Tuesday, July 16, 2019

புத்தரைச் செலுத்திய விசை



தம்மம் தந்தவன் மொழிபெயர்ப்பு நாவலுக்கு எழுதிய முன்னுரை

புத்தர் வாழ்வில் நிகழ்ந்த பல சம்பவங்களும் அவரின் உபதேசங்களும் பல்வெறு வடிவங்களில் நாம்மை வந்தடைந்தபடியேதான் இருக்கின்றன. நாடகத் தருணங்கள்,  நீதிக்கதைகளாக வந்திருக்கின்றன. ஒரு பறவையை வீழ்த்தியவனைவிட அதைக்  காப்பாற்றியவனுக்கே அது உரிமையானது என்கிற கதை மூலமாகவே நான் சிறுவயதில் முதன் முதலாக சித்தார்த்தனைப் பற்றி அறிகிறேன். சித்தார்த்தன் தன் மனைவியையும் குழந்தையையும் விட்டுவிட்டு ஞானம் அடைய சென்ற அகத் தத்தளிப்பைச் சித்தரிக்கும் இட த்தைப்  பலர் கவிதைகளாக புனைந்திருக்கின்றனர். சித்தார்த்தன் புத்தரான பிறகு அவர் உபதேசித்தவை ஜென் கதைகளாகவும் புத்தரின் சொல் என்ற வகையில் ஓரிரு வரிகளாக தொகுக்கப்பட்டும் இன்றும் நாம் காணும் பதாகைகளிலோ நம் கைபேசியில் வரும் குறுஞ்செய்திகள் வடிவிலோ நம்மை வந்தடைந்துகொண்டுதான் இருக்கின்றன. இவ்வாறு எக்காலத்திற்கும் பொருத்தமான உபதேசங்களை அவர் அளித்துவிட்டுச் சென்றிருக்கிறார் என்று எண்ணுகையில் வியப்பு மேலிடுகிறது. 

இவ்வண்னம் புத்தர் காலத்திற்கு அப்பாற்பட்டு நின்றாலும், அவரை இங்கனம் செலுத்திய விசை எது என்பதை அறியும் ஆவல் எழாமல் இருந்ததில்லை. ஒரு கதையாகக் காண்கையில், நம் மண்ணிம் பெரும் நாயகர்களான ராமனும் கிருஷ்ணனும், வீறு கொண்டெழுந்து,  இவ்வுலகுக்கு புதிய அறத்தை போதித்திருக்கிறார்கள். அதற்குத் தேவையான காரணங்கள் அவர்களின் வாழ்விலேயே  நிரம்பியிருக்கின்றன. அவர்களைக் காழ்ப்பும் வஞ்சமும் சூழ்ந்திருக்கின்றன. தன் இளமையில் உற்றார்களாலேயே அலைகழிக்கப்படுகின்றனர். அவர்களுக்குப் பாதகமானவர்களாக முறையே கைகேயியும் கம்சனும் திகழ்கிறார்கள்.  அதே உலகியல் பார்வையில் சித்தார்த்தனை நோக்கும்போது,  சித்தார்த்தனுக்கு வாய்த்தவர்கள் அனைவருமே அவனுக்கு மிகவும் சாதகமானவர்கள். ஒருக்காலும் அவனுக்கு தீங்கு விழைவிக்க எண்ணாதவர்கள். இவர்களிடமிருந்து விலகி, பிரிந்து சென்று அவன் தனித்தலைய வேண்டி இருந்ததற்கான காரணங்கள் எவை என்பதை அறியும் ஆவல் ஒரு வாசகனுக்குள் இயல்பாகவே தோன்றக்கூடும். காழ்ப்பும் குரூரமும் ஒருவனை விரட்டுவதைப் போல, மாசற்ற அன்புமே கூட ஒருவனைத் விரட்டியடிக்குமா என்ற ஐயம் எனக்குமே தோன்றியிருக்கிறது.  அத்தகைய தருணத்தில்தான் இந்நாவல் வாசிக்கக் கிடைத்தது.




    விலாஸ் சாரங், சிறந்த புனைவாசிரியர்.  இந்நாவலில் புத்தரின் வாழ்க்கையோடு மட்டுமன்றி, மேற்சொன்ன நீதிக்கதைகள், கவிதைகள், உபதேசங்கள் ஆகிய அனைத்தையுமே எதிர்பாராத விதங்களில் கலந்து அளித்திருக்கிறார். கூடவே புத்தரின் வாழ்க்கையில் முன்னும் பின்னும் நிகழந்த சம்பவங்களைத் தொகுத்தும் இதை ஒரு சுவாரசியமான நாவலாக ஆக்கியிருக்கிறார்.  காலமும் தூரமும் தோன்றிய பின்னர்தான் உலகில் உயிரினங்கள் தோன்றுவதற்கான காரணிகள் உருவாயின என்று சொல்லப்படுகிறது. இந்நாவலில் கூட சில தருணங்களை அவர் காலமும் தூரமும் கொண்டுதான் விளக்குகிறார். அதில் தனக்கான ஒரு சுதந்திரத்தையும் எடுத்துக் கொள்கிறார். உதாரணமாக, கதாபாத்திரங்கள் உரையாடுகையில் இடையே தற்கால சொற்களை கதைகளை உள்நுழைக்கிறார். இது ஆங்கிலத்தில் எழுதப்பட்டது என்பதால் தன் ஆங்கில வாசகர்களின் புரிதலுக்காக லில்லிபுட், எலிசபெத், கதைகளையும் கதாபாத்திரங்களின் உரையாடலுக்கிடைய உட்புகுந்து உரைக்கிறார். அதுவும் மிக இயல்பாகவே எவ்விடத்தில் துருத்தைக்கொள்ளாமல் அவரின் தனித்துவ நடையுடன் இயைந்து கொள்கிறது. இந்நாவலை வாசிப்பவர்கள், புத்தரின் வாழ்க்கையை மட்டுமன்றி, அன்றைய மக்களின் பழக்கவழக்கங்கள், கல்விமுறைகள் எவ்வாறு இருந்தன அதிலிருந்து பெளத்தம் எவ்வாறு எழுந்து வந்தது என்னும் ஒட்டுமொத்த புரிதலையுமே அடைந்துவிடமுடியும். அவ்வகையில் இது ஒரு சிறந்த துவக்கமாகவும் விளங்கும்.
இம் மொழிபெயர்ப்பிற்கு ஊக்கமளித்த யுகன் அவர்களுக்கும், உறுதுணையாக இருந்த என் குடும்பத்தாருக்கும், இப்புத்தகத்தை சிறப்பாக வெளியிட்டிருக்கும் நற்றிணை பதிப்பகத்தாருக்கும், மொழிபெயர்ப்பை முதலில் வாசித்து பிழைநீக்கி செம்மைபடுத்திய ஸ்ரீநிவாஸன் அவர்களுக்கும் என் நன்றியையும் வணக்கத்தையும் இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

Sunday, July 14, 2019

மொழிபெயர்ப்பு அனுபவம்

கேயாஸ் தியரி என்றும் வண்ணத்துப்பூச்சி விளைவு என்றும் தசாவதாரம் திரைக்கதை என்றும் சொல்லப்படுகிற தற்செயல்களின் தொடர்ச்சியினை விளக்க, இந்த மொழிபெயர்ப்புப் பணி என்னை வந்தடைந்ததையும் சொல்லிக்கொள்ளலாம்.

வெண்முரசில் கிராதம் நாவல் எழுதும்போது  ஜெயமோகன் அவர்களுக்கு கன்னட எழுத்தாளர் ஹெச்.எஸ்.சிவபிரகாஷ் அவர்களின் நினைவு வருகிறது. அவரை விஷ்ணுபுரம் விழாவில் சிறப்பு விருந்தினராக அழைக்கிறார். வந்தவர், இதுபோல பிறமொழிகளின் படைப்பாளிகளை அறிமுகப்படுத்துவதையும் விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் முன்னெடுக்க வேண்டும் என்று சொல்கிறார். அதைச் சிரமேற்கொண்ட ஜெ. தொடர்ந்து பிறமொழி எழுத்தாளர்களை தமிழுக்கு அறிமுகப்படுத்துவதை ஒவ்வொரு விஷ்ணுபுர விழாவிலும் தொடர்கிறார். அவ்வரிசையில் இரண்டாவதாக வந்தவர்தான் மேகாலய எழுத்தாளரான ஜெனீஸ் பரியத் அவர்கள். அவரது ஆங்கில சிறுகதைத் தொகுப்பான Boats on Land யுவபுரஸ்கார் விருது பெற்ற ஒன்று. அதைத் தமிழில் நிலத்தில் படகுகள் என்று விஷ்ணுபுர இலக்கிய வட்ட நண்பர்கள் மொழி பெயர்த்தோம். அதில் Discovery of flight எனும் சிறுகதையை பறத்தலைக் கண்டடைதல் என்று நான் மொழிபெயர்த்திருந்தேன்.


இனி அங்கிருந்து இன்னருத நிகழ்விற்கு தாவுவோம். தஸ்தவ்யேஸ்கியின் தமிழ்க்குரலாக எம்.ஏ.சுசீலா அவர்கள், அவரது குற்றமும் தண்டனையும், அசடன் உள்ளிட்ட பெருநாவல்களையும், மற்ற நாவல்களையும் சிறுகதைகளையும் மொழிபெயர்த்திருக்கிறார்.  சென்ற வருடம் எம்ஏ சுசீலா அவர்களுக்கு விஷ்ணுபுரம் இலக்கிய வட்டமும் ரஷ்ய கலாச்சார மையமும் சேர்ந்து பாராட்டு விழா நடத்தினோம். அப்புத்தகங்களின் பதிப்பாளரும் நற்றிணை பதிப்பகத்தாரே.  அது தொடர்பாக அவரை அணுகியபோது,  கூடவே, நிலத்தில் படகுகள் தொகுப்பை விரைவில்  கொண்டுவரவேண்டும் என்ற துடிப்புடனும் இருந்தோம்.   அப்பொழுதுதான்  The Dhamma Man என்கிற இந்த நாவலை மொழிபெயர்க்க அளித்தார். அதை வாங்கும் பொழுது, ஒரு வாரம் அந்த நாவலை வாசிக்க மேலும் ஒரு மாதம் அதை மொழிபெயர்க்க என எனக்கு நானே குறித்து வைத்துக்கொண்டேன். அதன்பின் 2018 மேமாத ஊட்டி காவிய முகாம் தலைக்கு மேல் இருக்கிறது.


(கவர்னர்) ஸ்ரீநிவாஸன்

எழுத்தாளர் விலாஸ் சாரங், அடிப்படையில் கவிஞர் மற்றும் சிறுகதையாசிரியர். ஆகவே அந்தக் கச்சிதம் அவரது நாவலிலும் வெளிப்படுகிறது. அவரது  நடையில் மேலும் என்னை ஆச்சரியப்படுத்தியது அவரது கதை சொல்லும் முறை. அது ஆசிரியர் குரலாக துவங்கும். திடீரென ஒரு பணியாள் வழியாக பயணிக்கும். சில நேரங்களில் சித்தார்த்தன் குரலாகவும்.

ஜெயமோகன் எழுதும் வெண்முரசு நாவலில் அத்தனை கதாபாத்திரங்களின் மனவோட்டங்களும் எழுதப்படவில்லை. கிருஷ்ணன், திரெளபதி,கர்ணன் கணிகர் போன்றவர்கள் என்ன நினைத்தார்கள் என்பதை ஜெயமோகன் எழுதுவதில்லை. அவர்கள் கடவுள்களா மானுடர்களா என்ற புதிரை லாவகமாக கையாண்டு வருகிறார். அதேபோல, இந்நாவலில் விலாஸ் சாரங் அவர்களும் சித்தார்த்தனின் மனம் என்ன நினைக்கிறது என்று எழுதியது போல் புத்தரின் மனவோட்டத்தை எழுதுவதில்லை. மேலும் காலம் மற்றும் தூரம் போன்ற காரணிகளைக் கொண்டு நாவலை நகர்த்திச் செல்வார். நாவலை படித்து முடித்து இந்தப் புரிதலை அடைந்தவுடன் நான் மொழி பெயர்க்கத் துவங்கினேன். அச்சமயத்தில்  நான் செய்த மிகை பாவனை ஒன்று உண்டு

முதலில் அதை தட்டச்சிடாமல் நற்றிணை பதிப்பகம் அளித்த கநாசு படம் போட்ட  நாட்காட்டியில் எழுதத்துவங்கினேன். தட்டச்சிடாமல்  எழுதுவதில் ஒரு இன்பம் இருக்கிறது. நான் என்னை கநாசு முதலான மொழிபெயர்ப்பாளர்களின் வரிசையில் வைத்து நினைத்துக்கொண்டேன் அல்லது மீண்டும் சரிபார்க்க வசதியானது என எண்ணிக்கொண்டேன்.  எழுத்தாளர் யுமாவாசுகி மற்றும் எம்.ஏ.சுசீலா ஆகியோரின் மொழி பெயர்ப்புகளை விரும்பி  படித்திருப்பதால் அவர்களை ஆதர்சமாக கொண்டு எழுதத துவங்கினேன்.  ஒரு மாதத்தில் முடித்து மே மாத  ஊட்டி காவியமுகாமிற்குள் அளித்து விட வேண்டும் எனத் துவங்கியவன், ஒரு  நாளைக்கு ஒரு பக்கம் என எழுதி 2018 ஆகஸ்டு மாத ஈரோடு புத்தக கண்காட்சிக்குள் அளித்து விட வேண்டும் என என் விதிமுறைகளைச் சற்று தளர்த்திக் கொண்டேன். அதற்குள் ஒரு குழுவாக இணைந்து நிலத்தில் படகுகளை சரிபார்த்து அளத்துவிடலாம் என அதற்குள் இறங்கி அதை அளித்து வைத்தோம். அதற்குள் செப்டம்பர் வந்திருந்தது. நான்  மொழிபெயர்ப்பில் இரு பக்கங்கள் எழுதி முடித்திருந்தேன்.

