Wednesday, November 14, 2018

கட்டண உரை பயணம்

எச்சரிக்கை:- நெல்லையில் ஜெ. ஆற்றிய கட்டண உரை பற்றிய என் கருத்துக்கள் இங்கு இல்லை…



நெல்லை செல்வது பிரச்சனையில்லை. ஆனால், தீபாவளி நேரத்தில்  திரும்பி வர பயணச்சீட்டு கிடைப்பதுதான் கடினம்.  அதிலும் மறுநாள் வேலைக்குச்செல்ல, அன்று மதியம் கிளம்பி இரவு சென்னை வந்தடைவதுதான் வசதியானது. ரயிலில் முன்பதிவு செய்யச் சொன்னபோது ஜாஜா இவ்வாறு கூறினார். அதற்கு எதிர்வினையாக, அதுக்கு நீங்கதான் சொந்தமா வண்டி வாங்கி விடனும் என்று நான் சொல்ல, சொந்தமா எதுக்கு வாங்கனும் ஒரு வண்டி ஏற்பாடு செஞ்சா போதாதா என்ற நியாயமான கேள்வியைக் கேட்டார் சண்முகம் அண்ணன். கட்டண உரைக்கு குடும்பத்துடன் ஒரு  செல்லலாம் என்ற எண்ணம் இப்படி கணப்பொழுதில்தான் உதித்தது. வெள்ளியன்று காலை எட்டரை மணிக்கு அச்சிறுபாக்கத்தில் காலை சிற்றுண்டி உண்டு வண்டியேறியபோது, வண்டியில் ஓட்டுநர் தவிர நான், ஆர்த்தி அத்விகா அஸ்வத்  என மனைவி குழந்தைகளுடனும் ஜாஜாவும் சுபா விஸ்வா என தன்  குடும்பத்தினருடனும், செளந்தர் சாரதா சத்யா என மனைவி குழந்தையுடனும்  சண்முகம் பாரதி,  ஸ்ரீநிவாசன் சுதா  என தம்பதி சமேதராகவும், ராகவ் ராஜசிம்மனுடன் சகோதர சமேதராகவும் எழுத்தாளர்: பானுமதி, சிவகுமார், ரவீந்திரன், சந்தோஷ், வெங்கட்ரமணன் மற்றும் காஞ்சீபுரம் சிவகுமார் ஆகியோர் தனியராகவும்  என இருந்தோம்.




  ஓட்டுநர் அறையில் அவருக்குப் பின்னால் அமர்ந்து சாலையை வேடிக்கை பார்த்தபடி வருவது மிக இனிமையானது. சாலையை விட முன்னால் செல்லும் வண்டிகளில் உள்ள படங்களும் வசனங்களும் சுவாரசியம். வண்டிக்குப்பின்னால் அதை ஒட்டுவதில் ஒரு காரணம் இருக்கிறது என்பது அப்போதுதான் புரிந்தது. முன்னால் செல்லும் வண்டிகள் நமக்கு ஒரு செய்தியை சொல்கிறன. நாம் அவசரமாக முந்திச்செல்ல முயன்றால், அந்த வண்டியின் பின் கண்ணாடியில் உள்ள ஷீர்டி சாய்பாபா, கால் மேல் கால் போட்டு அமர்ந்து தனது வலது உள்ளங்கையை காட்டி பொத்துனாப்ல பின்னாடி வாப்பா என்கிறார். சில இடங்களில் பாலமுருகன் அங்கிள் வேகமா போகாதீங்க என கெஞ்சுகிறார். சரியென்று நாமும் பின்வாங்குகிறோம். என் சமூகம் உனக்கு முன்பாக செல்லும் என என்று ஒருவர் எழுதிவைத்து அடம்பிடிக்கிறார். சரி நீங்களே முன்னாடி போங்க என்று விட்டுவிட்டோம். மிக அதிகமாக கண்டது செந்தூர ஆஞ்சநேயர் தன் ஒரு பக்க முகத்தை மட்டும் காட்டி மிரட்டுவது தான். வந்துதான் பார்றா என்பது போல…


