Tuesday, February 24, 2009

எற்றோமற் றெற்றோ மற்றற்று..

காணி நிலம் வேண்டும் - பராசக்தி 
காணி நிலம் வேண்டும், - அங்கு 
தூணில் அழகியதாய் - நன்மாடங்கள் 
துய்ய நிறத்தினதாய் - அந்தக் 
காணி நிலத்தினிடையே - ஓர்மாளிகை 
கட்டித் தரவேண்டும் - அங்கு 
கேணியருகினிலே - தென்னைமரம் 
கீற்று மிளநீரும். 

பத்துப் பன்னிரண்டு - தென்னைமரம் 
பக்கத்திலே வேணும் - நல்ல 
முத்துச் சுடர்போலே - நிலாவொளி 
முன்பு வரவேணும், அங்கு 
கத்துங் குயிலோசை - சற்றே வந்து 
காதிற் படவேணும், - என்றன் 
சித்தம் மகிழ்ந்திடவே - நன்றாயிளந் 
தென்றல் வரவேணும்.
 


பாரதி இன்னைக்குஇந்த பாடலை பாடினால் அவனை ஒரு பேராசைக்காரன் என்று முத்திரை குத்திடுவேன். பரவாயில்லை....அவன் பகல் கனவு காண்றவன் தானே என்று மன்னிச்சும் விடுவேன்...அது என் அப்போதைய மனநிலையை பொருத்து இருக்கும்.

இன்றைக்கு பாரதியின் ஆசையை நான் நிறைவேற்றிக்கொள்ள நினைச்சா 1 கோடி தேவைப்படும். இந்த கோடி,  நிலத்தை வாங்கி தென்னை நட்டாலே சரியாப்பூடுமே......மாளிகை கட்டணும்னா இன்னொரு கோடி அட்லீஸ்ட் 70 லட்சம் ( டபுள் பெட்ரூம் ட்யூப்லெக்ஸ் போதும்).

இந்த 2 கோடியும் நான் யாருக்கு த்ரணும்? நா...ப்பது பர்செண்ட் நாட்டுக்கு...வெறும் அறுவது புரோக்கருக்காம்...அதுவும் காசா தரணும்...காசோலை நாட் அக்செப்டெட். அந்த காசை அவர் என்ன பண்ணுவாரு? அவரும் காசாத்தானே செலவழிக்கணும்..யானைக்கு அல்வா வாங்கியது பூனைக்கு ஹக்கீஸ் வாங்கியது என செலவாகும். புரியலையா? பணப்புழக்கம்பா...இப்படியே சென்னையில் மட்டும் புழங்கிய பணம் எவ்வளவு இருக்கும் என சென்னையில் இருக்கும் வீடுகளை பார்த்து கணக்கு போட்டால்...ஆஹா.....கோடானு கோடி அதில் குளிப்போம் விளையாடி....

குழந்தை வளர்ந்து பெரிசானதும் வெளிநாட்டிற்கு அனுப்பி படிக்க வைக்கணும்...நல்லா கல்யானம் பண்ணணும்...கவலையே இல்லை...ஒரு ப்ளாட்டை வாங்கி போட்டாச்சு...இப்போ 3 லட்சம் 20 வருஷம் கழிச்சு...அப்படியே 20 இல்லை 30 டைம்ஸ்...

அரசாங்கத்துக் இது தெரியாதா? 

அது எப்படி தெரியும்...??கண் முன்னாடியே கண்ணுல மண்னை தூவிட்டே பக்கத்து மாநிலங்களுக்கெல்லாம் லாரியிலே அள்ளிட்ட்டு போறாங்க...அதுவே தெரியல . இது எப்படி தெரியும்...

அட...அந்த மக்களோட கஷ்டம் தெரியாம பேசறீயே கோவாலு...அவிங்க் ஊர்ல ஆறு வத்தவே வத்தாது அப்புறம் எப்படி மண்ணு அள்ளறது? இங்கேதான் ஆத்துல தண்ணி ஓடலையே ..லாரியும் டிராக்டரும் மாட்டு வண்டியும் ஓடுது... 

அது சரி... அப்புறம் மண்னு இல்லாம எப்படி வூடு கட்டறது ....சாப்ட் பார்க்கும்...மல்டிப்லெக்ஸும் கட்டுறது...? 
 
எற்றோமற் றெற்றோ மற்றற்று...

என்னப்பா சொல்றே...

என்ன செய்வது...என்ன செய்வது...என்ன செய்வது -ன்னு அர்த்தம்...

யாரு சொன்னா...சும்மா உளறாதப்பா...

வெண்பாவிரு காலிற் கல்லானை வெள்ளோலை
காண்பார்க்க கையா லெழுதானை பெண்பாவி
பெற்றாளே பெற்றாள் பிறர் நகைக்க பெற்றாளே
எற்றோமற் றெற்றொ மற்றெற்று..

இது ஓளவையார் பாட்டுன்னு காத்துவழி சேதி ஒண்ணு ....

பாட்டுல இருக்குற சப்ஜெக்ட் வேற...கடைசி வரி மட்டும் எல்லாத்துக்கும் பொருந்தும்...




Wednesday, February 11, 2009

நான் கடவுள்

நான் கடவுள் படத்திற்கு சில விமர்சனமும் அந்த விமர்சனங்களுக்கு பல விமர்சனங்களும் வலையுலகில் இன்னும் வந்து கொண்டே இருக்கின்றன. படத்தை பற்றி நான் எதுவும் சொல்லப்போவதில்லை என்று சொல்லியே மூன்று பதிவுகளை ஜெயமோகனும் அவரது வலை தளத்தில் இட்டிருக்கிறார்.

என் பங்கிற்கு நானும்...

எப்பொழுதும் சராசரிக்கும் கீழான விளிம்புநிலை மக்களையே சுற்றி படம் எடுக்கும் பாலா, இந்தமுறையும் அதே.... உடல் ஊனமுற்றவர்கள், பிச்சைக்காரர்கள் அவர்களை வைத்து பணம் சம்பாதிக்கும் வில்லன் மற்றும் வில்லனைக்கொல்லும் அகோரி சாமியார் ஆகியவர்களை சேர்க்கும் திரைக்கதையில் நான் கடவுள். மக்களிடம் பரிதாப உணர்ச்சியை ஏற்படுத்த பிச்சைக்க்காரர்களை ஊனமாக்கும் அந்த வில்லன் பாத்திரம் உக்கிரம் என்றால் அவரது அசிஸ்டெண்ட் முருகன் ( சார்..இந்த அட்ரஸ் எங்க இருக்குன்னு கொஞ்சம் சொல்றீங்களான்னு வடிவேலுவை கலாய்ப்பாரே அவர்தான்), முருகனின் அசிஸ்டெண்ட்டாக வரும் திருநங்கை ஆகியோர் மனதை நெகிழ வைக்கும் பாத்திரங்கள். ஊனமுற்றவர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்குள் எவ்வளவு அந்நியோன்னியமாக இருக்கிறார்கள் என்பதும் இந்த படத்தை பார்த்தால் புரிகிறது. அதிலும் நண்டு சிண்டுவும் ஆசானாக வரும் கவிஞர் விக்கிரமாத்தித்தனும் அவரது கையிலிருக்கும் குருவி என்கிற குழந்தையும் கீச்சு குரலில் பேசுபவரும் மனதில் நிற்கிறார்கள் ( ஆஹா...எல்லோரையும் சொல்லிடுவேன் போலிருக்கே...). பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் அய்யனே பாடலும் ( மது பாலகிருஷ்ணாவிற்கு சிந்து பைரவி ஜேசுதாஸ் குரல்), தன் தாயிடம் ஆர்யா சொல்லும் நாலு வரி பாட்டும் ( ஐந்திரண்டு திங்களாய் நின்று போன தூமையே கையிரண்டு காலிரண்டு கண்ணிரண்டு ஆனதே...) இசையை மீறீ மனதில் பதிந்தன. ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் பாலா எப்படி கண்டு பிடிக்கிறார் என்பது ஆச்சரியம். அதிலும் ஆர்யாவின் அப்பாவ்வாக வருபவர் தன் கண்களிலேயே சொல்லிவிடுகிறார். ஆர்யா நரமாமிசம் சாப்பிடுபவர் என்பதை காட்சியாகவோ வசனமாகவோ காட்டவேயில்லை. அகோரி சாமியார் என்று சொல்கிறார் மற்றதை நாமே புரிந்து கொள்ளவேண்டும் போலிருக்கிறது. ஆர்யாவின் அறிமுக காட்சியிலிருந்து கிளைமாக்ஸ் வரை அவர் பேசும் வசனம் பத்து வரிதான் இருக்கும். ஆனால் அவர் உடலும் கண்களும் நன்றாக பேசுகின்றன. அலட்சியமும், உக்கிரமும் துள்ளலும் அவருக்கு நன்றாகவே வருகின்றது. பூஜாவும் பட்டையை கிளப்பியிருக்கிரார். ( இவருக்கு விருது கிடைக்கலாம் என பத்திரிக்கைகளில் செய்திகள் வர ஆரம்பித்திருக்கின்றன).  
வசனம் ஜெயமோகன். அவரின் ஏழாம் உலகம் நாவலே அவருக்கு கை கொடுத்திருக்கிறது. நீiதி மன்ற காட்சியில் உள்ள ஏளனம் அவரது நகைச்சுவைக்கு ஒரு உதாரணம். ஏழாம் உலகம் நாவலில் வரும் முதலாளி பாத்திரம் இந்த படத்தில் வரும் முதலாளி தாண்டவனை விட மிகவும் வக்கிரமானதாக இருக்கும். இந்த பட வில்லன் நார்மல் தமிழ் பட வில்லன் தான். இவரை ஆர்யா அடித்து கொல்லும் காட்சி சடாரென ஆரம்பிக்கிறது. கொஞ்சம் நந்தாவில் வரும் முதல் சண்டைகாட்சி போல  ஒரு பில்டப்புடன் ஆரம்பித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் நம் எதிர்பார்ப்பே அவர் எதிர்பாராத முறையில் படமெடுப்பார் என்பதுதான்.

படம் பிடித்திருக்கிறதா இல்லையா என்று கேட்டால் பிடித்திருக்கிறது என்று சொல்வேன். நன்றாக இருக்குமா ஓடுமா என்பவை எனக்கு தேவையில்லாதவை.