நடுவே குமரகுருபரன் விருது விழாவிற்காக கவிஞர். கண்டராதித்தன் படைப்புகளைப் படித்தேன். என் முதல் மேடை உரை அங்கு நிகழ்வதால் அதற்கு முன்னுரிமையை அளித்தேன். அதன்பின் டிசம்பர் மாதம் நிகழவிருக்கும்
விஷ்ணுபுரம் விருது விழாவின் நாயகரான பேராசிரியர்: ராஜ் கெளதமன் படைப்புகளையோ அவரது திறனாய்வுகளையோ நான் அறிந்தவனில்லை. ஆகவே அதை முடித்துவிட்டு இங்கு வரலாம் என அவர் புத்தகங்களை படிக்கத் துவங்கினேன். சிலுவைராஜ் தொடர் நாவல்களை படித்து ஆகோற்பூசல் வந்திருந்தேன். அதற்குள்  விஷ்ணுபுரம் விழா பங்கேற்பாளரின் பட்டியலை ஜெ. அளித்தார். ஸ்டாலின் ராஜாங்கம், எஸ்.செந்தில்குமார்  என நான் அதிகம் படித்திராத எழுத்தாளர்கள் பட்டியல். ஆகவே அவற்றையும் வாசிக்கத்துவங்கியிருந்தேன். நல்லவேளையாக சுனில் கிருஷ்ணன் அரங்கு எனக்கு ஒதுக்கப் பட்டிருந்தது. ஆசுவாசமாக உணர்ந்தேன்.

விஷ்ணுபுரம் விருது விழா முடிந்து 2019 ம் ஆண்டு தைப்பொங்கலும் முடிந்திருந்த அந்த தருணத்தில் நான் மூன்று அத்தியாயங்களை எழுதியிருந்தேன்.  சென்னைப் புத்தக கண்காட்சியே கடந்துவிட்டிருந்த்து. ஆனால் அந்த எட்டு மாதங்களில் காணும் கலைப்பொருள்களில், பைக் மற்றும்  கார் ஸ்டிக்கர்களில், சுடிதார் சேலை டிசைன்களில், மேகத்தின் வடிவங்களில் புத்தரே கண்ணில் தென்பட்டுக்கொண்டிருந்தார். கடன் பட்டார் நெஞ்சம் போல பதறிக் கொண்டிருந்தது மனம். தம்மன் என்கிற பெயரில் மொழிபெயர்த்திருந்த அந்த புத்தகத்தின மற்ற அத்தியாயங்களை மனதில் மட்டுமே எழுதிவைத்திருந்தேன். மீண்டும் அதை டைரியில் தொடர்ந்து எழுதத் துவங்கினேன்.  என் மீது எனக்கிருந்த கோபத்தில்  வாட்சப்பை அன்இன்ஸ்டால் செய்ததை எண்ணி இப்பொழுதும் வியந்துகொள்வதுண்டு. முழுவதையும் எழுதி முடித்த போது 2019 ம் ஆண்டின் ஊட்டி காவியமுகாமற்கான படைப்புகள் வரத்துவங்கியிருந்தன.



ஆனால் இத்தனை வாசித்திருக்காவிடில் விலாஸ் சாரங் எளிதாக தொகுத்துச் சொல்லிச்செல்லும் வேத காலமும் இந்திய மரபும் பிடிபட்டிருக்குமா
என்பது ஐயமே!
வேத கால நெறிகள்,உபநிடத காலம் அதைத்தொடர்ந்து பெளத்தத்தின் எழுச்சி என அனைத்தும் இறுதியில் நம்மால் விளக்கக்கூடிய அளவில் நாவலுக்கிடையே புகுத்துவது என்பதே விலாஸ் சாரங்கின் வெற்றி. அதிர்ஷ்டவசமாக முன்பே வெண்முரசு வாயிலாக இது எனக்கும் அறிமுகமாகிவிட்டிருந்தது. சொல்லப்போனால், இதில் வரும் சிருஷ்டி கானம் உபநிடத வரிகள் போன்றவற்றை ஏற்கனவே ஜெயமோகன் அவர்களின் வலைதளத்தில் படித்தும் இருக்கிறேன். குறிப்பாக  சொல்வளர்காடு நாவல். இந்நாவல் அங்கிருந்து வேறு கோணத்தில் இது நகர்ந்தாலும் அடிப்படைகளின் புரிதல் இருந்தது.

அதேபோல, மூன்று மாதங்களில் எழுதக்கூடிய ஒன்றுதானா ஒருவருடம் இழுத்தது என்று கேட்டால் கண்டிப்பாக இல்லை. ஒருநாளில் எளிய தியானத்தில் அடைந்த மெய்மையை அடைய முடியாமலா சித்தார்த்தன் அத்துனை வருடங்கள் அலைந்தான்? ஞானம் அடைவது எங்கனம் என்று ஜென் குருவிடம் சீடன் கேட்கிறான். அவர் தன் கையில் உள்ள பிரம்பால் அவன் தலையில் அடிக்கிறார். அந்த்பிரம்படி கணம் நம்மை வந்தடைய நாம் காத்திருக்கத்தான் வேண்டும்

அதன் பின்னர்தான் நான் துவக்கத்தில் கூறிய மிகை பாவனையின் பக்க விளைவு ஆரம்பமானது. அதை நான் இனி தட்டச்சு செய்து பதிப்பகத்தற்கு அனுப்ப வேண்டும். அது மட்டுமே மீண்டும் மூன்று மாதங்கள் எடுத்துக்கொண்டது. யாரிடமாவது தரலாம் எனில் அவர்களுக்கு என் கையெழுத்து புரியவில்லை. மேலும் இன்னொரு முறை நாமே சரிபார்த்தவிதமாகவும் ஆகிவிடுகிறது என்பது என் எண்ணமாக இருந்தது. ஆனால் அது தவறான எண்ணம். தட்டச்சு செய்வதே சிறந்த வழி அல்லது நமக்காக தட்டச்சு செய்ய ஆட்கள் இருக்கவேண்டும்.



இறுதியில் மொழிபெயர்ப்பின் படிப்பினைகளாக நினைத்துக்கொள்ள  விரும்புவது கீழ் கண்டவை:-


அ) நம்மால் பதினைந்து நிமிடங்களுக்குள் ஒரு கட்டுரையோ அல்லது கருத்தைத் தொகுத்தோ  எழுத முடிகிறது என்பதை வைத்து மொழிபெயர்ப்பை அணுகலாகாது. மூலத்தின் வார்த்தைகளை தவறவிடாமல் பொருள் மாறாமல் சேர்க்க அதைவிட நாலு மடங்கு நேரமாகறது

ஆ) அச்சுப்பிரதியின் ஒரு பக்கம் என்பது நமக்கு இரு பக்கங்கள் எனக் கணக்கிடவேண்டும்.

இ) மொழி பெயர்ப்பிற்கு உகந்த நேரம் எது என்பதைக் கண்டறிய வேண்டும்

ஈ) நாவலின் கனமான பக்கங்களை மொழிபெயர்க்க மற்ற அத்தியாயங்களை விட நேரம் அதிகமாக ஆகிறது. இதில் யசோதரையும் ராகுலனும் புத்தரைச் சந்திக்கும் இடம் எனக்கு அத்தகைய சோர்வை அளித்தது.

உ) கையால் எழுதி சீன் போடுவதைவிட, நேரடியாக தட்டச்சிவிடுவதே நலம்

ஊ) மேற்சொன்னவை வெறும் மொழிபெயர்ப்பிற்கான புரிதல்களே! அலுவலக குடும்ப நெருக்கடிகள் அந்தந்த சூழலுக்கானவை

ஒரு நாளில் பத்து மணிநேரம் சராசரியாக அலுவலக வேலையே எடுத்துக்கொள்கிறது.  இந்த வேலையானாலும், இதர லெளகீக கடமைகளானாலும், இலக்கிய வாசிப்பானலும், என்னை யாரும் கட்டாயப்படுத்தவில்லை. இத்தனைக்கும் நடுவில் இதை செய்து முடிக்க வேண்டுமா என்று எண்ணும் போதெல்லாம் எனக்கு நானே சொல்லிக்கொள்வது ஒன்றுதான். 'இதைத் தேர்ந்தெடுத்தது நீ!'


இன்று இந்த புத்தகம் வெளியான சமயத்தில் நேரடிப் பங்கு வகிக்கும் இருவருக்கு நன்றி சொல்லவேண்டும். ஒருவர் நற்றிணை யுகன். பதிப்பாளர் என்பதையும் தாண்டி அவர் பொறுமையாக காத்திருந்து, அடிக்கடி தொலைபேசியில் அழைத்து உற்சாகமூட்டியபடி இருந்தார்.   அவருக்கு அளித்த ஒரு மாதத்திலேயே மீண்டும் ஒருமுறை பிழை பார்த்து சிறந்த வடிவமைப்பில் பதிப்பிக்கவும் செய்துவிட்டார்.  இரண்டாவதாக, திரு. ஸ்ரீநிவாசன் அவர்கள். அவர்தான், முதல்முறை படித்து அதை திருத்தியும்  அளித்தார். தம்மம் என்று பல நாவல்கள் வந்திருப்பதால் தம்மன் என்னும் பெயருக்கு மாற்றாக யுகன் கூறிய மற்ற பெயர்களில் தம்மம் தந்தவன் என்ற  பெயரே பொருத்தமாக இருக்கும் என்று முடிவு செய்தோம். இவ்வாறாக முன்பு கூறிய தற்செயல்கள் ஒரு நிலையை வந்தடைந்தன

இவர்களைத் தவிர மறைமுக காரணமாக குடும்பத்தினரும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட நண்பர்களும் மற்ற நண்பர்களும்  இருக்கின்றனர். அனைத்திற்கும் மேலாக நான் மனம் சோர்ந்து போகும்போதெல்லாம் மனச்சோர்வு என்று  அதை வெளியே சொல்லக்கூட நாணும் வண்ணம்  தன் குன்றா செயலூக்கத்தினூடே சோர்வென்பது இல்லாமல் இயங்கிக் கொண்டிருக்கும் ஜெயமோகனும் இருக்கிறார்
தொடர்புடைய பதிவு:- புத்தரைச் செலுத்திய விசை




Saturday, July 13, 2019

சாம்ராஜ்-ன் ஜார் ஒழிக சிறுகதை தொகுப்பு பற்றிய கலந்துரையாடல்


எழுத்தாளர் சாம்ராஜின் ஜார் ஒழிக குறித்த கலந்துரையாடலில் பேசியதின் எழுத்து வடிவம்

வாசகசாலை நண்பர்களுக்கு வணக்கம். தமிழகந்தோறும் இலக்கிய சந்திப்புகளை நிகழ்த்திவருவது என்பது சாதாரண வேலையில்லை. மாத கூட்டங்கள் நடத்துவதில் நானும் எனது சில நண்பர்களும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம். வெண்முரசு நாவலுக்கான கூட்டங்கள் மூலம் அதை நடத்துகையில் அதில் உள்ள ஆனந்தத்தோடு சேர்த்து இடர்களையும் அறிவோம். அவ்வகையில் வாசகசாலை இன்னும் பலதரப்பட்ட படைப்புகளையும் அறிமுகம் செய்து, வெவ்வேறு வாசகர்களையும் சந்தித்து இதை முன்னெடுப்பதில் இன்னும் நிறைய பக்குவமும் விடாமுயற்சியும் தேவைப்படும். கார்த்தி உள்ளிட்ட வாசகசாலை நண்பர்களுக்குப் பாராட்டுக்கள். நானும் சில கூட்டங்களில் இவ்வாறு வாசகனாக கலந்து கொண்டிருக்கிறேன். ஜோடி குரூஸ் கலந்துரையாடலும் வாசகசாலையின் விருதுவிழாவும் அதில் நினைவில் இருக்கின்றன. ஸ்டார் எழுத்தாளர்களின் அரங்கிறகுத் தான் நானும் வந்திருக்கிறேன் என்பதை ஒருவித குற்ற உணர்ச்சியுடன் நானும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.