ஓட்டுநர் தன் சேகரிப்பில் இருந்த 80களின் பாடல்களை ஒலிபரப்பினார். 80 களின் பாடல் என்றதும் நம் நினைவில் வரும் மோகன் பாடல்களும், பாடறியேன் படிப்பறியேன்களையும் கவனமாக தவிர்த்து சேகரிக்கப்பட்ட பாடல்கள். ஒரே படத்தின் பாடல்களில் சோகப்பாடல்களை தவிர்த்து மற்ற பாடல்களை மட்டும் வைத்திருந்த  அந்த  தொகுப்பை அலறவிட்டார் ஓட்டுநர்.  அனைத்தும் எனக்கு ஞாபகம் இருந்தன என்பதே ஆச்சரியம். தூதுவலைய அரைச்சு தொண்டையிலதான் நனைச்சு பாடலை கூட சேர்ந்து பாட முடிந்தது.. அரைச்ச சந்தனம் மணக்கும் குங்குமம் பாடல்தான் என்பது இசைக்கருவிகள் ஒலிக்க துவங்கும்போதே தெரிந்துவிட்டது. அரும்பாகி மொட்டாகி பூவாகி பாடல் அடுத்து வரும் என்று ஆசையில பாத்திகட்டி நாத்து ஒண்ணு நட்டு வச்சேன் நான் பூவாயி என்ற பாடல் ஒலிக்கும் போதே மனம்  காத்திருக்கிறது. கூடவே, இதுபோல பாடல் கேட்கும் உணர்வுகளை தொகுத்து எழுதிய  எழுத்தாளர் சுகாவின் ஞாபகமும் வந்தது. அவர் எழுத்தின் வழியாக மட்டுமே அறிந்து வந்த நெல்லை மண்ணிற்குப் போகிறேன் என்ற எண்ணமும்..



அன்று மாலையே நெல்லையப்பர் கோவிலை அடைந்துவிட திட்டம். கிட்டத்தட்ட நடை சாற்றுவதற்கு முக்கால்மணிநேரம் முன் அங்கு எட்டினோம். அத்விகாவிற்கு திருச்சி எட்டும் முன்பே காய்ச்சல் வந்துவிட்டதால் மிக சோர்வாக இருந்தாள். பாராசிடமால் இருமுறை அளித்திருந்தோம். மதியம் உணவும் அதிகம் உண்ணாமல் இருந்ததால்   நெல்லையப்பர் கோயில் கொடிக்கம்பம் வரை வந்தவள் முடியல என்று அமர்ந்து கொண்டாள். ஆகவே, அவளுக்கு உணவு வாங்கித்தர வெளியே அழைத்துச்சென்று வந்து, யானைக்கு அருகில் இருவரும் உட்கார்ந்து கொண்டோம். யானை தேங்காய் மூடியை மிதித்து உடைத்து ஓடை விலக்கிவிட்டு தேங்காயை மட்டும் உண்பதை ஆச்சரியத்துடன் கண்டாள். அந்த யானைக்கு காந்திமதி என்று பெயர். அந்த பாகன் சுவாமிமலையை சேர்ந்தவர். நான் மன்னார்குடி என்றதும் உற்சாகமாக ஊர்கதைகளைப்பேசினார். தற்போதைய மன்னார்குடி யானை செங்கம்மாவிற்கு முன் அங்கிருந்த செங்கமலம் என்கிற பெரிய யானையையும் அவர் கவனித்துக்கொண்டிருக்கிறார். காந்திமதி வாழைஇலையை நடுக்காம்பை விட்டுவிட்டு இலையை மட்டும் பிய்த்துத்தின்பதை ஆரம்பித்திருந்தாள். அதற்குள் மற்ற குழந்தைகளும் வந்து யானையுடன் விளையாடத்  துவங்கினர். பின் மெதுவாக மற்றவர்கள் சந்நிதியை விட்டு வெளியே வந்தனர். கொட்டிலுக்கு காந்திமதியை வழியனுப்பிவிட்டு, நாங்கள் தங்க ஏற்பாடு செய்திருந்த  மண்டபத்திற்கு வந்து சேர்ந்தோம். ஜாஜா அந்த இடத்தை ஏற்பாடு செய்திருந்தார். வரும்வழியில் சந்தோஷின் தோழி எங்களுடன் இணைந்துகொண்டார்.

மறுநாள் காலை திருப்புடைமருதூர் சென்றோம். வழியில் முக்குடல் என்ற ஊரில் காலை உணவு. அப்பா அங்க பாரு ஷண்முகம் அங்க்கிள் மாதிரியே ஒரு சர்வர் இந்த ஹோட்டலில் இருக்காரு என்று காட்டினாள் அத்விகா. பார்த்தால், அது மாதிரி இல்லை அவரேதான் என்பது உடனே புரிந்தது. சென்னையில் பிரபல பில்டராக இருக்கும் அவர் அந்த ஹோட்டல் பணியாளர்களை சித்தாள் ரேஞ்சுக்கு வேலை வாங்கிகொண்டிருந்தார். வண்டி ஏற்பாடுமுதல், உணவகங்களின் தரம் பார்த்து அழைத்துச்செல்வது வரை அவர் வேலைதான். 


