Thursday, September 3, 2020

முரசும் சொல்லும் - ஒ) நிறைவுடன்...

முந்தையது:- முரசும் சொல்லும் - ஐ ) வரலாற்றுடன் உரையாடுதல்


ஒருவன் இலக்கிய வாசகனானாலும் தத்துவ நூலை அணுகுவது எளிதல்ல. ஆகவே அதை கதையாக விளங்கிக் கொள்ளவே இதில் நாடகீய போர்த்தருணம் சொல்லப்பட்டது. இருப்பினும் அதை நேரடியாக வாசித்து அறிவதும் கடினமே. அதுவே, இமைக்கணம் வழியாக கீதையை அணுகுவது ஒப்புநோக்க எளிதானது. ஆனால் இமைக்கணத்தை விளங்கிக் கொள்ளவும்,  வெண்முரசினை அது சொல்லவரும் வரலாறு/ அரசியல்/ மரபு / தரிசனங்கள் சார்ந்த பின்புலத்துடன் அறிய வேண்டியதும் அவசியம்.

 

இமைக்கணத்தின் படிநிலைகள் என்று சொல்வதால், அவை ஒன்றுடன் ஒன்று மேம்பட்டது என்று ஆகிவிடாது. உதாரணமாக மாத சம்பளம் வாங்கும் ஒரு பணியாளர், தனது வரையறுக்கப்பட்ட வாழ்க்கை எல்லைக்குள் வாழ்பவர். அவரால் எளிதாக மூன்றாம் அத்தியாயமான கர்ம சந்நியாச யோகத்துக்குள் வந்துவிட முடியும்.  விடுபட்ட நிலையில் பெரும் விழைவு இன்றி தன் கடமையை ஆற்ற முடியும்.  ஆனால் அவருக்கு மாத ஊதியம் வழங்கும் அந்த நிறுவன தலைவரால் அவ்வாறு இருக்க வியலாது. அவர் சாங்கிய யோகப்படி உலகியலில் உழன்று செயலாற்றி நின்று செயல் புரிதல் வேண்டும். எனவே இந்த அறிதல்கள் என்பது ஒன்றுடன் ஒன்று உயர்ந்தது தாழ்ந்தது என்று இல்லை. எந்த ஒரு வழியில் சென்றாலும் அது இறுதியாக  ஞானத்திற்கே இட்டுச் செல்லும்

 

தனக்கு உலகியலோ போரின் முடிவோ ஒரு பொருட்டு இல்லை என்று சொல்லும் பீஷ்மருக்கு செயல் / கர்ம யோகம் உரைக்கப்படுகிறது. தன் இளவயது சபதம் முதிய வயதில் அபத்தமாக தோன்றுவதம் குழப்பம் அறிவின் சொற்கள் மூலம் சிகண்டிக்கு அகற்றப்படுகிறது. இவ்வாறு வெவ்வேறு குணங்களும் ஒன்றுடன் ஒன்று மோதிக் கலந்து உருவானதே வெண்முரசு என்னும் பெருங்கதையாடல். இன்று போரும் அதற்குப் பின்னான அரசியல்  மொழி மற்றும் சித்தாந்த மாற்றங்களையும் கண்டபிறகு,  இமைக்கணத்தின் மறு வாசிப்பில் அந்தப் பெருஞ்சித்திரத்தை உணர முடிந்தது. இமைக்கணத்தினை அணுகுவது என்பது அவரவர் புரிதலுக்கு உட்பட்டது.  அவரவர் வாழ்க்கை அனுபவத்துடன் தொடர்புடையது. அவ்வகையில் இமைக்கணத்தை அவரவர் வாசித்து அறிவதே சிறந்தது.

 

வெண்முரசு வாசிப்பின் வழியே நான் அடைந்தவற்றின் தொகுப்புத்தான் இந்தக் கட்டுரைகள். சென்னை வெண்முரசு கலந்துரையாடல்கள் எனது வாசிப்பிற்கு மிகவும் உறுதுணையாக இருந்தன. கலந்துரையாடல் என்பது அளிக்கும் பலன் ஒவ்வொருவருக்கும் மிகவும் அந்தரங்கமானது.  எனக்கு அதில் வரும் உவமைகள் சொற்கள் சிறு கிளைக்கதைகள் என பல குறிப்பிடத்தக்க இடங்கள் உள்ளன. அவ்வாறாகவே, ஒவ்வொருவரும் அதில் ஒவ்வொன்றை பற்றிக் கொள்ளக் கூடும். ஆகவே இந்தக் கட்டுரைகளுக்குள் அவற்றைக் குறிப்பிடவில்லை. வேறு சந்தர்பங்களில் அவற்றையும் நான் எழுதக் கூடும். இந்தக் கட்டுரைகளைப் பொறுத்தவரையில், புதிதாக வெண்முரசு வாசிக்கத் துவங்கும் ஒருவருக்கு அந்த படைப்பு  குறித்த ஒரு குறைந்தபட்ச  புரிதலை அளிக்க வேண்டும் என்பது மட்டுமே  எனது நோக்கமாக இருந்தது.


மே-2015 முதல் ஐந்து வருடங்களைக் கடந்து நிகழ்ந்து வரும் சென்னை வெண்முரசு மாதாந்திர கூடுகையின் முதலாம் ஆண்டின் நிறைவில் எழுத்தாளர் ஜெயமோகன் லலந்து கொண்டபோது

வெண்முரசின் ஓவியங்கள் பல தருணங்களை எளிதாகப் புரிய வைத்திருக்கின்றன. தனது முதல் இலக்கிய வாசிப்பு என்பது வெண்முரசு வழியாகவே நிகழ்ந்தது என்று ஓவியர் ஷண்முகவேல் அவர்கள் கூறினார். ஆனால்  முதல் அத்தியாயத்தில் மானசா தேவி ஆஸ்திகனுக்குக் கதை சொல்வதில் துவங்கி ஒவ்வொரு இடத்திலும் கதாபாத்திரத்தின் வீச்சை ஓவியங்கள் மூலம் அவர் வாசகரிடத்தில் கொண்டு சேர்த்தார். அவருடனான ஒரு சென்னை கலந்துரையாடலின் போது அவரது உரையில் கூறிய ஒன்று அவர் எந்தளவு கவனமாக இருந்திருக்கிறார் என்று உணர்த்தியது. ஜெ. வெண்முரசை தொடராக எழுதும் போது எதிர்காலத்தில் ஏதோ ஒரு வர்ணனையில் முகத்தில் உடலில் ஒரு மச்சம் வடு போன்ற ஒரு அடையாளத்தை எழுதிவிட்டால் என்ன செய்வது என்று கருதியே எந்த ஒரு கதாபாத்திரத்தின் முகத்தையும் தான் வரையவில்லை என்றும் முகத்தைக் காட்டாமலேயே அந்த சூழலைச் சித்தரித்தது பெரும் சவாலாக இருந்தது என்றும் குறிப்பிட்டார். இன்று இந்த கட்டுரைகளுக்காக ஓவியங்களை மீண்டும் தேடிப் பார்த்து அவற்றில் எதை ஒதுக்குவது என்பதில் பெரும் குழப்பம் உண்டாயிற்று. 


ஓவியர் ஷண்முகவேல் வெண்முரசு விழாவில் கெளரவிக்கப் பட்டபோது

எனது வீட்டில் வெண்முரசு புத்தகமாக அனைவராலும் வாசிக்கப் படுவது.  
அதன் வழியாக கொற்றவை நாஞ்சில்நாடன் அ.முத்துலிங்கம் என பலரை வீட்டில் உள்ளவர்கள் வாசிக்கத் துவங்கினர். நவீன இலக்கியத்தில் இவ்வாறு வீட்டில் அனைவரும் தொடர்ச்சியாக வாசிப்பது என்பது பல ஆண்டுகளுக்குப் பிறகு வெண்முரசின் வழியாகவே மீண்டும் நிகழத் துவங்கியுள்ளது. அதை முன்பே கணித்து நேர்த்தியாக வடிவமைத்த நற்றிணை மற்றும் கிழக்கு பதிப்பகத்தாருக்கும் வாழ்த்துக்களை தெரிவிக்க வேண்டும்.


அம்மா வெண்முரசு ( செந்நாவேங்கை ) வாசிக்கும் சிக்குபலகை மேடை😀 


வெண்முரசு வாசகர்களை திரட்டி “venmurasu reader” குழு மூலம் வெண்முரசு நாவல்கள் மற்றும் அதன் பலதரப்பட்ட சிறப்புகள் குறித்த கட்டுரைகள் வெண்முரசு வாசகர்கள் மூலம் தொகுக்கப் படுகின்றன. அவற்றின் மூலம் வெண்முரசின் இன்னும்  பல வாசிப்புக் கட்டுரைகளும் / உரைகளும் எழுந்து வரும். ஆனால் எவ்வளவு தொகுத்தாலும் வெண்முரசின் இறுதியில் வரும்  கிளி போல நமது உள்ளமும்  “இல்லை! இல்லை!” என்றுதான் கூவிக்கொண்டிருக்கும் என்பதில் ஐயமில்லை

 


முரசும் சொல்லும் - ஐ ) வரலாற்றுடன் உரையாடுதல்

இந்தப் பகுதி வல்லினம் கலை இலக்கிய இதழின் செப்டம்பர்-2020 இதழில் வெளியானது. இணைப்பு இங்கே:- 

 

முந்தையது:- முரசும் சொல்லும் - ஏ) கதிரெழுகை

ஐ ) வரலாற்றுடன் உரையாடுதல்


(1)

இதிகாசங்கள் என்பவை பொதுவாக உரையாடல்தான். முன்னர் நிகழ்ந்ததை சொல்பவை. இவ்வாறு வியாசர் வினாயகரிடம் சொல்லி அவர் எழுதிய ஜய கதையை சொல்கிறேன் என்று வைசம்பாயனர்  ஜனமேஜயனிடம் அவையில் சொல்லும்போது அதைக் கேட்ட செளதி ( சூததேவர்) பிற்காலத்தில் செளனகரிடம் உரைப்பதுதான் மஹாபாரதமாக நமக்குக் கிடைப்பது.  அந்த இதிகாசம் இலக்கியத்துக்குள் வரும்போது அதுவும் ஒரு உரையாடலாகத்தான் நிகழ்கிறது. அது அந்த எழுத்தாளாரின் அக உரையாடல் எனக் கொள்ளலாம். அது வழிபாடு, குழப்பம் என்கிற இரு இடங்களில் நிகழ்கின்றன. வழிப்பாட்டு மனநிலையில் அணுகும்போது அது அதன் உச்ச குணங்கள் அனைத்தையும் மீறாமல் அதற்குள்ளாகவே அவர்களின் நுட்பத்தை இன்னும் விரிவாக்கி அளிக்கிறது. பாலகுமாரன் எழுதிய  ஒரு அன்பு மந்திரம், கிருஷ்ண அர்ஜுனன் ஆகியவை இந்த வகையைச் சேர்ந்தவை.  அன்றைய பாக்கெட் நாவல்களின் குடும்ப நாவல் வகை கதைகளாக அவை உள்ளன. புலரியில் படுக்கையில் துவங்குவதே பாக்கெட் நாவலின் ஒரு மரபு. அதுபோலவே சுபத்ரையை மணந்த அர்ஜுனன் மஞ்சத்திலிருந்து துவங்கும் கதை.  அது கிருஷ்ண அர்ஜுன தோழமையை இன்னும் விரித்துச் சொல்லி வாசகருக்கு நெகிழ்வும் பக்தியையுமே அளிக்கின்றன. என் அன்பு மந்திரமும் இந்த வகைதான். அது துரோணர் துருபதன் நட்பைப் பேசுகிறது. குருகுலங்கள் ஏன் முக்கியம் என்ற உரையாடலில் இது துவங்குகிறது.  இதனூடாக அன்றாட வாழ்வின் எளிய சிக்கல்களே அணுகப் படுகின்றன.  இதிகாச பாத்திரங்களின் சிக்கலைக் கண்டு வாசகர்கள் தெளிவடைவது வேறு.  வாசகரின்அன்றாட சிக்கலை இதிகாச பாத்திரங்களுக்கு பொருத்துவது வேறு. இதனாலேயே இவை ஆரம்பகட்ட பக்தியுடன் நின்று விடுகின்றன. அல்லது கடமையை செய் பலனை எதிர்பாராதே போன்ற சொற்களின் விளக்கங்களாக அவை அமைந்து விடுகின்றன. இது இலக்கியத்தை நேர்மறையாக அணுக உதவும் என்றாலும் பாத்திரங்கள் மீது உன்னதங்கள் ஏற்றி வைக்கப்படுதலும் அவர்களைப் பெரும் பிம்பமாக்குவதும் இதன் மூலம் நிகழ்ந்து விடுகிறது

 

இந்த சிக்கல் எங்கும் இருக்கத்தான் செய்கிறது. பாஞ்சாலி சபதம் எழுதிய பாரதி அதை விடுதலைப் போருக்கான ஆயுதமாக முன்னெடுக்கிறார். அதற்குள் அதிகம் அறச்சிக்கல் கொள்ளவில்லை.  ஆனால் நவீன இலக்கியத்திற்கும் முன்பு சொன்ன ஒருவித சிக்கல் இருக்கத்தன் செய்கிறது. அந்த விதத்தில், நவீன எழுத்தாளருக்கு இதிகாசத்தை அணுகுவதில் இருக்கும் நோக்கானது தமிழின் முதல் நவீன சிறூகதை எழுத்தாளரான புதுமைப் பித்தனிடமிருந்தே துவங்குகிறது. ராமன் அகலிகையிடம் சீதையிடம் நடந்து கொள்ளும் முறைகள் வேறு வேறாக இருப்பது  புதுமைப் பித்தனைக் குழப்பியிருக்கின்றது ( சாபவிமோசனம்). அதன் பின் மற்ற படைப்பாளிகள் வாயிலாகவும் அது மெல்ல வளர்ந்து, அது இதிகாசத்தில் கொல்லப்பட்ட அனைவரின் தரப்பாகவும் ஒலிக்கத் துவங்குகிறது. ஏகலைவனுக்காக,  அரக்கு மாளிகையில் பலியாகும் ஆறு அப்பாவி வேடர்களுக்காக அவை வாதிடுகின்றன. ஒடுக்கப்படும் மக்களின் குரலாக ஆள்பவரை கேள்வி கேட்கும் குறியீடாக அவை மெல்ல முன்னெடுக்கப் படுகின்றன. அதன்பின் மெல்ல மெல்ல தோற்பவர் தரப்பு நியாயங்கள் முன்னெடுக்கப் பட்டு வென்றவர்கள் சூழ்ச்சி செய்பவர்களாக நிலை நிறுத்தப் படுகிறார்கள். அல்லது ஒரு தனிப்பட்ட நாயகனை முழுதும் அலசி ஆராய்ந்து அவன் எவ்வகையில் சூழ்நிலைக் கதையாக இருக்கிறான் கட்டுண்டு கிடக்கிறான் பிறருக்காக தன்னைப் பலி கொடுக்கிறான் என்று வர்ணிக்கப் படுகிறது. கர்ணன் பாத்திரம் இதற்கு ஒரு சிறந்த உதாரணம். இதனால் ஏற்படும் பிரச்சனை என்னவெனில், கர்ணனுக்காக துரியோதணன் தரப்பு நியாயங்கள் பீமன் அர்ஜுனர்கள் தரப்பு அநீதிகள் தொகுக்கப்பட வேண்டிய நிர்பந்தம் எழுத்தாளருக்கு உண்டாகிவிடுகிறது. இந்த விதத்தில் இந்த வகை படைப்புகள் ஏற்கனவே உள்ள நம்பிக்கையை கேள்விக்கு உள்ளாக்குவது அல்லது ஏற்கனவே சித்தரிக்கப்பட்டுள்ள பாத்திரங்களின் இன்னொரு முகத்தை எடுத்துரைப்பது என்கிற இருவகைகளில் அடங்கி விடுகின்றன. முன்பு சொன்னது நேர்மறை என்றால் இதை எதிர்மறை என்று சொல்லலாம்

 

 


Sunday, August 30, 2020

இரையென்ன இரை இன்னும் - இரா.மீனாட்சி கவிதைகள்

நம் உபநிஷதங்களில் ஞானசபை விவாதங்களில் ஈடுபட்டவர்கள் உரைத்த சொற்கள் தொகுக்கப் பட்டுள்ளன. கார்கி, மைத்ரேயி, காத்யாயணி உள்ளிட்டவர்கள்  அவர்களில் பெண்கள். குருதேவரான யக்ஞவல்கிகர் தான் சந்நியாசம் மேற்கொள்கையில் அழியாத செல்வம் தருகிறேன் என்று  மனைவிக்கு வரம் அளிக்கிறார்.  அவர் மனைவியான மைத்ரேயி அழியாதவை என்னென்ன என்று அவருடன் தர்க்கத்தில் அமர்கிறார். அவள் ஒவ்வொன்றாகக் கேட்டு அழியாத செல்வமான ஞானம் தான் வேண்டும் என்று கேட்டு அவரும் அவ்வாறே அமர்கிறாள் என்பது புராணம். பெண்கள் ஞானத்தேடல் இல்லாமாலேயே தன் அன்பினாலேயே மோக்‌ஷம் அடைகிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது. பொதுவாக ஆண் தனிமையானவன். அவன் தனிமையிருந்து தியானம் ( ஞானம் ) வழியாக அன்பிற்கு வரவேண்டும். ஆனால் அன்பு அல்லது பக்திக்கு, தான் அல்லாமல் இன்னொன்று தேவைப் படுகிறது. ஞானம் பக்தி என்பதை அறிவுத்தளம் உணர்வுத்தளம் என்று வைத்துக் கொள்ளலாம்.  ஓஷோவிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு பதிலாக,  அன்பும் தியானமும் முக்கிய வழிகள். நீ ஆணென்றால் உன் வழி தியானம் அதன் வழியாக அன்பு. அதுவே நீ பெண் என்றால் அன்பின் வழியாக தியானம். இவ்விரண்டில நான் வலியுறுத்துவது அன்பும் தியானமும் என்கிறார். மரபுக் கவிஞர்களில் ஆண்டாள் காரைக்கால் அம்மையார் ஆகியோரை பக்தி மார்க்கத்திலும் ஒளவையாரை ஞான மார்க்கத்திலும் வைத்து காணலாம். 


நவீன கவிதைகளில் மேற்சொன்ன ஞானத்தளங்கள் / உணர்சித் தளங்களில்  தத்துவ நோக்கில் ( ஞானத்தளங்களில்)  எழுதும் கவிஞர்களில்  ஆண் கவிஞர்கள் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். பெண்கவிஞர்களின் கவிதைகள் என பெண்ணியம் சார்ந்தே அதிகம் வாசிக்கக் கிடைத்தன. பெரும்பாலும் உணர்வுகளுக்குள் ஆட்படும் விதமாகவே அந்தக் கவிதைகள் காணப்படுகின்றன. நம் பண்பாட்டின் நோக்கில் எழுந்துவரும் கவிதைகள் அரிதானவை. அதேநேரம் பண்பாட்டின் மீதான விமர்சனமாக கலகமாக வருபவை  ஒப்புநோக்க அதிகம்.  ஞானமும் உணர்வும் கலந்துதான் கலகமாக வெளிப்படுகிறது. அது நவீன காலத்தின் தேவை என்று புரிந்தாலும் அதில் கலகம் மற்றும் பகடி நோக்கு அதிகமாகவும் இருப்பது ஒருவித போக்காகவே ஆகியிருக்கிறது என்பதும் உண்மைதான்.  


இரா.மீனாட்சி அவர்களின் திசை மாறியது என்கிற கவிதை ந. பிச்சமூர்த்தி தி.சோ.வேணுகோபாலன் வகையிலான கவிதையாகவே தோன்றியது. அவருக்குப் பிறகான பெண் கவிஞர்களின் கவிதைகளை ஏற்கனவே வாசித்திருந்ததால், அவரது கவிதைகளை வாசிக்கையில் பெரும் வித்தியாசத்தை உணரமுடிந்தது. மீனாட்சி என்பது மீனாட்சி சுந்தரம் என்பதன் சுருக்கமா என்று ஒருகனம் மனம் என்ணியதும் நவீன கவிஞர்களில் ஆண்களின் வரிசையில் மட்டுமே கண்டிருந்த தத்துவ / மரபர்ந்த கூறுகள்தான் என்று தோன்றுகிறது.    அதன்பின்தான் அவரைப் பற்றி இணையத்தில் தேடி முழுமையாக கண்டறிந்தேன். 1940களில் திருவாரூரில் பிறந்த கவிஞர் இரா.மீனாட்சி 1970 முதல் கவிதை எழுதிவருபவர். தற்பொழுது பாண்டிச்சேரி ஆரோவில்லில் வசித்து வருகிறார். மரபை விட்டுத் தள்ளிவிட்டு புதுக்கவிதை எழாமல் மரபின் ஓட்டத்தையும் சேர்த்தே கொண்டுவரும் கவிதைகளாகவே இவரது கவிதைகள் இருக்கின்றன




திசை மாறியது ,  


தென்திசை நோக்கி முதியவர் நடந்தார்

இருளே கிளையாய்க் கிளைத்த மரங்கள்

அச்சமே உயிர்ச்சத்தாய் நிரம்பிய வேர்முடிச்சுகள்

பாசக்கயிறாய் ஊசலாடும் விழுதுகள்

முதியவர் நடை தொடர்ந்தார்..


...

...

..


கடவுளின் தோளில் குழந்தை.

விடியலை நோக்கி.

பயணம் ஆரம்பம்


யமனுக்கான தெற்கு திசைக்கு சென்ற முதியவர் குழந்தையாக திரும்பி வருகிறார். மரணத்தை நோக்கிச் செல்லும் முதியவரின் தொடர்ச்சியாக குழந்தையை கொண்டுவருகிறது. புனரபி மரணம் புனரபி ஜனனம் என்பது போல ஒரு பிறவிச் சுழற்சியை கண்முன் நிறுத்துகிறார்


கோட்டையும் கோவிலும் உடைந்து போனாலும் உள்ளே தனக்குத்தானாய் கோவில் கொண்ட சிவம் கவிதை மற்றொன்று ( கோட்டையும் கோவிலும்). கடவுளை உள்ளே தேடுவது என்பது பலரால் பல இடங்களில் சொல்லப்பட்டாலும் இதில் வரும் நாகலிங்க இதழ்க் குளுமை படிமமும் தனக்கு தானாக அது கோயில் கொண்டது என்கிற வரியும் அதை உயர்த்திவிடுகின்றன


அம்ருதம் என்னும் கவிதையும் குறிப்பிடத் தக்க ஒன்று

விதைத்த விதை ஊறு முன்னே

எறும்பிழுத்தது

முளைத்த முளை விரியுமுன்னே

புழு துளைத்தது


இலை படர்ந்து ஏறுமுன்னே

நத்தை ஊர்ந்தது

கதிர் எழுந்து குனியுமுன்னே

கிளி அழித்தது

விசித்த கையில் விரல்கள் தேங்க

பசித்த உழத்தி

பசுங்கிளையில்

முதுகு வைத்தேன்

வயிறு இல்லை


நாவல் மரத்தில் ஆவலுடன்

அணில் சுவைத்த ஊதா

வேலி வரிசை ஏறிவந்த

இலந்தை இளஞ்சிவப்பு

கணுக்கணுவாய்

வானம் பார்த்த

மூங்கிலிலும் அரிசி

புளியமரக் காய்கள்

மண்ணுக்குள்ளே கோரை.


இரையென்ன இரை இன்னும்?

உச்சியில் குரு உபதேசம்

ஞானசூரியன் தேஜமயம்


‘அஸதோமா சத் கமய

தமஸோமா ஜ்யோதிர் கமய

ம்ருத்யோர்மா அம்ருதம் கமய’



எழுத்து கால கவிஞர்களில் நகுலன்,சி.மணி, பசுவய்யா, பிரமிள். இரா மீனாட்சி, தி.சொ.வேணுகோபாலன் போன்றவர்கள் முக்கியமானவர்கள் என்று ஜெயமோகன் குறிப்பிட்டுள்ளார். இவர்களில்  பிரமிள் மற்றூம் இரா.மீனாட்சி ஆகியோரின் கவிதைகள் ஒரு திட்டவட்டமான கருத்துக்களாகவே வெளிப்படுகின்றன


‘ஒளியின் கதியை

ஒளியின் கதியால்

பெருக்கிய வேகம்

ஜடத்தைப் புணர்ந்தால்

ஜடமே சக்தி “ ( E=m c^2 நீள் கவிதையின் ஒரு வரி)


பிரமிள் ஐன்ஸ்டீனின் ஆற்றல் கோட்பாட்டினை இவ்வாறு அத்வைத நோக்கில் கவிதையாக்குகிறார். 


”தெற்கு கோபுர வாசலில்

திகைத்து நிற்கிறது

நீயற்ற நானற்ற கல்” ( பிரமிளின் தெற்கு வாசல் கவிதையின் ஒரு வரி )


இரா.மீனாட்சி அவர்களின் கவிதையை வாசிக்கும்போது பிரமிளின் இந்த கவிதை வரிகள் நினைவுக்கு வந்தன. இவை, கவிஞர்களின் ஆதார குணங்களான தன்னிரக்கம், ஒரு அலைச்சல், ஆதங்கம், கையறுநிலை போன்ற தருணங்கள் இல்லாமல் அவை ‘சொற்களாக’ ஒலிக்கின்றன. தன் குழப்பத்தைக் கடத்தாமல் தன் புரிதலைக் கடத்துவது இவர்கள் இருவரின் கவிதைகளாக உள்ளன என்று தோன்றுகிறது. வாசகனாக தெற்கு வாசலில் இருந்து திசைமாறியதுக்கு எளிதாக வந்துவிட முடியும்


 பன்னாட்டு நகரத்திலொரு தமிழ்க் குயில் என்கிற அவருடனான இந்தப் பேட்டி மிகவும் அழகாக ஒரு எண்பதாண்டு காலத்தை சுட்டுகிறது.  அதன் கீழே அவரது மொத்த படைப்புகளின் பட்டியலும் உள்ளது. பன்னீர்ப்பூ பற்றிய இரு கவிதைகளும்,  ரயில்வே குவார்ட்டர்ஸில் வசித்ததால் பலவித சமூகங்களையும் அணுகி புரிந்து கொள்ள முடிந்தது என்ற அவதானிப்பும் அரவிந்தரின் வழியாக காணும் தத்துவ தரிசனங்களும் என விரிவாக அவரைப் பற்றி அறிய வகை செய்கிறது. இவரது கவிதைகள் இணையத்தில் கிடைப்பதில்லை. புத்தகங்கள் கிடைக்கின்றன. இரண்டு தொகுப்புகளையாவது முழுமையாக வாசித்து ஒரு கட்டுரை எழுதவேண்டும் என்று எண்ணிக் கொண்டேன்.




Wednesday, August 19, 2020

கடலும் வண்ணத்துப்பூச்சிகளும் - சுரேஷ்குமார இந்திரஜித்

விஷ்ணுபுரம் விருது அதன் துவக்கத்தில் இருந்தே எனக்கு ஒரு ஆச்சரியம் தான். நான் இலக்கியத்தில் வெகுஜன ஊடகம் வாயிலாக அறிந்த சிலரை வாசித்து இலக்கிய உலகில் இருப்பதாக எண்ணியிருப்பேன். முற்றிலும் அறியாத ஒருவர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப் படுவார். எழுத்தாளர். தெளிவத்தை ஜோசப் அவர்களின் பெயரே அப்பொழுதுதான் கேள்விப் படுகிறேன். மலேசிய எழுத்தாளர் சீ.முத்துசாமி அவர்கள் அப்படியான மற்றொருவர். வாசிக்கத் துவங்கும் முன் தெரியாது, ஒரு சுரங்கத்துள் இறங்கப் போகிறேன் என்று. சில நாவல்கள் மூலம் மலேசிய மண்ணின் பிண்ணனியை மக்களை தொகுத்துக் காண்பித்து விட்டார். பேராசிரியர் ராஜ் கெளதமன், கவிஞர் அபி ஆகியோரும் அப்படித்தான். அவ்வாறாக  ஜெ. ஹேட்ரிக் அடித்தது அடித்து விட்டார். இனி நான் எதிர்பாராத ஒருவர் வந்துவிடக்கூடாது என்று ஒரு பட்டியல் வைத்திருந்தேன். இனி அப்படியொருவர் பெயர் உரைக்கப்படுமானால் அது நம் தமிழிலக்கிய வாசிப்புக்கே அவமானம் என்று சூளுரைத்தவனாய் காத்திருந்தது  நல்லவிதத்தில் ஜெயமாக முடிந்தது. நான் யோசித்து வைத்திருந்த மூவரில் ஒருவர்



 
எழுத்தாளர் சுரேஷ்குமார இந்திரஜித் அவர்கள் நாற்பது வருடங்களாக இலக்கிய உலகில் இருப்பவர். ஆனால் 2018ல் பதாகை சிறப்பிதழ் வந்திருக்காவிடில் இவரைப் பற்றியும் எனக்கு முழுதாக தெரிந்திருக்காது என்பதை நான் இங்கு மறைக்கத் தேவையில்லை :-). இன்று இதை எழுதும் வரையில் சுரேஷ்குமார் இந்திரஜித் என்றே எண்ணியிருந்தேன் என்பதையும் மறைத்தும் என்னதான் ஆகிவிடப் போகிறது. அமுத்துலிங்கம் அவர்களுடனான உரையாடலில் கூட அவர் பெயரை அப்படித்தான் உச்சரித்தேன். புத்தகத்தில் ‘ர’ விற்கு மேற்புள்ளியில்லை என்பதை முதலில் அச்சுப்பிழை என்றுதான் எண்ணியிருந்தேன். இப்பொழுது திடீரென  அந்தத் தமிழ்ப் பெயர் சிங்களப் பெயராக ஒலிப்பதைக் காண்கிறேன். அதுவும் நல்லதே! விஷ்ணுபுரம் விருது விழாவில் அவரது அமர்வில் என்னுடைய முதல் கேள்வி இப்பொழுதே தயாராகிவிட்டது.
 
சுரேஷ்குமார இந்திரஜித் அவர்களின் கடலும் வண்ணத்துப்பூச்சிகளும் படித்து முடித்தேன். நாற்பது வருடங்களாக சிறுகதைகள் மட்டுமே  எழுதியவரின் முதல் நாவல் இது. சென்ற ஆண்டு வெளியாகியுள்ளது. பக்க அளவை வைத்து  நாவல் என்று முடிவு செய்திருக்க வாய்ப்புண்டு. ஆந்தாலஜி வகை திரைப்படங்கள் இப்பொழுது பிரசித்தமாகியுள்ளன. ஒரு நாவலுக்குள் அவ்வாறு யோசிக்கலாமா என்று இறங்கியிருக்கலாம். அல்லது நீட்டிச் சொல்வதை விட இது சிறப்பானது என்று நினைத்திருக்கலாம். ஆனால் மிக சுவாரசியமான ஒன்று
 
நாமறிந்த நாவல்கள் பெரும்பாலும் வாழ்க்கைப்பாட்டை நூணுக்கமாக விவரித்துச் சொல்பவை. சிறுகதைகள் கோடிட்டுக் காட்டுபவை. உளவியல் சிக்கல்களை என்னவென்று சொல்லிச் செல்பவை. ஒரு நாவலில் வாசகர் தனக்காக கண்டடைதலாக நினைவில் நிற்கும் சில தருணங்கள் இருக்கலாம். அல்லது ஒரு பாத்திரத்தின் மொத்த வாழ்க்கை நினைவுக்கு வரலாம்.  அந்தவகையில் நாவல் வடிவம் என்பதே ஒரு தருணத்தை நீட்டி முழக்கி சொல்பவையாக இருக்கின்றன. அதில் வாசகன் தானாக கண்டடையும் தருணங்கள் சொற்பமாகவும் ஆசிரியர் சொல்வது அதிக அளவிலும் இருக்கும்.  அப்படிப் பார்த்தால் இந்த நாவல் வகை மிகவும் புதுமையான ஒன்று. ஆதித்ய சிதம்பரம்  நோபல் பரிசு பெறும் ஒரு இந்திய நாவலாசிரியர் ( இந்திய ஆங்கில எழுத்தாளர்). அவர் பரிசு பெற்ற கதையை சொல்லும் நாவல். அவர் என்ன எழுதி நோபல் பரிசு வாங்கினார் என்பதும் ஒரு சிறுகதையாக ( குறுங்கதை) அதிலேயே வருகிறது. அதைத் தவிர அவர் எழுதிய ஐந்து குறுநாவல்களும் உள்ளேயே வருகின்றன. அனைத்தும் கலந்த ஒரு நூறுபக்க நாவல் இது.
 
இது எதையுமே ஆசிரியர் என்ன ஏது என்று சொல்லி கோர்க்க வில்லை. ஆகவே இதில்  நம் வசதிக்கேற்ப ஒரு கதையை நாம் எழுதிக் கொள்ளலாம். அது இருவகையாக நிற்கும். மொத்தமே நூறு பக்கங்கள் கொண்ட இந்த நாவலை,  பெண்கள் குறித்த துண்டுப் பிரதிகளாக வாசிக்கலாம் அல்லது  ஆதித்ய சிதம்பரத்தின் வாழ்க்கையில் அவரை பாதித்த தருணங்களின்  தொகுப்பாக வாசிக்கலாம். ஆகவே இங்கு நாவலை நாவலாக்குவதில் வாசிப்பவரின் பங்கும் இருக்கிறது.


 
சாஸ்திரத்தால்  கட்டுண்ட கைம்பெண், காதலை மறந்து வேறொருவனை கைபிடித்த பெண், வாழ்க்கையைத் தொலைத்த நடிகை - அவளைப் பார்த்துக் கொள்ளும் பணிப்பெண்,  தன் கணவனுக்கு மதுரையில்  குடும்பம் இருப்பது  தெரியாமல் அவனை மலேசியாவில் திருமணம் முடிக்கும் பெண். இவர்கள் தவிர  பறவைகளை  நேசிக்கும் ஒருவள் ஆகிய ஐந்து குறுங்கதைகள். இந்த குறுங்கதைகள் குறித்த விமர்சன கூட்டமும் நாவலிலேயே வருகிறது. கூடவே இந்த குறுநாவல்களை எழுதிய  நாவலாசிரியரான ஆதித்த சிதம்பரத்தை  வடிவமைத்த அவரது காப்பாளர் ( ரெஜினா ) , முன்னாள் மனைவி ( சாரதா ), தோழி ( ரஞ்சனா)  என மூன்று பெண்கள். இதில் நாவலின் இறுதியில் கடலலைகளால் அடிக்கப்படாத மூன்று பட்டாம்பூச்சிகளாக வருவது இவர்கள்தானா அல்லது ஐந்து குறுநாவல்களில் இவர் குறிப்பிடவிரும்பும் சிலரா என்பதை முடிவு செய்வதும் எனக்கானதே என்றாகி விடுகிறது.
 
கடலும் வண்ணத்துப் பூச்சியும் என்பதில் கடல் ஆசிரியரின் வாழ்க்கைப்பாடு என்றால்  பட்டாம்பூச்சியை அவர் கடந்து வந்த மனிதர்கள் குறிப்பாக  பெண்கள் என்று சொல்லலாம். அவர்கள் உலகம் எப்படியானது அதில் அவர்கள் மற்றவருக்கு பொருள்படும் விதம் என்பது ஒரு மின்னல் வெட்டாக வந்தாலும் நினைவில் நிற்கிறது. . ஒருவனுக்கு  அவள் அம்பாள். மற்றொரு ஒருவனுக்கு சாதாரண மனைவி. ஆனால் அவள் மிடுக்கான தலைமை ஆசிரியை  ( சாரதா ) இதில் ஆணும் பெண்ணும் கதையில் வரும் சிவப்பு உடையணிந்த பெண் வரும் தருணம் சுவாரசியமான உளவியல் இடம். நடிகையின் கணவனை  வேலைக்காரி காணும் இடமும் அப்படித்தான் தோன்றுகிறது.  இஸபெல்லா நல்ல பாத்திரம்தான், ஆனால் சமயங்களில் அவளே அந்தத் தனிமையின் அபத்தக் கற்பனையா என்றும் தோன்றுகிறது. இது என் வாசிப்பு
 
இதை வாசிக்கையில் எழுத்தாளர் எம். கோபால கிருஷ்ணனின் மனைமாட்சி நாவல்நினைவுக்கு வருகிறது. நான்கு வெவ்வேறு கதைகளாக பெண்களை / உறவுச் சிக்கலை இன்னும் அருகே சென்று நுணுக்கமாக ஆராய்ந்து உரைத்த ஒரு நாவல் அது. இந்த நாவல் அதற்கு நேரெதிரானது. புள்ளிகளாகச் சொல்லிவிடுகிறது. அதைப் புள்ளிகளாகவே வைக்கலாம் அல்லது இணைத்து சித்திரமாகவும் ஆக்கலாம்.

ஒரு புதிர் போல யோசிக்க வைக்கும் இந்த அனுபவத்திற்காகவே இதை வாசிக்கலாம்.

Friday, July 24, 2020

முரசும் சொல்லும் - ஏ) கதிரெழுகை

முந்தையது:- முரசும் சொல்லும் - எ) தன்னறத்தின் தடத்தில்

ஜெ. தளம் இயங்கத் துவங்கிய சில நாள் முதலே கீதை விளக்க கட்டுரைகள் வரத்துவங்கின. ஒவ்வொரு கட்டுரையின் கீழும் பின்னூட்டத்தில்  அது சார்ந்த மேலதிக கேள்விகள் எழும். அனைத்திற்கும் பதில் சொல்லி அடுத்த கட்டுரை துவங்கும். அதில் ஒரு கடிதத்தில், இதைப் புரிந்து கொள்ள வேண்டுமெனில் ஒட்டு மொத்த பாரதத்தையும் பக்க சார்பின்றி அணுக வேண்டும் அத்ற்கு நான் பாரத்ததையே மீண்டும் எழுதவேண்டும் என்று கூட ஒரு இடத்தில் குறிப்பிடுகிறார். ஜெ.வின் அறையை தன் செங்கோலின் கீழ் அரசபரிபாலனம் செய்பவர் அந்த நேரத்தில் ஆமோதித்திருக்கக் கூடும். அந்த வகையில் வெண்முரசு எழுத அதுவுமே ஒரு காரணம் என்று சொல்லலாம்.


நான் கீதை ஆழ்ந்து வாசித்தவன் இல்லை. என் முதற்கட்ட அணுகுதலை வைத்து,  இமைக்கணத்தை கீதையுடன் இணைத்து கீழ்கண்டவாறு புரிந்து கொண்டேன்.

ஒன்று : காலம்
இரண்டு : இயல் --  கர்ணன் ( சாங்கிய யோகம் )
மூன்று : ஒருமை -- பீஷ்மர் ( கர்ம யோகம் )
நான்கு : அறிவு -- சிகண்டி ( ஞானகர்ம சந்நியாச யோகம் )
ஐந்து : விடுதல் -- விதுரர் ( கர்ம சந்நியாச யோகம்)
ஆறு : ஊழ்கம் -- வியாசர் ( தியான யோகம் )
ஏழு : மறைமெய் -- யுதிஷ்டிரன் ( ஞான விஞ்ஞான யோகம் அட்சர பிரம்ம யோகம், ராஜவித்யா ராஜகுஹ்ய யோகம்)
எட்டு : சுடர்வு -- திரெளபதி (  விபூதி யோகம் )
ஒன்பது: சொல் -- தெளம்யர், கர்க்கர் குசேலர் ( விஸ்வரூப தரிசன யோகம் பக்தி யோகம் )
பத்து : பொருள்  -- உதங்கர் ( சேத்ரம் சேத்ரக்ஞன் விபாக யோகம், குணத்திரய விபாக யோகம், புருசோத்தம யோகம் )
பதினொன்று : முழுமை -- சுகர் (தெய்வ அசுர சம்பத் விபாக யோகம் சிரத்தாத்திரய விபாக யோகம் மோட்ச சந்நியாச யோகம்)
பன்னிரண்டு : இறைப்பாடல் -- அர்ஜுனனுக்கு உரைக்கும் கீதை ( தொகுப்பு )

அர்ஜுனனுக்கு கிருஷ்ணன் போர்க்களத்தில் உரைத்ததுதான் கீதை என்னும் ஒரு நாடகீய தருணம் சொல்லப்படுகிறது. இதில் உள்ள ஒவ்வொரு அத்தியாயமும் அறிதலின் ஒவ்வொரு படிகள் என்றூ பொதுவான கருத்தும் நிலவுகிறது. கீதையில் இந்த அனைத்து படிகளிலும் நின்று அர்ஜுனன் இந்தக் கேள்விகளைக் கேட்கிறான். அவனுக்கு போரிட எழும் தயக்கத்திலிருந்து சரணாகதி தத்துவம் வரை கேட்கிறான். ஆனால், வெண்முரசில் அந்த அத்தனையையும் அர்ஜுனனே கேட்கவில்லை. அவர்கள் மாறுபடுகிறார்கள். இமைக்கணத்தின் ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் அதை அந்த ஐயம் சரியாக பொருந்தக் கூடிய நபர் வந்து கேட்கிறார். இமைக்கனத்தின் ஒவ்வொரு பாத்திரத்தையும் அணுகி அறிவது இந்தப் பதிவின் நோக்கமல்ல. ஆனால் கர்ணனை அணுக இது மிகவும் உதவியாக இருந்தது என்பதால் அதை மட்டும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

ஜெயமோகன் இங்கும் ஒரு புனைவின் உச்சத்தைத் தொட்டுப் பார்க்கிறார். இந்தக் கேள்வியை அந்த நபர்கள் கேட்கவில்லை. அவர்களுக்குள் புகுந்து கொண்ட தர்மராஜன் யமன் இதைக் கேட்கிறான் என்பது அது. அதற்கான ஒரு கதை சொல்லப் படுகிறது, அந்தக் கதை ரகுகுல ராமன் உலகியல் இன்ப துன்பங்களில் ஆழ்ந்து பீடிக்கப்பட்டு இருக்கீறான். அவன் காலம் முடிந்ததை அறிவிக்க வரும் யமனுக்கு, மும்மூர்த்திகளின் ஒருவனான ராமன் பூவுலக வாழ்வில் பீடிக்கப் பட்டதைக் கண்டு மெல்லிய ஆற்றமை எழுகிறது. அது நகைப்பாக மாறுகிறது. ஆணவமாக எழுகிறது. அதனால், அவனை யமலோகத்தில் மானுடர் உள்நுழையும் வழியிலேயே அவரை அழைத்து வருகிறான்.  அது அவனது ஆணவமாக பதியப்பட்டு விடுகிறது. அதனால் தவம் மேற்கோள்கிறான் யமன். அவந்து பணி நிகழாததால் உயிர்களின் மரணம் ஜனனம் என்கிற சுழற்சி நிகழாமல் போகிறது. ஆகவே நாரதர் அவனைக் காண வருகிறார். இது நான் சுருக்கமாக, மேலோட்டமாக  தொகுத்து எழுதினாலும் அந்த முதல் அத்தியாயம் தியானிகன்,  பிரபாவன், நாரதர் ஆகியோருக்கான பல அற்புத உரையாடல்கள் கொண்டது. உயிர் என்பது என்ன என்பது போன்ற அடிப்படைக் கேள்விகள் அங்கேயே எழுப்பப்பட்டு உரையாட படுகின்றன. ஆகவே இதை ஒரு பிண்ணனிப் புரிதலை வைத்துக் கொண்டு அந்த அத்தியாயத்தைப் படிப்பதே சிறந்த வாசிப்பு அனுபவமாக இருக்கும்.

(மறுபடியும் இதை இங்கு குறிப்பிட்டுச் சொல்லக் காரணம், இமைக்கணம் முழுக்கவே பலதரப்பட்ட உரையாடல்கள் வருகின்றன. அவற்றை வாசிக்கும் எனக்கான புரிதல் என்பது என் அளவில் மட்டுமே இருக்கும். நான் அதை எழுதும் போதே எழுத்தில் வேறொரு புரிதல் வருவது போல எழுதிவிடலாகும் என்கிற எச்சரிக்கையே இங்கு குறிப்பிடுகிறேன். இமைக்கணத்தின் சில வரிகள் வாசிக்கையில் பிறருக்கு வேறோன்றாக தோன்றலாம். அல்லது வேறொரு வாக்கியம் முக்கியமானதாக தோன்றலாம்.

உதாரணமாக நாரதர் யமனிடம் சொல்லும், ’கடமைகளை கைவிட்டுவிட்டு எவரும் தவத்தை முழுமைசெய்ய இயலாது, காலத்துக்கரசே!’  என்கிற ஒரு வரி.  ஒரு சிறிய உரையாடலின் இந்த வாக்கியமே சிலருக்குத் தன் வாழ்வின் ஒரு கேள்விக்கு திறப்பாக அமையக் கூடும். )


Wednesday, July 22, 2020

முரசும் சொல்லும் - எ) தன்னறத்தின் தடத்தில்



தனித்தலைந்து அடைதல் என்பது தருமன், பீமன் அர்ஜுணன் போன்ற நாயகர்களுக்கு மட்டும்தான் என்றில்லை. பல உப கதாபாத்திரங்களுக்கும் இது நிகழத்தான் செய்கிறது. அவர்களின் உணர்வுகளும் தனித்திறமைகளும் கலந்து அவர்களின் தவிப்பும் அடைதலும் நிகழ்கிறது.

தமிழ் இலக்கியத்தின் சிறந்த காதல் அத்தியாயங்கள் வெண்முரசில் உண்டு. இந்திர நீலத்தில் இளைய யாதவன், கிராதத்தில் உமையொருபாகனாக ஈசன் என இறைவடிவங்கள் ஆடும் அத்தியாங்களும் உண்டு. ஆனால் அவை தத்துவார்த்த பிண்ணனி கொண்டவை.   நாம் இங்கு மானுடர்களின் அலைக்கழிப்பைப் பற்றி மட்டும் குறிப்பிடுவதால்,  நளன், அனிருத்தன் பூரிசிரவஸ் என மானுடர்களை வைத்தும் அது நிகழ்வதை தொகுத்துக் கொள்ளலாம். தருமனின் சூது, பீமனின் சமையற்  கலை, அர்ஜுனனின் மாறுவேடத் திறன்,  நகுலனின் புரவி சாஸ்திரம், சகதேவனின் எண் கணிதம் என,  பஞ்ச பாண்டவர்களின் அனைத்து தனிப்பண்புகளையும் ஒருங்கே பெற்றவனான நளன், தனக்கான காதலை கண்டடைய இந்திர வேதத்தை எடுக்கிறான். அங்கு ஒரு இந்திர சிலையை நிறுவுகிறான். அவனிடம் காதல் வயப்படும் தமயந்தி சக்கரவர்த்தினியாகும் விழைவு கொண்டவள். அவளை மணம் கொண்டதாலேயே, அவளின் விழைவினை நளன் ஆற்றுகிறான்.



அனிருத்தன் பாணாசுரனின் மகளின் மீதான காதலில் ஆசுர தேசத்துக்குள் செல்கிறான்.  பூரிசிரவஸ் தன் தயக்கத்த்தின் காரணமாக தன் காதல்களை இழக்கிறான். இவ்வாறு  பல ரசமான தருணங்கள் உண்டு.  ஒரு மனிதனின் சிந்தனையை வடிவமைப்பது நாம் முன்பு விவாதித்த வேதங்களும் உபநிடதங்களும் தத்துவங்களும் மட்டும்தான் என்று இல்லை. இது போன்ற உணர்வு ரீதியானவை கூட வடிவமைக்கின்றன.  மேலும் இது தவிர, மனிதர்கள் தங்களின் அன்றாடம் வழியாக சமைத்துக் கொள்ளும் விதிகளும் வடிவமைக்கின்றன. அவற்றில் சில வேதங்களாகவும் சாஸ்திரங்களாகவும் நிலை கொண்டவை.
         
துரோணர்  காலையில் எழுவது முதல், இரவு அவருக்கு தலைமாட்டில் அமர்ந்து அவர் உறங்கும் வரை தினசரி பணிவிடை செய்யும் அர்ஜுணன் அவரிடமிருந்து தனுர் வேதத்தைக் கற்றுக் கொள்கிறான். துரோணர் அதை தன் ஆசிரியரான அக்னிவேசரிடம் அறிகிறார். இதுவும் குருபரம்பரையாக அருளப்பட்டு வருகிறது.  அக்னிவேசர், பீஷ்மர், பரசுராமர், துரோணர் என நிலைத்த வீரர்கள். அவர்களிடமிருந்து கற்று  எழுந்த அர்ஜுணன், அஸ்வதாமன், சிகண்டி,  கர்ணன் என அடுத்த தலைமுறையினரும் வருகிறார்கள்.  ”செயல்மூலம் தன்னை வென்றவன் யோகி.  அவன் உலகையும் வெல்வான். யோகியின் கையில் இருப்பது எதுவோ அதுவே இறுதியான ஆயுதம். அதுவே அவன் மந்திரம், அதை ஆள்வதே அவன் சாதகம். சொல் மூலம் அடையப்பெறும் எதையும் வில்மூலமும் அடையலாமென்றுணர்க”  இது தனுர்வேதத்தின் சாரமாக அக்னிவேசர் உரைப்பது

மற்றொரு புறம், பீமன் அடுமனைக்குச் சென்று, அங்கு இருக்கும் அடுமனை முது சூதரான மந்தரரிடம் அன்னம் எழுவதை அருகமர்ந்து அறிகிறான். அவரது கால்களின் கீழ் அமர்ந்துகொண்டு அவரது பாதங்களைப்பிடித்து தன் மடிமேல் வைத்துக்கொண்டு விரல்களை மெல்ல இழுத்து நீவியபடி, “சமையல் என்பது ஒரு ஞானமார்க்கம்” என்று அர்ஜுணனிடம் உரைக்கிறான். பிற்காலத்தில், அவர்களின் அஞ்ஞாதவாசத்தின் போது விராடத்தில் அவன் அடுமனை சூதனாகவே பணிபுரிகிறான்.  அங்கு அவனிடம் பாடம் கற்கும் சம்பவன் வந்து சேர்கிறான். மைத்ரேயக் காட்டில் அன்னம் உண்ணப்படுவதைக் காணும் தருமர் பந்தி பரிமாறுதலின் ஊடாகவே அந்த ஞானத்தை அடைகிறார்

மற்றொரு இடத்தில் கர்ணனிடம் அவர் தந்தையும் குதிரைச் சூதருமான அதிரதர் புரவி வளர்ப்புக் கலையை சொல்லி வருகிறார். அஸ்வசாஸ்திரம் எனப்படுகிறது அது.  ”குதிரைகளின் காலோசையிலேயே அவற்றை உணரத்தெரிந்தவனே அஸ்வசாஸ்திரம் தெரிந்தவன். இப்போது வரும் குதிரைகளை என் அகக்கண்ணாலேயே என்னால் காணமுடியும்” என்கிறார் அவர். பாண்டவர்களில் புரவிக் கலை அறிந்தவன் நகுலன். நீர்க்கோலத்தில் நகுலன் புரவி சூதனாகவே இருக்கிறான்.

Monday, July 20, 2020

முரசும் சொல்லும் - ஊ) பிழைகளின் சுழலிலிருந்து ஞானத்தின் வட்டத்திற்குள்

முந்தையது:-  முரசும் சொல்லும் - உ) விழைவின் கொடி

          தரிசனங்களாக எழுந்து வந்து பிற்காலத்தில் பெரு மதங்களாகி தத்துவத்திலும் நடைமுறைகளிலும் பெரும் ஆதிக்கத்தை செலுத்தியவற்றின் துவக்கால கால கூறுகளை வெண்முரசில் காணலாம்.  பிறருக்கான ஒழுக்கத்தை வலியுறுத்திய பரசுராமன், தனக்கான சுய ஒழுக்கம் கொண்டு உதாரணமாக விளங்கிய தசரதராமன், என்று பரவியதின் அடுத்தநிலை என்னவாக இருக்கும்? ஒவ்வொருவருக்குமானது தானே? அதுதான் இளையயாதவன் வழியாக நிகழ்கிறது. ஒவ்வொருவருக்கான அறம் என்பதை அறியும் முன் அவரவர் தரப்பு நியாயங்களும் அவர் தரப்பு அறிதல்களும் குறிப்பிடத் தக்கவை. அறியாமல் செய்வது பிழையன்று. ஆணவத்தில் செய்வதே பிழை. இவை இரண்டிற்கும் இடையிலான மற்றொன்று உள்ளது.  அது,  பிழை ஆற்றியவன் ஆற்றிய கனம் தன் தவறை உணர்ந்த பிறகு நிகழ்வது என்ன என்பது. ஆற்றிய பிழைக்கு முழுமனம் கனிந்து வருந்தினால் பிழைக்கான ஈடு இல்லாமல் ஆகிவிடுமா? அந்த கேள்வியையும் வெண்முரசு எழுப்பியே செல்கிறது. கதாபாத்திரங்கள் குற்ற உணர்ச்சி கொள்ளும் கணங்களும் பின் அவர்கள் பிழையீடு செய்யும் கணங்களும்  வருகின்றன. அவற்றிற்குப் பின்னால் அவர்களின் தனிப்பண்புகளும் சில அலைக்கழிப்பை அடைகின்றன.


முரசும் சொல்லும் - ஊ) பிழைகளின் சுழலிலிருந்து ஞானத்தின் வட்டத்திற்குள்
          
             இளம்வயதில் துருபதன், துரோணருக்கு வாக்கு அளித்து பின் அதை அவரே மீறி அவரை சிறுமை செய்கிறார். இவ்வாறு, துரோணருக்கு துருபதன் ஆற்றிய நட்பின் துரோகத்தை, துரோணர் தன் மாணவர்களை வைத்து ஈடு செய்து கொள்கிறார். அவர் சார்பாக அதை ஆற்றுபவன் அர்ஜுனன்.  அவன் தேர்த்தட்டில் வைத்து துருபதனை இழுத்து வருகிறான். ஆனால், அதன்பிறகு அவன் துரோணரிடமிருந்து விலகி இறுதியில், தான் இழிவு செய்த  துருபதனுடன் தான் இணைகிறான் என்பது ஒருபுறம். மற்றொருபுறம் துருபதன் தன் பாதி அரசினை துரோணரிடம் போரில் தோற்கிறான். ஆனால், அதே துரோணர், துருபதனின் மைந்தனுக்கு வில்வித்தை கற்றுத் தருகிறார். அவரிடம் கற்ற அந்த மைந்தனே இறுதியில் அவரைக் கொல்லவும் செய்கிறான். இந்த மனமாற்றம் அளிக்கும் சிக்கல் இதை ஒரு கதையாக கேட்கையில் சுவாரசியமாக இருந்து ஒப்புக் கொள்ளத் தோன்றினாலும் ஒரு நவீன இலக்கிய வாசகன் இதை இன்னும் அணுகி அறியவே விழைகிறான்.  

            பாரதக் கதையை மொத்தமாக நோக்குகையில், துவக்கத்தில் இது ஒரு பிழைகளின் சுழலாக இருக்கிறது. அவை ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கப்பட்டு இருக்கின்றன. அது தலைமுறைகளாக தொடரும் வஞ்சம் என்று சொல்லப் படுகிறது என்றாலும், பாண்டவர்கள்-கெளரவர்கள் காலத்திலேயே வைத்துப் பார்த்தால் கூட,  துச்சாதனன் பீமனுக்கு விஷம் அளிப்பது, பிறகு பாண்டவர்கள் கூர்ஜரத்தை தவறான போரினால் வெல்வது, தருமனின் யதார்த்தமான நீதிச் சொற்களால் துரியனின் அகங்காரம் சீண்டப்படுவது, கெளரவர்கள் வாரணாவதம் திட்டம் தீட்டுவது, பாண்டவர்கள் அரக்கு மாளிகையில் சில அப்பாவி மானுடர்களை பலியாக்கித் தான் தப்பிப்பது இவை அனைத்தும் பிழைகளின் சுற்றாகவே இருக்கிறது. பிழைகளாலேயே முடையப் பட்ட ஒரு சிலந்தி வலை போலக் காட்சியளிக்கிறது. ஒருவிதத்தில்  அவர்கள் ஆற்றும் ஒவ்வொன்றுமே, அரச தர்மத்தில் நீதி என்று சொல்லி நியாயப் படுத்தப்பட்டும் விடுகிறது. . ஏதோ ஒரு அறநூலின் நீதி இதை சரியானது என்று சான்று என்று கூறுகிறது. அல்லது அது ஏன் தவறில்லை என்ற விளக்கத்தை இளைய யாதவனோ கணிகரோ அளிக்கின்றனர். இதைப் பின்பற்றி கதாபாத்திரங்கள் செல்கின்றனர். 

Saturday, July 18, 2020

முரசும் சொல்லும் - உ) விழைவின் கொடி



ஜெயமோகன் நாவல்களின் துவக்க அத்தியாயம் என்பது மிகவும் முக்கியமானது. அது ஒரு சுருக்குக் கயிறு போல உள்ளே இழுத்துவிடும். ஆயிரம் தாமரைகள் வரைந்து வரைந்து பெரும் சக்கரமாக நிற்கும் விஷ்ணுபுரத்தின் முதல் அத்தியாயம் ஒரு உதாரணம். எழுத்து ஒருவிதமாக உள்ளிழுக்கும். ஆனால் அது வேறொரு பொருளும் கொண்டிருக்கும். அதை பிற்காலத்தில் இரண்டாம் வாசிப்பில் உணர்ந்த தருணங்கள் எனக்கு உண்டு. வெண்முரசிலும் அது நிகழ்ந்தது.

உ) விழைவின் கொடி

வெண்முரசின் துவக்க அத்தியாயம் அந்நாவல் செல்லும் திசையை உரைத்து விடுகிறது. உலகம் உருவானது குறித்து ஒவ்வொரு வேதமும் தனக்கான காரணங்களை சொல்லிக் கொண்டுதான் இருக்கிறது. அதில் நாகர்களின் வேதப்படி உலகம் உருவான புராணமே மானசாதேவியால் ஆஸ்திகனுக்கு உரைக்கப் படுகிறது. வெண்முரசு முதல் அத்தியாயம் நாகர்களிடம் இருந்துதான் துவங்குகிறது என்பது ஒரு யதார்த்தமானது  அல்ல. விழைவின் அதிபர்களான நாகர்கள்தான் இதில் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் குணமாறுதலுக்கும் மூலமானவர்களாக இருக்கிறார்கள். அவதார நாயகர்கள் தவிர மற்ற அனைவரும் அதனால் தீண்டப் படுகிறர்கள். மற்ற இதிகாச புராணங்களிலிருந்து பாரதம் எங்கனம் மாறுபடுகிறது என்பதே இவ்வாறு முதல் அத்தியாயத்தில் குறியீடாக சொல்லப்பட்டு விடுகிறது என்றும் சொல்லாம். அதன்பின் தீர்க்கசியாமரால் அது சொல்லாக உரைக்கப் படுகிறது. “அறத்தின் மீது இச்சையின் கொடி ஏறிவிட்டது”



துவக்கத்தில் உத்தாலகர் தன் தாயை முன்வைத்து பெண்களுக்கான கட்டுப்பாடு விதிக்கிறார். அடுத்த யுகத்தில் பரசுராமனின் வேதம் தன் தாயின் தலையை சீவவும் துணிந்து ஒருத்திக்கு ஒருவன் என்று கட்டுப்பாடு விதித்து செல்கிறது. மற்றொரு புறம்  அதுவே அனைத்து குலங்களுக்கான நெறிகளையும் விதித்தபடியும் செல்கிறது. அதற்கடுத்த யுகத்தில் அயோத்யா ராமனின் அறம் அதிலிருந்து முன்னேறி, சத்ரியனுக்கான அறத்தையும் கட்டுபாடுகளையும் சொல்லிச் சென்றிருக்கிறது. அதே நேரம் இது ஆணுக்கான ஒரு ஒழுக்க விதிகளையும் சுட்டுகிறது. இப்பிறவியில் இரு மாதரை சிந்தையினாலும் தொடேன் என்பது இல்லற ஒழுக்கம்.  தன் உரிமையான அரியணையை, தந்தையின் சொல்லுக்காக விட்டு கானேகுவதும் தந்தை சொல்லுக்கு மைந்தரின் அடிபணிதல்.  இவ்வாறு தனக்கான ஒழுக்கநெறிகளையும் கொண்டிருப்பதால் அவன் ஒரு உதாரண புருஷனாக இன்றும் கருதப்படுகிறான். ஆனால் அந்த இதிகாசம் என்பது அந்தந்த குணங்களின் நேரடி வெளிப்பாடாக இருப்பதாலேயே அது வாசிக்க எளிதாகவும், புரியும் வண்ணமும்  இருக்கிறது. ராமனின் குணம், அனுமனின் குணம், ராவணன், விபீஷணன், கும்பகர்ணனின் குணங்களும் அத்தகையவை. ஒரு தம்பியாக ஒப்பு வைத்தால் பரதனும் கும்பகர்ணனும் ஒருவரே. அதன் அனைத்து உணர்ச்சிகளுமே ஒரு அளவிற்கு நேரடியானவையும் கூட. அதனாலேயே ராமாயணம் வாசிப்பதும் புரிந்து கொள்வதும் எளிதானது. ஆனால் பாரத வாசிப்பு அத்தகைய எளிதானதாக இல்லை.