            இன்றும் ஒரு ஸ்டார் எழுத்தாளரின் அரங்கு. அந்தவகையில் குற்ற உணர்ச்சி தொடருகிறது என்றே வைத்துக்கொள்ளலாம்.



 இலக்கிய உலகம் என்பது எப்பொழுதும் ஒரு தனித் தீவு போலத்தான். பொது வாசகர் உலகத்திலிருந்து விலகியே இருப்பது. பொது வாசகர்களுக்கு இலக்கியகர்த்தாக்கள் நேர்மறையாக அறிமுகமாகிறார்கள் அல்லது எதிர்மறையாக. நேர்மறையாக என்றால் கற்றதும் பெற்றதும் கதாவிலாசம் வழியாக என வைத்துக்கொள்ளலாம். தற்பொழுது எல்லாம், தமிழ் இலக்கியத்தில் பல எழுத்தாளர்கள் சர்ச்சை மூலமாகத்தான் பொது வாசகருக்கு அறிமுகமாகிறார்கள். அதன் பின் அவரது படைப்புக்களை வாசகன் படிக்கத் துவங்குகிறான். அவ்வாறு, அந்த சர்ச்சைகளைத் தொடர்ந்து வரும் வாசகர்கள், அதன்பின் சமூகம் இயல்புநிலைக்குத் திரும்பிய பின்னரும்  அந்த எழுத்தாளரை சர்ச்சைகளுக்கெல்லாம்  அப்பாற்பட்டு அவரின்  எழுத்துக்களுக்காக தொடர்ந்து வாசிக்கிறார் என்றால் அது அந்த எழுத்தாளர் அடைந்த வெற்றி என்று வைத்துக்கொள்ளலாம். அவ்வாறு தொடர்ந்து வாசிக்க வைக்கும் எழுத்தாளர்கள் வெகு சிலரே.



நான் ஜெயமோகன் சாம்ராஜ் இருவரையும் அறிந்தது இப்படிப்பட்ட சர்ச்சைகள் வழியாகத்தான். அந்த வகையில் அதில் இரண்டாமிடத்தை சாம்ராஜ் க்கு அளிக்கலாம்.

 சர்பத் கடையைத்தாண்டி முவிலேண்ட் வந்த பிறகுதான் அவர் படைப்புகளை வாங்கிப் படிப்பதற்கான ஆர்வம் ஏற்பட்டது. பட்டாளத்துவீடு தொகுப்பை தொடர்ந்து அடுத்த சிறுகதை தொகுப்பு இந்த ஜார்ஒழிக!





அவரின் இந்த ஜார்ஒழிக தொகுப்பினைப் பற்றி பேசுகையில் அவர் எதற்காக எழுதுகிறார் என்பதை முதலில் நாம் கவனிக்க வேண்டும் என்று தோன்றியது. அதன் வழியாக இந்த உரையைக் கொண்டு செல்லலாம் எனத் தோன்றியது. இதில் எனக்கு இரு நிலைகள் தோன்றுகின்றன. முதலாவது யாருக்காக எழுதுகிறார் என்பது, இரண்டாவது  ஏன் எழுதுகிறார் என்பது

முதலாவதில் அவரது வாசகராக யாரைக் கருதுகிறார்  என்று  ஒரு உட்கேள்வி  இருக்கிறது. அதிலிருந்து துவங்கலாம் என்று நான் நினைக்கிறேன்

            உதாரணமாக, ஒரு விஷ்ணு கோயில் இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அதில், கோயில் வாசலில் ஒருவர் கரும்பலகையில் இவ்வாறு எழுதி வத்திருக்கிறார்,,,

            'எழுந்தால் பாம்பு தலையில் கொத்திவிடும், நகரவிடாமல் இவன் காலை ஒருத்தி இறுக்கிப் பிடித்திருக்கிறாள். அதையும் உதறி இறங்கினால் இருப்பதோ ஒரு கடல். அப்படியிருக்கையில் இவனே தூங்கவில்லை. தூங்குவதுபோல நடிக்கிறான்.  இவனா நம் கஷ்டத்தை தீர்த்துவைப்பான்' என்று அதில் இருக்கிறது.

 இதைக் காணும் ஒரு வைணவர் மிகவும் புண்பட்டுப் போவார். எழுதியவனைப் பார்த்துத் தூற்றுவார். இதை ஒரு  அல்லது நாத்திகரோ இடதுசாரியோ ( அல்லது சைவரோ) கண்டால் எழுதியவரைப் பாராட்டுவார்கள்.

இனி அந்த உரையின் கீழே ஒரு ஆழ்வார் பெயரை இடுகிறோம். அதை எழுதியவர் பேயாழ்வார் என்று. அப்பொழுது இதைப் பற்றி முன்பு உரைத்தவர்கள், அப்படியே தான் உரைத்ததற்கு எதிர்நிலையை எடுப்பார்கள்.



 ஆனால் இருபக்கங்களிலும் ஒருசிலர் இருப்பார்கள், அவர்கள் முன்பும் சரி இப்பொழுது அவர் யாரென தெரிந்த பின்பும் சரி அதை ஒரு பெரும் புன்னகையோடே கடந்து செல்வார்கள். ஆமாம்யா.  நம்ம பிரச்சனைதான் சாமிக்கும் இருக்கு.. தலைக்கு மேல வீட்டுக்கடன் கொத்த ரெடியா இருக்கு.. நகரவிடாம வீடு இறுக்க பிடிச்சுகிட்டே இருக்கு. தப்பிச்சு போகலாம்னா, மொத்தமா மூழ்கித்தான் போகணும். அதனால், இந்த வீடே இப்போதைக்கு பரவால்ல. ஆண்டவா உன்னமாதிரியே தூங்குன மாதி இருக்க எனக்கும் வழிபன்ணா நானுமே சமாளிச்ச்டுவேன் ந்னு வேண்டிகிட்டு வருவார் ஒருவர். மற்றவரோ பாவம் நம்ம கஷ்டம்தான் இவருக்கும் போலிருக்கு. நம்பிக்கையா இருங்க தோழர்னு சொல்லி சிரித்துவிட்டுச் செல்வார். இவ்வாறு இரு பிரிவிலும் இதை உணர்ந்து கடக்க சிலர் இருப்பார்கள். அவர்களே சாம்ராஜின் வாசகர்கள் என்று சொல்லலாம் அந்த ஒரு புரிதல் இருப்பவரே சாம்ராஜை அணுக்கமாகப் புரிந்துகொள்ளமுடியும்.



            சாம்ராஜின் தொழில்புரட்சி கதையை வைத்து இதை அணுகுவோம். மிராச்லோவ் பென்கோ எழுதிய சிறுதையை லெனினை வாங்குதல் என்ற பெயரில் சுகுமாரன் மொழிபெயர்த்திருக்கிறார். அந்தக்கதையைப பற்றி நண்பர் பாரி சில மாதங்கள் முன்பு உரையாடினார்.நான் அவரின் அந்த ஒரு கதையத்தான் படித்திருக்கிறேன். அது முழுக்க முழுக்க கம்யூனிஸ்டுகளைப் கிண்டல் செய்யும் கதை. அதைப் படித்தால் தான் கம்யூனிஸ்டுகளை கிண்டல் செய்வதற்கும் பகடி செய்வதற்கும் உள்ள வேறுபாடு புரியும். மிராச்லோவ் ஒரு கம்யூனிஸ்டாக இருந்தவர்தான்.  ஆனால் ஒருவர் தன் வெறுப்பால் கிண்டல் செய்வதற்கும்  இதற்கும் வித்தியாசம் உண்டு.



லெனினை வாங்குதல் கதைக்கும் சாம்ராஜின் தொழிற்புரட்சி கதையையும் ஒரு சோற்றுப் பதமாக எடுத்துக்கொண்டு சாம்ராஜின் கதைகளை அணுகலாம்

அதை ஒரு மோசமான கிண்டல் எனச்சொல்லலாம். ஆனால்  இது பகடி நம் பாஷையில்  சொன்னால் கலாயப்பது..

அப்பர் எழுதிய பாடல் ஒன்று உண்டு.

நாகத்தை நங்கை அஞ்ச நங்கையை நாகம் அஞ்சி ....திங்களை மின்னென்று அஞ்சி என்று,

இந்தப்பாடலை விளக்கிய என் ஆசிரியர் சுற்றிலும் நாகத்துக்கும் நங்கைக்கும் பயந்த பக்கதர்களைக் கண்டுதான் இறைவன் புன்னகைக்கிறான். இது அப்பர்  செய்யும் பகடி என்று ஒரு விளக்கம் அளித்தார். அப்படியும் பொருள் கொள்ளலாம் தான்.அதனால் பக்தர்கள் கோபித்தால் அது யார் தவறு.

இந்த புரிதலோடு சாம்ராஜின் கதையை அணுகுபவர்கள்கூட அவர் இதில் மறைத்து வைத்திருக்கும் பல கன்னிவெடிகளுக்குள்  சிக்கக்கூடும். அதில் அவர்களின் அகங்காரமே சிதறக்கூடும். அல்லாவிடில், அது சம்பந்தப்பட்ட மக்களே அதைக் கவனிக்காமல் காலைவைத்து கலங்கவும் கூடும்.



            குள்ளன் பினு தன் வண்டியை நிறுத்த இடம் தேடுவது, நீரோட்டம் பார்ப்பவன் தண்ணீர் தேடுவது போல இருக்கும் என்று சொல்வார். ஒரு நவநாகரீக இளைஞனை குள்ளன் என்ற பதமே தொந்தரவு செய்யும். இது வெகுஜன இதழில் வந்திருந்ததா என்று தெரியவில்லை. வந்திருந்தால் அவர்களே மாற்றச்சொல்லியிருப்பார்கள் என்றும் கூட எதிர்பார்க்கலாம். ஆனால், ஒட்டுமொத்தமாக பார்த்தால்தான் புரியும் இது குள்ளன் கதைல்ல. அவன் உயரமானவன் என்று சொல்லும் கதை என்று.. இறுதியில் அவன் காணும் பிம்பம் அவனிடம் சொல்கிறது. தம்பி, இனி  உனக்கு மூர்த்தி சிறுசானாலும் கீர்த்தி பெருசு என்று. இங்கே அவர் கிண்டல் செய்யவில்லை அது ஒரு கரிசனம்தான். முன்பு அதைச் சொன்னால்தான் பின்பு இது உரைக்கும். ஒரு பகடியிலிருந்து ஆக்ரோஷத்துக்கு வந்து திகைப்பில் முடியும் அந்த சிறுகதை.



            பொதுவாகவோ இடதுசாரிகள் பரிதாபத்திற்குரிய ஜீவன்கள் அனைவர்  மீதும் கரிசனம் கொண்டவர்கள். அதை தீவிரமாக அணுகாமல் சற்று இளகிய மனதுடன் அணுகினால் வருவது இவர் படைப்புகள். ஏனெனில், மிகத்தீவிரமாக அல்லது அதே தீவிரத்தோடு அதைக்கடத்தும்போது அந்த பட்டியலில் இருக்கும் பல எழுத்தாளர்களொடு ஒருவராக இவரும் சென்று அமர்வார் என்று எண்ணத் தோன்றுகிறது. அவ்வரிசையிலிருந்து இப்படி தனித்திருக்க மாட்டார் என்று சொல்லலாம்.

உதாரணமாக, மல்லிகாவை கூட்டிப்போகிற ஆறுமுகம் அவளை என்ன செய்யப்போகிறான் எனபதை நமக்கு நேரிடையாக சொல்வதில்லை.  ஆறுமுகம் அவளிடம் வந்து சொல்லும் ஒரு விஷயம். பரங்கிமலையில ஜோதின்னு ஒரு தியேட்டர் இருக்காம் அதுல நான் வேலைக்குப் போறேன்ன்னு.. இதிலிருந்து நாம்தான் சில்வற்றை விளங்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது. ஒருவேளை அவன் இவளை வெறும் காமத்திற்காக மட்டுமே வைத்திருக்கிறானா என்பது. அதற்கான மர்ம முடிச்சான  இடமாக இது இந்தக் கதையில் உண்டு. ஆனால் பிறகு அவளை அவள் அண்ணன் பிரித்து  அடித்து இழுத்து வருகிறான்.இப்படி உறவுகளால் அலைக்கழிக்கப்பட்டலும் அவளின் தனிப்பட்ட ரசனை அந்த சினிமா ஆர்வம்தானே.  அது உடனே மாறுவதல்லை. அவள் பொய் சொல்லிவிட்டு சினிமா பார்க்க கிளம்பத்தான் செய்கிறாள். சில ஏமாற்றங்களுக்காக  அவளின் சினிமா பைத்தியம் இல்லாமல் போய்விடுமா என்ன?  பொதுவாகவே, அப்படிப்பட்ட பைத்தியங்கள் விட்டு போகக்கூடியவையா என்ன? அந்த பைத்தியங்கள் விட்டுப்போவதில்லை. நமக்குமே அது பொருந்தும்தானே. இங்கே எத்தனை பேர் இலக்கிய கூட்டத்துக்கு போகிறேன் என்று வீட்டில் ஒவ்வொருமுறையும் சொல்லிவிட்டு கிளம்புகிறீர்கள். உங்களின் உத்தமர் யாரோ அவரே முதலில்  கை உயர்த்துங்கள்.



          சாம்ராஜை தன் புலி எதிர்ப்பு கவதைக்காகவும் பகடிக்காகவும் ஷோபாசக்தியுடன் ஒப்பிடுபவர்கள் உண்டு. ஆனால், அவர்கள் இருவருக்கும் இருக்கும் முக்கிய வேறுபாடு என்று நான் நினைப்பது  இதுதான். ஷோபா செய்வதும் ஒருவகையில்  கிண்டல். கண்டிவீரனில் ஒரு இடம், கண்டிவீரன் தன்னைக் கடத்தி வைத்திருப்பவரைத் தாக்க வரும் பெரும் இயக்கத்தினரைச் சுட்டு விடுகிறான். அப்போது ஷோபா சக்தி அதை வர்ணிக்கும் பொழுது, துப்பாக்கிச் சத்தம் கேட்டால் எப்படி ஒளிந்து கொள்ள வேண்டும் என அவர்களின் இயக்கம் கற்றூக்கொடுத்திருந்தது அதன்படி அவர்கள் அனைவரும் சென்று ஒளிந்து கொண்டனர்' என்று சொல்வார.

 இது லட்சியவாதிகளை நோக்கி அவர் செய்யும் கிண்டல் என்றே வெளிப்படுகிறது. அது பொதுவாக வெளியே இருப்பவர் செய்வது..அதில் ஒரு நக்கல் இருக்கிறது..

சாம்ராஜின் கதையிலும் ஒரு இடம் வருகிறது,

விசைத்தறி ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த சத்தத்திற்கிடையே புரட்சி பேசும் தோழர் ஒருவர், 'தோழர் நாம் இந்த அரசாங்கத்தை ஏதாவது செய்யனும் தோழர்.. 'என்று ஒருவர் உரக்கப் பேசிக்கொண்டிருக்கிறார். அப்போது திடீரென மின்சாரம் போய் விடுகிறது. இடமே அதைதியாகி விடுகிறது. அப்பொழுது பேசிக்கொண்டிருப்பவர் திடீரென சத்தத்தைக் குறைத்து, 'ஏதாவது பண்ணனும் தோழர் ' மிகவும் மெதுவாக..

 இதில் ஒரு அப்பாவித்தனமே வெளிப்படுகிறநு..இதை உள்ளே இருப்பவர்தான் செய்யமுடியும்.. முன்பு சொன்ன அந்த ஆழ்வார் போல..அப்பர் பாடல் போல.

                        அவர் ஏன் எழுதுகிறார் என்று பார்க்கும்போது,   ஒரு இடத்தில் நான் கண்ட என் அனுபவத்தை வைத்துத்தான் பொருத்தப் பார்க்கிறேன்.  சில வருடங்களாகவே புரட்சியாளராக  தன்னை உணர்பவர்களுக்கு ஒரு சிக்கல் இருக்கிறது என நான் நினைக்கிறேன். அது இன்றைய முதலாளித்துவ உலகில் இடதுசாரிகளை  கேலியாக பார்க்கும் பார்வை அதிகரித்து விட்டிருக்கிறது. முன்பு சொன்ன மிராச்லோவ் பென்கோவின் கதை போல இப்போதும் கேலிக்கதைகள் எழுதப்படுகின்றன . நான் அறிந்த எங்கள் ஊர் நண்பர்களே, இதிலிருந்து மீள தங்களுக்கான சாதிக்கட்சி ஆதரவாளராக மாறி வருகிறார்கள். ஆகவே அதையே  சாம்ராஜ், ஒரு நையாண்டி மூலம் கடந்து வருகிறாரோ என்ற எண்ணம் எனக்கு உண்டு.



          அதில் இவர் பல கூறுகளை உள்ளே நுழைக்கிறார். பல நுட்பமான பகடிகள் உண்டு. பல புராண சம்பவங்களையும் கோர்க்கிறார். குருசேத்திர யுத்தத்தில் துரோணரிடம் தருமன் சொல்கிறான். இறந்தது அஸ்வதாமன் என்கிற ஒரு யானை என்று.. அப்போது யானை என்றூ சொல்லும்போது கிருஷ்ணன் சங்கு ஊதி அதைக் கேட்க விடாமல் செய்தான் என்பது  நாமறிந்த புராண கதை. அதை யதார்த்த களத்தில் பார்க்கும்போது ஜார் ஒழிகவில் கணேசன் பொண்பார்க்க செல்கையில் அவன் சரளமாக புழங்கும் 'ங்கொம்மாளோக்க ' என்ற வார்த்தை வெளிப்படுகையில் ஒருவர்ஒரு தாம்பாளத்தை தவறீ கீழே போட்டு விடுவார்கள். அதில் அந்த வார்த்தை கேட்காமல் போய் அவனுக்கு திருமணமே நடந்துவிடும்..



            மருள் என்னும் கதை.. அங்கு தொழிற்சங்கம் தோற்று விட்டது. முதலாளி சூப்பர்வைசர் எல்லாம் கண்டால் அனைவருக்கும் பயம். சங்கம் வைக்க முயலும் ஒருவன்இறந்தே போகிறான்..ஆனால் ஒரு கிறுக்கன் அங்கு ஒருநாள் வேலைக்குபோகிறான். இப்போ அனைவருக்கும் அந்த பயத்தை விலக்கி விட்டு தனிப்பேருந்தில் ராஜாவாக திரும்புகிறான். அவன் அங்கு தொழிலாளர்களுக்கு ஒரு நம்பிக்கைய அருளிவிட்டான். தொழிலாளர்கே் என்றில்லை, பாவப்பட்ட அனைவருக்குமே நம்பிக்கையும் நியாயமும் கிடைக்க வேண்டும். சாம்ராஜைப் பொருத்தமட்டில் அவருக்கு அதை நிறைவேற்ற அதற்கு அவர் நம்பும் சங்கம் தேவை இல்லை கோஷம் தேவை இல்லை. ஆனால் ஒரு கிறுக்கன் இதை சாதித்தாலுமே பொதும் ( கலகக்காரன்). ஒரு மாந்திரீகன் தூண்டிவிட்டாலுமே போதும். தார் மிதித்த காலில் அவன் ஞானமடைந்தாலும் போதும்.  லட்சுமி சாமியாவதும், பினு உயரமாவதும், செவ்வாக்கியம் முதலாளியம்மாவாவதும் அவர்கள் மீது அவர் கொள்ளும் அந்தக் கரிசனத்தால்தான். அங்கு ஒரு சாமியாடி வருவதோ ஒரு ஏவல் பில்லி, மாந்திரீகம் வருவதோ அவருக்கு ஒரு நெருடலாக இல்லை. கதையும்  அதை வைத்து நகரவில்லை.



       இது தவிர முக்கியமான இன்னொரு விஷயத்தைச் சொல்லவேண்டும். அது அவரது கதைகளின் நடை. ஒன்று, அது எங்கும் உணர்ச்சிவசப்படுவதில்லை இரண்டு அது நகைச்சுவை என்பதால் எங்கும் சம்பவங்களை எழுத்தின் மூலம் விவரித்துச் சொல்லும் முறையைக் கொள்வதில்லை. உதாரணமாக, முன்பு சொன்ன ஷோபா சக்தியின் வரிகள் போல வசனங்களில் உள்ள நகைச்சுவை அல்ல. அது சுஜாதா பாணி. கொச்சின் ஹனீபாவை குட்டி பாட்டிலுக்குள் அமுக்கி வைத்ததைப் போல என்று இதிலேயே ஒரு வரி வருகிறது. ஆனல் அதுவல்ல நான் சொல்வது.. சாம்ராஜின் பலமாக நினைப்பது நான் சொல்வது  அந்த நிகழ்வில் நடக்கும் ஒரு அபத்தம். அதை அப்படியே கடத்தும் எழுத்துத்திறன். தொழிற்புரட்சி போல, ஓம்லக்கா சொல்வதைபோல, மருள் கதையில் நடராஜன் சிலையின் மணிக்கட்டில் கட்டியிருக்கும் சிவப்பு ஷால் போல..மல்லிகாவின் செவிட்டுக்காதில் ரகசியம் சொல்லிப்போகும் ஆறுமுகம் போல அதை நாம் ஒரு காட்சியாக உணர்ந்து உடனே அந்த அபத்தத்தை எண்ணி புன்னகையும் பூக்கிறோம். அவர் அவ்விதத்தில் ஒரு தனித்துவமான எழுத்தாளராக இருக்கிறார்.

இவ்வாறு இடதுசாரிகளின் கரிசனம் பற்றி மட்டுந்தான் பேசுவியா.அவர்களின் குரூரம் பற்றி பேச மாட்டாயா என்று உங்களில் ஒருவர் அதே பகடியோடு கேட்கலாம். ஆகவே, இடதுசாரிகளின் குரூரம் பற்றியும் நாம் இங்கு சொல்லியாக வேண்டும். லட்சியம் என்று பேசி தன் எதிரிகளைக் கொண்று குவித்த ரஷ்ய சீன வரலாறும் நம் கண்முன் இருக்கிறது தானே.



        சாம்ராஜிடமும் அது இருக்கா என்றால் இருக்கு என்று சொல்ல முடியுமா எனத் தெரியவில்லை.  முத்திருளாண்டி நரம்புத் தளர்ச்சி வந்து திண்ணையோடு ஒடுங்கி இறந்ததும் போகிறார். சரி விட்டுரலாம்.. ஆனால் அங்க ஒரு பெருச்சாளி வந்து அவரின் குறியைக் கடுத்துக் குதற வேண்டுமா? அது செவ்வாக்கியமே செய்தாள் என்றாலும்? பரமேஸ்வரியின் மாமனார் படுத்த படுக்கையானது போதாதா..சர்க்கரை நோயாளியான அவருக்கு தினனும் சர்க்கரை அதிகம் போட்டக் காபிதான் கொடுக்கணுமா..இதெல்லாம் உங்களின் குரூரம்தானே என்று கேட்கலாம்.இப்படிக் கேட்டு இதைக் குரூரமாக நிறுவுவதுதான் உன் குரூரமா என்று அவர் பதிலுக்கும் கேட்கலாம்.



நான் முன்பு கண்ட ஒரு திரைப்படம் நினைவிற்கு வருகிறது. முரளிகோபியின் லெப்ட் ரைட் லெப்ட்.. அதில் அவர் ஒரு தோற்றுப்போன இடதுசாரி.. அவர் முன் அமர்ந்திருக்கும் பாட்டி தன் மகள் சிறு வயதில் கவனிப்பாரற்று இறந்த கதையை அவர் மனைவிக்குச் சொல்லிக்கொண்டிருப்பாள். அப்போது அவருட்டை ரத்த அழுத்தம் எகிறும்.. அப்போது அவள் மனைவி இடைமறித்து சிவாரசியமான சம்பவங்களைக் கேட்பார். அவர் ரத்த அழுத்தம் குறையும்.

   

யாருக்காக எழுதுகிறார் என்ற என் முதல் கேள்விக்கு மீண்டும் வந்தால் அவர், அனைத்துக்  கதைகளையும் தனக்காகத்தான் எழுகிறார், தன் ரத்த அழுத்தத்தைக் குறைத்துக்கொள்வதற்காக எழுதுகிறார் என்று சொல்லலாம். தன் வாசகரின் ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் எழுதியிருக்கிறார் என்றும்  சொல்லமுடியும். சாம்ராஜ்க்கு முதலில் நன்றி சொல்லவேண்டியிருப்பது அதற்காகத்தான்.


Wednesday, June 26, 2019

என்பிலதனை வெயில் காயும்

சமீபத்தில் ஒரு பிரச்சனை. ஒரு எழுத்தாளர் வடமாநில தொழிலாளி  ஒருவரைக் கொன்று விட்டதால் கைது செய்யப்பட்டிருப்பதாக செய்தி பரவுகிறது. அப்பொழுது ஒட்டுமொத்த தமிழ் இலக்கிய உலகமும் அவர் பின்னால் நின்று நிகழ்ந்ததை விவரித்து அவர் யார் எனச்சொல்லி   அவரை வெளியே கொண்டு வந்தனர். அந்த பிரமிப்பு கடந்து சில வாரங்கள் கூட நகரவில்லை. அதற்குள் மாநிலத்தின் மற்றொரு மூலையில்,  எழுத்தாளர் ஜெயமோகனுக்கும் ஒரு பலசரக்குக் கடை ஆளுக்குமான நுகர்வோர் பிரச்சனை காவல்நிலைய வழக்கில் சென்று நின்றது. இதில் எழுத்தாளராக இல்லாத சாதாரண மனிதர் என்றே  வைத்துக்கொண்டாலும் ஒருவர் மீது வன்முறையை பிரயோகித்த நபர் விடாமல் பாதிக்கப்பட்டவர் வீட்டிற்கும் சென்று ரகளையில் ஈடுபடுகிறார். அந்த ரகளை செய்யும் நபரின் செல்வாக்கு உணர்ந்த எழுத்தாளரின் அக்கம்பக்கத்து வீட்டினரும் வெளியே வரவில்லை. அப்பொழது அந்த எழுத்தாளர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கிறார்.  எழுத்தாளரின் நண்பர்கள் அவருக்காக வாதிட, பலசரக்குக்கடைக்காரரின் தரப்பாக பல முக்கியஸ்தர்களும் வந்து நிற்கிறார்கள்.

இப்பொழுது முன்பு கூறிய தமிழ் இலக்கிய உலகம் எடுத்த முடிவு விசித்திரமானது. இது அவருக்குத்  தேவைதான் என்றனர் சிலர். மகாகலைஞன் என்று கவிபாடினார் ஒரு நண்பர். ஒரு பத்திரிக்கை  அதற்கும் மேலாக சென்று எழுத்தாளர் பைக்கில் வந்து மாவை வீசினார். அதுவே கோபத்துக்கு காரணம் என்று பேட்டி வெளியிட்டது. வீலிங் கூட செய்தாரா என்று சொல்லவில்லை. காவல்நிலைய சடங்கு என்பது மருத்துவ பரிசோதனையும் கொண்டது. அது ஒரு நடைமுறை சடங்கு. அதைச் செய்ய சென்றதை திரித்து எழுதி பிரபலமானார் ஒரு முதிய பல்கலை வித்தகர். இத்தனை பேரின் பிரச்சனை என்ன? அந்த எழுத்தாளர் எப்பொழுதும் அவர்களைவிட பெரிய ஆளுமையாக இருப்பது அவர்களை  சீண்டுகிறதா.? அந்தத் தாழ்வுணர்ச்சியின்  வெளிப்பாடா இது? அவரது பிரம்மாண்ட எழுத்தையும் நேர்மையையும் கண்ட அச்சமா?

இந்தப் பிரச்சனையை எப்படிக் கையாண்டிருக்க வேண்டும் என்று அறிவுரை கூறவும் பலர் சித்தமாக இருக்கிறார்கள். அவர்கள் நடுநிலையாளர்கள். நடுநிலை என்றால் இருநிலைகளுக்கும்  நடுவில் நிற்பது என்று யாரோ அவர்களுக்கு சொல்லித்தந்திருக்கிறார்கள். பாவப்பட்டவராக கருதப்படும் அந்த பலசரக்குகடை முதலாளி ஒரு கட்சியின் உறுப்பினர். அவருக்காக வாதாட கட்சிப்பிரமுகர்கள் ஆடம்பர வாகனத்தில் வந்து குழுமினார்கள் என்று தெரிந்துமே அப்பாவி பெட்டிக்கடைக்காரர் என்று எழுதுவதுதான்  அந்த வாதத்திற்கு இன்னும் வலு சேர்க்கும்  போலும்.
இதே பிரச்சனை எனக்கு வந்தால் தோசைக்கு பதிலாக உப்புமா சாப்பிட்டிருப்பேன்.. பட்டினி கிடந்திருப்பேன் அப்படி சூதானமாகநடக்கத் தெரியாமல்  இவ்வளவு எழுதி என்ன பிரயோஜனம் என்ற கேள்வியில் / அறிவுரையில்  வெளிப்படுவது என்ன என்று அவர்களுக்கே தெரியாத அளவிற்கு  இந்தச் சமூகம் மொண்ணையாகிவிட்டிருக்கிறதா?

தங்களால் போஷிக்கப்படாத தங்களின் கருணை தேவைப்படாத நிலையில் இருப்பவர் மீது சாமானியர்களுக்கு இருக்கும் ஒருவித பொறாமை  மீண்டும் வெளிப்பட்டிருக்கிறது. 



ஆனால் ஒன்றைக் குறிப்பிடவேண்டும். இதில் அந்த பலசரக்குகடை மனிதர் சில நாட்களில் தன் போதை இறங்கியதும் இவரைப்பணிந்து வணங்கக்கூடும். அவர்கள் இருவரும்  நண்பர்களாகவேகூட மாறக்கூடும். காரணம் நிகழ்ந்தது ஒரு சாதாரண அடிதடி.

ஆனால் அதற்காக வசைபாடி கொண்டிக்கொண்டிருக்கும் மற்றவர்களை ஆட்கொண்டிருக்கும் போதையோ,  பொறாமையும், இயலாமையும் சேர்ந்தது. அது ஒருக்காலும் இறங்கப்போவதில்லை.

இனி, இதைத்தாண்டியும் ஜெ. மீள்வார். அப்பொழுது அவர் வேறொரு திரைப்படப்பிரச்சனையிலோ, நுகர்வோர் பிரச்சனையிலோ தன்னளவில்  நேர்மையாக நடந்துகொள்ளக்கூடும். அப்பொழுது அதுவும் கூடப் பிரச்சனையாகக் கூடும். அப்பொழுது மீண்டும் ஆர்ப்பரிக்கலாம்.  அதுவரை, உங்கள் கழுத்து வலிக்க அவரை அண்ணாந்து பார்த்தபடியே
 காத்திருங்கள் எனதருமை அற்பர்களே!!!!





Saturday, April 6, 2019

மலைக்காடு - சீ. முத்துசாமி

ஒரு வருடம் கழித்து மீண்டும் எழுத்தாளர் சீ.முத்துசாமி அவர்கள். அவரின் ஒரு புதிய நாவலான மலைக்காடு நாவலை வாசித்தேன். சீ.முத்துசாமியின் சிறுகதைகள் 1977ல் எழுதப்பட்டு காலத்தால் பல்லாண்டுகள் முந்தியிருந்தாலும், நான் படித்தது என்னவோ நாற்பதாண்டுகள் கழித்து 2017ல் விஷ்ணுபுரம் விருது சமயத்தில்தான். அவரின் நாவல்களும் சிறுகதைகளும் ஒரு குறிப்பிட்ட மனநிலைகளில் சொல்லப்படுபவையாகவே முதலில் எனக்குத் தோன்றின. சில சமயங்களில் அவை ஒரு புகார் போல ஒலிக்கும். சில சமயங்களில் இறுதிவரி திருப்பம் வரை வந்து அதை உரைக்காமல் முந்தைய வரியிலேயே நின்று விடும். அவரது படைப்புகளை வாசிக்கையில் ஏன் இந்த உத்தியை கையாள்கிறார் என யோசித்திருக்கிறேன். உடல் நலமிலாத கணவன் மற்றும் சிறுவயது குழந்தைகளின் வயிற்றுப்பாட்டிற்காக தோட்ட வேலைக்குச் செல்லும் பெண்ணைப் பற்றிய சிறுகதையின் இறுதிவரி அவனைக்காண வந்த அந்தக் கணவனின் நண்பன் கிளம்புவதற்கு முன் அவன் முன் வந்தமர்ந்து “அக்காளப்பத்தி ஒண்ணு சொல்லனும்..” ( கவச குண்டலம் ) என்று சொல்வதோடு முடிந்துவிடும். முதல் வாசிப்பில் அது ஒரு சிறுகதைக்கான உத்தியோ என எண்ணியிருந்திருக்கிறேன். அப்படியிருக்கும் பட்சத்தில் அதை அவர் இன்னும் சுவாரசியமாகவும் எழுதியிருக்காலாமே. அந்தளவிற்கு சிறுகதை தருணங்கள் நிறைந்த இடம்தானே இது. காவியங்கள் முதல் சீரியல்கள் வரை அலசிப்போட்ட ஒரு லட்சியப் பெண்ணின் வாழ்வு ஒன்றை முழுமையாக சொல்லி இறுதியில் ஒரு திருப்பத்தை இங்ஙனம் வைப்பது ஒரு வித வாசிப்பின்பத்திற்காக கற்பனை செய்து எழுதப்படுபவை. அவ்வகைக் கதைகள் சராசரி எழுத்தாளர்களாலேயே போதுமானதளவு எழுதப்பட்டும் இருக்கின்றன. உண்மையில் பிற்காலத்தில் வந்த அத்தகைய வெகுஜனக் கதைகளைப் படித்தபின் இவரின் கதைகளைப் படிப்பதாலேயே கூட இந்தச் சிக்கல் எனக்கு எழுந்திருக்கலாம்.


ஆனால் அவ்வருட இறுதியில் சீ.முத்துசாமி அவர்களின் படைப்புகளை முழுமையாக வாசித்தபின் நோக்கியபோதுதான், அவர் இங்ஙனம் ஒரு உத்தியைக் கையாளுவது  வெறும் இறுதிவரி திருப்பத்திற்காக மட்டுமல்ல எனப்புரிந்தது. அதற்கான முதன்மைச் சான்றாக இருப்பது அந்த கதைகளில் உள்ள கதை சொல்லியின் இடம்தான். அது தன்மையில் எழுதப்பட்டிருக்கும். அல்லது வீட்டுக் குழந்தைகளின் பார்வையில் இருக்கும். முதன்மை பாத்திரம் கதைசொல்லியின் ரத்த உறவாக இருக்கும்.உதாரணமாக மலைஉச்சிபங்களா கதையை சொல்லலாம். அது பெற்றோரின் வாழ்க்கைப்பாட்டைச் சொல்லும் பிள்ளைகளின் பார்வையில் சொல்லும் கதை. அதானாலேயே பிள்ளைகளுக்குப் பிடிபடாத விஷயங்கள் பூடகமாக இருக்கும்.  இந்தப்பார்வை பிடிபட்டபிறகு அவரது படைப்புகளை மனம் சற்று படபடக்காமல் வாசிப்பது என்பதே இயலாது..ஆம்.  தன் மக்களின் கதையை எழுதுகிறார். பெரும்பாலும் உள்ளதைச் சொல்கிறார். அவருக்கு, தோட்ட வாழ்க்கை வாழும் கதை மாந்தர்கள் அனைவருமே அவரின் குடும்பத்தினர் போலத்தான். ஒரு கதையை அக்குடும்பத்தில் வாழ்ந்து முடித்து சலித்த பாட்டனார் போல சொல்வார். அதில் நீ செய்வது சரியா என்ற ஆதங்கம் இருக்கும். ஒரு  சீற்றம் இருக்கும். சில இடங்களில் கையறு நிலையில் இருக்கும் தலைவனாக, தலைவியாக அல்லது ஒன்றும் அறியாத பாலகர்களாக சொல்வார். அவற்றில் சில பூடகங்களே ஏஞ்சியிருக்கும்.  இது தவிர வெகு சில கதைகளில் மட்டும்  கூரிய அங்கதமும் புரட்சிப் போராட்டங்களும் வெளிப்படுகின்றன. இதில் கையறு நிலை என்ற இடத்திலிருந்தே பல கதைகளை அவர் எழுதியிருக்கிறார் என்று சொல்லலாம். குறிப்பாக அவர் கதைகளின் தலைப்புகளைப் பார்த்தாலே அவை பிடிபட்டுவிடும்.  இரைகள், இருளில் அலையும் குரல்கள், மண்புழுக்கள், விளிம்பு, அகதிகள், பாலைவனத்தில் விதைகள் முளைப்பதில்லை –  என தலைப்புகளே அந்த உள்ளடக்கத்தின் துயரம் அல்லது ஆங்காரத்தை சொல்லிவிடுகின்றன. 