திருப்புடை மருதூர்   கோவிலுக்குப்பின்னால் தாமிரவருணி ஓடுகிறது. அங்கு தான் காலை குளியல். அத்விகாவிற்கு ஜுரம் என்பதால் அவள் கால் மட்டும் நனைத்திருக்க மற்ற அனைவரும் இறங்கி குளிக்கத்துவங்கினோம். குழந்தைகளின் பற்கள் தந்தியடிக்க இன்னும் இன்னும் என்று கேட்டு ஒவ்வொருவர் முதுகாக ஏறிச்சென்று குளித்தனர். அதற்குள் குழந்தைகள் அனைவருடனும் அதிகம் நெருங்கி விளையாடத்துவங்கியிருந்தனர். ராகவ் பிரதர்ஸும் சந்தோஷும் வெங்கட்டும் அவர்களை ஒருவர் மாற்றி ஒருவர் தூக்கிச்சென்றனர். அங்கு படிதுறைக்கு சற்றுத்தள்ளி நடு ஆற்றுக்கு முன்பாக மணல் மூட்டையை அடுக்கி ஒரு மேடை போல வைத்திருக்கிறார்கள். திருப்பதி போன்ற இடங்களில் பொதுவாக கம்பித்தடுப்பு போட்டு மக்கள் ஆழப்பகுதிக்குச் செல்லாமல் தடுக்கும் ஏற்பாடுபோலத்தான் அது. சென்றமாதம் நடந்த புஷ்கரம் விழாவிற்காக இந்த தற்காலிக ஏற்பாடு. ஆனால் இப்போது  ஓடும் நதிக்கு நடுவே உட்கார்ந்துகொண்டிருக்கலாம் அங்கு. நல்லதொரு அனுபவமாக இருந்தது. அந்தக்கோயிலின் மதில் சுவற்றைச்சுற்றியிருந்த மரங்களில் பழந்தின்னி வெளவ்வால்கள் இருந்தன. அவ்வளவு பெரிய வெளவ்வால்களை நான் கண்டது அதுவே முதல்முறை. அந்தக்கோயிலின் வீடியோக்களும் புராணங்களிம் தகவல்களும் இணையத்தில் நிறைய கிடைக்கின்றன

அங்கிருந்து சென்றது பாபநாசம் அருவிக்கு. நாங்கள் சென்றபோது, எவனெவனோ எங்கிருந்தோ  வாரான் குளிச்சி பாவத்தைக்கழுவறான் என்ற கமல் வசனம் நினைவிற்கு வந்தது. தூரத்திலிருந்து காண்கையில் ஒரு கரும்பானையில் மெல்லிய ஓட்டை விழுந்து  தயிர் மெல்ல ஒரு கோடாக வழிந்து ஓடுவது போல இருந்தது.  ஆனால் அருகே சென்ற போது அதன் வேகமும் அளவும் தெரிந்தன. ஒருநிமிடம் அதனடியில் நின்றாலே முதுகு சிவக்கும் அளவு அடி.. பள்ளி நாட்களில் கூட இவ்வளவு வாங்கியதில்லை.  இங்கும் குழந்தைகளின் தாவல்கள். குதியாட்டங்கள். அதற்கு மேலிருந்த கல்யாணி தீர்த்தத்தை ஸ்ரீநிவாசன் சார் மட்டும் சென்று பார்த்து வந்து பிரமித்துக்கூறினார். அதற்கும் மேலே உள்ள சொரிமுத்து ஐயனார் கோவிலும் அருவியும் உள்ள இடத்திற்குச் செல்லும் பாதையை மட்டும்  ஜாஜா காட்டினார்.  பாபநாசத்தில் மேலும் ஒரு குளியல் மதிய உணவு என ஒருமணி நேரத்துக்கும் மேலாக ஆட்டம் போட்டு விட்டு மாலை ஜெயமோகன் உரையைக்கேட்க அரங்கிற்கு வந்தோம். வரும் வழியிலேயே ஆங்காங்கு இருந்த உரை குறித்த விளம்பரப் பதாகைகளைக் கண்டோம். மண்டபத்துக்குச்சென்று உடை மாற்றிக்கொண்டு வருவதாகத்தான் திட்டம். ஆனால், அதிகநேரம் நீரிலேயே ஆடிவிட்டதால் அணிந்திருந்த வேட்டி சட்டையும் பரட்டைத்தலையுமாய் ஒரு இலக்கியவாதியாகவே மாறி அரங்கை நிறைத்தோம்.

No comments: