய்திருப்பது போல தோன்றும். சமூகத்தில்  பிறப்பால் /  ஜாதியால்  தாழ்வாக  பார்க்கப்பட்ட ஒருவரின் வாழ்க்கைக்குள்   இப்படித்தான் நுழைகிறோம். ஆனால் இதை எழுத்தாளர் வாசகருக்கு கோடிட்டு காட்டுவது  இல்லை. அவர் எழுத்தின் வழியாக வாசகன்  அறிகின்ற புரிதல்தான் இது. இவ்வகை நாவல்கள், தான் சொல்லவருவது என்ன என்பதை துவக்கத்திலேயே வாசகருக்கு குறிப்பாலுணர்த்தி விடுகின்றன. இவையன்றி பெரும் ஏற்றத் தாழ்வுகள் நிறைந்த வாழ்க்கை வரலாறும் வாசகருக்கு ஆர்வமூட்டக் கூடியது. பெரும் தொழிலதிபர், தன் வாழ்க்கை வரலாற்றை எழுதும்போதும் அல்லது ஒரு கைதி / குற்றவாளி / போர்வீரன்  தன் கதையை எழுதும்போதும்  வரும் ஆர்வம் அத்தகையது.   ஒருவகையில் வாசிப்பவர் தனக்கு  அணுக்கமாகவும் அதே நேரம் அசாதாரணமானதாகவும் அவர் வாழ்க்கையை உணரவேண்டும். அது இல்லாமல் வெகு சாதாரணமாய் அனைவருக்கும் பொதுவான இளம்பிராயம், காதல், மணவாழ்க்கை வேலை  என்று செல்லும் தன்வரலாற்றுப் புத்தகம் வாசகரை சற்று குழப்பக் கூடும்.  வி.அமலன் ஸ்டேன்லி எழுதி தமிழினி வெளியீடாக இவ்வருடம் வந்திருக்கும் 'வெறும் தானாய் நிலைத்து நின்ற தற்பரம்' இந்த சவாலை வெற்றிகரமாக எதிர்கொள்கிறது. அது தன்னை நாவல் என்றோ, தன்வரலாறு என்றோ வரையறுத்துக் கொள்ளவில்லை. பதிப்பகமும் அதை என்னவென்று குறிப்பிடவில்லை. அதை ஒரு தன்வரலாற்றுப் புனைவு என்று வாசக பார்வையில் எடுத்துக் கொள்கிறேன்.  

எழுத்தாளர் ஜெயமோகன், ஹிந்து நாளிதழில் எழுதிய 'புத்தாயிரத்தின் படைப்பாளிகள்' கட்டுரையில் அமலன் ஸ்டேன்லி அவர்களின் அத்துமீறல் நாவலை முக்கியமானதாகக் குறிப்பிட்டிருந்தார். அவ்வகையில் எழுத்தாளரின் பெயர் அறிமுகம் இருந்தாலும் அவரது கவிதைகள், புனைவுகள் என எதையும் வாசித்ததில்லை. இதுவே முதல் புத்தகம்.

ஜெரி மற்றும் சேவியர் ஆகியோர் வாயிலாக துவக்க அத்தியாயங்கள் விவரிக்கப் படுகின்றன. இரு பாத்திரங்கள் வாயிலாக சொல்லப் பட்டாலும்  ஜெரியைச் சுற்றித்தான் கதை நிகழ்கிறது. சேவியர்கூட ஜெரி பற்றித்தான் சொல்கிறான்.  அது அவர்களின் இளமைப் பருவம். ஐ.சி.எஃப்  எனப்படும் சென்னை  பெரம்பூர் இரயில் பெட்டித் தொழிற்சாலையின் அலுவலர் குடியிருப்புதான் அவர்கள் வளர்ந்த இடம். அதைச் சுற்றி நண்பர்கள், பள்ளி, காதல் என செல்கிறது இளமைப் பருவம். இதில் நிகழக் கூடிய அனுபவங்கள் எல்லாம் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்து வளர்ந்த   அனைவருக்கும் பொதுவான அனுபவங்களே. இது சில புத்தகங்களில் அயர்ச்சியை கொடுத்திருக்கின்றன.  இங்கு எழுத்தாளர்,  ஒரு கவிஞராகவும் இருப்பதால் அந்த எழுத்து நடை அதை சுவாரசியமாக சொல்லிச்  செல்கிறது. மேலும் ஒரு முக்கிய காரணம் இவை வெறும் பால்யகால நினைவுத் தொகுப்பு அல்ல என்பதும்  ஜெரியின் பிற்கால தேடல்களுக்கான காரணிகள் என்பதும் வாசிப்பினூடே துலங்கி வருவதும்தான்.




ஜெரி கல்வி முடித்து பணியில் சேரும் தருணம் வரை செல்லும் இந்தக் கதையின்  துவக்க அத்தியாயங்கள் மெல்ல மெல்ல தன் பிற்பகுதியில் ஒரு மெய்யியல் நோக்கில் இலகுவாகத் திரும்புகின்றன. அதன் பின்னான ஜெரியின் தேடல்களும்  அவன் வாழ்க்கையை புரிந்துகொண்டு அமர்வதும் அதன் நிறைவுப் பகுதிகள். ஒரு பெரிய கேள்வி அல்லது தேடல் என்பதற்குள் தன்னை முற்றிலும் ஆழ்த்திக் கொண்டு, விடுபடல் எனறால் அனைத்தையும் வெறுத்து ஒதுங்குவது அல்லது அதிலிருந்து கூட்டுமானவரைக்கும் விலகி இருப்பது என்று செல்லாமல்   உலக வாழ்க்கையின் சிக்கலை எதிர் கொள்ளும் விதத்தை  கண்டறிய முயல்கிறது. 

முதல் அத்தியாயங்களில் வரும் ஜெரியின் உறவினர்கள் மற்றும் சுற்றுப்புர மனிதர்களின் கதையை புரிந்து கொண்டால் பிற்பகுதியில் ஜெரி கொள்ளும் குழப்பங்களையும் அதைக் கவனமாக கையாளுவதும் பிடி கிடைக்கின்றன.  அதை எழுத்தாளர் எங்கும் இணைப்பதில்லை ஆனால் சிறுவயது சம்பவங்கள் வாசிப்பவரின் மனதில் இருப்பதால் அங்கிருந்து எழுத்தாளர் எடுக்கும் நிலைப்பாடு புரிந்துகொள்ளத் தக்கதாய் இருக்கிறது. சங்கர் என்கிற ஒருவர் மணமாகிய பின்னர் இன்னொரு ஈர்ப்பு ஏற்பட அதைக் கையாளத் தெரியாமல் குடிகாரனாக நடைபாதையில் கிடந்து உழலும் ஒரு சித்தரிப்பு முன் அத்தியாயங்களில் வருகிறது. பிற்காலத்தில் ஜெரி தன்  வாழ்வில்  அந்த சிக்கலை அடையும் பொழுது அதை கவனமாகக் கையாளுகிறான். அதேபோல தன்னுடைய ஆய்வக பரிசோதனை எலிகளுக்கு புற்றுநோய்க்கான நுண்ணுயிர்களைச் செலுத்துவது ஜெரிக்கு உண்டாக்கும் அகச்சிக்கலும் குறிப்பிடத்தக்கது. அதே தருணத்தில் தன்னுடைய அக்கா நோயுடன் போராடுவது வருகிறது.

 


நுண்ணுயிர்கள் குறித்த ஜெரியின் சிக்கல் முதலில் பணியிடத்திலிருந்து துவங்குகிறது.    ஒரு காரணத்தில் செயல்படும் பொழுது அதற்கு சம்பந்தமில்லாத வேறு  யாரோ பாதிக்கப்படுவது ஜெரிக்குள் கேள்வியை எழுப்புகிறது.  பணி  நிமித்தமாக எண்ணூர் பகுதியில் ஆய்வு மேற்கொள்பவன் அங்கு தொழிற்சாலை கழிவுகளால் மக்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டும்,  உறுப்புச் சிதைவுடனும் பிறப்பதை கண்டறிந்து அது சார்ந்த ஆய்வறிக்கையும் தயார் செய்கிறான். மேலும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த  வேண்டி கூட்டங்களும் நடத்துகிறான். சோதனைச்சாலை எலிகள், தொழிற்சாலையை சுற்றியுள்ள மனிதர்கள் இவர்கள் தவிர தீராத நோயால் அவதியுறும் தன் அக்காள் என அனைத்து துன்பங்களுக்கும் விடை தேடக் கிளம்புவது போல அவன் பயணம் துவங்குகிறது. அப்பொழுது அவன் உணரும் ஒன்று அவனை திகைக்க வைக்கின்றது. எண்ணூர் பகுதியில் பணி புரிகையில் அவர் வெண்ணிற அந்துப்  பூச்சிகள் சார்ந்த ஒரு வாசிப்பை அடைகிறார். முன்பு பர்மிங்ஹாமில்  வெண்ணிற அந்துப் பூச்சிகள் உலவுகின்றன. தொழிற்சாலை கழிவுகளாலும் மாசினாலும் சுற்றுப்புறமே கருமைகொள்ள வெண்மை நிறத்தில் தெளிவாக தனது கண்களுக்குப் புலப்படும் அந்தப் பூச்சிகளை, பறவைகள் எளிதாக பிடித்து உண்கின்றன. போகப்போக இதை உணர்ந்த பூச்சியினம் தன்னைத் தற்காத்துக் கொள்ள வேண்டி மெல்ல மெல்ல தன் நிறத்தையே சாம்பல் நிறமாக மாற்றிக் கொள்கின்றன. அந்தப் பூச்சியினத்தின் வெண்ணிற பூச்சிகள் அருகி சாம்பல் பூச்சிகளே மிஞ்சுகின்றன. இது அவனுக்குள் புரிதல்களை ஏற்படுத்துகின்றன. ஒரு எண்ணம் தன் இனத்தின் வண்ணத்தையே  மாற்றுமா என்று அன்றைக்கு ஏற்படும் வியப்பு தானறியாமல் அவனை மெய்யியல் நோக்கிச் செலுத்துகின்றது.  நாவலின் முதல் பகுதிக்கும் இரண்டாம் பகுதிக்குமான மையம் என்று அந்தப் பகுதியை சொல்லலாம்.

 

ஆராய்ச்சி வாழ்க்கையின் வாயிலாக மனிதர்கள்  தன்னுடைய சிந்தனையில் கொள்ளும் இச்சை சார்ந்த பாவனைகளும்  ஜெரியை  அலைக்கழிக்கின்றன. ஆய்வகத்தில் ஒரு ஆண் எலியை பல பெண் எலிகளுடன் இணை சேர்ப்பது போல மனித வாழ்விலும் ஆணின் இயல்பு அதுதான் என்றும் அதை மறுக்கக் கூடாது என்றும் தன்னுடன் இருப்பவர்கள் வாதிடுவதை  அவனது இயல்பு ஏற்றுக் கொள்ளவில்லை. ஆறறிவு என்று மெச்சிக் கொள்பவர்கள் இச்சை என்று வரும்போது ஐந்தறிவு உயிருடன் தன்னைப் பொருத்திக் கொள்ள தயங்கவில்லை என்பது அவருக்கு அச்சத்தையும் சீற்றத்தையும் உண்டாக்குகிறது. புத்தகம் பொதுவாக ஜெரியை ஒரு ஜென்டில்மேனாகவே முன் வைக்கிறது.  அது தவிர, ஜெரிக்கு சில உள்ளுணர்வுகள் உண்டு. அவனால் சிலரின் புகைப்படத்தைப் பார்த்து அவரின் பெயரைச் சொல்ல முடிகிறது. எங்கோ மரணிக்கும் மனிதர்கள் திடீரென அவன் நினைவில் / கனவில் வந்து திகைப்படையச் செய்கிறார்கள். ( இத்தகைய திறன் கொண்ட ஜெரி தனக்குத் திருமணமானது தெரியாமல்  தன்னை அணுகி வரும் பெண்ணின் மனதை அறியாமல் இருக்கிறான் என்பது  ஆச்சரியமே. )

 

நாவலின் பிற்பகுதி முழுவதும் ஜெரியின் தியான அனுபவங்கள் வாழ்க்கைப் புரிதல்களைச் சுற்றி அமைக்கப் பட்டுள்ளன. இயல்பான ஆராய்ச்சி மனம் கொண்ட ஜெரி ஒரு சித்தாந்தத்தில் இருத்திக்  கொள்ளாமல்   பெளத்தம், ரமணர், ஜேகே ஆகியோரின் வழியாக தனக்கான புரிதலைக் கண்டடைகிறான். ஹோமியோபதி மருத்துவ முறையில் ஒரு விளக்கம் சொல்வதுண்டு. அங்கு எந்த நோய்க்கும் அவர்கள் மருந்து அளிப்பதில்லை. நோயாளிக்குத்தான் மருந்து அளிப்பார்கள். ஜுரத்துக்கு இந்த மருந்து என்கிற வழி அங்கு இல்லை. நோயாளியின் உடல்நிலை மனநிலை எல்லாம் அலசப்படும்.  நோயாளிக்கு வரும் கனவுகள் முதல் அவர் உண்ட உணவு வரை கேட்கப் பட்டு  அதற்கேற்ப மருந்து அளிக்கப்படும்.  இங்கு ஜெரிகூட தனக்கான புரிதல்களை தியானமுறைகளை அவ்வாறு தனித்துவம் கொண்ட, தனக்கேயான ஒன்றாக கண்டடைவது இந்த புத்தகத்தின் சிறப்பு. நாம் ஒரு யோக ஆசிரியரை சென்று சேர்வதே பரம்பரையாக நம் குடும்ப மரபில் வரும் ஒன்றை மீறும் ஒன்றுதான். ஆனால அங்கும் நாம் எதிர்கொள்ளும் முதல் கேள்வி, நாம் எந்த யோகா ட்ரெடிஷன் -ல் வருகிறோம் என்பது. அது ஒரு முரண்நகை. ஒவ்வொரு மனிதனும் தனித்துவமானவன்தான். ஒருவருக்கு பொதுவான உடல்நல சிகிச்சையே ஒத்துவராது என்கிற பொழுது, அவனால்  பொதுவான மனநல, தியான அனுபவங்களுடன் எவ்வாறு பொருத்திக் கொள்ள இயலும் என்கிற ஜெரியின் குழப்பம் கூட உண்மையானதுதான். அதனால்தான் அவன் கண்டடைந்த தீர்வு பெளத்தம், ரமணர், ஜேகே என எல்லா வழிகளையும் அறிந்து அதிலிருந்து இவை அனைத்தும் கலந்த ஒன்றைத் தனக்கானதாக கண்டடைந்த விதமாக அமைகிறது. இதை நமக்குத் திறந்து  வைப்பதன் மூலம் ஒரு கைகாட்டியாக ஒரு திசையை வாசகருக்கு இது காட்டுகிறது.




புத்தரின் போதனைகளில் ஆழ்ந்திருக்கும் ஜெரி,  அதன்பின் ரமணாஸ்ரமம் நோக்கி ஒரு உந்துததில் செல்லும் இடம் கவித்துவமான உதாரணத்துடன் வருகிறது. ஜெரி போகும்போது எதிரில் ஒருவன் கையேந்துகிறான். ஜெரி அவனிடம் தனது  கையில் இருந்த கடலை பொட்டலத்தை அளிக்கிறான். அவன் அதைக் கொட்டிவிட்டுச் செல்கிறான். காலிக்கோப்பையில் தான் வேறொன்றை நிரப்ப முடியும் என்பது ஜென் தத்துவம். தான் உதிர்ந்த இடத்தில் ஒடுங்குதல் என்பதும். இதில் தான் யார் என்கிற கேள்வியுடன் அவன் ரமணரை நோக்கிச் செல்கிறான். சேவியர் மற்றும் ஜெரி வாயிலாக குறிப்பிடப்படும் ஜெரியின் வாழ்க்கையில், சேவியர் சொல்வது அவனது புறவெளியும் ஜெரி சொல்வது அவனது அகமும் என்று கொண்டால், இந்த அத்தியாயங்களுக்குப் பின் சேவியர் சொல்வது புத்தகத்தில் எங்கும் வரவில்லை. மொத்தமும் ஜெரியின் அகம்தான் வெளிப்படுகிறது என்றும் எடுத்துக் கொள்ள முடிகிறது.

 

’'பிறப்பு துன்பமானது. வாழ்க்கை துன்பமானது. மரணம் துன்பமானது’ என்பது ஒருவித போதனை. அனைத்து கவிஞர்களுக்கும் புத்தர் ஆதர்சமாக இருப்பதற்கு இந்த சிந்தனை கூட காரணமாக இருக்கலாம்.  தன்னுடைய இருப்பைப் புறந்தள்ளி தன் வாழ்வை கேள்வியாக்கும் படைப்புகள் ஏராளம் வருகின்றன.  அத்தனைக்கும் ஆசைப்படு என்பதும் ஒரு போதனை.  இது மற்றோரு எல்லையாக இருக்கிறது. இது அனைத்தையும் கொண்டாடு. கடன் வாங்கியாவது இன்பமாக இரு என்கிற கோட்பாட்டை கொண்டிருக்கின்றது. இரண்டுமே தன் இருப்பை, அதன் நோக்கத்தை புறக்கணித்து வேறொன்றை நோக்கிய ஒன்றாக இருக்கின்றன. எளிதில் கிட்டும் வழியாக இவை இரண்டுமே இருக்கின்றன. ஜெரி இவற்றுக்கிடையே தன்னை ஆராய்கிறான். இந்த நாவலின் இரண்டாம் பாதி முழுவதும் அதற்கான தேடலைக் கண்டடைகிறான்.  புரிதலை முன்வைக்கிறான். தன் அனுபவம், தன்  வாழ்க்கை, தன் பணி , தன் சுற்றுப்புறம் வாயிலாக ஜெரி கண்டடைந்த ஒன்று. அது இருப்பை நிந்திக்கவில்லை. மாறாக, அது இருப்பை புரிந்து கொண்டு ஆனந்தத்தை அடைய வழி சொல்கிறது. இந்த ஆராய்ச்சிகள் வழியாக மற்றவருக்கான தீர்வோ உபதேசமோ இல்லாமல் தனக்கேயான ஒன்றை வாசகரும் அறியத் தூண்டுகிறது. அதுவே இதன் தனிச்சிறப்பும். இறுதியில் எங்கும் நிறைந்த தற்பரம் தன்னையும் அதன் பாகமாக உணரச் செய்து,  தான் வெறும் தானாய் மட்டுமே நிலைகொள்கிறது

Tuesday, February 23, 2021

ஆள்தலும் அளத்தலும் சிறுகதை தொகுப்பிற்கான முன்னுரை


எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் என் முதல் சிறுகதைக்கு அவரது இணையதளத்தில் ஒரு நீண்ட விமர்சனத்தை எழுதினார். .  விடிவு என்கிற அந்தக் கதை என் வாழ்வில் ஒரு நேரடி அனுபவமே. இந்தத்தொகுப்பில் உள்ள சிறுகதைகளில்  நேரடி அனுபவத்தை அப்படியே கதையாக்கியதும் அது ஒன்று தான். விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் நண்பர்கள் குழுவில் இருந்த எழுத்தாளர் சிவா. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் சொல்வனம் இதழின் ஆசிரியர் குழுவிலும் உள்ளார். அவர் மற்ற அனைவரையும் எழுதுவதற்காக தொடர்ச்சியாக வற்புறுத்தியும் வந்தார். அது என் முதல் கதை என்பதால் பிரசுரமானதும் எழுத்தாளர் ஜெயமோகனுக்கு  ஒரு ஆர்வத்தில் அனுப்பி வைத்தேன். அதற்கான அவரது  விமர்சனம் என் மீதான அக்கறையின்பால் எழுதப்பட்டது. அந்தக் கதை முந்தைய எழுத்தாளர்களில் யாருடைய சாயலில் உள்ளது; அவ்வகை கதைகள் எவ்வாறெல்லாம் எழுதப்பட்டுள்ளன;  எனது கூறுமுறையில் நல்லவை அல்லவை என்னென்ன; இனி வரும் கதைகளில் நான் தொடர வேண்டியவை என்ன விட வேண்டியவை என்னென்ன என அவர் விரிவாக எழுதினார். தான்தோன்றித்தனமாக ஒரு தெருவோரத்தில் பாடிக்கொண்டிருப்பவனைக் கண்ட ஒரு இசைமேதை இறங்கி வந்து அவனுக்கு அதன் நிறைகுறைகளை விளக்கிச் சொல்வது போன்றது அது.  அந்த சிறுகதைக்குப் பல வாசகர்களும் தங்கள் விமர்சனங்களை எழுதி அவையும் தளத்தில் வெளியாயின. இந்தத் தொகுப்பு இன்று வெளியாக அன்று அவர் காட்டிய அன்பும் அக்கறையும் ஒரு முக்கியக் காரணம். அவருக்கு என் நன்றியை உரித்தாக்குகிறேன்.


    எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்களின் புகழ்பெற்ற வாசகம் ஒன்று உண்டு ’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல; ஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்து கொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி!’ என்று. இந்தத்தொகுப்பில் நானும் அதற்கான என் முதலடியையே எடுத்து வைத்திருக்கிறேன். அவரது மோஹித்தே, நாட்டுமருந்து ஆகிய கதைகள்  நான் இலக்கியத்துக்கும் வணிக எழுத்துக்கும் வித்தியாசம் அறியா காலத்தில் படித்தவை. மிதவை நாவல் பிற்காலத்தில் அறிந்து வாசித்த ஒன்று. விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் மூலமாக அவரை அணுகி உரையாட வாய்ப்புகள் வாய்த்தன. இவை தொகுக்கப்பட்டால்  அவருடைய  முன்னுரை வேண்டும் என்று நான் கதைகளை எழுதிய போது நினைத்துக்கொண்டேன். அவரும் ஒப்புக்கொண்டு எழுதிக் கொடுத்துள்ளார். அவரது முன்னுரையை பெரும் கெளரவமாகவும் ஆசியாகவும் கருதுகிறேன். வணிக இதழ்களில் தன் எழுத்துக்கள் மூலம் நவீன இலக்கியத்தை அறிமுகம் செய்த எழுத்தாளர்களான சுஜாதா மற்றும் எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோரையும் இக்கணத்தில் நினைத்துக்கொள்கிறேன்.




சமூக வலைதளங்கள் தமிழுக்கு அறிமுகமான சமயத்தில் வலைப்பூ, ஆர்க்குட் போன்றவற்றில் சில பத்திகள் எழுதியிருக்கிறேன். அவற்றில் நிகழும் தொடர் விவாதங்களில் பங்கெடுத்துப் பத்திகளாக எழுதினேன். ஆனால் எழுத்து என்பது வேறு; அது டைரி எழுதுவது போல அன்றாட அலைச்சல்களின் தொகுப்பு மாத்திரம் அல்ல; அன்றாடங்களிலிருந்து நாம் உணரும் ஒன்று என்று நம்புகிறேன். என்னுடைய கதைகளில் ஒரு சிறுகதைக்கான தருணம் இருக்கிறதா என்று கவனிக்கிறேன். என் கதைகளின் வழியே நான் சொல்ல  வருவது வெறும் அதிர்ச்சியோ அல்லது நகைச்சுவையோ மாத்திரம் அல்ல என்பதில் கவனமாக இருக்கிறேன். கதைகளை வாசிப்பவரை மகிழ்விக்கும் நோக்கமோ அவரது அறிவுக்கண்ணை திறந்துவைக்கும் ஆவலோ இருந்ததில்லை. நான் அறிந்த களங்கள் எனக்கு சிலவற்றைச் சொல்ல இலகுவாக இருக்கின்றன என்பது மறுப்பதற்கில்லை. அந்தப் பின்புலம் உதவியாக இருந்தது. அனுபவங்கள் அறிதல்கள் என அனைத்தையும் ஒரு கலைடாஸ்கோப்பில் போட்டு சுழற்றிச்சுழற்றிக் காட்டுவது போலத்தான் இவை வெளிப்பட்டிருக்கின்றன.


இந்தத் தொகுப்பில் உள்ள ‘ஆர்வலர்’ கதை  எழுத்தாளர்கள் அரவிந்தன் மற்றும் ஆர். அபிலாஷ் ஆகியோர் நடுவர்களாக இருந்த கிழக்கு பதிப்பகத்தின்  ’சென்னையர் கதைகள் -2018’ சிறுகதை தொகுப்பில் தேர்வானது. மற்ற கதைகளில் நான்கு சொல்வனம் இணைய இதழிலும் மூன்று பதாகை இணைய இதழிலும் வெளியாகின. இரு கதைகள் இங்கு நேரடியாகப் பிரசுரமாகின்றன. நண்பரும் இலக்கிய விமர்சகருமான ஜா.ராஜகோபாலன் ஒரு சிறந்த திருத்தரும் ஆவார். அவரது ஆலோசனைகள் மிகவும் உதவியாக இருந்தன.  நண்பர் அருணாச்சலம் மற்றும் ஆனந்த் ஸ்ரீநிவாசன், தனா ஆகியோரும் ஒன்றிரண்டு தவிர அனைத்து கதைகளையும் பிரசுரமாவதற்கு முன்பே படித்து கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். அரங்கசாமி, ஷிமோகா ரவி, சுனில் கிருஷ்ணன், சுந்தரவடிவேலன், சுரேஷ்பாபு, செளந்தர்ராஜன், நட்பாஸ் ( பதாகை ), கிரிதரன்(சொல்வனம்) ஆகியோரும் ஊக்கமும் உற்சாகமும் அளித்துள்ளனர். வாசகசாலை அமைப்பினர் இதன் மூன்று சிறுகதைகளை தங்கள் அமர்வுகளில் விவாதித்துள்ளனர். இவர்கள் தவிர இலக்கிய வட்ட நண்பர்கள் ஒவ்வொரு கதை வெளியான போதும் தம் விமர்சனங்களை முன்வைத்து உரையாடினர். இவையனைத்தும் எனக்குப் பெரும் உற்சாகத்தை ஊட்டின. ’நற்றிணை’ யுகன் அவர்கள் பதிப்பித்த என் முதல் மொழிபெயர்ப்பு நாவலான ’தம்மம் தந்தவன்’ எனக்கு ஏற்கனவே இலக்கிய உலகில் நல்ல அறிமுகத்தைக் கொடுத்திருக்கிறது. 


ஒரு ஆற்றைக் கடந்து செல்ல அதன் நடுவில் சாய்த்து வைக்கப்பட்டிருக்கிற தென்னை மரத்தில் நடப்பவன் போல முழுக்கவனத்துடன் தான் என் லெளகீகத்தில் நடந்து கொள்ள வேண்டியிருக்கிறது. நடுநடுவே சிரிப்பது, அழுவது, அன்பு பாராட்டுவது, சீற்றம்கொள்வது என எதைச் செய்தாலும் ஒரு கண்ணை அந்த மரத்தின் மீது வைத்தபடியேதான் செய்ய இயல்கிறது. இருந்தாலும் என் ஆர்வத்தைப் புரிந்து  கொண்டு குடும்பத்தினரும் என் வாசிப்புக்கும் எழுத்துக்கும் ஆதரவாக இருக்கின்றனர். 

மேற்சொன்ன அனைவருக்கும், இந்தத் தொகுப்பை பதிப்பிக்கும் ’யாவரும்-பதாகை’ பதிப்பகத்தாருக்கும் இத்தருணத்தில் என் அன்பும் நன்றிகளும்.

R.காளிப்ரஸாத்

திருமுல்லைவாயல், சென்னை


‘ஆள்தலும் அளத்தலும்’ சிறுகதை தொகுப்பிற்கு எழுத்தாளர் நாஞ்சில்நாடன் அவர்களின் முன்னுரை

புத்தகம் வாங்க