சிறுகதைத் தொகுதிகள் வழியாக வெளிப்பட்டவர் இருபதாண்டுகள் இடைவெளிக்குப்பின் தன் மண்புழுக்கள் நாவல் வழியாக மீண்டும் மலேசிய இலக்கிய உலகில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியிருக்கிறார். முதல் தலைமுறையாக மலேய மண்ணிற்கு தோட்ட வேலைக்காக வந்த மனிதர்களின் வாழ்க்கைப்பதிவு அது.  1940களில் அங்கு சென்றமைந்த மக்கள் குறித்த ஒரு ஆவணமாகவே மண்புழுக்கள் நாவல் கருதப்படுகிறது. ஒரு கருப்பு வெள்ளை ஆவணப்படமாக. அதற்கடுத்து பன்னிரெண்டு வருடங்கள் கழித்து எழுதி அதே பின்புலத்தில் வந்திருக்கும் அவர்களின் அடுத்த தலைமுறைக்கான நாவலாக மலைக்காடு இருக்கிறது.  ( ஈஸ்ட்மெண் கலர் ? ) அவரது மற்றநாவல்களுடன் ஒப்பிடுகையில் இது தலைப்பிலிருந்தே வேறுபட்டிருக்கிறது.  மலைக்காடு  நாவலை வாசிக்கையில் முதலில் உணர்ந்த ஒன்று எப்பொழுதும் அவருடன் இருக்கும்அந்த ’துர்வாசர்’ இந்த நாவலில் காணப்படவில்லை என்பதுதான். மாறாக அனைத்தினையும் தள்ளிநின்று கூர்ந்து கவனிக்கும்  ஒரு ’பாணன்’ தான் தென்படுகிறார்.
தர்மபுரியிலிருந்து நாகப்படிணம் சென்று அங்கிருந்து கப்பலில் பிணாங்கு செல்லும் மாரியிடமிருந்து துவங்குகிறது நாவல். காஞ்ச பூமியில இருந்து என்ன சுகத்தைக் கண்ட? என்னோட மலேசியா வந்துரு.. அது பசுமையான பூமி.. சொர்க்கம்பாங்களே அது அந்த ஊருதான் என்று சொல்லும் கங்காணியின் வார்த்தையில் மயங்கி கொத்தடிமையாகப் போகப்போகிறோம் என்று அறியாமல் பயணிக்கிறார்கள். கப்பலிலேயே சூழ்நிலை பிடிபட்டுவிடுகிறது. காலரா நோயில் இறந்தவர்களை அப்படியே கடலில் தூக்கி வீசுகிறார்கள். விரைவில் இறக்கப்போகிறவரையும் தான்…மலேயா மண்ணைத் தொட்டதும் கங்காணியின் ரூபமே மாறிவிடுகிறது. ஒருபுறம் விஸ்வரூபம் எடுத்து நிற்கும் காட்டை பார்த்து பிரமிப்பும் மறுபுறம் தன் விதியை எண்ணி நொந்தபடியும் வாழத்துவங்குகிறார் மாரி. மாரியுடன்கூட பதினைந்தே வயதான அவரது மகன் உண்ணாமலையும் பிழைக்க வந்திருக்கிறான். அவர்களின் மூன்றாம் தலைமுறைக்கதை இது. உண்ணாமலையின் மகள் வயிற்றுப் பேரனும், தோட்ட மக்களுக்காக  தண்ணீர் லாரியை மடக்கி இட்டுவந்த  சாகசக்காரர்களில் ஒருவனுமான குட்டி என்னும் குட்டியப்பன், ஒருநாள் இரவில் காட்டில் தொலைந்து போன தன் ஊரைச் சேர்ந்த இருவரைத் தேடி தன் இன்னொரு நண்பனான நெட்டமணியுடன் சைக்கிளில் காட்டுக்குள் செல்கிறான். பின் அவர்கள் திரும்பவே இல்லை. அவர்கள் என்னானார்கள் என்பதே இந்நாவலின் கதையோட்டம்.  நாவலின் நாயகனாக வரும் குட்டியப்ப்பன் ஒரு சிறு கதாபாத்திரம்தான். அவனைச் சுற்றி, அவனுக்காக நிகழும் கதையில் வந்து போகும் ஒவ்வொரு மாந்தர்களின் வழியேதான் கதை விரிகிறது. மாந்தர் மட்டிமன்றி மலைமேட்டு முனீஸ்வரனின் வழியாகவும்
நாவலில் இந்த தலைமுறை கதை, டிரசர் பாலையா தலைமையில் லாரித்தண்ணீரை மடக்கும் அந்த சாகசத்திலிருந்து துவங்குகிறது. தொடர்ந்து தோட்ட நிர்வாகம் அறிமுகமாகிறது. பெரியதுரை ஜேம்ஸ் கோனல்லியும்,  துரைக்கு சலாம் போட்டுக்கொண்டு,  ”நீங்க திரும்பி வர்றதுக்குள்ள அந்த நாலு பசங்களையும் காணாம அடிச்சுடறேன்” என குழையும் சின்னதுரை மலபார் வர்கீஸும்,  அந்த வர்கீஸ் தன் அதிகாரத்தைக் காட்டும் பெரிய தண்டலும், ”ஆமாம்!  எனக்கு பெரிய தண்டல்ங்கிற பேருதான் முக்கியம் என எந்தளவிற்கும் இறங்கத்துடிக்கும்  சுப்பராயனும், அந்த தோட்டத்தில் ’தமிழர் கட்சி’ யின் தலைவரான ’இங்கிலீஸ்’ மணியமும் என ஒவ்வொருவராக அறிமுகமாகி, அவற்றின் ஊடே மீண்டும் முன்னும் பின்னும் சென்று அந்த மண்ணின்  தனித்தன்மையும் வரலாறும் சொல்லப்பட்டுச் சென்று கொண்டேயிருக்கின்றன. ஒருவகையில் இந்த நாவலின் இந்த உத்தி அதை மிகவும் விறுவிறுப்பாக்குவதோடு ஆங்காங்கு அவர் அளிக்கும் அதிர்ச்சியும் அதை தொடர்ந்த அதன் விளக்கமும் வாசகனுக்கு பெரும் வியப்பையும் அளிக்கின்றன. உதாரணமாக, குட்டியின் தாயான முத்தாயி தன் கணவன் கோவாலுவை ஏசும் ஓரு இடமும் அதைத் தொடர்ந்து வெளிப்படும் கோவாலுவின் இன்னொரு கோணத்தையும் சொல்லலாம்.  இவ்வாறான சித்தரிப்புகள் வாசிப்பை சுவாரசியமாக்குகின்றன. மேலும் சுவாரசியமாக்குவது அவரது வர்ணனைகளும், சில உருவகங்களும். பெரியதுரை அடக்கியாளும் குதிரை, மாரி, லட்சுமி, கிருஷ்ணன், கோப்ரேல் மணியம் என அவரவர்க்கு ஆங்காங்கு தென்படும் ராஜநாகம் எனச் செல்லும் புனைவலங்காரங்கள் அவரது முந்தைய நாவல்களில் கண்டிராத ஒன்று.


அனால், மக்கள் மறந்துவிடக்கூடாத மனிதர்களையும் சம்பவங்களையும் சரியான வருடத்தினைச் சொல்லி அதை ஆவணப்படுத்தவும் செய்கிறார். தம்பிக்கோட்டை கணபதி என்னும் பெருந்தலைவர் முதல் டிரசர் பலையா என்னும் ஒரு தோட்டப்போராளிவரை சில சீனர்கள் உள்ளிட்ட அனைவர்களின் பெயரையும் போராட்டம் நிகழ்ந்த வருடங்களையும் குறிப்பிட்டிருக்கிறார். மாவோ மற்றும் காந்தி குறித்த கருத்துகளும் ஆங்காங்கு வெளிப்படுகின்றன.  அதிலும் நாவலின் துவக்கத்தில் மக்களின் போராட்டம் துவங்கி  முன்னேறுகையில்  “ அடக்கமாய் கைகட்டி ஏவிய வேலையை தன் தலைமேல் சுமந்து செய்து முடிக்கும் அடிமை இயல்பு கொண்ட மக்கள் எங்கிருக்கிறார்கள் என உலகெல்லாம் தேடி பின் அவர்களை தமிழ்நாட்டில் கண்டுபிடித்து அவர்களைத் தங்கள் பரவசம் குறையாமல் கப்பலில் ஏற்றி..” என்ற வர்ணனையில் ஒரு அடிவைக்கவும் அவர் தயங்குவதில்லை. மக்கள் போராட்டத்தினூடே அதிகாரத்தைக் கைப்பற்ற சீனர்களும், தமிழர்களும் முண்டியபடியிருக்க ஆங்கில அரசும் தோட்டநிர்வாகமும் அதை எதிர்க்க அவர்கள் அனைவருக்கும் பொதுவானவராக இருக்கும் கெப்ரேல் மணியம் அந்தக் களேபரத்திற்கிடையே அம்மண்ணின் பூர்வகுடிகளான சக்காய்களைக் காணும் தருணமும் அவர்கள் சிரித்தபடியே கடந்து போவதும் அவரின் அங்கதத்தின் ஒரு சான்று. இந்நாவலைப் படித்தபின் உங்களின் முன்னுரையை வாசித்தேன். அது வேறொரு தளத்தில் இந்நாவலை எனக்கு அடையாளம் காட்டியது. அதற்காக  உங்களுக்கும் நன்றி
சீ.முத்துசாமி அவர்களின் படைப்புகள் தமிழகத்தில் கிடைக்காமல் இருந்தன. அவருக்கு விஷ்ணுபுரம் விருது அறிவிக்கப்பட்ட சமயத்தில் கூட அவரின் ஒரு சிறுகதை தொகுப்பும் குறுநாவல் தொகுப்புமே கடைசி நேரத்தில் அச்சில் கிட்டின. மற்ற புத்தகங்களை நூலகம் மூலமாகவும் மற்ற வாசகர்கள் படித்துவிட்டு தந்தவுடன் படிப்பதும் என தேடிதேடித்தான் வாசித்தேன். அவ்வாறு வாசிக்கையில் எனக்கு சில சிக்கல்கள் இருந்தன. ஆரம்ப பத்திகளில் சொன்னது போல ஒரு புகாராகவோ அல்லது கறாராகவோ அல்லது ஒரு ஆவணம் போலவோ அந்தக் கதைகள் இருந்தன. அதை உள்வாங்கிச் செல்கையில்தான் அவை எனக்குபிடிபடத் துவங்கின. ஆனால் மலைக்காடு உடனடியாகவே நம்மை உள்ளிழுத்துக்கொள்கிறது. ஒருமுறை நாவலைத் திறந்து உள்ளே சென்றுவிட்டால்,  அதன்பின் அதைப் படித்து முடிக்காமல் நம்மை அது கடக்கவும் விடாது

Wednesday, November 14, 2018

கட்டண உரை பயணம் ( தொடர்ச்சி...)



அரங்கம் மிக பரபரப்பாக இருந்தது. வழியிலேயே சாலையில் வண்ணதாசன் தனது நண்பருடன் நின்று பேசிக்கொண்டிருந்தார். அரங்கம் பாதிக்குமேல் நிரம்பி இன்னும் வாசகர்கள் வந்து கொண்டும் வெளியே நண்பர்களுடன் பேசிக்கொண்டும் இருந்தனர். சக்திகிருஷ்ணன், சல்யான் கிருஷ்ணன் இருவரும் இந்த விழாவை ஏற்பாடு செய்திருந்தார்கள். ஆகவே மிகவும் பதட்டத்துடனும் இருந்தனர். 5:25 க்கு அனைவரும் உள்ளே வர அரங்கம் நிரம்பியது. ஆனால் ஒரு இறுக்கமான சூழ்நிலை இருந்தது. முதல் கட்டண உரை என்பது காரணமாக இருக்கலாம். அரங்கம் அமைதியாக இறுக்கமாக இருக்க, உரையை ஆரம்பிச்சுடலாம்சார் என்று கிருஷ்ணன் கேட்க ஜெ. சரியென தலையசைக்க, ஒலி அமைப்பாளர் என்ன நினைத்தாரோ, உடனே தன் ஒலிப்பெருக்கியையும் இசைத்தட்டையும் இயக்கினார்.. ”பல்ட்டி பக்குர டர்ல வுடனும் பல்த்து..வெர்ல்டு மொத்தமும் அர்ல வுடனும் பிஸ்த்து..” என சிம்டாங்காரன் அலற ஆரம்பிக்க, உடனே கிருஷ்ணன் அதை நிறுத்தச்சொல்ல.. மொத்த அரங்கும் கலகலத்தது. வண்ணதாசனுமே சிரித்தார். இந்த நேரத்தில் கவிஞர் விவேகாவைப்பற்றி குறிப்பிட்டே ஆகவேண்டும்.  எனக்கு திருமணமான புதிதில் ஆர்த்தியுடன் முதல் சண்டை துவங்கியிருந்த நேரம் அது. அவள் முகத்தை அலமாரி மேல் வைத்துக்கொண்டு நிற்க, நானும் கோபித்துக்கொண்டு பேசாமல் டிவியை ஆன் செய்தேன். அதில் அப்போது எக்ஸ்க்யூஸ் மீ மிஸ்டர் கந்தசாமி,  மியாவ் மியாவ் பூன போன்ற பாடல்களை எழுதிய பிரபல கவிஞர் விவேகாவின் பேட்டி ஒளிபரப்பானது. பேட்டியெடுப்பவர், ”சார் நீங்க சமீபத்துல எழுதின பாடல் என்ன சார் அந்த கவிதையை சொல்ல முடியுமா” என்று கேட்டார். அதற்கு அவர், இப்ப ஒரு படத்துல கவிதை எழுதி எல்லோரும் நல்லாருக்குன்னு சொன்னாங்க சார்.. அந்த கவிதை என்னான்னா..” ஒரு மணி ரெண்டுமணி.. நீ ஓரமா போடி குண்டுமணி” ங்கிற கவிதைதான் என்று சொல்லிய போது நாங்கள் இருவரும் கடகடவென சிரிக்கத்துவங்கினோம். தற்போது மீண்டும் நிகழ்காலத்துக்கு வருவோம்..ஒன்பது ஆண்டுகளுக்குள் இருநூற்றைம்பது பேரின் இறுக்கத்தை போக்கும் அளவு கிட்டத்தட்ட அதே பெயரில் கவிஞர் விவேக் என ஒருவர் வந்துவிட்டார்  என நினைத்துக் கொண்டேன்.




ஜெ. உரைக்கு முன் கிருஷ்ணன் இந்த புதிய முறையான கட்டணஉரை பற்றி ஒரு நிமிடம் பேசினார். சென்றமுறை விஷ்ணுபுரம் விழா மேடையில் கவனித்தது போலவே, இங்கும் அவர்  பேசுகையில் வாக்கியத்தில் செய்வினை செயப்பாட்டுவினை சிக்கலில் சிக்கியிருப்பது கண்டேன். இலக்கிய வாசகர்களுக்குப் பிரச்சனையில்லை.. ஆனால் கச்சேரியில், “ கனம் கோர்ட்டார் அவர்களே, எனது கட்சிக்காரர்  எதிர்கட்சிக்காரரை கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார்” என்று வாதாடினால் நீதியரசர்கள் குழம்பிவிட மாட்டார்களா..


அடுத்து, ஜெ. வை உரையாற்ற கிருஷ்ணன் அழைத்தார். ஜெ. உரையாட எழுந்த அதே நேரம் இரு சம்பவங்கள் நிகழ்ந்தன. குருஜியின் மகன் சத்யா யாராலோ கிள்ளப்பட்டது போல அழத்துவங்கினான். அஸ்வத்க்கு பிஸ்கெட் சாப்பிட்டே ஆக வேண்டிய தாகம் எதானாலோ ஏற்பட்டது. அவனும் நச்சரிக்கத்துவங்கினான். சாதாரண உரையிலேயே யாராவது தும்மினால் ஃபஸ்ட் பெஞ்ச் பசங்க திரும்பிமுறைப்பார்கள். இது கட்டண உரை வேறு. அதனால், அஸ்வத்தை தூக்கிகொண்டு வெளியேறினேன். கதவை சாத்தும்போது அந்த இடுக்கில் புகுந்து வெளியே வந்த விஸ்வாவும் அத்விகாவும் விளையாட ஆரம்பித்திருந்தார்கள். உரையாற்றிய நேரம் முழுவதும் நானும் குருஜியும் குழந்தைகளை கவனித்துக்கொண்டு ஹாலில் நின்றிருந்தோம். உரை முடிந்து வெளியே வரும்போது ஒருவர் அருகில் வந்து “சூப்பர் ஸ்பீச்..செமயா இருந்ததில்ல” என்றார்..” ஆமாங்க அதிலும் சிந்தனையாளனின் அறம்னு ஒண்ணு சொன்னாரு பாருங்க” என்றேன்.. அது எப்போ என்று அவர் திரும்ப கேட்டதை கவனிக்காதவன் போல குழந்தையை தாயிடம் அளிக்க உள்ளே ஓடிவிட்டேன்.



ஜெ . உரையற்றிக்கொண்டிருந்தபோது, வெளியே பாரதி இளங்கோ அண்ணனுடன் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தேன். விகடனில் தொடராக வந்த வெள்ளிநிலம் அச்சில் வந்துவிட்டது. அது சேலம் பிரசாத் திற்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்தது கண்டு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. அவன் தன்னை பெருங்காதலனாக எண்ணிக்கொண்டிருப்பவன். மோமோவையும் பேரழகியாக காண்பவன். கன்னிநிலம் ரேஞ்சுக்கு நினைத்திருப்பவனுக்கு வெள்ளிநிலத்தை அளித்த ஆசானின் நகைச்சுவையை எண்ணி அவனை அழைத்துக்கூறினேன்.  அவன்சேதி கேட்டு உணர்ச்சிவசப்பட்டு நின்றுவிட்டான். முருகனைக்கண்ட ஏவிஎம் ராஜன் அளவிற்கு ஆகிவிட்டதால் என் கருத்தை குறுஞ்செய்தியாக மட்டுமே அனுப்பினேன்.. தாமதமாக விழாவுக்கு வந்தவர்கள் அவசர அவசரமாக உள்ளே சென்றனர். இருந்த இரண்டு மூன்றுசீட்டுக்களை பாரி கருப்புச்சந்தையில் விற்றார். அப்புறம் என்னைப்பார்த்து சில்லறை இல்லீங்க.. திரும்பி வரும்போது மீதி வாங்கிக்கச்சொன்னேன் என்று கூறினார். சிறப்பு அழைப்பாளராக இருந்த  நெல்லைத் தமிழ்சங்கத்தை சேர்ந்த இருவர் தாமதமாக வந்தனர். ஆனால் அவர்கள் ஏழுமணி சுமாருக்கு வந்ததால் அவர்கள் உள்ளே சென்ற சிறிது நேரத்திற்குள் உரை முடிந்துவிட்டது. எனக்கு ஜெ.வுடன் இரு வாக்கியங்களே பேச முடிந்தது. அவர் வாசகர்களால் சூழப்பட்டிருந்தார். பிறகு குரூப் போட்டோ எடுத்துக்கொண்டு கிளம்பினோம். மீண்டும் ஒரு விசாகா ஹோட்டல் உணவு..

அன்றிரவு மண்டபத்தில் ஒருவருக்கொருவர் அறிமுகம் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ந்தது. படித்தது, வளர்ந்தது திருமணமானது இலக்கியம். என. வாசகர்கள் ஒவ்வொருவரும் இலக்கியத்தின் பயன் மதிப்பு என்ன வென்பதை மனைவியிடம்தான் கேட்டறிய வேண்டும். தள்ளிநின்று கேட்பவர், “என்னடா உன் நிலமை காறித்துப்பறாப்லல்ல இருக்கு “ என வடிவேலு ரியக்‌ஷன் கொடுக்க வாய்ப்பிருக்கிறது.


மறுநாள் இலக்கியப்புகழ்பெற்ற, குறுக்குத்துறையை அடைந்தோம். அந்த ஏரியாதான் ஜாஜா பிறந்து வளர்ந்த இடம்.. ஒவ்வொன்றாக அவர் விவரிக்கையில், கங்கா சந்திரமுகியாக மாறுவதை கண்டேன். இதுதான் சுகா எழுதின் ஹோட்டலு,  அதோ போறாரு பாரு அவர் பேரு செந்தில்நாதன்,  இது பாரதியார் படிச்ச ஸ்கூலு, இந்த ஆபீஸ்லதான் நான் வேல பாத்தேன்,  இந்த ரோட்டுலதான் முதல்தடவை…. தூரத்தில் கோபியர் கொஞ்சும் ரமணா பாடல் ஒளிபரப்பாகிகொண்டிருந்தது. கூகுள் மேப் இல்லாமலேயே வாசகர்கள் சென்றடையும் விதம் அறிமுகமாகியிருந்த குறுக்குத்துறை எதிபார்த்ததை விட அழகாக இருந்தது. ஒருநாள் குளித்தால் ஒரு கவிதை தொகுப்பு போட்டுவிடலாம். அத்விகாவும் ஜுரம் விட்டு, ஆற்றில் ஆட்டம் போட ஆரம்பித்தாள். பெண்கள் அனைவரும் வட்டமாக நின்று முங்கிக் குளித்தனர். முங்குவதற்கு முன் என்னமோ சொன்னமாதிரி இருந்துச்சே.. சா பூ த்ரீயா என கரையேறியதும் ஆர்த்தியிடம் கேட்டேன். அவள் சீற்றத்துடன் மறுத்து அது ரிங்கா ரிங்கா ரோசஸ் என்று கூறினாள்.



அடுத்து கிருஷ்ணாபுரம் கோயில். அங்கிருந்து விட்டலாபுரம் போகலாம் என்று நினைத்திருந்தோம் ஆனால் நேரம் கருதி செல்ல முடியவில்லை. கயத்தாறு புளியமரத்தையே ரோட்டிலிருந்து திசை நோக்கித்தான் கும்பிட்டேன். ஓட்டுநர் தன் சேகரிப்பில் இருந்த 80களின் பாடல்களை ஒலிபரப்பினார். 80 களின் பாடல் என்றதும் நம் நினைவில் வரும் மோகன் பாடல்களும், பாடறியேன் படிப்பறியேன்களையும் கவனமாக தவிர்த்து சேகரிக்கப்பட்ட பாடல்கள். ஒரே படத்தின் பாடல்களில் சந்தோஷப்பாடல்களை தவிர்த்து சோகப் பாடல்களை மட்டும் வைத்திருந்த  அந்த  தொகுப்பை அலறவிட்டார் ஓட்டுநர்.  இவை அனைத்தும்கூட எனக்கு ஞாபகம் இருந்தன என்பதும்  ஆச்சரியம். அது சேடப்பட்டியில் சரண்யா இறங்குகையில் “குடகுமலை காற்றில்வரும் பாட்டு கேட்குதா ..ஏதோ நினைவுதான் உன்னைசுத்தி பறக்குது“ என சந்தோஷின் மனதை வெளிப்படுத்தியது. ஊரப்பாக்கத்தில் வெங்கட் இறங்கும்போது..” சொந்தம் இல்லை பந்தம் இல்லை வாடுது ஒரு பறவை.. அது தேடுது தன் உறவை..” என்றது. வீட்டிற்கு வரும்போது நள்ளிரவு மூன்று மணி.. 

மறுநாள் காலை எழுந்திருக்கவே பத்துமணியனது. ப்ராஜெக்ட் மேனேஜர்.. “ கால் இருக்கே..ஜாயின் பண்ணலையா..” என எழுப்பிவிட்டார்.. திருநெல்வேலி போய்விட்டு வந்தேன் என்று சொன்னதும்.. “ ஐயையோ.. ஸ்ட்ரிக்ட்டான கஸ்டமராச்சே.. இந்த கால் க்கு நீங்க கண்டிப்பா வேணும்.. இருந்தாலும் சமாளிச்சுகிறேன்.. வரும்போது என் டெஸ்க்குக்கு வந்துட்டுப்போங்க” என்றார். சரியென எழுந்தபடி, வீட்டுக்கு - ஆபீசுக்கு என தனித்தனியாக அடுக்கி இருந்த டப்பாக்களில் இருந்த லக்‌ஷ்மிவிலாஸ் அல்வாக்களில் வீட்டுகணக்கில் இருந்து ஒன்றை எடுத்து ஆபீஸ் வரிசையில் வைத்தேன்..” நெல்லையில் அல்வா கிண்டும்வரை  கொலை செய்தாலும் சமாளித்துக்கொள்ளலாம் என்று நினைத்தபடி பல்துலக்கச்சென்றேன்..

கட்டண உரை பயணம்

எச்சரிக்கை:- நெல்லையில் ஜெ. ஆற்றிய கட்டண உரை பற்றிய என் கருத்துக்கள் இங்கு இல்லை…



நெல்லை செல்வது பிரச்சனையில்லை. ஆனால், தீபாவளி நேரத்தில்  திரும்பி வர பயணச்சீட்டு கிடைப்பதுதான் கடினம்.  அதிலும் மறுநாள் வேலைக்குச்செல்ல, அன்று மதியம் கிளம்பி இரவு சென்னை வந்தடைவதுதான் வசதியானது. ரயிலில் முன்பதிவு செய்யச் சொன்னபோது ஜாஜா இவ்வாறு கூறினார். அதற்கு எதிர்வினையாக, அதுக்கு நீங்கதான் சொந்தமா வண்டி வாங்கி விடனும் என்று நான் சொல்ல, சொந்தமா எதுக்கு வாங்கனும் ஒரு வண்டி ஏற்பாடு செஞ்சா போதாதா என்ற நியாயமான கேள்வியைக் கேட்டார் சண்முகம் அண்ணன். கட்டண உரைக்கு குடும்பத்துடன் ஒரு  செல்லலாம் என்ற எண்ணம் இப்படி கணப்பொழுதில்தான் உதித்தது. வெள்ளியன்று காலை எட்டரை மணிக்கு அச்சிறுபாக்கத்தில் காலை சிற்றுண்டி உண்டு வண்டியேறியபோது, வண்டியில் ஓட்டுநர் தவிர நான், ஆர்த்தி அத்விகா அஸ்வத்  என மனைவி குழந்தைகளுடனும் ஜாஜாவும் சுபா விஸ்வா என தன்  குடும்பத்தினருடனும், செளந்தர் சாரதா சத்யா என மனைவி குழந்தையுடனும்  சண்முகம் பாரதி,  ஸ்ரீநிவாசன் சுதா  என தம்பதி சமேதராகவும், ராகவ் ராஜசிம்மனுடன் சகோதர சமேதராகவும் எழுத்தாளர்: பானுமதி, சிவகுமார், ரவீந்திரன், சந்தோஷ், வெங்கட்ரமணன் மற்றும் காஞ்சீபுரம் சிவகுமார் ஆகியோர் தனியராகவும்  என இருந்தோம்.




  ஓட்டுநர் அறையில் அவருக்குப் பின்னால் அமர்ந்து சாலையை வேடிக்கை பார்த்தபடி வருவது மிக இனிமையானது. சாலையை விட முன்னால் செல்லும் வண்டிகளில் உள்ள படங்களும் வசனங்களும் சுவாரசியம். வண்டிக்குப்பின்னால் அதை ஒட்டுவதில் ஒரு காரணம் இருக்கிறது என்பது அப்போதுதான் புரிந்தது. முன்னால் செல்லும் வண்டிகள் நமக்கு ஒரு செய்தியை சொல்கிறன. நாம் அவசரமாக முந்திச்செல்ல முயன்றால், அந்த வண்டியின் பின் கண்ணாடியில் உள்ள ஷீர்டி சாய்பாபா, கால் மேல் கால் போட்டு அமர்ந்து தனது வலது உள்ளங்கையை காட்டி பொத்துனாப்ல பின்னாடி வாப்பா என்கிறார். சில இடங்களில் பாலமுருகன் அங்கிள் வேகமா போகாதீங்க என கெஞ்சுகிறார். சரியென்று நாமும் பின்வாங்குகிறோம். என் சமூகம் உனக்கு முன்பாக செல்லும் என என்று ஒருவர் எழுதிவைத்து அடம்பிடிக்கிறார். சரி நீங்களே முன்னாடி போங்க என்று விட்டுவிட்டோம். மிக அதிகமாக கண்டது செந்தூர ஆஞ்சநேயர் தன் ஒரு பக்க முகத்தை மட்டும் காட்டி மிரட்டுவது தான். வந்துதான் பார்றா என்பது போல…


ஓட்டுநர் தன் சேகரிப்பில் இருந்த 80களின் பாடல்களை ஒலிபரப்பினார். 80 களின் பாடல் என்றதும் நம் நினைவில் வரும் மோகன் பாடல்களும், பாடறியேன் படிப்பறியேன்களையும் கவனமாக தவிர்த்து சேகரிக்கப்பட்ட பாடல்கள். ஒரே படத்தின் பாடல்களில் சோகப்பாடல்களை தவிர்த்து மற்ற பாடல்களை மட்டும் வைத்திருந்த  அந்த  தொகுப்பை அலறவிட்டார் ஓட்டுநர்.  அனைத்தும் எனக்கு ஞாபகம் இருந்தன என்பதே ஆச்சரியம். தூதுவலைய அரைச்சு தொண்டையிலதான் நனைச்சு பாடலை கூட சேர்ந்து பாட முடிந்தது.. அரைச்ச சந்தனம் மணக்கும் குங்குமம் பாடல்தான் என்பது இசைக்கருவிகள் ஒலிக்க துவங்கும்போதே தெரிந்துவிட்டது. அரும்பாகி மொட்டாகி பூவாகி பாடல் அடுத்து வரும் என்று ஆசையில பாத்திகட்டி நாத்து ஒண்ணு நட்டு வச்சேன் நான் பூவாயி என்ற பாடல் ஒலிக்கும் போதே மனம்  காத்திருக்கிறது. கூடவே, இதுபோல பாடல் கேட்கும் உணர்வுகளை தொகுத்து எழுதிய  எழுத்தாளர் சுகாவின் ஞாபகமும் வந்தது. அவர் எழுத்தின் வழியாக மட்டுமே அறிந்து வந்த நெல்லை மண்ணிற்குப் போகிறேன் என்ற எண்ணமும்..



அன்று மாலையே நெல்லையப்பர் கோவிலை அடைந்துவிட திட்டம். கிட்டத்தட்ட நடை சாற்றுவதற்கு முக்கால்மணிநேரம் முன் அங்கு எட்டினோம். அத்விகாவிற்கு திருச்சி எட்டும் முன்பே காய்ச்சல் வந்துவிட்டதால் மிக சோர்வாக இருந்தாள். பாராசிடமால் இருமுறை அளித்திருந்தோம். மதியம் உணவும் அதிகம் உண்ணாமல் இருந்ததால்   நெல்லையப்பர் கோயில் கொடிக்கம்பம் வரை வந்தவள் முடியல என்று அமர்ந்து கொண்டாள். ஆகவே, அவளுக்கு உணவு வாங்கித்தர வெளியே அழைத்துச்சென்று வந்து, யானைக்கு அருகில் இருவரும் உட்கார்ந்து கொண்டோம். யானை தேங்காய் மூடியை மிதித்து உடைத்து ஓடை விலக்கிவிட்டு தேங்காயை மட்டும் உண்பதை ஆச்சரியத்துடன் கண்டாள். அந்த யானைக்கு காந்திமதி என்று பெயர். அந்த பாகன் சுவாமிமலையை சேர்ந்தவர். நான் மன்னார்குடி என்றதும் உற்சாகமாக ஊர்கதைகளைப்பேசினார். தற்போதைய மன்னார்குடி யானை செங்கம்மாவிற்கு முன் அங்கிருந்த செங்கமலம் என்கிற பெரிய யானையையும் அவர் கவனித்துக்கொண்டிருக்கிறார். காந்திமதி வாழைஇலையை நடுக்காம்பை விட்டுவிட்டு இலையை மட்டும் பிய்த்துத்தின்பதை ஆரம்பித்திருந்தாள். அதற்குள் மற்ற குழந்தைகளும் வந்து யானையுடன் விளையாடத்  துவங்கினர். பின் மெதுவாக மற்றவர்கள் சந்நிதியை விட்டு வெளியே வந்தனர். கொட்டிலுக்கு காந்திமதியை வழியனுப்பிவிட்டு, நாங்கள் தங்க ஏற்பாடு செய்திருந்த  மண்டபத்திற்கு வந்து சேர்ந்தோம். ஜாஜா அந்த இடத்தை ஏற்பாடு செய்திருந்தார். வரும்வழியில் சந்தோஷின் தோழி எங்களுடன் இணைந்துகொண்டார்.

மறுநாள் காலை திருப்புடைமருதூர் சென்றோம். வழியில் முக்குடல் என்ற ஊரில் காலை உணவு. அப்பா அங்க பாரு ஷண்முகம் அங்க்கிள் மாதிரியே ஒரு சர்வர் இந்த ஹோட்டலில் இருக்காரு என்று காட்டினாள் அத்விகா. பார்த்தால், அது மாதிரி இல்லை அவரேதான் என்பது உடனே புரிந்தது. சென்னையில் பிரபல பில்டராக இருக்கும் அவர் அந்த ஹோட்டல் பணியாளர்களை சித்தாள் ரேஞ்சுக்கு வேலை வாங்கிகொண்டிருந்தார். வண்டி ஏற்பாடுமுதல், உணவகங்களின் தரம் பார்த்து அழைத்துச்செல்வது வரை அவர் வேலைதான். 


திருப்புடை மருதூர்   கோவிலுக்குப்பின்னால் தாமிரவருணி ஓடுகிறது. அங்கு தான் காலை குளியல். அத்விகாவிற்கு ஜுரம் என்பதால் அவள் கால் மட்டும் நனைத்திருக்க மற்ற அனைவரும் இறங்கி குளிக்கத்துவங்கினோம். குழந்தைகளின் பற்கள் தந்தியடிக்க இன்னும் இன்னும் என்று கேட்டு ஒவ்வொருவர் முதுகாக ஏறிச்சென்று குளித்தனர். அதற்குள் குழந்தைகள் அனைவருடனும் அதிகம் நெருங்கி விளையாடத்துவங்கியிருந்தனர். ராகவ் பிரதர்ஸும் சந்தோஷும் வெங்கட்டும் அவர்களை ஒருவர் மாற்றி ஒருவர் தூக்கிச்சென்றனர். அங்கு படிதுறைக்கு சற்றுத்தள்ளி நடு ஆற்றுக்கு முன்பாக மணல் மூட்டையை அடுக்கி ஒரு மேடை போல வைத்திருக்கிறார்கள். திருப்பதி போன்ற இடங்களில் பொதுவாக கம்பித்தடுப்பு போட்டு மக்கள் ஆழப்பகுதிக்குச் செல்லாமல் தடுக்கும் ஏற்பாடுபோலத்தான் அது. சென்றமாதம் நடந்த புஷ்கரம் விழாவிற்காக இந்த தற்காலிக ஏற்பாடு. ஆனால் இப்போது  ஓடும் நதிக்கு நடுவே உட்கார்ந்துகொண்டிருக்கலாம் அங்கு. நல்லதொரு அனுபவமாக இருந்தது. அந்தக்கோயிலின் மதில் சுவற்றைச்சுற்றியிருந்த மரங்களில் பழந்தின்னி வெளவ்வால்கள் இருந்தன. அவ்வளவு பெரிய வெளவ்வால்களை நான் கண்டது அதுவே முதல்முறை. அந்தக்கோயிலின் வீடியோக்களும் புராணங்களிம் தகவல்களும் இணையத்தில் நிறைய கிடைக்கின்றன

அங்கிருந்து சென்றது பாபநாசம் அருவிக்கு. நாங்கள் சென்றபோது, எவனெவனோ எங்கிருந்தோ  வாரான் குளிச்சி பாவத்தைக்கழுவறான் என்ற கமல் வசனம் நினைவிற்கு வந்தது. தூரத்திலிருந்து காண்கையில் ஒரு கரும்பானையில் மெல்லிய ஓட்டை விழுந்து  தயிர் மெல்ல ஒரு கோடாக வழிந்து ஓடுவது போல இருந்தது.  ஆனால் அருகே சென்ற போது அதன் வேகமும் அளவும் தெரிந்தன. ஒருநிமிடம் அதனடியில் நின்றாலே முதுகு சிவக்கும் அளவு அடி.. பள்ளி நாட்களில் கூட இவ்வளவு வாங்கியதில்லை.  இங்கும் குழந்தைகளின் தாவல்கள். குதியாட்டங்கள். அதற்கு மேலிருந்த கல்யாணி தீர்த்தத்தை ஸ்ரீநிவாசன் சார் மட்டும் சென்று பார்த்து வந்து பிரமித்துக்கூறினார். அதற்கும் மேலே உள்ள சொரிமுத்து ஐயனார் கோவிலும் அருவியும் உள்ள இடத்திற்குச் செல்லும் பாதையை மட்டும்  ஜாஜா காட்டினார்.  பாபநாசத்தில் மேலும் ஒரு குளியல் மதிய உணவு என ஒருமணி நேரத்துக்கும் மேலாக ஆட்டம் போட்டு விட்டு மாலை ஜெயமோகன் உரையைக்கேட்க அரங்கிற்கு வந்தோம். வரும் வழியிலேயே ஆங்காங்கு இருந்த உரை குறித்த விளம்பரப் பதாகைகளைக் கண்டோம். மண்டபத்துக்குச்சென்று உடை மாற்றிக்கொண்டு வருவதாகத்தான் திட்டம். ஆனால், அதிகநேரம் நீரிலேயே ஆடிவிட்டதால் அணிந்திருந்த வேட்டி சட்டையும் பரட்டைத்தலையுமாய் ஒரு இலக்கியவாதியாகவே மாறி அரங்கை நிறைத்தோம்.